19.9.06

ஒரு மனிதரின் வாழ்க்கை - தேவமைந்தன்

"குன்றின்மேல் இட்ட விளக்காக,பரவலாக, ஊடகங்களாலும் விளம்பரங்களாலும் புகழ்பெற்றவர்களின் வாழ்க்கையை அறிவதோடு மட்டும் திருப்தி அடைவதைவிடவும் மேலானது, ஆடம்பரம் இல்லாமல் அகல் விளக்காக வாழ்ந்து, சாதித்து மறைந்த சான்றோர்களின் வாழ்க்கை வரலாறுகளை அறிதல்..." - டேவிட் லிண்ட்சே(David Lindsey) இலண்டன் மிஷன் ஸ்கூலின் மெட்ரிகுலேஷன் தேர்வில், ஆங்கிலப் பாடத்தில் ஒரே ஒரு மதிப்பெண் குறைந்ததால் தோல்வியுற்ற ஆத்திரம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள சங்கராபுரத்தில் பிறந்து வளர்ந்து கோவையில் படித்த கறுப்பண்ணனை, யாரிடமும் சொல்லாமல் சென்னைக்கு இரயிலேறி ஓடி, அங்கே ஹார்பரில் நங்கூரம் விலக்கிக் கொண்டிருந்த கப்பலொன்றில், அது எங்கு சற்று நேரத்தில் பயணம் ஆகப்போகிறது என்றே தெரியாமல், ஒளிந்துகொள்ளச் செய்தது.இன்று அந்நிகழ்ச்சி நடந்திருந்தால் அது வேறு கதை. ஆனால் அது நடந்தது, சற்றேறக் குறைய, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்துப் பத்துகளில் என்பதால், மனிதாபிமானத்தோடு வாழ்ந்த ஆங்கிலேயக் கேப்டன் ஒருவரால் கறுப்பண்ணனின் வாழ்க்கை ஆரோக்கியமாகத் திசை திரும்பியது. அவன் ஒளிந்திருந்த இடம் அந்தக் கேப்டனின் அறைக்குப் பக்கத்தில்தான் இருந்தது. வளர்த்துவானேன்?'அந்தக் காலத்து மெட்ரிக் ஆங்கிலத்தில்' கறுப்பண்ணன் சொன்ன விவரமெல்லாம் கேட்டறிந்த கேப்டன், கறுப்பண்ணனைத் தன்னுடன் இருக்கச் செய்து ஆங்கிலத்திலும் அந்தக் கப்பல் ஏற்றிருந்த "மெர்குயி டின் ட்ரேடிங் கம்பெனி' வியாபாரத்திலும் பயிற்சி கொடுக்கத் தீர்மானித்த சில மணி நேரங்களில் 'பம்பஃஹ்' என்று சிலமுறை ஆரவாரித்தவாறு அந்தக் கப்பல் புறப்பட்டுவிட்டது.சில காலம் அந்தக் கேப்டனின் அன்பிலும் கண்டிப்பான பயிற்சியிலும் நனைந்து காய்ந்த கறுப்பண்ணனுக்கு, அந்த ஆங்கிலேயன் தொடர்பால் மூன்று கருத்துகள் உள்ளத்தின் ஆழத்தில் சென்று தைத்துக் கொண்டு விட்டன; கடைசிவரை அங்கேயே தங்கவும் தங்கி விட்டன.முதலாவது, சாதிப்பெயரைத் தன் பெயருடனோ அல்லது தன் பெயராகவோ வைத்துக்கொள்ளக் கூடாது. இரண்டாவது, குருதியைத் தெளிப்பதுபோல் எக்காலத்திலும் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு எச்சிலைத் தரையில் உமிழக் கூடாது. மூன்றாவது, தன்பெயரில் அறிந்தோ அறியாமலோ நிறவெறி சார்ந்த அம்சம் நிலைபெறக் கூடாது.'கறுப்பு' என்பது தமிழ்நாட்டில் உள்ள கிராம தேவதை என்று அறிந்து கொள்ளாததாலோ, நிறவெறி நிரம்பித் ததும்பிக் கொண்டிருந்த அந்தக் காலத்திலும், தான் ஓர் ஆங்கிலேயன் - வெள்ளையன் என்ற வெறியில்லாமல் 'கறுப்பு' என்றால் கறுப்பினத்தவரையோ ஒடுக்கப்பட்டவர்களையோ குறிக்கும் என்று நினைத்துக் கொண்டதாலோ, அல்லது அதற்கு எதிர்மாறாகக் கறுப்பு நிறத்தைக் கறுப்பர்களின் அடையாளமாகக் கருதி உள்ளுக்குள் வெறுத்திருந்ததாலோ - அந்த ஆங்கிலேயர் மேற்படி மூன்றாவது உணர்வை உள்ளத்துள் விதைத்த விளைவாக, கறுப்பண்ணன் என்ற தன் பெயரை K.அண்ணன் என்று சுருக்கிக் கொண்டும் பெரியதம்பி என்ற தன் தந்தையின் பெயரைப் P என்ற தலைப்பெழுத்தாக முன்னிட்டுக் கொண்டும் P.K.அண்ணன் என்று மட்டும் தன் பெயரைப் பதிவு செய்து கொண்டார். [வளர்ந்துவிட்டார் அல்லவா? அதனால்..'ஆர்' விகுதி.] கப்பல் இங்கிலாந்தில் நங்கூரமிட்டபொழுது கேப்டன் உதவியுடன் பெயர்ப் பதிவு நிகழ்ந்தது.முதல் உலகப் போரின் பாதிப்புகள் ஐரோப்பாவை விட்டு நீங்காத காலம்...ஆண்டுகள் சில உருண்டோடின. பர்மாவில் கப்பல் நங்கூரமிட்டபின் பி.கே.அண்ணன் வாழ்வு மீண்டும் திசை மாறியது. முன்பு, சென்னையிலிருந்து வங்கக் கடலில் செல்லும் பொழுது. இப்பொழுது, வங்கக் கடல் வழியே பர்மாவுக்குச் சென்ற பொழுது. கேப்டன் விடை பெற்றுக் கொண்டு கடல்மேல் செல்ல, பர்மாவில் தங்கி, அங்கிருந்த 'மெர்குயி டின் ட்ரேடிங் கம்பெனி'யைக் கவனித்துக் கொண்டார். சில ஆண்டுகளில், தான் நண்பர்கள் சிலர் மூலம் கற்ற பின்னலாடை எந்திரங்களைப் பற்றிய அறிவைக் கொண்டு பர்மாவின் தலைநகரான ரங்கூனில் ஸ்பார்க்ஸ் சாலை 51ஆம் இலக்கமிட்ட - மரக்கட்டுமானமே பெரும்பாலுமான கட்டடத்தில் 'ஓரியண்டல் நிட்டிங் ஃபாக்டரி'’ என்ற பின்னலாடைத் தொழிலகத்தைத் தொடங்கினார். கோவையிலிருந்த தன் பெற்றோரையும் சகோதரர்களையும் ரங்கூனுக்கே அழைத்துக் கொண்டார். சகோதரர்களுக்குத் தன் ஃபாக்டரியில் பயிற்சி தந்து பின்னர் உரிய பொறுப்புக்களையும் தந்தார். அப்பொழுது, பிரிட்டன் பர்மாவை இந்தியாவின் ஒரு பகுதியாகக் கொண்டு ஆண்டுவந்தது. இவ்வாறு நிகழ்ந்த 1937ஆம் ஆண்டுவரை [அதே 1937இல் சுயாட்சியும், 1948இல் முழுச் சுதந்திரமும் பர்மா பெற்றது], கோவையிலிருந்து என்பதைவிடப் பெரும்பான்மையாகச் செட்டிநாட்டுப் பகுதிகளிலிருந்தும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலிருந்தும் பர்மாவுக்குத் தமிழர்கள் பலர் சென்று அங்கேயே தொழில்கள், வணிகமுறைகள் பலவற்றைச் செய்து வளமாக வாழ்ந்தனர்.தான் நிறுவிய பின்னலாடைத் தொழிலகத்தில், தன் உடன் பிறந்தாருக்கு மட்டுமல்ல உள்ளூர்க்காரர்களான பர்மாக்காரர்களுக்கு முதன்மையான வேலைகள் தந்ததாலும், பர்மியர்களுடனும் அங்கு வாழ்ந்த சீனர்களுடனும் ஒன்றுபட்டுக் கலந்து வாழ்ந்ததாலும் பி.கே. அண்ணன் அவர்களை அவர்கள் மிகவும் நேசித்தார்கள். அதற்கு ஓர் அடையாளம், இத்தனை ஆண்டுகள் கழித்த பின்பும், உள்ளது. புதுச்சேரியில்... பி.கே.அண்ணன் அவர்களின் கடைசி மகனின் வழிப் பேரனார் இல்லத்தில். தேக்கில் செய்யப்பெற்ற திருக்கோயில். மேலே உள்ள மூன்று கும்பங்களையும், நடுவில் உள்ள நான்கு தூண்களையும், தளத்தையும், அடித்தளத்தையும் எளிதாகக் கழற்றி விடலாம்; மீண்டும் பூட்டிக் கொள்ளலாம். நல்ல கனம். ஐராவதி என்ற கப்பலில், இரண்டாம் உலகப் போரின் இறுதியில், ரங்கூன் பி.கே.அண்ணார் [அச்சமயத்தில் அப்படி அழைக்கப்பெற்றார்] அவர்களுடைய குடும்பத்தாருக்குத் துணையாக அந்தக் கோயிலும் சென்னைக்கும், பின் கோவைக்கும் வந்தது. பின்னர், இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் புதுவைக்கும், அடுத்து ஐந்தாண்டுகளுக்குப் பின் காரைக்காலுக்கும், அடுத்தடுத்து ராஜயோகி ரங்கூன் பி.கே. அண்ணாரும் அவர் துணைவியார் தெய்வானை அம்மாள் அவர்களும் 1988ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் சமாதி எய்திய பின்னர் புதுச்சேரிக்கும் துணையாகச் சென்றது. அது தேக்கினால் ஆனது மட்டுமன்று. நல்லதொரு சீன மனிதரின் கலைத் திறனால் ஆனது. புதுச்சேரியில் ஆனந்தாசிரமத்தின் நிறுவனரும் தலைமை யோகியுமான கீதானந்தா அவர்களால் 1970ஆம் ஆண்டில் ‘ராஜயோகி’ என்ற சிறப்புத் தலைப்பு வழங்கிக் கெளரவிக்கப் பெற்றார். இதற்கும் இவர் துணைவியார் சிவதீட்சை பெற்று நாற்பத்தாறு ஆண்டுகள் நியமமான வாழ்க்கை வாழ்ந்தமைக்கும் அருணாசல சுவாமிகள் என்ற துறவியாரே காரணம். வேடிக்கை என்னவென்றால், இவர் வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்புமுனையிலும் உன்னதமும் சத்தியமும் வாய்ந்த துறவியர் சிலர், இவரைத் தளராமல் பார்த்துக் கொண்டு வழிநடத்தியதும்தான். இதற்குச் சரியானதொரு சான்று:இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில், ஜப்பான் நாடு தன் இராணுவ பலத்தால் அமெரிக்காவையும் அஞ்ச வைத்துக் கொண்டிருந்த காலகட்டம். பர்மாவில் நுழைந்து அட்டகாசம் செய்த ஜப்பான் படைகள், ரங்கூனுக்குள்ளும் புகுந்து சூறையாடின. அங்கே வளமாக வாழ்ந்த தமிழர்களும் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆட்பட்டனர். பானைச்சோற்றுக்கொரு பதமாக, ரங்கூன் பி.கே.அண்ணார் தொடர்பாக நிகழ்ந்த சூறையாடலைப் பார்ப்போம்.மற்ற தமிழர்களைப் போல, தன் குடும்பத்தார் அனைவரையும் சீனக் கலைஞர் செய்து தந்த தேக்குக் கோயிலையும் கப்பலேற்றித் தாயகத்துக்கு அனுப்பியபின் ஒருநாள் காலை... ஜப்பான் இராணுவம், ரங்கூனுக்குள் புகுந்து சூறையாடத் தொடங்கிய நேரம். ஜப்பான் இராணுவத்தினர் சிலர், இவர் வீட்டுக் காம்பவுண்டுக் கதவுகளை அதிரடியாகப் பெயர்த்துக் கொண்டு வந்தனர். இவரை அழைத்து, இவர் பார்க்கப் பார்க்க, ஷெட்டில் நின்று கொண்டிருந்த - இவருடைய - தட்டெழுதும் வசதி சேர்ந்த [இன்று கார் ஸ்டீரியோ வசதி போல] ஆர்ம்ஸ்ட்ராங் சிட்னி என்ற அந்தக் காலச் சொகுசுக்காரையும் போர்ட் காரையும் வெடிகுண்டு வீசித் தகர்த்து விட்டு - "இனியும் நீங்கள் தாமதித்து இங்கிருந்தால், உங்களுக்கும் இதே கதி நிச்சயம். நாளைக்கு வருவோம்!" என்று எச்சரித்துப் போய்விட்டார்கள்.நல்ல வேளை. குடும்பத்தார் நிம்மதியாகக் கப்பலில் போய்க் கொண்டிருக்கிறார்கள்... இவருக்கு அந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் சிறந்த நண்பர்கள் இருந்தனர். அவர்களைத் தொடர்பு கொள்ள இவர் போன வழியில் அவர்களே நடைப் பயணமாக, எதுவும் கைகளில் எடுத்துக் கொள்ளாமல், சிரபுஞ்சி வழியாகவும் இந்தியாவின் வடகிழக்கு வாயில் வழியாகவும் தாயகத்துக்கே திரும்பும் நோக்கத்துடன் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுடன் ரங்கூன் பி.கே.அண்ணாரும் நடைப்பயணம் தொடங்கினார். வழியில் 'ஸ்டேட் எக்ஸ்பிரஸ்' சிகரெட் டின்கள் இரண்டில் ஒன்றில் அரிசியும் இன்னொன்றில் உப்பும் தாங்கி நடந்து தின்று உயிர்சுமந்து வந்த போராட்டத்தில், பிழைத்தவர்கள் சிலரே.இந்தியாவுக்குள் நுழைந்து விட்டபின், மற்றவர்களைப் போல உடனே தென்னகம் திரும்பாமல் ரிஷிகேசத்தில் உள்ள சுவாமி சிவானந்தர் குடீரம் என்னும் குடிலில் ஒரு மாதத்துக்குமேல் தங்கி உள்ளத்தைத் தெளிவாக்கிக் கொண்டார். மாலையிட்டு வழிபடப்பெற்றுக் கொண்டிருந்த தன் படம் இருந்ததும்; கோவை செல்வபுரத்தில் தன் குடும்பத்தார் வாழ்ந்திருந்ததும் ஆன வீட்டுக்கு அவர் போய்ச் சேர்ந்தபொழுது, அக்குடும்பத்தார் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை ஊகிக்கக் கூட முடியாது.அப்புறமும் தன் குடும்பத்தார் நலத்துக்காக, எழுபத்திரண்டு வயது வரை உழைத்தார். பழைய செல்வ வாழ்க்கை தன்னை விட்டுப் போனபின்பும் மனம் தளராமல் 27 இஞ்ச் பிலிப்ஸ் சைக்கிளில் வேலைக்குச் சென்றதோடு, தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கும் தொடர்ந்து சென்றுவந்தவரை மதித்துப் பாராட்டியவர்கள் - தமிழ்வாணன் முதல் ஆன்மீகப் பேச்சாளர் நா.கிரிதாரி பிரசாத் வரை பலர். இதைவிடவும் வியப்பானது, எந்த பர்மாவிலிருந்து தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடந்து வந்தாரோ, அதே நாட்டுக்குத் தன் இரண்டாம் மகனார் திரு ஏ.கே. மூர்த்தியும் அடுத்தவர் திரு சிவப்பிரகாசமும் (மீண்டும்) பர்மாவுக்குச் சென்றபொழுது ஊக்குவித்தார். அவர் எண்ணம் போலவே, அவ்விருவரும் மிகவும் சிறப்பாக பர்மாவில் வாழ்ந்தனர். தமிழ்வாணன் தன் 'கல்கண்டு' இதழில் பர்மா ஏ.கே. மூர்த்தி அவர்களின் முயற்சிமிக்க அரிய வாழ்வைப் பற்றி விரிவாக (Profile) எழுதிப் பாராட்டினார்.இன்னும் சொல்ல எத்தனையோ உண்டு, இராஜயோகியாகத் தன் தொண்ணூற்றாறு வயதில் காரைக்காலில் பச்சூரில் ஒடுக்கமான பி.கே.அண்ணார் வாழ்க்கையில்.குன்றின்மேல் இட்ட விளக்காக,பரவலாக, ஊடகங்களாலும் விளம்பரங்களாலும் புகழ்பெற்றவர்களின் வாழ்க்கையை அறிவதோடு மட்டும் திருப்தி அடைவதைவிடவும் மேலானது, ஆடம்பரம் இல்லாமல் அகல் விளக்காக வாழ்ந்து, சாதித்து மறைந்த சான்றோர்களின் வாழ்க்கை வரலாறுகளை அறிதல்.அறிவோம். வாழ்வோம்.

5.9.06

பேச்சு - மறுபேச்சு பின்நவீனத்துவம் நோக்கி

பேச்சு - மறுபேச்சு பின்நவீனத்துவம் நோக்கி --- பிரேம்-ரமேஷ்'ஷின் புதிய தொகுப்பு பற்றியதான என் பேச்சு... - தேவமைந்தன் பிரேம்-ரமேஷின் கவிதை - நாடகம் - புனைவு - அல்புனைவு - மொழிபெயர்ப்பு - இளையராஜா, கி.ரா. குறித்தவை ஆகிய புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு, தனித்தனிப் புத்தகங்களாக வந்திருக்கவேண்டிய அளவு விஷயகனம் கொண்ட நேர்காணல்களும் உரையாடல்களும் விவாதங்களும் இந்த ஒற்றைத் தொகுப்பாக உருவெடுத்துள்ளன. ஒவ்வொரு முறையும் ஒரு புதிய கருத்தாக்கத்தை முன்வைத்து ஒரு விவாதத்தைத் தொடங்க முனையும்போதும் தமிழ்அறிவுச் சூழலால் நெருக்கடிகள் பலவற்றுக்கு ஆளானவர்கள் பிரேம்-ரமேஷ். மரபாலும் நுண்ணரசியலாலும் பண்பாட்டு அரசியல் முதலியவற்றாலும் பாதிப்புக்குள்ளாகும் பருப்பொருள் சார்ந்த இந்தியச் சூழலில், சனாதன சாதியங்களைத் தாண்டியவாறே, பேச்சுக்குரிய பலவற்றைப் பற்றி 'மறுபடி மறுபடி பேசுவதன் மூலம் தமிழில் கோட்பாட்டு வகையான பேச்சுக்களை உருவாக்கிவிடமுடியும் என்ற எதிர்பார்ப்பு'டன், 'பேச்சை எழுதியதாலும் எழுத்தைப் பற்றிப் பேசியதாலும் நேர்ந்த பதிவு'களை இந்தத் தொகுப்பில் புலப்படுத்தி இருக்கிறார்கள். 273 பக்கங்கள் உள்ள பதிவுகளில் வரும் அவற்றுக்கான பகைப்புலத்(background)தரவுகளை இங்கு தவிர்த்து விடுகிறேன். சாராம்சத்தின் தாக்கத்தால் விளைந்த கருத்தோட்டத்தை மட்டும் முன்வைக்கிறேன். நாம் வாழும் ஊர்/நகரம் நம்மைத் தீர்மானிக்கிறது. "இதற்கு எமது புதுச்சேரி சூழல் முக்கியப் பின்புலம். இங்குள்ள கலாச்சாரக் கலப்பும், வேறுபட்ட கலை இலக்கிய ஊடாட்டங்களும் எம்மை வகை வகையாக மாற்றி அமைத்தவை. தனி மனிதர் என்ற வகையில் எமது போதாமை சமூகக் கலாச்சர மனிதர் என்ற வகையில் எமது அறமற்ற வரலாற்றுப் பின்னணி போன்றவை தொடர்ந்து எம்மை அலைக்கழித்துக் கொண்டிருந்ததற்கு பிரஞ்சு இலக்கிய, தத்துவ கலை சார்ந்த இடையீடுகள் காரணமாக அமைந்தவை" (ப.39) என்கிறார்கள் பிரேம் -ரமேஷ். தீவிரமான எழுத்துத் தேடல் பரிமாணத்திற்குப் பிறகு தங்களுடைய முதலும் கடைசியுமான கலை அடையாளம் கவிதையே என்று முடிவெடுக்கும் பிரேம்-ரமேஷ், "ஆனால்" என்று தொடங்கித் தரும் பின்தொடரும் விளக்கத்தை, அடுத்து வரும் மூன்று பக்கங்களில் வாசித்து அறிந்து கொள்ளலாம். தமது 'இடைக்காலத் திட்டமாக' நாடகங்களில் பல முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள் என்பதற்கு, 'ஆதியிலே மாம்சம் இருந்தது' என்ற நாடகத் தொகுப்பு, சான்று. அதில் வருபவை: உடல் அரசியலின்(Body Politics) நுட்பமானதும் தீவிரமானதுமான வகைமைகளை மிகவும் தொடக்கத்திலிருந்தே பிரேம்-ரமேஷ் ஆய்வுக்குட்படுத்தி வந்திருக்கிறார்கள். அதன் ஒரு முதிர்ச்சிதான் அந்தத் தலைப்பில் உள்ள நாடகம். அதன் உள்வெளிச்சங்கள்; 1. மனம், அறிவு, ஆன்மா என்ற இந்தியத் தத்துவக் கருத்துருவங்கள் சார்ந்து உடல் மறுக்கப் படுவது ஆதிக்கக் கோட்பாடாக அரசியல், சமூக, கலாச்சாரத் தளங்களில் நிகழ்ந்துகொண்டே வருவதை, மகாயந்திரம் - பிரக்ஞா என்ற பெளத்த - தாந்திரிக பெளத்த ஏற்போடு மறுதலிப்பதை இந்நாடகம் செய்துள்ளது. 2.அபூர்வமானதும் அதிசயமானதுமான உடலின் இருப்பையும் இயக்கத்தையும் கட்டுப்படுத்த - கண்காணிக்க - தண்டிக்க - மறுக்க - ஒடுக்க எந்த நிறுவனத்துக்கும் உரிமை கிடையாது என்ற மெய்ம்மையின் விகாசத்தினுள் எப்படி உடல்கள் நிகழ்வில் உலகில் தென்படும் எதையும்விடக் கீழானதாக, அழித்தொழிக்கத் தக்கதாக, ஒழித்துக்கட்டும்படி ஆதிக்கக் கருத்தேற்றமானது தூண்டிவிடுவதாக, எந்தக் கணத்திலும் எவராலும் எதனாலும் சித்திரவதை செய்யப்படவோ - எரிக்கப்படவோ - சிறைப்படவோ - சந்தேகத்தின் பேரில் அந்நிய நாட்டில் விசாரிக்கும்பொழுதே மரணநிழல் உணர்த்தப்படவோ[ஹாலந்தின் ஆம்ஸ்டர்டாமில் விமானப் பணிக்குழுவின் சந்தேகத்தால் கைது செய்து விசாரிக்கப்பட்ட அமெரிக்க-மும்பை விமானப் பயணிகள் பன்னிரண்டு இந்தியர்கள் மனநிலை] தோதாகக் கீழாக்கப்படும் இருத்தலுரிமைக்கு மறுப்பு, இந்நாடகத்தில் பிரக்ஞையுடனே உறுதியாக மறுக்கப்படுகிறது. இன்றைய அரசியலில் உடலின் இடம், அது குறித்த கருத்தாக்கம் எது என்பதற்கும் அதற்கு இலக்கியம், நாடகம் புரியும் எதிர்வினையின் தன்மை குறித்தும் மறுமொழி தரும் பிரேம் -ரமேஷ், "உடல் எதைச் சுட்டுகிறது, உடல் எதன் குறிப்பான் என்பது மிகவும் வன்முறை சார்ந்த ஒரு கேள்வி. ஆனால் உடல் எதையும் சுட்டத் தேவையில்லை, உடல் எதற்கும் குறிப்பான் இல்லை - இறுதிச் சாராம்சம் என்பது எதுவும் இல்லை என்பதை உய்த்துணர நாம் சூன்யத்தை மிகத்தெளிவாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்" என்றுகூறி, பெளத்த தம்மக் கலைச்சொற்களான 'நிப்பான்'/'நிர்வாண்' 'பூஜ்ஜிய சாதனா' ஆகியவற்றைக் கொண்டு விளக்குகிறார்கள். முடிவாக, "சூன்ய பிரக்ஞா' என்பதை தியானிக்க, மூல அர்த்தமின்மையைக் கவித்துவமாக ஏற்க கலை, இலக்கியம், நாடகம் அனைத்தும் இன்று தம்மை தயார் செய்து கொள்வதுடன், பொருள்கோளின் அதீத சூன்யத்தைத் தொடர்ந்து நிகழ்த்திக்காட்டவும் தம்மைப் பயிற்றுவிக்க வேண்டும்" என்று மொழிகிறார்கள். தவிர, எடுத்த எடுப்பிலேயே பாபாசாகேப் அவர்களையும் புத்தரையும் அடைந்துவிடவில்லையே என்று நாம் ஆர்வமுற வேண்டுவதில்லை என்றும் அணுக்கமாகவுள்ள பெரியாரியம் முதற்கொண்டு சேய்மையிலிருந்து நாம் ஆர்வத்தோடு நாடிக்கொள்ளும் மார்க்ஸியம் வரையிலான எல்லாவித வாசிப்பிற்கும் பிறகு பாபாசாகேப் அவர்களையும் பெளத்தத்தையும் மீண்டும் அணுகும்பொழுது அவற்றின் பிரம்மாண்டம் புரிந்துகொள்ளத் தக்கதாகவே இருக்கும் என்று உணர்த்துகிறார்கள்.[மேலும்: பிரஞ்சு, ஜெர்மானிய தத்துவவாதிகளும் பாபாசாகேப்பும், பக்.52-54:இந்தியச் சமூகத்தின் பிரச்சனைகள் மேல் அம்பேத்கர் நிகழ்த்திய எதிர்வினைகள், பக்.54-64.] மேலும், பெண்ணியம் சார்ந்த புரிதல்கள் தங்கள் படைப்பு மொழியின் மேல் கொள்ளும் தாக்கம் முதலாக, எழுத்துகளோடு வாழ்தலையும் தாண்டி, கடைசியில் எழுத்துக்களாக மட்டுமே தாங்கள் 'மீந்து' நிற்கவேண்டும் என்ற நிலையை எய்துவதே தங்களுடைய படைப்பு மனங்களின் தவம் என்றதொரு வெளிப்பாடு வரை காலச்சுவடு நேர்காணலின் முழுமையான வடிவம் நீள்கிறது. மேற்படி நேர்காணலுக்கு சாரு நிவேதிதா 'நிகழ்த்தி'ய எதிர்வினையையும் அதற்கான பிரேம் - ரமேஷ் ஆற்றிய பதிலும் குறித்த முழுமையான வடிவத்தையும் 'காலச்சுவடு நேர்காணல் 1' புத்தகத்தில் வாசிக்காமல் இந்தத் தொகுப்பில் உள்ள சில பக்கங்களை[குறிப்பாக ப.129] வாசித்தாலேயே போதும். பிரேம் - ரமேஷ் நடையிலேயே தருகிறேன்: "சாரு நிவேதிதாவின் எதிர்வினைகளில் தத்துவார்த்த, கலை இலக்கியம் சார்ந்த கேள்விகள் மட்டுமே எங்களால் எதிர்கொள்ளப்பட்டுள்ளன. அவருடைய அவதூறுகளுக்கும் தனிப்பட்ட வாழ்வியல்சார் நடைமுறை தாக்குதலுமான பதில்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. காலச்சுவடில் எங்களுடைய எதிர்வினை முழுமையாக இடம்பெறவில்லை. இந்த நூலிலும் தற்போது முழுமையாக இடம்பெறவில்லை. காரணம், சாரு நிவேதிதாவின் அறமற்ற, அறிவற்ற அவதூறுகளுக்கு மாய்ந்து மாய்ந்து பதிலெழுதி அதை நூலாக ஆக்கி காலத்தையும் பொருளையும் வாசகர் மனநிலையையும் வீணடிக்க வேண்டாம் என நினைப்பதே." (ப.143) பிரம்மராஜனுடனான பிரேமின் உரையாடல், அவருடைய எழுத்துக்களை பல்வேறு பின்புலங்களில் விளங்கிக் கொள்ளவும் பொதுவாக எழுத்துருவாக்கம் பற்றி உணர்ந்து கொள்ளவும் உதவுகிறது. இளையராஜாவுடனான பிரேம் - ரமேஷின் உரையாடலும் இந்தத் தொகுப்பில் குறிப்பிடத்தக்கது. 'கதைசொல்லி'(எண்:4, 1998)யில் இது வெளிவந்தது. தம் முன்பேச்சில் இது குறித்து அவர்கள் கூறுவது: "இளையராஜாவைப் பற்றி நாங்கள் சொல்ல விரும்பியதைச் சொன்னதால் பல கசப்பான அனுபவங்களைச் சந்தித்தோம். அதுவரை எங்களுடைய சக படைப்பாளிகளாகவும் அறிவுஜீவிகளாகவும் இருந்த நண்பர்களிடமிருந்து மனப்பொருமல்களும் விஷக்கக்கல்களும் வெளிப்பட்டன. இளையராஜாவை ஒரு 'நித்தியநிலை'க்கு நாங்கள் கொண்டு சென்று தேவையில்லாமல் ஒரு தலித்துக்கு 'வரலாற்று அங்கீகாரம்' வழங்கிவிட்டது போல ஒளிவு மறைவின்றிக் கசப்பைக் கக்கினார்கள். ஒரு இங்கிதம் கருதிக்கூட தமது சாதிய சநாதன முகத்தை அவர்களால் மறைத்துக்கொள்ள இயலவில்லை. இதன் நிமித்தம் பல நட்புக்களை இழந்தோம். தனிப்பட்ட முறையில் பொருளாதாரச் சரிவுகளையும் அடைந்தோம். இதை இன்று வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வது பலருக்கு ஆச்சரியம் தரக்கூடியதுதான். என்ன செய்வது? நாம் பின்நவீனத்துவர்களாக இருந்தாலும் சாதியைத் தாண்ட முடியாத மனம் பெற்றவர்களல்லவா?" (ப.10) பிரேம் - ரமேஷ் எழுதிய 'இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்' என்ற நூல், இளையராஜா பற்றிய ஓர் 'அபத்தக்' (ப.241) கட்டுரையை அ.மார்க்ஸ் உருவாக்க உதவிய காரணிகளில் ஒன்றாக இருந்தது. அதன் உள்ளீடான வாதம் - "இளையராஜா தனிச்சிறப்புடைய ஒரு இசைக் கலைஞரோ, விதந்தோதப்பட வேண்டிய, உன்னதப்படுத்தி மகிழவேண்டிய ஒரு படைப்பாளரோ அல்ல. அவரும் சாதாரண திரை இசை அமைப்பாளன்தான். இன்னும் சொல்லப் போனால் உலகத் தரத்திற்கு ஒப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் ரஹ்மான், ஹாரீஸ் ஜெயராஜ் முதலானோர் இசைக்கட்டுமானங்கள் அமைத்து வெகுசனப் படுத்தியது போல சாதிக்க முடியாமல் அடுத்த கட்ட இசைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய இயலாமல் போன, ஒரு தேக்கத்தை அடைந்த, நமது காலத்தின் இசை என்ன என்பது பற்றி சிந்திக்கத் தவறிய ஒரு தோல்வியாளர். எல்லா வகையிலும் தேங்கி உளுத்துப்போன கர்நாடக சாஸ்திரிய இசையைத்தான் நமது மரபிசையாகவும் தனது புதிய பரிணாமத்தின் தளமாகவும் ஏற்றுக்கொண்டவர். சனாதனத்திடம் சரணடைந்தவர். சமகாலப் பிரக்ஞையிலிருந்து தூர விலகியவர். மேலும் இந்த மண்ணுக்குரிய, இந்தக் காலத்துக்குரிய இசையை உருவாக்கத் தவறியவர்." இந்த மதிப்பீடுகளை இளையராஜா மீது வைக்க அ.மார்க்ஸ் அவர்களுக்கு இடம் தந்திருப்பது இளையராஜா ஒரு "எளிய தலித் குடும்பத்தில் பிறந்தவர்" என்ற விபரம் மட்டுமே.....தலித்தாகப் பிறந்தவர் ஒருவர் தான் என்னவாக மாறவேண்டும் என்பதை பல மன கருத்துப் போராட்டங்களுக்குப் பின் அவரே தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார். இதில் தலித்தல்லாத ஒருவர் இடையீடு செய்ய இன்றைய 'அம்பேத்கர் காலகட்டம்' இடந்தரவில்லை. இதைக் கவனத்தில் கொள்ளத் தவறியதன் விளைவே அ.மார்க்ஸின் தாக்குதல்கள். இந்தத் தாக்குதல்கள் பல்வேறு பிழைபட்ட வரலாற்று கருத்தியல் தரவுகளின் அடிப்படையில் கட்டப்பட்டிருக்கின்றன என்பதால் அ.மார்க்ஸின் மொத்த நிலைப்பாடுமே கேலிக்குரியதாகிறது."(பக்.241-242) இவ்வாறு மொழிவதோடு விட்டுவிடாமல் தொடர்ந்து அ.மார்க்ஸின் கருதுகோள் ஒவ்வொன்றையும் எடுத்து சரிபார்க்கவும் விளக்கவும் கூடுதல் தகவல்கள் தரவும் அடுத்துவரும் ஒன்பது பத்திகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் பிரேம் - ரமேஷ். 'நாவல் எழுதுவதென்பது எளிதான வேலை அல்ல. கடுமையான உழைப்பைக் கோருகிற விஷயம் அது. பன்முகப்பட்ட வாசிப்பும் பல்துறைப் பயிற்சியும் அதற்குத் தேவை." என்று அறிவிக்கும் அ.மார்க்ஸ், "பிரேம் -ரமேஷ் போன்றவர்களிடம் ஆழம் இருக்கிறது. ஆனால் எளிமை கிடையாது" என்றிருக்கிறார். அதற்கு இவர்கள் தரும் பதில் வெகு எளிமையானது. "எழுதுவதற்கு பன்முகப்பட்ட வாசிப்பும், பலதுறைப் பயிற்சியும் தேவை என்றால், வாசிப்பு மட்டும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதுபோல் எளிமையாக அமைந்துவிடுமா என்ன?..." இதனாலெல்லாம் அ.மார்க்ஸை விட்டுக்கொடுப்பவர்கள் அல்லர் இவர்கள் என்பதற்கு இந்நூலின் கடைசிப்பகுதியான 'சு.ராவிடம் கேளுங்கள்' என்பதில் க.நா.சு., சி.சு.செ.,வும் அவர்களுக்குப் பின்னால் சு.ரா., நகுலன்., வெ.சா. முதலியவர்கள் எல்லாருமே முன்னெடுத்து வளர்த்த கோட்பாடுகள் எல்லாமே 'வெற்று அபிப்ராயம் சார்ந்தவை' என்று அடையாளம் காணுகையில், தத்துவப் பள்ளிகள் சார்ந்தும் கலை இலக்கியக் கோட்பாடுகள் சார்ந்தும் உரையாடல்களைத் தமிழ்ச்சூழலில் வளர்த்தவர்கள் - பிராமண சிறு பத்திரிகை 'அபிப்ராய மர'பிற்கு மாறாக 'அறிவு விவாத மரபை' வளர்த்தவர்கள் யார்யார் என்று சொல்ல வரும்பொழுது எஸ்.வி.ராஜதுரை, ஞானி, தமிழவன், பிரம்மராஜன் போன்றவர்களிடையில் அ. மார்க்ஸையும் மொழிவது சான்று.(ப.285) 'காட்சி வெளியாகப் பெண்ணுடல்: தணிக்கையும் பெருக்கமும்' என்ற இயல், கீதையில் இடம்பெறும் அர்ஜுனன் - கிருஷ்ணனின்(இந்திய சமூக தர்மத்தில் பெண் - ஆண் பங்கு) சொல்லாடலில் தொடங்குகிறது. "இந்திய ஒழுக்கவியலின் ஆகக்கூடிய நிர்ணய சக்தியாக இருக்கும் வர்ணம் மற்றும் சாதி என்னும் பிரக்ஞை நிலை, இந்திய மன அமைப்பின் முழுமையை மற்றும் அதன் பகுதிகளை இயக்குவதாகவும் வடிவமைப்பதாகவும் உள்ளது. இதன் அடிப்படையில் எழும் பாலியல் பற்றிய வரையறை மற்றும் கருத்துருவங்கள், சாதிய நிலைப்பு மற்றும் சாதி அடிப்படையிலான உடல் ஒடுக்கம் என்பதற்கான உத்திகளாகவே செயல்பட்டு வந்திருக்கின்றன" என்ற கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. இந்தியச் சமூகங்களில் பால்விழைவு, பாலுணர்வு, பாலியல் செயலும் நிகழ்வும் என்ற அனைத்திலுமே அடிப்படையாகச் செயல்படுபவை 1. பாலியல் என்பது அதிகார ஆதிக்க உத்தி 2. உடல் பாலியல் களம்/அதிகார, சமூக, ஆதிக்க களமாக இயங்குவது. இவை அனைத்திலுமே ஆண் மையத் தன்மையும், பெண்மை, பெண் உடல்நிலை என்பவை 'பிற' அல்லது 'உபவெளி' என்ற நிலையும் மிகவும் வெளிப்படையாக உள்ளன.(ப.270) மேலும் -- புலனழிப்பைத் தனது உத்தியாக கொண்டுள்ள சாதிய ஒடுக்குமுறை, பேரழிவு பற்றிய அச்சத்திற்கும் பெண்மையின் வேட்கைக்கும் உள்ள தொடர்பை இந்திய புராணிக இதிகாச மரபு தொடர்ந்து விளக்கிக் கொண்டே இருத்தல், மனுஸ்மிருதி கூறும் பெண்பற்றியும் பெண்நிலை குறித்தும் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் இந்திய வரலாற்று - கலாச்சார - அழகியல் - அரசியல் விளைவுகளாகவே இருப்பதுடன் அவற்றை நினைவு - நினைவிலி - உபநினைவு எண்ர தளங்களாகவே கொண்டியங்கும் ஒவ்வொரு சமூக ஆணின் கருத்துமாகவே நீடித்தல் முதலானவை மிக ஆழமாக அவதானிக்கப்பட்டுள்ளன. இந்திய சமூகத்தின் ஒடுக்குமுறையையும் அடிப்படைத் தணிக்கையையும் உடைத்துக்கொண்டுதான் திரைப்படம் என்பதே நுழைந்தது என்பதும் அதுவரை இழிமக்களாக வெறும் அடிமைகளாக தாசிகளாக ஏவலர்களாக இருந்த நடிப்பு நிகழ்த்துபவர்கள் தேவதைகள் மற்றும் சிறுதெய்வ நிலையை நமது கலாச்சாரத்தில் அடைய முடிந்தது என்பதும் கவனமாகக் கருதப்பெற்றுள்ளன. அரசியல், சமூக, பொருளியல் துன்பங்களிலிருந்து நம்மை மீட்கும் வல்லமை மிக்கவர்களாக இவர்கள் நம் நினைவிலும் உள்மனதிலும் கதைகளிலும் உலவ முடிவதற்கான முரண் - நிறைய ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டிய ஒன்று என்று இங்கு பிரேம் - ரமேஷ் கூறுகிறார்கள்.(ப.274) ஒடுக்கப்பட்ட ஆண்மக்களையும் முற்றிலும் கீழ்மைப் படுத்தப்பட்ட பெண்மக்களையும் கவரும் அம்சம் என்ன என்ற ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டு அதற்கு மறுமொழியாகக் கொடுக்கும் பத்திகள் இரண்டு, தணிக்கைக்கும் தடைக்குமான வழிகளும் எவ்வாறு இதன் துணைவினைகளாக உருவாகி விடுகின்றன என்பதையும் சுட்டி விடுகின்றன. திரைப்படத்தில் பாலியல் தணிக்கை செய்யப்படுகிறதா என்று தொடர்ந்தெழும் கேள்விக்கு அது பெருக்கத்தான் படுகிறது என்று வரும் பதிலை, "..பார்வை இயந்திரங்களான மக்களின் உள்வாங்கும் பரப்பு அதிகமாக்கப்பட்டுத் தணியாத தணிக்கை மீறலின் துய்ப்பு பெருக்கப்படுகிறது. இங்கு பெண்ணுடல் மற்றும் பெண்மை பற்றிய கதையாடல் ஓயாமல் பிம்பம் பெருக்கும் இயந்திரத்தின் மூலம் அரைத்து வெளியே தள்ளப்படுகிறது" என்று கூறுவதும் அதன் தொடர்வும் பின்குறிப்பும் இது தொடர்பாக மேலும் அறியப்பெற வேண்டியவை. இயல்பாகவே கருத்து மந்தக்காரர்களுக்கும் அவ்வப்பொழுது பல 'வெற்றிகரமான' மனிதச்சாயல்களை வரித்துக்கொண்டு வக்கரித்துப் பேசுபவர்களுக்கும் கண்ணியத்துடன் பிரேம் -ரமேஷ் இந்தப் புத்தகம் வழியாகக் கொடுக்கும் பின்நவீனத்துவம் குறித்த சிறு விளக்கம்(ப.140-141), மிகவும் முக்கியமானது. பின்நவீனச் சூழலில் அறவியல், மனித நிலைப்பு, பாசிச மறுப்பு என்ற தத்துவ நிலையியக்கங்கள் பற்றிய பின்நவீனத்துவம் நோக்கியே இந்நூல் நடையிட்டுச் செல்வதை இப்பத்தி உறுதிப்படுத்துகிறது. கடைசியாக ஒன்று. அலுங்காமல் குலுங்காமல் ஆராய்ச்சி செய்பவர்கள், மேனாமினுக்கியாய் இருந்து ஆள்பிடித்து ஊடகவழி வலிமை பெற்றுவிட்டு - தலித் சிந்தனை மற்றும் செயல்பாட்டாளர்களைஎன்னவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இந்த அம்பேத்கர் ஊழியிலும் பேசலாம் என்று விஷமானதொரு பாசிசத்தை உள்ளத்தில் தேக்கிவைத்திருப்பவர்கள் - இத்தகைய சிந்தனைப்போக்குடைய புத்தகத்தை நிராகரிப்பதற்கு என்றே ஒரு வார்த்தை வைத்திருக்கிறார்கள். அது, 'புரியவில்லை என்பதே. "எங்களுடைய அறவியல் கேள்விகளை மறுத்து, முற்றொருமையை உறுதிப்படுத்த நினைப்பவர்களுக்கு, தத்துவார்த்தமாகவும், கோட்பாட்டு ரீதியாகவும் விவாதிக்க இயலாதபொழுது, ஒரே ஒரு தந்திரம் கையில் உள்ளது "புரியவில்லை." முயற்சி எடுக்காதவர்களுக்கு மெய்யாகவே புரியாதுதான். 'சிரங்கைச் சொறிந்து கொடுக்கச் சுகம்' என்றொரு சொலவடை உண்டு. இருக்கவே இருக்கிறது சின்னத்திரை. பெரிய திரையும் குறுவட்டின் மூலம் சின்னத் திரையைச் சரண்புகுந்தாயிற்று. சம்பந்தா சம்பந்தமே இல்லாமல், அதாவது சுதந்திர நாள் சிறப்பு நிகழ்ச்சிக்கும், "டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே 'ஸெய்'வேன்!" என்று 'திடம்பட' மொழியும் நடிகருக்கும் என்ன சம்பந்தமோ அப்படிப்பட்ட சம்பந்தத்தோடு விளம்பரங்களுக்கிடையில் நிகழ்ச்சிகளை நகர்த்தி, ஒவ்வொரு மைக்ரோ செகண்டையும் உச்சபட்ச ஏலத்துக்கு விட்டு காசு பார்க்கும் தொ.கா. இருக்கவே இருக்கிறது. அப்படியும் இல்லையா? குழு, குழுவாக நடத்திக்கொள்ளும் ஏதாவதொரு சிறுபத்திரிக்கையிலோ, பெருங்குழு நடத்தும் வாரமலரிலோ மூழ்கிவிட வேண்டியதுதான். அதைவிடவும் சுகம் அவர்களுக்கு வேறு இருக்கிறதா என்ன? ******************************************** வெளியிட்டோர்: மருதா 226 (188), பாரதி சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014. தமிழ்நாடு இந்தியா. பக்கங்கள்: 286 விலை: ரூ. 150 ********************* நன்றி: கீற்று.காம்
பெண்ணின் உள்மன வெளிப்பாடு 2006இலும் 1984இலும் -தேவமைந்தன் பெண்ணின் உள்மன உளைச்சல்கள் வெளிப்படுவதில் நிகழ்நிலையும் இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முந்திய இறப்புநிலையும் ஒன்றாகவே இருப்பதை, தற்செயலாக என் குறிப்பேடுகளைப் புரட்டும்பொழுது கண்டு வியந்தேன். இன்றைய நிலைக்கு, இந்தக் கட்டுரையில், மாலதி மைத்ரி முதலான வெளிப்படையாகப் பெண்ணியத்தை அதன் கோட்பாட்டு அடிப்படையில் பின்பற்றுவோர் அல்லாமல் இதழ்களிலும் நூல்களிலும் அமைதியாய்ப் பெண்மன உளைச்சல்களை வெளிப்படுத்தும் 22 ஆண்டு இடைவெளியிலான கவிஞர் இருவரை வகைமாதிரிகளாகக் கொண்டிருக்கிறேன். இன்னொரு காரணம், அவர்களை எனக்குத் தெரியாது. தெரிந்து மதிப்பிடுவதில் பொய்ம்மை புகுந்துவிடும். சரி, கோட்பாடு அடிப்படையில் பெண்ணியம் பற்றி இன்று நவிலப்பட்டு வரும் விளக்கத்துக்கும் கலைச்சொல் அடிப்படையில் அகராதியில் - ‘பெண்ணியக் கலைச்சொல் விளக்கக் கையேடு’ (அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம், நவம்பர் 1992) - உள்ள விளக்கத்துக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. “இலத்தீன் மொழியில் பெண் என்று பொருள் தரும் ‘பெமினா’ என்ற சொல்லிலிருந்து பெண்ணியம் என்ற சொல் வந்தது......1890 வரையில் பெண்ணியம் என்பதைக் குறிக்க மகளியம் என்ற (womanism) சொல்லே பயன்படுத்தப்பட்டு வந்தது. 1895ஆம் வருடம் ஏப்ரல் 27ஆம் நாளன்று வெளியிட்ட அத்தீனா என்ற கிரேக்கப் பெண் தெய்வக் கோயில் என்ற நூலில் ஆலிஸ் ரோசி என்பவர் மேலே குறிப்பிட்ட பெண்ணியம் என்ற சொல்லை மகளியம் என்ற சொல்லுக்கு மாற்றுச் சொல்லாகப் பயன்படுத்தினார். பெண் சமத்துவம் வேண்டிப் போராடும் பெண் இயக்கங்களையும் செயல்பாடுகளையும் இச்சொல் குறிக்கும்.” (மேலது, பக்.26-27) இன்று, பெண்ணின் அகமன உளைச்சல்களை மட்டும் புலப்படுத்துவது மிதவாதப் பெண்ணியம் என்றும்; பெண்ணின், இதுவரை மறைத்துவைக்குமாறு ஆணாதிக்கத்தால் மேலாண்மை(prompt) செய்தும் நிர்பந்தித்தும் மறைத்துவைக்கப்பட்ட உடல் உளைச்சல் உண்மைகளைத் தம் படைப்புகள் வழியாக அணிகள்(figurative)வேயாமல் புலப்படுத்துவதும்; ஆணுடல் போலவே பெண்ணுடலும் அத்தனை அமைதிக்கும் ஓய்வுக்கும் ஆரோக்கியத்துக்கும் பேணப்படுதலுக்கும் உடலியல் ரீதியில் ஒரேமாதிரியான தேவை உடையதுதான் என்பதை ஓயாமல் வெளிப்படுத்துவதுமே உண்மையான பெண்ணியம் என்று வரையறுக்கப்பெற்றுள்ளது. 1984ஆம் ஆண்டு நர்மதா பிரசுரம் வெளியிட்ட ‘உன் தோழமையின் இருப்பில்’ என்ற தலைப்பிலுள்ள தேவகி அவர்களின் கவிதை ஒன்றைப் பார்ப்போம். சாத்தியம் -தேவகி உனக்கு உன்னைப் பார்த்து உனக்குள் உன்னைத் தெரிந்தால் --- உனக்கு என்னைப் பார்க்கவும் எனக்குள் என்னையும் தெரியும். உனக்கு உன்மதிப்பு உள்ளபடி புரிந்தால் உனக்கு என் மதிப்பும் உள்ளபடி புரியும். உனக்கு என்னோடு உன் ‘நான்’ தள்ளி வாழ முடிந்தால் எனக்கும் உன்னோடு என் ‘நான்’ எடுத்து வாழ முடியும். ‘பெண்ணியம்’ ஆகஸ்ட் 2006 இதழில் (ப.25) தி. கமலி அவர்களின் ‘தேடல்,’ கற்பிதம்,’ ‘அடையாளம்,’ ‘புரிதல்’ ஆகிய நான்கு கவிதைகள் வெளிவந்துள்ளன. அவற்றுள் கடைசியான ‘புரிதல்’ என்பதில் தி.கமலி மொழிகிறார்: எனக்குப் புரியாத நீயும் உனக்குப் புரியாத நானும் எல்லாவிதப் புரிதல்களோடும் வாழ முயற்சித்தல் எங்ஙனம் சாத்தியப்படும்? பிரஞ்சுக் கவி லரி த்ராம்ப்ளே அவர்களின் ‘உறங்காத உள்மனது’ - என்ற நிறுத்தல் குறிகளே இல்லாத - நெடுங்கவிதைநூல் பற்றித் ‘திண்ணை’யில் ஏற்கெனவே தெரியப்படுத்தியுள்ளேன். அதன் உணர்த்தல் உத்தி [“மென்மையாக, ஆனால், ஆகவும் அழுத்தந்திருத்தமாகப் பெண்மனத்தின் உள்ளாழத்தை உணர்த்தல்”] இவ்விருவர் கவிதைகளிலும் இருபத்திரண்டு ஆண்டு இடைவெளியிலும் பதிந்திருப்பது கண்டு வியந்து போனேன். ‘காலம், நாடு என்னும் இடைவெளிகள் கவிஞர்களுக்கு இடையில் இல்லை’ என்பதற்கு இதுவும் ஒரு சான்று. நன்றி: திண்ணை.காம்