31.5.15

நாகரத்தினம் கிருஷ்ணா, ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ மழையும் கடற்கரை மனிதர்களும் - தேவமைந்தன் முகநூல் குறிப்பு

“கோடையில் கடைசிவரை ஏமாற்றப் பழகி, விரக்தி எச்சிலாய் நாக்கில் துளிர்க்கும் மழை. ஆடிமாதத்தில் வீட்டிற்குள் நுழைவதற்குள் இடியும் மின்னலுமாய்ச் சடசடவென்று பெய்து நம்மைத் தொப்பலாக நனைத்துத் தெருவில் புழுதியாய் மணக்கும் மழை. போதும் போதும் என்று புலம்பினாலும் இரவு பகலாக இடைவிடாமல் ஹோவென்று மண்ணில் இறங்கி, ஐப்பசி கர்த்திகை மாதங்களில் பூமியை வெள்ளக்காடாக மாற்றி நொப்பும் நுரையுமாகப் பாய்ந்து கடலை ஆர்ப்பரிக்க வைக்கிற மழையென அப்பாவாலறிமுகப்படுத்தப்பட்ட மழைதான் எத்தனைவிதம். தனது இறப்புக்கூட ஒரு மழைநாளில் நடைபெற வேண்டுமெனத் தீர்மானித்தவர்போல, இவள் பார்த்துக்கொண்டிருக்க அவர் கடலில் இறங்கியதும், கரையில் நின்று கதறியதும், உப்பிய வயிறும் சிவந்த கண்களும் ஈக்கள் மொய்க்கும் மூக்குமாக வாசலில் கிடத்தியிருந்த அப்பாவை எரிக்க ஈரவிறகிற்கு டின் டின்னாக மண்ணெண்ணெய் தேவைப்பட்டதை அரிச்சந்திரன் கோவிலில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்ததும் நேற்று நடந்ததுபோல இருக்கிறது. மழைகாரணமாக இரண்டு நாட்கள் தொடர்ந்து அவர் உடலை எரிக்க வேண்டியிருந்ததென்று வெட்டியான் சொன்னான். அப்பாவைத் தீயில் எரித்ததைவிட...”
“ஹரிணி!”
“மழையிற் கரைத்திருக்கலாம்” -- கையிலிருந்த நாவலை மூடி விட்டு, தன் பெயரைச் சொல்லி அழைத்த மனிதரை நிமிர்ந்து பார்த்தாள்.”
- நாகரத்தினம் கிருஷ்ணா, ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பக்.70-71

26.5.15

"என்ன பண்ணிக் கிழிச்சீங்க?" - பட்டுக்கோட்டை பாணியில் கேட்கும் 'அதிகம் படிக்காதவர்''...

நடைப்பயிற்சிப்பூங்காவிலோ கடற்கரையிலோ அல்லாமல், காலையிலேயே தனியார் பேருந்துகள் தங்கள் ஆற்றலையெல்லாம் காட்டி விரையும் விமானதளச் சாலையிலும் தொல்காப்பியர் சாலையிலும் [புதுச்சேரி நண்பர்களே! எனக்கு ஒரு சந்தேகம்: நாவலர் நெடுஞ்செழியன் மேனிலைப் பள்ளியும்; புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமும் உள்ள சாலை, தொல்காப்பியர் சாலைதானே?] காலை நடைப்பயிற்சிக்குப் போய் வந்து, ஏறுவெயில் வந்துவிடுமுன் 'பண்ணுருட்டிக்காரர் கடை'யில் காய்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் பொழுது, நெடுநாள் பழக்கமான நண்பர் என்னை நிறுத்தி - "ஒங்க தினத்தந்தியிலேயே ஒவ்வொரு செவ்வாக்கிழமையும் 'கல்வி செய்திகள்' என்று தலைப்பு போட்டு "ஆங்கிலம் மிகவும் அவசியம்"ன்னு பக்கத்தையே அடைச்சுட்டு ஒரு தொடரை, 37 வாரமா போட்டுட்டுருக்காங்க. பள்ளி விளம்பரங்கள்'லயோ - " அனைத்துப் பாடங்களும் மிகச்சிறப்பாக ஆங்கிலவழிக் கல்வியில் போதிக்கப்படுகின்றன / A Futuristic English Medium School" - அப்படி'ன்னு பெற்றோரையெல்லாம் இழுத்துட்'ட்ருக்காங்க! இதையெல்லாம் எதிர்த்து ஆக்கபூர்வமா எதையும் சாதிக்காம, ஒண்ணு, நம்ம தமிழரையெல்லாம் பேடி கீடி'ன்னு திட்றாங்க.. இல்லேன்னா, அரசு அங்கீகாரமில்லாத பள்ளிகள தாங்களே திறந்து காசுபாக்க முயற்சிக்கிறாங்க! பாருங்க.. இப்'டியே போனா, "அனைத்துப் பாடங்களும் மிகச்சிறப்பாக ஹிந்திவழிக் கல்வியில் போதிக்கப்படுகின்றன / A Futuristic Hindi Medium School" அப்படீன்னு விளம்பரங்க வரப்போவுது! நம்ம ஜனங்க அந்த பள்ளிகள்'ல பிள்ளங்'கல சேத்த 'லோலோ'ன்னு அலையப் போவுதுங்க!" என்றார். அவர் அதிகம் படிக்காதவர். ஆனால், சொல்லொன்று செயலொன்று என்றில்லாதவர். தன் பிள்ளைகளை அரசுப்பள்ளிக்கு அனுப்புகிறவர். ஒரு கட்சியைச் சார்ந்தவர். எதையும் நேரடியாகப் பேசுபவர். அவருக்கு என்னால் உரிய மறுமொழி சொல்ல ஏலவில்லை. என் பிள்ளைகளை, அரசுப் பள்ளிகளிலேயே படிக்க வைத்தவன் நான். ஆனால், என் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளிலும் நடுவண் அரசுப் பள்ளிகளிலும் சேர்த்துப் படிக்க வைப்பதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாதவன். பேரப்பிள்ளைகளை, என் நண்பர்கள்முன், அவர்களின் பெற்றோர் வைத்த பெயர்களை வைத்தே அழைக்கிறேன். நண்பர் சொன்னதை 'உள்ளதை உள்ளவாறு' உங்கள்முன் வைக்கிறேன். அதற்குத்தானே முகநூல்!

22.5.15

அற்புதங்கள் கற்பிதங்கள் அல்ல! - தேவமைந்தனின் முகநூல் குறிப்பு

அன்றாட வாழ்வில் நமக்குள் - நம்முடன் - நம்தொடர்பாக நடக்கும் சிறுசிறு அற்புதங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, பெரிய பெரிய பெரிய அற்புதங்களை ஏற்படுத்துவார்கள் என்று நம்பி, அற்பச் சிறுமதி கொண்டவர்களை நாடி நாம் ஓடுகிறோம் - என்று எமர்சன் சொன்னார். சற்றுமுன் என்னைத் தொடர்புகொண்டு அலைபேசிவழி பேசியவரின் பேச்சு யாதுகாரணத்தாலோ தடைபெற்று "அப்புறம் தொடர்பு கொள்கிறேன் ஐயா!" என்று நின்றதும் அற்புதம்தான். இல்லாவிட்டால், இந்தக் குறிப்பெழுத எனக்கு வேறு செவ்வி கிடைக்காது. தமக்குள் முரண்பட்ட நண்பர்களின் பொதுவான ந(ண்)பராக விளங்குவதில் சுகத்தைவிட சோகம் பெரிது. இந்த நண்பர் சொல்வதை அவருக்காகாத அந்த நண்பரிடமும் அவர் சொல்லும் கமுக்கங்களை இவரிடமும் சொல்லி எனக்குப் பழக்கமில்லை. அப்படி, வளரவுமில்லை. முகநூல், இதை உடைக்கிறது. அனாயாசமாகப் பிய்த்துப் போடுகிறது. அதிமுகவைச் சார்ந்த நண்பர் கருத்துக்கு லைக் போட்டதைத் திமுக நண்பருக்கு மட்டுமல்லாமல் பொதுவிலும் பறைசாற்றுகிறது. திமுக நண்பர், "என்ன சார், எவ்வளவு நடுநிலையானவரென்று உங்களை நினைத்தேன்.. தலைவரை அடுத்தடுத்துக் கேலி பண்ணுகிறார் அந்த ஆள்.. அவருக்கு நீங்கள் லைக் போடுகிறீர்களே???" - நியாயந்தான். தன் மேனிலைப் பள்ளியிறுதிக்காலத்தில் நிகழ்ந்த என் தொடர்பான நிகழ்ச்சி முதலாக என்னுடன் நாற்பதாண்டுகளாகப் பழகுவதுடன் வழியில் போக்குவரத்தில் பார்த்தால்கூட வண்டியை ஓரங்கட்டிவிட்டு ஓடிவந்தணைத்துக் கொள்ளும் தோழரின் முகநூல் பதிவைப் பகிர்ந்ததற்காக, எல்லா விடயங்களிலும் என்னைவிடப் பெரியவர், "தேவமைந்தன்! இது உங்கள் முகநூல் கணக்குத்தானே?" என்று ஐயப்படுகிறார். ஒன்றைத் தெளிவாகச் சொல்லி விடுகிறேன். 'கண்மறைப்பு'க் கட்டி வைக்கப்பட்ட குதிரை அல்லன் நான். என்னுடன் எனக்குத் தெரிந்து அறுபதாண்டுகளாக நட்புடனிருக்கும் அத்தனை நண்பர்களும் எனக்கு அகத்தியர்கள்தாம். "அரசியல்ல இதுவெல்லாம் சகஜமப்பா!" என 'சூரியன்' படத்தில் கவுண்டமணியின் 'பஞ்ச் டயலாக்' வருமே, அதுபோலத்தான் அரசியல் குறித்த நண்பர்தம் இடுகைகள். இதையெல்லாம் வைத்துக்கொண்டு, என்னை முட்டுச் சந்தில் மாட்டவைத்தடித்தால் நான் எங்கே போவது? நான் Political Science என்ற அரசியலை கோவை அரசினர் கலைக் கல்லூரியில் முதன்மைப் பாடமாகப் படித்தபோதே புனிதமான அரசியல் கோட்பாடுகள் வேறு -நாட்டில் நடக்கும் அரசியல் வேறு என்பதைப் புரிந்து கொண்டவன். என் சீனியரான திரு ஆ. துரைக்கண்ணு, கல்லூரி ஹாஸ்டலில் ஆங்கில 'ஸ்வராஜ்யா' ஏட்டைக் கொடுத்து, " ஆச்சாரியார் ஆங்கிலத்தில் நடத்துகிறார் இதை.. இதையெல்லாம் வாசிக்க வேண்டும் பசுபதி! அப்போதுதான் அரசியல் விளங்கும்!" என்று அறிவுறுத்தியிருக்கிறார். 1965இல் கலைக்கல்லூரி மாணவர்களாக இருந்த எங்களை இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபடவைத்தவர் ஆ. துரைக்கண்ணுதான். அறிஞர் அண்ணாவால்தான் அரசியல் வகுப்பில் சேர்ந்தேன். சென்ற அறுபதுகளில்(1960s) பெரும் அரசியர் தலைவர்களாக விளங்கிய காமராசர், ராஜாஜி, ஜீவா முதலானவர்கள், எங்களைப்போன்ற மாணவர்களிடம் வெகு உற்சாகமாகப் பேசுவார்கள். அறிவுரைப்பார்கள். இந்தக் குறிப்பை நானெழுதக் காரணம், நமக்கு கவிஞர் இன்குலாப் அவர்களின் 'வரமா சாபமா" கவிதைபோல் கிடைத்த முகநூலின் விளைவுகள். நாம் யாருக்கெல்லாம் எதற்கெல்லாம் லைக் போடுகிறோம் என்பதை விலாவாரியாக வெளிப்படுத்துவது - முகநூலுக்கு நாரதம். நமக்கு? பாவேந்தர் பாரதிதாசன் சொல்வதுபோல், " சிரமறுத்தல் வேந்தனுக்குச் சிறியகதை.. நமக்கெல்லாம் உயிரின் வாதை!"