26.10.05

ஐயே மெத்தக் கடினம்!

எத்தனை எத்தனை விளம்பரங்கள்! கதிர் தொலைக்காட்சி (சன் டிவி) முதல் எல்லாவற்றிலும் காலைப் பொழுதில் சிறுவர் சிறுமியர் உடம்பை எப்படி எப்படியோ வளைக்கிறார்கள். ஒரு பெரியவர் எதை எதையோ பேசுகிறார். வைத்த கண் வாங்காமல், சோபாவில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு நம் வீட்டுச் சிறுவர் சிறுமியர் சிலர் அதைப் பார்க்கிறார்கள்... முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லாமல். பலர் 'ரிமோட்'டை அழுத்தி, கிழவனார்க்கும் அவர் பேச்சைக் கேட்டு வளைந்து கொடுத்துக் கொண்டிருக்கும் சிறுபிள்ளைகளுக்கும் விடை கொடுத்துவிட்டு, கதிர் இசை (சன் மியூசிக்)யைச் சின்னத்திரையில் 'ஹாய்' என்று பாதிக் கொட்டாவியாகத் தொடங்கிப் பாட்டும் கூத்தும் பார்க்கவைக்கும் தொகுப்பாயினியின் பழகுதமிழில் சிந்தையிழக்கிறார்கள். "அம்மா! ஜிம்முக்குப் போய்வாறேன்!" என்று இளைஞர்கள் இளைஞைகள் 'கஜினி'யின் 'ஒரு மாலை இளவெயில் நேர'த்தைக் காலையிலேயே பாடிக்கொண்டு கிளம்புகிறார்கள். காசுக்குக் காசு..கவர்ச்சிக்குக் கவர்ச்சி..ஜிம்கள்..அழகு நிலையங்கள்..பாரம்பரிய யோகா - பயிற்சிமையங்கள்....பள்ளி-கல்லூரிகளில் 'டெமான்ஸ்ட்ரேஷன்'கள்.. வயசான வாத்தியாரோ, பேராசிரியரோ, தலைமை ஆசிரியர்களோ ஆங்காங்கு அவ்வப்பொழுது நம்மை முறைத்துக் கொண்டு(' ஏ, மாபாவிகளே!' 'லுக்') அந்த மழித்த யோகா வாத்தியாருக்கு 'அறிமுகம்' என்ற பேரில் வாய்க்கு வந்தபடியெல்லாம் விளாசித் தள்ளுவார்கள். மத்தியான சாப்பாட்டினைப் பொறுத்த மட்டில் அவரவர் தலைவிதிக்கேற்ப நெளிவார்கள், கிறங்குவார்கள், திடீரென்று 'கெட்ட சொப்பனம்' கண்டு அதிர்ந்து விழித்துக் கொள்வார்கள் - பிள்ளைகள், பள்ளிகளில்... ஒரு மாதிரி, சக மாணவ மாணவியரைக் கண்டு - முறையே இளிப்பார்கள், வழிவார்கள் கல்லூரிகளில். இவற்றையெல்லாம் பார்க்காமலேயே, தன் 'நந்தனார் சரித்திரக் கீர்த்தனை'யில் கோபாலகிருஷ்ண பாரதியார் பற்பல ஆண்டுகளுக்கு முன்பே நந்தனார் பாடுவதுபோல் பாடிவைத்தார்: "ஐயே மெத்த கடினம் - உமதடிமை ஐயே மெத்த கடினம் பொய்யாத பொன்னம்பலத்து ஐயா நீ இருக்குமிடம் நையாத மனிதருக்கு உய்யாது கண்டு கொள்ளும்!... ஐயே மெத்த கடினம்..." தேவையா இதெல்லாம்? வள்ளலார் கேட்டார் அல்லவா? "உம்மை இப்பூமியில் பிறப்பிக்கத்தெரிந்தவருக்கு, காதையும் மூக்கையும் குத்திவிட்டு அனுப்பத் தெரியாதா?" என்று.

22.10.05

தங்கப்பா சொல்லும் மக்கள் பாவலர் இலக்கணம்

பாவலர் ம.இலெ.தங்கப்பா, 'பாட்டெனும் வாள் எடுப்பாய்' என்ற புதிய கவிதைத் தொகுப்பில் இப்படிச் சொல்லியிருக்கிறார்: "மேட்டுக் குடிப் பிறந்தார் - வெற்று மேனி மினுக்கிகள் கையிலிருந்தே பாட்டினை மீட்டுக்கொள்வாய்!" "ஏதிலர், மேற்படியார் - மக்கள் இலக்கியம் படைத்திடத் தகுந்தவரோ?" அப்படியானால் மக்கள் இலக்கியம் படைத்திடத் தகுதியுள்ளவர்கள் மேட்டுக்குடியில் பிறந்த மேனிமினுக்கிகளாக, உடுத்திய சட்டை வேட்டி குலையாதவர்களாக இருக்கக் கூடாது. மிகவும் நல்லதாகப் போயிற்று.. இப்பொழுதுள்ள பாவலர்களில் பாதிப் பேரை நம் மனப் பதிவு நிரலிலிருந்தே நீக்கிவிடலாம் அல்லவா? இப்புத்தகம் கிடைக்குமிடம்: குறும்பலாப்பேரிப் பாண்டியன் வானவில் வெளியீடு 79, முல்லைத் தெரு கிரிசா நகர் எரணாவூர் சென்னை - 600 057 பக்கம்:96 விலை:உரூபா 40/-

19.10.05

மீண்டும் டினோசார்களிடமா?

மீண்டும் டினோசார்களிடமா ஒப்படைக்கப் போகிறீர்கள் நம் பேருலகத்தை! அந்தப் பெருவிலங்குகள் ஊர்ந்து திரிவதற்கா? ஓ! உன்னதங்களே! அசிங்கமான உங்களின் இனவாத - குழுவாதங்கள் கொண்டு எங்களை இன்னும் எத்தனைக் காலம் பிளந்து, ஆப்பு வைக்கப் போகிறீர்கள்? மறந்தொருநாள் ஆப்பைப் பிடுங்கி, உங்கள் வாத-வால்மாட்டிக்கொண்டு - நீங்களும்தான் போகப் போகிறீர்கள்... "நுப்பும் நுரையுமாய் அடித்துச் செல்லும் ஆற்று வெள்ளத்துக்கு அடையாளம் தெரியாது" -கேள்விப்பட்டதில்லையா? "ஊருக்குள்ளது உங்களுக்கும்!" -சொலவடையை செவிமடுத்ததில்லையா? எங்களை எங்களின் நேசங்களிலிருந்தும் பாசங்களிலிருந்தும் உங்கள் கைத்தடியாகிவிட்ட அறிவியல்மூலம் இன்னும் எத்தனைக்காலம் பிரித்துவைத்திருக்கப் போகிறீர்கள்? ச்சே! உங்களின் எந்திரங்களுக்கும் போர் ஆயுதப் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளுக்கும் எங்களின் ஒற்றைக் கண்ணீர்த் துளியின் உண்மையான சக்தி வருமா? போயும் போயும் எந்திரங்களோடு சைபர்வெளி இயக்கி வாழும் வாழ்வில் எந்தப் பிடிமானம் நம்மை இந்த முகமற்று இணையும் உடலியக்கத்தில் நங்கூரமிட்டு நிலைப்படுத்தப் போகிறது? (தேவமைந்தன், போன்சாய் மனிதர்கள், திசம்பர் 1993: 'மீண்டும் ராட்சதப் பல்லிகளிடமா?' - கவிதையின் புதுவடிவம்.)

16.10.05

'சுந்தரி'(1917) சமூக நாவல் காட்டும் வ.ரா.'வின் பின்னணி

'சுந்தரி' என்ற சமூக நாவலை வ.ரா. அவர்கள் 1917-ஆம் ஆண்டு படைத்தார். ஆனால், 'அந்தரப் பிழைப்பு' என்ற மறுபெயரோடுதான் அந்த நாள்களில் அது அவராலேயே வெளியிடப்பெற்றிருக்கிறது. காரணம், அவர் வாழ்க்கையே அப்பொழுது அப்படித்தான் இருந்திருக்கிறது. 1910-ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு அவர் வந்தார். பாரதியாரையும் அரவிந்தரையும் சந்திக்கும் நோக்கத்தோடுதான் வந்தார். வந்தவர் அவர்களோடு தினமும் பழகி இருந்தார். 21/1/1914 ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்றுதான் புதுச்சேரியை விட்டு சென்னைக்குச் சென்றார். சரி..ஏன் வந்தார்? ஏன் நான்காண்டுகள் புதுவை வாழ்க்கை நிறையுமுன்பே போய்விட்டார்? அவர் வார்த்தைகள்: "வாழ்க்கையில் யோகமும் வேதாந்தமும் பேசிக் கொண்டிருப்பது எனக்கு எப்பொழுதுமே பிடிப்பதில்லை. அற்புதங்களைச் செய்ய, ஆற்றல் பெற்றது அறிவு. மனிதனுடைய உணர்ச்சி வெள்ளமோ, கலைகளை வானில் முட்டும்படியாக, அவ்வளவு உயர்த்தக்கூடிய சக்தி படைத்தது. இவ்விரண்டு அருமையான சாதனங்கள் இருந்தும், தமிழன் ஜாதிக்கும் ஆங்கில சாம்ராஜ்யத்துக்கும் அடிமைப்பட்டிருப்பதைக்காண, என் கண் அப்பொழுதே கூசிற்று; இப்பொழுதும்(1942) கூசுகின்றது." ஆனால், பின்னர் சொல்லுகிறார்" "புதுச்சேரியிலிருந்து வந்ததும்(சென்னை நுங்கம்பாக்கத்திலிருந்து 1942-இல் வ.ரா. எழுதிய குறிப்பு இது), நான் கண்டதெல்லாம் என் மனதை மிகவும் வாட்டி வதைத்தன." அடுத்து, தன் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் திருப்பழனத்துக்கு மனச்சோர்வுடன் சென்ற சில மாதங்களில் இதயக் கோளாறு அடைந்தார். (ஆதாரம்: அல்லையன்ஸ் கம்பெனி வெளியிட்ட 'சுந்தரி' நாவலில் "சுந்தரியின் புனர் ஜனனம்" என்ற தலைப்பின்கீழ் வ.ரா. எழுதியவை) 1919-ஆம் ஆண்டு புதுச்சேரியை விட்டு பாரதியாரும் சென்றார். சென்ற இரண்டு ஆண்டுகளிலேயே அவர் இயற்கை எய்தியமை இங்கே ஒப்பிட்டு நோக்கத் தக்கது.

11.10.05

சொந்த வேர்கள்

அன்புமிக்க தோழி! வாழ்க்கைக்குப் பொருள்தான் என்ன அவரவர் விளக்கம் தவிர்ப்பாய்! பிறர்சார்ந்து வாழும்வரை வாழ்க்கைக்குப் பொருளில்லை! நமக்காகப் பிறர்முடிவை எடுக்கு மட்டும் நம்கையில் நம்வாழ்க்கை இருப்ப தில்லை கற்றகல்வி நலம்வீசும் விழிகளினால் உன்வாழ்வை எதிர்நோக்கு! இதுவரை இருந்தஉன் ஈரமான விழிமாற்று! நயமுள்ள கவிதைகள் நயங்காண எவரையும் எதிர்பார்க்க மாட்டா. எதிர்வந்து சுழலும் வெளிச்ச மெய்ம்மைகள் வழிகாட்டும் உனக்கு. பொருளியல் விடுதலைதான் காலூன்றச் செய்யும்! தன் சொந்த வேர்களால் இந்தமண் ஊடுருவி நிற்பதுவே பேரின்பம்! (28-1-1993: தேவமைந்தன், போன்சாய் மனிதர்கள், திசம்பர் 1993; 'புதுச்சேரி' இலக்கிய மின்னிதழ் - சூன் 2005.)

8.10.05

'முட்டாள்கள் தினம்' - படையல்கள்

(இலக்கணம்) முட்டாள் எனப்படுவோன் யார்எனின் மூளையில் யாதொன்றும் வையா தவன் தலைக்கனம் மன்னார்குடியில் மருத்துவர் ஒருவர். அறுவை மருத்துவம் தேர்ந்த வித்தகர். அவரிடம் ஒருநாள் - நொந்தே ஒருவர் நோயால் வந்தார். நோய்ப்பெயர் 'தலைக்கனம்;' அறுவை நடந்தது; மருத்துவர் திகைத்தார்; உள்ளே மூளையே இல்லையாம். பெரும்புகழ் நடிகை அரவங் காட்டில்ஓர் அழகிய பெண்ணாள்; சென்னை சென்று 'பெரும்புகழ்' ஈட்டவே 'சேட்'டிடம் அழகை அடகாய் வைத்தாள். ஆயிரம்பத்து அடகால் பெற்றவள் மீண்டும் இதுவரை மீட்கவே இல்லையாம். இப்பொழுது அவளோ பெரும்புகழ் நடிகை. காலாட்டி காஞ்சி புரத்தில் காலாட்டி ஒருவர். செஞ்சியில் நாடி சோதிடம் பார்க்கவே சென்றார். சுவடியில் தேடிக் கண்ட சோதிடர் - "முன்னர்ப் பிறந்த பிறப்பில் நீங்கள்,ஓர் பஞ்சகல்யாணிக் குதிரை!" என்றார். "அப்படி யானால் அடுத்த பிறப்பில் என்ன ஆவேன்?" என்றார். சுவடி தேடிய சோதிடர் கண்டார். தயங்கினார் சொல்ல. இவர்வற் புறுத்தவே, சொன்னார்; " கழுதையாய்ப் பிறந்துதான் கால்களை ஆட்டுவீர்!" நூலாசிரியர் குட்டிகள் போடும் பன்றியின் திறமை தோற்கும் படியாய் நூறிரு நூறு புத்தகம் 'போட்டவர்.' பத்துநூல் வெட்டிப் புதியநூல் பதிப்பார். பட்டம் விருதுகள் பற்பல 'வாங்குவார்.' ஆண்டவர் ஒருநாள் அவரது கனவில் நாடியே வந்தார்; "மெச்சினேன் பெருமை! மகனே! என்ன வேண்டுமோ அதுகேள்! எதுவேண் டினும்அது தருவேன்!" யோசித்துப் பார்க்கவும் நேரம்இல் லாதவர் உடனே கேட்டார்: "ஆண்டவ ரே!உம் அத்தனைப் பட்டப் பெயர்களும் புராணம் பற்பல உம்மைப் புகழும் கதைகளும் எனக்கே எனக்காய் வாய்த்திடல் வேண்டும்?" அதிர்ச்சி உற்ற ஆண்டவர் கேட்டார்: "பிறகு நான்,என் செய்ய?" 'சுயதம் பட்டம்' சற்றும் கூசாமல் சொன்னார்: " உலகில் இருப்பீர்; எனது நூல்கள் எல்லாம் தருகிறேன். படித்து மகிழ்வீர்!" என்றார் பெருமையாய். அடுத்தொரு சத்தம். புகையின் நடுவில் ஆண்டவர் மறைந்தார்; நம்மவர் விழித்தார். (தேவமைந்தன்,ஏப்ரல் 1, 1975: உங்கள் தெருவில் ஒரு பாடகன், சனவரி 1976. திருத்தம் பெற்றது.)

பாடும்போது..

அடிக்கடி 'ரிப்பேர்'ஆகும் என் 'தட்டுமாடல்' கைவானொலி ஏதோ நினைத்துக் கொண்டு திடுமென்று பாடியது: "பாடும் போதுநான் தென்றல் காற்று." (தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், சனவரி 1976)

புதுமூலர்

மரத்தை மறைத்தான் மதிகெட்ட மனிதன் மரத்தால் மறைந்தான் மழையற்ற மனிதன் மரத்தை மறைத்தது பைஞ்சுதைக் கட்டடம் மரத்தால் மறைந்தது பழைமைக் கட்டடம். (தேவமைந்தன்,'விருந்து,' புதுச்சேரி, நவம்பர் 1974 இதழ். திருத்தம் பெற்றது.)

4.10.05

சுவர்கள்

நெஞ்சம் நிறைய கசப்பு - என் மூளை நிரம்ப செய்தி நினைவு முழுதும் புண்கள் - என் நோக்கம் மறுக்கும் வெளிச்சம். வானம் மறைக்கும் சுவர்கள் - தேன் கூடு மறைக்கும் பாறை - கொடித் துண்டு மறைக்கும் கொய்யா - நம் எண்ணம் மறைக்கும் எதையும். பண்பை வீசி எறிந்து - நல்ல அன்பை நாளும் துறந்து - செயல் எங்கே கூடும் என்று - சந்தை நாய்போல் என்றும் அலைந்து - திரியும் வாழ்வுக் கின்று வாழ்வு. செய்து தந்தால் நல்லர் - செய்யக் கற்றுத் தந்தால் வீணர் - சிரித்துக் கழுத்தை அறுப்பவர் நல்லர் - கடுத்து நன்மை செய்பவர் அல்லர் - இவை நிகழ்வில் திகழும் நெறிகள். நல்லவை கெட்டவை எல்லாம் நம்மால் மட்டுமே ஆகும் மற்றவர் உற்றவர் ஆகார் கற்றவர் விழிப்பில் வாழ்வார். குறுகலான எண்ணம் குந்திக் குமைய வைக்கும் நம்மை அகன்று விரிந்த எண்ணம் - என்றும் ஆக்கி வளர்க்கும் உண்மை.

2.10.05

என்னை எழுதும் அந்தக் கைக்கு......

என்னைத் தொடங்கிய நீ, எழுதிக் கொண்டிருக்கிறாய். என் அற்பத்தனங்கள் பொய்ம்மைகள் இருமுகங்களை முகமூடிகள் என்றொதுக்கவா, இல்லை கேடயங்கள் என்று உரிமை கொண்டாடவா? புலனில் பழுதுபட்ட அந்தப்பெண் அகவெளிச்சத்துடன் ஆகாசத்திலிருந்து இறங்கி வருகையில் அகத்தில் பழுதுபட்ட நான் புலன்முன் வெளிச்சத்துடன் தட்டுத் தடுமாறி மேலேற முயற்சி செய்கிறேன். மூளையில் மிகுதி சுமந்ததால் இதயம் பொக்கையாய் ஆயிற்று. நெம்புகோல் கவிதையும் செங்கோல் கவிதைகளும் அந்நியமாயின எனக்கு. மூக்கணாங்கயிறு மாட்டப்பெற்ற புலவர்களுக்கும் அந்நியமானேன் நான். எனக்கு நான் புறத்திலேயே மோதிக் கொள்வதால், பகைகள் எனக்குப் பரிதாபப்பட்டு வருந்தி ஒதுங்கிக் கொண்டன. ஒரு மர்மமான மாய முடிச்சு என் குரல்வளை இறுக்க, கனவிலும் தூக்கிலிடப் படுகிறேன். அந்த வல்லூறுக்கு இருக்கும் சுதர்மம் எனக்குப் புரியவில்லை. ஆடுகளோடு ஆடாகி, கறிகாய் வெட்டுபவரைக் கண்டாலும் என் மனது பதைக்கிறது. என்னைச் சார்ந்தோர் விரலில் புண்பட்டாலும் நெஞ்சில் குருதி வடிக்கும் 'அடியேன்' அயலார் கண்ணில் புண்பட்டு அழுது துடித்தாலும் மெளனஞானம் பூணுகிறேன். பாராட்டுப் பிச்சைக்கு மடியேந்தத் தயங்காதவன், விளம்பரப் பிச்சைக்காரரை வெறுத்துப் பேசுகிறேன். நீ போடும் கணக்கொன்று. நான் போடும் கணக்கொன்று. தத்துவங்கள் ஒத்துவரா வாழ்க்கை.. ஆதாரங்களும் அசைக்கப் படுகையில் அச்சம் வந்து ஆசனத்தே அமர்கிறது. இருப்பது ஓர் இருக்கை. ஒன்று,நீ அதில் உட்கார். இல்லையெனில் இருக்கையையே இல்லாமலாக்கு. நீ, எப்பொழுதுமே என் ஆண்டாளாகவும் ஆண்டானாகவும், நான், உன் அடிமையாகவும் மட்டுமே இருக்க வேண்டுமென்று சிலர் சொல்வதை நீயும் நம்புகிறாயா? நிபந்தனைகளின் பேரில் நான் வாழ்வதெனில், அழுதும் அரற்றியும் தொழுதும் தூமலர் தூவியும் உன்னை நான் வழிபட வேண்டுமெனில் உனக்கும் எனக்கும் உள்ள உறவின் இரகசியம் வெளிப்பட்டுவிட்டதா? நீ,என் நித்திய முதலாளி எனில், தொழிலாளியாகும் வாய்ப்பு உனக்கும் மறுக்கப்பட்டு விட்டதா? கேள்விகளாலேயே உன்னை இன்னும் எத்தனைக் காலம் அர்ச்சிப்பேன்? நீயின்றி நானில்லை எனில், என் செயல்களுக்கு மட்டும்தான் நான் பொறுப்பா? மஞ்சள் இலக்கியம் அசிங்கமெனில், நம்முறவுக்கு விளக்கமும் விதிமுறைகளும் இடும் ஆபாச வியாபாரிகள் மட்டும் 'தத்துவ ஞானிக'ளா? வியாக்கியானச் சங்கிலிகளில் என்னை மாட்டி வைத்துச் சின்னங்களின் முட்களில் என்னைக் கீறி, சுண்டல் விநியோகத்துக்குக் காத்திருக்கவைக்கும் கல்நெஞ்சுப் பேர்வழியா நீ? நாற்ற வாய்களிலிருந்து வரும் போற்றி நாராசங்களை எவ்வாறு நீ செவிமடுக்கிறாய்? உண்மையிலேயே நீ பொற்கிழி தருமிக்கு அருளும் அளவு சமரசம் செய்து கொண்டாயா? வெளவால் நாற்றப் பிரகாரங்களுக்குள் இருட்டுக் குகைக்குள் எண்ணைய்ப் பிசுபிசுப்பில் உன்னால் கொலு வீற்றிருக்க முடிகிறதா? என்னாலேயே மூச்சுவிட முடியாத இத்தனைக் குப்பை குவியலிலா உன் திருநாமங்கள் ஆராதிக்கப்படுகின்றன? அதில்வேறு, ஓரிரு மொழியறிவுதான் உனக்கு உள்ளதாமே? பக்திக் கதைகளைப் படித்து, படித்தபின் உன்னிடம் எனக்கு பயமே மேலிடுகிறது. பசி பல்லாயிரம் பேரை எரிப்பதற்கும் உனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையாமே? வறுமை பலருக்குப் பரிசளிக்கப் படுவதற்கு நீ எந்தவிதப் பொறுப்பும் ஏற்க மாட்டாயாமே? இன்னும் எத்தனை எத்தனை அவதூறுகள் உன்னைப் பற்றி! உன் அடையாளங்களை நீ காட்டாத பொழுதே உன்னை அரைநிர்வாண ஓவியமாக்கிய இந்தப் பேர்வழிகளின் உபதேசங்களையும் நானேற்கத்தான் இரண்டு காதுகளை எனக்குத் தந்தாயாமே? அதென்ன,எனக்கு நீ எந்தச் சொல்லையும் அனுப்பிவைக்காமல் இந்த அயோக்கியர்களுக்கு மட்டும் அடிக்கடி 'டெலிஃபோன்' செய்கிறாய்? தர்மங்களை அதர்மவாதிகள் பேசலாம், அதர்மத்தைத் தர்மவான்கள் தற்காலிகமாகவேனும் ஏந்தக் கூடாதா? எழுதுகோல் என்கையில் எழுதுகைக்கு மறுக்கிறதா? போகும் பாதைக்குப் பாதங்கள் என்ன செய்யும்? எழுதும் எழுத்துக்கு எழுதுகோல் பொறுப்பல்ல. எனைஎழுதும் கை செய்பிழைக்கு நானும் பொறுப்பல்ல. (31-12-1986: தேவமைந்தன், போன்சாய் மனிதர்கள், திசம்பர் 1993.)