17.12.05

ஒரு பீனிக்சாக......

நேற்று மூண்ட மனவன நெருப்பில் 'நான்' எரிந்து சாம்பலானது. என் இருத்தல் என்னை மேன்மைப் படுத்தவில்லை. என் செல்கையோ எவருக்கும் சோகம் ஊட்டவில்லை. உண்மையாக வாழும் அக்கறை இல்லாமல் அவர்கள் விட்டெறிந்த அலட்சியம் என்ற நெருப்பு நானிருந்த வனத்தையும் வனத்திருந்த என்னையும் ஒருசேர அழித்தொழித்தது. என் சாம்பலில் இருந்தே மறதிப்பெரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இன்று முளைத்தெழுந்துள்ளது - முந்தியதற்கு எல்லாம் முந்தியதொரு 'மூல நான்.' ****** (தேவமைந்தன், 'போன்சாய் மனிதர்கள்,' திசம்பர் 1993. 17 -2 -1992 எழுதிய கவிதையின் சற்றுத் திருத்தப்பெற்ற வடிவம்.)

16.12.05

இடைவெளி விடாதீர்கள்!

நண்பர்களே! இடைவெளி அற்று நின்று கொள்ளுங்கள். இல்லையெனில் இடையில் எதுவாவது புகுந்துகொண்டு இரண்டு பக்கமும் நோண்டிவிடும். ஆக்கபூர்வமாய் எதுவும் செய்யத் தெரியாதது'களுக்கு கெடுப்பதைத் தவிர, செய்ய வேறுவினை என்ன உண்டு? இடைவெளி அற்று நடந்து கொள்ளுங்கள்! இல்லையெனில் இடையில் எதுவாவது புகுந்துகொண்டு இரண்டு பக்கமும் காதைக் கடிக்கும். புள்ளிக்கும் புள்ளிக்கும் இடைவெளியற்றால் வம்பே இல்லை. ஒருமை வரும். ஒன்றே நிகழும் நன்றாய். ****** (தேவமைந்தன், 'போன்சாய் மனிதர்கள்'['சேருங்கள்' என்ற தலைப்பு]: திசம்பர் 1993. 16-06-1989இல் எழுதிய கவிதை, மாற்றங்களுடன்.)

3.12.05

கணங்களைத் தொலைத்திடும் நிகழ்ச்சிகள்!

நிகழ்ச்சிகள் பலவற்றுக்கு அழைப்பிதழ் அனுப்புகிறார்கள். சிலவற்றுக்கு நேரே வந்து வாயெல்லாம் நிறைய வாருங்கள் என்று வேண்டி அழைப்புத் தருகிறார்கள். நாமும் அவர்களின் அன்புக்கு இணங்கிச் செல்லுகிறோம். ஆனால், அங்கே நிகழ்வது என்ன? நம் நேரம் தொலைகிறது. வாழ்க்கையின் கணப்பொழுதுகள் களவாடப்படுகின்றன. நாம் இத்தோடு விட்டு விடுகிறோம். ஆனால் இயல்பு வாழ்க்கையை அன்புடன் விரும்புகின்ற பாவலர் ம.இலெ. தங்கப்பா அவர்களோ இந்த இழிவைப் பொறுக்காமல் ஆறாண்டுகளுக்கு முன்னர், சரியாகச் சொல்லவேண்டுமானால் 01.08.1999 ஆம் நாளன்று இது குறித்து வன்மையாகச் சாடும் அருமையான பாடலொன்றை இயற்றி அச்சிட்டு அஞ்சாது பரப்பினார். அப் பாவினை வாசித்து நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பலர் நொந்து போயினர். உண்மை சுடும்தானே? பாவலர் ம. இலெனின் தங்கப்பா எல்லோருடைய அன்பையும் சம்பாதித்துக் கொண்டவர் என்பதனால் அமைதி ஆயினர். உண்மைக்கும் அன்புக்கும் இயல்பான வாழ்க்கைக்கும் உள்ள தகுதி இதுதான். இனி அந்தப் பாவினைப் பார்ப்போம்: உருப்பட மாட்டாய்! உருப்பட மாட்டாயடா, தமிழா! உருப்பட மாட்டாயடா! குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சி நடத்திடும் கொள்கையும் உணர்ச்சியும் உனக்கு வருமட்டும் (உருப்பட....) ஐந்து மணிஎன அழைப்பில் முழங்குவாய்; ஆறரைக் கேஅந்தக் கூட்டம் தொடங்குவாய்! நந்தம் தமிழர் பழக்கம் இது என்பாய்; நாணமில் இந்நிலை ஒழித்திடு மட்டும் நீ (உருப்பட....) ஆள்சேர வில்லை என்று அரைமணி நீட்டுவாய்; அரிய தலைவர்தாம் வராமையைக் காட்டுவாய்; நீள்உரை ஆற்றுவோர் மேல் குற்றம் சாட்டுவாய்; நித்தமும் இப்படிப் பொழுதெல்லாம் ஓட்டுவாய்; (உருப்பட....) இரண்டே நொடியில் முடிப்பதாய்ச் சொல்லுவாய்; இருபது மணித்துளி வெறும்வாயை மெல்லுவாய்; திரண்டுள மக்களின் உணர்வையும் கொல்லுவாய்; செயல்திறம் இன்றி நீ எப்படி வெல்லுவாய்? (உருப்பட....) முன்னிலை யாளர்கள் பன்னி உரைப்பதும், மூத்தவர் வாழ்த்துரை சொல்லிக் கழிப்பதும், பின் உரையாளர்கள் சொல் வானைக் கிழிப்பதும், பேச்சுப் பேச்சே, வெறும் பேச்சுன்னை அழிப்பதும். (உருப்பட....) உரிய பொழுது ஒன்றைத் தொடங்கி முடிக்கிலாய் ஒவ்வொரு பேச்சுக்கும் நேரம் வகுக்கிலாய்; இருபது பேர்களைப் பேச அழைக்கிறாய்; ஏழில் தொடங்கி நள்ளிரவில் முடிக்கிறாய்; (உருப்பட....) - தங்கப்பா 1.8.99

23.11.05

அருளியின் 'நம் செம்மொழி'-அருஞ்சுவை மொழி வரலாற்று நூல்

தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகத் தூயதமிழ் அகராதிகள் துறைத் தலைவரும் மொழியியல் ஆய்வறிஞரும் என் மேனாள் மாணாக்கரும் உழுவலன்பரும் ஆகிய அருளி அவர்கள் எழுதி உருவாக்கிய 'நம் செம்மொழி ' என்னும் செறிவான நூல் புதுச்சேரிக் கதிர்காமம் முருகனடியார் திருமண மண்டபத்தே இவ்வாண்டு[2005] சூலைத் திங்கள் முப்பதாம் நாள் சிறப்பாக வெளியிடப்பெற்றது. என் நூலாய்வு உட்பட ஆய்வுரைகளும் வாழ்த்துரைகளும் திட்பநுட்பமாக இடம் பெற்றன. சென்ற ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்பொழுது, தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகளும் தத்தம் தேர்தல் அறிக்கைகளில் "தமிழைச் செம்மொழி ஆக்குவோம்!" என்பதை - மக்கள்/வாக்காளர்கள் முன்வைத்த தம் செயல்முடிபுத் தீர்மானங்களுக்குள் முதன்மையானதாய் அறிவித்தன. நாற்பது இடங்களிலும் 'ஒன்றுபட்ட முற்போக்குக் கூட்டணி' வெற்றி பெற்றது. எனவே இக் கூட்டணி, தாங்கள் எதை முன் வைத்து ஆட்சிக்கு வந்தார்களோ, அந்தச் செம்மொழிக் கோரிக்கையை 'குறைந்த பட்ச'ச் செயல்திட்டத்தில் ஒன்றாக இணைத்தது. இந்தியக் குடியரசுத் தலைவர், ''நடுவண் அரசு தமிழைச் செம்மொழியாக அறிவிக்கும்!" என்று தெரிவித்தார். 17. 09. 2004 -ஆம் நாள் ''தமிழ் செம்மொழி'' என்று அறிவிக்கப் பெற்றது. பரிதிமாற்கலைஞர்க்கும் மு.சி. பூரணலிங்கம் அவர்களுக்கும் பின்னர் - 1918 -ஆம் ஆண்டு சிவக் கொண்முடிபு(சைவ சித்தாந்த) மாநாட்டில் நிறைவேற்றப்பெற்ற தீர்மானத்திலேயே இதற்கான வித்து இருப்பதைச்சுட்டி [பக்கம் 15] அங்கிருந்தே அதுதொடங்கி நிகழ்ந்தவற்றை மொழி - இன - அரசியற் பார்வை கொண்ட கூர்மையான ஆய்வுக்கு உட்படுத்துகிறார் அருளி. இந்நூலில் இருபது பக்கம் முன்முகமொழிவும் இந்நூலொடு எட்டுப் பக்கம் அருஞ்சொற்பொருள் அகரவரிசையும் உள்ளன. சுவையான நடையில், ஐயிலக்கணப் பரிமாச் செலவில், செறிந்தும் விரைந்தும் வாசிக்கப்பெறக்கூடியதாய் நூல்முழுதும் இயல்கிறது. முன்முகமொழிவில் 'செம்' என்னும் செம்மைக் கருத்துவேர், ஒளிக்கருத்துவேர் அடிப்படையில் செம்மொழி என்ற சொல்லின் வயணமான விளக்கம், விரிவாகச் சொல்லப் பெறுகிறது. செய்>செய்ம்>செம் என்ற சிவப்புக் கருத்தடிப்படை[ஒ.நோ. வெய்> (வெம்மைக் கருத்து) வெய்>வெய்ம்>வெம் [வெம்+மை>வெம்மை]யில்தான் சிவனும் நிறம் பெற்றான்; முருகனும் அவ்வாறே எனில் சிவனும் முருகனும் ஒருவனே என்பதைச் சான்றொன்று காட்டுவதற்காக இலேசாகத் தொட்டுக்கொண்டு செல்லும் பொழுதும் அருளி அவர்களின் ஆய்வுத்திறன் பளிச்சென வெளிப்படுகின்றது. 'பானைச் சோற்றுக்குப் பதமாக ஓரவிழ் காட்டுதல்போல்' இங்கு அப்பகுதியைப் பதிவு செய்கிறேன். ''....[சிவப்பு!...கொள்ளையழகு கொழிக்கும் திருநிறம்! கனலின் நிறம்! கனிந்த கனியின் கவர்ச்சி நிறம்! கதிரவனின் நிறம்! ஒளிகாலும் கவின் நிறம்! ( தாங்களே படைத்து உருவாக்கிக்கொண்டு பராவிய இறைத்திருமேனியையும் இந்நிறத்தால் நிறைத்தே ''சிவன்'' என்றவாறு சுட்டித் தூக்கி நிறுத்தித் தொழுதனர், நம் தமிழவர்!... ) அவனை, இச் சிவப்புக் கருத்து அடிப்படையிலேயே, 'சேய்' என்றும், "சேயோன்" என்றும் குறிப்பிட்டனர்! "சேய்" என்பதற்குக் "குழந்தை" என்பதுவும் ஒரு பொருளாகலின், அதனைத் தவறுதலாகத் தூக்கியெடுத்து நிறுத்தி, " அச்சிவனுக்கு மகனாக, மற்றொரு (பயல்) பையல் இருக்கிறான்!" "அவனே இவன்!" (இம் முருகன்! ) - எனத் தம் மதமயக்கிற் கட்டி மருண்டு மருகி உருகி உவந்தேத்தித் தொடரலாயினர்! அவையெலாம் ஒருபுறங் கிடப்பனவாகுக! ...] முன்னரே 'தமிழ் செம்மொழி ' என்ற கோட்பாட்டை வலியுறுத்திய பரிதிமாற்கலைஞரும், மு,சி,பூரணலிங்கம் அவர்களும், பின்னர்த் தொடர்ந்து தமிழறிஞர்களும் பல்வேறு தமிழ் மொழியினக்காப்பு அமைப்புகளும் அதைச் செம்மொழியாக்க மேற்கொண்ட முயல்வுகள் கோவையாய்த் திண்ணிதின் விளக்கப் பெற்றுள்ளன. 17-09-2004 -ஆம் நாள்சார்ந்த அறிவிப்பிலுள்ள குழப்பங்களும் விரகு(வஞ்சகங்)களும் இலக்கு மாறாமல் சுட்டப்பெற்றுள்ளன. ஆங்கிலேயரே அடுத்தவர்களை ஏய்ப்பதில் வல்லுநர்கள்; அவர்களையும் ஏய்த்து ''சமற்கிருதம் தெய்வமொழி, மீயுயர் செம்மொழி!'' என்று நம்பச் செய்த/செய்யும் ஆரியர் பரப்புரை(பிரச்சார)த் திறனையும் தகுந்த தளங்களை வைத்துச் சுட்டுகிறார் அருளி. 'கல்' எனும் நம்மொழி வேர்ச்சொல் 'கிளாசிக்'[Classic] என்ற ஆங்கிலச் சொல்லுக்கும் அடிப்படையாகியுள்ள வயணம் செம்மையாகச் சித்திரிக்கப்பெற்றுள்ளது.. வேர்வளஞ்செறிந்த மீமொழியான தமிழ், அறிவாராய்ச்சியியலின்[Epistemology] ஆவணமூலமாகவும் திகழ்வதைச் சான்றுகாட்டி எண்பிக்கிறார் நம் அருளி. பாரசீகம், அரபிக்கு மேலடுத்தவாறு நிற்கும் செம்மொழிகள் ஆறு என்று உலகோர் கருதும் தமிழ் - கிரேக்கம் - இலத்தீனம் - சீனம் - ஈபுரு என்னும் எபிரேயம் - சமற்கிருதம் ஆகியவற்றினுள் "உயிர்ப்பொடும், ஊட்டத்தொடும், செம்மாப்பொடும், சீரொடும், சிறப்பொடும், தொல்பழந்திருவொடும், கலங்குறாக் கருவொடும், வலத்தொடும், நலத்தொடும், ஒட்பொடும், திட்பொடும், உலகந் தழீஇஅய நட்பொடும், எண்ணத்தினிக்கும் இனிய பொட்பொடும் உலவி உவப்புறுத்துவதாக, நம் தெள்ளிய தீந்தமிழே இன்று - நன்று நீடிநின்று நிமிர்ந்தெழுந்து நடைசிறந்து இயங்கி வருகின்றமையை, முதலில் நந்தமிழர் நெஞ்சம்நிறக்க உணர்தல் வேண்டும்!" என்று எண்பதாம் [நிறைவுப்] பக்கத்தில் மொழிந்துள்ளதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! நூலின் இறுவாய்த் தலைப்பு, "தமிழிருப்பின் நாம் இருப்போம்! தமிழிறப்பின் நாமும் இறப்போம்!" என்ற தமிழுணர்வும் தன்மானமும் நிரம்பிய தலைப்பு ஆகும். சொல்கிறார் அருளி - "பேணவும் - பற்றவும் - பெருமைப்பட்டுக்கொள்ளவும் - பெருமிதங்கொள்ளவும் பீடுநிரம்பவுமாக நம் ஒவ்வொருவருக்கும் முன்னீடாக இதுவே நிற்கின்றது! நமக்கு உலகநிலையில் முகவரியும் வழங்கித் தகவெழவுஞ் செய்கின்ற ஆற்றல் ஊற்று, இது! தமிழிருப்பின் - நாமிருப்போம்! தமிழிறப்பின் - நாமுமிறப்போம்! - என்பதை, நாம் உள்ளத்திற்கொண்டு ஒழுகுதல் வேண்டும்! "நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!" என்ற தன்மானத் தமிழாசிரியர் பாவேந்தரின் வரி எவ்வளவு உண்மையானது என்பதை இவ்விடத்தில் நாம் ஒருகணம் சிந்திப்போமாக!...."என்று முற்றுப்பெற்றாமல் தொடர்வதாக, நம் செம்மொழி பற்றிய செயல்பாட்டைப் போலவே, தொடர்வதாக - நிறைகிறது 'நம் செம்மொழி' நூல். நூல் வயணம், கிடைக்குமிடம்: [நூற்பதிப்புரிமைப் பக்கங்களில் உள்ளவாறு]ஆசிரியர்: அருளி நூற்பெயர்: நம் செம்மொழிபதிப்பு: தி.பி. 2036 ஆடவை 3 -ஆம் நாள் 17-06-2005 (முதற் பதிப்பு)பக்கங்கள்: 80வெளியீடு: "வேரியம்" - பதிப்பகம், 'அகராதியகம்,' 502 (466) - வழுதாவூர் சாலை, முத்தரையர்பாளையம், புதுச்சேரி - 605 009. இந்தியா.விலை: உருவா. 25/- (இருபத்தைந்து உருவா.)

22.11.05

'சும்மா இரு'க்க முடியாதா?

முதலில் நன்றி சொன்னேன், அருணகிரிநாதருக்கு - தன் கந்தரநுபூதிக் கவிதை ஒன்றில் இந்தத் தொடரை, அறிவுரையை வெளியிட்டமைக்கு. இலேசாகச் சொல்லிவிடமுடியும் - ஆனால் 'தாவு தீர்ந்துவிடும்' செயல்கள் இருக்கின்றன. ஒவ்வொருவர் வாழ்விலும் கொஞ்சம் வேறுபாடாய்.. சொல்லலாம், செய்துவிடமுடியாது. அப்படிப்பட்டவற்றுள் பிரதானமான ஒன்றுதான் இந்த 'சும்மா இரு!....' ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவன் வருகிறான். நம்மிடம் ஏதோ கேட்கிறான். சிறு விஷயம். கேட்டு முடிப்பதற்குள் நாற்காலியை அப்படி இப்படி ஆட்டுகிறான். அதை இதைப் பிடித்துத் திருகிறான். அங்கிருக்கும் ஒரு கண்ணாடிப் பொருளை எடுத்து அஜாக்கிரதையாய்க் கையாளுகிறான். நமக்கோ 'டென்ஷன்.' மனசு எரிச்சலுடன் தனக்குள் அவனைத் திட்டித் தீர்க்கிறது..''அட, அவசரத்துக்குப் பிறந்த பயலே!'' சரி. அவன் அவசரத்துக்குப் பிறந்தவன். நம்மில் பலர் டென்ஷனுக்குப் பிறந்தவர்களா? இல்லை, இல்லை என்கிறீர்களா? அப்படியானால் நாம் - 1. எதையும் ஒன்றன்பின் ஒன்றாகத்தான் செய்து முடிக்கிறோமா? 2. ஒன்றைச் செய்யும்பொழுது, இன்னொன்றைப்பற்றி நாம் நினைப்பதுகூடக் கிடையாதா? 3. ஒவ்வொரு நாளும் ஒருசில மணிப்பொழுதுகள் - இல்லாவிட்டாலும் - ஓரிரு மணி நேரம், நம்மால் எதையும் செய்யாமல், 'சும்மா' மரங்களைப் பார்த்துக் கொண்டும், எதிரே தெரியும் இயற்கையைப் பார்த்துக் கொண்டும் - அட, அதெல்லாம் என் ஒண்டுக்குடித்தனத்தில் கூடாதப்பா என்றால் - வெறுமனே, சுவரில் மாட்டி வைத்திருக்கும், மனத்துக்குப் பிடித்தமான படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டும் இருக்க முடிகிறதா? - மனத்துக்கு மாறுபடாமல் சொல்லுங்கள் பார்ப்போம். 4. குறைந்தபட்சம் வேறு ஒருவரையும் குறைசொல்லாமல் ''என்னால் இப்படி 'சும்மா' இருக்கமுடியவில்லை; கை பரபரக்கிறது; கண் துறுதுறுக்கிறது; மனம் அலைபாய்கின்றது!'' என்றாவது ஒத்துக்கொள்ள முடிகிறதா சொல்லுங்கள். 5. ''நான் பெரிய மனிதன்! என் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் இந்த உலகம் ஏங்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எனக்குக் கடமைகள் காத்துக் கிடக்கின்றன!'' என்று நம்மை ஒரு நாளுக்கு ஒரே மணி நேரமாவது ஏமாற்றிக்கொள்ளாதிருக்கிறோமா? சொல்லுங்கள். ''சரியப்பா..விடு, விடு! அருணகிரி எதற்காக இப்படியொரு வில்லங்கத்தைத் தன் அநுபூதியில் பொதிந்திருக்கிறார்?'' - என்கிறீர்களா! ஒருமுறை என் சிற்றூர் சார்ந்த 'பேயன்பழத் தாத்தா' என்ற சித்த[மருத்துவ]ரிடத்தில் இது பற்றி நான் கேட்டபொழுது அவர் சொன்ன விளக்கம் எனக்கு மயக்கத்தையே வரவழைத்தது... அப்படி அவர் என்ன சொன்னார்....? ''சும்மா இரு'ன்னா மனமடங்கி இரு'ன்னு அர்த்தம்.. மனமடங்கியிரு அப்படி'ன்னா மனம் ஒழிந்து இரு'ன்னு பொருள்..மனம் ஒழிந்து'ன்னா ''எண்ணம் எழாமல்'ன்னு அர்த்தம்.. ஒங்கப்பன் அடிக்கடி சொல்றாரே.. ஒங்கண்ணனுக்குக்கூட அவர் பெயரை வச்சாரே!.. அந்த ஜே. கிருஷ்ணமூர்த்தி அதச் சாதிச்சிருக்கிறாராமே.. தெரியுமா!...நாப்பத்தெட்டுமணிநேரம் அதுபோல இருந்திருக்கிறாராமே... எண்ணமே எழாமல்.. ஒனக்குத் தெரியுமா?'' எனக்கு ஒன்றும் தெரியவில்லை. உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ''சித்தத்தில் எண்ணம் எதுவும் எழாமல் சும்மா இருக்கும் திறம்'' - உங்களுக்குத் தெரிந்திருக்கும்தானே!

21.11.05

மரித்தவர்களோடு வாழ்கிறேன்!

(-மொழியாக்கம் : திருமதி ப.ரா.கலாவதி) மரித்தவர்கள் இடையில் வாழ்ந்ததான என் நாள்கள் கழிந்தன. என்னைச் சுற்றிலும் எங்கெல்லாம் இந்த - திட்டமேதும் செய்யாத விழிப்பார்வைகள் நோக்கிக் கொண்டிருக்கின்றனவோ - அங்கெல்லாம் என் ஆத்துமநன்றிக்கான ஆற்றல்மிக்க அந்த வயதான சிந்தைகள் சூழ்ந்து கொண்டுள்ளன. என்றும் என்னைக் கைவிடாத தோழமைகள் அவை. ஆற்றல் நிரம்பிய முதிர்ந்த சிந்தைகளான அவற்றோடுதான் நாள்தோறும் உரையாடியவண்ணம் இருக்கிறேன். இன்பத்திலும் செழுமையிலும் அவர்களோடு ஆனந்தமாகப் பங்கேற்கிறேன். துன்ப துயரங்களில் விடுவிப்பையும் தேடுகிறேன். எண்ணமாழ்ந்த நன்றியுணர்வுடன் கூடிய கண்ணீர்ப்பனித்துளிகள் அடிக்கடி என் கன்னங்களை நனைக்கின்றன - எவ்வளவு அவர்களுக்கு நன்றிக்கடன் நான் பட்டுள்ளேன் என்று புரிந்துகொண்டு உணரும்பொழுது...... கடந்தும் கழிந்தும் போன ஆண்டுகள் பலவற்றில் மரித்தவர்களோடு என் எண்ணங்கள் உலவுகின்றன. அவர்களின் அறவுணர்வுகள் அன்புசெய்கின்றன; குற்றங்கள் கண்டிக்கின்றன; அவர்களின் நம்பிக்கைகள் - அச்சங்களில் பங்கு கொள்கின்றன. அவர்கள் உற்ற படிப்பினைகள் / பாடங்களிடமிருந்து எளிமையான மனங்கள் மட்டுமே பிறப்பிக்கக்கூடிய ஆலோசனைகளைப் பெறுகின்றேன். ஆம், என் நம்பிக்கைகள் மரித்தவர்களோடுதான்; அவர்களுடனான என் இருப்பு அறியப்படாததாகவே நிகழும். எதிர்வின் எல்லாமுடனும் அவர்களோடுதான் நான் பயணம் செய்யப் போகிறேன்; இருந்தாலும் இங்கே ஒரு பெயரை விட்டுவிட்டுத்தான் - என்பதென் நம்பிக்கை. புழுதியில் அப்பெயர் அழிந்து போகாது.

20.11.05

வித்தியாசமாய்ச் சிந்தித்த அம்ப்ரோஸ் பியர்ஸ்

யதார்த்த உலகில் வித்தியாசமானவர்கள் பிறப்பதைப் போலவே, மொழி இலக்கிய உலகிலும் மற்றவர்களைவிடப் பலவகைகளிலும் வேறுபாடானவர்கள் பிறக்கிறார்கள். அப்படிப் பிறந்தவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் அம்ப்ரோஸ் பியர்ஸ் [Ambrose Bierce]. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர் அவர். மிகவும் வித்தியாசமாகச் சிந்தித்தவர். அதன் விளைவாக, அவர் குறிப்பிட்ட பல செய்திகள், அவரைப் போலவே வேறுபாடானவைகளாகவும் -பகடி/நக்கல்/கிண்டல்/குத்தல்/நையாண்டி ஆகியவை நிரம்பியவைகளாகவும் விளங்கின. நண்பர்கள் நச்சரித்ததால் அவற்றின் முதல் தொகுதியை 1906ஆம் ஆண்டு ''சினிக்'கின்சொல் நூல்[The Cynic's Word Book] என்ற தலைப்பில் வெளியிட இசைந்தார். பல ஆண்டுகள் கழித்து 'இடது கை அகராதி'[The Left Hand Dictionary] என்ற தலைப்பில் எஞ்சிய சொற்கள் தொகுக்கப் பட்டு வெளியிடப்பெற்றன. அவற்றுக்கிடையில் முதல் தொகுதி ஏனோ தலைப்பு மாற்றப்பட்டு 'சாத்தானின் அகராதி'[The Devil's Dictionary]என்று 1911ஆம் மறு பதிப்புச் செய்யப்பெற்றது. என்னதான் விளக்கினாலும் எளிதில் விளங்காதனவற்றை மிகச் சுருக்கமாக எதிராளி உள்ளத்தில் சென்று தைக்கும் வண்ணம் சொன்ன அம்ப்ரோஸ்பியர்ஸின் சொல்வண்ணங்கள் சிலவற்றை மட்டும் இங்கே தருகிறேன். அகாதமி[Academy] = கால்பந்து ஆடமட்டும் தெரிந்தவர்களின் கழகம். மரணம் = முடிவு அல்ல; சொத்துக்களின்மேல் வழக்குத்தொடரப்போகிற தொடக்கம். சீற்றங்கள்[calamities] = இரண்டு வகை: நமக்கு ஏற்படும் துரதிர்ஷ்டங்கள் - மற்றவர்களுக்கு ஏற்படும் நல்லதிர்ஷ்டங்கள். சந்தேகம் = அதே வேலையாய் இருந்தால் எதிர்மறையாகும் ஆபத்து; ஆனால், நேர்மையாகவோ ஆய்வு ரீதியிலோ அமைந்தால் உண்மையை நிறுவக் கூடிய ஆயுதம். டெமாக்கிரட்டுகள்[Democrats](அமெரிக்க அரசியல் கட்சியினர்) = டெமாக்கிரட்டுகள்தாம் முடிதிருத்தகங்களை நடத்துபவர்கள் என்று நான் எப்பொழுதுமே சொன்னதில்லை.முடிதிருத்தகங்களை நடத்துபவர்கள் எல்லோரும் டெமாக்கிரட்டுகள் என்றுதான் சொன்னேன். பைத்தியங்கள்/தத்துவஞானிகள் = எல்லாரும் பைத்தியக்காரர்களே. ஆனால் யாரால் தம்மைத்தாம் ஏமாற்றிகொள்ளும் முறைகளை வகைப்படுத்திப் பார்க்க முடிகிறதோ அவர்களைத்தாம் தத்துவஞானிகள் என்று அழைக்கிறோம். அகம்பாவி[egotist] = மிகவும் தரக்குறைவானவர்; எப்பொழுதும் தம்மைப்பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறார் -- என்மேல் அக்கறை கொள்ளாமல்.

கவிஞர் வேந்தர்வேந்தன் - ஆரவாரமற்ற புரட்சிப் பாவலர்

1967-1969 ஆண்டுகள் காலகட்டத்தில் நாங்கள் இருவரும் ஒன்றாய் முதுகலைத் தமிழ் பயின்றோம் - கோவை பூ.சா.கோ. கலைக் கல்லூரியில். டாக்டர் தா.ஏ.ஞானமூர்த்தி அவர்கள் எங்கள் துறைத்தலைவர். நண்பர் கா. கோ. வேங்கடராமன், இளம் அறிவியல் கணிதம் பயின்றுவந்தவர். நான் இளங்கலை அரசியல் பயின்றுவந்தவன். கா.கோ.வே., மரபுத் தமிழில் பயிற்சியும் ஆர்வமும் கொண்டவர். நானோ அதே ஊரில் என் மாமா வீட்டிற்கு எதிரே கூடிய 'வானம்பாடி' இயக்கத்தால் ஈர்க்கப்பெற்றவன். கோவை தேவாங்கர்ப்பேட்டை பூமார்க்கெட் பின்னாலிருந்த வி.சி.எஸ். காலனியில் கவிஞர் புவியரசு அவர்களிருந்த வாடகை வீட்டில் அவ்வியக்கத்தவர் அவ்வப்பொழுது கூடுவர். ஓரம் நின்று கவனிப்பேன் நான். முப்பத்தாறு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இப்பொழுது நண்பர் வேந்தர்வேந்தன், நாமக்கல் மாவட்டம் - பரமத்தி வேலூரில் உள்ள பொத்தனூரில். தேவமைந்தன் ஆன நான், புதுச்சேரியில். வெவ்வேறு பின்னணிகளில் இருவரும். 1998 ஆம் ஆண்டு முனைவர்ப் பட்டம் பெற்ற நண்பர், மெய்யான ஆய்வாளர். இவர்தம் 'தொல்காப்பியத் தமிழ்,' ஆய்வுக்கோர் எடுத்துக்காட்டு. 'தமிழ் இலக்கிய வரலாறு' என்ற அண்மைய நூலை மிகவும் புதுமையான முடிபுகள் கொண்டிருக்கும் தனித்தன்மையான தமிழ் இலக்கிய வரலாற்று நூல் என்று தமிழம். நெட் பாராட்டியிருந்தது. அதைப் பார்த்தபின்தான், நான் நண்பரோடு தொடர்பு கொண்டு, நெடுங்கால இடைவெளியை நிறைவு செய்து விட்டேன். ஓ! காலம் எவ்வளவு வினோதமானது? 'கந்தவனக் கலம்பகம்' இயற்றியமைக்காக, இவரை இலங்கை யாழ்ப்பாணத்தில், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்கள் தலைமையில் பாராட்டுவிழா நடத்திச் சிறப்பித்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். என்ன பாராட்டானாலும் எவ்வளவு புகழ்மாலை சூட்டினாலும் தலைக்கனம் கிஞ்சிற்றும் கொள்ளாமல் கள்ளமில்லாத புன்னகையை வெளிப்படுத்துவதில் நண்பர் உண்மையானவர். மரபிலக்கணப் புலமையும், சங்க இலக்கிய - காப்பிய இலக்கிய அறிவும் மிக்கவர். இக்காலத்தில் மலர்ந்துள்ள நடையியல், முருகியல் ஆகிய துறைகளிலும் மிகுந்த நாட்டம் கொண்டவர். இவர்தம் 'காப்பிய நடையியல்,' 'சிந்தாமணி யாப்பு,' 'சிந்தாமணியின் அகவடிவமும் அமைப்பு வடிவமும்,' இலக்கணக் குறிப்பும் பொதுக்கட்டுரையும்,' கந்தவனக் கலம்பகம்,' 'ஒளிக்கீற்று' [குறுங்காப்பியம்], 'தொல்காப்பியத் தமிழ்,' தமிழ் இலக்கிய வரலாறு,' முதலிய அருமையான நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. 'ஒளிக்கீற்று' [1999] என்ற இவர்தம் குறுங்காவியத்தில் சற்றொப்ப நாற்பது சந்தவகைகளில் விருத்தங்கள் இயன்றுள்ளன. எங்கள் மறைந்த நண்பர், தமிழ்நாட்டின் தமிழ் ஆட்சிமொழி - தமிழ்ப் பண்பாடு - இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சராக விளங்கிய முனைவர் மு. தமிழ்க்குடிமகன் இக்காப்பியம் பற்றி எழுதியுள்ளதைக் காண்போம். ''ஒருவர் மேல் ஒருவர் மேலாண்மை செலுத்துவதைத் தடுத்துக் குமுகாய ஏற்றத்தாழ்வுகளைப் போக்கி, எல்லா நிலைகளிலும் சமன்மை என்னும் ஒப்புரவை உருவாக்கிட அமைதிவழிப் புரட்சி ஒன்றே சிறந்த வழி என்பதைக் கவிஞர் இந்நூலின்மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். மொழி இன வேட்கை, பொதுமை நாட்டம், பெண்ணியப் பார்வை ஆகியவற்றை அமைதிப் புரட்சி என்ற புதிய கருத்தாக்கத்தோடு உறழ வைப்பதே எனது நோக்கம் என்று கூறும் வேந்தர்வேந்தன் தன் நோக்கத்தில் நிறைவான வெற்றியைப் பெற்றுள்ளார் என்பதை இந்நூலைப் படிப்பதின் வாயிலாக அறிய முடிகிறது. தனித்தமிழ் உணர்வின்வழி நின்று பணியாற்றும் வேந்தர்வேந்தனுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'' நம் வாழ்த்துகளும் அவ்வாறே!

19.11.05

மலைநாட்டுத் தமிழ்முரசு 1958ஆம் ஆண்டு மலர்

பிரெஞ்சுப் பேராசிரியர் - நண்பர் திரு. நாயகர், இம்முறை 'தமிழ் முரசு' வெளியிட்ட பழைய ஆண்டு மலரை வாசிக்கத் தந்தார். பழைமையிலும் புதுமை காணும் நண்பர்கள் நாங்கள். அம்மலர், 1958ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்றது. தமிழ் முரசின் ஐந்தாவது ஆண்டு மலர் அது.

இப்பொழுதெல்லாம், 'தீவளிக்குத் தீவளி' வெளியிடப்பெறும் - அதாவது, ஒரு மலரை மூன்றாகப் 'புய்த்'து வெளியிடும் வியாபாரம் தெரியாமல் - அல்லது, அப்படியெல்லாம் செய்வது மலை நாட்டுத் தமிழ்ப் பெருமக்களுக்குப் பழக்கமாய் இராது என்பதால் - தெம்மி 1/4 அளவில் முந்நூற்று முப்பது பக்க அளவில் வெளியிடப் பெற்றது. கண்ணையும் மனத்தையும் உறுத்தாத ஏராளமான சித்திரங்களும் ஒளிப்படங்களும் பின்னணி ஓவியங்களும் கூடியது. "தலைமுறை தலைமுறையாகப் போற்றிப் படிக்கும் பொருட் செறிவும், கண்டு மகிழும் கலையழகும் கொண்டதாக" மலர் உருவாகியிருக்கிறது. நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. டாக்டர் மு.வ., பாஸ்கரத் தொண்டமான், குன்றக்குடி அடிகளார், பேராசிரியர் மா. இராசமாணிக்கனார், டாக்டர் தனிநாயக அடிகளார், கவியோகி சுத்தானந்தர், தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், வெள்ளை வாரணனார், ம.பொ.சிவஞானம், டாக்டர் தா.ஏ.ஞானமூர்த்தி, பூ. ஆலாலசுந்தரனார், அ.கி.பரந்தாமனார், இராஜாமணி அம்மையார், வல்லிக்கண்ணன், அப்துல் வஹ்ஹாப், வி. மரிய அந்தோனி போன்ற மேலும் பல அறிஞர்களின் கட்டுரைகளும், டி.கே.ஷண்முகம், கே.ஏ.தங்கவேலு, சிவாஜி கணேசன், பிரேம் நசீர், ஜெமினி கணேசன், எம்.என். ராஜம், சாவித்திரி , ராகினி, பத்மினி போன்ற கலைஞர் சிலரின் கட்டுரைகளும் மலரில் வெளிவந்துள்ளன. அறிஞர்களுக்குத் தமிழ் முரசு தந்துள்ள அகத்தியம் பாராட்டத்தக்கது.

கச்சேரிகளில் தமிழ் உருப்படிகள் ஆகச் சில, கடைசியில் அப்பொழுதும் இப்பொழுதும் பாடப்படுவதுபோல சினிமாக் கலைஞர்களின் கருத்துரைகள் மலரில் கடைசியில் இடம்பெற்றுள்ளமை, மிகவும் பொருத்தமாகவும் நம் பழைய தமிழர்களின் நடுவுநிலைமையை எடுத்துக் காட்டுவதாகவும் உள்ளது.

இம்மலர் ஒரு கடல் என்றால், அதில் ஓர் அலை இதோ: பக்கம் 76இல் இடம்பெற்றுள்ள பாவேந்தர் பாட்டு -

பட்டுக் குஞ்சுகள் எட்டைக் கோழி

இட்டுக் கொண்டே போகும்

எட்டுக் குஞ்சும் தாய்சொல் லுக்குக்

கட்டுப் பட்டே மேயும்

தட்டுக் கெட்டுப் போனால் ஒன்று

தட்டிப் போகும் பருந்தே

விட்டுத் தப்பி னாலும் பூனை

விட்டுவி டாது விருந்தே.

( பாரதிதாசன், 'குயில்.' )

18.11.05

தகுதிக்குத் தமிழ்மாமணி மு.இறைவிழியனார்

சில சமயங்களில் தகுதியும் நீதியும் வென்றுவிடுகின்றன என்பதற்குப் புதுவை அரசு தன் உயரிய விருதான தமிழ்மாமணி(2005)விருதை 'நற்றமிழ்' இதழாசிரியர் புலவர் மு.இறைவிழியனார் அவர்களுக்கு வழங்கியுள்ளமை சான்று. 27/10/2005 அன்று மாலை, அண்ணாமலை பேருணவகத்தில், கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் செல்வி ந. சுமதி அவர்கள் வரவேற்க, சட்டப் பேரவை எதிர்க்கட்சித்தலைவர் மேனாள் புதுவை முதல்வர் திருமிகு இரா.வே. ஜானகிராமன் அவர்கள் வாழ்த்துரைக்க, புதுச்சேரி மாநில அன்பு முதல்வர் மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்கள் இந்த உயரிய விருதினை மு. இறைவிழியனார்க்கு வழங்கினார். சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை வைக்க, மாண்புமிகு முதல்வர் அதை ஏற்று, விருது பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்த அரசியல் இணக்கத்தைப் புதுவை மாநில அரசியலில் மட்டுமே பார்க்க இயலும். பல ஆண்டுகளாக 'நற்றமிழ்' என்ற இதழை நடத்திவரும் மு. இறைவிழியனாரின் திங்களிதழில் மட்டுமே சற்றொப்ப முந்நூறு படைப்பாளியர் ஒவ்வொரு இதழிலும் பங்கேற்பதைப் பார்க்க முடியும். காட்டாக, இப்பொழுது வெளிவந்துள்ள 'நற்றமிழ்' நளி(கார்த்திகை)இதழில்[15/11/2005]'கொடுத்தபடி தொடுத்த பாடல்கள்' பகுதியில் மட்டும், பிரான்சு முதல் ரிசிவந்தியம் வரை உள்ள இடங்களில் வாழும் இருநூற்று எண்பத்து இரண்டு பாவலர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். பொன்னி, தென்றல் போன்று வெண்பாப் போட்டிகள் மட்டுமே நிகழ்த்தாமல், யாப்பியலில் வரும் பாக்களின் வகைகள் பலவற்றுக்கும் புலவர் அரங்க. நடராசன் குறிப்புகள் கொடுக்க அத்தனைப்பேர் அழகாக, தளைதட்டாமல் எழுதுகின்றனர். ஒன்றுவிடாமல் அத்தனையையும் பதிப்பிக்கிறார் இறைவிழியனார். இந்த இதழின் முப்பத்தைந்து பக்கங்களில் மட்டும் முன்னூற்று ஆறு பேர்களின் எழுத்துப்பங்கு இருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளலாம். ஏன் இவர்பால் அன்பும் தோழமையும் எண்ணற்றோருக்குத் தோன்றாது? அவரே சொல்வதை இங்குத் தருகிறேன்: "இளமையில் அறிஞர் அண்ணாவின் 'திராவிட நாடு'- கிழமை இதழைத் தொடர்ந்து படித்ததால் தாய்மொழிப்பற்று வளர்ந்தது. தமிழ் வளர்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து தனியனாகவும் இயக்கங்கள் உருவாக்கியும் இதழ்கள் நடத்தியும் ஆற்றிவருகிறேன். விருதுகள், பட்டங்கள், பரிசுகளைக் குறியாகக் கொண்டு தொண்டாற்றி வந்திலேன்.இந்நிலையில் இவ்வாண்டு புதுவை மாநில உயர்விருதான 'தமிழ்மாமணி' விருது எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது நான் எதிர்பாராத ஒன்று. புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்கள் தூய தொண்டருக்கு அவ்விருதை அளிக்க விரும்பியுள்ளார். அந்த வாய்ப்பை நழுவ விடாமல் என் பெயரை முதல்வரிடம் மொழிந்துள்ளார் என்னை நன்குணர்ந்த அன்பர் ஒருவர். அவரின் கருத்தை மட்டுமே முதன்மையாகக் கொள்ளாமல் முதல்வரும் பலரிடம் உசாவி உள்ளார். பலர் என்னைப் பற்றிச் சிறப்பாகக் கூறியுள்ளனர். இவற்றையெல்லாம் நன்கு ஆய்ந்து பார்த்தும் உரிய விளக்கங்கள் பெற்றும் தெளிந்த முதல்வர் தடைகளைக் கடந்து என் பெயரை விருதுக்கு அறிவித்துள்ளார். எங்கள் மாநில முதல்வர் மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்களைக் காமராசரின் உருவமாகவே குறிப்பிடுவர். நானோ பல ஆண்டுகட்கு முன்பிருந்தே அவரை அண்ணாவும் காமராசரும் இணைந்த உருவமாகப் பார்த்து வருகிறேன். அவர் உருவால், உடையால் மட்டுமன்று உள்ளத்தாலும் எளியவரே......எல்லாவகையிலும் பாராட்டுக்குரிய எங்கள் மாநில முதல்வர் மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்களின் திருக்கைகளால் அவரால் மட்டுமே முடிவு செய்து தரப்பட்ட தமிழ்மாமணி விருதைப் பெற்றதை விருது பெறுவதைவிடப் பெரும்பேறாகக் கருதினேன். இந்த உயர் விருதுக்கு உரியவனாக மேலும் என் தமிழ்ப்பணி தொடரும்......எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள தமிழறிஞர்கட்கும் இனிய நண்பர்கட்கும் இளைஞர்கட்கும் இவ்விருதைப் படைக்கிறேன்." இவர் தொடர்ந்து நடத்திவரும் 'நற்றமிழ்' இதழின் இணையாசிரியர்களாக [மற்றவர்கள் 'துணையாசிரியர்கள்' 'உதவி ஆசிரியர்கள்' என்றே குறிப்பர்; இவர் இதிலும் எளிய உள்ளம் கொண்டிருக்கிறார்] சந்தப்பாமணி புலவர் அரங்க. நடராசனும் புதுவையின் முதல் இணைய இதழான 'புதுச்சேரி.காம்'-இன் ஆசிரியர் புலவர் செ. இராமலிங்கனும் இருந்து அன்னாருக்குப் பேருதவி புரிந்து வருகின்றனர். புலவர்கள் இவ்வாறு அரசியல் தலைவர்கள் போலவே ஒற்றுமையாக வாழ்ந்து ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு தமிழ்ப்பணியைத் தளராமல் ஆற்றுகின்ற எங்கள் புதுவை மாநிலம் எல்லாவகைகளிலும் பிற மாநிலங்களுக்கு, ஏன், பிற நாடுகளுக்கும் ஏற்ற வழிகாட்டி ஆகும்.

17.11.05

உலக நகரம் ஆரோவில்லின் தமிழ்க் கவிஞர்

புதுவை அருகே உள்ள உலக நகரம் ஆரோவில். அரவிந்த ஆசிரம அன்னை அவர்களின் கனவின் நனவு அது. அங்கே முப்பது ஆண்டுகளாகத் தங்கிப் பணிகள் பலவற்றை ஆற்றிவருவதுடன், சிறந்த தமிழ்க்கவிஞராகவும் திகழ்ந்து வருபவர் கவிஞர் இரா. மீனாட்சி. சூது, வாது, வஞ்சகம், உலோபம், மூடம், மதம், மாச்சரியங்கள் நிரம்பிய உலகில் - கள்ளம் கபடமற்று இந்த வயதிலும் ஒரு குழந்தைபோல், தன்னுடன் பழகுபவர்களிடம் உண்மையான அன்புடன் உரையாடி, அவர்களுக்கு ஆவன புரிவதை இவருடைய பழக்கமாக, கடந்த முப்பது ஆண்டுகளாக நான் அவதானித்து வருகிறேன். திருமதி இரா. மீனாட்சி அவர்கள், கவிஞர் என்ற தளத்தில் நிற்கும் பொழுதுகளில், இந்த நிகழ் உலகத்தின் இயங்கியலையும் அதில் குறிப்பாக சமகால மனிதர்களின் வலிவு மெலிவுகளையும் உள்ளாழ நோக்குவதில் வல்லவர் என்பதை நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறுபயணம்(இடுமொழி) ஆகிய அவர்தம் கவிதைத்தொகுப்புகள் எண்பிக்கின்றன. ஆரோவில்லின் ஸ்ரீ அரபிந்தோ பன்னாட்டுக் கல்வி ஆய்வு மையத்தில் பணி புரிந்து வரும் இவர், மனையியலில் பி.எஸ்சி பட்டமும் சமூகப்பணியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். ஆரோவில்லுக்கு உலகமெங்கிலுமிருந்து வருகை புரியும் உள்ளங்களைக் கவரும் மாத்ரி மந்திர் நர்சரித் தோட்டங்கள் பகுதியில் இயற்கையின் மடிதவழ் மழலையாக வாழ்ந்துவரும் பெரும் பேற்றைப் பெற்ற கவிஞர் இரா. மீனாட்சி, அண்மையில் அங்கே மலர்ந்து மலர்ந்து உதிரும் மழைக்கால மரமல்லி மலர்களைப் பற்றி அழகாகக் குறிப்பிட்டபொழுது - புதுவை மாநிலம் காரைக்காலில், திருநள்ளாற்றுக்குச் செல்லும் வழியில் உள்ள இயற்கை நலம் செறிந்த பச்சூர் இடுகாட்டில் 1988 சனவரி 17ஆம் நாள் ஒடுக்கம் கொண்ட எம் தந்தையார் இராஜயோகி பி.கே. அண்ணன் தமது உடல் செறிந்த மண்மேல் இன்று தன் மலர்களைப் பொழிந்திருக்கும் பதினேழு வயது நிரம்பிய மரமல்லி மரம், எங்கள் இனிய நன்றிக்கு வித்தானது. தந்தையார் ஒடுங்கிய ஞான்று, மறைந்த என்னரும் நண்பர் டாக்டர் நாகப்பா நாச்சியப்பன் அவர்கள் ஏற்பாட்டின்படி, திரு பொன்னம்பலம் என்பவர், அதை அங்கே நட்டார். அடடா! மனித வாழ்க்கையில் மரங்களும் அவை பொழியும் மலர்களும் கொண்டுள்ள ஆழமான உறவை எத்தனை அழகாக ஞாபகப் படுத்திவிட்டார் சகோதரி மீனாட்சி!

16.11.05

ஒரு கை ஓசைகள்

அண்மைய காலத்து வளர்ச்சிகளில் ஒன்று - இணையத் தமிழ் வளர்ந்துள்ள வேகம். வலையிதழ்கள், வலைப்பதிவுகள் என, ஈடுபாடும் அர்ப்பணிப்பு உணர்வும் உள்ளவர்கள் நம் தமிழையும் அதன் கவிதை - உரைநடை ஆகியவற்றையும் தமிழர் வரலாற்றையும் முன்னெடுத்துச் செல்கிறார்கள். அவற்றை அறவே புறக்கணிக்கும் போக்கும் கூடவே வளர்ந்துவருகிறது. இதைச் செய்பவர்களைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் ''இதனால் எனக்கு என்ன இலாபம்?'' என்று கேட்கும் - 'இதனால் பயன்களை மட்டும் அடைய விரும்புபவர்கள்' குறித்து வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. எதையும் உதாரணம் காட்டிச் சொல்வது உத்தமம் என்பார்கள். அதன்படி ஒன்றைச் சொல்லுகிறேன். நான், என் சிந்தனைகள், என் படைப்புகள் என்று மட்டும் வலைப்பதிவுகளைச் செய்துகொண்டிராமல் நமக்குத் தெரிந்து உள்ள நல்ல படைப்பாளர்களையும் அவர்கள் படைத்த நூல்களையும் இணைய உலகில் அறிமுகம் செய்து வைப்போம் என்று இறங்கினேன். மிகவும் வேடிக்கையான 'இம்சைகள்' தேடிவந்தன. ' பானைச் சோற்றுக்கு ஓர் அவிழ் ( வெந்த பருக்கை) பதம்' என்பார்கள். அதுபோல, இதனால் நிகழ்ந்த உரையாடல் ஒன்றை நண்பர்கள்முன் வைக்கிறேன். தொலைபேசி அழைக்கிறது. எதிர்முனையில், தெரிந்தவர் ஒருவர். பேசுகிறார்: ''ஐயா! நீங்கள் மேற்படியார் புத்தகம் பற்றி ஏதோ பதிவு கிதிவு'ங்கறாங்களே அப்படி ஏதாவது வெளியிட்டீங்களா?'' நான் சொல்கிறேன்: ''ஆமாங்க, அதன்பெயர் வலைப்பதிவு. வலைப்பூ'ன்னும் சொல்வாங்க. இன்னொன்று வலையிதழ். அவற்றில் நீங்கள் சொல்'றவருடைய புத்தகம், கிடைக்குமிடம் குறித்து பதிவு எழுதினேன்'ங்க!......ஏன், அதுக்கென்ன இப்போ?......'' ''எதினாச்சியும் குடுத்தாரா அவரு?..'' ''எதுக்குங்க குடுக்கணும்? '' ''பின்ன எதுக்கு செஞ்சீங்க?'' ''இது என்னங்க கேள்வி? நல்ல தமிழ் உணர்வுள்ளவர்.. அவருடைய ஆக்கபூர்வமான புத்தகத்தப் பற்றிப் பதிவு வெளியிடறதுல எந்த ஆதாயமும் எனக்குத் தேவையில்லங்க......'' '' என்ன, இப்படிப் பொறுப்பில்லாம பேசுறீங்க..நண்பரே..ஒங்க வீட்டுக் கரண்ட்டு.. உங்க வீட்'ல கட்டற டெலிபோன் பில்லு..இத்'த எல்லாம் யாருயாருக்கா'வோ தாரை வார்த்துட்டிருக்கீங்க..இருங்க, இருங்க அம்மா'ட்ட சொல்ற விதத்தில சொல்'றேன். சரியா'ப் பூடுவீங்க!......'' எரிச்சலுடன் நன்றி சொல்லிவிட்டுத் தொ.பே. இணைப்பை விலக்கிக் கொண்டேன். உள்ளம் சொல்லியது; ''இவராவது உன்னிடம் வெளிப்படையாகப் பேசினார். வெளிப்படையாகப் பேசாமல் ஒவ்வொரு காதாய்ப் போய் இதுபற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்பவர்களை என்ன செய்வாய்?'' இது கிடக்கட்டும். இது போன்ற பதிவுகளைத் தொடர்புடையவர்களே அக்கறை எடுத்துப் பார்ப்பதில்லை. ''இதனால் எனக்கு 'லைப்ரரி ஆர்டர்' வருமா?'' என்று கேட்டவரும் உண்டு. நாம் அடுத்த பதிவை, தாங்கள் பார்க்கும்வரை நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். எப்போது பார்ப்பார்கள், ஏன் இன்னும் பார்க்காமலிருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. 'பிரிண்ட்' எடுத்துத் தந்தால்தானே பார்க்க - என்றார் ஒருவர். வலையிதழ் மற்றும் வலைப்பதிவு என்றால் ஒன்று ஆகக்குறைவாக மதிப்பிடுகிறார்கள்; இல்லை மிக அதிகமான முக்கியத்துவம் தருகிறார்கள். இதில், சில வலைப்பதிவுகளில் - இன்னின்ன வலைப்பதிவுகளை 'நான்' பரிந்துரைக்கிறேன் என்றுவேறு ஒருபக்கம் வரிசைப் படுத்திக் காட்டுகிறார்கள். வலைஇதழ்கள் சில தங்கள் வட்டத்தை மட்டுமே சுட்டுகின்றன. விதிவிலக்காக, தனக்கு 'ஓரிழை மட்டுமே' தெரிந்த தமிழ் வலைஇதழாயினும் அதற்கு வழிகாட்டும் நண்பர்களும் இருக்கிறார்கள். வெறும் அரட்டைத்தளங்களாக, மற்றவர்களைக் கொச்சைப் படுத்துவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிற குழுவாகட்டும், வலைப்பதிவாகட்டும், வலையிதழே ஆகட்டும் - ஒருநாள் அதனதன் விளிம்பில் வந்து நிற்க நேரும்பொழுது வெறுமையே வந்து வாட்டும். ஒரு கை ஓசை எதுவானாலும் ஆகட்டும்; அதற்குக் காலம் தரும் பரிசு வெறுமை மட்டும்தான்.

13.11.05

ஆகாசம்பட்டு - கி.ராஜநாராயணன் நோக்கு

கி.ரா. என்று சுருக்கமாக அழைக்கப்பெறும் கி.ராஜநாராயணன் நல்ல முதிர்ந்த சிந்தனையாளர். நாட்டுப்புறத்தைப் பெருமைப்படுத்தியவர்களில் கி.ரா.வும் கோவை க.அய்யாமுத்து[கவிஞர்/உழவர்]வும் குறிப்பிடத்தக்கவர்கள். கி.ரா.வுக்குக் கதைசொல்வது என்பது கைவந்த கலை. அய்யாமுத்து போலவே ஆகாசம்பட்டு சேஷாசலமும் முழுநேர உழவுத் தொழிலாளர்தாம். ஒரே வேறுபாடு, பின்னவர் - கல்லூரிக்கல்வியாகிய இளம் விலங்கியல் படித்தவர். 1990 ஆம் ஆண்டு 'ஆகாசம்பட்டு'[மார்ச்சு,22]க்குக் கி.ரா. அணிந்துரை தந்திருக்கிறார். ஆறாண்டுக்குமேல் தான் எழுதிவந்த வெண்பாக்களை, பேராசிரியர் மீரா அவர்களின் 'அன்னம்' வெளியீடாகக் கொண்டுவந்த 'முழுநேர விவசாயி'யான சேஷாசலத்துக்கு, 'வாழ்க ஆகாசம்பட்டு' என்றே தலைப்பிட்டு வாழ்த்தி நான்கு பக்கங்கள், தன் வற்றாத மக்கள்மொழிநடையில் தந்துள்ள பெருந்தன்மையை, அவருடன் ஒப்பிடுகையில் 'பிரபலம்' குறைந்த எழுத்தாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்! கடிதம் எழுதும் பாணியில், ''அன்பார்ந்த ஆகாசம்பட்டு சேஷாசலம் அவர்களுக்கு'' என்று தொடங்கும் கி.ரா. அணிந்துரையின் பகுதிகள் சில: ''எந்த நேரமானாலும் வீடு போயி விழுந்தறணும் என்கிற சம்சாரிபாணி, என்னைப்போல -- எல்லா சம்சாரிகளை யும் போலவே -- உங்களையும் பிடித்து ஆட்டுவதைப் பார்க்கிறேன். வீட்டை விட்டு வெளியே போனால், இந்த மாதரியான வாகனப் பெருக்கமும் சிறுத்த சாலைகளும் வேக ஒழுங்கீனங்களும் நிறைந்த இந்தக் காலத்தில் வீடு வந்து சேருகிற வரை நிம்மதி இருக்காதுதான் பெண்டிருக்கு.'' ''கிராமத்தையும், கிராமத்தானையும் அவனது சிந்தனைகளையும் அப்படியே வெண்பாக்களில் வடித்துத் தள்ளியிருக்கிறீர்கள். வெண்பாவை வா என்றால் வருகிறது; போ என்றால் போகிறது; அப்படி வசக்கி வைத்திருக்கிறீர்கள் அந்தப் புலியை.'' ''நம் காலத்தில் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள் இதில்[ வெண்பா இயற்றுவதில்] வல்லாள கண்டனாகத் திகழ்ந்தார். எழுத்தாளர் புதுமைப்பித்தன் இதில் வித்தியாசமான சோதனைகளைச் செய்து பார்த்திருக்கிறார். பேச்சுத்தமிழை அப்படியே கவிதையில் மடக்கிக் கொண்டுவந்த மூலபுருசர் இவர்தான் தமிழில். ''பண்ணாத வம்பெல்லாம் பண்ணிவச்சி, இன்னைக்குக் கண்ணால மின்னா கசக்குதோ? - அண்ணாத்தே! ஆயாவந்தா லுன்னை அடுப்பில் முறிச்சி வப்பா(ள்) போயேன் தொலைந்து போ!'' என்று ஒரு தெக்கத்திப்பெண் தனது 'காதல'னைப் பார்த்துச் சொல்லுகிறமாதிரி எழுதிய இந்த வெண்பாவை நாங்கள் வாய்க்குவாய் சொல்லி மகிழ்வதுண்டு. ''என்னவெவ சாயம்! எழவுவெவ சாயம் பொன்னு வெளையற பூமியாம்ல! இண்ணைக்கும் போர்வையில பாதியே சோமனாச்சி! அண்ணாச்சி, வேர்வையில பாதி மழை!'' கரிசல் காட்டு சம்சாரியும் ஆகாசம்பட்டு விவசாயியும் மானாவாரி வர்க்கம் என்கிற முறையில் கூட்டாளிகள்தான். இவர்களை உவமித்துத்தான் சகோரப் பறவையை சொன்னார்களோ என்று நினைக்க வேண்டியதிருக்கிறது. மண்ணில் கால் பாவாமல் பேய்போல் அலைந்து திரிந்து கொண்டிருந்த ஏட்டுத் தமிழ்மொழியை மனித மொழியில் - பேச்சுத்தமிழில் - அதிலும் வெண்பாக்களில் பொதிந்து சாதனை புரிந்திருக்கிறீர்கள். மக்கள் நாவில்த்தான் சரஸ்வதிதேவி வாசம் பண்ணுகிறாள் என்பதை உங்கள் கவிதைகள் அழகாகச் சொல்லிக் காட்டுகின்றன. தமிழ்க்கவிதை வளர்ச்சியில் இது ஒரு திருப்புமுனை. வாழ்க ஆகாசம்பட்டு.''

8.11.05

"எனக்கு வாழ்க்கை போரடித்ததில்லை" - லமார்த்தீன்

பேரா. க. சச்சிதானந்தத்தின் 'சுவையான பிரஞ்சுப்பக்கங்கள் II' புத்தகத்தில் நான் கண்ட சுவாரசியமான,இந்தக் காலத்தில் நமக்குப் பயன்படக் கூடிய செய்தி. லமார்த்தீன் என்ற பிரஞ்சுப் படைப்பாளனின் கருத்தோவியம். பார்வைப்புலன் இழந்தவன் ஒருவன் இந்த வாழ்வை எவ்வளவு நேசிக்கிறான்! நாட்குறிப்பு, நாட்காட்டி, கடிகாரம் என்று எதுவும் பார்க்க இயலாதிருந்தும் அவை எல்லாவற்றையும் 'தான்' ஆகவே சுயப்படுத்தி இருக்கிறான்! அவன் சொல்கிறான்: "எப்போதுமே காலம் எனக்கு மிக நீண்டதாகத் தெரிவதில்லை. பருவநிலை நன்றாக இருக்கும்பொழுது, நான் வெயிலுள்ள நல்ல வாகான இடத்தில் அமர்ந்து சுவரின்மேலோ தேனீக்களின் பெட்டிமேலோ மரத்தின்மேலோ சாய்ந்து கொள்வேன். பள்ளத்தாக்கு, கோட்டை, மணிக்கூண்டு, புகைபோக்கிவழியாக புகையை வெளியிடும் வீடுகள், மேயும் காளைகள், பேசிக்கொண்டே வழிநடக்கும் பயணிகள் ஆகியவர்களை முற்காலத்தில் என் கண்களால் கண்டது போலவே இப்பொழுதும் என் மனக் கண்ணால் காண்கிறேன். கொள்ளுப்பயிர் பச்சை பிடித்தல், புல்வெளிகளில் புல்வெட்டுதல், கோதுமைக் கதிர்கள் முற்றுதல், இலைகள் பழுப்பேறுதல், பறவைகள் விரும்பும் முட்புதர்ப் பழங்கள் சிவத்தல் ஆகியவற்றை முற்காலத்தில் என் கண்களால் பார்த்தது போலவே இன்றும் எல்லாப் பருவ காலங்களிலும் நான் அறிவேன். என் கண்கள் இப்பொழுது என் காதுகளிலும் கைகளிலும் கால்களிலும் இருக்கின்றன. செயற்கைத்தேன் கூடுகளின் அருகில் மணிக்கணக்காக இருந்து, பெட்டியில் வைக்கோலின் அடியில் தேனீக்கள் செய்யும் ஒலியையும், அவை கதவின் வழியே ஒவ்வொன்றாக வெளிவந்து 'காற்று இனிமையாக வீசுகிறதா? மலர்கள் மலரத் தொடங்கிவிட்டனவா? என்று நோக்குவதையும் உணர்ந்து கேட்பேன். காய்ந்த கற்களில் உடும்புகள் ஓடுவதைக் கேட்பேன். எல்லாவகையான வண்டுகளும் வண்ணத்துப் பூச்சிகளும் என்னைச் சுற்றிப் பறப்பதை நான் அறிவேன். புற்களிலும் சருகுகளிலும் ஓடும் சிறு உயிரினங்களும் எனக்குத் தெரியும். அவைதாம் எனக்குக் கடிகாரம், நாட்காட்டி எல்லாம். அதோ குயில் கூவுகிறது. இது மார்ச்சு மாதம். வெயில் வந்துவிடும். அதோ கரிக்குருவியின் ஒலி. இது ஏப்ரல் மாதம். அதோ இசைக்குருவியின் பாட்டு, இது மே மாதம். அதோ வண்டின் ரீங்காரம். இது ஜூன் மாதம் 24ஆம் நாள். அதோ சிள்வண்டின் ஓசை. இது ஆகஸ்டு மாதம். அதோ பழுப்புக்குருவியின் ஒலி. இது கொடிமுந்திரியின் அறுவடைக்காலம். அது பழுத்துவிட்டது. அதோ வாலாட்டிக் குருவி, அதோ காக்கைகள், இதோ குளிர்காலம்!" என்று நான் சொல்லிக் கொள்ளுவேன். இதே போல ஒவ்வொரு நாளின் மணிப்பொழுதையும் நான் நன்கு அறிவேன். பறவைகளின் பாடல்கள், வண்டுகளின் ரீங்காரம், சிற்றூர்களில் இலைகளின் எழுச்சி-வீழ்ச்சி ஒலிகள், வானத்தில் சூரியனின் ஏற்றம் இறக்கம் இவற்றைக் கொண்டு மணி என்ன என்பதைத் துல்லியமாக அறிவேன். காலையில் எல்லாம் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்; நடுப்பகலில் எல்லாம் அடங்கும்; மாலையில் மீண்டும் தொடங்கும்; சிறிது நேரத்தில் எல்லாம் முடிந்துவிடும்...எனக்கு எப்போதுமே சலிப்புத் தோன்றுவதில்லை. அப்படித் தோன்றினால் "அது இருக்கிறதே!" என்று சொல்லிக் கொண்டே என் பையில் கையை விட்டுத் துழாவி மணிமாலையை எடுத்து என் கை சோரும்வரை உருட்டுவேன். உதடுகள் சோரும்வரை கடவுளை வேண்டுவேன். எப்பொழுதுமே காலம் எனக்கு மிக நீண்டதாகத் தெரிவதில்லை. அந்த நாட்களில், வழியில் நான் சந்தித்தவர்களின் - எனக்குத்தெரிந்தவர்களின் முகங்களை மீண்டும் காணுவதை மட்டும் நான் விரும்புகிறேன்." புத்தகம் கிடைக்குமிடம்: தமிழ்மணி பதிப்பகம், 127,ஈசுவரன் கோவில் தெரு, புதுச்சேரி - 605 001. பக்கங்கள்: 160 விலை: ரூ. 50 - 00

3.11.05

நான் - எனக்கு மட்டும்தான்!

குடும்பப் பாங்கானவள் நான். ராத்திரி,'குற்றம்' முடிய தொடர்கள் பார்ப்பேன். அவசியம் வந்தால் அதிகாலை, என் அதிகாலை - எட்டு மணிக்கு எழுவேன். விடுமுறை நாள்களில், கணவர் - பிள்ளைகளின் விடுமுறை நாள்களில் பத்துக்கு எழுவதே பழக்கம். வேறுவழி கிடைக்காவிட்டால் ஓரிரு நாள்கள் தேன்போல் உறவுகள் கவனிப்பேன். முகம் காட்டி மூன்றாம்நாள் கத்தரிப்பேன் - அவர் உறவினரை. என்கணவர் எனக்குமட்டும்தான் என்பது மட்டுமல்ல நான்,என்சொந்தங்களுக்கு மட்டும்தான். தாலி ஏறும் வரைதான் 'அட்ஜஸ்ட்மெண்ட்'டுகள். அப்புறம் அவைஎன் கெட்ட கனவுகள். யாருக்கு என்ன உதவிசெய்து என்னத்தைக் கண்டோம்? என்பது எனக்குள் ஞானம். என்னுள் திளைப்பேன். இன்பமாய் இருப்பேன். வெறுமை என்பது எனக்கில்லை. தொலைக்காட்சியே உற்ற துணை.

1.11.05

தித்திக்கிறதா தீபாவளி?

விடிவதற்கு மிக முன்பே தொலைபேசி கிணுகிணுக்கிறது. மணி 02:12. பிரான்சிலிருந்து சந்தோஷக்குரல், "ஹேப்பி தீபாவளி" சொல்கிறது. மைத்துனியின் குரல். "இப்பொழுது அங்கே மணி என்ன?" என்று, தூக்கக் கலக்கத்துடன் துணைவியார் கேட்கிறார். ஸ்பீக்கரில் "பத்து மணி! நீங்க'ள்லாம் இன்னும் தீபாவளி கொண்டாட ஆரம்பிக்கலையா?" என்று உற்சாகத்துடன் பதில் வருகிறது. அவர்களுக்கு இருக்கிற உற்சாகம் எங்களுக்கு அன்னியமாகவும், ஏன், திகைப்பாகவும்கூட இருக்கிறது. புதுவையிலிருந்து என் மைத்துனி பிரான்சுக்குச்சென்று 'செட்டில்' ஆகி இருபத்தெட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 'உற்சாக'த்தின் அக்கா, அதுதான் என் துணைவியார், இன்னும் தூக்கம் தோய்ந்திருக்கும் குரலில் கூறத் தொடங்கினார். "சின்ன வயசிலேதான் தீபாவளி எனக்குச் சந்தோஷமா இருந்துச்சு! அம்மாவும் பாட்டியும் இதே நேரம், இரண்டு மணிக்கு எழுந்திருச்சு, நல்ல சூடா விறகடுப்பில தண்ணி வச்சுக் குளிச்சிட்டு, எங்களையும் எழுப்பி, குளிக்க வச்சிருவாங்க. வடைக்கு மாவை பாட்டி ஆட்டுக்கல்'லுல அரைச்சிட்டுருப்பாங்க.. அம்மா 'சொய்யான்' உருண்டைக்கு 'ரெடி' பண்ணிட்டிருப்பாங்க... கடலைப்பருப்பும் வெல்லமும் தேங்காயும் கலந்த வாசனை 'கமகம'ன்னு வரும்.. பாட்டி மாவ' அரைச்சுட்டு வடை சுடறதுக்கு 'ரெடி' பண்ணுவாங்க..வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை எல்லாத்த'யும் அரிவாள்மனையில அரிஞ்சு வடைக்கு தயார் பண்ணுவாங்க..அம்மா பூஜை வேலை'லாம் பாத்துட்டிருப்பாங்க..சுவாமி முன்னாலே ஒரு மனை வச்சு, புதுத்துணிகள்'லாம் எடுத்து, மறக்காம நாலு மூலை'லயும் மஞ்சள் வச்சு, படைக்கறதுக்கு வைப்பாங்க.. கூடவே மாமா வீட்'ல இருந்து வந்த பட்டாசையும் படையலுக்கு வைப்பாங்க.. இதுக்கிடை'ல பாட்டி வடையையும் சொய்யான் உருண்டையையும் சுட்டு எடுத்திருப்பாங்க.. தலைவாழை எலை'ல சூடான வடை, இட்லி, சொய்யான் எல்லாம் வச்சு சுவாமிக்குப் படைப்பாங்க.. எங்களுக்கு புது 'டிரெஸ்ஸை' எப்படா கொடுப்பாங்க'ன்னு காத்துட்டிருப்போம்.. அதை உடுத்திட்டு.. காலை'ல அஞ்சு ஆறு மணிக்குள்ள அக்கம் பக்கத்துக்குப் போய் இனிப்பெல்லாம் கொடுத்துட்டு வருவோம்.. அவங்களும் கொடுக்க வீட்டுக்கு வருவாங்க.." இந்த நடுநிசி ஃபோன் வாழ்த்து, பிரான்சும் ஜெர்மனியும் சந்திக்கும் இடத்தருகே ஸ்திராஸ்பூரில் வாழ்ந்துகொண்டிருக்கும் என் மைத்துனியிடமிருந்து வந்து, மேலே கண்ட நினைவலைகளைத் துணைவியாரிடம் உசுப்பிவிட்டது.. அந்தக் காலத்தில் இது போல 'ஹேப்பி தீபாவளி' 'சுலோகன்'கள் கூவப்பட்டதில்லை. ஆனால் தீபாவளி மகிழ்ச்சியாக இருந்தது.. அன்னிய மண்ணில் அவர்கள் தீபாவளியை இயல்பாகக் கொண்டாடும்பொழுது சொந்த மண்ணில் வாழும் நாம் அப்படிக் கொண்டாட முடியவில்லை என்று துணைவியார் வருத்தப்பட்டார். இதில் தொலைக்காட்சியின் நாராசக் குரல் வேறு தொல்லைப்படுத்துவதில் முன்னணியில் நிற்கிறது. தொடர்பில்லாதவர்கள் எல்லாம் 'ஹாய்!' என்று ஆரம்பித்து இடுப்பை இலேசாக ஆட்டிக்கொண்டும் 'மூஞ்சி'யை அஷ்டகோணல் ஆக்கிக்கொண்டும் வாய் வெந்துபோன உச்சரிப்பில் "பட்டும படாமலே..தொட்டும் தொடாமலே.." 'ஸ்லாங்க்' கலந்த ஆங்கிலம் விரவிய சொற்களைப் போட்டு உளற, வெடித்து முடித்த பிள்ளைகளும் தாய்மார்களுமாக, கூடமெல்லாம் நிரம்ப, தொ.கா. பெட்டியின்முன் குழுமி 'அதுகளை'ப் பார்த்துக் கொண்டும், 'அதுக'ளின் விநோதமான குரல்நசிவையும் 'கூழ்கூழ்' உச்சரிப்பையும் இரசித்துக் கொண்டும், மற்றவர்கள்மேல் செலுத்தவேண்டிய கவனம் இழந்து பொய்யுலகம் ஒன்றில் மூழ்கிப் போவார்கள். இன்னொரு வீட்டில் இன்னொரு பக்கம். 'டீப்பா'யின்மேல் 'விடுதலை' நாளேடு விரிந்து கிடக்கும். முகப்பில் 'அசுரன் மலர்' - 'அசுரன் சிறப்பிதழ்' என்ற வாசகம் பெரிய எழுத்துகளில் தென்படும். "தீபாவளி என்னும் ஆரியப் பண்பட்டுப் படையெடுப்பைத் தோலுரிக்கும் வகையில்..." என்று தொடங்கி அந்த வீட்டுக்கு வெளியிலும் அக்கம் பக்கத்திலும் நிகழ்பவற்றுக்குச் சம்பந்தமே இல்லாமல் சொற்றொடர்கள் ஓடும்... புது தில்லி போன்ற இடங்களில் 'குண்டுகள்' வெடித்த பாதிப்பில் உயிர், உடைமைகள், வியாபாரம் இழந்தவர்களின் வீடுகளில் சோகம் ததும்பும். அது கொஞ்சமும் உறைக்காமல் 'மதம்' பிடித்தவர்கள் பலவித ஆட்டம் போடுவார்கள். ஆண்டுக்காண்டு தீபாவளி வரும்; தடிமனான, வண்ணங்கள் பல குழைந்த தீபாவளி மலர்கள் வரும்; 'அசுரன் சிறப்பிதழ்'களும் ஆங்காங்கு தென்படும். கொண்டாடாதவர்கள், சொந்தங்களிடமிருந்து வாழுமிடத்திலேயே அன்னியப்படுத்தப்பட்டு 'இருப்பார்'கள்...அவர்களுக்கும் இனிப்பும் பலகாரங்களும் கொடுக்கப்படும். அவர்களும் தின்று வைப்பார்கள். சிந்தனை மறந்து தூக்கம் வரும். ஆழ்ந்த உறக்கத்தில் தமிழர்கள் சிரிப்பார்கள்.

26.10.05

ஐயே மெத்தக் கடினம்!

எத்தனை எத்தனை விளம்பரங்கள்! கதிர் தொலைக்காட்சி (சன் டிவி) முதல் எல்லாவற்றிலும் காலைப் பொழுதில் சிறுவர் சிறுமியர் உடம்பை எப்படி எப்படியோ வளைக்கிறார்கள். ஒரு பெரியவர் எதை எதையோ பேசுகிறார். வைத்த கண் வாங்காமல், சோபாவில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு நம் வீட்டுச் சிறுவர் சிறுமியர் சிலர் அதைப் பார்க்கிறார்கள்... முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லாமல். பலர் 'ரிமோட்'டை அழுத்தி, கிழவனார்க்கும் அவர் பேச்சைக் கேட்டு வளைந்து கொடுத்துக் கொண்டிருக்கும் சிறுபிள்ளைகளுக்கும் விடை கொடுத்துவிட்டு, கதிர் இசை (சன் மியூசிக்)யைச் சின்னத்திரையில் 'ஹாய்' என்று பாதிக் கொட்டாவியாகத் தொடங்கிப் பாட்டும் கூத்தும் பார்க்கவைக்கும் தொகுப்பாயினியின் பழகுதமிழில் சிந்தையிழக்கிறார்கள். "அம்மா! ஜிம்முக்குப் போய்வாறேன்!" என்று இளைஞர்கள் இளைஞைகள் 'கஜினி'யின் 'ஒரு மாலை இளவெயில் நேர'த்தைக் காலையிலேயே பாடிக்கொண்டு கிளம்புகிறார்கள். காசுக்குக் காசு..கவர்ச்சிக்குக் கவர்ச்சி..ஜிம்கள்..அழகு நிலையங்கள்..பாரம்பரிய யோகா - பயிற்சிமையங்கள்....பள்ளி-கல்லூரிகளில் 'டெமான்ஸ்ட்ரேஷன்'கள்.. வயசான வாத்தியாரோ, பேராசிரியரோ, தலைமை ஆசிரியர்களோ ஆங்காங்கு அவ்வப்பொழுது நம்மை முறைத்துக் கொண்டு(' ஏ, மாபாவிகளே!' 'லுக்') அந்த மழித்த யோகா வாத்தியாருக்கு 'அறிமுகம்' என்ற பேரில் வாய்க்கு வந்தபடியெல்லாம் விளாசித் தள்ளுவார்கள். மத்தியான சாப்பாட்டினைப் பொறுத்த மட்டில் அவரவர் தலைவிதிக்கேற்ப நெளிவார்கள், கிறங்குவார்கள், திடீரென்று 'கெட்ட சொப்பனம்' கண்டு அதிர்ந்து விழித்துக் கொள்வார்கள் - பிள்ளைகள், பள்ளிகளில்... ஒரு மாதிரி, சக மாணவ மாணவியரைக் கண்டு - முறையே இளிப்பார்கள், வழிவார்கள் கல்லூரிகளில். இவற்றையெல்லாம் பார்க்காமலேயே, தன் 'நந்தனார் சரித்திரக் கீர்த்தனை'யில் கோபாலகிருஷ்ண பாரதியார் பற்பல ஆண்டுகளுக்கு முன்பே நந்தனார் பாடுவதுபோல் பாடிவைத்தார்: "ஐயே மெத்த கடினம் - உமதடிமை ஐயே மெத்த கடினம் பொய்யாத பொன்னம்பலத்து ஐயா நீ இருக்குமிடம் நையாத மனிதருக்கு உய்யாது கண்டு கொள்ளும்!... ஐயே மெத்த கடினம்..." தேவையா இதெல்லாம்? வள்ளலார் கேட்டார் அல்லவா? "உம்மை இப்பூமியில் பிறப்பிக்கத்தெரிந்தவருக்கு, காதையும் மூக்கையும் குத்திவிட்டு அனுப்பத் தெரியாதா?" என்று.

22.10.05

தங்கப்பா சொல்லும் மக்கள் பாவலர் இலக்கணம்

பாவலர் ம.இலெ.தங்கப்பா, 'பாட்டெனும் வாள் எடுப்பாய்' என்ற புதிய கவிதைத் தொகுப்பில் இப்படிச் சொல்லியிருக்கிறார்: "மேட்டுக் குடிப் பிறந்தார் - வெற்று மேனி மினுக்கிகள் கையிலிருந்தே பாட்டினை மீட்டுக்கொள்வாய்!" "ஏதிலர், மேற்படியார் - மக்கள் இலக்கியம் படைத்திடத் தகுந்தவரோ?" அப்படியானால் மக்கள் இலக்கியம் படைத்திடத் தகுதியுள்ளவர்கள் மேட்டுக்குடியில் பிறந்த மேனிமினுக்கிகளாக, உடுத்திய சட்டை வேட்டி குலையாதவர்களாக இருக்கக் கூடாது. மிகவும் நல்லதாகப் போயிற்று.. இப்பொழுதுள்ள பாவலர்களில் பாதிப் பேரை நம் மனப் பதிவு நிரலிலிருந்தே நீக்கிவிடலாம் அல்லவா? இப்புத்தகம் கிடைக்குமிடம்: குறும்பலாப்பேரிப் பாண்டியன் வானவில் வெளியீடு 79, முல்லைத் தெரு கிரிசா நகர் எரணாவூர் சென்னை - 600 057 பக்கம்:96 விலை:உரூபா 40/-

19.10.05

மீண்டும் டினோசார்களிடமா?

மீண்டும் டினோசார்களிடமா ஒப்படைக்கப் போகிறீர்கள் நம் பேருலகத்தை! அந்தப் பெருவிலங்குகள் ஊர்ந்து திரிவதற்கா? ஓ! உன்னதங்களே! அசிங்கமான உங்களின் இனவாத - குழுவாதங்கள் கொண்டு எங்களை இன்னும் எத்தனைக் காலம் பிளந்து, ஆப்பு வைக்கப் போகிறீர்கள்? மறந்தொருநாள் ஆப்பைப் பிடுங்கி, உங்கள் வாத-வால்மாட்டிக்கொண்டு - நீங்களும்தான் போகப் போகிறீர்கள்... "நுப்பும் நுரையுமாய் அடித்துச் செல்லும் ஆற்று வெள்ளத்துக்கு அடையாளம் தெரியாது" -கேள்விப்பட்டதில்லையா? "ஊருக்குள்ளது உங்களுக்கும்!" -சொலவடையை செவிமடுத்ததில்லையா? எங்களை எங்களின் நேசங்களிலிருந்தும் பாசங்களிலிருந்தும் உங்கள் கைத்தடியாகிவிட்ட அறிவியல்மூலம் இன்னும் எத்தனைக்காலம் பிரித்துவைத்திருக்கப் போகிறீர்கள்? ச்சே! உங்களின் எந்திரங்களுக்கும் போர் ஆயுதப் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளுக்கும் எங்களின் ஒற்றைக் கண்ணீர்த் துளியின் உண்மையான சக்தி வருமா? போயும் போயும் எந்திரங்களோடு சைபர்வெளி இயக்கி வாழும் வாழ்வில் எந்தப் பிடிமானம் நம்மை இந்த முகமற்று இணையும் உடலியக்கத்தில் நங்கூரமிட்டு நிலைப்படுத்தப் போகிறது? (தேவமைந்தன், போன்சாய் மனிதர்கள், திசம்பர் 1993: 'மீண்டும் ராட்சதப் பல்லிகளிடமா?' - கவிதையின் புதுவடிவம்.)

16.10.05

'சுந்தரி'(1917) சமூக நாவல் காட்டும் வ.ரா.'வின் பின்னணி

'சுந்தரி' என்ற சமூக நாவலை வ.ரா. அவர்கள் 1917-ஆம் ஆண்டு படைத்தார். ஆனால், 'அந்தரப் பிழைப்பு' என்ற மறுபெயரோடுதான் அந்த நாள்களில் அது அவராலேயே வெளியிடப்பெற்றிருக்கிறது. காரணம், அவர் வாழ்க்கையே அப்பொழுது அப்படித்தான் இருந்திருக்கிறது. 1910-ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு அவர் வந்தார். பாரதியாரையும் அரவிந்தரையும் சந்திக்கும் நோக்கத்தோடுதான் வந்தார். வந்தவர் அவர்களோடு தினமும் பழகி இருந்தார். 21/1/1914 ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்றுதான் புதுச்சேரியை விட்டு சென்னைக்குச் சென்றார். சரி..ஏன் வந்தார்? ஏன் நான்காண்டுகள் புதுவை வாழ்க்கை நிறையுமுன்பே போய்விட்டார்? அவர் வார்த்தைகள்: "வாழ்க்கையில் யோகமும் வேதாந்தமும் பேசிக் கொண்டிருப்பது எனக்கு எப்பொழுதுமே பிடிப்பதில்லை. அற்புதங்களைச் செய்ய, ஆற்றல் பெற்றது அறிவு. மனிதனுடைய உணர்ச்சி வெள்ளமோ, கலைகளை வானில் முட்டும்படியாக, அவ்வளவு உயர்த்தக்கூடிய சக்தி படைத்தது. இவ்விரண்டு அருமையான சாதனங்கள் இருந்தும், தமிழன் ஜாதிக்கும் ஆங்கில சாம்ராஜ்யத்துக்கும் அடிமைப்பட்டிருப்பதைக்காண, என் கண் அப்பொழுதே கூசிற்று; இப்பொழுதும்(1942) கூசுகின்றது." ஆனால், பின்னர் சொல்லுகிறார்" "புதுச்சேரியிலிருந்து வந்ததும்(சென்னை நுங்கம்பாக்கத்திலிருந்து 1942-இல் வ.ரா. எழுதிய குறிப்பு இது), நான் கண்டதெல்லாம் என் மனதை மிகவும் வாட்டி வதைத்தன." அடுத்து, தன் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் திருப்பழனத்துக்கு மனச்சோர்வுடன் சென்ற சில மாதங்களில் இதயக் கோளாறு அடைந்தார். (ஆதாரம்: அல்லையன்ஸ் கம்பெனி வெளியிட்ட 'சுந்தரி' நாவலில் "சுந்தரியின் புனர் ஜனனம்" என்ற தலைப்பின்கீழ் வ.ரா. எழுதியவை) 1919-ஆம் ஆண்டு புதுச்சேரியை விட்டு பாரதியாரும் சென்றார். சென்ற இரண்டு ஆண்டுகளிலேயே அவர் இயற்கை எய்தியமை இங்கே ஒப்பிட்டு நோக்கத் தக்கது.

11.10.05

சொந்த வேர்கள்

அன்புமிக்க தோழி! வாழ்க்கைக்குப் பொருள்தான் என்ன அவரவர் விளக்கம் தவிர்ப்பாய்! பிறர்சார்ந்து வாழும்வரை வாழ்க்கைக்குப் பொருளில்லை! நமக்காகப் பிறர்முடிவை எடுக்கு மட்டும் நம்கையில் நம்வாழ்க்கை இருப்ப தில்லை கற்றகல்வி நலம்வீசும் விழிகளினால் உன்வாழ்வை எதிர்நோக்கு! இதுவரை இருந்தஉன் ஈரமான விழிமாற்று! நயமுள்ள கவிதைகள் நயங்காண எவரையும் எதிர்பார்க்க மாட்டா. எதிர்வந்து சுழலும் வெளிச்ச மெய்ம்மைகள் வழிகாட்டும் உனக்கு. பொருளியல் விடுதலைதான் காலூன்றச் செய்யும்! தன் சொந்த வேர்களால் இந்தமண் ஊடுருவி நிற்பதுவே பேரின்பம்! (28-1-1993: தேவமைந்தன், போன்சாய் மனிதர்கள், திசம்பர் 1993; 'புதுச்சேரி' இலக்கிய மின்னிதழ் - சூன் 2005.)

8.10.05

'முட்டாள்கள் தினம்' - படையல்கள்

(இலக்கணம்) முட்டாள் எனப்படுவோன் யார்எனின் மூளையில் யாதொன்றும் வையா தவன் தலைக்கனம் மன்னார்குடியில் மருத்துவர் ஒருவர். அறுவை மருத்துவம் தேர்ந்த வித்தகர். அவரிடம் ஒருநாள் - நொந்தே ஒருவர் நோயால் வந்தார். நோய்ப்பெயர் 'தலைக்கனம்;' அறுவை நடந்தது; மருத்துவர் திகைத்தார்; உள்ளே மூளையே இல்லையாம். பெரும்புகழ் நடிகை அரவங் காட்டில்ஓர் அழகிய பெண்ணாள்; சென்னை சென்று 'பெரும்புகழ்' ஈட்டவே 'சேட்'டிடம் அழகை அடகாய் வைத்தாள். ஆயிரம்பத்து அடகால் பெற்றவள் மீண்டும் இதுவரை மீட்கவே இல்லையாம். இப்பொழுது அவளோ பெரும்புகழ் நடிகை. காலாட்டி காஞ்சி புரத்தில் காலாட்டி ஒருவர். செஞ்சியில் நாடி சோதிடம் பார்க்கவே சென்றார். சுவடியில் தேடிக் கண்ட சோதிடர் - "முன்னர்ப் பிறந்த பிறப்பில் நீங்கள்,ஓர் பஞ்சகல்யாணிக் குதிரை!" என்றார். "அப்படி யானால் அடுத்த பிறப்பில் என்ன ஆவேன்?" என்றார். சுவடி தேடிய சோதிடர் கண்டார். தயங்கினார் சொல்ல. இவர்வற் புறுத்தவே, சொன்னார்; " கழுதையாய்ப் பிறந்துதான் கால்களை ஆட்டுவீர்!" நூலாசிரியர் குட்டிகள் போடும் பன்றியின் திறமை தோற்கும் படியாய் நூறிரு நூறு புத்தகம் 'போட்டவர்.' பத்துநூல் வெட்டிப் புதியநூல் பதிப்பார். பட்டம் விருதுகள் பற்பல 'வாங்குவார்.' ஆண்டவர் ஒருநாள் அவரது கனவில் நாடியே வந்தார்; "மெச்சினேன் பெருமை! மகனே! என்ன வேண்டுமோ அதுகேள்! எதுவேண் டினும்அது தருவேன்!" யோசித்துப் பார்க்கவும் நேரம்இல் லாதவர் உடனே கேட்டார்: "ஆண்டவ ரே!உம் அத்தனைப் பட்டப் பெயர்களும் புராணம் பற்பல உம்மைப் புகழும் கதைகளும் எனக்கே எனக்காய் வாய்த்திடல் வேண்டும்?" அதிர்ச்சி உற்ற ஆண்டவர் கேட்டார்: "பிறகு நான்,என் செய்ய?" 'சுயதம் பட்டம்' சற்றும் கூசாமல் சொன்னார்: " உலகில் இருப்பீர்; எனது நூல்கள் எல்லாம் தருகிறேன். படித்து மகிழ்வீர்!" என்றார் பெருமையாய். அடுத்தொரு சத்தம். புகையின் நடுவில் ஆண்டவர் மறைந்தார்; நம்மவர் விழித்தார். (தேவமைந்தன்,ஏப்ரல் 1, 1975: உங்கள் தெருவில் ஒரு பாடகன், சனவரி 1976. திருத்தம் பெற்றது.)

பாடும்போது..

அடிக்கடி 'ரிப்பேர்'ஆகும் என் 'தட்டுமாடல்' கைவானொலி ஏதோ நினைத்துக் கொண்டு திடுமென்று பாடியது: "பாடும் போதுநான் தென்றல் காற்று." (தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், சனவரி 1976)

புதுமூலர்

மரத்தை மறைத்தான் மதிகெட்ட மனிதன் மரத்தால் மறைந்தான் மழையற்ற மனிதன் மரத்தை மறைத்தது பைஞ்சுதைக் கட்டடம் மரத்தால் மறைந்தது பழைமைக் கட்டடம். (தேவமைந்தன்,'விருந்து,' புதுச்சேரி, நவம்பர் 1974 இதழ். திருத்தம் பெற்றது.)

4.10.05

சுவர்கள்

நெஞ்சம் நிறைய கசப்பு - என் மூளை நிரம்ப செய்தி நினைவு முழுதும் புண்கள் - என் நோக்கம் மறுக்கும் வெளிச்சம். வானம் மறைக்கும் சுவர்கள் - தேன் கூடு மறைக்கும் பாறை - கொடித் துண்டு மறைக்கும் கொய்யா - நம் எண்ணம் மறைக்கும் எதையும். பண்பை வீசி எறிந்து - நல்ல அன்பை நாளும் துறந்து - செயல் எங்கே கூடும் என்று - சந்தை நாய்போல் என்றும் அலைந்து - திரியும் வாழ்வுக் கின்று வாழ்வு. செய்து தந்தால் நல்லர் - செய்யக் கற்றுத் தந்தால் வீணர் - சிரித்துக் கழுத்தை அறுப்பவர் நல்லர் - கடுத்து நன்மை செய்பவர் அல்லர் - இவை நிகழ்வில் திகழும் நெறிகள். நல்லவை கெட்டவை எல்லாம் நம்மால் மட்டுமே ஆகும் மற்றவர் உற்றவர் ஆகார் கற்றவர் விழிப்பில் வாழ்வார். குறுகலான எண்ணம் குந்திக் குமைய வைக்கும் நம்மை அகன்று விரிந்த எண்ணம் - என்றும் ஆக்கி வளர்க்கும் உண்மை.

2.10.05

என்னை எழுதும் அந்தக் கைக்கு......

என்னைத் தொடங்கிய நீ, எழுதிக் கொண்டிருக்கிறாய். என் அற்பத்தனங்கள் பொய்ம்மைகள் இருமுகங்களை முகமூடிகள் என்றொதுக்கவா, இல்லை கேடயங்கள் என்று உரிமை கொண்டாடவா? புலனில் பழுதுபட்ட அந்தப்பெண் அகவெளிச்சத்துடன் ஆகாசத்திலிருந்து இறங்கி வருகையில் அகத்தில் பழுதுபட்ட நான் புலன்முன் வெளிச்சத்துடன் தட்டுத் தடுமாறி மேலேற முயற்சி செய்கிறேன். மூளையில் மிகுதி சுமந்ததால் இதயம் பொக்கையாய் ஆயிற்று. நெம்புகோல் கவிதையும் செங்கோல் கவிதைகளும் அந்நியமாயின எனக்கு. மூக்கணாங்கயிறு மாட்டப்பெற்ற புலவர்களுக்கும் அந்நியமானேன் நான். எனக்கு நான் புறத்திலேயே மோதிக் கொள்வதால், பகைகள் எனக்குப் பரிதாபப்பட்டு வருந்தி ஒதுங்கிக் கொண்டன. ஒரு மர்மமான மாய முடிச்சு என் குரல்வளை இறுக்க, கனவிலும் தூக்கிலிடப் படுகிறேன். அந்த வல்லூறுக்கு இருக்கும் சுதர்மம் எனக்குப் புரியவில்லை. ஆடுகளோடு ஆடாகி, கறிகாய் வெட்டுபவரைக் கண்டாலும் என் மனது பதைக்கிறது. என்னைச் சார்ந்தோர் விரலில் புண்பட்டாலும் நெஞ்சில் குருதி வடிக்கும் 'அடியேன்' அயலார் கண்ணில் புண்பட்டு அழுது துடித்தாலும் மெளனஞானம் பூணுகிறேன். பாராட்டுப் பிச்சைக்கு மடியேந்தத் தயங்காதவன், விளம்பரப் பிச்சைக்காரரை வெறுத்துப் பேசுகிறேன். நீ போடும் கணக்கொன்று. நான் போடும் கணக்கொன்று. தத்துவங்கள் ஒத்துவரா வாழ்க்கை.. ஆதாரங்களும் அசைக்கப் படுகையில் அச்சம் வந்து ஆசனத்தே அமர்கிறது. இருப்பது ஓர் இருக்கை. ஒன்று,நீ அதில் உட்கார். இல்லையெனில் இருக்கையையே இல்லாமலாக்கு. நீ, எப்பொழுதுமே என் ஆண்டாளாகவும் ஆண்டானாகவும், நான், உன் அடிமையாகவும் மட்டுமே இருக்க வேண்டுமென்று சிலர் சொல்வதை நீயும் நம்புகிறாயா? நிபந்தனைகளின் பேரில் நான் வாழ்வதெனில், அழுதும் அரற்றியும் தொழுதும் தூமலர் தூவியும் உன்னை நான் வழிபட வேண்டுமெனில் உனக்கும் எனக்கும் உள்ள உறவின் இரகசியம் வெளிப்பட்டுவிட்டதா? நீ,என் நித்திய முதலாளி எனில், தொழிலாளியாகும் வாய்ப்பு உனக்கும் மறுக்கப்பட்டு விட்டதா? கேள்விகளாலேயே உன்னை இன்னும் எத்தனைக் காலம் அர்ச்சிப்பேன்? நீயின்றி நானில்லை எனில், என் செயல்களுக்கு மட்டும்தான் நான் பொறுப்பா? மஞ்சள் இலக்கியம் அசிங்கமெனில், நம்முறவுக்கு விளக்கமும் விதிமுறைகளும் இடும் ஆபாச வியாபாரிகள் மட்டும் 'தத்துவ ஞானிக'ளா? வியாக்கியானச் சங்கிலிகளில் என்னை மாட்டி வைத்துச் சின்னங்களின் முட்களில் என்னைக் கீறி, சுண்டல் விநியோகத்துக்குக் காத்திருக்கவைக்கும் கல்நெஞ்சுப் பேர்வழியா நீ? நாற்ற வாய்களிலிருந்து வரும் போற்றி நாராசங்களை எவ்வாறு நீ செவிமடுக்கிறாய்? உண்மையிலேயே நீ பொற்கிழி தருமிக்கு அருளும் அளவு சமரசம் செய்து கொண்டாயா? வெளவால் நாற்றப் பிரகாரங்களுக்குள் இருட்டுக் குகைக்குள் எண்ணைய்ப் பிசுபிசுப்பில் உன்னால் கொலு வீற்றிருக்க முடிகிறதா? என்னாலேயே மூச்சுவிட முடியாத இத்தனைக் குப்பை குவியலிலா உன் திருநாமங்கள் ஆராதிக்கப்படுகின்றன? அதில்வேறு, ஓரிரு மொழியறிவுதான் உனக்கு உள்ளதாமே? பக்திக் கதைகளைப் படித்து, படித்தபின் உன்னிடம் எனக்கு பயமே மேலிடுகிறது. பசி பல்லாயிரம் பேரை எரிப்பதற்கும் உனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையாமே? வறுமை பலருக்குப் பரிசளிக்கப் படுவதற்கு நீ எந்தவிதப் பொறுப்பும் ஏற்க மாட்டாயாமே? இன்னும் எத்தனை எத்தனை அவதூறுகள் உன்னைப் பற்றி! உன் அடையாளங்களை நீ காட்டாத பொழுதே உன்னை அரைநிர்வாண ஓவியமாக்கிய இந்தப் பேர்வழிகளின் உபதேசங்களையும் நானேற்கத்தான் இரண்டு காதுகளை எனக்குத் தந்தாயாமே? அதென்ன,எனக்கு நீ எந்தச் சொல்லையும் அனுப்பிவைக்காமல் இந்த அயோக்கியர்களுக்கு மட்டும் அடிக்கடி 'டெலிஃபோன்' செய்கிறாய்? தர்மங்களை அதர்மவாதிகள் பேசலாம், அதர்மத்தைத் தர்மவான்கள் தற்காலிகமாகவேனும் ஏந்தக் கூடாதா? எழுதுகோல் என்கையில் எழுதுகைக்கு மறுக்கிறதா? போகும் பாதைக்குப் பாதங்கள் என்ன செய்யும்? எழுதும் எழுத்துக்கு எழுதுகோல் பொறுப்பல்ல. எனைஎழுதும் கை செய்பிழைக்கு நானும் பொறுப்பல்ல. (31-12-1986: தேவமைந்தன், போன்சாய் மனிதர்கள், திசம்பர் 1993.)

30.9.05

ஒரு தீர்மானத்துக்கு வருவோம்!

ஒவ்வொன்றையும் எழுதித் தீர்த்துவிட முடியாத அளவு அலப்பல்கள், இன்றைய மின்னிதழ்களிலும் குழுக்களிலும்...... பாராட்டுவோம் என்று எவர்க்கும் பின்னூட்டம் இடுகின்ற என்னை வெறுப்பேற்றினார் ஒருவர். எப்படி? மின்னிதழ் ஒன்றில் கவிதை எழுதியிருந்தார் அவர். அதில் என் விமர்சனம்( இன்னொருவர் பற்றி) வந்தபொழுது 'மெசஞ்சர்' வழி தொடர்பு கொண்டு, அவ்விதழில் வந்த தன் கவிதையை நான் கண்டேனா என்று கோடிட்டார். தேடி வாசித்துப் பின்னூட்டமிட்டு, படி ஒன்றையும் அனுப்பிவைத்தேன். வழக்கப்படி யூனிகோடு தமிழில்தான். மீண்டும் மெசஞ்சர். அதில் அவர் மீண்டும். ''தமிழ் ஃபாண்ட்களில் அனுப்பிவைக்க முடியுமா?'' என்று கேட்டார். யூனிகோடு, தமிழ் எழுத்துரு அல்லவா? சிலர், நான் யூனிகோடு குறித்துக் காசி அவர்கள் எழுதிய பாடங்கள் பற்றிச் சொன்ன பின்பும், தியாகு அறிவுறுத்திய 'Read Tamil: cascaded Tamil Style Sheet' குறித்து விவரம் தந்துவிட்ட பின்பும் ''தமிழ் ஃபாண்ட்ஸின் அழகு இதற்கு வருமா?'' என்று ''அடியைப் புடிடா பாரதபட்டா!'' என்று பல்லவியிலிருந்து மீண்டும் தொடங்குகிறார்கள். இதுதான் போகட்டும் என்றால், நல்ல உணர்வுள்ள தமிழ் ஆர்வலர்களின் மின்குழுவில் உள்ள 'சீனியர்' ஒருவர் - ''நான் ஏன் விலகுகிறேன் என்றால்.........." என்று பாரதம் படித்து, ''சேர வாரும் ஜெகத்தீரே!'' என்று 'இன்னொன்றில்' சேர அழைப்பு விடுக்கிறார். இதற்கு விதிவிலக்காக,"விடைபெறுகிறேன் நண்பர்களே!'' என்று பண்பாக விடைபெற்று, நம் கண்களில் நீர் வரும்படிஒருவரியில் விடைபெறுபவரும் இருக்கிறார். பண்பு என்பதுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. சங்க இலக்கியக் கலித்தொகை வரியொன்று, ''பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்'' என்கிறது. அடுத்தவர்களின் பாடுகள் அறிந்து பண்பும் நாகரிகமும் பொருந்த நடந்து கொள்ளுதலே வலையெழுத வருபவர்களும், வந்து 'ரொம்ப காலம்' ஆகிவிட்டவர்களும் பின்பற்ற வேண்டிய அடிப்படை வலைநேயம் ஆகும்.

25.9.05

ஒரு விடியலுக்கு முன் விளைந்த எண்ணப்பதிவுகள்

சற்றுப்பொறு. என்னால் கவர்ச்சியாகவோ - அதிர்ச்சியூட்டும் அழுத்தத்துடனோ எதையும் எழுத முடியாது; மற்றவர்களைப் புண்படுத்தியெழுத - வரவே வராது. மிகையுணர்ச்சி ஊட்டும் எழுத்துகள் வீச்சமெறியும் பலநாள் கருவாட்டு சுண்டக் குழம்பின் சொட்டுகள். சிலருக்கு மிகவும் பிடித்துப் போகலாம். ஆனாலும் எதனோடு, எதற்காக, எதைத் திருப்தி பண்ணிக்கொண்டு அன்றன்று வாழ்வைப் புதுப்பித்துக் கொள்கிறோமோ, அந்த - உடம்புக்கு ஆகாது என்பதையும் நாம் ஏமாற்றிக் கொள்ளக்கூடாது. மூளை(எ) மனத்துக்கும் மிகையுணர்ச்சி உதவாது. புகைபிடித்த முதற்கணம், முழுமையாக மறுதலித்த உடலும் மனமும் திணிக்கத் திணிக்க ஏற்றுக்கொள்வது, வேறுவழியில்லாததால். சரியானது என்பதால் அல்ல. உடலுக்கும் உளத்துக்கும் மூளைக்கும் மொழிக்கும் வாழ்க்கைக்கும் அப்படியொன்றும் வேறுபாடுஇல்லை.. நிறப்பிரிகை ஒன்றின் வேறுவேறு வண்ண ஒளிப் பாய்ச்சல்களே அவை. கோமாளித்தனமும் பித்துக்கொள்ளித்தனமும் அரசியலில் மட்டுமல்ல; எல்லாத் தளங்களிலும் விலைபோகிறது. கலைநயம் காத்திருக்க வேண்டும்தான். கண்டுகொள்ளப் படுமுன்பே காலம்ஆகவும் வாய்ப்புண்டு. மறுபடியும் பிறப்போம். எழுதுவோம். மாலைவானின் முகில்தொகுப்பு வரைகலையும் வண்ணச் சேர்க்கையும் அடுத்த விடியல் வானத்தில் மீண்டும் பிறப்பதில்லையா? மெழுகுத்திரி எரியும்பொழுது எதுவும் வீணாவதில்லை. இயல்பாய் வாழ்வதால், எழுதுவதால் யாருக்கும் நட்டமில்லை. (தேவமைந்தன், 1977: புல்வெளி[கவிதைத் தொகுப்பு], திசம்பர் 1980)

20.9.05

எழுவாய் பயனிலை செயப்படுபொருள்

(அண்ணன்மார் கூத்து மெட்டு) (எடுப்பு) எத்தனைப் பாட்டை எழுதிப் போட்டாலும் எதற்கும் இங்கே பயனிலை! எழுவாய் நெஞ்சே செயப்படுபொருள்தான் ஏதும் இங்கே தெளிவிலை... (எத்தனைப்...... (துணை எடுப்பு) வள்ளுவருக்கே நாமம் போட்டவர் - நெஞ்சை அள்ளும் சிலம்பை விற்று வாழ்பவர் பாரதி பாவேந்தர் பெயர்களைச் சொல்லித் தம்மை வளர்ப்பவர் நம்மை முறைக்கையில் (எத்தனைப்...... (முடிப்பு) தமிழைக் காசாக்கிச் சொத்து சேர்த்தவர் கம்பனைக் கரகம் ஆடிப் பிழைப்பவர் - கவி அரங்கத்து வாய்ப்பை நாடி இளிப்பவர் தரகு வேலையைத் தமிழில் திணிப்பவர் தன்னை விளம்பரம் ஆக்கித் திரிபவர் - தமிழ் மொழியை வாணிகம் பண்ணிச் செழிப்பவர் இத்தனைப் பேரும் இத்தரை வாழ்கையில் (எத்தனைப்...... (தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976)

காக்கை அலைக்கும் சிறுவர்

புலம்தரு செந்நெல் புழுக்கிய முன்றில். விடாதொரு காக்கையை அலைக்கும் சிறுவர்: கயிற்றால் காலைக் கட்டியே இழுத்தும், சிறகுகள் பிடித்துச் சிவ்வெனப் பிய்த்தும், நொய்யவும் நோகவும் தரைதனில் அறைந்தும், சிலுக்கெனச் சிதைந்து போகவும் வைக்க-- எவர்தாம் இவர்க்குஅதி காரம் வழங்கினர்; வாழ்வா? ஓ!அது கொடிதே. (தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976: சிறிது மாற்றப்பெற்றது.)

மன விடுதலையை அருள்வாய்!

விடுதலையை அருள்வாய்- தாயே, மன விடுதலையை அருள்வாய்! இன்பமும் துன்பமும் விடும்நிலை எய்திட இயல்பாய் வாழ்ந்துநான் உண்மையை அறிந்திட (விடுதலையை...... உயிர்கள் அனைத்தும் ஒன்றென உணர்ந்தேன் உண்மையாய் வாழ்வதே உயர்வெனத் தெளிந்தேன் பொய்ம்மை வாழ்வினை நஞ்சென வெறுத்தேன் தூய்மையே உலகின் தூண்எனப் புரிந்தேன் (விடுதலையை...... அரிமா வன்புலி மானினம் நரிகளும் ஆவொடு பாம்புதேள் அனைத்தும் உன்வடிவே மலரொடு செடிகொடி மலைகளும் அருவியும் மாண்புறு பறவையும் நீயெனக் கொண்டேன் (விடுதலையை...... (தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976: முகப்புப் பாடல்)

17.9.05

அன்பு ஆன அப்பாவுக்கு... ...

தழைத்த வாழையின் இருப்பும் கனமும் அடிவாழைக்கு அவஸ்தை ஆயிற்று. அறிந்தோ அறியாமலோ அதை உணர்ந்து வாழைப் 'பெரிசு' பக்கவாட்டில் சாய்ந்து வீழ்ந்தது. அடிவாழை இப்பொழுது தலைவாழை ஆனது. தன்மேல் அடிக்கத் தொடங்கிய வெயிலும் வறண்ட காற்றும் எப்படிபபட்டவை என்பதை இப்பொழுதுதான் தெரிந்துகொண்டது.. இத்தனைக் காலம் அத்தனைக் 'கிழம்' இத்தனையும் தாங்கியதா?... ****************************** தன் அடிவாழைகளுக்கு தான் சுமையாகாமல் தவிர்ப்பது எங்ஙனம் தவிர்வது எவ்வாறு என்று ஓயாமல் சிந்திக்கிறது, இப்பொழுதெல்லாம் - அந்தப் புதியதும் இளையதுமாய் இருந்த பழைய அடிவாழை. (தேவமைந்தன், 28/01/1988: போன்சாய் மனிதர்கள், 1993)

சூரியகீதை

தான் வெளிச்சமாய் இருப்பது தெரியுமா சூரியனுக்கு? (தேவமைந்தன், 03/08/1988: போன்சாய் மனிதர்கள், 1993)

எது?

தாள்களை எழுதத் தந்து பேனாவைக் கையில் திணித்து எழுதம்மா எழுது என்றுன் மோவாயை ஏந்தி நின்று எத்தனைதான் கெஞ்சினாலும் தொலைக்காட்சி தன்னைவிட்டுக் கண்திருப்பா திருப்பவளே! என்னைமட்டுமா எழுதவைத்தது? என்னைமட்டுமா உழுதுபார்த்தது? என்னைமட்டுமா பேசவைத்தது? எத்தனை எத்தனை யோபேர் எழுதவும் பேசவும் இடம்கொடுத்தது - உன்னை மட்டும் வண்ணப் பெட்டி முன்வைத்தது ஏன்பெண்ணே? (தேவமைந்தன், 16/08/1988: போன்சாய் மனிதர்கள், 1993)

சொந்தபந்தங்கள்

நாம் சிரித்த பொழுது வந்து குந்தி தாம் நாம்'ஐ ஒப்பிட்டு நொந்து நோக்கி நாள் கழித்து போக வேண்டும் என்று வந்த போது வம்பு வாது பண்ணி விட்டு நோக வைத்துப் போகுமே சொந்த பந்தம் என்றுமே. (தேவமைந்தன்: 16/08/1988: போன்சாய் மனிதர்கள், 1993)

படிப்பினைகள்

எளியவர்கள் தோற்றுவிட எத்தரவர் வென்றிடுவர். உழைப்பவர்கள் மோதிக்கொள்ள உலுத்தரவர் உள்நுழைவர். பெற்றவர்கள் பிள்ளைகளை மற்றவர்கள் கொண்டுசெல்வர். கற்றவர்கள் நிலையங்களில் கல்லாதோர் விருதுகொள்வர். காக்கைதன் கூட்டினிலே குயில்சென்று முட்டையிடும். கறையானின் புற்றினிலே கருநாகம் குடியேறும். கானமயில் ஆடுவதை வான்கோழி திறனாயும். காடதிரப் பிளிறிவரும் களிறெதிரே எலிமுறைக்கும். பணமிருந்தால் போதுமவர் எதையும்பெற முடியும். பிணங்கூட மதிப்படையும்; பல்லக்கில் செல்லும். அறிவிருந்தும் அறிவில்லார் கீழ்ப்பணிகள் புரியும் அறிவுடையர் சொல்லெங்கே அம்பலத்தில் ஏறும்? எறும்பெல்லாம் உழைத்துழைத்துச் சேர்த்துவைத்த உணவை சுறுசுறுப்பாய்ப் பெருச்சாளி தோண்டியபின் உண்ணும். வானமதில் விடுதலையாய் சிறகடிக்கும் புறாவை வாட்டமுற்ற வல்லூறு வாய்போடப் பார்க்கும். இது என்ன இது என்ன இதுஎன்ன நண்பா? படிப்பினையா? பாடமா! விழித்தெழுநீ நண்பா...... (1976: புல்வெளி,1980)

14.9.05

என்றும் புலம்பாதவள்.

வாசுகியாய் வாழ ஆசை! வள்ளுவன்தான் வாய்க்கவில்லை. உங்களைப்போல் புலம்ப மட்டும் எனக்கு வராது! சலித்துக்கொள்ளத் தேவை எனக்கில்லை. எதற்காக? என்னிடத்தில் குறை இல்லாதபொழுது நான் ஏன் சபிக்கவேண்டும்? சலித்துக்கொள்ளத்தான் வேண்டும்! சராசரியாய் வாழ இஷ்டமில்லை எனக்கு. ஏன், எதற்காக நான் அலட்டிக்கொள்ளவேண்டும்? அலங்காரப் பதுமையும் அல்ல, பசப்பலும் பாசாங்கும் எனக்கெதற்கு? கணவன் வாய்த்தாலும் - அவன் அடிமனத்தையும் ஊடுருவக்கூடிய நான், நாத்தனார் மாமியாரை என்வசம் பூட்டிவைப்பேன் - 'டெஸ்க்டாப் ஐகான்'களாய். உள்நோக்கம் எதுவும் எனக்கில்லாததால். புலம்புவதில்லை இனிமேலும். புகழோடு வாழ்ந்தும் புரியாமலென்னிடம் விளையாடப் பார்த்த வீணரை,நான் விட்டதில்லை. கொங்கண முனிவர்களும் துர்வாச ரிஷிகளும் காயம்பட வைத்தவள்நான். அப்படி ஒன்றும் அபூர்வமான பிறவி அல்லள். தன்னை உணர்ந்த எவருக்கும் சாத்தியப்பாடு இது என்னை உணர்ந்தவள் என்பதால் நான்...............

11.9.05

எத்தனைக் குறைகள் இருந்தாலும்...

சோலையில் ஆயிரம் மலர்கள் மலரினும் எல்லாம் மல்லிகை மலராகுமா? உலகில் எத்தனை நாடுகள் இருப்பினும் எல்லாம் என்றன் நாடாகுமா? எத்தனைக் குறைகள் இருந்தாலும் -- என் இந்திய நாட்டுக்கு இணையேது? கோடியே நிறைகள் குவிந்தாலும் -- அயல் நாட்டினில் எனக்கு மகிழ்வேது? மொழி,இனம் கெடுக்க முன்வரு வோரையும் மதிக்கும் என் தமிழ்நாடே! தமிழர் என்றே தம்மை உணராதோ ரையும் தாங்கிடும் தமிழ்நாடே! -- இன்னும் எத்தனை குறைகள் இருந்தாலும் -- நான் உன்மேல் அன்புகொள்வேன் -- நான் உன்னிடம் வாழ்ந்திருப்பேன்!...... (தேவமைந்தன், புல்வெளி, 1980) [ப:1976]

அரிது அரிது! குருவியாய்ப் பிறத்தல் அரிது!

சிட்டுக் குருவிகளின்-- பாதைகள் தனிப்பட்டும் வேறுபட்டும் விரைவுகொண்ட திட்டவட்டமான - ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ள வேண்டாத எடுபட்டுப் பறத்தல்கள், அவற்றின் பலகோணப் பார்வை, வெட்டவெளியும் கட்டடங்களும் கூரைச் சார்ப்புகளும் கொப்புகிளைகளும் உள்ளடக்கிய வழித்தட வரைவு, பறப்புக்கணக்கு,......துல்லியங்கள். ஓ! மனிதன் மட்டுமா மகத்தானவன்? (தேவமைந்தன், 1/8/1987, போன்சாய் மனிதர்கள், 1993)

9.9.05

எல்லைக்கு உட்பட்டும் - எத்தனைக் குதிகுதிப்பு?

முற்றிலும் எல்லைக்குட்பட்டு விளிம்புகள் வரையறுக்கப்பெற்றன. வெகுகண்டிப்பான, களங்களும் காட்சிகளும் முன்னரே பணித்திட்டம் 'ஆகி'விட்ட இயங்குகை. சிக்கல்மிக்க - ஆனால் - வெறுங்கருவி, உடம்பு. பதின்மூன்று நிமிடத்துக்கொருமுறை இயற்கை விட்டுவைக்கும் புதுப்பிப்பு. துன்பம் இல்லாத பொழுது இன்பம். உடம்புக்குப் போட்டி மனம். அதற்கு ஆகாதன எல்லாம் இதற்கு ஆகும். ஆண் பெண், மேற்படிக் கருவியின் உள்-வெளி வாங்கல்கள். இன உற்பத்தி வசதிக்காக ஒருவர் இடம் மற்றவர்க்கு ஈர்ப்பு. விதிவிலக்குகள், அதிலும். சதைபொதி கருவிகள் மற்ற சதைபொதி ஊடகங்களை விழைதல். இவை வரையறை ஆனது தானாக - தன்னிச்சையால்தானா? (தேவமைந்தன், போன்சாய் மனிதர்கள், 1993)

8.9.05

எப்படியும் காதல் வருமாம்!

மேட்டுத்தெரு முனையில் 'டூவீலர்க'ளில் திரும்பும்பொழுது மோதிக்கொள்ள இருந்தார்களாம்.. 'சாரி' 'சாரி' என்று ஒருவருக்கொருவர் வேண்டிக்கொண்டவாறு பார்த்துக்கொண்டபொழுது "அண்ணலும் நோக்கினான் : அவளும் நோக்கினாள்!" 'ஃபார்முலா' அவ்விடமே 'க்ளிக்' ஆகிவிட்டதாம்! 'ட்ரில்லியன்' மின்னல்கள் வெட்ட அகமதில் அதிர்ச்சிகள் ஆயிரம் இடிக்க ஒன்று பிறந்ததாம் : அதுதான் காதலாம். புத்தகத்தை/குறுந்தட்டை/குறிப்பேட்டை அவள் அவனுக்குத் திருப்பித் தந்தபொழுது மெல்விரல்களின் நகநுனிகள் அவன் புறவிரல்கள்மேல் பட்டுவிட்டதாம் : அடடே! அடடாவோ! மற்றொரு காதல் மலர்ந்துவிட்டதாம்.. அரசின் நகரப் பேருந்தில் கூட்டநெரிசலில் ஓட்டுநர் கருணையால் அவள் சாயநேர்ந்தபொழுது பலகோடி யுகங்களாய்த் தவறவிட்ட அவன் தாங்குதல் இன்னொரு காதலைத் தொடங்கிவிட்டதாம்... பக்கத்துவீட்டுச் சாளரம் திறந்தபொழுது ஒருநாள் திக்கென்று மனம்அடிக்கவைக்கும் கிழவிமுகம் தெரியாமல் அழகுமுகம் தெரிந்ததாம்; அடுத்த ஊரின் வருகையாம். பழகும் வாய்ப்புக் கிடைக்கவே 'பக்'கென்று பற்றிக் கொண்டதாம் - ''காதல்தீ"யாம். நமக்கெலாம் தெரியாதாம். ம்..ம்..இன்னும் வார இதழ்கள் புரட்டப் புரட்ட எத்தனைவகைக் காதலடா! தெருவில் பெட்டிக்கடைமுன் சுவர்தோறும் - ஏன் எங்கெங்கு நோக்கினும் இலவசமாய்க் காதலடா! எழுதியவனாவது ஏட்டைக் கெடுத்ததோடு விட்டான்; பாடியவனாவது பாட்டைக் கெடுத்ததோடு விட்டான்; எம்தமிழ்த் திரைப்படம் எடுக்கின்ற பேர்வழியோ எதையும் விடாமல் கெடுக்கின்றான் என்தாயே! (தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976: 'சில காதல் சூழல்கள்'-- சில மாற்றங்களுடன்.)

7.9.05

வாழவேண்டிய வாழ்க்கை

எத்தனையோ பூமரங்கள்! பூக்களவை வார்ப்புக்கள்! பார்க்கின்ற இடம்தோறும் பறவைவண்ண சாலங்கள்! பித்தர்போல் நமையாக்கப் பேசிவைத்த செயல்முறைகள்! இளம்பருவத் தூய்மைநிறை இன்பமிகு வடிவங்கள்! இத்தனை இருந்திருந்தும் இவைநம்மை ஈர்க்காமல் செய்திடவே நமைச்சுற்றிச் சுற்றத்தின் தொல்லைகள்! வைத்தபல சிக்கல்கள்! சிந்தனையின் சூழ்ச்சிகள்...... வித்தினையும் கடக்கின்ற விளைசெடியின் மாற்றங்கள்! பார்க்கின்ற குழந்தைதன் பழமுகத்தை நாடாமல் தேர் ஆடித் தெருவில்வரும் தோற்றம்போல் இளமகளிர் சேர்க்கின்ற அழகுதனைப் பருகாமல் நாள்தோறும் குந்தி,நின்று குமைந்திருந்து கவலைகள் பட்டிருந்து வேர்க்கின்ற விளையாட்டில் வேதனையை நீக்காமல் வேளைவரும் காலம்வரை வெந்துயரைப் போக்காமல் தூர்க்காத கிணறாகத் துயர்ச்சேற்றில் ஊறிநின்று துன்பத்தை வரவழைத்துத் துயருடன்தான் வாழ்கின்றோம்! இயற்கைத்தாய் உணர்த்துகிறாள் இன்பமிகு பாடங்கள்! இத்தனையும் பார்த்திருந்தும் இயல்பாக உணர்ந்திருந்தும் செயற்கைக்காய் வாழ்கின்றோம்! சேராமல் வாழ்கின்றோம்! ஆமை,தான் முயல் ஆக முயலாமை கேட்டுள்ளோம்! மயக்குகின்ற மல்லிகையும் மல்லிகையாய் உள்ளதன்றி சண்பகமாய்த் தான்மாறி மணக்காமை உணர்ந்துள்ளோம்! செயற்கரிய செயல்களைநாம் செய்வதுவாய் எண்ணிநின்று செயவேண்டும் செயல்களையும் செய்திடவே மறக்கின்றோம்! (தேவமைந்தன், விருந்து, மார்ச் 1975: உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976)

பிள்ளை ஒன்று......

பிள்ளை ஒன்று மெல்லக் கிட்ட வந்தே கொள்ளை அழகுடன் குலவிடும் பொழுதினில் கள்ளம் அகலும்; சிந்தை இதமும் உண்டாகும்; உள்ளம் நிரம்பும்; "நான்" இல்லாதுபோகும். தேவமைந்தன்.

ஒருவரை ஒருவர்..............

ஒருவரை ஒருவர் நேசித்து வாழ்வது எனுமொழுங்கே வரும்வரை நிம்மதி நமக்கு வாழ்வினில் வராது - என்பதனால் ஒருவருக்கு ஒருவர் உதவியே வாழ்வது எனும்விதியை உருப்படும் வகையில் அனுசரித் துலகில் உயர்ந்திடுவோம். தேவமைந்தன்.

நானாக நான் வாழ வேண்டும்

ஆன்மநெடும் பயணமதில் ஒருநாளை வாழ்க்கையிலே நானாக நான்வாழ முடியாமல் போய்விடுமோ? காலையிலே 'நான்' பிறந்தேன் கருமிரவில் 'நான்' செத்தேன்; நாள்தோறும் பலப் பலவாய்ப் பிறவிகளைப் பெறுகின்றேன். 'நான்' 'எனது' அற்றுவிட்டால் பேரின்பம் இருக்குமென நானும் நம்பினேன்; பின் மகிழ்வுற்றேன்; மெதுவாய்என் நான்எனதாம் சட்டைகளைக் கழற்றினேன்-கழற்றினேன்...... ''வான்தெய்வம் கண்ணன்தான் வரவேண்டாம்''-என்பதுபோல் நான்எனதாம் சட்டைகள் வளர்ந்துவரக் கண்டேனே... நேற்றென்னை மீன்கொத்தி கேட்டது: ''ஏ நண்பா! காற்றினிலே நான் பறந்து மிதப்பதுபோல் மிதப்பாயா?'' இன்றென்னைக் கரிக்குருவி கிண்டிற்று: ''ஏ நண்பா! என்போல ஆட்டின்மேல் அசைபயணம் கொள்வாயா?'' பசுவொன்றும் எனைப்பார்த்துக் கத்திற்று: ''ஏ அன்பா! பார் என்போல் பால்தந்து வாழ்வாயா? மேய்வாயா?'' எருமையொன்று எனைமறித்து வினவிற்று: ''ஏ அன்பா! என்னைப்போல் குளத்தினிலே நெடுநேரம் அமிழ்வாயா?'' ஓர் அறிவாம் ஆறு அறிவாம் ஒவ்வொன்றும் பல வகையாம் பேருக்கே நம் பெரியோர் பிதற்றியதாம் இலக்கணங்கள்...... ஒரு பறவைபோல் பசுவைப்போல் வாழ்ந்திடவும் இயலாத வேடிக்கை மனிதருக்கு இவையெல்லாம் விளம்பரங்கள்! (தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976. முன்: 'முல்லைச்சரம்,' நவம்பர் 1974)

அவலச் சிரிப்பு

கூரை பிரிந்த குள்ளக் குடிசையின் வெளியே தெருவில் சாக்கடை ஓரம் குவிந்த குப்பை அருகில் ஒருவன். துன்பம் பொதிந்த அழுக்கு மூட்டையாய்; முற்றுப் புள்ளியே இல்லாக் கதையாய்ச் சுருண்டு படுத்து, வாழ்வதே சுமையாய் வாழும் நிதர்சனம் மறந்துபோய், உறக்கம் தன்னில் சிரிக்கின் றானே. (தேவமைந்தன், "முல்லைச்சரம்", திசம்பர் 1975)

கொசுவண்ணே, உனக்கு ஒரு கும்பிடு!

உடம்புத் தரையில் இறங்கும் விமானம். 'நகரா[?]ஆட்சி'களின் திறமைக்குச் சான்றிதழ். தேசியத் திட்டங்களின் காவியத் தலைவன். ஏழைகளின் காதருகில் இலவச மெல்லிசை. வலைபோட்டுப் பிடிக்க முடியாத ஒரேஒரு அரசியல் தலைவன். 'ரத்தத்தின் ரத்தமே! கொசுவண்ணே! உம்மைக் கும்பிட்டு வாழ்த்துகிறேன். (தேவமைந்தன்,"புல்வெளி," 1980)

31.8.05

ஆயுள் இன்சூரன்ஸ் மற்றும் முகவர்களோடு......

ஐயாமார்களே! மனமார்ந்த நன்றிகள், தாங்கள் அவ்வப்பொழுது என்மனத் திரையில் நிகழ்த்திக் காட்டும் தந்திரக் கணக்குகளுக்கு! அவற்றுக்கான விடைகளுக்கும்.. (அவை தங்களுக்காவது புரிந்திருந்தால்..) ஒன்றரை மணிநேரத்தில் ஓராயிரம் திட்டங்கள்; கற்பனை வானத்தில் பெரும்பணச் சிக்கனங்கள்...... இந்த அனுபவத்தை அவ்வப்பொழுது மறவாமல் சலிக்காமல் வந்துதரும் தங்களெல்லோருக்கும் மீண்டும் மீண்டும் நன்றிகள்! எதற்காக என்றால்- இயல்பாக வறண்டுகிடக்கும் என்வாழ்க்கைக் குளத்தில், நீங்கள் 'மாஜிக்' நிகழ்த்தும் தருணங்களில் மட்டுமே அல்லிப் பூக்கள் அழகாக மலர்ந்து சிரித்து கொஞ்ச நேரமாவது நெஞ்சைக் குளிர்விக்கின்றன. (தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், சனவரி 1976)

27.8.05

எங்கள் இருப்பும் இங்கேதான்!

வெண்புறா சிறகடித்து விண்ணீலப் பெருவெளியில் செவ்வலகு விரித்திசைத்துக் காற்றாட்டும் ஊஞ்சலிலே வெண்பஞ்சு முகிலூடு வேண்டுமட்டும் பறப்பதுபோல்...... செவ்வானம் செழுநிலத்தைத் தழுவிக்கொள்ளும் விளிம்பருகே சாய்கின்ற சூரியன்முன் கருநிறத்து வரைகோடாய் கடல்நாரைப் புள்ளினங்கள் உடல்நீட்டிப் பறப்பதுபோல்...... பரந்தபெரு நீர்க்கடலில் பல்வகையாம் உயிர்மீன்கள் நேர்சென்றும் திரும்பியும் வளைந்தும்பின் வாலடித்தும் எதுவருமோ ஏதுறுமோ என்றெண்ணா தலைவதுபோல்...... இருக்க முடிவதில்லை. வாழும் நொடியொன்றில் தாழும்பல நினைவுகளால் அலைப்புண்டு தடுமாறி கவலைகளால் மொத்துண்டு சாலையில் அடிபட்டுச் செத்தொதுங்கிக் கிடக்கின்ற நாய்போல் உருமாறி நாங்களும்தாம் 'இருக்கின்றோம்'! -தேவமைந்தன் (புதுச்சேரி, 'கவிதாமண்டலம்,'[ஆசிரியர்: மறைந்த 'எஸ்.ஆர்.எஸ்.'],வைகாசி 1980 - இதழிலும், பின்னர் புல்வெளி[1980] கவிதைத் தொகுப்பிலும் வெளிவந்தது.)

உங்கள் தெருவில் ஒரு பாடகன் [1976]

நானொரு பாட்டுப் பாடவந்தேன் - அதை நலமிகு முறையில் பாடிநின்றேன் நான் பாடிய பாடல் பலரும் கேட்கும் பாக்கியம் பெறவில்லை - ஆம் பாக்கியம் பெறவில்லை [நானொரு... தெருக்கள் கூடும் சந்திகளில்நான் தெளிவாய்ப் பாடிநின்றேன் உமட்டும் சாக்கடை ஓரம்நின்றும் உண்மையைப் பாடவந்தேன் - ஆம் உண்மையைப் பாடவந்தேன் [நானொரு... நான் பாடும்பாடல் பாடியபின்னால் எனக்கே சொந்தமில்லை வானில் பாடித்திரியும் பறவைகளாலே யாருக்கும் தொல்லையில்லை - ஆம் யாருக்கும் தொல்லையில்லை [நானொரு... தோப்பினில் மாங்குயில் கூவிடுமே! அது கேட்பவர் புகழ்ச்சியை நாடிடுமோ? இங்கே சிலநாள் பாடிடுவேன் - பின் எங்கோ சென்று மறைந்திடுவேன் [நானொரு... (தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், சனவரி 1976)

முளைகள்

சமுதாய வயல்களில் உழவுப் பெற்றோர்கள் இன்று தெளித்துள்ள முளைகள்................. ஒன்றும் தெரியாது தெரியவும் வேண்டாம் அதே நேரத்தில் எல்லாமும் வேண்டும் என்றொரு முளை. எதிர்காலத் தகுதியெல்லாம் அதற்குத் தானோ? ஓய்ந்திருக்க லாகாமல் ஓடிவிளையாடும் பாப்பா இத்துடன் மொத்தம் நசுக்கினாள் முப்பது கட்டெறும்பை... வருங்கால நடிகையோ இந்த முளை? தன் சட்டையைத் தானே முறைத்துக்கொண்டு தன்நகம்-தன்சதை-தான் மட்டுமே எல்லாம் என்று உறுதியாக நம்புகிற இந்த முளை வருங்கால வலைப்பதிவரோ? இப்பொழுதே குழுசேர்ப்பான் தானும்தன் குழுவும்தான் உலகமென்பான்... அடுத்தவனுக்கு என்னதெரியும் என்று இறுமாந்திருப்பான்! அடுத்தவரைக் கண்டுகொள்ளவும் விரும்பான்; இவனே வெற்றிபெற்றும் வீணாகும் முளை. [தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், சனவரி 1976. சிறிது மாற்றம் பெற்ற வடிவம்]

26.8.05

செருப்பின் இடையே சிறு கல்!

சாலையில் வழுக்கும் விமானத்தைப் போலவே சகலவித்தைகளையும் காட்டுமெங்கள் நகரப்பேருந்து, பக்கவாட்டில் முளைத்த தலைகளோடும் - வியர்த்த மானுட உடம்புகளோடும் அந்தக் காலத்தின் அழகுவழிந்த "ருக்குமணிவண்டி" போலவே, ஆனால் கொஞ்சம்போல சலசலத்தும் கலகலத்தும் அலுப்போடும் ஆயாசத்தோடும் வந்து சேர்ந்தது. ஓடிப் பிடிக்க விரைகிறேன். அப்பொழுது பார்த்து- பாதத்தோடு செருப்பும் இழுக்கிறது. ஓட முடியவில்லை. இழுத்து இழுத்து நடக்கிறேன்............. ஓரிரு உடம்புகளை உள்ளே இழுத்துக்கொண்டு பேருந்து- என் வாடிக்கை மறந்து ஓ!...நழுவிப் போகிறது...... எரிச்சலோடு செருப்பை உதறுகிறேன். கிஞ்சித்தும் அலட்டல் இல்லாமல் வந்து சாலையோரம் விழுகிறது, ஒரு சிறு பருக்கைக் கல். அன்றாடம் எம் இயல்பான வாழ்வில் இடையிடும் அற்பச் சிறுமதியோ, அது?

Sir! Shall I Ask You A Simple Question?

Sir! Have this tea. Feel like…smoke. Get relaxed, Retreat. Sir, you are tense… Push back your seat, Rest your head, Stretch your legs, Hum some tunes. Enjoy. Sir, now A question- The only question I put forth, Will you please answer? Yes, your wisdom will. May I be given to understand Whether you know “What is Life?” Do you feel Of course, that you live A wholesome Life? Or at least have you given A little time In your entire life To gain a Wholesome perspective That’s ever New? [Devamaindhan’s “Theeneer Konjcam ArunthungkaL,” from “Virunthu”(Tamil Magazine)-December, 1974: published in “UngkaL Theruvil Oru Paadagan”, Jan. 1976: Translated by Mrs. P. R. Kalavathi, Pondicherry]

25.8.05

போன்சாய் மனிதர்கள்

விதவிதமான தொட்டிகளில்மொழிபேசும் நிலைமறந்துஓடிஆடும் வெளிமறந்துசின்னத் திரைமுன்சிலைகளாய் அமர்ந்திருக்கும்போன்சாய் மனிதர்கள்!வீட்டுக்கு முன் அசையும்முருங்கை மரம்கூடஅந்தச்சின்னத்திரையில் வந்தால்தான்கொஞ்சம் பார்ப்பார்கள்! வீடுதோறும்கட்டை குட்டையாய்கறுப்பாய் வெளுப்பாய்சிவப்பாய் மாநிறமாய்,கூடத்தின் தொட்டிகளில்--சாட்டிலைட்டுகள் தாம்மட்டும்விண்ணில் இயங்கி, கீழேமண்தொட்டிகளில் நட்டுஇயக்கும் இந்தபோன்சாய் மனிதர்கள் 21-ஆம் நூற்றாண்டுக்காக. (28/02/1993: தேவமைந்தன், ''போன்சாய் மனிதர்கள்,'' திசம்பர் 1993)

23.8.05

மக்கள் ஆள்கிறார்களா?

மாதத்தின் முதல் வாரம் மட்டுமே மனிதராக வாழக்கூடியவொரு மாதச்சம்பளக் காரரிடம்போய் கட்டாய வருமானவரி வசூல். மடிக் கம்ப்யூட்டரின் 'மெமரி'யில், மனிதமூளையால் எண்ணமுடியாத- எண்ணமுயன்றால் விக்கிக்கொள்ளும்- சொத்துக் கணக்குகள் குவித்த உபரி-உதிரி மனிதப்போலிகளிடம் மண்டிபோட்டுத் தேர்தல்வசூல் மட்டும்தானா? ரேஷன் கார்டை ஒழுங்குபடுத்த- மக்களாட்சி மன்னர்களுக்கு வயிற்றில் அடிபடும்படி "நாளைக்கு வா!" "ஒவ்வொரு மாதத்திலும் இந்த இந்தத் தேதிகளில் இந்த இந்த மணிகளுக்குள் வா! 'க்யூ'வில் நில்!" என்ற அடுக்கடுக்கு நிபந்தனைகள். தொழில் தொடங்கித்தான் வாழ முடியும் என்றநிலை இளைஞருக்கு 'செக்யூரிட்டி' பிடுங்கல்கள்! ஊரோடு உலகையும் ஏமாற்றி உலையில் இடுபவர்க்கு-- "சொல்லி அனுப்பினால் நாங்கள் வரமாட்டோமா?" --உபசாரங்களோடு கோடிக்கணக்கில் கடன்வசதிகள், மக்களாட்சி மன்னர்கள் செலுத்தும் வரிப்பணம், நரிகளுக்கும் பேராசைப் பேய்களுக்கும்-- வாரிவழங்கல். ஒரே ஒரு சந்தேகம்-- தேசபக்தி குடிசனங்களுக்கு மட்டும்தான் பரிந்துரையா?

21.8.05

புல்வெளி மலர்கள்

தரையினில் பரந்த பசுமை வானம். பசுமை வானில் புதியவிண் மீன்கள், பலநிறம் பூக்கும் புல்வெளி மலர்கள். நீங்கள் நடக்கும் பொழுது மிதிக்கும் பூக்கள். நடக்கும் பொழுது மிதிக்காமல், சற்று ஒதுங்கி நின்றே உற்றுப் பாருங்கள். புன்னகை பூக்கும் புல்வெளி மலர்கள்...... (தேவமைந்தன், புல்வெளி, 1980)

19.8.05

வேறு வழி இல்லாததாலும்

"கடமையைச் செய்; செய்தபின் பலனை எதிர் பாராதே" என்பது 'கீதை காட்டும் பாதை' என்பதால் மட்டும் அல்ல, வேறு வழி இல்லாததாலும் எனக்கு மிகவும் பிடிக்கிறது. (தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976)

ஓ! வண்டிக்காரா......

ஓ! வண்டிக்காரா, வண்டிக்காரா! சற்றே நில்லேன்! சொல்வதைக் கேளேன்! நீண்ட வழிதனில் விழிகளை நாட்டியே காலமும் நேரமும் கடிதே ஏகிடச் செல்லும் வண்டிக்காரனே சற்றுநில். செக்கர் வானில் செழுங்கதிர் சாயவும் பஞ்சுப் பொதிகளாய் முகில்கள் படரவும் இயற்கையின் கூந்தலாய் இருள்தான் நெளியவும் குழந்தை முகமெனத் திங்கள் நகரவும் பொழுதும் போனது: சற்றே நில்லேன். எங்கோ விரைவாய் என்றும் போவதேன்? வளையும் வழிகளில் விழைந்து விரைவதேன்? வலியவுன் மாடுகள் வழிசென்று இளைத்தன. தென்றல் வீச அல்லி சிலிர்க்கும் பொய்கை அதோ பார்! வண்டியை நிறுத்து. நம்மைச் சுமந்தே இழுத்த காளைகள் நீரை அருந்தி மென்புல் நுகர்ந்து நிலத்தில் சாய்ந்து நீள்வால் சுழற்றி மெதுவாய் அசையிட்டு அயரவே விட்டிடு. நாமும் கொஞ்சம் -- மீதிப் பயணம் தொடரும் முன் -- சென்றவை மறந்துதான் சாய்ந்த் திருப்போமே. ( தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976 )

திருத்தவா? திருந்தவா!

கவலைகளை வரவேற்றுக் காபிகொடுத்து உபசரிக்கும் உங்களை என்னால் திருத்தவே முடியாது. உங்களுக்கேற்ப என்னால் திருந்தவும் முடியாது. என்வழி எவ்வழி அவ்வழி நல்வழி. (தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976)

16.8.05

குமிழிகள்

காற்றில் நிரவி மிதக்கும் குமிழிகள் என் உச்சந் தலையிருந்து,மேலே. பார்க்க விருப்பம்தான். மற்றவர்களுக்கும் தெரியவில்லை. என் மிகநெருங்கிய தோழன் தோழிக்குங் கூடத்தான். புலப்பாடற்ற யதார்த்தம் இது. எல்லாரும் உணர்ந்திருப்பார்கள். பரபரத்த சாலையில் இருசக்கர வாகனத்தில் வருகையில் சிக்னலில் நின்றிருந்தபொழுது பளிச்சிட்ட எண்ணம் "பச்சை" விழுந்தததும் அடித்துப் பிடித்து வீடு வந்து சேர்ந்ததும் எழுத்தாகப் பதியுமுன் "ஞே"என்று கரைந்து காணாமல் போகிறது. மூழ்கிப்போன டீ.வி. சீரியலிலிருந்து தலையெடுத்து, "'தொடர்' நாயகியின் விசும்பல்கள், கேவல்கள், "ஓ"லங்கள்,குடும்பங்கள், வில்லிகளின் 'க்ளோசப்' முகங்கள், கொடூர வக்கணைகள்-- இவை எல்லாவற்றிலிருந்தும் தற்காலிகமாகவேனும் என்னை மீட்கவந்த நாயகரே!"-- என்று சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, "இந்த முக்கியமான கட்டத்தில் வந்து 'இது'நிற்கிற அழகைப்பார்!" என்ற முகமொழியோடு-- "ஏன் இவ்வளவு நேரம்?" என்னும் எப்பொழுதும் கேட்கும் பதில்வேண்டாக் கேள்வியோடும் "ஃப்ரண்ட்ஸோ'ட 'டீ'க்குடிச்சிட்டுவந்திட்டீங்கதானே?" என்னும் பதில்சொல்லக்கூடாத கேள்வியதைக் கேட்டவுடன். --தேவமைந்தன்

15.8.05

"டுபுக்"கு:முதலில் சொன்னவர் பாரதிதான்!

புலப்பாடு : இரண்டு எழுத்தாளர் ப.ரா.கலாவதி என்னிடம் வேடிக்கையாக ஒரு கேள்வி கேட்டார்: "டுபுக்கு'ன்னு மொதமொத'லா சொன்னவர் யாரு?"... வழக்கமான சாமர்த்தியத்துடன், "நீங்க சொல்லுங்க பார்க்கலாம்!" என்றேன். அவர் சொல்லத் தொடங்கினார். "ஜகத் சித்திரம்"என்கிற சிறு நாடகத்தில்தான் பாரதி, நாகணவாய்[இன்றைய மைனா] சொல்லுவதாக "டுபுக்(கு" சொன்னார். "டுபுக்! பாட்டைக் காட்டிலும் ரசமான தொழில் வேறில்லை" என்ற வசனந்தான் அது. கிளி, குயில்கள்,குருவிகள்,நாகணவாய், காக்கை,மற்ற பறவைகள்,அணிற்பிள்ளை,பசுமாடு,எருமைமாடு-- இவர்களே ["இவைகளே" என்று இலக்கணப்படிச் சொல்ல மனசு வரவில்லை] கதாபாத்திரங்கள். கிளி சொல்கிறது:"தோழர்களே! தன்னைத்தான் மனத்தால் துன்புறுத்திக் கொள்வதைக்காட்டிலும் பெரிய பேதைமை வேறில்லை!" எருமைமாடு கேட்கிறது:"பட்சிஜாதிகளுக்குள்ள சந்தோஷமும், ஜீவ ஆரவாரமும்,ஆட்ட ஓட்டமும், இனிய குரலும் மிருக ஜாதியாருக்கும், மனுஷ்ய ஜாதியாருக்கும் இல்லையே! இதன் காரணம் யாது?" அதற்குப் பதிலாகத்தான் நாகணவாய்ப்புள்[மைனா]:"டுபுக்! வெயில், காற்று,ஒளி இவற்றின் தீண்டுதல் மிருக மனிதர்களைக் காட்டிலும் எங்களுக்கு அதிகம். எங்களுக்கு உடம்பு சிறிது. ஆதலால் தீனி சொற்பம்; அதைச் சிறிது சிறிதாக நெடுநேரம் தின்கிறோம். ஆதலால் எங்களுக்கு உணவின்பம் அதிகம். மிருக மனித ஜாதியார்களுக்குள் இருப்பதைக் காட்டிலும் எங்களுக்குள்ளே காதலின்பம் அதிகம்.......இருந்தாலும் கிளியரசு சொல்லியதுபோல், காலனுக்குத் தூதனாகிய மனக்குறை என்னும் பேய் எங்கள் குலத்தையும் அழித்துவிடத்தன் செய்கிறது. அதற்கு நிவாரணம் தேடவேண்டும். கவலையைக் கொல்வோம். வாருங்கள். அதிருப்தியைக் கொத்துவோம், கொல்லுவோம்!"...... மற்ற பறவைகளும் அதை வழிமொழிந்து கோஷமிடுகின்றன. விக்கிரமாதித்தன் மற்ற உயிர்களின் மொழியும் அறிந்திருந்தானாம். அடுத்து, பாரதிதான் போல. கேட்டுவிட்டுச் சும்மா இராமல் என் ந்ண்பரான விலங்கியல் துறைப் பேராசிரியரிடம் இதைச் சொன்னேன். முறைத்துப் பார்த்துவிட்டுச் சொன்னார்: "ஏங்க! ஒங்களுக்கெல்லாம் கற்பனை'ய விட்டா வேற போக்கிடமே இல்லியா? பறவெ--மிருகம், இதுக்கெல்லாம் நமக்குள்ள அத்தனெ கோளாறும் இருக்குதுங்க! கவலெ இருக்குன்னா, மனுசனுக்குள்ள அத்தினியும் இருக்குன்னு அர்த்தம். கண்டுபுட்சீங்களா?[புதுவைப் பேச்சுவழக்கு-'தெரிந்துகொண்டீர்களா' என்று அர்த்தம்] நமக்கு என்னென்ன சர்ஜரி பண்றாங்களோ அத்துனியும் அதுகளுக்கும் பண்றாங்க..." என்று. நமநமத்த வாய் சும்மாயிராமல் கேட்டது:"ஏங்க! அப்போ உங்களப்போல அங்கயும் இருக்காங்க போலிருக்கு!" அவ்வளவுதான். ஜிவுஜிவுத்தது அவர் முகம். "இதுக்குத்தான் தமிழு ஆளுங்களோட நா' பேச்சே வச்சிக்கிறதில்லெ! சுத்த அன்சயின்டிபிக் பேர்வழிங்க! எப்பய்யா நீங்கள்'ளாம் ஒலகத் தரத்துக்கு வரப்போறீங்க?" என்று நொந்து கேட்டுவிட்டு நடையைக் கட்டினார். ம்..ம்... நல்லவேளை பாரதி இப்பொழுது இல்லை. அவர் ஒன்றும் இதற்காகக் கவலைப்பட்டிருக்க மாட்டார். அவர் விளாசும் விளாசலில், வேறு துறையில் பணிபுரிந்ததாலேயே தான் "ரொம்பவும் ஒஸ்தி" என்ற நினைப்பில் இருக்கும் நண்பர்தான் படாதபாடு பட்டிருப்பார். நன்கு கவனித்துப் பாருங்கள். தமிழுக்கு வந்து 'சேவை'புரியும் பிறதுறை நண்பர்கள் பலர் எப்பாடுபட்டாகிலும் 'யாப்பு' கற்றுக்கொண்டு மரபுக்கவிதைகள்தாம் இயற்றுவார்கள்; இலக்கணத்தில் மட்டுமே தீவிர ஆர்வம் காட்டுவார்கள். 'யூனிகோடு' பற்றிய விவரம் கேட்ட வேறொரு நண்பருக்கு, "என்கோடு,உன்கோடு,யுனிகோடு,தனிகோடு" என்ற மின்கட்டுரையைக் குறுவட்டில் பதிந்து தந்தேன். போட்டு வாசித்துப் பார்த்துவிட்டு வந்து சொல்கிறார்: "உம்மைப் பற்றி நான் வச்சிட்டிருக்கிற அபிப்ராயம் சரிதான்! என்னய்யா நீர் கொடுத்த சித்தூரார் கட்டுரை'ல பாய்ண்ட்ஸ் 'நெல்லா'ருந்தாலும், நடை வக்கணையா'ல்ல இருக்கு! இப்படியெல்லாம் எழுதலாமோ"... பழக்கப்பட்ட என் வாய் மீண்டும் நமநமத்தது. சொன்னேன்: "அவர் உங்களுக்காக எழுதல்லே! எல்லாருக்காகவும்தான் அப்படி எழுதறார். நீங்க'ள்ளாம் சொல்ற நடை'லே அவர் அந்த யூனிகோடு பாடங்களை எழுதியிருந்தா உங்க க்ளாஸுக்கு நம்ம பசங்க கொடுக்கிற 'ரெஸ்பான்ஸ்"தான் கெடைக்கும்...வுடுங்க!..'போர்'அடிக்கிற சமாச்சாரத்தையும் 'இண்டரெஸ்டிங்'காகச் சொல்'ற நடை அது! உங்களுக்கு அதெல்லாம் வராது!"...அதுசரி, அது ஏன் இவர் முகமும் ஜிவுஜிவுக்கிறது?

14.8.05

ஆதலால்.......

முயற்சி செய்து முயற்சி செய்து தோற்றே போனேன். என் 'உள்'ளில் அந்த முகம், வேறெந்த முகத்தையும்--மட்டுமல்ல வேறெந்த முகம்குறித்த தரவுகளையும்கூட, ஞாபகப் பேழையுள் எனது 'நான்' சேமிக்க விடாமல் அலம்பல் செய்கிறது. ஏன் என் தோழி--என் ஏழுவயது முதல், சரசக்காவின் நொய்யல் ஆறுநோக்கிய நெடுஞ்சாலையோரத்து வீட்டில் சந்தித்துப் பழகினாள்? தன்னை எனக்கு உணர்த்தாமல் என்னையே எனக்கு உணர்த்திவிட்டாள்? என் தோழி, எனக்குத் தோழியாகவே நீடித்து இருந்தாள். ஆனாலும் கணம் ஒருபாழில் நினைவிழந்து போனாள். கால இடைவெளியும் மரண மறதியும் எங்கள் நட்புக்குத் தம்மை விட்டுக் கொடுத்தன-- இன்றிருக்கும் நான் அன்றிருக்கவில்லை ஆதலால்.

10.8.05

புலப்பாடுகள்

புலப்பாடு: ஒன்று:- தொடரும் கணங்கள் காற்றைப் பிடிக்க எழும்பி வீழும் கடலலைக் கணங்களாய் - கவிதை ஊற்றைப் பிடிக்க உள்வெளி ஆழ்ந்தேன். கணங்கள் சிலவற்றில் கரைந்து போனதாய்க் கருதிக் கொண்டு காணாது போனேன். ஆமாம்! நம்ப முடியாதுதான். தேடிவருகிறேன் இன்றும் இன்னொரு என்னை. கைவாளுமில்லை உரைவீச்சுமில்லை சிறகுகள் முளைத்த சிந்தனை நெருப்புமில்லை ஜோடனைகள் மறந்த என் கவிதைகள் வெறும் புலப்பாடுகளே. உணர்த்துதல்கள் பூட்டன் பூட்டிகள் தாத்தா பாட்டிகளாகியும் தாத்தா பாட்டிகள் அம்மா அப்பாக்களாகியும் தங்களைத்தான் உணர்த்தினார்கள். அம்மா அப்பா வழியாகவே நாம்தான் அவர்களென உணர்ந்து கொண்டோம். பேத்தி பேரன்களும் அப்படித்தான் நாம்தாம் தாமென்றுணரப் போகிறார்கள். இன்னுமொரு முப்பது வருடங்களுக்குப் பின்னால் 'புரொகிராம்'கள் பரம்பரை மரம் வரைந்து காட்ட -நாம் இப்பொழுதுள்ள நம்மை அப்பொழுதும் புரிந்துகொள்வோம்.

9.8.05

திருநள்ளாற்றுக்காக வந்த பிரான்சுத் தங்கையுடன்...

இப்பவும் நான் சுறுசுறுப்பாக இயங்கிகொண்டுதான் இருக்கிறேன். மதிய உணவு உண்டபின் சற்று நேரம் ஓய்வெடுப்பது, எனக்கும் பழக்கம் தான். ஆனால் ஒரு மாதமாக ஓய்வு எனக்கு 'டாட்டா' காட்டிவிட்டது காரணம், என் ஓரே தங்கை பிரான்சிலிருந்து விடுமுறைக்கு வந்திருப்பதுதான். ஒவ்வோர் ஆண்டும் வருபவள்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புதிய நேர்த்திக்கடனோடு வருவதில் அவளுக்கு இணை அவளேதான். இந்த முறை, தன் மூத்த மகளோடும் வருங்கால மருமகனோடும் வந்திருந்த அவளுக்குப் புதிய நேர்த்தி. திருநள்ளாற்றுக்குப் போய், அங்குள்ள நளதீர்த்தத் திருக்குளத்தில் தன் மகளும் வருங்கால மருமகனும் முழுக்குப் போட்டு , அணிந்துவரும் (பிரான்சில் வாங்கிய) புத்தாடைகளை அந்தக் குளத்திலேயே கழித்து விடுவதென்பதுவே அது. இது மாதிரியான நேர்த்திகளால் லாபம்தான், மற்றவர்களுக்கு. இப்படிக் கழிக்கும் துணிகள் பத்து லட்சம் ரூபாய் ஆண்டு ஏலத்துக்குப் போவதுடன் புத்துணர்ச்சியும் புதுப்பொலிவும் 'ஊட்ட'ப்பெற்று, வாரக் கடைசிகளில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் 'ஓஹோ'வென கூட்ட நெரிசலுடன் நடத்தப்படும் ஞாயிறு அங்காடிகளில் நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன என்று சனீஸ்வரர் தரிசனப் பகுதியைக் கவனிக்கும் முக்கியமானவர் ஒருவரால் கிசுகிசுக்கபட்டதைப் பட்டவர்த்தனமாக அதிகாரி ஒருவர் பரசியமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். போதாதற்கு, அந்த 'முக்கியம்' சனீஸ்வரர் சந்நிதிக்கு இடதுபுறம் சற்றுத்தள்ளி அமர்ந்துகொண்டு பிரசாதம் தருவதுபோல் உடல்மொழியை உருவாக்கிக் கொள்வாராம். சனீஸ்வரரை மெய்மறந்து துதித்துக்கொண்டிருக்கும் பக்தைகளின் கவனத்தை ஈர்த்து, சந்நிதியைவிட்டே அவர்களை வெளியேற்றிவிட்டு, தன் 'சகா'க்களைப் பார்த்து "எப்படி என் சாமர்த்தியம்?" என்பதுபோல் சேட்டைவேறு செய்வாராம். இதைமட்டும் கொஞ்சம் வேதனையோடு சொன்னார். பாவம், அவர் மனைவியும் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவர்போல் இருக்கிறது. என் 'பிரான்சுத் தங்கை' அதுகுறித்தெல்லாம் சட்டையே செய்யாமல் தன் காரியத்திலேயே குறியாக இருந்தாள். நான் நினைத்ததற்கு மாறாக அவளின் மகளும் வ.மருமகனும் ஆனந்தமாகவே அந்த எண்ணைக்குளத்தில் "முங்கி முங்கி" எழுந்து துணிகழித்து மாற்றுத்துணியணிந்தனர். "ஏண்டீ! நீ மட்டும் முங்கவில்லையா?" என்று நான் கேட்டதற்கு ஒரு மாதிரி முறைத்துவிட்டு, "நாந்தான் மாத்தத் துணி கொண்டு வரலியே! நீயாவது ஞாபகப்படுத்தக்கூடாதா?" என்று என்மேலேயே பழி போட்டாள். அதுவும் அவளுக்குக் கைவந்த தந்திரம். அதைக்கேட்ட அவள் மகளுக்கும் வ.மருமகனுக்கும் ஒருவித திருப்தி -முகத்தில். பிறகு என்ன? நெற்றுத் தேங்காயின் கண்ணொன்றின் 'பொக்கை'மேல் கட்டிக்கற்பூரம் ஏற்றி க் குளத்துப்பிள்ளையார் கோயில் வலதுபுறம் அமைக்கப்பட்டுள்ள 'கண்ணேறுகழி கற்சுவர்'மீது எறிந்து 'சூறை' தெறித்தார்கள். இவையெல்லாம்-- கூட வந்த புதுவை வீடியோ நண்பர் ஒருவரால் 'சிறப்பாக' படம் பிடிக்கப்பட்டன. பிரான்சுக்குத் திரும்பியபின் கணவருக்கும் குடும்ப நண்பர்களுக்கும் போட்டுக்காட்டினால்தான் விடுவார்களாம். எப்படியோ தங்கைக்குத் திருப்தி; எனக்கு இன்னும் அவளோடு இப்படிப்போய்வந்த அசதியும் அலுப்பும் நீங்கவில்லை. ம்..ம்..சொல்ல மறந்துவிட்டேனே.. அந்த சனிக்கிழமை திருநள்ளாற்றுக்கு வந்த பக்தகோடிகளின் எண்ணிக்கை, எங்களையும் சேர்த்து(!) 1,50,000-த்தையும் தாண்டியதாம்! இது எப்படி இருக்கு?

மூளைத் தூய்மை

நேரடியாகவே விஷயத்துக்கு வருவோம். வள்ளுவர் சொன்ன புறந்தூய்மை அகந்தூய்மைகளில் இன்று "புறந்தூய்மை ஸ்ப்ரேக்களால் அமையும்" நிலை. அகந்தூய்மைக்கு அகத்தியமான வாய்மை, அண்ணல் காந்தி அடிகளின் தமிழ்நாட்டுப் படங்கள் பலவற்றில் காணக் கிடக்கிறது. நிகழ் உலகில், நாம் சாதிக்கக் கூடியதும் சாதித்தே ஆகவேண்டியதுமான ஒன்றுள்ளது. அதுதான் மூளைத்தூய்மை. விடிகாலையில், நம்மில் சிலர் எழுகிறோம். ஆகச்சிலர் விடியலுக்கு முன்பே எழுந்து விடுகிறோம். இதற்காகக் கர்வம் கூடாது. முன்னிரவில் குடும்பத் தொடர்களும் பின்னிரவில் குற்றத் தொடர்களும் தொ.கா.'வில் பார்க்கவேண்டிய 'பழக்க அடிப்படை-மன உந்துத'லில் ஜீவிக்கும் சகஜீவிகள் பாவம். விடுமுறைகளில் காலை பத்து மணிக்குமேல் எழுவதே 'பிரம்மப் பிரயத்தனம்.' முழுமையாக விழிப்பு வந்து பொருந்தும்பொழுது நண்பகல் வந்துவிட்டதை அறிந்து கொள்கிறார்கள். அப்புறம், பேப்பர் படித்துக்கொண்டே காபி, இத்யாதிகள். இதில் ஒரு தொடர் நிகழ்வு நிகழ்ந்தேறிக்கொண்டே இருக்கிறது. கண்திறந்து கொண்டபின்பு, நம் மூளையில் தொடர்ந்து செய்திகள் கொட்டப்பட்டுக்கொண்டே உள்ளன. குறிப்பிட்ட ஒரு செய்தித்தாளையோ, தெரிவுசெய்த ஒரு தொ.கா. அலைவரிசையையோ வாசிக்கும்/பார்க்கும் நண்பரொருவரிடம் நீங்கள் ஏதேனும் பிரச்சினையொன்றை விவாதித்தீர்கள் என்றால், அதற்கு அவர் சொல்லும் பதில் -- அவர் தொடர்ந்து வாசிக்கும் பத்திரிக்கையின் கோட்பாடாக இருக்கும்; அவர் தொடர்ந்து பார்க்கும் தொ.கா.'வின் பின்னணியில் உள்ள கட்சி/குழுவுடைய மறைமுகப் பிரச்சாரமாக இருக்கும். சென்ற நூற்றாண்டின் நாற்பது-ஐம்பதுகளில் -- 'பெரிசு'களாக இன்றிருக்கும் அன்றைய இளைஞர்கள், தங்களின் மீசையைக்கூட கட்சி பாணியில் வைத்தார்கள். இன்று செல்பேசியாகட்டும், தெருவிளம்பரமாகட்டும், நாட்காட்டியாகட்டும்,எதுதானாகட்டும் - அதில் செய்திகள்,செய்திகள்! இந்தச் செய்திக் குப்பைக் கழி வுகள் நாம் அறியாமலேயே நம் மூளைக்குள் கொட்டப்படுவதிலிருந்து நம் மூளைகளைக் காப்பாற்றிக் கொள்ள "யாதானுஞ் சற்றே" வழியிருந்தால் "கூறீரோ!"..............