5.7.15

நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ (“சே பியா[ன்] அமியபிள் ஆ வூ மிசியே Krishna Nagarathinam B-) ’’)

முந்தி முந்தி மிகவும் விலாவாரியாக எழுதுவேன். நண்பர்களின் புத்தகங்களென்றால் சொல்லவே வேண்டாம். நாகரத்தினம் கிருஷ்ணா படைத்த ‘நீலக்கடல்’ நாவலுக்கும் மதுமிதா தமிழாக்கம் செய்த ராஜா பர்த்த்ருஹரியின் ‘சுபாஷிதம்’ சாத்திரத்துக்கும் மிக விரிவான மதிப்பீடுகளைத் ‘திண்ணை’யில் எழுதினேன். ‘கீற்று’-வில் அயோத்திதாசர் குறித்து எழுதினேன். ‘புதுச்சேரி’ வலையேடு தொடங்கி ‘மரத்தடி’ ‘வார்ப்பு’ ‘திண்ணை’ ‘கீற்று’ முதலான வலையேடுகளில் நீண்ட பயணம். பெண் பெயரில் ‘நிலாச் சாரல்` முதலானவற்றில்.
வாழ்க்கையில் ஒன்றைக் கற்றுக்கொண்டேன். வளவள என்றெழுதுவது கூடாது. திரைப்படம், புதினம் போலவே நம் எழுத்தாடல்களுக்கும் - தொகுத்தல் / Editing மிகமிக அவசியம் என்றெல்லாம் நேரில் பயிற்றுவித்த புதுச்சேரி வானொலியின் மேனாள் ஒருங்கிணைப்பாளரும், என் மேனாள் மாணவருமான திரு சிவப்பிரகாசமும்; தேவமைந்தனின் வலையேட்டு வாழ்க்கைக்குப் ‘பிள்ளையார் சுழி’போட்ட மேனாள் மாணவர் முனைவர் நா. இளங்கோ Ilango Nagamuthu அவர்களும்; வீட்டுக்கு வந்து வலையுலகம் தொடர்பாக எதையெல்லாம் செய்யலாம்,, முக்கியமாக செய்யக்கூடாதவை எவையெவை என்று பிள்ளைக்குக் கற்றுத் தருவதுபோல் கற்பித்த நண்பர் பாவலர் இராஜ. தியாகராஜன் அவர்களும்; துரோணர், ஏகலைவனுக்குப் பயிற்றுவித்தது போல் என் பெயரன் வழி புத்தக வடிவில் அருவமாக இல்லம் வந்து கற்றுத்தந்த Vishwas Mudagal [‘Today what you hold in your hands is the 14th version of the book.’ Author’s note. P. 9. ‘Losing My Religion’ (novel) FINGERPRINT! 2014] அவர்களும் - இந்த ‘சைபர் உலகில்’ எனக்குத் தொடக்கப்பள்ளி முதல் பல்கலை வரையிலான ஆசிரியர்கள்.
அதிலும், முகநூல் போன்ற சமூக வலைதளத்தில் - விடைத்தாள்களை ‘பக்குவமான’ ஆசிரியர்கள் திருத்துவது போலவும்; தமிழ்த் தந்தி [usage of Krishna Nagarathinam] படிக்கும் / பார்க்கும் நண்பர்கள் போலவும்தான் நம் பதிவுகளைப் பாஆஆஆர்த்து Like பதிகிறார்கள் என்பதை நன்கு அறிவேன். இந்த Like போடுவதற்குக்கூட, “பாத்திரம் அறிந்து பிச்சை இடு” என்ற தமிழ் மூதுரையைப் பின்பற்றும் பலரை நான் நன்கறிவேன்.
இதனால்தான், நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ நாவலின் 13 - 308 பக்கங்களான நாவலையும் 309-310 பக்கங்களில் வரும் ‘பிரெஞ்சு சொற்கள்’ பட்டியலையும் விடாமல் வாசித்துவிட்டு, சமைந்துபோய் உடகார்ந்திருக்கிறேன்.[‘சமைந்துபோய்’ - யை, சினிமாப் பாடலாசிரியர்கள் கோணத்தில் கண்டுகொள்ளாதீர்கள்!]
இந்த நேரத்தில் நண்பர் பஞ்சு Panjangam Kaniyappan அவர்களின் திறத்தை என்னால் வியக்காமல் இருக்க முடியாது. நெடுநாள் நண்பராயினும் சற்று விலகி நின்று அவருடைய ‘ விமர்சனப் பார்வை’யையும்; கடகடவென்று எழுதிவரைந்து செல்லும் அரியவகை எழுத்தாற்றலையும் ஆச்சரியத்துடன், லாலி பாப் குவியலை அண்ணாந்து பார்க்கும் குட்டிப் பையனாக வியந்து பார்க்கிறேன். நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘கோபால கிருஷ்ண கெளமுதி’ வரலாற்று நாவலையே காலச்சுவடு அச்சேட்டில், த.ஜெ. பாணியில் சொன்னால் ‘விமரிசையான விமர்சனம்’ செய்தவரல்லவா Panjanganm Kaniappan என்ற ஐடியிலுள்ள பஞ்சாங்கம் என்கிற நண்பர் பஞ்சு!
இது இவ்வாறு இருக்க, எங்கள் புதுச்சேரி முதலியார்ப்பேட்டையைச் சேர்ந்த வாழ்முனி மகன் பாலனுடனும்; தமிழ்த் தந்தியில் ‘நியூஸ்’ வருமளவுக்கு பாலன் தமிழ்முறைப்படி திருமணம் செய்துகொண்ட செக் குடியரசின் குடிமகள் அத்ரியானாவுடனும்; முன்பே நா.கி. எழுத்துவழி பழகிவிட்ட பாரதியுடனும் ஹரிணியுடனும்; சர்சலில் தன் தமக்கையுடன் இரண்டாண்டுகள் வாழ்ந்து, அங்கே இருக்கப் பிடிக்காமல் வெளியேறி, பிரான்சில் வாழ்வதற்கு ஏற்ற அத்தாட்சிப் பத்திரங்கள் கையிலில்லாததால் வழக்குக்கிழுபடும் - 2009 போரில் பெற்றோர்களை இழந்ததுடன் இலங்கை ஆர்மியால் புலிகளியக்கம் சார்ந்தவள் என்று சந்தேகத்துக்காளாகி உயிரையும் உடலையும் அந்த ‘...வர்’களிடம் விட்டுவிடக் கூடாதே என்ற ஆதங்கத்துடன், சகமனிதர்களை மதிக்கும் பிரான்சுக்கு வந்து வாழும் யாழ்ப்பாணவாசியான நித்திலாவுடனும் [குறிப்பாக நித்திலாவுக்கு மொழிபெயர்ப்பாளராக மட்டுமே உதவ வேண்டிய, ஆனால், இனந்தெரியாமல் அவளுக்காகப் பரிந்து பாடுபடும் ஹரிணியும் என்னுடன் வாழும் சகோதரிகளாகவே உணர்கிறேன்]; எனக்கு மிகவும் பிடித்த ‘மனத்தால் பழுத்த’ சாமி உடனும்; லக்னகுமாரனுடனும்; சகஜமான கமீலியுடனும்; ‘அசிஸ்டெண்ட் சோஷியால்’ எலிஸபெத்துடனும் [இதே வகைமாதிரிப் பெண்ணுடன் 1990+இல் நான் மட்டுமல்ல துணைவியாரும் நெருங்கிப் பழகியிருக்கிறார்; இப்பவும் பிரான்சிலுள்ள என் சகலைகொழுந்தியர் குடும்பத்தார்க்கு அவர் உதவி வருகிறார்]; .. இந்தியாவின் வடக்குக் கிராமத்து மங்லி வரை .. ஓ, முக்கியமாக காஃப்காவுடனும் அவருடைய ‘இருப்பை’ப் புத்துயிர்க்கும் நாய்க்குட்டி வரை .. பலருடன் தற்கணம் வாழ்ந்து வருகிறேன். ‘இடைவெளி’ இருந்தால்தானே விரிவாக எழுத முடியும்?
பின்னொரு முறை, இதைத் தொடர்கிறேன். நாகரத்தினம் கிருஷ்ணாவுடன் நான்பழக நேர்ந்ததற்குப் புதுச்சேரி மட்டுமே காரணமல்ல. தகழி முதல் த.ஜெயகாந்தன் வரை; ஜெய்புன்னிசா அக்கா முதல் சகோதரி மதுமிதா வரை அன்புடன் பழகியவன் நான். இவர்களெல்லோரையும் விட நாகரத்தினம் கிருஷ்ணா என்னை இதுநாள் வரை, சகித்துக் கொண்டு, நட்புடன் உள்ளவர் என்பதற்காகவே நான் நிறைய எழுத வேண்டும். எங்கே..
அண்மையில், ‘நஞ்சுண்ட காடு’ -க்கு என் சகோதரி அல்விற் வசந்தராணி வின்சென்ற் முகநூலில் எழுதிய மதிப்புரையைப் பார்த்து, படித்து, கொண்ட பொறாமையிலிருந்து இன்னும் மீளாத நிலையில் நான் இருக்கிறேன். என் பொறாமை ஆக்க வழியிலானது என்பதால் தங்கை சினந்துகொள்ள மாட்டார்.
உங்கள்,
தேவமைந்தன் என்னும் புனைபெயரிய அண்ணன் பசுபதி (எ) கருப்பண்ணன் பசுபதி (எ) பசுபதி இராமலிங்கம்

3.7.15

புத்தர் அணுகுமுறை எவ்வளவு மெய்ப்பொருளானது - என்பதற்கு ஆய்வு அறிஞர் குணா மேற்கோள்களுள் ஒன்று!

மெய்ப்பொருள் குறித்து மதவாதிகள் பலவாறாகத் தருக்கம் செய்துவந்த காலமொன்று இருந்தது. அப்பொழுது புத்தர் கருத்துகள் ‘சிம்ம சொப்பன’ங்களாக மாற்று மதத்தவர்க்குத் தோன்றி வந்தன. ஆனால், புத்தரோ எளிய வலியவர். எதையும் அதிரடியாகச் சொல்லாதவர். தடாலடித் தத்துவஞானியல்லர் புத்தர். உண்மையான மெய்ப்பொருளாளர்.
[இனி வருபவை அறிஞர் குணா கருத்துகள்]
ஒரு காலகட்டத்தில் ‘கருத்துமுதல் கூறுகள் பொருள்முதலியலை மறுத்துச் சிறப்புப் பெற்ற’ன. இதற்குச் சான்றாக, ‘புத்தர் பகன்றதாகக் கூறப்பெறுகின்ற விடையைக் குறிப்பிடலாம்.’
வச்சன் என்னும் துறவி கேட்ட கேள்வி:- “இறந்த பின்னர் முனிவர்கள் மீண்டும் பிறக்கின்றனரா?”
புத்தர் பகன்றதாகக் கூறப்பெறுகின்ற விடை:- “ அவன் மறுபிறவி எடுக்கின்றான் எனக் கூறுவது பொருந்தாது. அவன் மறுபிறவி எடுப்பது எடுக்காதது என்னும் இருநிலைக்குமுரியவன் எனச் சொல்வதும் பொருந்தாது. மறுபிறவி எடுப்பதும் எடுக்காததும் என்னும் இருநிலைகளுக்கும் உரியவனல்லன் எனக் கூறுவதும் பொருந்தாது. அவன் மறுபிறவி எடுப்பதில்லை என்று கூறுவதும் பொருந்தாது.”
- என அவர் கூறுவதாக அமைகின்ற கருத்து நம்முடைய தலையைப் பம்பரம் போல் சுழலச் செய்கின்றது. தொடர்ந்து,
“ அனைத்தும் உணர்ச்சிகள்; அனைத்தும் காட்சிகள்; அனைத்தும் முன்னிலைகள்; அனைத்தும் தன்னுணர்வுகள்; அவை யாவும் பிடுங்கி எறியப்பட்ட பனைமரம் போல் துறக்கப்படும்; வேரறுக்கப் பெறும்; பிடுங்கி எறியவும் படும்.”
எனக் கூறுவது கருத்துமுதல் அடிப்படையிலான ‘சார்பியல்’ கோட்பாட்டிற்கே மெள்ள இழுத்துச் செல்கின்றது. அதன் முதிர்ச்சி நிலையே மதியமிகம் படைத்த ‘வெறுமை(சூனியக்)’ கோட்பாடு. “உலகம் நிலையானதென நான் கருதவில்லை; அவ்வுலகம் நிலையில்லாததெனக் கூறவுமில்லை” என புத்தர் வச்சனுக்கு உரைத்ததாக மச்ஃசிம நிகாயம் என்னும் ஈனயான நூல் செப்புகின்ற கூற்றுங்கூட அத்தகைய சார்பியல் கோட்பாட்டிற்கே கொண்டுச் செல்கிறது.” [குணா பயன்படுத்தும்] கலைச்சொற்கள்: சார்பியல் - Relativism. கருத்து முதலியல் - Idealism. பொருள் முதலியல் - Materialism. வெறுமை(சூனிய)க்கோட்பாடு - Nihilism. [முன்னுள்ள கலைச்சொல் Nihilism என்பதை குணா பயன்படுத்தவில்லை.]
அடிப்படை[ஆதாரம்]
ஆய்வு அறிஞர் குணா, ‘தமிழர் மெய்யியல்,’ பொதுமை வெளியீடு, #16, மங்கேஷ் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17.

1.7.15

இது?

“மாப்பிள்ளை! மாப்பிள்ளை!” - நிமிடத்துக்கு மூன்று தடவையாவது ‘மாப்பிள்ளை’ என்று கூப்பிட்டுப் பேசியவர். சிரிப்பும் சுவாரசியமுமாகப் பேசியவர். “அப்புறம்..ஒங்க ஃப்ரெண்டு ஜெயராஜ் நத்தானியல் இப்ப எங்கே இருக்கார்?.." என்ற பாணியில், என் நண்பர்களைப் பற்றியும்; அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் பற்றியும் ஓயாமல் உற்சாகம் கொப்புளிக்கப் பேசியவர். சொந்த ஊர், திருச்சி. என்னுடன் பழகிய ஊர் கோவை. சொந்த வீடு, இயற்கைச் சூழலில், மருதமலை அருகில். உறவினருங்கூட. கோவை ஆர்.எஸ்.புரம் இரத்தின வினாயகர் கோயிலில் அவர் ஆற்றிய ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேட்க, எப்பொழுதும் கூட்டம் கூடும். கோவை மத்திய சிறைச்சாலையில் திருக்குறள் வகுப்புகள் எடுத்தபோது, என்னையும் அப்பணியில் ஈடுபடுத்தியவர். நல்ல அறிவாளி. ஆசிரிய(ர்)ப் பணியைத் தெய்வமாகக் கருதி வாழ்ந்தவர்.
ஓய்வு பெற்ற பின்னர், ஓர் ஆன்மிக அமைப்பில் சேர்ந்தார். நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது, அந்த ‘மிஷன்’ வெளியிட்ட புத்தகங்கள் பலவற்றை அள்ளிப் போட்டு, புதுச்சேரிக்கு ‘எடுத்துக் கொண்டுபோய்’ப் படிக்குமாறு கேட்டுக் கொண்டார். அந்தப் புத்தகச் சுமையையும் தூக்கிக் கொண்டு புதுச்சேரிக்குத் திரும்பினேன். படித்தேன். படித்தேன். படித்தேன். ஒன்றுமே என் ‘மண்டை’யில் ஏறவில்லை. ஒருநாள் தொலைபேசியில் பேசும்போது, இங்கே கிழக்குக் கடற்கரைச் சாலையில், அந்த அமைப்பைச் சேர்ந்தவர் ஒருவரின் அலைபேசி எண்ணைத் தந்து தொடர்பு கொள்ளச் சொன்னார். அந்த அமைப்பு வெளியிட்ட புத்தகங்களே என்னை ‘ஒருவழியாக்கி’விட்ட விவரத்தையும்; அவர் அலைபேசி எண் தந்த ந(ண்)பரைச் சந்திக்கத் தயக்கமாகவுள்ள விவரத்தையும் உண்மையுடன் சொன்னேன். “உங்களுக்குப் பிடிக்கவில்லையானால், உங்களுக்குத் தெரிந்தவர்கள் / நண்பர்கள் எவருக்கேனும் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்!” என்று சற்று கண்டிப்பாய்ச் சொன்னார். அவற்றைக் கொடுத்துப் படிக்கச் சொல்லுமளவு எனக்கு ‘ஆகாத’வர்கள் எவரும் புதுச்சேரியில் இல்லை என்பதால், ‘என்ன செலவானாலும் ஆகட்டும்’ என்று அவற்றையெல்லாம் தூதஞ்சலில் அவர் முகவரிக்கு அனுப்பினேன். அவருக்கு அவை கிடைத்து விட்டதை தூதஞ்சல் அலுவலகமும் உறுதி செய்தது. அவ்வளவுதான்...
சில ஆண்டுகளுக்கு முன்பே, ‘மாப்பிள்ளை’ என்று அழைத்து, சிரித்துச் சிரித்துப் பேசும் பழக்கத்தைக் கைவிட்டு விட்டவர், இப்பொழுது, நானே அலைபேசியில் பேசினாலும் எடுக்காமல், ஒரே முறை “எதையும் கடிதமாக எழுதுங்கள்; அஞ்சல் செய்யுங்கள். படித்துக் கொள்கிறேன்.. மின்னஞ்சல் பழக்கமெல்லாம் எனக்கில்லை..” என்று சொல்லி, பேசியை வைத்து விட்டார்.
ஒரு கிழமைக்கு முன் திருச்சிராப்பள்ளியிலிருந்து பேசிய நெருங்கிய உறவினர், "என்ன ..[உறவுப்பெயர்]..! “அவர்” உங்களை விட எவ்வளவு பெரியவர்.. எப்படிப் பயணம் செய்கிறார், எங்களைப் போல, எத்தனை சொந்த பந்தங்கள சந்திக்கிறார்.. அவரப்போய் வேதனைப்படித்திட்டீங்களே.. அவரும் இருக்கார். நீங்களும்தான் இருக்கீங்க.. என்ன பிரயோஜனம்,”.. என்று தொடர்ந்தார்.
தான், என் சிற்றப்பா மகளான அக்காவைத் திருமணம் செய்து கொண்ட பின்னர், பல ஆண்டுகள் என்னுடன் மிக நெருங்கிப் பழகி, தான் ஓய்வுபெற்ற பின்னர், மக்களுக்குப் பயன்படாத ஓர் ஆன்மீக இயக்கத்தில் தான் சேர்ந்து, அவரைப்போல் நானும் என் மனச்சான்றை விட்டு(ற்று)விடாததற்காக, என்னை முற்றிலும் ஒதுக்கி வைத்ததுடன், என் உறவினரிடமும் ‘நல்ல பெயர்’ வாங்கிக்கொள்ளும் அவர் ‘பணி’ வாழ்க!
பத்தாண்டுகளுக்கு முன்னர், சென்னையில், எம் குடும்பத்தை அன்புடன் அரவணைத்துக் காத்த அண்ணன்வழி உறவினரும் பெரியதோர் ஆன்மீக அமைப்பைச் சார்ந்தவர்களே. அது ஆன்மீகம்.
இது?


23.6.15

எனக்கு வந்த மின்னஞ்சல்

அன்பு ....க்கு,
நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.
ஐ.டி. வாழ்க்கை தொடர்பான உங்கள் இமெய்லை சுயநினைவுடன்தான் எழுதினீர்களா? எந்த வகையில் நாங்கள் உங்களைச் சீண்டுகிறோம்... நீங்கள்தான் யதார்த்தமான எங்களைக் குறைசொல்லி, ஏதோ செயற்கையாக நாங்கள் வாழ்வதாகவும்.. .. இன்னும் என்னென்னவோ எழுதி இருக்கிறீர்கள். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் வாரமும் மாதமும் வருடமும் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே போவதும் இயற்கையின் ஒரு அங்கம் தான். நாங்களும் இயற்கையின் பிள்ளைகள்தான்.
நம்மிருவருக்கும் இடையில் இருக்கும் வயது வித்தியாசத் தைக்கூட, நீங்கள் கலாய்க்கும் இந்த ஐ.டி., நாம் ப்ரவுஸ் செய்ய சந்தித்த நெட் சென்டர் conversations களும்; என்னிடமிருந்து நீங்கள் வாங்கிக்கொண்ட நவீன வாசிப்புகளும் எந்த அளவுக்குக் குறைத்து விட்டிருக்கின்றன என்பதையாவது புரிந்து கொள்ளுங்கள். ஐன்ஸ்டீன் சொன்ன தியரி ஆஃப் ரிலேடிவிட்டி’யில் இந்த உறவும் புரிதலும்கூட அடங்கும்.
Vishwas Mudagal எழுதிய Losing My Religion நாவலில் என்ன குறை கண்டீர்கள்..? இன்றைய நவீன தொழில் நுட்பத்தில் திறமையும் புகழும் மிக்க ‘தொழில் முனைவோராக’ வளர்ந்தும், பாழாய்ப்போன mass support இல்லாமல் போவதால், ரிஷி என்னுமொருவன் உடைந்து சிதறிப் போனாலும்; தன் சொந்த நண்பர்களே தன்னை அதைரியப்படுத்தினாலும்; ஓரிரவு trance மாதிரி ஒரு மனநிலையில் 130 கிமீ தொலைவுக்குத் தன் SUV காரை, வழியில் யாரையும் கொல்லாமல் தானும் சாகாமல் ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு விரட்டுவதும்; விடிகாலைக்குமுன் 03 மணிக்கு காவிரியின் கரைமணலில் வானத்தைப் பார்த்துப் படுத்துக் கொண்டு, சின்ன வயதிலிருந்தே தான் மானசீகத் தொடர்பு கொண்டு வரும் நட்சத்திரக் கூட்டத்தைப் பார்த்து, தனக்கொரு அடையாளம் காட்டுமாறு கதறுவதும், அந்தமாதிரி ‘அலெக்ஸ் ‘ அவனுக்கு அடையாளம் காட்டப்படுவதும்; தன்னிடம் சொத்து என்று உண்டேயான ஒரேயொரு SUV ஐயும் விற்றுவிட்டு காசாக்கி.. ஆயிரக்கணக்கிலான கி.மீ. பயணம் செய்து, ஹிமாலயத்தின் சாரல் பள்ளத்தாக்கில், கடல்மட்டத்துக்கு 3029 மீட்டர் உயரமுள்ள மலானா கிராமத்தில், இந்த வாழ்க்கையின் நிதர்சனத்தைப் புரிந்துகொள்கிறானே - அது, இயற்கைதரும் பாடமில்லையா.. இதற்குப் பின்னால், ரிஷியும் அலெக்ஸும் நிகழ்யுகப் பெண்ணான கைரா’வைச் சந்தித்த பிறகு உணர்வது மேன்மைமிக்க வாழ்வில்லையா? ‘பொருளாயத உலகில் அந்த வானத்தின் நட்சத்திரங்களுக்கு ஈடாக உயர்ந்து காட்டுகிறேன் பார்!’ ‘இந்த உலகத்தையே மாற்றிக்காட்டுகிறேன் பார்!’ என்று சவால் விட்டு வாழும் ரிஷி; வற்றிவரண்ட மேலைக்கலாச்சாரத்தையும் -போர்போர்போர் என்று வெறிபிடித்தலையும் சட்டாம்பிள்ளைத்தனமான உள்நோக்கு அரசியலையும் முற்றிலும் வெறுத்து... ‘தன்னிருந்தே தான் விடுபட’ தவம் கொள்வதற்காக, எங்கோ உள்ள இந்தியாவை நேசித்து ஓடிவரும் அறிவியலின் மாற்றுப் பிரதியும் மனிதப் பரிணாம வர்ணமாலையின் முரண்பாட்டுக்குரிய செறிவான தேடலின் பிதாமகனுமான அலெக்ஸ்; இந்த ஆண்கள் இருவரிடமிருந்தும் முழுசாக வித்தியாசமாகி, அன்பு - அழகு - இரக்கம் - கருணை - பாசம் - உள்ளுணர்வு - அறிவான வாழ்க்கை ஆகியவற்றை இயல்பாக வரித்துக்கொண்டுள்ள நவீனப் பெண்மையின் பிரதிநிதியாகும் கைரா. இவர்கள் மூவருக்குள்ளும் மிகவும் எதேட்சையாக, ஏதோ ஒரு - பச்சைக்கண்களுள்ளவர்கள்[Greek Origin] தங்கள் சுயமிழக்காது வாழும் மலானா கிராமத்தில் உருவாகும் அர்த்தமுள்ளதும் ஆழ்ந்ததுமான அன்பூகூடிய நட்புக்கும் புரிந்துணர்வுக்கும் இடந்தந்து வாழ்வது வாழ்க்கையா? சும்மா, அன்பு இயற்கை என்று வளவளவென்று பேசுவதும், அரைத்தமாவையே நல்லாப்புளித்தபின்னாலும் விடாமல் அரைத்துப் புத்தகங்கள் போடுவதும், அடுத்தவர்கள் எவருக்கும் அந்தப்பற்றில்லை இந்தப்பற்றில்லை என்று குறைசொல்லிக் குற்றம் சுமத்திக் கொண்டே இருப்பதும்தான் வாழ்க்கையா.. அல்லது பேட்டரி போட்ட கரடிபொம்மைபோல சுயமோகிகளாய் சுயமாரடித்து வாழுவது வாழ்க்கையா ... சிந்தித்துப் பாருங்கள். சிந்தியுங்கள் போதும். வயதான காலத்தில், இதற்கு மெனக்கெட்டு பதிலெழுதிக் கொண்டிருக்க வேண்டாம். சரிதானே...
உங்களுடன் என்றும் முரண்படுவதில் சந்தோஷப்படும்,
.. ....


9.6.15

தமிழ்மணி வி.ஆர்.எம். செட்டியார் அவர்களின் - கீதாஞ்சலி தமிழாக்கம்

1962 ஆம் ஆண்டில் ஏழாம் பதிப்பைக் கண்டது, தமிழ்மணி வி.ஆர்.எம். செட்டியார் அவர்களின் - கீதாஞ்சலி தமிழாக்கம். காரைக்குடி, செல்வி பதிப்பகம் இதைப் பதிப்பித்தது. அந்தக் காலத்தில், 'பி.ஏ.' என்பதே பெரிய படிப்பு. அதனால்தான் தமிழ்மணி வி.ஆர்.எம். செட்டியார் அவர்களின் பெயருக்குப் பின் 'பி.ஏ.' என்ற பட்டத்தை 1950களிலேயே பதிப்பகங்கள் அச்சிடலாயின. தாகூரின் உணர்வு குன்றாமல், அவருடைய கீதாஞ்சலியின் நூற்று மூன்று கவிதைகளை எளிய தமிழில் செட்டியார் அவர்கள் தமிழாக்கினார். பானைச்சோற்றுக்குப் பதமொன்று இதோ: "எங்கு மனம் பயமற்று விளங்குகிறதோ, எங்கே தலை கம்பீரமாய் நிமிர்கிறதோ, எங்கு அறிவு சுதந்திரத்துடன் பொலிகிறதோ, எங்கு குறுகிய சாதிமதப் பிளவுகளால் உலகம் உடையாமல் உருப்பெற்றிருக்கிறதோ, எங்கு உண்மையின் ஆழத்தினின்று சொற்கள் உதயமாகின்றனவோ, எங்கே தளரா முயற்சி பரிபூரணத்தை நோக்கி கைகளைப் பரப்புகிறதோ, எங்கு பகுத்தறிவெனும் தெளிந்த ஆறு மாண்டொழிந்த பழக்கங்களான பயங்கரப் பாலைமணலில் பாயாது மீள்கிறதோ, எங்கே விரிந்தசிந்தனையிலும் செயலிலும் எனது உள்ளத்தை நினது அருள் இழுத்துச் செல்லுகின்றதோ, அந்தச் சுதந்திர சுவர்க்கத்தில், என் அப்பனே, எனது நாடு விழித்தெழுவதாக!" - கீதாஞ்சலி 35.

31.5.15

நாகரத்தினம் கிருஷ்ணா, ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ மழையும் கடற்கரை மனிதர்களும் - தேவமைந்தன் முகநூல் குறிப்பு

“கோடையில் கடைசிவரை ஏமாற்றப் பழகி, விரக்தி எச்சிலாய் நாக்கில் துளிர்க்கும் மழை. ஆடிமாதத்தில் வீட்டிற்குள் நுழைவதற்குள் இடியும் மின்னலுமாய்ச் சடசடவென்று பெய்து நம்மைத் தொப்பலாக நனைத்துத் தெருவில் புழுதியாய் மணக்கும் மழை. போதும் போதும் என்று புலம்பினாலும் இரவு பகலாக இடைவிடாமல் ஹோவென்று மண்ணில் இறங்கி, ஐப்பசி கர்த்திகை மாதங்களில் பூமியை வெள்ளக்காடாக மாற்றி நொப்பும் நுரையுமாகப் பாய்ந்து கடலை ஆர்ப்பரிக்க வைக்கிற மழையென அப்பாவாலறிமுகப்படுத்தப்பட்ட மழைதான் எத்தனைவிதம். தனது இறப்புக்கூட ஒரு மழைநாளில் நடைபெற வேண்டுமெனத் தீர்மானித்தவர்போல, இவள் பார்த்துக்கொண்டிருக்க அவர் கடலில் இறங்கியதும், கரையில் நின்று கதறியதும், உப்பிய வயிறும் சிவந்த கண்களும் ஈக்கள் மொய்க்கும் மூக்குமாக வாசலில் கிடத்தியிருந்த அப்பாவை எரிக்க ஈரவிறகிற்கு டின் டின்னாக மண்ணெண்ணெய் தேவைப்பட்டதை அரிச்சந்திரன் கோவிலில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்ததும் நேற்று நடந்ததுபோல இருக்கிறது. மழைகாரணமாக இரண்டு நாட்கள் தொடர்ந்து அவர் உடலை எரிக்க வேண்டியிருந்ததென்று வெட்டியான் சொன்னான். அப்பாவைத் தீயில் எரித்ததைவிட...”
“ஹரிணி!”
“மழையிற் கரைத்திருக்கலாம்” -- கையிலிருந்த நாவலை மூடி விட்டு, தன் பெயரைச் சொல்லி அழைத்த மனிதரை நிமிர்ந்து பார்த்தாள்.”
- நாகரத்தினம் கிருஷ்ணா, ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பக்.70-71

26.5.15

"என்ன பண்ணிக் கிழிச்சீங்க?" - பட்டுக்கோட்டை பாணியில் கேட்கும் 'அதிகம் படிக்காதவர்''...

நடைப்பயிற்சிப்பூங்காவிலோ கடற்கரையிலோ அல்லாமல், காலையிலேயே தனியார் பேருந்துகள் தங்கள் ஆற்றலையெல்லாம் காட்டி விரையும் விமானதளச் சாலையிலும் தொல்காப்பியர் சாலையிலும் [புதுச்சேரி நண்பர்களே! எனக்கு ஒரு சந்தேகம்: நாவலர் நெடுஞ்செழியன் மேனிலைப் பள்ளியும்; புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமும் உள்ள சாலை, தொல்காப்பியர் சாலைதானே?] காலை நடைப்பயிற்சிக்குப் போய் வந்து, ஏறுவெயில் வந்துவிடுமுன் 'பண்ணுருட்டிக்காரர் கடை'யில் காய்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் பொழுது, நெடுநாள் பழக்கமான நண்பர் என்னை நிறுத்தி - "ஒங்க தினத்தந்தியிலேயே ஒவ்வொரு செவ்வாக்கிழமையும் 'கல்வி செய்திகள்' என்று தலைப்பு போட்டு "ஆங்கிலம் மிகவும் அவசியம்"ன்னு பக்கத்தையே அடைச்சுட்டு ஒரு தொடரை, 37 வாரமா போட்டுட்டுருக்காங்க. பள்ளி விளம்பரங்கள்'லயோ - " அனைத்துப் பாடங்களும் மிகச்சிறப்பாக ஆங்கிலவழிக் கல்வியில் போதிக்கப்படுகின்றன / A Futuristic English Medium School" - அப்படி'ன்னு பெற்றோரையெல்லாம் இழுத்துட்'ட்ருக்காங்க! இதையெல்லாம் எதிர்த்து ஆக்கபூர்வமா எதையும் சாதிக்காம, ஒண்ணு, நம்ம தமிழரையெல்லாம் பேடி கீடி'ன்னு திட்றாங்க.. இல்லேன்னா, அரசு அங்கீகாரமில்லாத பள்ளிகள தாங்களே திறந்து காசுபாக்க முயற்சிக்கிறாங்க! பாருங்க.. இப்'டியே போனா, "அனைத்துப் பாடங்களும் மிகச்சிறப்பாக ஹிந்திவழிக் கல்வியில் போதிக்கப்படுகின்றன / A Futuristic Hindi Medium School" அப்படீன்னு விளம்பரங்க வரப்போவுது! நம்ம ஜனங்க அந்த பள்ளிகள்'ல பிள்ளங்'கல சேத்த 'லோலோ'ன்னு அலையப் போவுதுங்க!" என்றார். அவர் அதிகம் படிக்காதவர். ஆனால், சொல்லொன்று செயலொன்று என்றில்லாதவர். தன் பிள்ளைகளை அரசுப்பள்ளிக்கு அனுப்புகிறவர். ஒரு கட்சியைச் சார்ந்தவர். எதையும் நேரடியாகப் பேசுபவர். அவருக்கு என்னால் உரிய மறுமொழி சொல்ல ஏலவில்லை. என் பிள்ளைகளை, அரசுப் பள்ளிகளிலேயே படிக்க வைத்தவன் நான். ஆனால், என் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளிலும் நடுவண் அரசுப் பள்ளிகளிலும் சேர்த்துப் படிக்க வைப்பதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாதவன். பேரப்பிள்ளைகளை, என் நண்பர்கள்முன், அவர்களின் பெற்றோர் வைத்த பெயர்களை வைத்தே அழைக்கிறேன். நண்பர் சொன்னதை 'உள்ளதை உள்ளவாறு' உங்கள்முன் வைக்கிறேன். அதற்குத்தானே முகநூல்!