12.7.15

புதுச்சேரியில் வாழ்வதால் படிக்கத்தான் முடிகிறது குடிக்க முடியவில்லை ;)

புதுச்சேரி, ஒரு புத்தக நகரம். குறுகிய பரப்பளவில், ‘நிறைய்ய’ புத்தக விற்பனை நிலையங்கள். ஒரு ‘டூவீலரை’க் கிளப்பிக்கொண்டு, மேற்கே வழுதாவூர் சாலை வழி உள்ளே நுழைந்தீர்களென்றால், சாரம் பாலம் வலது பக்கம் திரும்பினால் கொஞ்ச தொலைவில் இடது பக்கம் மாடியொன்றில் நண்பர் சீனு. தமிழ்மணியின் ‘இலக்கியம்.’ நாகரத்தினம் கிருஷ்ணாவின் புதிய புத்தகங்கள் முதல் எல்லாம் கிடைக்கும். புதுச்சேரியின் வடக்குப் பகுதியிலிருந்து அஜந்தா சிக்னல் வழி நேரே மகாத்மாகாந்தி வீதிக்கு வந்தால், முதல் வலது ஒடிப்பில் சங்கரதாஸ் சுவாமிகள் தெருவில் நண்பர் பாஸ்கரின் ‘பாரதி புக்ஸ்.’ காலச்சுவடு புத்தகங்கள் முதல் சாரு நிவேதிதா’வின் தடிமனான புத்தகங்கள் வரை எல்லாம் கிட்டும். அடுத்த இரண்டாம் தெரு மேற்கு முடுக்கில் ‘கண்ணதாசன் புத்தக நிலையம்.’ இரண்டு தெரு தாண்டினால் அரவிந்து வீதி - ம.கா. வீதி சந்திப்பில் மாடியில் ‘புஸ்தக் மந்திர்.’ பிரபஞ்சன், பாலகுமாரன்... எல்லா நூல்களும். உள்ளே இடது புறம் திரும்பினால் வடக்குப் பார்த்தவாறு ‘அமுதம் புத்தகக் கடல்.’ தொல்காப்பியம்,சங்க இலக்கியம் முதல் உரைகளோடு; சித்தர் இலக்கியம், ஜோதிடத் திண்டுகள் இன்னும் பற்பல. சற்று முன்னாலேயே, ‘வினாயக் புக் பேலஸ்.’ ஒருவழிச் சாலைகள் வழி ‘டைவர்ட்’ ஆகி ஆகி, ரங்கப்பிள்ளை தெருவுக்கு வந்தால் ‘சிறுவர் பூங்கா’ புத்தக நிலையம். கிழக்கே சற்றுத் தொலைவுக்குள் ஆம்பூர் சாலையில், இடது பக்கம் ஒடித்தவுடன், ‘ஹாட்பிரெட்ஸ்’ தாண்டி, மேனாள் முதல்வர் ஜானகிராமன் வீட்டை ஒட்டி ஹிக்கின்பாதம்ஸ். ஆனந்த விகடன் வெளியீடுகளிலிருந்து அனைத்து வகை ஆன்மீக, இலக்கிய, இன்னும் பல. அகராதிகள் பலவகை கிட்டும். வெளியே வந்து பக்கிங்ஹாம் கனால் வலது புறம் திரும்பினால் ‘வாக்.’ ஆசிரமத் தொடர்பானபுத்தகங்கள். கொஞ்சம் வடக்கே, மரீன் வீதியில் ‘சப்தா.’ அரவிந்தாசிரம சம்மந்தமான புத்தகங்கள். கிழக்கே ஆசிரமத்தை ஒட்டி தெற்கே வளைவெடுத்து வந்தால் ம.கா. வீதி பெத்திசெமினேர் பள்ளி எதிர்ப்புறம் ‘ஜம்பு.’ ஜிப்மர் மருத்துவ திண்டுகள் முதல் பழைய தமிழ் ஆங்கிலப் புத்தகங்கள். என்னுடைய 1980 ஆண்டு வெளியீடான ’புல்வெளி’ புத்தகத்தை, கையில் படி(பிரதி) இல்லாததால் இங்கேதான் விலைகொடுத்து வாங்கினேன். பக்கத்திலேயே, ‘பெரிய பார்ப்பாரத் தெரு’ என்றழைக்கப்படும் நீடாராஜப்பயர் தெருவைப் பிடித்து, மாதாகோயில் தெருவில் வலது பக்கம் திரும்பினால், கிழக்குப் பார்த்தவாறு ‘ஃபோகஸ்.’ இங்கே கிடைக்காத ஆங்கில பிரெஞ்சு நூல்களில்லை. மாதா கோயில் எதிரிலேயே கொலாஸ் மன்றத்தில் நெடுங்காலமாய்ப் புத்தகக் கண்காட்சி நடக்கிறது. 10% முதல் 55% வரை கழிவுள்ள புத்தக மலைச் சரிவுகள். எப்படித்தான் நடத்துகிறார்களோ. இன்னொரு நிரந்தரப் புத்தக் காட்சிக்கு, மாதாகோயிலுக்கு எதிர்ச் சாலையிலேயே போனால் ‘ஒப்பித்தா’லையும் தாண்டி, அந்தண்டை பழைய ஆர்.டி.ஓ./ வணிக அவைக் கட்டடத்தில் ‘இந்தியன் புக்ஸ்.’ ஒவ்வொரு நாளும் எப்பொழுது மூடுகிறார்கள் என்றே தெரியாது. புலவர் இராசியண்ணன் நூல்களை வாங்கிய வாய்ப்பு அங்கேதான் கிடைத்தது. ஞாயிறு வந்து விட்டால் போதும். புதுச்சேரி நகரின் முதுகெலும்பு போன்ற காந்தி வீதி நெடுக, நாள்முச்சூடும் கூடும் தெருப்புத்தகக் கடைகளில் தமிழ்நாட்டுக் கிளை நூலகப் புத்தகங்கள் முதல் எல்லா மொழிப் புத்தகங்களும் கிடைக்கும். நண்பருக்கோ ஆசிரியருக்கோ அன்பளிப்பாகத் தருகிறோம் என்றிருந்தாலும் முன்னெச்சரிக்கையுடன் பெயர் போடாமல் ‘அன்புடன்,’ என்று கையெழுத்துப் போட்டு அந்தந்த நூலாசிரியர்கள் தரும் புத்தகங்கள் பலவற்றை இங்கே அழகாகப் பார்க்கலாம். நுனி மடியாத புத்தகங்களாய் அவை காட்சி தருவது கொள்ளை அழகு. நம்மேல் ‘அசூயை’ கொண்டு நண்பர்கள் தர தவிர்த்த அழகான வண்ண அட்டைகளுடன் கூடிய புத்தகங்களை அவற்றின் 10% விலைக்கே (கழிவு /discount அல்ல; விலை!) தள்ளும் கடைகள் பல. நான் மட்டும் புதுச்சேரியில் இல்லாமலிருந்தால் கொடுங் குடிகாரனாயிருந்திருப்பேன். இங்கே புத்தகங்கள் என்னைப் படிக்கமட்டுமே விடுகின்றன. செலவும் மட்டு. இதில் முகநூலிலும் நேராகவும் நண்பர்களாயுள்ள நாங்கள் சிலர், புத்தகங்களைப் பரிமாறிக்கொள்கிறது வேறு.
கொஞ்சம் தள்ளி வங்கக் கடல். பழைய மேரி - நகராட்சிக் கட்டடமிருந்த இடம். அருங்காட்சியகம். புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டு இயக்க அலுவலகம். புதுச்சேரி அரசின் நூலகப் புத்தகத் தெரிவுக் குழுவிலும் விருது மதிப்பீட்டுக் குறுங்குழுவிலும், பல ஆண்டுகள், தங்கப்பா போன்ற ஐயாமார்களோடு பணியாற்றினேன். விருது மதிப்பீட்டுக் குழுவில் என்னையும் என் நெடுங்கால நண்பரையும் என்னையும் மோத விட்டுப்பார்த்தார்கள். நடக்கவில்லை. அதனால், கசப்புடன் விலக நேர்ந்தது. அது, ஒரு தனிக்கதை. இப்படி, “சட்டி சுட்டதும் கைவிட்டு விடும்’ பழக்கத்தால், நண்பர்கள் நண்பர்களாகவே தொடர்கிறார்கள்.
என் முதல் புத்தகம் 1976இல் - 100 படிகள் மட்டும் .. இரண்டாவது புத்தகம் 1980இல் 100 படிகள் மட்டும்.. மூன்றாவது புத்தகம் 1993இல் 72 படிகள் மட்டும் இயக்ககம் வாங்கியதாக ஞாபகம். புதுச்சேரி நூலகங்களுக்காக ‘புத்தககங்கள் வாங்குகிற சமாச்சாரத்’தில் “பழம் தின்று கொட்டை” போட முடியாமல் தவிக்கும் நண்பர்கள் சிலர், முகநூலில் மெளனம் காக்கிறார்கள். அவர்களைப் பின்பற்றுவதே என் நட்பின் பொறுப்பும் கூட. இந்த ‘லச்சண’த்தில், எனக்கு மிகவும் பழக்கமான பழம்பெரும் கோவை எழுத்தாளர் ஐயாவுக்கு மறுமொழி விடுக்க முடியாமல் ‘இக்கட்டு’ வேறு. இன்னோர் இக்கட்டு, ஆங்கில மொழிபெயர்ப்பு தொடர்பானது. மறைந்த பெரும்பாவலர் செவ்வேள் ஐயா அவர்களின் நூலை ஆங்கிலத்தில் ‘பெயர்க்க’ முன்வந்தவர் “செய்தவற்றை” வெய்துயருடன் செவ்வேள் என்னிடம் சொல்லியிருக்கிறார். எப்படி இதை கோவைப் பெரியவருக்கு மொழிவேன்?
பின்குறிப்பு: இதில், இன்னும் பல புத்தக விற்பனையகங்கள் விடுபட்டிருக்கும். நண்பர்கள் அறிவித்தால் அறிந்து கொள்வேன். நன்றி :)


6.7.15

நாகரத்தினம் கிருஷ்ணா - காஃப்காவின் நாய்க்குட்டி; குறித்து தேவமைந்தன் எழுதிய முகநூல் குறிப்பு #3

மிகவும் படித்த பெண்கள் சிலர் - அரசியலை வெறுப்பதும், ஃபாஷன் பற்றியும் நகை துணிமணி பற்றி விவாதிக்க விரும்புவதும் ஆனதுதான் தாம் வாழும் வாழ்வின் நோக்கம் என்று நம்பிக்கொண்டிருக்கையில், இந்த நாவலில் வரும் ஹரிணியையும் பாரதியையும் நித்திலாவையும் கமிலையும் போற்றாமலிருக்க முடியவில்லை. இவர்களில் பாரதியும் நித்திலாவும் - வாழும் கதைமாந்தர் என்பதை ஆசிரியர் உரையின் கடைசியில் அறிகிறோம். ஹரிணியின் சிந்தனையெல்லாம், நானறிந்தவரை, நாவலாசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் சொல்லாடல்களுடன் ஒத்துப்போகக் காண்கிறேன். என் கருத்து தவறாகவுமிருக்கலாம். ஜெயகாந்தன் சொல்கிறாற்போல் வாழ்விலுங்கூட 'தவறுகள், குற்றங்கள் அல்ல' தானே? சரி. ஹரிணி பார்வையில் பிரெஞ்சு வங்கியொன்று அவதானிக்கப்பெறும் விதத்தில், சென்ற கிழமை, புதுவையில் நானே ஒரு வங்கியின் நிகழ்தருணத்தை உணர்ந்து, எதிர்காலத்தில் எப்படியெல்லாம் 'இது' ஆகுமோ என்று அஞ்சியிருந்தேன். அவர்கள் உண்டாக்கிய 'கணினிப் பெருந்திரை விம்பம்' (டோக்கன் தொடர்பானது) என் நெஞ்சின் துடிப்பை என்னையே கேட்க வைத்தது. அநேகமாக அதே வங்கியில், கணக்கு வைத்தோர் இருக்கை ஒன்றில், இந்த செயற்கை 'டென்ஷனேற்றம்' ஒன்றின் நிமித்த காரணமாக, சாய்ந்து நான் இறந்து விடுவேன் என்று நம்புகிறேன். 'லெட்ஜர்'களுடன் புன்னகை செய்த மனிதர்கள் வேலைசெய்த வங்கிகளின் காலத்தில், அப்பாவின் காசோலையைக் கொடுத்துப் பணம் பெறுகையில், உரிய 'கவுன்ட்டர்' மனிதர் என்னைப் பார்த்து, என் படிப்பு விடயமெல்லாம் விசாரித்தறிந்த காலத்திலேயே 'banking' செய்ய வாய்த்திருந்தேன். இந்த விறைப்பெல்லாம் 'செக்யூரிட்டி'களிடம்தான் அப்பொழுது இருந்தன. இப்பொழுது உள்ள மாதிரி இல்லாமல் 'ஜீவன்'கொண்டு அப்பொழுதைய வங்கிகள் இயங்கின. இருக்கட்டும். நம் "ஹரிணி வங்கிக்குள் நுழைந்து ஆறு மாதத்துக்கு மேல் ஆகப்போகிறது. எல்லாமே கணினி மயமாக்கப்பட்டிருப்பது காரணம். இணைய இணைப்பு மூலமே காரியத்தை முடித்துக்கொள்ளும்படி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். இன்றைய மனிதனுக்கு இரத்தமும் சதையுமான மனித உறவுகள் தேவை குறைவு. உணர்வுகளின் எச்சிலோடு உரையாடல், மின் அஞ்சல்கள், சமூக வலைத்தளங்கள், ஸ்கைப்புகள் என்கிற அரூபங்களுடன் உறவாடல். நதி கடலினைத் தேடவேண்டியதில்லை. கடல் நதியினைத் தேடிவரும் காலம். உயிர் வாழ்க்கை அல்ல. பிண வாழ்க்கை. அலுவலகம் போக வேண்டியதில்லை; கடைகளில் தொட்டுப் பார்த்து, நுகர்ந்து சுவைத்து பொருளை உடைமை கொள்ளத் தேவையில்லை. பிறந்த மேனிக்கு கதவை அடைத்துக்கொண்டு கேட்டதைப் பெற்று காலத்தைத் தேய்க்கலாம். ஒற்றை மனிதன், ஓர் இனம், குலக்குறி என்பதான அடையாள முத்திரைகளை அழித்து நிறுவிய ஊரும் சமூகமும் மீண்டும் பூர்வீகத்தைத் தேடிக்கொண்டிருக்கின்றன." இப்பொழுதைக்கு இதுபோதும். வயதான கைவிரல்களும் வயதாகாத மனமும் சண்டைபிடிக்கத் தொடங்கிவிட்டன. 'ஏசர்' - தனது வெப்பப் பெருமூச்சினை, என் இடது உள்ளங்கை மேல் ஊதுகிறது. பிறகு, தொடர்வேன்.

Vishwas Mudadagal எழுதிய Losing My Religion நாவல் தொடர்பான எதிர்வினையாக எனக்கு வந்த மின்னஞ்சலின் பகுதி

“அன்பு ....க்கு,

நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

.. .. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் வாரமும் மாதமும் வருடமும் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே போவதும் இயற்கையின் ஒரு அங்கம் தான். [தகவல் தொழில் நுட்பத் துறை சர்ந்த] நாங்களும் இயற்கையின் பிள்ளைகள்தான். Vishwas Mudagal எழுதிய Losing My Religion நாவலில் என்ன குறை கண்டீர்கள்..?

இன்றைய நவீன தொழில் நுட்பத்தில் திறமையும் புகழும் மிக்க ‘தொழில் முனைவோராக’ வளர்ந்தும், பாழாய்ப்போன mass support இல்லாமல் போவதால், ரிஷி என்னுமொருவன் உடைந்து சிதறிப் போனாலும்; தன் சொந்த நண்பர்களே தன்னை அதைரியப்படுத்தினாலும்; ஓரிரவு trance மாதிரி ஒரு மனநிலையில் 130 கிமீ தொலைவுக்குத் தன் SUV காரை, வழியில் யாரையும் கொல்லாமல் தானும் சாகாமல் ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு விரட்டுவதும்; விடிகாலைக்குமுன் 03 மணிக்கு காவிரியின் கரைமணலில் வானத்தைப் பார்த்துப் படுத்துக் கொண்டு, சின்ன வயதிலிருந்தே தான் மானசீகத் தொடர்பு கொண்டு வரும் நட்சத்திரக் கூட்டத்தைப் பார்த்து, தனக்கொரு அடையாளம் காட்டுமாறு கதறுவதும், அந்தமாதிரி ‘அலெக்ஸ் ‘ அவனுக்கு அடையாளம் காட்டப்படுவதும்; தன்னிடம் சொத்து என்று உண்டேயான ஒரேயொரு SUV ஐயும் விற்றுவிட்டு காசாக்கி.. ஆயிரக்கணக்கிலான கி.மீ. பயணம் செய்து, ஹிமாலயத்தின் சாரல் பள்ளத்தாக்கில், கடல்மட்டத்துக்கு 3029 மீட்டர் உயரமுள்ள மலானா கிராமத்தில், இந்த வாழ்க்கையின் நிதர்சனத்தைப் புரிந்துகொள்கிறானே - அது, இயற்கைதரும் பாடமில்லையா..

இதற்குப் பின்னால், ரிஷியும் அலெக்ஸும் நிகழ்யுகப் பெண்ணான கைரா’வைச் சந்தித்த பிறகு உணர்வது மேன்மைமிக்க வாழ்வில்லையா? ‘பொருளாயத உலகில் அந்த வானத்தின் நட்சத்திரங்களுக்கு ஈடாக உயர்ந்து காட்டுகிறேன் பார்!’ ‘இந்த உலகத்தையே மாற்றிக்காட்டுகிறேன் பார்!’ என்று சவால் விட்டு வாழும் ரிஷி; வற்றிவரண்ட மேலைக்கலாச்சாரத்தையும் -போர்போர்போர் என்று வெறிபிடித்தலையும் சட்டாம்பிள்ளைத்தனமான உள்நோக்கு அரசியலையும் முற்றிலும் வெறுத்து... ‘தன்னிருந்தே தான் விடுபட’ தவம் கொள்வதற்காக, எங்கோ உள்ள இந்தியாவை நேசித்து ஓடிவரும் அறிவியலின் மாற்றுப் பிரதியும் மனிதப் பரிணாம வர்ணமாலையின் முரண்பாட்டுக்குரிய செறிவான தேடலின் பிதாமகனுமான அலெக்ஸ்; இந்த ஆண்கள் இருவரிடமிருந்தும் முழுசாக வித்தியாசமாகி, அன்பு - அழகு - இரக்கம் - கருணை - பாசம் - உள்ளுணர்வு - அறிவான வாழ்க்கை ஆகியவற்றை இயல்பாக வரித்துக்கொண்டுள்ள நவீனப் பெண்மையின் பிரதிநிதியாகும் கைரா. இவர்கள் மூவருக்குள்ளும் மிகவும் எதேட்சையாக, ஏதோ ஒரு - பச்சைக்கண்களுள்ளவர்கள்[Greek Origin] தங்கள் சுயமிழக்காது வாழும் மலானா கிராமத்தில் உருவாகும் அர்த்தமுள்ளதும் ஆழ்ந்ததுமான அன்புகூடிய நட்புக்கும் புரிந்துணர்வுக்கும் இடந்தந்து வாழ்வது வாழ்க்கை..”

[Edited the mail]

5.7.15

நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ (“சே பியா[ன்] அமியபிள் ஆ வூ மிசியே Krishna Nagarathinam B-) ’’)

முந்தி முந்தி மிகவும் விலாவாரியாக எழுதுவேன். நண்பர்களின் புத்தகங்களென்றால் சொல்லவே வேண்டாம். நாகரத்தினம் கிருஷ்ணா படைத்த ‘நீலக்கடல்’ நாவலுக்கும் மதுமிதா தமிழாக்கம் செய்த ராஜா பர்த்த்ருஹரியின் ‘சுபாஷிதம்’ சாத்திரத்துக்கும் மிக விரிவான மதிப்பீடுகளைத் ‘திண்ணை’யில் எழுதினேன். ‘கீற்று’-வில் அயோத்திதாசர் குறித்து எழுதினேன். ‘புதுச்சேரி’ வலையேடு தொடங்கி ‘மரத்தடி’ ‘வார்ப்பு’ ‘திண்ணை’ ‘கீற்று’ முதலான வலையேடுகளில் நீண்ட பயணம். பெண் பெயரில் ‘நிலாச் சாரல்` முதலானவற்றில்.
வாழ்க்கையில் ஒன்றைக் கற்றுக்கொண்டேன். வளவள என்றெழுதுவது கூடாது. திரைப்படம், புதினம் போலவே நம் எழுத்தாடல்களுக்கும் - தொகுத்தல் / Editing மிகமிக அவசியம் என்றெல்லாம் நேரில் பயிற்றுவித்த புதுச்சேரி வானொலியின் மேனாள் ஒருங்கிணைப்பாளரும், என் மேனாள் மாணவருமான திரு சிவப்பிரகாசமும்; தேவமைந்தனின் வலையேட்டு வாழ்க்கைக்குப் ‘பிள்ளையார் சுழி’போட்ட மேனாள் மாணவர் முனைவர் நா. இளங்கோ Ilango Nagamuthu அவர்களும்; வீட்டுக்கு வந்து வலையுலகம் தொடர்பாக எதையெல்லாம் செய்யலாம்,, முக்கியமாக செய்யக்கூடாதவை எவையெவை என்று பிள்ளைக்குக் கற்றுத் தருவதுபோல் கற்பித்த நண்பர் பாவலர் இராஜ. தியாகராஜன் அவர்களும்; துரோணர், ஏகலைவனுக்குப் பயிற்றுவித்தது போல் என் பெயரன் வழி புத்தக வடிவில் அருவமாக இல்லம் வந்து கற்றுத்தந்த Vishwas Mudagal [‘Today what you hold in your hands is the 14th version of the book.’ Author’s note. P. 9. ‘Losing My Religion’ (novel) FINGERPRINT! 2014] அவர்களும் - இந்த ‘சைபர் உலகில்’ எனக்குத் தொடக்கப்பள்ளி முதல் பல்கலை வரையிலான ஆசிரியர்கள்.
அதிலும், முகநூல் போன்ற சமூக வலைதளத்தில் - விடைத்தாள்களை ‘பக்குவமான’ ஆசிரியர்கள் திருத்துவது போலவும்; தமிழ்த் தந்தி [usage of Krishna Nagarathinam] படிக்கும் / பார்க்கும் நண்பர்கள் போலவும்தான் நம் பதிவுகளைப் பாஆஆஆர்த்து Like பதிகிறார்கள் என்பதை நன்கு அறிவேன். இந்த Like போடுவதற்குக்கூட, “பாத்திரம் அறிந்து பிச்சை இடு” என்ற தமிழ் மூதுரையைப் பின்பற்றும் பலரை நான் நன்கறிவேன்.
இதனால்தான், நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ நாவலின் 13 - 308 பக்கங்களான நாவலையும் 309-310 பக்கங்களில் வரும் ‘பிரெஞ்சு சொற்கள்’ பட்டியலையும் விடாமல் வாசித்துவிட்டு, சமைந்துபோய் உடகார்ந்திருக்கிறேன்.[‘சமைந்துபோய்’ - யை, சினிமாப் பாடலாசிரியர்கள் கோணத்தில் கண்டுகொள்ளாதீர்கள்!]
இந்த நேரத்தில் நண்பர் பஞ்சு Panjangam Kaniyappan அவர்களின் திறத்தை என்னால் வியக்காமல் இருக்க முடியாது. நெடுநாள் நண்பராயினும் சற்று விலகி நின்று அவருடைய ‘ விமர்சனப் பார்வை’யையும்; கடகடவென்று எழுதிவரைந்து செல்லும் அரியவகை எழுத்தாற்றலையும் ஆச்சரியத்துடன், லாலி பாப் குவியலை அண்ணாந்து பார்க்கும் குட்டிப் பையனாக வியந்து பார்க்கிறேன். நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘கோபால கிருஷ்ண கெளமுதி’ வரலாற்று நாவலையே காலச்சுவடு அச்சேட்டில், த.ஜெ. பாணியில் சொன்னால் ‘விமரிசையான விமர்சனம்’ செய்தவரல்லவா Panjanganm Kaniappan என்ற ஐடியிலுள்ள பஞ்சாங்கம் என்கிற நண்பர் பஞ்சு!
இது இவ்வாறு இருக்க, எங்கள் புதுச்சேரி முதலியார்ப்பேட்டையைச் சேர்ந்த வாழ்முனி மகன் பாலனுடனும்; தமிழ்த் தந்தியில் ‘நியூஸ்’ வருமளவுக்கு பாலன் தமிழ்முறைப்படி திருமணம் செய்துகொண்ட செக் குடியரசின் குடிமகள் அத்ரியானாவுடனும்; முன்பே நா.கி. எழுத்துவழி பழகிவிட்ட பாரதியுடனும் ஹரிணியுடனும்; சர்சலில் தன் தமக்கையுடன் இரண்டாண்டுகள் வாழ்ந்து, அங்கே இருக்கப் பிடிக்காமல் வெளியேறி, பிரான்சில் வாழ்வதற்கு ஏற்ற அத்தாட்சிப் பத்திரங்கள் கையிலில்லாததால் வழக்குக்கிழுபடும் - 2009 போரில் பெற்றோர்களை இழந்ததுடன் இலங்கை ஆர்மியால் புலிகளியக்கம் சார்ந்தவள் என்று சந்தேகத்துக்காளாகி உயிரையும் உடலையும் அந்த ‘...வர்’களிடம் விட்டுவிடக் கூடாதே என்ற ஆதங்கத்துடன், சகமனிதர்களை மதிக்கும் பிரான்சுக்கு வந்து வாழும் யாழ்ப்பாணவாசியான நித்திலாவுடனும் [குறிப்பாக நித்திலாவுக்கு மொழிபெயர்ப்பாளராக மட்டுமே உதவ வேண்டிய, ஆனால், இனந்தெரியாமல் அவளுக்காகப் பரிந்து பாடுபடும் ஹரிணியும் என்னுடன் வாழும் சகோதரிகளாகவே உணர்கிறேன்]; எனக்கு மிகவும் பிடித்த ‘மனத்தால் பழுத்த’ சாமி உடனும்; லக்னகுமாரனுடனும்; சகஜமான கமீலியுடனும்; ‘அசிஸ்டெண்ட் சோஷியால்’ எலிஸபெத்துடனும் [இதே வகைமாதிரிப் பெண்ணுடன் 1990+இல் நான் மட்டுமல்ல துணைவியாரும் நெருங்கிப் பழகியிருக்கிறார்; இப்பவும் பிரான்சிலுள்ள என் சகலைகொழுந்தியர் குடும்பத்தார்க்கு அவர் உதவி வருகிறார்]; .. இந்தியாவின் வடக்குக் கிராமத்து மங்லி வரை .. ஓ, முக்கியமாக காஃப்காவுடனும் அவருடைய ‘இருப்பை’ப் புத்துயிர்க்கும் நாய்க்குட்டி வரை .. பலருடன் தற்கணம் வாழ்ந்து வருகிறேன். ‘இடைவெளி’ இருந்தால்தானே விரிவாக எழுத முடியும்?
பின்னொரு முறை, இதைத் தொடர்கிறேன். நாகரத்தினம் கிருஷ்ணாவுடன் நான்பழக நேர்ந்ததற்குப் புதுச்சேரி மட்டுமே காரணமல்ல. தகழி முதல் த.ஜெயகாந்தன் வரை; ஜெய்புன்னிசா அக்கா முதல் சகோதரி மதுமிதா வரை அன்புடன் பழகியவன் நான். இவர்களெல்லோரையும் விட நாகரத்தினம் கிருஷ்ணா என்னை இதுநாள் வரை, சகித்துக் கொண்டு, நட்புடன் உள்ளவர் என்பதற்காகவே நான் நிறைய எழுத வேண்டும். எங்கே..


3.7.15

புத்தர் அணுகுமுறை எவ்வளவு மெய்ப்பொருளானது - என்பதற்கு ஆய்வு அறிஞர் குணா மேற்கோள்களுள் ஒன்று!

மெய்ப்பொருள் குறித்து மதவாதிகள் பலவாறாகத் தருக்கம் செய்துவந்த காலமொன்று இருந்தது. அப்பொழுது புத்தர் கருத்துகள் ‘சிம்ம சொப்பன’ங்களாக மாற்று மதத்தவர்க்குத் தோன்றி வந்தன. ஆனால், புத்தரோ எளிய வலியவர். எதையும் அதிரடியாகச் சொல்லாதவர். தடாலடித் தத்துவஞானியல்லர் புத்தர். உண்மையான மெய்ப்பொருளாளர்.
[இனி வருபவை அறிஞர் குணா கருத்துகள்]
ஒரு காலகட்டத்தில் ‘கருத்துமுதல் கூறுகள் பொருள்முதலியலை மறுத்துச் சிறப்புப் பெற்ற’ன. இதற்குச் சான்றாக, ‘புத்தர் பகன்றதாகக் கூறப்பெறுகின்ற விடையைக் குறிப்பிடலாம்.’
வச்சன் என்னும் துறவி கேட்ட கேள்வி:- “இறந்த பின்னர் முனிவர்கள் மீண்டும் பிறக்கின்றனரா?”
புத்தர் பகன்றதாகக் கூறப்பெறுகின்ற விடை:- “ அவன் மறுபிறவி எடுக்கின்றான் எனக் கூறுவது பொருந்தாது. அவன் மறுபிறவி எடுப்பது எடுக்காதது என்னும் இருநிலைக்குமுரியவன் எனச் சொல்வதும் பொருந்தாது. மறுபிறவி எடுப்பதும் எடுக்காததும் என்னும் இருநிலைகளுக்கும் உரியவனல்லன் எனக் கூறுவதும் பொருந்தாது. அவன் மறுபிறவி எடுப்பதில்லை என்று கூறுவதும் பொருந்தாது.”
- என அவர் கூறுவதாக அமைகின்ற கருத்து நம்முடைய தலையைப் பம்பரம் போல் சுழலச் செய்கின்றது. தொடர்ந்து,
“ அனைத்தும் உணர்ச்சிகள்; அனைத்தும் காட்சிகள்; அனைத்தும் முன்னிலைகள்; அனைத்தும் தன்னுணர்வுகள்; அவை யாவும் பிடுங்கி எறியப்பட்ட பனைமரம் போல் துறக்கப்படும்; வேரறுக்கப் பெறும்; பிடுங்கி எறியவும் படும்.”
எனக் கூறுவது கருத்துமுதல் அடிப்படையிலான ‘சார்பியல்’ கோட்பாட்டிற்கே மெள்ள இழுத்துச் செல்கின்றது. அதன் முதிர்ச்சி நிலையே மதியமிகம் படைத்த ‘வெறுமை(சூனியக்)’ கோட்பாடு. “உலகம் நிலையானதென நான் கருதவில்லை; அவ்வுலகம் நிலையில்லாததெனக் கூறவுமில்லை” என புத்தர் வச்சனுக்கு உரைத்ததாக மச்ஃசிம நிகாயம் என்னும் ஈனயான நூல் செப்புகின்ற கூற்றுங்கூட அத்தகைய சார்பியல் கோட்பாட்டிற்கே கொண்டுச் செல்கிறது.” [குணா பயன்படுத்தும்] கலைச்சொற்கள்: சார்பியல் - Relativism. கருத்து முதலியல் - Idealism. பொருள் முதலியல் - Materialism. வெறுமை(சூனிய)க்கோட்பாடு - Nihilism. [முன்னுள்ள கலைச்சொல் Nihilism என்பதை குணா பயன்படுத்தவில்லை.]
அடிப்படை[ஆதாரம்]
ஆய்வு அறிஞர் குணா, ‘தமிழர் மெய்யியல்,’ பொதுமை வெளியீடு, #16, மங்கேஷ் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17.

1.7.15

இது?

“மாப்பிள்ளை! மாப்பிள்ளை!” - நிமிடத்துக்கு மூன்று தடவையாவது ‘மாப்பிள்ளை’ என்று கூப்பிட்டுப் பேசியவர். சிரிப்பும் சுவாரசியமுமாகப் பேசியவர். “அப்புறம்..ஒங்க ஃப்ரெண்டு ஜெயராஜ் நத்தானியல் இப்ப எங்கே இருக்கார்?.." என்ற பாணியில், என் நண்பர்களைப் பற்றியும்; அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் பற்றியும் ஓயாமல் உற்சாகம் கொப்புளிக்கப் பேசியவர். சொந்த ஊர், திருச்சி. என்னுடன் பழகிய ஊர் கோவை. சொந்த வீடு, இயற்கைச் சூழலில், மருதமலை அருகில். உறவினருங்கூட. கோவை ஆர்.எஸ்.புரம் இரத்தின வினாயகர் கோயிலில் அவர் ஆற்றிய ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேட்க, எப்பொழுதும் கூட்டம் கூடும். கோவை மத்திய சிறைச்சாலையில் திருக்குறள் வகுப்புகள் எடுத்தபோது, என்னையும் அப்பணியில் ஈடுபடுத்தியவர். நல்ல அறிவாளி. ஆசிரிய(ர்)ப் பணியைத் தெய்வமாகக் கருதி வாழ்ந்தவர்.
ஓய்வு பெற்ற பின்னர், ஓர் ஆன்மிக அமைப்பில் சேர்ந்தார். நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது, அந்த ‘மிஷன்’ வெளியிட்ட புத்தகங்கள் பலவற்றை அள்ளிப் போட்டு, புதுச்சேரிக்கு ‘எடுத்துக் கொண்டுபோய்’ப் படிக்குமாறு கேட்டுக் கொண்டார். அந்தப் புத்தகச் சுமையையும் தூக்கிக் கொண்டு புதுச்சேரிக்குத் திரும்பினேன். படித்தேன். படித்தேன். படித்தேன். ஒன்றுமே என் ‘மண்டை’யில் ஏறவில்லை. ஒருநாள் தொலைபேசியில் பேசும்போது, இங்கே கிழக்குக் கடற்கரைச் சாலையில், அந்த அமைப்பைச் சேர்ந்தவர் ஒருவரின் அலைபேசி எண்ணைத் தந்து தொடர்பு கொள்ளச் சொன்னார். அந்த அமைப்பு வெளியிட்ட புத்தகங்களே என்னை ‘ஒருவழியாக்கி’விட்ட விவரத்தையும்; அவர் அலைபேசி எண் தந்த ந(ண்)பரைச் சந்திக்கத் தயக்கமாகவுள்ள விவரத்தையும் உண்மையுடன் சொன்னேன். “உங்களுக்குப் பிடிக்கவில்லையானால், உங்களுக்குத் தெரிந்தவர்கள் / நண்பர்கள் எவருக்கேனும் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்!” என்று சற்று கண்டிப்பாய்ச் சொன்னார். அவற்றைக் கொடுத்துப் படிக்கச் சொல்லுமளவு எனக்கு ‘ஆகாத’வர்கள் எவரும் புதுச்சேரியில் இல்லை என்பதால், ‘என்ன செலவானாலும் ஆகட்டும்’ என்று அவற்றையெல்லாம் தூதஞ்சலில் அவர் முகவரிக்கு அனுப்பினேன். அவருக்கு அவை கிடைத்து விட்டதை தூதஞ்சல் அலுவலகமும் உறுதி செய்தது. அவ்வளவுதான்...
சில ஆண்டுகளுக்கு முன்பே, ‘மாப்பிள்ளை’ என்று அழைத்து, சிரித்துச் சிரித்துப் பேசும் பழக்கத்தைக் கைவிட்டு விட்டவர், இப்பொழுது, நானே அலைபேசியில் பேசினாலும் எடுக்காமல், ஒரே முறை “எதையும் கடிதமாக எழுதுங்கள்; அஞ்சல் செய்யுங்கள். படித்துக் கொள்கிறேன்.. மின்னஞ்சல் பழக்கமெல்லாம் எனக்கில்லை..” என்று சொல்லி, பேசியை வைத்து விட்டார்.
ஒரு கிழமைக்கு முன் திருச்சிராப்பள்ளியிலிருந்து பேசிய நெருங்கிய உறவினர், "என்ன ..[உறவுப்பெயர்]..! “அவர்” உங்களை விட எவ்வளவு பெரியவர்.. எப்படிப் பயணம் செய்கிறார், எங்களைப் போல, எத்தனை சொந்த பந்தங்கள சந்திக்கிறார்.. அவரப்போய் வேதனைப்படித்திட்டீங்களே.. அவரும் இருக்கார். நீங்களும்தான் இருக்கீங்க.. என்ன பிரயோஜனம்,”.. என்று தொடர்ந்தார்.
தான், என் சிற்றப்பா மகளான அக்காவைத் திருமணம் செய்து கொண்ட பின்னர், பல ஆண்டுகள் என்னுடன் மிக நெருங்கிப் பழகி, தான் ஓய்வுபெற்ற பின்னர், மக்களுக்குப் பயன்படாத ஓர் ஆன்மீக இயக்கத்தில் தான் சேர்ந்து, அவரைப்போல் நானும் என் மனச்சான்றை விட்டு(ற்று)விடாததற்காக, என்னை முற்றிலும் ஒதுக்கி வைத்ததுடன், என் உறவினரிடமும் ‘நல்ல பெயர்’ வாங்கிக்கொள்ளும் அவர் ‘பணி’ வாழ்க!
பத்தாண்டுகளுக்கு முன்னர், சென்னையில், எம் குடும்பத்தை அன்புடன் அரவணைத்துக் காத்த அண்ணன்வழி உறவினரும் பெரியதோர் ஆன்மீக அமைப்பைச் சார்ந்தவர்களே. அது ஆன்மீகம்.
இது?