20.10.08

தமிழ்நாட்டின் சித்தர்களும் சூஃபியர்களும் - தேவமைந்தன் சித்தர் என்றால் 'கைகூடுகை பெற்றவர்கள்.' 'கைகூடுகை' என்பது 'அறிவின் தெளிவு.' மனத்தின் நான்கு வடிவங்களுள் ஒன்றான 'சித்தம்' என்பது பெரும்பாலானவர்களுக்குச் செயலற்ற நிலையில்(inert) இருக்கும். அதைச் செயற்படுத்தக் கூடியவர்கள் சித்தர்கள். மனத்தின் வடிவங்கள் - மனம்(conscious), புத்தி(subconscious), சித்தம்(unconscious), அகங்காரம்(ego) என்ற நான்கு. சித்தம் என்பது மனத்தின் நான்கு வடிவங்களுள் மூன்றாவது. சித்தத்துக்கு, 'முடிவான மனக்கொள்கை,' 'மூலப்பகுதி' என்றும் பொருள் உண்டு. சிவாகமத்துள் ஒன்றனுக்கும் மரங்களுள் முருங்கைமரத்துக்கும் சித்தம் என்று பெயர். அணியமாக/திண்ணமாக/ஆயத்தமாக உள்ளதற்கும் 'சித்தம்' என்பார்கள். 'சித்தன்' என்ற சொல் முருகக் கடவுளையும் அருக தேவனையும் சிவபெருமானையும் வைரவனையும் வியாழனையும் குறிக்கும். மரங்களுள் இலவமரத்தைச் 'சித்தன்' என்பார்கள். காந்தக் கல்லுக்கும் அதே பெயருண்டு. 'சித்தாதிகள்' என்ற சொல்தான், இரசவாதம் முதலான அரிய வித்தைகள் கைவரப்பெற்ற யோகிகளைச் சுட்டும். திருமூலர் 'முக்கரணம்' பற்றிக் கூறிய பாடல்களுக்கான உரைகளை வைத்துக்கொண்டு 'சித்தர்' என்பவர் யார் என்பதைக் குறித்துத் திருமூலர் விளக்குவதாகக் கூறி, தாங்களே விளக்கினர் சிலர். சட்டைமுனி நாயனாரின் ஞானப்பாடல்களில் சித்தர் குறித்த விளக்கம் உண்டு. இன்னும் அகத்தியர், கருவூரார் இராமதேவர்,வால்மீகர்,காகபுசுண்டர் முதலானோர் சித்தரை அடையாளப்படுத்தியுள்ளார்கள். சித்தமெனும் சிந்தையில் தெளிவு கொண்டவனே சித்தன்('சூத்திரஞானம்' தொடக்கப் பாடல்கள்) என்ற வால்மீகர் கருத்து இவற்றுள் தெளிவாக நாம் அறியுமாறு உள்ளது. 'கைகூடுகை' என்னும் அறிவின் தெளிவு என்பதில் அறிவில் விளக்கம், துலக்கம், மன அமைவு, நற்காட்சி, ஆராய்ச்சி என்ற ஐந்து தன்மைகள் உள்ளன. 'சித்து' என்ற சொல்லுக்கு "அறிவுடையது" என்ற பொருளையும் 'அசித்து' என்பதற்கு "அறிவில்லாதது" என்ற பொருளையும் சிவஞானசித்தியார் சுபக்கம்(பாடல் எண் 159இல் வரும் 'சித்தசித்து' என்ற சொல்லால்) சுட்டுகிறது. ("சித்தினை அசித்துடன் இணைத்தாய்!" - பாரதி, தோத்திரப் பாடல்கள்; எண்:36) 'சித்தி' என்ற சொல்லுக்கு, கைகூடுகை, வீடுபேறு முதலான பதினைந்து பொருள்கள் உள்ளன.(Madras University Tamil Lexicon III:I. ப.1412) ஒன்றை நினைக்கிறோம். அது கைகூடுவதில்லை. அழுந்த நினைப்பது கைகூடினால் அது 'சித்தி' எனப்படும். "ஸித்' என்ற வடமொழி வேர்ச்சொல்லே 'ஸிது' என்றாகி 'ஸித்த' என்னும் சொல்லாகியது" என்பது(முனைவர் க. இளமதி சானகிராமன், சித்தர்களும் சமூகப் பார்வையும், புதுச்சேரி, 1990. ப.1) இதற்குப் பொருந்தாது. ஆனால் "தாங்கள் ஆணையிடுங்கள்; நிறைவேற்ற நான் சித்தமாக இருக்கிறேன்" என்பதற்கும் "தங்கள் சித்தம் என் பாக்கியம்!" என்பதற்கும் பொருந்தும். 'சித்தித்தல்' என்ற சொல்லுக்கு 'கைவரப்பெறுகை/ கைவரப்பெறுதல்' என்று பொருள். இது எப்படியென்றால், 'அன்னம்' என்ற சொல் பறவையை உணர்த்தும்பொழுது தமிழாகவும் உணவை உணர்த்தும்பொழுது சமற்கிருதமாகவும் ஆவது போலவும்; 'நாகம்' என்ற சொல் மலையை உணர்த்தும்பொழுது சமற்கிருதமாகவும் பாம்பை உணர்த்தும்பொழுது தமிழாகவும் இருப்பது போலவும் ஆகும். மரங்களுள் எட்டிமரத்துக்கும் மூலிகைச் செடிகளுள் 'நிலப்பனை'க்கும் கீரைகளுள் பொன்னாங்காணிக்கும் தூய்மையாக்கும் மருந்துகளுள் சவர்க்காரம்/சலவைக்கட்டி என்று பொருள்படுகின்ற வழலைக்கும் 'சித்தி' என்ற பெயர் உண்டு.(புண்ணிலிருந்து வடியும் நீர், பாம்பு வகையில் ஒன்று, உப்பு வகையில் ஒன்று, கோழை/சிலேத்துமம் - என்பவை 'வழலை'க்கு ஏனைய பொருள்கள்) சூஃபியர் என்ற சொல், 'சூஃபி' என்ற அரபுச் சொல்லின் ஆக்கம். அரபுமொழியில் ‘சூஃப்’ என்ற சொல் கம்பளி(wool)யைக் குறிக்கும். பின்னர் அச்சொல்லே ‘கம்பளியை உடையவன்’ (a man of wool) என்ற பொருள் குறிக்கும் ‘சூஃபி’ என்னும் சொல்லை அரபுமொழி இலக்கியத்துக்குத் தந்தது. படிப்படியாக, பாரசீகத்தில் முஸ்லிம் மெய்ப்பொருளியலும் ஆன்மிக மறையியலும் இணைந்தவொரு முறையைப் பின்பற்றுகின்ற ஒருவரை அச்சொல் குறிக்கலானது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சூஃபிய மெய்யுணர்வாளர்களில் பீருமுகம்மது வாவா என்று நெல்லை மக்களால் அன்புடன் அழைக்கப்பெறும் பீர்முஹம்மத் அப்பா(ரலி) முதலாமவர். (கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலையில் அவருடைய அடக்கத்தலம் உள்ளது.) "பீர்முஹம்மத் அப்பா(ரலி) அவர்களே [தமிழ் சூபித்துவ] ஞானப் பாடல் வரிசையில் முதலாமவராக விளங்குகிறார்கள்" என்று தேசமானிய டாக்டர் ஏ.எம்.முஹம்மத் சஹாப்தீன் தன் ஆய்வில் கூறியுள்ளார். 'அட்டமாசித்தி' எனப்படும் சித்திகள் அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன. 'அட்டமாசித்தி'யைத் தூயதமிழில் 'எண்மாப் பேறுகள்' என்றும் அவற்றை நுண்மை, பருமை, மென்மை, விண்டன்மை, விரும்பியதெய்தல், தன்வயமாக்கல், நிறைவுண்மை, ஆட்சியனாதல் எனவும் மொழிவர். அணிமாவுக்கு பிருகி முனிவர் வண்டு வடிவம் எடுத்ததையும்; மகிமாவுக்குத் திருமால் வாமனராக வந்து நெடிய தோற்றம் கொண்டதையும்; இலகிமாவுக்கு அப்பர் என்ற திருநாவுக்கரசரைக் கல்லில் கட்டிக் கடலில் இட்டபொழுது கல் மிதந்ததையும்; கரிமாவுக்குச் சிபி, புறாவின் எடைக்குத் தானே அமர்ந்ததையும்; பிராத்திக்கு இராவணன், சூரபதுமன் ஆகியோர் எவ்வுலகத்தும் எவ்விடத்தும் தடையின்றிச் சஞ்சரித்ததையும்; பிராகாமியத்துக்கு மூலன் உடம்பில் நுழைந்து திருமூலராய் எழுந்த யோகியையும்; ஈசத்துவத்துக்கு ஞானசம்பந்தர், சுந்தரர், வள்ளலார் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளயும்; வசித்துவத்துக்கு, சுந்தரருக்காக இறைவன் தூது சென்றதையும் சான்று காட்டினார் முனைவர் இரா.மாணிக்கவாசகம்.(சித்தர்கள் பரிபாஷை அகராதி, 1982.பக்:188-189.) 'கைகூடுகை' என்பதற்கு, பொதுவான மாந்தருக்குக் கிடைக்காத அரிய பேறு என்ற பொருளையே பொதுமக்கள் எப்பொழுதும் கற்பித்து வருகிறார்கள். மாந்தருக்கு இயல்பானவற்றில் உள்ள நாட்டத்தைவிடவும் இயல்புக்கு மீறியவற்றில் நாட்டம் மிகுதி. அதனால்தான் தமிழ்ச்சித்தர்களுக்கு எண்மாப்பேறுகள் போதா என்று அறுபத்து நான்கு வகைச்சித்துக்களை உடைமையாக்கி மனநிறைவடைந்தனர். ஞானவெட்டியான், யாகோபு வைத்தியவாத சூத்திரம் ஆகிய நூல்களும் இதற்கான குறிப்பைத் தருகின்றன. [முனைவர் க.நாராயணன், சித்தர் தத்துவம், புதுச்சேரி, 1988.] சூஃபியாக்கள் [பாரசீக சூஃபி மெய்யுணர்வாளர்] பரம்பொருளை ‘உண்மை” என்றே சுட்டுகின்றனர். ‘தன்னுணர்வு கொண்ட விழைவு,’ ‘அழகு,’ ‘ஒளி’ அல்லது ‘எண்ணம்” என்ற முந்நிலையில் அவர்கள் கடவுளை வைத்துச் சுட்டுவதாக அல்லாமா இக்பால் அவர்கள் கூறியுள்ளார். [Dr.Shaik Muhammad Iqbal, The Development of Metaphysics in Persia, London. மேற்கோள்: தேசமானிய, டாக்டர். ஏ.எம். முஹம்மத் சஹாப்தீன், இறைவனும் பிரபஞ்சமும், கொழும்பு-7. 1995.] தமிழ்நாட்டுச் சித்தர்களை மரபு வழியாக 1.அகத்தியர் 2.போகர் 3.கயிலாயநாதர் 4.கோரக்கர் 5.திருமூலர் 6. சட்டைமுனி 7.கொங்கணர் 8.கூன்கண்ணர் 9.இடைக்காடர் 10.நந்தீசர் 11.புண்ணாக்கீசர் 12.உரோமர் 13.மச்சமுனி 14.கூர்மமுனி 15.கமலமுனி 16.வாசமுனி 17.பிரமமுனி 18.சுந்தரானந்தர் என்றும் அவர்கள் அல்லாமல் கரூர் சித்தர் என்ற கருவூரார், புலத்தியர், புசுண்டர், இராமதேவர், தன்வந்திரி, கபிலர் முதலானோரையும் வரிசைப் படுத்துவார்கள். தமிழ்நாட்டுச் சூஃபியர்களுள் முகமையானவர்கள் - பீர்முஹம்மத் அப்பா(ரலி), கோட்டாறு ஞானியார், குணங்குடி மஸ்தான் சாஹிபு, கலீபத் ஷைகு ஷாஹூல் ஹமீத் அப்பாநாயகம், பரிமளம் முகம்மது காஸிம், இறசூல் பீவி, ஐயம்பேட்டை அப்துல் கரீம் பாவா, குஞ்சலி சாஹிப், இளையான்குடி மஸ்தான் ஸாஹிப், கோட்டாறு சைகுத்தம்பி ஞானியார், அப்துல் காதிர் வாலை மஸ்தான், பெரியநூஹூ லெப்பை ஆலிம், 'காலங்குடி மச்சரேகைச் சித்தன்' என்றழைக்கப்படும் செய்யிது அப்துல்வாரித் ஆலிம்மௌலானா ஐதுரூஸ், மேலைப்பாளையம் முகியித்தீன் பஸீர், மோனகுரு மஸ்தான் ஸாஹிப், முகம்மது ஹம்ஸாலெப்பை ஆகியோர். வேதத்தையும் மதத்தையும் எதிர்த்தவர்களாகிய சித்தர்களுள் அகப்பேய்ச் சித்தர், சிவவாக்கியர், பாம்பாட்டிச் சித்தர், திருவருட்பிரகாச வள்ளலார் ஆகியோர் மிகவும் குறிப்பிடத் தக்கவர்கள். நிகழ்சமூகம்போல் வேத-மத எதிர்ப்பாளர்களுக்குப் பாதுகாப்புத் தராத காலத்தில் இவர்கள் வாழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மறுப்பாளராக மட்டும் இல்லாமல் உடன்பாட்டு முறையில் சீர்திருத்தங்கள் பலவற்றுக்கு வித்திட்ட துணிவு வள்ளாலாருக்கு மிகுந்திருந்தது. அவர் அவ்வாறு ஆற்றிய சீர்திருத்தங்கள்:- 1. நாட்டிலும் சமூகத்திலும் வீட்டிலும் ஒருமைப்பாடு நிலவப் பாடுபட்டார். 2. சாதி, மத, குல வேறுபாடுகள் ஒழிய எழுத்தாலும் பேச்சாலும் செயலாலும் பாடுபட்டார். 3. வகுப்பு வேற்றுமை என்பது புண்ணிய பாவங்களால் இயற்கையாக விளைவது என்ற பிரச்சாரத்தை வன்மையாகச் சாடினார். 4. அறிவுக் கல்வியும் ஆன்மிகக் கல்வியும் முறையாகப் பெறுவதற்கு மகளிர்க்கு முழு உரிமை உண்டு என்று வெளிப்படையாக அறிவித்தார். 5. கோயிலுக்குள் புகலாகாது என்று பலரை மதக்கோட்பாட்டினர் கருத்துப் பரப்பலாலும் வன்முறையாலும் தடுத்துக் கொண்டிருந்த காலத்தில், உலகில் வாழும் எல்லாரும், சமய-மத வேறுபாடு எதுவுமின்றி, சென்று கூடி வழிபடக்கூடிய சன்மார்க்க சுத்த சத்திய சங்கத்தை உருவாக்கினார். 6. கிழக்கிந்தியக் கம்பெனியின் வழி பிரிட்டிஷ் பேரரசு இந்தியாவுக்குள் நுழைந்து அறிவடிப்படையாலும் அதிகார அடிப்படையாலும் மாந்தரை அடிமைப்படுத்திய காலத்தில் ‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக, அருள் நயந்த சன்மார்க்கர் ஆள்க!’ என்ற விடுதலை முழக்கத்தை முன்வைத்தார். 7. உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கத்தை முதன்முதலாகக் கண்டித்தார். 8. தனிமனிதர்கள் தம் உடம்பைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய முறைமைகளையும் ‘நித்திய கரும விதி’ என்ற தலைப்பின்கீழ் வகுத்ததுடன், திருமூலர் வழியில் 'உடம்பா'ரையும் 'உயிரா'ரையும் காப்பதற்கென்றே ‘மூலிகை குண அட்டவணை,’ ‘சஞ்சீவி மூலிகைகள்,’ ‘மருத்துவக் குறிப்புகள்’ என்ற மூன்றையும் ஆராய்ந்து தொகுத்தார். 9. பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே, தமிழ்மொழியின் உரைநடையை வளர்க்கும் படைப்புகளைத் உருவாக்கினார். 10. ‘சத்தியப் பெரு விண்ணப்ப’த்தில், இறைவனைப் புகழ்ந்தேத்தத் தமிழே உகந்தது என்பதை, “எந்தையுனைப் பாடி மகிழ்ந்து இன்புறவே வைத்தருளிச் செந்தமிழை வளர்க்கின்றாய்!” என்று பாடி, “அருச்சனை பாட்டேயாகும்" என்ற சேக்கிழார்தம் கருத்தை வலிமைப்படுத்தினார். 12. ‘மனுமுறை கண்ட வாசகம்’ இயற்றி விதி என்னும் ஊழ்வினைக் கோட்பாட்டை(fatalism) அறிவுக் கோட்பாட்டால்(epistemology) வென்று காட்டினார். வள்ளலார் அறிவுறுத்திய சுத்த சன்மார்க்கத்தின் முதன்மை நோக்கம், பேரின்ப சித்தி பெறுதலேயாகும். பேரின்ப சித்தி என்றால் சிற்றின்ப சித்தி உள்ளதா என்ற வினா எழும். ஆன்ம சாதகன் இறைநிலையை முழுமையாக அடையாத காலத்தில் அவனை வந்தடையும் சித்திகளே அவை. பேரின்ப சித்திபெற என்ன வழி? சாதி மதங்களை விடுத்துப் பொது நோக்கம் பெற்றுச் சீவகாருண்யம் வளர்ந்து கடவுள் அருளைப் பெறும்பொழுதே அதனைப் பெறலாம்.(இது குறித்து மேலும் அறிய: முனைவர் அ.செகதீசன், தமிழ் இலக்கியத்தில் யோகம், லில்லி பதிப்பகம், பத்மாவதி நகர், திருப்பதி-2. 1987. பக்.254-314) தவிர, இன்று ஊடகங்களால் பெரிதும் பரப்பப்படும் யோகாசனங்கள் குறித்து, அன்று வள்ளலார் எதுவும் கூறாமல் விட்டதற்கு இல்லறவாழ்க்கையில் உள்ளவர்களுக்கு ஹடயோகமும் அதன் பகுதியான ஆசனங்களும் சிறப்பாகப் பயன்படாது என்ற காரணம் இருக்கலாம். ஆனால், வள்ளலார் பெயரைப் பயன்படுத்திக்கொண்டு வடலூரிலும் மற்ற இடங்களிலும் தாமே உருவாக்கிய ஆசனப் பயிற்சிகளைக் கற்பிக்கும் சுவாமிகள் சிலர் உருவாகியிருப்பதற்கு என்ன சொல்வது? வள்ளலார் என்னும் வடலூர் இராமலிங்கசுவாமிகளின் திருவருட்பாவின் ஆறாம் திருமுறை மேலும் அவர் காட்டிய 'மரணமிலாப் பெருவாழ்வு' மீதும் அளவிறந்த ஈடுபாடு கொண்டிருந்தார் பாரதி. வள்ளலார் மட்டுமல்லர்; சித்தர்கள்மேல் பொதுவாகவே பாரதியாருக்கு ஈடுபாடு அதிகம். இதே கட்டுரையில் புதுச்சேரிச் சித்தர்களுள் ஒருவராகக் குறிப்பிடப் பெற்றிருக்கும் யாழ்ப்பாணத்துச் சாமிகளைத் தன் வீட்டுக்குக் குரு குவளைக் கண்ணன் அழைத்துவந்ததை பாரதியார், "ஜகத்தினிலோர் உவமையிலா யாழ்ப்பா ணத்து சாமிதனை இவனென்றன் மனைக் கொணர்ந்தான். அகத்தினிலே அவன்பாத மலரைப் பூண்டேன்; 'அன்றேயப் போதேவீ டதுவே வீடு" (சென்னை சக்தி காரியாலய மூன்றாம் பதிப்பு, 2/10/1957, ப.43) என்று கூறியதுடன் நில்லாது யாழ்ப்பாணத்துச் சாமிகளைப் பற்றி, "குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான், தேவிபதம் மறவாத தீர ஞானி சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான் பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி, பரமபத வாயிலெனும் பார்வை யாளன்; காவிவளர் தடங்களிலே மீன்கள் பாயுங் கழனிகள்சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன்" என்பதோடு நில்லாமல், "தோழரே! எந்நாளும் எனக்குப் பார்மேல் மங்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும் வானவர்கோன் யாழ்ப்பாணத் தீசன் தன்னைச் சங்கரனென் றெப்போதும் முன்னே கொண்டு சரணடைந்தால் அதுகண்டீர் சர்வ சித்தி" (சென்னை சக்தி காரியாலய மூன்றாம் பதிப்பு, 2/10/1957, பக்.40-41) என்றும் தெரிவித்துள்ளார். பாரதி பற்றிக் கட்டுரை எழுதுபவர்களும் படமெடுப்பவர்களும் குருகுள்ளச்சாமி குறித்து வெளிப்படுத்தும் அளவு புதுச்சேரியின் புகழ்மிக்க சித்தர்களுள் ஒருவரான யாழ்ப்பாணத்து சாமிகளைப் பற்றி வெளிப்படுத்துவதில்லை. ஹடயோகியும் ஞானியுமான குரு கோவிந்தசாமி என்றவராலும் புதுச்சேரியில் விந்தையான இரண்டு அனுபவங்களை அடைந்தார் பாரதி.(பார்க்க: மேற்படிப் பதிப்பு, ப.275) என்றாலும், பாரதியை அவருடைய வேதாந்தப் பாடல்கள்தாம் அடையாளங் காட்டுகின்றன என்றார் ப.கோதண்டராமன் அவர்கள்.(புதுவையில் பாரதி, பழனியப்பா பிரதர்ஸ், 1980, பக்.55-56) இவர்(ப.கோதண்டராமன்) தமிழ்நாட்டை விட்டு நீங்கிப் புதுவையில் அரவிந்தாசிரமத்திலேயே தங்கிப் பணி செய்தவர். 'புதுவையில் பாரதி' என்ற இந்த அரிய புத்தகத்தில் பாரதியாரின் 'சித்தக் கடல்' என்ற சிறிய நூலின் 1/7/1915, 2/7/1915 தேதிகளிட்ட குறிப்புகள்(பக்கம் 41 முதல் 47 வரை) பாரதியின் உண்மையான அன்பர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பயன்படுவன. நோய், அச்சம், கடன்காரர் தொல்லை, குடிக்கூலிக்காக வீட்டுக்காரன் கொடுக்கும் தொல்லை முதலாக, தமக்கேற்பட்ட புகையிலைப் பழக்கம் உட்படப் பலவற்றை அவற்றில் புலப்படுத்தியிருக்கிறார் பாரதி. [புதுவையில் பாரதியார் வாழ்ந்தபொழுது அரவிந்தர், பாரதியின் துணைக்கொண்டு செய்த திருவள்ளுவர், ஆண்டாள், நம்மாழ்வார் குலசேகராழ்வார் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் குறித்து முதன்முதலாகச் சிந்திக்க வைத்ததும் 1980இல் பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட ப.கோதண்டராமனின் புத்தகமே. பார்க்க: பக்.88-117] சித்தர்கள் தொகை முதலில் பதினெட்டாகவும் பிறகு இருபதாகவும் ஆனதற்கு, அவ்வப்பொழுது வெளிவந்த சித்தர் பாடல்களின் பதிப்புகளே காரணம். உண்மையில் சித்தர்கள் தொகையை எண்ணி மாளாது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் மட்டும் கழுவெளிச் சித்தர், சிவஞானபால சித்தர், தொள்ளைக்காது சித்தர், மௌலா சாஹிப் மெய்ஞ்ஞானி, நாகலிங்க சாமிகள், அழகர் சாமிகள், சித்தானந்த சாமிகள், சக்திவேல் பரமானந்த குரு சாமிகள், இராம பரதேசி சாமிகள், அப்பா பைத்திய சாமிகள், அக்கா சாமிகள், மகான் படே சாயபு, கம்பளி சாமிகள், யாழ்ப்பாணம் கதிர்வேல் சாமிகள், ஞானகுரு குள்ளச் சாமிகள், சட்டி சாமிகள், சீமான் சாமிகள், சடைத்தாயாரம்மாள், திருக்காஞ்சி சாமிகள் முதலான சித்தர்கள், தோராயமாக முப்பதின்மர் வாழ்ந்தார்கள். தமிழ்நாட்டில் கரூர், திருவண்ணாமலை முதலான ஊர்கள் ஒவ்வொன்றிலும் ஒற்றைவேட்டிச் சாமிகள், அருணாசல சாமிகள், ஆற்றுச் சாமிகள், இராமேசுவரம் சாமிகள், பேயன்பழத் தாத்தா சித்தர் முதலான சித்தர்கள் பற்பலர் வாழ்ந்திருக்கிறார்கள். உண்மையான சித்தர்கள் இரசவாதம் முதலானவற்றை நாடிவந்த மக்களை ஊக்குவித்ததில்லை. மூலிகைகள் பலவற்றின் முதன்மைக் குணங்களை அறிந்து வைத்திருந்த சித்தர்கள் அவற்றின் இனங்கள் பல அழியாமல் காத்தார்கள். மாழை எனப்படும் உலோகங்களின் நுட்பங்களையும் முப்பூ போன்ற சஞ்சீவினி/குருமருந்து(panacea)களின் செய்முறையையும் சித்தர்களுள் பலர் தெரிந்து வைத்திருந்ததோடு மக்களின் தீராத நோய்கள் சிலவற்றைத் தீர்த்துவைக்கவும் முயன்றார்கள். சித்தர்களின் புறத்தோற்றம் இயல்பானதாகத்தான் இருக்கும், குறிப்பாகவும் சிறப்பாகவும் எதுவும் தோன்றாது என்பதை, “வேர்த்தால் குளித்துப், பசித்தால் புசித்து, விழி துயின்று பார்த்தால் உலகத் தவர்போல் இருப்பர் பற்று அற்றவரே!” (பட்டினத்தார் பாடல்கள்: பொது. பா.19) என்ற பட்டினத்தார் பாடல் தெரிவிக்கிறது.[“மாத்தானவத்தையும்” என்று தொடங்கும் இப்பாடலைத்தான் குமரி முதல் வேங்கடம் வரையிலுள்ள இடு-சுடுகாடுகளில் பணிபுரிவோர் தவறாது பாடுகின்றனர்; ‘பிதாமகன்’ என்ற தமிழ்த் திரைப்படத்திலும் இப்பாடல் இடம்பெற்றது] சித்தர்களுக்கு இயல்பு மீறிய(abnormal) புறத்தோற்றமும் இருக்கக் கூடும் என்பதை, “பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத் தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச் சேய்போல் இருப்பர்கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!” (மேலது, பா.35) என்ற பட்டினத்தார் பாடல் சித்தரிக்கிறது. சித்தர் பாடல்களின் பல்வேறு பதிப்புகளிலும் அவற்றுக்கு முந்திய பதிவுகளான ஓலைச்சுவடிகளிலும் காலந்தோறும் கலப்படம் நிகழ்ந்து வந்திருக்கிறது. அதனால்தான் கயிலாயக் கம்பளிச்சட்டைமுனி நாயனார் போன்ற சித்தர் பாடல்களில் முன்னுக்குப்பின் முரண்களும் கருத்தோர்மைச் சிதைவுகளும் கடுமையாக ஏற்பட்டுள்ளன. சான்று: “மயங்குவான் பொன்தேடப் புரட்டுப் பேசி மகத்தான ஞானமெல்லாம் வந்த தென்பான்; தயங்குவான் மண்ணாலே சார்வு காணான் சாதகமா யோகத்திற் சார்ந்தே னென்பான்” என்றும், “ஆரப்பா உலகத்தில் ஞானி யுண்டோ? ஆராய்ந்து நான்கண்டே னென்பார் கோடி; ஏரப்பா உழுத(ல்)லோவெள் ளாமை யாகும்? ஏரில்லான் அறுத்தடித்த கதையும் ஆச்சே!” என்றும் வருபவை இரண்டுமே அவர் பாடியவை என்பது. மேலே உள்ள பாட்டின் மூன்றாவதும் நான்காவதும் ஆன அடிகளில் கயிலாயக் கம்பளிச்சட்டைமுனி நாயனார், உலகோர்முன் வைக்கும் அளவையியல்(logic) நியாயம் மிகவும் துல்லியமானது. ‘அங்கை நெல்லி’யெனும் மற்றொரு நியாயம் போல ‘நெற்றியடி’ கொடுப்பது. கொங்குப்புலவர் நா. வையாபுரியாரின் தலைமாணாக்கர் அறிஞர் கு. நடேச(க் கவுண்ட)ர் இயற்றிய ‘நியாயக் களஞ்சியம்’ என்ற அரிய நூலை முழுவதுமாக வாசித்தால், இதில் பொதிந்துள்ள அளவையியல் நியாயம் ‘பொறி தட்டியது போல’ப் புலனாகும். இவ்வாறு ஆழ்ந்தகன்ற நுட்பத்துடன் பாடிய கம்பளிச்சட்டைமுனிச் சித்தரின் மற்றொரு அல்லது கடைசிப் பாடலாகப் பதிப்புகள் பலவற்றுள் வந்துள்ள மற்றொரு பாடல் இதோ: “மெளனமென்றீர் எனையாண்ட தட்சிணாமூர்த்தி மலர்பணிந்தே ஞானமது நூறுஞ் சொன்னேன் மெளனமென்ற நாதாக்கள் பதத்தைப்போற்றி வகையோடே நிகண்டாக வாதஞ் சொன்னேன் மெளனமென்றீர் ஞானம்பொய் யென்று சொல்லி வாகான செயமண்டி போட்டே நூற்றில் மெளனமென்ற சமரசத்தான் மக்காள் மக்காள் வாகான ஞானமுறை முற்றுங் காணே” கயிலாயக் கம்பளிச் சட்டைமுனி நாயனாரின் முந்திய பாடல்களுக்கும் இதற்கும் எத்தனை வேறுபாடு? தெரிந்தே செய்தார்களா அல்லது தெரியாமல் செய்துவிட்டார்களா என்று தெரிந்துகொள்ள முடியாத ஓர் அடையாளக் குழப்பம் தமிழகத்தில் நிலவுகிறது. 'சித்தர்' என்பதற்கும் 'சித்த மருத்துவர்' என்பதற்கும் இடையில் அது நிலவுகிறது. சித்தர்கள் இயற்கை மருத்துவர்களாகவோ, தமிழ் மருத்துவர்களாகவோ திகழ்ந்திருக்கலாம்; தம்மைச் சார்ந்த சமூகத்தின் குடும்ப மனிதர்களுக்கு இவ்வகையில் அவர்கள் உதவியிருக்கலாம். சித்த மருத்துவர்களும் ‘ஆயுள்வேத’ மருத்துவர்களும் அப்படியல்லாத தொழில்முறை மருத்துவர்கள். அவர்களையும் சித்தர் என்று ஏற்றுக்கொள்வது சரியா? புதுச்சேரியிலுள்ள பிரஞ்சு ஆராய்ச்சி நிறுவன நூலகத்தில் ஒரு பழைய நூல் உள்ளது. அதன் பெயர் “சித்தர் களஞ்சியம்.” குடந்தை பரஞ்சோதி மருத்துவசாலை பொன்னம்பலனார் (K.S. பொன்னம்பலம் என்றுள்ளது) இயற்றியது. ‘பாரம்’(form) என்பது எட்டுப் பக்கங்களாக இருந்த காலத்தில் அச்சிடப்பெற்றது. அந்நூலுக்கான மதிப்புரை, ‘பார்த்துரை’ என்ற பெயரில் உள்ளது. வழங்கியவர் ‘யதார்த்தவசனி’ இதழாசிரியர் டி.வி. கோவிந்தசாமிப் பிள்ளை அவர்கள். அந்தப் ‘பார்த்துரை’யின் பகுதி: “கும்பகோணம் வைத்திய இரத்தினம் எனும் நற்பெயர் படைத்த ஆயுள்வேத பண்டித சிகாமணியாகிய மகா-ள-ள-ஸ்ரீ பொன்னம்பல பண்டிதர் பிரசுரம் செய்துள்ள “சித்தர் களஞ்சியம்” என்னும் நன்னாமம்பூண்ட நூல்பிரதி ஒன்றை நாம் பார்வையிட்டோம். சகல சித்திகளையும் அடைபவர் சித்தர் எனினும் ஆயுள்வேதியர்க்கு சித்தர்நூல் இன்றியமையாத துணைக்கருவியாகும்...” மேலே சாய்வெழுத்தில் வந்த பகுதி, சித்தர்நூலைத் துணைக்கருவி என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. “சித்தர் களஞ்சியம்” நூலிலோ யோகமுறைகளும் ஆசனமுறைகளும் மருத்துவ முறைகளுமே உள்ளன. ‘காப்பு நேரிசை வெண்பா,’ ‘விநாயகர் துதி,’ ‘பரமசிவ வணக்கம்,’ ‘அம்பிகை தோத்திரம்” என்று தொடங்கி, ‘சித்தர்கள் தோத்திரம்” கட்டளைக் கலித்துறையில் படைக்கப்பெற்று, ‘வழிபடு குருவணக்கம்,’ ‘குருவணக்கம்,’ ‘அவையடக்கம்,’ ‘சரிதை’[சரியை], ‘கிரியை,’ ‘யோகம்,’ என்ற தலைப்புகளில் பாயிரம் அமைந்து, ‘அதிகாரியின் இலக்கணம்’[யோகம் செய்யும் அதிகாரம் பெற்றவர்] என்று நூலே ஐந்தாம் பக்கத்தில்தான் தொடங்குகிறது. இந்தப் பக்கங்களுக்கு முன் ரோமன் எழுத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ள பதினாறு பக்கங்கள் நூலைப் பற்றியவை. அவற்றுள் கடைசி மூன்று, ‘விஷயசூசிகா’ என்னும் பொருளடக்கம். எழுபத்தாறு தலைப்புகளில் நூல் அமைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் யோகம் பற்றியும் மருத்துவம் பற்றியும்தான்... இத்தோடு போய்விடவில்லை. சித்தர் பாடல்களுள் கலப்படமும் இடைச்செருகல்களும் ஏராளமாய் நடந்தேறியுள்ளன. அண்மையில் வாழ்ந்தவரும் வாழ்ந்துகொண்டிருப்பவரும் கூட,சித்தர் பாடல்களைப்போல் தாமே எழுதிச் சேர்த்திருக்கிறார்கள். உலோகாயதச் சித்தர், தடங்கண் சித்தர் போன்ற பெயர்களில் சித்தர் பாடல்கள் தொகுப்பில் அவர்களின் பாடல்கள் உள்ளதுடன், மிகச் சிறந்த ஆய்வாளர்களும் அவற்றை நம்பி மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். சித்தர்களின் பின்புலமோ கருத்தியலோ அறிய அவர்களின் பதிவுகளை நேர்மையுடன் தொகுத்துப் பதிப்பித்தல் வேண்டும். தவிர, திரு த. கோவேந்தன் இரா.இளங்குமரன் போன்ற பதிப்பாசிரியர்களும் சித்தர் பாடல்களின் எழுத்துப் பிழைகள் நீக்கி யாப்பைச் செம்மைப்படுத்துவதில் ஈடுபட்டனரே தவிர பாடல் தொகுப்பை வரிசைப்படுத்துவதில் ஆர்வம் காட்டியதாகவோ முயன்றதாகவோ தெரியவில்லை...ஒருவர் பதிப்பில் பாடல் எண்ணிக்கை கூடியுள்ளதற்கும் மற்றவர் பதிப்பில் குறைந்துள்ளதற்கும் யாரும் காரணம் காட்டவில்லை.(முனைவர் க.நாராயணன், சித்தர் சிவவாக்கியர், 2003. ப.63) தமிழ்நாட்டு சூஃபியர்களின் தொண்ணூற்றிரண்டு 'வகைமாதிரி'க் கவிதைகள், 'இறைவனும் பிரபஞ்சமும்' நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. (தேசமானிய, டாக்டர். ஏ.எம். முஹம்மத் சஹாப்தீன், இறைவனும் பிரபஞ்சமும், கொழும்பு-7. 1995.) பொதுவாக, சித்தர்களும் சூஃபியர்களும் - 1. மதங்கள் மனிதர்களுக்கிடையே பிளவுகள் ஏற்படுத்தாமல் தலையிட்டு, மக்களை ஒற்றுமைப்படுத்தினார்கள். "..இலங்கை இந்திய கலாசாரப் பின்னணியின் மூலம் சூஃபி ஞான வளர்ச்சியில் இன்னொரு திருப்பத்தையும் காண்கிறோம். பற்பல இடங்களிலும் சூஃபிஞானியர்களுக்கு ஸியாரங்கள் கட்டப்பட்டும் அவர்களின் நினைவுதினம் கொண்டாடப்பட்டும் வருவதை அறிகின்றோம். இவ்வரிசையில் மிகவும் கீர்த்தி பெற்று விளங்குவது மாணிக்கப்பூர் தந்த மகாமேதை மீரா சாஹிப் ஆண்டகை அவர்களுடைய இடமாகும். இந்து, கிறிஸ்த்துவ, இஸ்லாமிய சகோதரர்களனைவரும், அங்கு சென்று, அன்னாரை நினைவு கூர்வதைக் காண்கிறோம்."(தேசமானிய டாக்டர் ஏ.எம்.முஹம்மத் சஹாப்தீன், இறைவனும் பிரபஞ்சமும், கொழும்பு, 1995. ப.97) 2. பல்வேறு நுட்பமான முறைகளைப் பின்பற்றி, உட்சமயங்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டும் தனித்தனிக் கடவுளரைக் கற்பித்துக்கொண்டும் மக்கள் அஞ்ஞானத்தில் அழுந்துவதைத் தடுத்தார்கள். 3. பக்தியின் பெயரால் மக்கள் மனங்களில் ஏற்பட்ட உருவ வழிபாட்டு முறைகளையும் புறச் சடங்குகளையும், போலிவாழ்வையும் மூடப் பழக்கங்களையும் களைந்து அறிவார்ந்த ஆன்மிக வாழ்விற்கு வழிகாட்டினார்கள்.(முனைவர் க.நாராயணன், சித்தர் சிவவாக்கியர், 2003. ப.67) 4. குறிப்பாக, எவ்வாறு கலப்புத் திருமணங்களால் சாதிமுறை ஆட்டங்காணுமோ, அவ்வாறு சித்தர் பீடங்களைப் பின்பற்றிய மக்களிடத்தில் சாதிவேற்றுமை மதிப்புப் பெறாதவாறு பாதுகாத்தார்கள். 5. உடைமைச் சமூகத்தில் இல்லாரும் வாழ வேண்டி, நிலையாமைகள் பலவற்றைத் தம் எளிய - தெளிவான - நேரடியான பாடல்களால் உணர்த்தி, உடைமை/சொத்துக் குவிப்பவர்களின் 'வேக'த்தை மட்டுப்படுத்தினர். "ஊனாகி ஊனினுயி ராகியெவ் வுலகுமாய் ஒன்றா யிரண்டு மாகி உள்ளாகி வெளியாகி யொளியாகி யிருளாகி ஊருடன் பேருமா கிக் கானாகி மலையாகிவளைகடலு மாகியலை கானக விலங்கு மாகிக் கங்குல்பக லாகிமதி யாகிரவி யாகிவெளி கண்டபொரு ளெவையு மாகி நானாகி நீயாகி அவனாகி அவளாகி நாதமொடு பூத மாகி நாடுமொளி புரியஅடி யேனுமுமை நம்பினேன் நன்மைசெய் தாளு தற்கே வானோரும் அடிபணித லுள்ளநீர் பின்தொடர வள்ளல் இற சூல்வரு கவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண் மணியே முகியித் தீனே" என்ற பாடல் குணங்குடி மஸ்தான் ஸாஹிபு அவர்கள் பாடியது. சித்தர் திருமூலர் பாடியவை பின்வருமாறு: "புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப் புகுந்துநின் றான்புகழ் வாய்இதழ் வாகிப் புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப் புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே தானே திசையொடு தேவரு மாய்நிற்குந் தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந் தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந் தானே உலகில் தலைவனு மாமே உடலாய் உயிராய் உலகமே தாகிக் கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய் இடையாய் உலப்பிலி எங்குந் தானாகி அடையார் பெருவழி அண்ணல் நின்றானே" திருமூலரின் பாடற்பொருளை மஸ்தான் சாஹிபு அவர்களின் பாடற்பொருளோடு ஒப்பு நோக்கினால்(இறைவனும் பிரபஞ்சமும், ப.147) தமிழ்நாட்டுச் சித்தர்களும் சூஃபியர்களும் எத்தகைய புரிந்துணர்வுடன் தாங்களும் வாழ்ந்து மக்களையும் நெறிப்படுத்தினார்கள் என்பது தெளிவாகப் புரியும். ******** karuppannan.pasupathy@gmail.com திண்ணை.காம் வலையேட்டில் அக்டோபர் 09, 2008 வியாழக் கிழமையன்று 'அரசியலும் சமூகமும்' என்ற தலைப்பின்கீழ் வெளியிடப்பெற்றது.