6.12.12

தொல்காப்பியர் விருது பெற்ற வில்லியனூர் கலைமாமணி புலவர் ந. வேங்கடேசனின் ஆய்வுப் பணிகள்

கண்டுபிடிப்புகள்
தினமணியில் வெளிவந்தவை
07.07.1978 ஆழியூர் சோழர் கால கல்வெட்டு
26.09.1978 சேஷங்கனூரில் பாண்டியர் கல்வெட்டு
11.02.1979 காரைக்கால் வட்டத்தில் சோழர் கால கல்வெட்டு
.04.1979 வில்லியனூர் கல்வெட்டு

தினமலரில் வெளிவந்தவை
11.05.1982 கீழ்வாலை ஓவியம் கண்டுபிடிப்பு
04.04.1984 பறையம்பட்டு வட்டெழுத்து கண்டுபிடிப்பு
24.11.1992 பல்லவர் சோழர் நடுகற்கள் கண்டுபிடிப்பு
15.12.1992 செஞ்சி அருகே பல்லவர் காலச் சிறப்புகள்
18.12.1992 நடுகற்கள் கண்டுபிடிப்பு
29.11.1999 விழுப்புரம் அருகே முற்கால பல்லவ சிற்பங்கள் கண்டுபிடிப்பு

தமிழ்நாடு நாளிதழில் வெளிவந்த கட்டுரை
1967இல் கல்வி

தினமணி சுடரில் கட்டுரைகள்
19.11.1978 ஆழியூர் பூஞ்சோலையுடையார்
18.03.1979 மரக்காணம் பூமிசுவரமுடையார்
10.06.1979 வில்லியநல்லூர் திருக்காமீச்சுரம்
14.01.1989 குன்றுடைய மகாதேவர்

தினமணி கதிரில் வெளிவந்தவை
02.10.1983 மேல்சாத்தமங்கலத்தில் தொல்லியல் ஆய்வு
03.11.1985 வாஞ்சிக்குப் பயிற்சி தந்தவர்
23.02.1992 சுதந்திரப்போராட்டத்தில் புதுவையின் பங்கு
07.01.1996 புதுச்சேரி ஆயி நினைவுச் சின்னம்

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் [புதுச்சேரி]
நான்காவது தமிழ் மொழியியற் கருத்தரங்கம்
மாநாடு: 1994 உரை மற்றும் கட்டுரை
புதுவை மாநிலக் கல்வெட்டுத் தமிழ்

பாக்கியலஷ்மி மாத இதழில் கட்டுரை
1962இல் அருமைத் தங்கைக்கு

திருமால் மாத இதழில் கட்டுரை
பிப்ரவரி 1989 எழிலிழந்த எண்ணாயிரம்
ஆகஸ்டு 1991 குந்தவை விண்ணகர் ஆழ்வார்கோயில்
செப்டம்பர் 1992 கல்வெட்டுகளில் திருமால் திருப்பதிகள்
அக்டோபர் 1992 கல்வெட்டுகளில் திருமால் திருப்பதிகள்
நவம்பர் 1992 கல்வெட்டுகளில் திருமால் திருப்பதிகள்
பிப்ரவரி 1993 தண்சேறை எம்பெருமான்
மார்ச்சு 1993 திருமால் திருப்பதி கல்வெட்டுகளில் - கல்லூரிகள்
மே 1993 வரலாற்றில் ஸ்ரீஇராமாநுசர்
சூன் 1993 வரலாற்றில் ஸ்ரீஇராமாநுசர்
சூலை 1993 வரலாற்றில் ஸ்ரீஇராமாநுசர்
மார்ச்சு 1994 திருமலை கல்வெட்டுகளில் அரிய செய்திகள்
ஏப்ரல் 1994 திருமலை கல்வெட்டுகளில் அரிய செய்திகள்
பிப்ரவரி 2000 வீரநாராயண விண்ணகரும் இராஜராஜ விண்ணகரும்
மார்ச்சு 2000 கல்வெட்டுகளில் திருவாய்மொழி
பிப்ரவரி 2001 சயாமில் அவனி நாரணன்

முக்குடை - திங்கள் இதழில்
நவம்பர் 1997 ஆறகளூர் சமணச் சிற்பம்
திசம்பர் 2000 தாதாபுரத்து குந்தவை ஜினாலயம்

புதுமை - திங்களிதழில்
சூன் 1990 கல்வெட்டில் சமுதாயப்பணி
திசம்பர் 1992 புதுவை மாநிலக் கல்வெட்டில் நாணயம்
திசம்பர் 1996 புதுவை மாநிலக் கல்வெட்டில் ஆரியக்கூத்து

ஆண்டிதழ் - புதுச்சேரி வரலாற்றுக் கழகம்
31.12.1980 வரலாற்றுச்சுவடுகள் ஆழியூரில் ஒரு ஆய்வுப்பணி

வெல்லும் தூய தமிழில் சூலை 1995
கல்வெட்டு காட்டும் வரிகள்

புதுச்சேரி ஸ்ரீமத் இராமாநுச நாவலர் சுவாமிகள் மன்றம் - சிறப்பு மலரில்
30.07.1988
10.07.1998
கல்வெட்டில் திருமால் திருப்பதிகள்

ஸ்ரீ திரிபுர சுந்தரி சமேத ஸ்ரீவேதபுரீஸ்வரர் திருக்கோயில் - புதுச்சேரி
குடமுழுக்கு விழா மலர் 06.08.1999 கள ஆய்வும் - சிவன்கோயில்களும்

தொகுப்பு நூல்களில்
சனவரி 1980 வரலாற்றுக் களஞ்சியம்
நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்

அறிவுலகின் குருதேவர் சனவரி 1981
பல்கலைச்செல்வர்
சங்கநூல் ஆய்வும் - பி.எல்.சாமியும் - சூலை 1999
வான் கலந்த நுண்மாண் நுழைபுலம்!

புதுச்சேரி - பல்கலைக்கழக வெளியீடு
ஆனந்ததரங்கர் காலத் தமிழ்ச் சமுதாயம்
மார்ச்சு 1997 வணிகவியற் செய்திகள் 1, 2.

தமிழோசை இதழில்
17.03.2008 கல்வெட்டுகளில் திருமுறை ஓதுதல்
02.05.2008 திருவிண்ணகரங்கள் கல்வெட்டுகளில் திருவாய்மொழி விண்ணப்பித்தல்

ஆனந்தரங்கம் 1999
நாட்குறிப்பில் வணிக நிலை 1, 2
எழுதிய நூல்கள்
1. பண்பும் பயனும் ஆகஸ்ட் 1978 பிப்ரவரி 2002
2. வரலாற்றில் வில்லியனூர் சூன் 1979 சூன் 2001
3. வரலாற்றுச் சின்னங்கள் ஆகஸ்ட் 1982
4. பல்லவன் கண்ட பனைமலைக் கோயில் சனவரி 1990
5. வரலாற்றில் அரிக்கமேடு திசம்பர் 1990
6. கல்வெட்டுகளில் புதுமை மாநில ஊர்ப் பெயர்கள் திசம்பர் 1991
7. கல்வெட்டுகளில் அரிய செய்திகள் திசம்பர் 1992
8. புதுவை மாநிலக் கல்வெட்டுகளில் நாடும் வளநாடும் திசம்பர் 1993
9. வரலாற்றில் ஆரிய வைசியர் மே 1993
10. கல்வெட்டுகளில் திருமால் திருப்பதிகள் திசம்பர் 1994
11. கல்வெட்டுகளில் காரைக்கால் பகுதிகள் திசம்பர் 2000
12. கல்வெட்டுகளில் நீர்நிலைகளும் வரிகளும் திசம்பர் 2000
13. வரலாற்றில் திரிபுவனை திசம்பர் 2002
14. வரலாற்றில் திருவண்டார் கோயில் திசம்பர் 2003
15. வரலாற்றில் மதகடிப்பட்டு 2003 தொல்காப்பியர் விருது நூல்.
16. நடுநாட்டில் சமணம் 2004
17. தேவாரத்தில் இசைக் கருவிகள் 2005
18. புதுச்சேரி மாநிலச் செப்பேடுகள் 2009
19. கல்வெட்டுகளில் சில வரலாறுகள் 2009
20. பொன் பரப்பின வாண கோவரையர் 2006

புதுச்சேரி வானொலி நிலையத்தில் உரையாற்றியமை
13.10.1978 புறநானூற்றில் உழவு
26.10.1979 புதுவை மாநிலக் கல்வெட்டுகளில் ஊரும் பேரும்
04.01.1980 சோழ பாண்டியபுரம் கல்வெட்டுகள்
1981 பாண்டியக் கோவை
23.04.1985 இடுக்கண் வருங்கால் நகுக
30.04.1985 உயர்ந்த நோக்கங்கள் உயர்ந்த உள்ளங்களை அமைக்கின்றன
07.05.1985 ஒரு மனிதனின் தலை சிறந்த நண்பர்கள்
02.08.1986 திரு.வி.க. சிந்தனைகள்
16.09.1986 குறள்நெறி - இரவு அதிகாரம்
10.10.1987 அரிக்கமேடு உரையாடல்
09.09.1992 தமிழ்வளர்ச்சிக்கு வரலாற்று ஆசிரியர்களின் கொடை
16.09.1992 தமிழ் வளர்ச்சிக்கும் கல்வெட்டாய்வாளர் கொடை
23.09.1992 தமிழ் வளர்ச்சிக்குப் பத்திரிகை ஆசிரியர் கொடை
20.06.1993 பக்தி இலக்கியத்தில் வரலாற்றுச் சிந்தனைகள்
23.09.1993 புதுவையின் வரலாற்றுச் சின்னங்களும் பண்பாட்டுப் பாரம்பரியமும்
30.11.2004 திருமூலரின் சிந்தனைகள்
07.12.2004 திருமூலரின் சிந்தனைகள்
14.12.2004 திருமூலரின் சிந்தனைகள்
10.2006 கல்வெட்டில் அரிய செய்திகள்

புதுச்சேரி தொலைக்காட்சியில்
வில்லியனூர் - கோயில்கள்
திருபுவனை - பற்றிய
பாகூர் - நிகழ்ச்சிகள்

சன் தொலைக்காட்சியில்
வணக்கம் தமிழகம் 10.04.2006

மக்கள் தொலைக்காட்சியில்
“ஊர்மனம்” ஐம்பது தொடர்கள்

நிகழ்த்திய - கருத்தரங்கு நிகழ்ச்சிகள்
04.10.1997 அனைத்துலக திராவிட மொழியியல் கழகம் புதுவை - கல்வெட்டில் சமுதாயப்பணி
09.05.1983 கும்பகோணம் - இராஜகம்பிரன் பெருவிழா கல்வெட்டில் அரிய செய்திகள்
12.08.1984 புதுச்சேரி ஸ்ரீ வைணவ மாநாடு கல்வெட்டில் திருமால் திருப்பதிகள்
06.04.1986 பண்ருட்டி ஸ்ரீ வைணவ மாநாடு வைணவத் திருக்கோயில்
28.07.1991 புதுச்சேரி ஸ்ரீ வைணவ மாநாடு வரலாற்றில் ஸ்ரீ இராமானுஜர்
27.01.1992 புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரி கல்வெட்டுகளில் புதுவைச் சமுதாயம்
20.11.1992 புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம் புதுவைக் கல்வெட்டுகளில் சமுதாயப்
பண்பாட்டுத் தரவுகள்
30.03.1992 ஆனந்தரங்கர் அறக்கட்டளைச் சொற்பொழிவு வணிகவியற் செய்திகள்
22.05.1994 புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம் புதுவை கல்வெட்டில் கல்வெட்டுத்தமிழ்

திருச்சிற்பல்பலம் சைவ திங்கள் இதழ் துணை ஆசிரியர்
அதில் தொடர்ந்து கட்டுரை
தொண்டை நாட்டுத் திருமுறைத் தலங்கள்

புதுவை வானம்பாடி - பல்சுவைத் திங்கள் இதழில்
திசம்பர் 2004 இல் இருந்து தொடர்ந்து
“சிலைகள் சொல்லும் வரலாறு”

தஞ்சைப் பல்கலைக்கழகம் - தமிழகத் தொல்லியல் கழகம்
“ஆவணம்” ஆண்டு இதழ்
2002 வாகூர் பற்றிய கல்வெட்டுகள்
2003 இராம்பாக்கம் கல்வெட்டுகள்
2004 பாக்கம் கல்வெட்டுகள்
2005 தாதாபுரம் மாணிக்கேஸ்வரம் கல்வெட்டுகள்

திருப்பனந்தாள் காசித்திருமடமும் களம்பூர் கோவிந்தசாமி அடிகளார் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய திருநாவுக்கரசர் ஆய்வு மாநாட்டில் காசிக்குச் சென்று கட்டுரைப் படித்தது.

2003 ஆய்வு மலரில் “நாவுக்கரசரில் இசைக்கருவிகள்”,
திசம்பர் 2005 இல் “சுந்தரர் ஆய்வு மாநாட்டில்”
“சுந்தரர் தேவாரத்தில் இசைக்கருவிகள்” கட்டுரைகள் அளித்துள்ளேன்.

மே-2005 ரிஷிகேசத்தில் நடந்த தமிழ் உணர்த்தும் பக்தி மாநாட்டில் கலந்து கொண்டு
“கல்வெட்டு உணர்த்தும் பக்தி”
எனும் கட்டுரையை அளித்துள்ளேன்.

நவம்பர் - 2006
திருப்பனந்தாள் காசித்திருமடம்: மாணிக்க வாசகர் காலம்

தொகுப்பு நூல்கள்:
சங்க நூலாய்வும் சாமியும் 1999
அறிஞர் பி.எல். சாமியின் ஆய்வுக் கட்டுரைகள் 2002.
பன்னாட்டு - தமிழர் - காசியில் ஆகஸ்ட் 2012 நடந்த சைவமாநாட்டில்
“கல்வெட்டில் திருமுறை விண்ணப்பம் செய்தல்” கட்டுரை அளித்தல்.

இப் பதிவில் சேர்க்கவும்:

அண்மை நூல்: ‘விண்ணகரக் கல்வெட்டுகளில் அரிய செய்திகள்’ - வில்லியனூர்ப்புலவர் ந. வேங்கடேசன்.
பக்கங்கள் 104. உருபா 65. திருமுடி பதிப்பகம். 40 கிழக்குச் சந்நதி தெரு, வில்லியனூர், புதுச்சேரி 605 110.
புலவரின் கைப்பேசி: 94420 66599

தொல்காப்பியர் விருது பெற்ற வில்லியனூர் - கலைமாமணி புலவர் ந. வேங்கடேசன் அவர்கள்

25.11.12

தெளிதமிழ் அன்பர்கட்கு மீண்டும் வேண்டுகோள்! - பேரா. ம.இலெ.தங்கப்பா

தெளிதமிழ் அன்பர்கட்கு மீண்டும் வேண்டுகோள்

தெளிதமிழ் உறுப்பினர் மிகக் குறைந்த எண்ணிக்கையினராகவே உள்ளனர். ஆண்டு உறுப்பினர் கட்டண மொத்தத் தொகையும் கூட இதழ் அச்சிடும் செலவில் நான்கில் ஒரு பங்கு கூட இல்லை. அவ்வப்பொழுது கிடைக்கும் நன்கொடையும் வாழ்நாள் உறுப்பினர் கட்டணமுமே இதழைத் தூக்கி நிறுத்துகின்றன. அவையும் அருகிவருவதால் இதழ்ச் செலவைச் சரிக்கட்டுவது மிகுந்த இடர்ப்பாடுடையதாக உள்ளது.

உறுப்பினர் சிலர் ஆண்டுக்கணக்காகக் கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். நினைவூட்டு மடல் எழுதியும் பலர் குறித்தகாலத்தில் கட்டணம் விடுப்பதில்லை. மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றோம். இனியேனும் செவிசாய்த்துக் குறித்த காலத்தில் கட்டணம் விடுக்கவும் நிலுவையைச் சரி செய்யவும் வேண்டுகின்றோம். மேலும் இக்காலப் பொருள் புழக்கம், வருவாய் நிலைகளில் உரூபா. 1500 என்பது பெருந்தொகை அன்று. ஆண்டுறுப்பினாராயிருக்கும் பலர் வாய்நாள் அல்லது புரப்புக் கட்டணம் உரூ.1500 செலுத்துமளவு பொருள் வளம் கொண்டிருப்பர் என்பதை அறிவோம். கல்லூரி விரிவுரையாளராகவும் உயர் பள்ளி ஆசிரியராகவும் இருக்கும் உறுப்பினர் நினைத்தால் மிக எளிதில் தங்களைத் தெளிதமிழின் புரப்போர் ஆக்கிக் கொள்ளலாம். அல்லது நன் கொடையாகவேனும் வழங்கலாம். ஏற்கெனவே வாழ்நாள் கட்டணம் செலுத்தி ஐந்தாண்டுகளேனும் கழிந்தவர்கள் இன்றைய விலைவாசி ஏற்றத்தை உளங்கொண்டு பணம் செலுத்திம் புரப்போராகிக் கொள்ளவும் வேண்டுகின்றோம். தெளிதமிழ் இதழின் பணியைப் பாராட்டி எழுதும் உறுப்பினர்கள் தங்களை வாழ்நாள் உறுப்பினர் அல்லது புரப்போர் ஆக்கிக் கொள்ளலாமே. தங்கள் நண்பர் சிலரையும் உறுப்பினராக்கலாம். இதழ் நடத்த வியலாத நிலை ஏற்படுமுன் அன்பர்கள் போர்க்கால அடிப்படையில் இயங்கி இதழ் தொடர்ந்து வெளிவர உதவுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
- (ஆ.ர்)

தெளிதமிழ் திங்கள் இதழ் TELI TAMIZH - TAMIL MONTHLY
ஆசிரியர்: பேரா.ம.இலெ. தங்கப்பா
தி.ஆ. 2043, நளி க 16/11/2012 ப-31.

படத்துக்கு நன்றி; nakkheeran.in

23.11.12

மறைந்த மெய்த்தமிழாசான் இலக்கணச் சுடர் முனைவர் இரா. திருமுருகன் அவர்களின் பாடல் பகுதி (நன்றி: திரு ம.இலெ. தங்கப்பா ஐயா)

சிறந்த பத்து

அழிவதும் ஆவதும் அவ்வூழ்ப் பயன்என்று
ஒழிதலின் சிறந்தது ஊக்கம் உடைமை.
இறைவனின் உண்மையை இன்மையை வாய்கிழிந்து
அறைதலின் சிறந்தது அறத்தின் வழிப்படல்.
நீற்றினை மண்ணினை நெற்றியிற் காட்டியே
மாற்றலின் சிறந்தது மனத்தின் தூய்மை
நாடிய நலம்பெற நாள்தொறும் கோயிலுக்கு
ஓடலின் சிறந்தது உழைப்பினைப் போற்றல்
பலபல துறைகளில் பலபல கற்றிட
அலைதலின் சிறந்தது ஆழ்ந்தொன்று கற்றல்
பொய்த்துறைச் சோதிடம் போற்றிச் செயல்ஒழிந்து
எய்த்தலின் சிறந்தது எண்ணித் துணிதல்
கொடை, மிகு செல்வம், கூர்மதி, கலைஇவை
உடைமையின் சிறந்தது ஒழுக்கம் உடைமை
நாத்தழும்பு ஏறிட நயங்கெழு சொல்தொடுத்து
ஆர்த்தலின் சிறந்தது அருங்கருத்து உரைத்தல்
அரும்பொருள் கருத்துஓர் ஆயிரம் பேச
விரும்பலின் சிறந்ததுஓர் வினைதனைச் செய்தல்
பயங்கெழு மதநெறி பாரினில் எமது என...
...................................................................

- முனைவர் இலக்கணச்சுடர் இரா- திருமுருகனார்.
தெளி தமிழ், புதுச்சேரி. தி.ஆ. 2043, நளி க 16-11-2012.
பக்கம் 6.

13.11.12

'வானவில்' நூல்வெளியீட்டு விழாவில் இவ்வலைப்பதிவாசான் பேரா. அ. பசுபதி (தேவமைந்தன்)

இடமிருந்து வலம்:

கலைமாமணி சு.வேல்முருகன், 'வானவில்' ஆசிரியர் ஆர். மணவாளன், கலைமாமணி முனைவர் எ.மு. ராஜன், புதுச்சேரி மாநிலச் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு வ. சபாபதி (எ) கோதண்டராமன், வலைப்பதிவர் பேராசிரியர் அ. பசுபதி (தேவமைந்தன்), முனைவர் க. பஞ்சு, வழக்கறிஞர் ப. தமிழரசன் ஆகியோர்

5.11.12

புதுச்சேரி சுதந்திரம் - நாகரத்தினம் கிருஷ்ணா

கடந்த ஆகஸ்டுமாதம் 16ந்தேதி -2012 அன்று, புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டு 50 ஆண்டுகளாகின்றன.
இந்தியாவின் பிறபகுதிகள் இந்தியக்குடியரசின் கீழ் வந்தபோதும். புதுச்சேரி காரைக்கால் போன்றவை இந்தியாவில் இணைய 15 ஆண்டுகள் காத்திருந்தன. புதுச்சேரியில் சுதந்திரப்போராட்டமென்பது நமத்துப்போனதொரு பட்டாசு.
1962ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ந்தேதி பிரெஞ்சு அரசாங்கமும் நேரு தலமையிலான காங்கிரஸ் அரசாங்கமும் ‘De Jure’ ஒப்பந்தத்தில் கைச்சாற்றிட அதுவரை பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் நான்கும் இந்திய ஆளுகைக்குட்பட்ட தனி மாநிலமாக (அல்லது யூனியன் பிரதேசமாக) உருப்பெற்றது. காங்கிரஸின் முக்கிய தலைவர்களும், அன்றைய ஊடகங்களும் இதனைக் கடுமையாக எதிர்த்தார்கள். அண்டை மாநிலமான தமிழகத்துடன் இணைப்பதுதான் முறையென்றார்கள். பிரெஞ்சு மொழியைக் கற்றிருந்த நேரு அம்மொழிமீதிருந்த காதலால் பிரத்தியேக சலுகைகள்கொண்ட இந்திய யூனியன் பிரதேசமாக புதுச்சேரியை அறிவித்தார். அவர் தயவில் புதுச்சேரி அத்தைக்கு மீசை முளைக்கிறது. கையளவு பிரதேசமான புதுச்சேரி தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருந்தால் அநேகமாக ஒரு பிர்க்காவாகவோ அல்லது அதிகபட்சமாக ஒரு தாலுக்காகவோ வந்திருக்கலாம். இன்றைக்கு ஒரு ஆட்சியர், நான்கு துணை ஆட்சியர், டசன் கணக்கில் தாசில்தார்கள்.. போதாதற்கு ஒரு மந்திரிசபை. கோலி விளையாடியக் கையைத் துடைக்காமற்கூட மந்திரி ஆவதற்கான வாய்ப்புகள் புதுச்சேரியில் அதிகம்.
இந்தியா சுதந்திரம் பெற்றது 1947ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ந்தேதி. ஆனாலும் புதுச்சேரியின் சுதந்திரம் பற்றிய கேள்விகள் அப்போதைக்கு எழவில்லை. பல காரணங்கள் இரண்டு தரப்பிலுமிருந்தன. இங்கே சுதந்திரம் வழங்கினால் பிரான்சு தமது பிறகாலனிகளையும் ஒப்படைத்துவிட்டு வெளியேறவேண்டும். அந்த ஒரு காரனத்திற்காகவே புதுச்சேரியைக் கட்டிக்கொண்டு அழுதது. இந்தியாவிற்கும் புதுச்சேரி அப்படியொன்றும் முக்கியமானதாகத் தோன்றவில்லை. ஒரே ஒரு நூற்பாலை. அதை நம்பியே பெரும்பாலான மக்களின் வாழ்க்கை. தண்ணீர் மின்சாரமென புதுச்சேரியின் அத்தியாவசிய வாழ்க்கை அண்டை மாநிலங்களைச் சார்ந்திருந்தது. ஆங்கிலேயர்களிடம் சுந்தந்திரம் பெற்றபின், நாட்டின் ஒரு பகுதியை அந்நியர்களிடம் விட்டுவைப்பதா என்றதொரு கௌரவப்பிரச்சினையாக காங்கிரஸ் அரசாங்கம் புதுச்சேரியைப் பார்த்ததேயன்றி, மற்றபடி கொடுக்கும்போது கொடுக்கட்டும் என்றே காத்திருந்தார்கள். 1948ல் பிரெஞ்சு அரசாங்கம் ஒரு யோசனையை முன்வைத்தது. பொது வாக்கெடுப்பொன்றிற்கு ஏற்பாடு செய்து பெரும்பாலான மக்கள் விரும்புவதுபோல செய்துவிடலாமென்றது. நேரு அபத்தமாக இந்த யோசனையை ஏற்றுக் கொள்கிறார். சந்திரநாகூரில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் இந்தியாவோடு இணைவதை விரும்புகிறார்கள். விழித்துக்கொண்ட பிரெஞ்சு அரசாங்கம் பிற இடங்களில் வாக்கெடுப்பைத் தள்ளிவைப்பதாக அறிவித்து கடைசிவரை அதனை நடத்தவே இல்லை. இந்திய அரசாங்கமும் ஏன் நிறுத்தினாயென்று கேட்கவில்லை. புதுச்சேரியில் அப்படியொரு வாக்கெடுப்பை நடத்தினால் இந்தியாவிலும் நாளை குறிப்பாக காஷ்மீரில் அதுபோன்றதொரு பிரச்சினையைச் சந்திக்கக்கூடுமென்ற நிலை. ஆக இரு தரப்பிலும் பொது வாக்கெடுப்பிற்கு ஆதரவில்லை. இந்தியா இதையொரு கௌரவப்பிரச்சினையாகக் கருதி பிரெஞ்சு அரசாங்கத்தின் கீழிருந்த புதுச்சேரிக்கு நிர்வாக சிக்கல்களைக் கொடுத்து வந்தது. ஒரு கட்டத்தில் புதுச்சேரி நிர்வாகமே ஸ்தம்பித்து போகும் நிலை. அந்நிலையை எட்டியபோது ஏழாண்டுகள் கடந்திருந்தன.
இந்நிலையில்தான் 1954ம் ஆண்டு மே 7ந்தேதி Dien Bien Phu யுத்தத்தில் வியட்நாமுடன் தோற்று ஜெனீவா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட கையோடு இந்தோசீனாவிலிருந்து பிரெஞ்சுக்காரர்கள் வெளியேறுகிறார்கள் அதே வேளை அல்ஜீரியாவில் காலனிவாசிகள் பிரான்சுடன் ஆயுதப்போரில் இறங்குகிறார்கள். அதன் விளைவாக புதுச்சேரியைக் கைகழுவும் முகாந்திரமாக 1954 ஆண்டு நவம்பர் 1ந்தேதி ‘De Facto’ வில் இரு நாடுகளும் கையொப்பமிடுகின்றன. பிரெஞ்சு அரசாங்கத்தின் பொருளாதாரம், பண்பாட்டு அரசியலுக்கு குந்தகமிருக்கக்கூடாதென்றவகையில் தயாரிக்கப்பட்ட இவ்வொப்பந்தம் காரணமாக அப்போதுமுதலே புதுச்சேரி தாதாக்களின் அரசாங்கமாகிவிட்டது. குபேர் புதுச்சேரி நிர்வாகத்தின் முதல் தாதா. இவர்களுக்கெல்லாம் புதுச்சேரி இந்தியாவில் இணைவதில் துளியும் விருப்பமில்லை. பிரெஞ்சு அரசாங்கத்திற்குத் தலையும் இந்திய அரசாங்கத்திற்கு வாலும் காட்டிவந்த மனிதர்.
‘De Facto’ விலிருந்து ‘De Jour’ ஒப்பந்தத்திற் கைச்சாற்றிட மீண்டும் ஏழாண்டுகளுக்குமேலாக காந்திருந்தார்கள். அதற்கும் புதுச்சேரி தியாகிகளோ, இந்திய அரசாங்கமோ காரணமல்ல. அல்ஜீரியாவில் காலனிமக்களுடன் நடத்திய யுத்தத்தில் மிகக்கடுமையாக தோற்றிருந்த பிரெஞ்சு அரசாங்கம் 1962ம் ஆண்டு ஜூலைமாதம் 16ந்தேதி அல்ஜீரியாவிற்கு சுந்திரத்தை வழங்கவேண்டியதாயிற்று. அதற்கும் ஒரு மாதத்திற்குப் பிறகு பிரெஞ்சு அரசாங்கம் புதுச்சேரியை ஒட்டுமொத்தமாக இந்தியாவசம் ஒப்படைப்பதென தீர்மானித்து 1962ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 16ந்தேதி, புதுச்சேரியை இந்தியாவிடம் தாரைவார்க்கிறார்கள். ஆக உண்மையில் புதுச்சேரி சுதந்திரம்பெற ஒரு வகையில் அல்ஜீரிய மக்களே மூல காரணம். அங்கே இடி இடிக்க இங்கே மழைபெய்தது. புதுச்சேரி சுதந்திரத்திற்கு புதுச்சேரி மக்களோ, நேருவின் காங்கிரஸ் அரசோ காரணமேயல்ல என்பதுதான் உண்மை. அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தமென்று கேட்பார்கள் புதுச்சேரி சுதந்திரத்தைப் பொறுத்தவரை சம்பந்தமிருக்கிறது.
தனிமனிதனாகட்டும் ஒரு நாடாகட்டும் அதன் சிறுமை பெருமைளை அறிய வரலாற்றை புரட்டிப் பார்ப்பது அவசியமாகிறது. கொடுக்கிற விலையைப் பொருத்ததே பண்டங்களின் பெறுமானம் அமைகிறது. புதுச்சேரியின் வரலாற்றின் அடிப்படையில் ஒரு நாவலை அதன் வரலாற்றை வியந்தோதும் வகைமையின்றி எழுதும் ஆவலிருக்கிறது.

http://nagarathinamkrishna.wordpress.com/

22.10.12

தனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார் - தேவமைந்தன்

தொண்ணூற்று ஐந்து ஆண்டுகள் பெருவாழ்வு வாழ்ந்த பெரியாரின் தனிவாழ்க்கை முப்பந்தைந்து ஆண்டுகளே; பொதுவாழ்க்கை சற்றேறக்குறைய அறுபது ஆண்டுகள். பெரியார்தம் பொதுவாழ்க்கை, ஒப்பரிய போராட்ட வாழ்க்கை.
பெரியாரின் பன்முகத் தொண்டுக்குத் தொடக்கம் எது? தலைசிறந்த மனிதாபிமானப் பற்றுதான் அது. மனிதன் எவனே ஆயினும் மனிதனாக சுயமரியாதையுடன் வாழ வேண்டும். மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வு கூடாது. "சமத்துவ மனிதாபிமானப் பெருஞ்சுனையின் இடையறாத ஓட்டமே, பெரியாரின் வாழ்க்கை என்னும் வீர, வெற்றிக்காவியம் ஆகும்" என்று சரியாகச் சொல்லியிருக்கிறார் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள்.
1950ஆம் ஆண்டுவரை, நம் சிற்றூர்களில் மட்டும் அல்லாமல் நகர்ப்புறங்களில் கூட வேனிற் காலத்துத் தண்ணீர்ப் பந்தல்களிலும் - எல்லாக் காலத்தும் சுறுசுறுப்பாக இயங்கும் தேநீர் விடுதிகளிலும் அனைத்துச் சாதிக்காரர்களும் ஒடுக்கப்பட்டவர்களை நடத்திய விதம் மிகவும் கொடுமையானது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தவர் பெரியார். இதற்கு அடிப்படையாக அவர் 'செல்லப் பிள்ளை'யாகவும் 'செல்வர் பிள்ளை'யாகவும் 'கட்டுக்கடங்காத பிள்ளை'யாகவும் வாழ்ந்த இளம்பருவத்திலேயே பட்டறிந்த நிகழ்ச்சிகள் அமைந்தன. "நாம் பலரை இழிவு படுத்த உரிமை கொண்டாடுவதால், சிலர் நம்மை இழிவு படுத்திக் காட்டுகிறார்கள். நாம் யாரையும் இழிவு படுத்தக் கூடாது; நம்மை யாரும் இழிவு படுத்த ஒப்புக் கொள்ளக்கூடாது. அத்தகைய சமத்துவ நிலையே சரியான நிலை" என்று கருதினார் துடுக்குப் பிள்ளை ராமசாமி... கருத்து செயல்பட்டது.
1942ஆம் ஆண்டுவரை, திண்ணைப் பள்ளிகளிலும் 'பிரைமரி ஸ்கூல்' என்று அன்று வழங்கப்பட்ட தொடக்கப் பள்ளிகளிலும் ஒடுக்கப்பட்டவர்களின் பிள்ளைகள் மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்ட சாதியாரின் பிள்ளைகளும் கல்வி கற்பதில் பல பின்னடைவுகளையும் ஏச்சுப் பேச்சுக்களையும் அடைந்து, "நமக்குப் படிப்பே வராது!" என்று இடிந்துபோய் நொந்து வாழ்ந்த நிலையை மாற்றி 'அனைவருக்கும் கல்வி' என்ற இயக்கம் தோன்றக் காரணமாயிருந்தவர் பெரியார்.
"கோயிலுக்குள் நான் ஏன் நுழையக் கூடாது? கோயிலின் கருவறைக்குள் போய் நான் ஏன் கடவுளுக்கு வழிபாடு நிகழ்த்தக் கூடாது?" என்று ஒடுக்கப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டு இன்று நீதிமன்றத்துக்கும் சென்று வழக்காடும் அளவு மானிட உரிமை உணர்வைக் கிளறிவிட்டவர் பெரியார்.
ஏழைத் தொழிலாளர்கள் தங்கள் உழைப்புக்குத் தகுந்த கூலி கேட்கவும் உரிமையற்றுக் கிடந்த நிலையை மாற்றியவர் பெரியார். எல்லாம் தங்கள் தலைவிதி என்று அவர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் குமைந்து கொண்டிருந்த அவலத்தை மாற்றி, "நாட்டு வளங்கள் அனைத்தும் நாட்டிலுள்ள அனைவருக்கும் சொந்தம்!" என்ற உண்மையை 1925ஆம் ஆண்டு முதலே கற்றுத் தந்து சமதர்ம சம உரிமை உணர்வைத் தழைக்கச் செய்தவர் பெரியார்.
'பங்கா' இழுப்பது, எடுபிடி வேலைகள் செய்வது போன்ற கீழ்நிலை வேலைகளைச் செய்யவே நாம் பிறந்திருக்கிறோம் என்று 1946ஆம் ஆண்டுவரையில் தாழ்வு மனப்பான்மையுடன் கிடந்தவர்களுக்கு உணர்ச்சியூட்டி, எழுத்தர் பணி முதல் உயர்நீதி மன்ற நீதிபதிப் பணி வரையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வந்துசேர வழிவகுத்தவர் பெரியார்.
சமுதாயம், அரசியல், பொருளியல் முதலான துறைகளிலும் நெடுங்காலமாக இழிவைச் சுமத்திவந்தவையான மூடநம்பிக்கைகள், சாதிமதப் பழக்க வழக்கங்கள், உரிமை - உடைமை - வாய்ப்புப் பெறுவதில் பேதங்கள் ஆகியவற்றின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்தார் பெரியார். கல்லடிகளுக்கும் சொல்லடிகளுக்கும் கிஞ்சிற்றேனும் அஞ்சாமல் ஒவ்வொரு நாளும் எழுத்தாலும் பேச்சாலும் அவற்றை எடுத்துரைத்தார். வாயில்லாப் பூச்சிகளாகவும் மரத்துவிட்ட மனமுள்ளவர்களாகவும் இருந்தவர்களை மானம் மிகுந்தவர்களாக மாற்றிக் காட்டினார் பெரியார்.
அரசியல் சமவுரிமையைப் பெரியார் மிகவும் வற்புறுத்தினார். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது அந்த அந்த மதத்தவரின் - அந்த அந்த அந்தச் சாதியினரின் எண்ணிக்கை விகிதாச்சாரப்படி, அரசியல் பதவிகள் - அரசுப் பணிகள் - தொழில்துறை ஆகிய எல்லாத் துறைகளிலும் வரவேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினார்.
பெரியாரின் வார்த்தைகளாலேயே சொல்வதானால் "பேதமும் கவலையும் ஒழிந்த சமதர்ம சமுதாய அமைப்பை உருவாக்குவதுதான்" அவர்தம் இறுதியானதும் உறுதியானதுமான முதல்நிலைக் குறிக்கோள் ஆகும். அதற்கு உதவாதவற்றை ஒதுக்கித் தள்ளவே முனைந்தார் அவர். இயக்க ரீதியில் மக்களை அணுகிச் செயல்புரிவது ஒன்று மட்டுமே செயல் வடிவம் என்று அறிவுறுத்தியவர் பெரியார். அப்படித் தம் குறிக்கோளுக்குச் செயல்வடிவம் தரும் பொருட்டு - உட்சாதி ஒழிப்பு, வருண ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெருளாதார பேத ஒழிப்பு, அரசியல் அலுவல் துறையில் நிலவும் மேற்சாதி ஆதிக்க ஒழிப்பு ஆகியவற்றுக்கான செயல் வடிவிலான திட்டங்களை அமைப்பு ரீதியாக நடைமுறைப்படுத்திட உரிய பணிகளை மேற்கொள்ளுவதையே பெரியார் வற்புறுத்தினார்.
'எப்படிப்பட்ட மனிதன் உயர்ந்தவன்?' என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டு பெரியார் கூறினார்: "பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் -- ரிசர்வ் பேங்கைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் -- பெரிய 'லைப்ரெரி'யைத்தான் மதிக்க வேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் -- 'என்சைக்ளோபீடியா', 'ரேடியோ' ஆகியவற்றை மதிக்க வேண்டும். இப்படியாக அனேகவற்றை, ஜீவனில்லாதவைகளிலும் காணலாம். ஆதலால், நாம் மனிதனை மதிப்பது, பேசுவது, நினைவுறுவது என்பவையெல்லாம் இவைகளை உத்தேசித்து அல்ல........
ஜீவ சுபாவ உணர்ச்சியான -- தன்மை உணர்ச்சியும் தன்னல உணர்ச்சியும் உள்ள மனிதன் இவற்றை (தன்னலத்தை) அலட்சியம் செய்து -- அதாவது தன்னைப் பற்றிய கவலையும், தனது மேல்வாழ்வின் தன்மை என்பதையும் அடியோடு மறந்து, மனித சமுதாய வாழ்வின் மேன்மைக்காகவே மற்ற மனித சீவன்களுக்கு இருக்க முடியாத வசதி என்னும் தன்மை, தொண்டாற்றும் சக்தி ஆகியவை இருக்கின்றன என்று கருதி -- தன்னலத்தையும் தன் மானாபிமானத்தையும் விட்டு எவன் ஒருவன் தொண்டாற்றும் பணியை வாழ்வாகக் கொண்டிருக்கிறானோ, அவன்தான் மற்ற சீவப் பிராணிகளிடமிருந்து வேறுபட்ட மனிதத் தன்மை கொண்ட மனிதனாவான். மனித உரு சீவப் பிராணி என்பதில் எந்த மனிதனை மதிப்பதானாலும், நினைவுநாள் கொண்டாடுவதானாலும் இந்தக் குணத்திற்காகத்தான் இருக்கலாமே ஒழிய வேறொன்றுக்கும் ஆக இருக்க முடியாது." கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சி ஆகிய ஊர்களில் 1945ஆம் ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் பெரியார் இவ்வாறு மொழிந்ததைக் 'குடி அரசு' ஏடு, அதே ஆண்டு ஏப்ரல் மாதம் பதினான்காம் நாள் இவ்வாறு வெளியிட்டது.
மனிதன் முதல் முதலாக மற்றொரு மனிதனுடன் திருத்தமாகத் தொடர்புகொள்ள உருவாக்கிக் கொண்டது மொழி அல்லவா? அப்படி உருவான தமிழின் மேன்மைகள் குறித்து மிகவும் விரிவாகக் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியிலும், சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் விரிவுரைகள் ஆற்றியுள்ளார் பெரியார். தமிழ்மொழி குறித்து அவர் கூறியதாவது: "தமிழ் மிகுதியும் நம் முற்போக்குக்கு ஏற்றபடி செம்மைப்படுத்தப்பட வேண்டும். மக்கள் கற்க மேலும் இலகுவாக்கப்பட வேண்டும். பயனுள்ள பரந்த மொழியாக்கப்பட வேண்டும். "இன்றைய தமிழ் மிகவும் பழைய மொழி, வெகுகாலமாகச் சீர்திருத்தம் செய்யப்படாதது, மற்ற மொழிகளைப் போல திருத்தப்படாதது" என்பதான இவைகள் ஒரு மொழிக்குக் குறையாகுமே தவிர, பெருமையாகாது என்பேன். ஏன்? பழமை எல்லாம் அநேகமாக மாற்றமாகி இருக்கிறது; திருத்தப்பட்டிருக்கிறது. மாற்றுவதும் திருத்துவதும் யாருக்கும் எதற்கும் இழிவாகவோ குற்றமாகவோ, ஆகிவிடாது. மேன்மையடையவும், காலத்தோடு கடந்து செல்லவும், எதையும் மாற்றவும் திருத்தவும் வேண்டும். பிடிவாதமாய்ப் பாட்டி காலத்திய, பண்டைக் காலத்திய பெருமைகளைப் பேசிக்கொண்டிருந்தால், கழிபட்டுப் போவோம்; பின்தங்கிப் போவோம். மொழி என்பது உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். அவ்வப்போது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும்." இவ்வாறு கூறியதோடு விட்டுவிடாமல் திட்டவட்டமான தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை முன்வைத்தார். அதன்படித்தான் இப்பொழுது அச்சகங்களிலும் தட்டெழுத்துப் பொறிகளிலும் கணினிகளிலும் தமிழ் பயன்படுத்தப் பெறுகிறது. கல்வி நிலையங்களிலும் பாடப் புத்தகங்களிலும் பெரியார் வழங்கிய எழுத்துச் சீர்திருத்தமே செயல்பட்டு வருகின்றது.
"பெரியார் செய்த தொண்டுகளில் மிகவும் தலைசிறந்தது பெண்ணடிமை நீக்கப் பாடுபட்டதுதான்" என்று மனோரஞ்சிதம் அம்மையார் 1982ஆம் ஆண்டிலேயே எழுதினார். நம் நாட்டில் பெண்களைத் திருமணம் என்ற பெயரால் அடிமைகள் போல விற்பது முன்பு மிக அதிகமாக இருந்தது. இராகு காலம் சகுனம் பார்ப்பதிலும், நாள் கிழமை பார்த்து நடப்பதிலும், ஒரு ஆண்டில் 108 பண்டிகை கொண்டாடுவதிலும் நம் பெண்களின் தொன்றுதொட்டு வந்த பழக்கங்கள். விரதம் பூஜை புனஸ்காரங்களில் நம் பெண்களுக்கு நிகர் யாருமே இல்லை என்று கூறலாம். அந்நாளில் படிப்பறிவு இல்லாததும், பகுத்தறிந்து பார்க்க இயலாமல் இருந்ததும், சொன்னதைப் பெரியவர்கள் கூறினார்கள் என்றதால் காரணம் கேட்கக் கூடாது என்றெல்லாம் ஆமைகளாக அடங்கிக் கிடக்க நேர்ந்ததும், இயற்கையான பலவீனமும் சேர்ந்து பெண் அடிமையானாள். இந்த நாடு உண்மையிலேயே முன்னேற வேண்டுமென்றால் பெண்ணடிமை தீர வேண்டும் என்று கருதினார். "பெண் ஏன் அடிமையானாள்?" என்று சிந்தித்துக் காரணங்களோடு எடுத்து எழுதினார். நம் பெண்கள் எதையும் சிந்தித்துப் பார்க்கும் திறமை பெற வேண்டும் என்று அயராது முயன்றார். பெண்ணுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று பாடுபட்டார். சமுதாயத்தில் பெண் தலைநிமிர்ந்து நிற்க ஆணும் பெண்ணும் சமமான தகுதி பெற பெண்ணுக்கும் சொத்து பகிர்ந்தளிக்கப் பெறல் வேண்டும் என்று தெளிவாக எடுத்துரைத்தார்.
சீர்திருத்தத் திருமண முறையைக் கொண்டு வந்து சூழ்நிலைகளால் பலிகடா ஆக்கப்பட்ட பெண்கள் மீண்டும் நல்வாழ்வுபெற வழிவகுத்தார். பெண்களைப் பெருமைப்படுத்தும் விதத்தில் 'வாழ்க்கை ஒப்பந்தம்' என்று கொண்டு வந்து திருமணத்தில் பெண்ணடிமையை ஒழித்தார்.
பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளையும் உயர்வு தாழ்வு கற்பிக்காமல் வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பெண்கள் 'நகை மாட்டும் ஸ்டாண்டு'களாக மட்டுமே இருக்கக் கூடாது என்றார். தாய்ப்பாலோடு மூடநம்பிக்கையையும் சேர்த்துக் குழந்தையின் சிந்தனையை நம் தாய்மார்கள் முடப்படுத்தும் போக்கைக் கண்டித்தார். அறிவியல் முறையில் நம் நாடு முன்னேற வேண்டுமென்றால் நம் பெண்கள் பகுத்தறிவு பெற்று சுயமரியாதையுடன் நாட்டிற்குத் தொண்டு செய்யும் வீராங்கனைகளாக விளங்கவேண்டும் என்று திருமண மேடைகள்தோறும் முழங்கினார்.
அவர் முழக்கம் கேட்டு, "பெண்கள் வெளியில் வருவதே தவறு" என்று ஆண்களால் விதிக்கப்பட்ட அந்நாளில், பெரியாருடன் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்ய மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், 'பெரியார்' என்ற பட்டம் தந்த நாராயணி அம்மையார், அலமேலு அப்பாத்துரை அம்மையார் முதலாக எத்தனையோ தாய்மார்கள் முன்வந்தார்கள். இந்தி எதிர்ப்பில் சிறை சென்றார்கள். பெரியார், தான் என்ன சொன்னாரோ அதைத் தம் வாழ்விலும் கடைப்பிடிப்பவர் என்பதற்கேற்ப, தம் துணைவியார் நாகம்மையாரையும் தமக்கை கண்ணம்மாவையும் பின்னாளில் மணியம்மையாரையும் பொதுவாழ்விலும் சுயமரியாதை இயக்கப் பணியிலும் பெரியார் ஈடுபடுத்தினார்.
அந்தக் காலத்திலேயே குடும்பக்கட்டுப்பாட்டையும் அரசுப்பணிகளில் பெண்களுக்குச் சமவாய்ப்புத் தரப்பட வேண்டும் என்பதையும் வற்புறுத்தியவர் பெரியாரே ஆவார். குழந்தைகளைச் சீர்திருத்த முறையில் ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் வளர்த்து ஆளாக்கினால் எதிர்காலத்தில் சாதிப் பாகுபாடு அறவே அழிந்துவிடும் என்று பெண்களுக்கு அறிவுறுத்தினார். பிள்ளைகள் வளர்ந்த பின்பு சுயமரியாதை முறையில்தான் திருமணங்கள் செய்துவைக்க வேண்டும் என்றும் மொழிந்தார்.
மக்கள் அனைவரும் எந்த வகை வேறுபாடும் இன்றித் தன்மானத்துடன் வாழப் பகுத்தறிவிப் பணியை வாழ்நாளெல்லாம் செய்த பெரியார், தனது சுகத்தையே முதலில் புறந்தள்ளினார். வசதியாகச் சாய்வு நாற்காலிகள் - 'சோபா'க்களில் அமர்ந்து கொள்ளுவதையும் தவிர்த்தார். "சுகம் என்ற ஒவ்வொரு பழக்க வழக்கமும் எனக்கு வெறுப்பாகிக் கொண்டும், சுகம் இல்லாவிடில் அதனால் ஒருவிதக் கஷ்டமும் இன்றியும் இருக்கிறது" என்று தெரிவித்தார் பெரியார்.
அவர் வார்த்தைகளையே இங்கு தருகிறேன்.
"சாதாரணமாக நான் 'ஈசிசேரில்' உட்காருவதே கிடையாது....ஏனெனில் நான் முதலாவதாக உட்காரும்பொழுது சாய்ந்துகொண்டு கால்கைகளை நீட்டிக் கொண்டு உட்காருவதுமில்லை. இவையெல்லாம் சுகவாசிகள் அனுபவிக்க வேண்டியவைகள். நான் அப்படிச் சாய்ந்து உட்காரும் சுகம் விரும்புபவன் அல்ல! மேலும் சீட்டில் உட்காரும்போது முழுச் சீட்டில் கூட இல்லாமல் பாதி அளவு மட்டும் சீட்டில் முன் தள்ளி உட்காருவேன். மேலும் என்னுடைய வாழ்நாளில் பெரும்பான்மையும் பிரயாணம்தான் அதிகம் என்ற போதிலும், பிரயாண காலத்தில் அநேகமாய் மோட்டார் வண்டியில் படுப்பதும் இல்லை. இரவு பகலாய்ப் பிரயாணம் செய்ய நேரிட்டாலும் பெரும்பான்மையும் கண் விழித்துக் கொண்டுதான் செல்வேன். ஏதாவது இரவு நேரங்களில் மட்டும் தூங்கும்படியாக மணியம்மையார் வற்புறுத்துவதுண்டு. நானும் அதற்கு ஏதேதோ கூறித் தப்பித்துக் கொள்ளப் பார்த்துவிட்டுக் கடைசியில் பெரிய ரகளை உண்டாகி அதன் பிறகுதான் சிறிது நேரம் படுப்பதுண்டு. ஆனால் அதிகம் தூங்க மாட்டேன் இப்படிப்பட்ட ரகளையின் காரணமாக நானும் மணியம்மையும் ஓரிரண்டு தினங்கள் பேசாமல்கூட வருத்தமாக இருப்போம். இப்படி எனக்கு, 'தூங்குவது என்ற பழக்கம் கூட வெறுப்பாகிவிட்டது! தூங்காமல் இருப்பதால் கஷ்டம் தோன்றுவதே இல்லை. இப்படி சுகம் என்ற ஒவ்வொரு பழக்க வழக்கமும் எனக்கு வெறுப்பாகிக் கொண்டும், சுகம் இல்லாவிடில் அதனால் ஒரு விதக் கஷ்டமும் இன்றியும் இருக்கிறது."
****
உதவிய நூல்கள்(அகர வரிசைப்படி):
ஆனைமுத்து, திருச்சி வே. பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், 3 தொகுதிகள், சிந்தனையாளர் கழகம், திருச்சிராப்பள்ளி-2. 1974.
ஆனைமுத்து, திருச்சி வே. பெரியாரியல், 2 தொகுதிகள், தையல்நாயகி நினைவு நூல் வெளியீட்டகம், புதுச்சேரி-10. 2004.
சுந்தரவடிவேலு, நெ.து. புரட்சியாளர் பெரியார், எஸ். சந்த் அண்டு கம்பெனி லிமிடெட், சென்னை-600 002. 1979.
பெரியார் ஈ.வெ.ரா. எழுத்துச் சீர்திருத்தம், பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீடு, சென்னை-600 007. 1980.
வேலூர் செந்தமிழ்க்கோ. பெரியார் சாதித்ததுதான் என்ன?, அறிவுக்கனல் பதிப்பகம், வேலூர்-632 001. 1983.
karuppannan.pasupathy@gmail.com
http://kalapathy.blogspot.com

நன்றி: திண்ணை.காம் thinnai.com Friday September 14, 2007

21.9.12

தமிழ் மானம் காப்பீர்! -தங்கப்பா

குள்ள மனத் தில்லியர் நம் குடி கெடுத்தார்.

கொலை வெறியர் சிங்களர் நம் இனம் அழித்தார்.

கள்ளமிலா மீனவரைச் சாகடித்தார்.

கண்மூடிக் கிடக்குதடா தில்லிக்கும்பல்.

முள்வேலிக் குள்கொடுமை நிகழ்த்துகின்றார்;

மூத்தகுடி வாழ்நிலத்தைப் பறித்துக் கொள்வார்.

உள்ளுக்குள் குமைகின்றோம்; குமுறுகின்றோம்

உலகறிய நம் எதிர்ப்பை விடுத்தோமில்லை.

நம் குரல்கள் நமக்குள்ளே அடங்கல் நன்றோ?

நம் எதிர்ப்பிங்கு ஒன்றுமிலை என்றே அன்றோ

சிங்களனுக் கிந்நாட்டில் படைப்பயிற்சி

சிரித்துக் கொண் டளிக்கின்றான் தில்லிக்காரன்.

பொங்கி எழுந் திதைத் தடுத்து நிறுத்தல் வேண்டும்.

புரிந்திடுமா தமிழரசு? நடித்தல் செய்யும்.

இங்கிருக்கும் பலகட்சித் தலைவரே நீர்

எழுந்திடுவீர்; வெகுண்டு தமிழ் மானம் காப்பீர்.

(பேரா. ம.இலெ.தங்கப்பா,

ஆசிரியர், ‘தெளிதமிழ்’ திங்கள் இதழ்,

7, 11ஆம் குறுக்குத் தெரு, அவ்வை நகர்,

புதுச்சேரி - 605008. இந்தியா.

தொ.பே.எண்: 0413 - 2252843)

ஒளிப்படத்துக்கு நன்றி: காலச்சுவடு.காம்

31.8.12

பாவலர் தாராபாரதி

வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்...தோல்விகள் ஏதும் உனக்கில்லை - இனித்
தொடுவானம்தான் உன் எல்லை!
-
தாரா பாரதி

படத்துக்கு நன்றி:  palakani.com

பண்டிதை கண்ணம்மாள் அவர்கள்

பண்டிதை கண்ணம்மாள். 14 வயதில் 23வயது மா.இராசமாணிக்கனாரை மணம்புரிந்து வாழ்வாங்கு வாழ்ந்து பெருங்குடும்பியாக இருந்தபோதும் அக்காலத்தில் பெறக்கடினமான 'பண்டிதை' பட்டம் பெற்றவர்.(நன்றி: இரா.கலைக்கோவன். வரலாறு 21 ஆய்விதழ் 2011)

22.8.12

பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனம்,புதுச்சேரி(Institut Francais de Pondichery)

என் முதல் கோயில் தாகூர் கலைக் கல்லூரி என்றால், இரண்டாம் கோயில் புதுச்சேரியிலுள்ள பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனமும் அதில் உள்ள நூலகமும்தான். இங்குதான் அரிய தமிழ் நூல்களை வாசித்திருக்கிறேன். அக்காலத்தில் நூற்கடல் தி.வே.கோபாலய்யர் முதல் இக்காலத்தில் வில்லியனூர் வரலாற்று ஆய்வாளர் வேங்கடேசனார் வரை சந்தித்து உடன் அமர்ந்து வாசிப்பதும் குறிப்பெடுப்பதுமாக உள்ளேன். பழைய திண்ணை.காம் வலையேட்டில், 'தேவமைந்தன்' என்ற என் புனைபெயரில் எழுதிய, பாராட்டுப்பெற்ற அத்தனைக் கட்டுரைகளுக்கும் இப்பொழுது முகநூலில் 'அண்ணன் பசுபதி' பக்கத்தில் இடம்பெற்ற 'பண்டிதை கண்ணம்மாள்' வரையுள்ள குறிப்புகளுக்கும் தரவு கொடுத்துதவியது இந்த நிறுவனத்தின் நூலகமேஇங்கு இணையம் கூடிய கணினி ஏந்து உள்ளமை என்னைப்போன்ற இணைய வலையேட்டெழுத்தாளர்களுக்கு அரிய பேறேயாகும். முகஞ் சுளிக்காமல் எப்பொழுதும் அன்புடன் உதவுகிற நூலக நண்பர்கள் - சூழலியல் நூலகர் திரு ஜி. சரவணனும்(Facebook Public ID: Saravanan Govindaraj) சமூக அறிவியல்கள் நூலகர் திரு கே. இராமானுஜமும் ஆவர். இந்தியவியல் நூலகர் திரு ஆர். நரேந்திரனும் முதன்மை நூலகர் செல்வி அனுரூபா நாயக் அவர்களும் இங்கே குறிப்பிடத் தக்கவர்கள். பிரெஞ்சு இந்தியவியல் ஆய்வாளரும் நூலறிஞருமான திரு கண்ணன், தோற்றத்தில் மிகுந்த இயல்பானவர்; அறிவில் ஆழம் மிகுந்தவர். தன்னை எனக்கு அறிமுகம் செய்து வைத்த, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு நடுவத்தின் பிரெஞ்சுப் பேராசிரியரும் நண்பருமான முனைவர் சு.ஆ.வெங்கடேச சுப்புராய நாயகருடன் பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கேற்று புதுச்சேரிப் பழமொழிகள் குறித்த ஆய்வுரையை ஆங்கிலத்தில் வாசிக்க வைத்து, அதற்கான பெருந்தொகுப்பில் அதை வெளியிடவும் செய்தவர். சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு பெருமைக்குரியது இந்தப் பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனமும் இதன் நூலகமும்.

2.8.12

வள்ளலார் சினம்: பின்புலங்கள் (பேரா.முனைவர் இரா.செல்வக்கணபதி கட்டுரைப்பகுதி)

ஏறத்தாழ ஐம்பது ஆண்டுக்கால வள்ளலார் வாழ்வில், கடைசிப் பதினைந்து ஆண்டுகளில் மாற்றங்கள் தோன்றியுள்ளன. அவர் பாடிய ஆறாம் திருமுறைப் பாடல்களுள் பல, அவரது முன்னைய கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் எதிராக அமைந்தன. சைவ சமயம் வெளிப்படுத்திய உயர்கொள்கை வழி வாழாது, அவற்றுக்கு முரணாக வாழ்ந்த சைவமக்கள் மீது அவர் சினம் கொண்டார். சைவத்தில் சில உயர்சாதிக்காரர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதையும், சைவக் குருக்கள்மார்களும், ஆதீனத் தலைவர்களும், உண்மைச் சைவர்களையும் சாதிவழி மதிப்பிட்டு, மரியாதை வழங்கியதும் அவரைச் சினமடைய வைத்திருக்க வேண்டும். அன்புச் சமயமாகிய சைவத்தில், கடவுள் பெயரால், சிறு தெய்வங்களுக்கு நிகழ்த்தப்பட்டு வந்த உயிர்ப்பலிகளை அவர் வெறுத்தார். புலால் உண்பார் சிவநெறி நிற்பது எங்ஙனம் சாலும் என வினா எழுப்பினார். வாழ்வின் கடைசிப் பகுதியில் சைவத்தைச் சீர்திருத்தும் எண்ணம் செழிக்க மூன்று புதிய அமைப்புகளை உருவாக்கினார்.
     1865-இல் சமரச சன்மார்க்க சங்கம்
     1867-இல் சத்திய தருமச் சாலை
     1872-இல் சத்திய ஞான சபை
என்பன அவரால் உருவாக்கி வைக்கப்பெற்று, நெறிமுறைகளும் அறிவிக்கப் பெற்றன.
[நன்றி: வள்ளலார் கண்ட சாகாக்கலை. கலை 6. வள்ளலார் ஆண்டு – 189/ஆடி/ஜூலை-15-2012 / ஒழுக்கம்-07 பக்கங்கள் 21-22. நன்றி: கடவுள்மங்கல விழாமலர், வடக்குப் பொய்கை நல்லூர்.]
 
19.7.12

'வள்ளலார் கண்ட சாகாக்கலை' வ.ஆ. 189: ஆனி/ஜூன்-15-2012

அறிவியல், மெய்ப்பொருள், சித்தர்தத்துவ, சுத்த சன்மார்க்கத் திங்களிதழ்

வெளியிடுபவர் & ஆசிரியர்: முனைவர் க.நாராயணன், பிஎச்.டி.
சிவகலை இல்லம், 29, நாகாத்தம்மன் கோயில் தெரு, கொட்டுப்பாளையம், இலாசுப்பேட்டை, புதுச்சேரி - 605 008.

16.7.12

சொந்த வேர்கள்

அன்புமிக்க தோழி!
வாழ்க்கைக்குப் பொருள்தான் என்ன;
அவரவர் விளக்கம் தவிர்ப்பாய்!
பிறர்சார்ந்து வாழும்வரை
வாழ்க்கைக்குப் பொருளில்லை!

நமக்காகப் பிறர்முடிவை
எடுக்கு மட்டும்
நம்கையில் நம்வாழ்க்கை
இருப்ப தில்லை

கற்றகல்வி நலம்வீசும்
விழிகளினால் உன்வாழ்வை
எதிர்நோக்கு!

இதுவரை இருந்தஉன்
ரமான விழிமாற்று!

நயமுள்ள கவிதைகள்
நயங்காண எவரையும்
எதிர்பார்க்க மாட்டா!

எதிர்வந்து சுழலும்
வெளிச்ச மெய்ம்மைகள்
வழிகாட்டும் உனக்கு.

பொருளியல் விடுதலைதான்
காலூன்றச் செய்யும்!

தன் சொந்த வேர்களால்
இந்தமண் ஊடுருவி
நிற்பதுவே பேரின்பம்!

பாவலர் தேவமைந்தன் (பேரா.அ.பசுபதி)
புதுச்சேரி
 Thanks to pudhucherry.com editor: Raja Thiayagarajan

மைனாக்களின் சண்டை

ஊருக்குப் போயிருந்தேன்;
ஒருநாட் காலையிலே,
தூக்கம் கலையாமல்,
தோப்பும் துரவுமெலாம்
தாண்டிப் போனேனா?
இடிந்த மதகிருக்கும்;
ஒடிந்த கிளையொன்று
வேம்பில் தொங்குகின்ற
அடிமரம் அருகினிலே
ஆடுகள் மேய்ந்திருக்கும்;
படைக்கால் விழுந்தெழுந்தால்
பாறைகள் கனத்திருக்கும்;
பாறைகள் சூழ்ந்திருக்க
படைக்கால் சருகிருந்து
காடைகள் பறந்தேகும்;
இரட்டைக்கால் பனைமரத்தின்
கருத்துச் சொரசொரத்த
உடலை அணைத்திருக்கும்
மரத்தின் பல்லியொன்றோ
ஏறுவெ யில்அஞ்சாமல்
மோனத் தவமிருக்கும்;
ஆடுகள் ஒவ்வொன்றாய்
தைக்கால் தொறும்நிரவி
தோன்றும் அணைப்பெல்லாம்
மேய்ந்தே திரிவதில்தாம்
ஓயாக் காலிடையே
திடுமென மைனாக்கள்
விழுந்தும் துடித்தெழுந்தும்
கட்டிப் புரண்டுவீழ்ந்தும்
அலகுப் பிச்சுவாளின்
கலகம் சிறகுபுய்க்கச்
சண்டை போடுமுன்பே
சுண்ணத் தெளிவதனை
ஒதுக்கிப் பனங்கள்ளுத்
தெளிவை மிகமாந்திக்
களிப்பால் செருக்குறும்காண்!
ஆடுகளோ சற்றுந்தாம்
அலட்ட லின்றிமேயும்.
வாய்கள் பிளந்திருக்க
ஓயா இரைச்சல்தான்!
ஒன்றின் மேலொன்று
குன்றா மல்பாய்ந்தே
கொடிய போர்புரியும்;
அணைப்பை விட்டின்னோர்
அணைப்பில் விரவியின்னும்
மைனாச் சண்டைதான்
கூட்டம் முழுவதும்
பண்டைக் காலம்போல்
ஒன்றும் மற்றொன்றும்
தனித்துப் போர்புரிந்து
மோதச் சளைக்காதே;
மாந்தர் மகிழலாம்"நாம்
மைனாக் கூட்டம்போல்
இருத்தல் இயற்கைதான்.....
சரிதான்!" என்றே.
புதுச்சேரி - மின்னிதழ்

26.6.12

உலக வழக்கை கற்பனைக்குள் வகைப்படுத்துவது சாத்தியமற்ற
காரியமாக இருக்க, கற்பனைக்குள் உலகத்தைத் திணித்துத் திருப்தி
தேடிக்கொள்வதே நாம் செய்யக்கூடியதாய் இருக்கிறது. கடைசி வரையிலும் நம் முயற்சிகள் அனைத்தும் செருப்புக்குக் காலை வெட்டுகிற காரியமாகத்தான் இருக்கும் போலும்.
- சுந்தர ராமசாமி, ஒரு புளியமரத்தின் கதை(புதினம்), தமிழ்ப் புத்தகாலயம், 3ஆம் பதிப்பு, பிப்.1981.

31.5.12

மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு (பெரியார் இயக்கப் போராளிகள்)

மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு (பெரியார் இயக்கப் போராளிகள்)

‘மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு (பெரியார் இயக்கப் போராளிகள்)’ என்னும் புதிய புத்தகத்தை நண்பர் முனைவர் பெ.நல்லசாமி, எம்.எசி., எம்.ஃபில்., பிஎச்.டி (இணைப்பேராசிரியர், துறைத்தலைவர் - இயற்பியல் துறை, தாகூர் கலைக் கல்லூரி, புதுச்சேரி - 605 008) அவர்கள் அன்பளிப்பாகத் தந்தார். வழக்கமான புத்தகங்களுக்கு வேறுபாடானதாக, தலைப்பாலும் உள்ளடக்கத்தாலும் தென்பட்ட அந்நூலை விருப்பமுடன் பெற்றுக் கொண்டேன்.

புத்தகத்தின் ஆசிரியர் - தமிழ்நாட்டின் திராவிட இயக்கத்தின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்கு தெரிந்த திருச்சி செல்வேந்திரன் அய்யா.

“திருச்சி நகரத்தில் ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த - வசதியான குடும்பத்தைச் சேர்ந்த மிகவும் இளைஞரான தோழர் செல்வேந்திரன் அவர்கள், கண்ணீர்த் துளிக்கட்சியை (தி.மு.க.) விட்டுப் பிரிந்து, நம்முடன் வந்து சேர்ந்துள்ளது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம் - அவரை நான் அன்புடன் வரவேற்கிறேன்” என்று பெரியார் அவர்களால் 1949ஆம் ஆண்டில் இயக்கத்துக்கு வரவேற்கப்பட்டவர்.

திருச்சி செல்வேந்திரன் அய்யா படைத்துள்ள இந்நூல் எப்படிப்பட்டது என்பதை அவருடைய சொற்களிலேயே சொல்வதுதான் பொருத்தம்:

“இது வரலாற்று நூல் அல்ல. அதற்குரிய செய்திகளைச் சேகரிக்கும் வசதி நம்மிடத்தில் இல்லை.
இது வாழ்வியல் நூலுமல்ல. அதை எழுதுவதற்குரிய ‘நெடிய - கொடிய’ அனுபவங்கள் நமக்கில்லை.
இது வழிகாட்டும் நூல். இப்படியும் சில நூல்கள் வரவேண்டுமென்று வழிகாட்டும் நூல்.

இந்த நூல் நெடுகிலேயும் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் திராவிடப் பேரியக்கத்தின் அடிக்கற்களாய் இருந்தவர்கள். அதற்காக தங்கள் வாழ்வை ஈகம் செய்தவர்கள். பதவி மோகம் இல்லாதவர்கள். ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்காதவர்கள்.

இவர்கள் பலரோடு நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். அவர்கள் குடும்ப உறுப்பினர்களோடு பழகியிருக்கிறேன். அவர்களில் ஓரிருவர் மாத்திரம் தான் இப்போது இருக்கிறார்கள். அவர்களில் சிலரோடு நான் இன்றுவரை நட்போடு இருக்கிறேன். சிலர் நண்பர்களாய் இருந்து பின்னர் முரண்பட்டிருக்கிறார்கள். சிலர் என்னோடு ஆழ்ந்த கருத்து மாறுபாடு உடையவர்களாய் இருந்து இப்போது என்னை அன்போடு போற்றுகிறார்கள். இது அவர்களுடைய தவறல்ல. என்னுடைய தவறு. என்னுடைய “சேர்வார் தோஷம்” அவர்களில் பலரை என்னிடமிருந்து அன்னியப்படுத்தியது. அன்றும் இன்றும்.”

திராவிட இயக்கம்போல் இந்திய மக்கள் வாழ்வியலின் எல்லாத் தளங்களிலும் மான அவமானங்களை/கல்லடி சொல்லடிகளை ஏற்று இறங்கிப் போராடிய இயக்கம் வேறுண்டா? அதில் பெரியாருடன் சேர்ந்து உணர்ச்சிக் கொந்தளிப்புடன் உள்வெளிச் செயற்பாடுகளில் ஈடுபட்டுப் போராடியவர்களான மாமனிதர் வக்கீலய்யா தி.பொ. வேதாசலம், அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி, வாழும் வரலாறு திருவாரூர் தங்கராசு, பல்கலைவாணர் பாவலர் பாலசுந்தரம், குமுறிய எரிமலை எம்.கே. குப்தா, மக்கள் தொண்டர் எஸ். பிரான்சிஸ், எனது(திருச்சி செல்வேந்திரனின்) ஆசான் ஈரோடு சுப்பையா, இளம் துருக்கியன் நாகை எஸ்.எஸ். பாட்சா, தஞ்சை மாவட்டத்து மாசேதுங் பாவா, நடமாடிய நூலகம் எஸ்.டி. விவேகி, குழந்தை உள்ளம் படைத்த குடந்தை ஏ.எம். ஜோசப், என்றும் மறக்க இயலாத எளிய தோழன் பட்டுக்கோட்டை இளவரி, திருச்சி வீ.அ. பழனி, நெஞ்சில் நிற்கும் ஈரோடு லூர்து, மக்கள் கலைஞன் என்.ஜி. ராஜன், ஏழைக்கலைஞர் மதுரை பொன்னம்மாள் சேதுராமன், இசையால் இதயங்களை அசையச் செய்த இராவணன், பெரியாரின் செல்லப்பிள்ளை திண்டுக்கல் பி.கே.பி. பூமண்டலம், குமரி மாவட்டக் கொள்கைவேள் சந்திரஹாசன், கற்பூரத்தொண்டன் மு.பொ. வீரன், ஆதியிலிருந்து பெரியாரிலிருந்து விலகாத ஆதி, என்னுடைய (திருச்சி செல்வேந்திரனுடைய) துரைசக்கரவர்த்தி போன்ற அருமையான மாந்தரை, கொள்கைக் குன்றுகளைக் குறித்து உயிரோட்டமுள்ள அறிமுகங்களைத் தந்துள்ளார் திருச்சி செல்வேந்திரன் அய்யா. மேலே ஒவ்வொருவருக்கும் அவர் தந்துள்ள அடைமொழிகளே போதும், அவரவர் இயக்கவாழ்வை நாம் இனங்கண்டுகொள்ள.

அவர்களைப் பற்றி விளக்கமாகச் சொன்னவர், மனம் நிறைவுறாமல், “தொண்ணூறைத் தொட்டுக் கொண்டிருக்கும் தூத்துக்குடி காளிமுத்து, வைத்தி. பெரியவர் ஒரத்தநாடு ஆர்.பி. சாமி சித்தார்த்தன், தம்பி அரசிளங்கோ, ராயபுரம் கோபால், காரைக்குடி தலைவர் என்.ஆர்.எஸ்’ஸின் பிள்ளைகள், ‘சந்துரு’ என்று தான் அன்போடு அழைக்கும் குறிஞ்சிப்பாடி சந்திரசேகரன், ஆர்.பி.எஸ். ஸ்டாலின், தாராசுரம் ஸ்டாலின், சிவகெங்கை இன்பலாதன், அவருடைய துணைவியார் டாக்டரம்மா, பெரியவர் சண்முகநாதனின் குமாஸ்தா, வில்லிவாக்கம் குணசீலன், திருமதி தங்கமணி, போடி தேவாரம் தங்கமுத்து, கோவை ராமச்சந்திரன், நாகை கணேசன், என்றும் தன்னிடம் அன்புகாட்டும் திருச்சித் தோழர்கள், தந்தை பெரியாரின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் மகாலிங்கம்.. இன்னும் எத்தனையோ பேர் (பக்கம்126) குறித்துச் சொல்ல விரும்புகிறார். எழுத விரும்புகிறார். அவர்களைக் குறித்து மற்றொரு நூல் எழுதுவாராக என்று திருச்சி செல்வேந்திரன் அய்யாவை வாழ்த்துவோம்.

நூலில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் பெரியார் தொண்டர்கள் பெருமையை மட்டும் சொல்லவில்லை; எப்படிப்பட்ட தலைவராக, வழிகாட்டியாகப் பெரியார் திகழ்ந்திருக்கிறார்.. தொண்டரும் தலைவரும் உண்மைக்காக எப்படியெல்லாம் ஒருவர் மற்றவரை விஞ்சிப் போராடியிருக்கிறார்கள் என்பதை இந்நூல் மிகமிக அருமையாகப் பதிவு செய்திருக்கிறது. அஞ்சாநெஞ்சன் அழகிரி கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி(பக்.18-19) முதலாக நூல் நெடுகிலும் உணர்ச்சிப் பிழம்புகள்.. நெஞ்சை நெகிழவைக்கும் நிகழ்ச்சிகள்... வக்கீலய்யா தி.பொ. வேதாசலனார் வீட்டு உயரமான மாடியின் படிகளில் ஏறி, இறந்துபோன வேதாசலனாரின் உடலின் அருகில் வந்த பெரியார் ‘பலவற்றை’ சொல்லி மார்பில் அறைந்து கொண்டு அழுத காட்சி முதலாகப் பற்பல காட்சிகள், பெரியார் எப்பேர்ப்பட்ட மாமனிதர் என்பதை அன்னார்தம் தொண்டர் பெருமைகளைப் பற்றிக் கூறிவரும்பொழுதே தெளிவாக்கிவிடும்.

பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, வாழ்க்கை வழங்கிய அடையாளங்களுடன் கருஞ்சட்டைக் குடும்பத்தினரைச் சந்திக்கிறார் செல்வேந்திரன் ஐயா. ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார். நெகிழ்ந்துபோன அவர்கள் “அய்யா..எங்கள் பெயரைக்கூட மறக்கவில்லையா?” என்கிறார்கள். “எதற்கும் கலங்கமாட்டோம் - எதற்கும் வளையமாட்டோம்” என்ற அய்யாவின் நம்பிக்கை அன்று ஆடிப்போகிறது.

“ கண்ணின் மணிபோல மணியின் நிழல்போல
கலந்து பிறந்தோமடா - இந்த
மண்ணும் கடல்வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா - உறவைப் பிரிக்க முடியாதடா”

என்ற இந்தக் கவிஞர் கண்ணதாசனின் கவிதையுடன் தன்னுடைய புகழ் வணக்கத்தை நிறைவு செய்கிறார் திருச்சி செல்வேந்திரன் அய்யா.(ப.127)

நூலின் பெயர்: மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு!

ஆசிரியர்: திருச்சி செல்வேந்திரன்

முதற்பதிப்பு
: திசம்பர் 2011

பக்கம்: 128

விலை: ரூ. 80/-

வெளியீடு: சுயமரியாதை பதிப்பகம், அம்மன் காம்ப்ளக்ஸ் முதல் தளம், யாழ் தையலகம் எதிரில், வ.உ.சி. வீதி, உடுமலைப்பேட்டை - 642 126. திருப்பூர் மாவட்டம்.

பேச: 97883 24474

14.5.12

தனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்

தனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்
தேவமைந்தன்

தொண்ணூற்று ஐந்து ஆண்டுகள் பெருவாழ்வு வாழ்ந்த பெரியாரின் தனிவாழ்க்கை முப்பந்தைந்து ஆண்டுகளே; பொதுவாழ்க்கை சற்றேறக்குறைய அறுபது ஆண்டுகள். பெரியார்தம் பொதுவாழ்க்கை, ஒப்பரிய போராட்ட வாழ்க்கை.
பெரியாரின் பன்முகத் தொண்டுக்குத் தொடக்கம் எது? தலைசிறந்த மனிதாபிமானப் பற்றுதான் அது. மனிதன் எவனே ஆயினும் மனிதனாக சுயமரியாதையுடன் வாழ வேண்டும். மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வு கூடாது. "சமத்துவ மனிதாபிமானப் பெருஞ்சுனையின் இடையறாத ஓட்டமே, பெரியாரின் வாழ்க்கை என்னும் வீர, வெற்றிக்காவியம் ஆகும்" என்று சரியாகச் சொல்லியிருக்கிறார் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள்.
1950ஆம் ஆண்டுவரை, நம் சிற்றூர்களில் மட்டும் அல்லாமல் நகர்ப்புறங்களில் கூட வேனிற் காலத்துத் தண்ணீர்ப் பந்தல்களிலும் - எல்லாக் காலத்தும் சுறுசுறுப்பாக இயங்கும் தேநீர் விடுதிகளிலும் அனைத்துச் சாதிக்காரர்களும் ஒடுக்கப்பட்டவர்களை நடத்திய விதம் மிகவும் கொடுமையானது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தவர் பெரியார். இதற்கு அடிப்படையாக அவர் 'செல்லப் பிள்ளை'யாகவும் 'செல்வர் பிள்ளை'யாகவும் 'கட்டுக்கடங்காத பிள்ளை'யாகவும் வாழ்ந்த இளம்பருவத்திலேயே பட்டறிந்த நிகழ்ச்சிகள் அமைந்தன. "நாம் பலரை இழிவு படுத்த உரிமை கொண்டாடுவதால், சிலர் நம்மை இழிவு படுத்திக் காட்டுகிறார்கள். நாம் யாரையும் இழிவு படுத்தக் கூடாது; நம்மை யாரும் இழிவு படுத்த ஒப்புக் கொள்ளக்கூடாது. அத்தகைய சமத்துவ நிலையே சரியான நிலை" என்று கருதினார் துடுக்குப் பிள்ளை ராமசாமி... கருத்து செயல்பட்டது.
1942ஆம் ஆண்டுவரை, திண்ணைப் பள்ளிகளிலும் 'பிரைமரி ஸ்கூல்' என்று அன்று வழங்கப்பட்ட தொடக்கப் பள்ளிகளிலும் ஒடுக்கப்பட்டவர்களின் பிள்ளைகள் மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்ட சாதியாரின் பிள்ளைகளும் கல்வி கற்பதில் பல பின்னடைவுகளையும் ஏச்சுப் பேச்சுக்களையும் அடைந்து, "நமக்குப் படிப்பே வராது!" என்று இடிந்துபோய் நொந்து வாழ்ந்த நிலையை மாற்றி 'அனைவருக்கும் கல்வி' என்ற இயக்கம் தோன்றக் காரணமாயிருந்தவர் பெரியார்.
"கோயிலுக்குள் நான் ஏன் நுழையக் கூடாது? கோயிலின் கருவறைக்குள் போய் நான் ஏன் கடவுளுக்கு வழிபாடு நிகழ்த்தக் கூடாது?" என்று ஒடுக்கப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டு இன்று நீதிமன்றத்துக்கும் சென்று வழக்காடும் அளவு மானிட உரிமை உணர்வைக் கிளறிவிட்டவர் பெரியார்.
ஏழைத் தொழிலாளர்கள் தங்கள் உழைப்புக்குத் தகுந்த கூலி கேட்கவும் உரிமையற்றுக் கிடந்த நிலையை மாற்றியவர் பெரியார். எல்லாம் தங்கள் தலைவிதி என்று அவர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் குமைந்து கொண்டிருந்த அவலத்தை மாற்றி, "நாட்டு வளங்கள் அனைத்தும் நாட்டிலுள்ள அனைவருக்கும் சொந்தம்!" என்ற உண்மையை 1925ஆம் ஆண்டு முதலே கற்றுத் தந்து சமதர்ம சம உரிமை உணர்வைத் தழைக்கச் செய்தவர் பெரியார்.
'பங்கா' இழுப்பது, எடுபிடி வேலைகள் செய்வது போன்ற கீழ்நிலை வேலைகளைச் செய்யவே நாம் பிறந்திருக்கிறோம் என்று 1946ஆம் ஆண்டுவரையில் தாழ்வு மனப்பான்மையுடன் கிடந்தவர்களுக்கு உணர்ச்சியூட்டி, எழுத்தர் பணி முதல் உயர்நீதி மன்ற நீதிபதிப் பணி வரையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வந்துசேர வழிவகுத்தவர் பெரியார்.
சமுதாயம், அரசியல், பொருளியல் முதலான துறைகளிலும் நெடுங்காலமாக இழிவைச் சுமத்திவந்தவையான மூடநம்பிக்கைகள், சாதிமதப் பழக்க வழக்கங்கள், உரிமை - உடைமை - வாய்ப்புப் பெறுவதில் பேதங்கள் ஆகியவற்றின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்தார் பெரியார். கல்லடிகளுக்கும் சொல்லடிகளுக்கும் கிஞ்சிற்றேனும் அஞ்சாமல் ஒவ்வொரு நாளும் எழுத்தாலும் பேச்சாலும் அவற்றை எடுத்துரைத்தார். வாயில்லாப் பூச்சிகளாகவும் மரத்துவிட்ட மனமுள்ளவர்களாகவும் இருந்தவர்களை மானம் மிகுந்தவர்களாக மாற்றிக் காட்டினார் பெரியார்.
அரசியல் சமவுரிமையைப் பெரியார் மிகவும் வற்புறுத்தினார். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது அந்த அந்த மதத்தவரின் - அந்த அந்த அந்தச் சாதியினரின் எண்ணிக்கை விகிதாச்சாரப்படி, அரசியல் பதவிகள் - அரசுப் பணிகள் - தொழில்துறை ஆகிய எல்லாத் துறைகளிலும் வரவேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினார்.
பெரியாரின் வார்த்தைகளாலேயே சொல்வதானால் "பேதமும் கவலையும் ஒழிந்த சமதர்ம சமுதாய அமைப்பை உருவாக்குவதுதான்" அவர்தம் இறுதியானதும் உறுதியானதுமான முதல்நிலைக் குறிக்கோள் ஆகும். அதற்கு உதவாதவற்றை ஒதுக்கித் தள்ளவே முனைந்தார் அவர். இயக்க ரீதியில் மக்களை அணுகிச் செயல்புரிவது ஒன்று மட்டுமே செயல் வடிவம் என்று அறிவுறுத்தியவர் பெரியார். அப்படித் தம் குறிக்கோளுக்குச் செயல்வடிவம் தரும் பொருட்டு - உட்சாதி ஒழிப்பு, வருண ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெருளாதார பேத ஒழிப்பு, அரசியல் அலுவல் துறையில் நிலவும் மேற்சாதி ஆதிக்க ஒழிப்பு ஆகியவற்றுக்கான செயல் வடிவிலான திட்டங்களை அமைப்பு ரீதியாக நடைமுறைப்படுத்திட உரிய பணிகளை மேற்கொள்ளுவதையே பெரியார் வற்புறுத்தினார்.
'எப்படிப்பட்ட மனிதன் உயர்ந்தவன்?' என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டு பெரியார் கூறினார்: "பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் -- ரிசர்வ் பேங்கைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் -- பெரிய 'லைப்ரெரி'யைத்தான் மதிக்க வேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் -- 'என்சைக்ளோபீடியா', 'ரேடியோ' ஆகியவற்றை மதிக்க வேண்டும். இப்படியாக அனேகவற்றை, ஜீவனில்லாதவைகளிலும் காணலாம். ஆதலால், நாம் மனிதனை மதிப்பது, பேசுவது, நினைவுறுவது என்பவையெல்லாம் இவைகளை உத்தேசித்து அல்ல........
ஜீவ சுபாவ உணர்ச்சியான -- தன்மை உணர்ச்சியும் தன்னல உணர்ச்சியும் உள்ள மனிதன் இவற்றை (தன்னலத்தை) அலட்சியம் செய்து -- அதாவது தன்னைப் பற்றிய கவலையும், தனது மேல்வாழ்வின் தன்மை என்பதையும் அடியோடு மறந்து, மனித சமுதாய வாழ்வின் மேன்மைக்காகவே மற்ற மனித சீவன்களுக்கு இருக்க முடியாத வசதி என்னும் தன்மை, தொண்டாற்றும் சக்தி ஆகியவை இருக்கின்றன என்று கருதி -- தன்னலத்தையும் தன் மானாபிமானத்தையும் விட்டு எவன் ஒருவன் தொண்டாற்றும் பணியை வாழ்வாகக் கொண்டிருக்கிறானோ, அவன்தான் மற்ற சீவப் பிராணிகளிடமிருந்து வேறுபட்ட மனிதத் தன்மை கொண்ட மனிதனாவான். மனித உரு சீவப் பிராணி என்பதில் எந்த மனிதனை மதிப்பதானாலும், நினைவுநாள் கொண்டாடுவதானாலும் இந்தக் குணத்திற்காகத்தான் இருக்கலாமே ஒழிய வேறொன்றுக்கும் ஆக இருக்க முடியாது." கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சி ஆகிய ஊர்களில் 1945ஆம் ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் பெரியார் இவ்வாறு மொழிந்ததைக் 'குடி அரசு' ஏடு, அதே ஆண்டு ஏப்ரல் மாதம் பதினான்காம் நாள் இவ்வாறு வெளியிட்டது.
மனிதன் முதல் முதலாக மற்றொரு மனிதனுடன் திருத்தமாகத் தொடர்புகொள்ள உருவாக்கிக் கொண்டது மொழி அல்லவா? அப்படி உருவான தமிழின் மேன்மைகள் குறித்து மிகவும் விரிவாகக் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியிலும், சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் விரிவுரைகள் ஆற்றியுள்ளார் பெரியார். தமிழ்மொழி குறித்து அவர் கூறியதாவது: "தமிழ் மிகுதியும் நம் முற்போக்குக்கு ஏற்றபடி செம்மைப்படுத்தப்பட வேண்டும். மக்கள் கற்க மேலும் இலகுவாக்கப்பட வேண்டும். பயனுள்ள பரந்த மொழியாக்கப்பட வேண்டும். "இன்றைய தமிழ் மிகவும் பழைய மொழி, வெகுகாலமாகச் சீர்திருத்தம் செய்யப்படாதது, மற்ற மொழிகளைப் போல திருத்தப்படாதது" என்பதான இவைகள் ஒரு மொழிக்குக் குறையாகுமே தவிர, பெருமையாகாது என்பேன். ஏன்? பழமை எல்லாம் அநேகமாக மாற்றமாகி இருக்கிறது; திருத்தப்பட்டிருக்கிறது. மாற்றுவதும் திருத்துவதும் யாருக்கும் எதற்கும் இழிவாகவோ குற்றமாகவோ, ஆகிவிடாது. மேன்மையடையவும், காலத்தோடு கடந்து செல்லவும், எதையும் மாற்றவும் திருத்தவும் வேண்டும். பிடிவாதமாய்ப் பாட்டி காலத்திய, பண்டைக் காலத்திய பெருமைகளைப் பேசிக்கொண்டிருந்தால், கழிபட்டுப் போவோம்; பின்தங்கிப் போவோம். மொழி என்பது உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். அவ்வப்போது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும்." இவ்வாறு கூறியதோடு விட்டுவிடாமல் திட்டவட்டமான தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை முன்வைத்தார். அதன்படித்தான் இப்பொழுது அச்சகங்களிலும் தட்டெழுத்துப் பொறிகளிலும் கணினிகளிலும் தமிழ் பயன்படுத்தப் பெறுகிறது. கல்வி நிலையங்களிலும் பாடப் புத்தகங்களிலும் பெரியார் வழங்கிய எழுத்துச் சீர்திருத்தமே செயல்பட்டு வருகின்றது.
"பெரியார் செய்த தொண்டுகளில் மிகவும் தலைசிறந்தது பெண்ணடிமை நீக்கப் பாடுபட்டதுதான்" என்று மனோரஞ்சிதம் அம்மையார் 1982ஆம் ஆண்டிலேயே எழுதினார். நம் நாட்டில் பெண்களைத் திருமணம் என்ற பெயரால் அடிமைகள் போல விற்பது முன்பு மிக அதிகமாக இருந்தது. இராகு காலம் சகுனம் பார்ப்பதிலும், நாள் கிழமை பார்த்து நடப்பதிலும், ஒரு ஆண்டில் 108 பண்டிகை கொண்டாடுவதிலும் நம் பெண்களின் தொன்றுதொட்டு வந்த பழக்கங்கள். விரதம் பூஜை புனஸ்காரங்களில் நம் பெண்களுக்கு நிகர் யாருமே இல்லை என்று கூறலாம். அந்நாளில் படிப்பறிவு இல்லாததும், பகுத்தறிந்து பார்க்க இயலாமல் இருந்ததும், சொன்னதைப் பெரியவர்கள் கூறினார்கள் என்றதால் காரணம் கேட்கக் கூடாது என்றெல்லாம் ஆமைகளாக அடங்கிக் கிடக்க நேர்ந்ததும், இயற்கையான பலவீனமும் சேர்ந்து பெண் அடிமையானாள். இந்த நாடு உண்மையிலேயே முன்னேற வேண்டுமென்றால் பெண்ணடிமை தீர வேண்டும் என்று கருதினார். "பெண் ஏன் அடிமையானாள்?" என்று சிந்தித்துக் காரணங்களோடு எடுத்து எழுதினார். நம் பெண்கள் எதையும் சிந்தித்துப் பார்க்கும் திறமை பெற வேண்டும் என்று அயராது முயன்றார். பெண்ணுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று பாடுபட்டார். சமுதாயத்தில் பெண் தலைநிமிர்ந்து நிற்க ஆணும் பெண்ணும் சமமான தகுதி பெற பெண்ணுக்கும் சொத்து பகிர்ந்தளிக்கப் பெறல் வேண்டும் என்று தெளிவாக எடுத்துரைத்தார்.
சீர்திருத்தத் திருமண முறையைக் கொண்டு வந்து சூழ்நிலைகளால் பலிகடா ஆக்கப்பட்ட பெண்கள் மீண்டும் நல்வாழ்வுபெற வழிவகுத்தார். பெண்களைப் பெருமைப்படுத்தும் விதத்தில் 'வாழ்க்கை ஒப்பந்தம்' என்று கொண்டு வந்து திருமணத்தில் பெண்ணடிமையை ஒழித்தார்.
பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளையும் உயர்வு தாழ்வு கற்பிக்காமல் வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பெண்கள் 'நகை மாட்டும் ஸ்டாண்டு'களாக மட்டுமே இருக்கக் கூடாது என்றார். தாய்ப்பாலோடு மூடநம்பிக்கையையும் சேர்த்துக் குழந்தையின் சிந்தனையை நம் தாய்மார்கள் முடப்படுத்தும் போக்கைக் கண்டித்தார். அறிவியல் முறையில் நம் நாடு முன்னேற வேண்டுமென்றால் நம் பெண்கள் பகுத்தறிவு பெற்று சுயமரியாதையுடன் நாட்டிற்குத் தொண்டு செய்யும் வீராங்கனைகளாக விளங்கவேண்டும் என்று திருமண மேடைகள்தோறும் முழங்கினார்.
அவர் முழக்கம் கேட்டு, "பெண்கள் வெளியில் வருவதே தவறு" என்று ஆண்களால் விதிக்கப்பட்ட அந்நாளில், பெரியாருடன் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்ய மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், 'பெரியார்' என்ற பட்டம் தந்த நாராயணி அம்மையார், அலமேலு அப்பாத்துரை அம்மையார் முதலாக எத்தனையோ தாய்மார்கள் முன்வந்தார்கள். இந்தி எதிர்ப்பில் சிறை சென்றார்கள். பெரியார், தான் என்ன சொன்னாரோ அதைத் தம் வாழ்விலும் கடைப்பிடிப்பவர் என்பதற்கேற்ப, தம் துணைவியார் நாகம்மையாரையும் தமக்கை கண்ணம்மாவையும் பின்னாளில் மணியம்மையாரையும் பொதுவாழ்விலும் சுயமரியாதை இயக்கப் பணியிலும் பெரியார் ஈடுபடுத்தினார்.
அந்தக் காலத்திலேயே குடும்பக்கட்டுப்பாட்டையும் அரசுப்பணிகளில் பெண்களுக்குச் சமவாய்ப்புத் தரப்பட வேண்டும் என்பதையும் வற்புறுத்தியவர் பெரியாரே ஆவார். குழந்தைகளைச் சீர்திருத்த முறையில் ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் வளர்த்து ஆளாக்கினால் எதிர்காலத்தில் சாதிப் பாகுபாடு அறவே அழிந்துவிடும் என்று பெண்களுக்கு அறிவுறுத்தினார். பிள்ளைகள் வளர்ந்த பின்பு சுயமரியாதை முறையில்தான் திருமணங்கள் செய்துவைக்க வேண்டும் என்றும் மொழிந்தார்.
மக்கள் அனைவரும் எந்த வகை வேறுபாடும் இன்றித் தன்மானத்துடன் வாழப் பகுத்தறிவிப் பணியை வாழ்நாளெல்லாம் செய்த பெரியார், தனது சுகத்தையே முதலில் புறந்தள்ளினார். வசதியாகச் சாய்வு நாற்காலிகள் - 'சோபா'க்களில் அமர்ந்து கொள்ளுவதையும் தவிர்த்தார். "சுகம் என்ற ஒவ்வொரு பழக்க வழக்கமும் எனக்கு வெறுப்பாகிக் கொண்டும், சுகம் இல்லாவிடில் அதனால் ஒருவிதக் கஷ்டமும் இன்றியும் இருக்கிறது" என்று தெரிவித்தார் பெரியார்.
அவர் வார்த்தைகளையே இங்கு தருகிறேன்.
"சாதாரணமாக நான் 'ஈசிசேரில்' உட்காருவதே கிடையாது....ஏனெனில் நான் முதலாவதாக உட்காரும்பொழுது சாய்ந்துகொண்டு கால்கைகளை நீட்டிக் கொண்டு உட்காருவதுமில்லை. இவையெல்லாம் சுகவாசிகள் அனுபவிக்க வேண்டியவைகள். நான் அப்படிச் சாய்ந்து உட்காரும் சுகம் விரும்புபவன் அல்ல! மேலும் சீட்டில் உட்காரும்போது முழுச் சீட்டில் கூட இல்லாமல் பாதி அளவு மட்டும் சீட்டில் முன் தள்ளி உட்காருவேன். மேலும் என்னுடைய வாழ்நாளில் பெரும்பான்மையும் பிரயாணம்தான் அதிகம் என்ற போதிலும், பிரயாண காலத்தில் அநேகமாய் மோட்டார் வண்டியில் படுப்பதும் இல்லை. இரவு பகலாய்ப் பிரயாணம் செய்ய நேரிட்டாலும் பெரும்பான்மையும் கண் விழித்துக் கொண்டுதான் செல்வேன். ஏதாவது இரவு நேரங்களில் மட்டும் தூங்கும்படியாக மணியம்மையார் வற்புறுத்துவதுண்டு. நானும் அதற்கு ஏதேதோ கூறித் தப்பித்துக் கொள்ளப் பார்த்துவிட்டுக் கடைசியில் பெரிய ரகளை உண்டாகி அதன் பிறகுதான் சிறிது நேரம் படுப்பதுண்டு. ஆனால் அதிகம் தூங்க மாட்டேன் இப்படிப்பட்ட ரகளையின் காரணமாக நானும் மணியம்மையும் ஓரிரண்டு தினங்கள் பேசாமல்கூட வருத்தமாக இருப்போம். இப்படி எனக்கு, 'தூங்குவது என்ற பழக்கம் கூட வெறுப்பாகிவிட்டது! தூங்காமல் இருப்பதால் கஷ்டம் தோன்றுவதே இல்லை. இப்படி சுகம் என்ற ஒவ்வொரு பழக்க வழக்கமும் எனக்கு வெறுப்பாகிக் கொண்டும், சுகம் இல்லாவிடில் அதனால் ஒரு விதக் கஷ்டமும் இன்றியும் இருக்கிறது."
****
உதவிய நூல்கள்(அகர வரிசைப்படி):
ஆனைமுத்து, திருச்சி வே. பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், 3 தொகுதிகள், சிந்தனையாளர் கழகம், திருச்சிராப்பள்ளி-2. 1974.
ஆனைமுத்து, திருச்சி வே. பெரியாரியல், 2 தொகுதிகள், தையல்நாயகி நினைவு நூல் வெளியீட்டகம், புதுச்சேரி-10. 2004.
சுந்தரவடிவேலு, நெ.து. புரட்சியாளர் பெரியார், எஸ். சந்த் அண்டு கம்பெனி லிமிடெட், சென்னை-600 002. 1979.
பெரியார் ஈ.வெ.ரா. எழுத்துச் சீர்திருத்தம், பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீடு, சென்னை-600 007. 1980.
வேலூர் செந்தமிழ்க்கோ. பெரியார் சாதித்ததுதான் என்ன?, அறிவுக்கனல் பதிப்பகம், வேலூர்-632 001. 1983.
karuppannan.pasupathy@gmail.com
http://kalapathy.blogspot.com

திண்ணையில் தேவமைந்தன்

Copyright:thinnai.com
Thursday September 13, 2007 Copyright© Authors - Thinnai. All rights reserved.
படத்துக்கு நன்றி: thamizhoviya.blogspot.com

8.4.12

ஆடு மேய்க்கலாம் - - ம.இலெ. தங்கப்பா

ஆடு மேய்க்கலாம் - வாடா
ஆடு மேய்க்கலாம்
கேடு செய்திடும் - கல்விக்
கிடங்கை விட்டு வா (ஆடு மேய்க்கலாம்)

ஒரு படித்தவன் மக்கட்கு
உழைக்கவில்லையே!
வருவதியாவையும் - போட்டான்
வயிற்றில் கொள்ளையே! (ஆடு மேய்க்கலாம்)

பாதி மாந்தர்கள் - ஐயோ,
பசியில் சாகிறார்.
ஏது செய்கிறார் - தம்பீ
இங்குக் கற்றவர்? (ஆடு மேய்க்கலாம்)

பொருளை நாடுவர் - பேயாய்ப்
போட்டி போடுவார்
பெரிய கல்வியர் - தாமே
பிழைகள் செய்கிறார் (ஆடு மேய்க்கலாம்)

கல்வி என்று போய் - நெஞ்சைக்
கறைப் படுத்தலின்,
புல் நிலங்களில் - தம்பி
புரள்தல் இன்பமே! (ஆடு மேய்க்கலாம்)

கற்ற பேர்களே - நெஞ்சின்
கனிவு மாறினர்
முற்றும் தன்னலம் - தன்னில்
மூழ்கிப் போயினர். (ஆடு மேய்க்கலாம்)

அன்பு செய்திடக் - கல்வி
அறிவு தேவையா?
பண்பில் மேம்பட - எழுத்துப்
படிப்பும் வேண்டுமா? (ஆடு மேய்க்கலாம்)

*** *** **
பாடல் இடம்பெற்ற இதழ்: நற்றமிழ், 12:1, தி.ஆ. 2043 கும்பம்(13-02-2012). பக்கம் 2. விலை: உரூ. 6-00.

நன்றி: ‘நற்றமிழ்’ - திங்களிதழ்,
43, அங்காடித் தெரு,
நெல்லித்தோப்பு,
புதுச்சேரி - 605 005
இந்தியா.

நிறுவுநர்: தமிழ்மாமணி புலவர் மு. இறைவிழியனார்
ஆசிரியர்: திருவாட்டி அரியநாயகி இறைவிழியனார்
பேசி: 0413 2266543, 9442608271.

Thanks for Image: davidsanger.com

8.3.12

சாகாக்கலை

vaLLalaar kaNda saakaakalai

Spiritual Monthly Edited, Published and Owned by
Dr.K.Narayanan, Ph.D.,
No:29, Nagathamman Koil St.,
Kottupalayam,
Lawspet, Puducherry - 605 008.
Phone: 0413 2251764
Mobile: 94421 52764
Subscription:
Annual Rs.150/- US $40.
10 Years(Ayul) Rs. 1500/- US $400
Puravalar Rs. 5000/- and above US $2000 and above