26.10.09

‘திருக்குறளும் உலகமும்’ - தமிழ்த்தந்திப் புலவர் அ.சிவலிங்கம் புத்தகங்கள் -தேவமைந்தன் ‘சிவலிங்கனாரின் - உலகக் கவிதைகள் மொழியாக்கம்’ என்ற தலைப்பில் திண்ணை.காம் வலையேட்டில் வந்த கட்டுரைக்கும்(வியாழக்கிழமை நவம்பர் 30, 2006), பின்னர் ‘தமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்த அ.சிவலிங்கனார்’ என்ற தலைப்பில் ‘கலாபதி’ என்ற வலைப்பதிவில்(திங்கட்கிழமை திசம்பர் 8, 2008) இடுகை பெற்று மலேசிய நண்பர் சுப.நற்குணன் முதலானவர்களால் பாராட்டப்பெற்ற கட்டுரைக்கும் நாயகரே அ.சிவலிங்கம். தன் முதுமை - நோய் எதையும் பொருட்படுத்தாது இவர் எழுதியுள்ள நூல்களே ‘திருக்குறளும் உலகமும்’ இரண்டு பகுதிகள். முதலாவது 262 பக்கங்கள். இரண்டாவது 425 பக்கங்கள். உழைப்பிற்காகவும் புதிய அணுகுமுறைக்காகவும் மனமுவந்து பாராட்டத்தக்க புத்தகங்கள் இவை. திருக்குறளுக்கு உரையாசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோர் நோக்குகளைத் தாண்டி உலகச் சிந்தனையாளர்கள் பலர் கருத்துகளையும் ஒப்புநோக்கித் தன் கருத்தாடலை அ.சிவலிங்கம் நிகழ்த்தியுள்ளார். ஆங்கிலத்தில் பெற்ற அறிவும், தன் எழுபத்திரண்டாம் வயதில் அம்மொழியிலக்கியத்தில் பெற்ற முதுநிலைப்பட்டமும், தொடர்ந்து உலகத்தின் பல பகுதிகளிலும் வெளியான நூல்களைத் தேடிப்பிடித்து அவாவிப் படித்த அனுபவமும் இந்தப் புத்தகங்களின் அடித்தளங்கள். ‘சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்’(மாயூரம் வேதநாயகம் பிள்ளை), ‘அருட்குறள்’ (வீ.ப.கா. சுந்தரம்), ‘திருக்குறள் சர்வக்ஞ’(‘குறள் வழி’ திங்களேடு), ‘மாணிக்கக்குறள்’ (வ.சுப. மாணிக்கம்), Albert Schwitzer’s Biography, ‘An Anthology of Sanskrit Literature,’ ‘Dhammapada,’ ‘Tales from Italy,’ ‘Upanishad’(by Rajaji) ‘Sweet Vietnam’(American Publishing House), ‘Freedom from Necessity’(Bernal, London) போன்ற பன்முகங்கொண்ட இருநூற்று நாற்பத்து நான்கு நூல்கள் முதல் பகுதியிலும்; ரோசலிண்ட் மைல்ஸ் எழுதிய ‘உலக வரலாற்றில் பெண்கள்,’ ‘சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து’(திரு.வி.க.), ‘துப்பறியும் அதிகாரியின் குறிப்புகள்’(லெவ். ஷெய் னின்), ‘இலக்கணமும் சமூக உறவுகளும்’(கார்த்திகேசு சிவத்தம்பி), ‘பிளேட்டோவின் அரசியல்’ (வெ.சாமி நாத சர்மா), ‘ஜோதிராவ் பூலே’(ஜி.பிதேஷ்பாண்டே), ‘Flowers - Fairy Tales’(Anna Sakse), ‘Not Safe To Be Free’(Newyork Press), ‘The Essential Nehru’(Narasimhaiah), ‘Jawaharlal Nehru(Maretyshin, Moscow), ‘Recovery of Faith’(S.Radhakrishnan), ‘Greek Historical Thought’ (Toynbee, New york), ‘The East and the West’(Swami Vivekananda) போன்று பன்முகங்கொண்ட ஐந்நூற்று இரண்டு நூல்கள் இரண்டாவது பகுதியிலும் எடுத்தாளப் பட்டுள்ளன. இந்தப் புத்தகங்களின் திருக்குறள் ஒப்பீட்டு அணுகுமுறைக்குச் சான்று ஒன்றை மட்டும் தெரிவிக்கிறேன்: “அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்” என்ற 430-ஆம் திருக்குறளுக்குப் பின்வரும் ஒப்பீடுகள்: “ஆப்ரகாம் லிங்கன், தன்னுடைய நாற்பதாவது வயதில் Euclid வடிவியல் சார்ந்த கணிதம் படிக்க ஆரம்பித்தார். அதைப் படித்தது கணிதத்திற்காக அல்ல; பகுத்தறிவில் பயிற்சி பெறுவதற்காக அதைப் படித்தார்.” (‘Giants of Science’ by Philip Cane) “தன்னைத் தெரியும் தனக்குத் தெரியும் எனத் தெரியும் அவன் புத்திசாலி. அவனைப் பின்பற்று.”(‘பொன்மொழிகளும் பழமொழிகளும்’ - ரெங்கராஜன் பி.ஈ.) “மனத்தின் இருளே அறியாமை.” (ஆங்கிலப் பழமொழிகளும் இணையான தமிழ்ப் பழமொழிகளும் - ஜெயந்தி மதன், கவிதா பாலு) “அன்பு நெஞ்சில் ஆத்திரம் வந்தால் ஆண்டவன்கூட அஞ்சிடுவான் அறிவுக் கதவை சரியாய்த் திறந்தால் பிறவிக் குருடனும் கண்பெறுவான்.” (‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்,’ நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) [‘பாதை தெரியுது பார்’ என்ற படத்தில் ‘உண்மை ஒருநாள் வெளியாகும்’ என்று தொடங்கும் பாட்டில் வரும் வரிகள்] “ஒரு முக்கியமான ஆவணம். அவசரமாகக் கொடுக்கப்பட வேண்டியிருந்தது. இதற்காக ஒரு ஆளையும், குதிரையையும் அதிகாரி அமர்த்தினான். பிறகு அந்த மனிதன் குதிரையை தனக்கு முன்னே ஓடும்படி விரட்டினான். இதைப் பார்த்து ஒருவன் அடக்கமாகச் சொன்னான். அவசரமான காரியத்திற்கு நீ ஏன் குதிரையை சவாரி செய்யக் கூடாது என்று கேட்டான். அதிகாரி சொன்னான்: “நான்கு கால்களை விட ஆறு கால்கள் வேகமாகச் செல்லுமல்லவா?”(Wit and Humour from Old Cathay. Chinese Literature. N.C.B.H. Chennai) “லியனார்டோ-டா-வின்ஸி தாவரவியல் அறிஞருங்கூட. சில தாவரங்கள் கதிரவனை நோக்கியும் சில கதிரவனின்று விலகியும் வளர்கின்றன. சில தங்கள் வேர்களை நிலத்துக்குள் செலுத்தியும், மற்றவை வெளிப்புறத்தில் வளர்ந்தும் காணப்படுகின்றன. அவர் மரங்களில் கண்ட கணுக்கள் மரத்தினுடைய வயதோடு தொடர்புள்ளவை. மலர்களின் ஓவியங்கள் மூலம் தாவர வாழ்க்கையில் நிலவுகின்ற ஆண், பெண் இனங்களை அறிந்தார். சரியான காலத்தைக் காட்டும் கடிகாரத்தை அவர் உருவாக்கினார். இன்னும் தொழில் நுட்பக் கருவிகளைக் கண்டு பிடித்தார்.”( ‘Giants of Science’ by Philip Cane) [டான் பிரவுனின் ‘Angels and Demons’ நாவலின் பக்கம் 44-இல், டாவின்சி கத்தோலிக்கப் பாதிரியாராகவும் இயற்பியலறிஞராகவும் குறிப்பாக ‘Theo-physicist’ ஆகவும் விளங்கினார் என்ற குறிப்பை நண்பர்கள் படித்திருப்பீர்கள். - தேவமைந்தன்] “நம்முடைய அறியாமைதான் கடவுள். நாம் அறிந்து கொள்வது அறிவியலே. மனிதன் பெரிய மிருகங்களுக்குப் பயந்து ஒளிந்து வாழ்ந்தான். மெல்ல மெல்ல பயத்தினின்றும் எழுந்தான். ஆற்றலில் எல்லா மிருகங்களைக் காட்டிலும் மேன்மை அடைந்தான். இந்த நிலைமையை மனிதன் உடல் வலிமையினால் அடையவில்லை. யானை அவனை விட பன்மடங்கு வலிமை உள்ளது. தன் அறிவினாலும், பகுத்தறிவினாலுமே மனிதன் இந்த உயர்ந்த நிலைமையைப் பெற்றான்.”(ஜவஹர்லால் நேரு) “புலன்களின் உணர்ச்சியே அறிவின் தோற்றுவாயாகும். இந்த உணர்ச்சி மூளை அல்லது அதைப்போன்ற உட்பொருளின் இயக்கத்தைத் தவிர வேறு எதுவும் அல்ல. மூளையில் அல்லது அதைப் போன்று தலைக்குள் இருக்கும் வேறு ஒரு பொருளின் இயக்கத்தையே நாம் மனம் என்கிறோம். எண்ணங்களும், பிரதிபிம்பங்களும், மூளை, இதயம் ஆகியவற்றின் இயக்கங்களேயாகும். அதாவது, பெளதீகப் பொருள்களின் இயக்கங்களே ஆகும். பெளதீகப் பொருள்களும், இயக்கமும் அடிப்படைச் சக்திகளாகும். அவை உலகத்தின் ஒவ்வொரு பொருளையும் - உயிரற்றவைகளையும், உயிர் உள்ளவைகளையும் - விளக்கிக் கூறப் போதுமானவையாகும்.” (ராகுல சாங்கிருத்தியாயன், [ஐரோப்பிய தத்துவயியல்]) “பலர் தாமே தம்மைச் சிறையிலிட்டுப் பூட்டி அந்தச் சிறையின் திறவுகோலை கையில் வைத்துக் கொண்டு தமக்கு அப்பாற்பட்ட கடவுளை கதவைத் திறந்து விடும்படி கேட்கின்றனர். அவர்கள் தங்கள் கையில் திறவுகோல் இருப்பதை உணராது மயங்கிப் பயனற்ற முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.”(‘புதிய பார்வை, புதிய வார்த்தை, புதிய வாழ்க்கை.’ நா.திருவள்ளுவர். திருச்சி-5) “அறிவு வேண்டுகிறேன். எந்தப் பொருளை நோக்குமிடத்தும் அதன் உண்மையை உடனே தெரிந்து கொள்ளும் நல்லறிவு வேண்டுகிறேன்.” (‘பாரதியின் இலக்கியப் பார்வை.’ இளஞ்சேரன், கலைக்குடில், நாகை.) “கடுங்குற்றங்கள் புரிவோர் மந்தபுத்தி உள்ளவர்கள்.”(D.N.Pritt) “இப்போது இருப்பதைக் காட்டிலும் சிறிது அறிவாளியாக நான் இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம். அறிவு என்பது நழுவும் தன்மையது. அதைக் கொள்வது எளிதில் முடியாது. எனினும் சில சமயங்களில் திடீரென்று நமக்குத் தெரியாமலேயே வரும். நான் அதனுடைய உண்மையான பின்பற்றுபவன். அதனுடைய நல்லெண்ணத்தைப் பெற முயல்பவன் என்று நேரு கூறினார். (கிருஷ்ணா ஹதீசிங். ‘Indian Autobiographies’) “எங்கெல்ஸ் அவருடைய காலத்திலிருந்த புகழ்பெற்ற இயற்பியலாளரை விட மிகவும் சரியாக ஒரு பொருளினின்றும் ஆற்றலைப் பிரிக்க முடியாதெனக் கண்டார். இந்தக் கொள்கை நீண்ட காலத்திற்குப் பிறகு ஐன்ஸ்டீனுடைய சார்பு நிலைக் கொள்கைக்குக் கொண்டு சென்றது. எங்கெல்ஸின் இச்செயல் அறிவியலுலகத்திற்கு முன்னரே தெரிந்திருந்தால் பல சிக்கல்களைக் களைந்திருக்க லாம்.”(‘Freedom from Necessity’) “செய்யுள் இயலில் உள்ள ‘மரபே தானும், நாற்சொல் இயலான் யாப்புவழிப் பட்டன்று’ [எண் 1337] என்ற சூத்திரத்திற்கு பேராசிரியர் அற்புதமாக உரை எழுதியிருக்கிறார். அவர் கூறுவதாவது: ஒரு காலத்து வழங்கப்பட்ட சொல் ஒரு காலத்து வாராதாகலும் பொருள் வேறுபடுதலும் உடையதாகலின் அதோளி, இதோளி, உதோளி எனவும் குயின் எனவும் நின்ற இவை ஒரு காலத்து உளவாகி இக்காலத்து இலவாகின! செய்யுள் மரபென்பது பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்ற நான்கு வகையான சொற்களைக் கொண்டு செய்யுளை அமைப்பது.”(‘தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி’ A.V. சுப்பிரமணிய ஐயர், சென்னை - 14) “குற்ற உணர்வுகளுக்கான தோற்றுவாய் உணர்வுகள் கீழ்நோக்கிச் செல்வதும் கீழே இறங்கிக் கீழேயே தங்கி விடுவதும்தான். தொப்புளுக்குக் கீழே உள்ள இடம் பிங்கலை நாடியால் பாதிக்கப்படுகிறது என்று மருத்துவ அறிவியல் தெரிவிக்கிறது. இதனால் மன அமைதியும் மனத் தெளிவும் குறைகிறது. இதுவே குற்ற உணர்வுகளுக்கான தோற்றுவாயாக அமைகிறது.”(‘புதிய மனிதன், புதிய உலகம்.’ ஆசாரிய மகாபிரகய, சென்னை - 79) இதுவரையிலும் நாம் பார்த்தவை அனைத்தும் ஒரே ஒரு திருக்குறளுக்கு(குறள் எண்: 430) அ.சிவலிங்கம் தந்துள்ள ஒப்பீடுகளும் விளக்கங்களும் ஆகும்.(திருக்குறளும் உலகமும்-2. பக்கங்கள்: 151-153) எண்பத்தைந்து வயதில், உடல்நலங்குன்றிய நிலையில், உளநலங் குறையாமல் தொடர்ந்து பல துறைகளைச் சார்ந்த பன்முகங்கொண்ட புத்தக வாசிப்பை விடாமல் செய்பவர் அ.சிவலிங்கம். படித்தவற்றுள் முகமையானவற்றை ஏட்டில் குறித்து வைத்துக் கொள்பவர். ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து, அவற்றை ஏற்ற வகையில், வாசிப்பவர் பயன் பெறுமாறு நூல்கள் ஆக்குபவர். எளிய பணியாளராக அஞ்சல் துறையில் பணியேற்று, தமிழில் தந்தி அனுப்பும் முறையை 1955இல் கண்டு பிடித்து இராஜாஜி முதலிய தலைவர் பலரின் பாராட்டைப் பெற்றவர். முதலில் புலவர் பட்டமும் எழுபத்திரண்டாம் வயதில் ஆங்கில முதுநிலைப் பட்டமும் பெற்றவர். ‘திருக்குறளும் உலகமும்’ என்ற இந்தப் புத்தகத்தின் இரண்டு பகுதிகளும் கிடைக்குமிடம்: திருமதி சு. மனோன்மணி, தமிழ்த்தந்தி இல்லம், 3, அன்னை தெரசா தெரு, சேஷசாயி நகர், கலைஞர் கருணாநிதி நகர், திருச்சிராப்பள்ளி - 21. விலை: முதற் பகுதி: ரூ.75. இரண்டாம் பகுதி: ரூ.175. ******** நன்றி:திண்ணை.காம்

21.10.09

'தான்' என்ற வடிவில் கொடுமையின் வித்து

தான் பெரியவனாகக் காட்சியளிக்க வேண்டும், தான் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும். தன் வாகுதோதுகள் முன்னிற்க வேண்டும். குமுகாய நிலயில் தாழ்ந்தவராகத தான் கருதுபவர்கள் தனக்கு அடங்கி நடத்தல் வேண்டும்; அவர்கட்கென்று தனிக் கருத்துத் தனிச் செயல்முறை இருத்தல் கூடாது. தான் சொன்னபடி அவர்கள் ஆடவேண்டும். இந்த உணர்வுதான் மறைமுகமாகப் பலரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த உணர்வின் முற்றிய நிலைதானே வலியவன் மெலியவனை ஒடுக்கக் காரணமாக இருக்கின்றது? சிங்களனைப் போன்ற பேரின வெறியன் வலிமை பெற்ற காரணத்தால் வலிமையற்ற தமிழர்களை அழித்தொழிக்கக் காரணமாக நிற்கின்றது. குமுகாயம் இப்படியே போய்க் கொண்டிருக்குமானால் எத்தனைப் பெருங்கொடுமைகளை, எத்தனைப் பேரழிவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டிவரும்! இணக்கமின்மையின் வித்து, கொடுமையின் வித்து, இனப்படுகொலையின் வித்து, தனிமாந்தன் ஒவ்வொருவனுக்குள்ளும் 'தான்' என்ற வடிவில் புதைந்து கிடக்கின்றது. அது வலிதாக வளர்ந்து முள் மரமாகி விடாமற் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும். - பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா ஆசிரியவுரை, 'தெளிதமிழ்,' 17.09.2009(தி.ஆ.2040, கன்னி, க)

23.9.09

சிறப்புமிக்க படைப்பிலக்கியமானதொரு கட்டுரை: கி.ரா.’வின் ‘அண்ணாச்சி’ - தேவமைந்தன் புனைகதைகளும் கவிதைகளுமே படைப்பிலக்கியம் என்ற தோற்றத்தை இலக்கிய உலகில் நெடுங்காலமாகத் தந்து வருகின்றன. கட்டுரைகளைப் பொதுவாக வாசகர்கள் படைப்பிலக்கியமாக அடையாளம் கண்டு கொள்வதில்லை. சிலர் எழுதும் கதைகள் கட்டுரைகளைப் போல ஒருபக்கமும் கதைகளைப் போல மறுபக்கமும் அமைந்து, உருப்படியான கதைகளாகவோ கட்டுரைகளாகவோ இல்லாமல் போவதைக் காண முடிகிறது. எரிஃச் ஃப்ராம்’மின் “To Have Or To Be?” என்ற புத்தகம், மனிதர்களுக்கே இந்த நிலை உண்டாவதைக் காட்டுகிறது. அதைப்போக்கவும் உதவுகிறது. கட்டுரை படைப்பிலக்கியமாவது பற்றி மட்டுமல்ல, எழுதுகிறவனை மெய்யாக அறிமுகப்படுத்துவதே அவனெழுதும் கட்டுரைகள்தாம். “எழுதுகிறவனைத் தெரிந்துகொள்ள அவனுடைய படைப்புகள் உதவுகின்றன; சரிதான். இன்னும் அதிகம் அவனைப் பற்றி அறிந்து கொள்ள உதவுவது கட்டுரைகளே” என்கிறார் கி.ரா. ‘கரிசல் காட்டுக் கடுதாசி’க் கட்டுரைகளில் ஒன்றாக முதலில் வெளிவந்த ‘அண்ணாச்சி’க்குப் பின்னால் ஒரு தனிக்கதையே இருக்கிறது. மாத இதழொன்றின் ஆசிரியர் ஒருவரை குற்றாலத்தில் ‘தீட்சிதர் கடை’யில் கி.ரா. சந்திக்க நேர்ந்தது. தீட்சிதர்தான் கி.ரா.வை அவருக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். “ஆஹா அப்படியா; ஒங்களைப் பார்த்ததே பாக்யம்!” என்று சொல்லிவிட்டுத் தனது மாத இதழுக்கு அருமையானதொரு கட்டுரை ஒன்றை எழுதியனுப்புமாறு கேட்டிருக்கிறார். கி.ரா.வோ ‘வெள்ளந்தி’யாக, இந்த அருமையான ‘அண்ணாச்சி’ கட்டுரையை எழுதி கையில் நகல் கூட எடுத்து வைத்துக் கொள்ளாமல் அவருக்கு அனுப்பி இருக்கிறார். அவ்வளவுதான். அந்தக் கட்டுரையை மாத இதழாசிரியர் வெளியிடவுமில்லை; திருப்பி அனுப்பவுமில்லை. ‘எரித்திருப்பாரோ?’ என்று நொந்து போன கி.ரா. எழுதுகிறார்: “என்னை எரிக்க முடியலை; முடிந்தால் செய்திருப்பார்.” தொலைந்து போனதில் அதிர்ச்சி; திரும்பவும் எழுதினால் முன்போலவே அசலாக அமையுமோ என்கிற மன உளைச்சல்; ‘ரொம்பவும் தவிதாயப்பட்டு’ப் போயிருக்கிறார் கி.ரா.. ‘அண்ணாச்சி’ இறந்து முப்பத்தைந்தாண்டுகள் கழித்து அவரை நினைத்து மீண்டும் எழுத “பரவாயில்லை; வந்துவிட்டார்.” “இப்பவும் அண்ணாச்சி என்னோடே இருக்கிறார்....” தஞ்சை அகரம் வெளியீடான ‘கி.ராஜநாராயணன் கட்டுரைகள்’(2002) என்னும் பெரிய அளவுப் பதிப்பின் முன்னுரையில் இந்தச் சேதி இடம் பெற்றுள்ளது. ‘கந்தசாமி செட்டியார் அண்ணாச்சி’ ‘கவி. க. வ. கந்தசாமி செட்டியார்’ ‘கரடிகுளம் கந்தசாமி’ போன்ற பெயர்களால் அறியப்பெற்றவர் அண்ணாச்சி. கோவில்பட்டியில், முதலில் பருத்திக்கொட்டை புண்ணாக்குக் கடையும் பின்னர் பேருந்து நிலையத்துக்கு எதிரில் வெற்றிலை பாக்குக் கடையும்; பிறகு இட்லி தோசை விற்கும் காபி பலகாரக் கடையும் என்று அண்ணாச்சியின் கடை பரிணாமப்பட்டது போலவே அவரது வாழ்க்கையும் - ‘குடும்பத்துக்கு முன்’ ‘குடும்பத்துக்குப் பின்’ என்று இரு வேறானது. ‘ரசனை’ மிகுந்தவராகவும்; திருமணத்துக்கான பொருட்களை வாங்குவதற்காக கோவில்பட்டிக்கு வருபவர்கள், அவ்வாறு வாங்கச் செல்லுமுன் தன்னிடம் மணமக்களின் பெயர்களைத் தந்து சென்றால் அவர்கள் ஊர் திரும்புகையில் திருமண வாழ்த்துக் கவிதையை இலவசமாக எழுதிக் கொடுப்பவராகவும்; ‘ஜ’ ‘ஷ’ போன்ற எழுத்துக்களின் உச்சரிப்பு பிடிபடாத ‘நாக்குச் சொல்லமைப்பு’ உடையவராகவும் [காந்திசி, நேருசி, ராசாசி, ராசநாராயணன்]; எப்பொழுதுமே நாலுமுழக் கதர் வேட்டி - வெளியூர்ப் பயணத்தின் பொழுது அதனுடன் அரைக்கைச் சட்டை, துண்டு - கடுமையான குளிர் என்றால் நாலுமுழக் கதர் வேட்டியுடன் அரைக்கை பனியன் என்று எளிமையாக உடுத்துபவராகவும்; கதர் உடுத்திய காங்கிரஸ்காரர்களையும் கம்யூனிஸ்டுகளையும் ஒப்ப மதித்ததனால் ‘காங்கிரஸ் சகா’க்களால் ‘படுகம்யூனிஸ்டுதான்’ என்று முத்திரை குத்தப்பட்டவராகவும்; எட்டடிக்குப் பத்தடி நீளம் கொண்ட அறையில் வாழ்பவராகவும் விளங்கிய அண்ணாச்சியின் வாழ்க்கை அவருக்கு கோட்டைக் கழுகுமலை கிராமத்தில் பெண் பார்த்து நிச்சயமானபின் முழுவதுமாகத் திசை திரும்பியது. முதலில் ‘வெத்திலை பாக்குக் கடை’ வைத்திருந்த அண்ணாச்சி, “நல்ல கருப்பு நிறம். சற்று முன் துருத்திய நெருக்கமில்லாத வெள்ளைப் பற்கள். கதிமையான முன் வளைந்த சிறிய மூக்கு. குறுகிய நெற்றியின்மேல் கமான்வளைவில் மழிக்கப்பட்ட விட்டல்க் கிராப். அதிக உயரமில்லாத, கர்லாக் கட்டைபோல நல்ல கட்டான உடம்பு. ஒவ்வொரு விரலும் ஒண்ணரை விரல்த்தண்டி இருக்கும்.” (கி.ராஜநாராயணன் கட்டுரைகள், அகரம் வெளியீடு, ப.131) ‘எதேச்சையாக ராஜா போல இருந்த அண்ணாச்சி’க்கு ‘குடும்பம் என்று ஆனதும் பொருளாதாரக் கஷ்டங்கள் தொடங்கிய பின்னர், நடத்திய ஓட்டல் கடையிலும் வேலையாள் வைத்துக் கொள்ளாமல் செய்த அதிக உழைப்பும் இரவெல்லாம் தலைக்குழந்தை பெண்பிள்ளை நச்சு நச்சு என்று அழுதுகொண்டே இருப்பதால் தூக்கமின்மையும் சேர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக மெலிந்துபோய் சளி இருமலில் விட்டு அவையும் அதிகமாகி மருத்துவரிடம் சென்று சோதித்துப் பார்த்ததில் ‘டி.பி.’ என்று முடிவானது. ‘டி.பி.’ என்ற வார்த்தையைக் கேட்டதும் அண்ணாச்சி நடுங்கிப் போனார். பிறகு இவர்களை நிர்க்கதியாக விட்டுவிட்டுப் போய்விடுவோமோ என்று தன் குழந்தையையும் குடும்பத்தையும் எண்ணிக் கண்ணீர் விட்டார். அண்ணாச்சிக்கு கி.ரா. ‘ரொம்ப ஆறுதல் சொல்லித் தேற்ற’ வேண்டியிருந்தது. அண்ணாச்சிக்கும் அவர் மனைவிக்கும் உருவத்தில் பொருத்தமில்லாது போனதைப் போலவே (‘அண்ணாச்சியின் தாட்டியமான அந்த உடம்புக்கும் இந்த சீத்தக்குஞ்சி போலுள்ள பெண் உடம்புக்கும்’ ப.138), உள்ளத்திலும் பொருத்தமில்லாமல் போனது. அண்ணாச்சிக்கும் அவரது மனைவிக்கும் சதா பூசல். வெளிக்குப் போகும் இடத்தில் வைத்துச் சொல்லுவார் வருத்தத்தோடு: “ராசநாராயணன் இண்ணைக்கு அவளை அடிச்சிட்டேன்”(ப.146) அண்ணாச்சிக்குப் புத்தகங்கள் என்றால் உயிர். பின்னர் படிப்போம் என்று அவர் வாங்கிச் சேர்த்த புத்தகங்கள் அவர் மின்விபத்துக்குள்ளான ஓராண்டுச் சிரமகாலத்தில் அவர் குடும்பத்துக்கு உதவின. தவிர, அது புத்தகங்களின் மதிப்பைத் தெரிந்தவர்களின் காலமுங்கூட. எதிலும் தரும நியாயங்களைப் பார்த்து மனச்சாட்சிப்படி நடக்கும் இயல்புள்ள அண்ணாச்சிக்குப் புத்தகங்களைப் பொருத்தவரை விதிவிலக்கு. “நல்ல காலத்திலேயே அவரிடம் போகும் புத்தகங்கள் திரும்பாது. அவரை ஒரு படைப்பிரிவுக்குத் தளபதியாக்கி ஒரு நாட்டின்மேல் படையெடுக்கச் சொன்னால் தலைநகரைப் பிடித்ததும் அவருடைய படைச் சிப்பாய்கள் பொக்கிஷத்துக்குள் நுழைந்து பொன்னும் மணியையும் அள்ளிக்கொண்டிருந்தால் இவர் நேராக நூலகத்துக்குள் நுழைந்து புத்தகங்களைத்தான் அள்ளுவார்! எவ்வளவோ அருமையான எங்களுக்குப் பிரியமான எங்களுடைய புத்தகங்களெல்லாம் அவரிடம்போய் சிக்கிக்கொண்டது. என்ன ஜெகஜாலம் போட்டாலும் அவரிடம் நடக்காது. அவ்வளவும் தூரிக்குள்ப்போன மீன்களின் கதிதான்.”(பக்.138-139) அண்ணாச்சிக்கு அவர் சேர்த்த புத்தகங்களை வாசிக்க எங்கே நேரம்? முதல் நாள் இரவு வெளியூர்களிலிருந்து கடைசிப் பேருந்து வந்தபின் கடையை அடைத்து, அடுத்தநாள் காலையிலேயே திறக்கும் அண்ணாச்சிக்கு ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை கிடையாது. காரணம், பேருந்துகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை இல்லை அல்லவா? “பத்திரிக்கைகளை மட்டும் பருவட்டாக ஒரு மேய்ச்சல் மேய முடியும், கேட்கிறவர்களுக்கு சரக்கு கொடுத்துக்கொண்டே. பின்னாளில் கிடைக்கப்போகும் ஓய்வு நாளை நினைத்தோ என்னமோ அண்ணாச்சி இப்படி ஈவு இரக்கமில்லாமல் புத்தகங்களைச் சேர்த்து வைத்துக்கொண்டே வந்தார். கடேசியில் சரகு அரிக்கத்தான் நேரம் இருந்தது, குளிர்காய நேரம் இல்லை என்கிற பழமொழி அண்ணாச்சி விஷயத்திலும் உண்மையாயிற்று..................... காந்தியின் பரமசீடரான, மருந்துக்கும் பொய் சொல்லாத அண்ணாச்சி இந்தப் பொஸ்தக விஷயத்தில் மாத்திரம் பொய் சொல்லுவார்.”(ப.139) இறந்த பின்பும்கூட அண்ணாச்சி பிறருக்கு உதவியாகத்தான் இருந்தார். கனத்த கோடைமழையில் மின்கம்பி அறுந்து தெருவில் வீழ்ந்தது தெரியாமல் ‘கண்டக்டர் அம்பி’ அதன்மேலேயே இடது மணிக்கை பட குப்புற வீழ்ந்து மெல்ல மெல்ல உயிரிழப்பதைக் கண்கொட்டாமல் வேடிக்கை பார்த்திருந்த மனிதர்கள் போலல்லாமல், எப்படியும் அம்பியைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற திடமான முடிவுடன் ஓடிப்போய், மணி அண்ணாச்சியின் மருந்துக் கடைக்கு வந்த பார்சல் பெட்டியிலிருந்து நீளமானதொரு பலகைச் சில்லை எடுத்துக்கொண்டு ஓடிவந்து கண்டக்டர் அம்பியின் கையை மின்கம்பியிலிருந்து தள்ளிவிட முயன்று குனிந்தார். அவர் கால் பதிக்கப்போகும் அந்த ஈரத்தரையிலும் மின்சாரம் பாய்ந்திருக்கும் என்று அறிந்து எச்சரிக்கும் தகுதியுள்ளவர் எவரும் அந்த அறிவில்லாத கூட்டத்தில் இல்லை. அதனால் அண்ணாச்சி அந்த மின்கம்பிமேல் மல்லாந்து விழ நேர்ந்து விட்டது. கண்டக்டர் அம்பியுடன் அண்ணாச்சியும் உலகை நீத்து விடுகிறார். பிறகு நடந்தவை வழக்கம் போல. மின்சாரத்துறை, அம்பியின் குடும்பத்தார்க்கு மட்டும் ஈட்டுத்தொகை தந்தது. (அண்ணாச்சி என்றழைக்கப்பட்ட) கந்தசாமி செட்டியார், தெரிந்தே அதில் போய் விழுந்தார் என்று காரணம் காட்டி அவர் குடும்பத்துக்கு உதவ மறுத்து விட்டது. விடுவார்களா? உணர்ச்சி பூர்வமாக நினைவேந்தியவர்கள் சிலர், நிதி வசூலில் உடனே இறங்கினர். அண்ணாச்சியின் குடும்பத்துக்குப் பதில் தங்கள் குடும்பங்களுக்கு அந்த நிதியைச் செலவிட்டனர். அண்ணாச்சியின் தம்பி முருகய்யாவுடன் கி.ரா. பேசிக் கொண்டிருந்தபொழுது, அண்ணாச்சி இறந்தபின் ஊரார் ஐதீகப்படி ஓராண்டு அவர் குடும்பம் அங்கேயே இருந்து தொலைக்க வேண்டியிருந்தபொழுது செலவுக்கு எப்படி சமாளித்தது என்று கேட்டார். “ஏதோ நாங்க கொஞ்சம் கொடுத்து உதவினோம். அதோட அவரு சேத்து வச்சிருந்த புஸ்தகங்க பத்திரிகை அது இதுண்ணு வித்துத்தான் ஜீவனங் கழிஞ்சுது” என்று முருகய்யா சொன்னார். “ஒரு காலத்துக்கு உதவும் என்றுதான் அண்ணாச்சியும் புஸ்தகங்களைச் சேகரிச்சு வைத்துவிட்டுப் போயிருக்கார். அந்தக் குடும்பம் யார்கிட்டேயும் கைநீட்டி வாங்கவில்லை.”(ப.162) அண்ணாச்சியின் ஞாபகமாக இருப்பதெல்லாம் தங்களின் நெஞ்சுக்குள் அவரைப் பற்றிய அணையாத நினைப்புகளும் இந்தக் கட்டுரையுமே என்று தெரிவிப்பதுடன் கி.ரா. மேலும் எழுதுவதாவது: “அவர் எழுதி எழுதி வைத்துவிட்டுப்போன கவிதை நோட்டுகள் இசைப்பாடல்கள் எல்லாம் எங்கோ ஒரு மிட்டாய்க்கடையில் பலகாரம் சுற்றப்பட்டு எப்படி எப்படியோ போயிருக்கலாம். இப்போது இருப்பவை என்று சொல்லிக்கொள்ள யார் யாருக்கோ அவர் எழுதித்தந்த திருமண வாழ்த்துக் கவிதைகள்தான். ஏதோ ஒரு மண்சுவரில் கண்ணாடிச்சட்டம் போட்டு மாட்டி வைத்திருக்கும் திருமண வாழ்த்து மடலுக்குப் பின்புறம் ஒரு ராமபாணப் பூச்சியாக இன்றும் இருக்கிறார் அண்ணாச்சி என்று நம்புகிறேன்; அவருடைய கவிதைகள் பேரில் அவ்வளவுக்குப் பற்று உண்டு அவருக்கு” என்று முப்பத்திரண்டு பக்கமுள்ள இந்த அருமையான கட்டுரையை நிறைவு செய்திருக்கிறார் கி.ரா. ஒரு கட்டுரை மட்டுமே என்று இதைச் சொல்லிவிட முடியாத அளவு வயணங்கள், உண்மையாக உடன்வாழ்ந்தவர்கள் குறித்த படப்பிடிப்புகள், இரண்டாம் உலகப்போர்க்காலத் தமிழ்நாட்டு/சென்னைச் சூழ்நிலைகள் என்று இதன் உள்ளீடுகள் பற்பல. தனிநபர் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு அண்ணாச்சி ‘மெட்ராஸ்’ வரை நடைப்பயணம் மேற்கொண்டது; வழியில் மதுரை வைத்தியநாத ஐயர் வீட்டில் தங்கியது; நடைப்பயணம் மேற்கொண்டவர்கள் ஒவ்வொருவருக்கும் ஐயர் ஒவ்வொரு செம்பு அன்பளிப்பாகத் தந்தது; ஏன் அவர் செம்பு தருகிறார் என்பது புரியாதிருந்து, பின்னர் அனுபவத்தில் வழிநடைப் பயணிகளுக்குச் செம்பு எத்தகைய உதவி செய்கிறது என்பதைப் புரிந்து கொண்டது முதலான வயணங்களுக்கு இக்கட்டுரையில் பஞ்சமில்லை. இரண்டாம் உலகப்போர்க் காலச் சென்னையில் நிலவிய உயிர்ப்பயம், பித்தலாட்டங்கள், கேடுகள், வழிமாற்றி அலைக்கழிக்கும் குணங்கள், ஏமாற்றி இருப்பதையெல்லாம் பிடுங்கிக் கொண்டுவிடும் செயல்கள் ஆகியவை சொல்லப்படுவதுடன் கதர் கட்டியவர்கள் மட்டும் நம்பத்தக்கவர்களாக அந்தக்காலச் சென்னையிலும் விளங்கினார்கள் என்பதும் சொல்லப்படுகிறது. பலகட்சி முன்னணியாக அப்பொழுதிருந்த காங்கிரஸ் கட்சி திகழ்ந்ததும்; ஆனாலும் காங்கிரஸ்காரர்கள் கம்யூனிஸ்டுகளை வெறுத்ததும் தெளிவாகச் சொல்லப்படுகின்றன.(பக்.133-134) செல்லையாவை கு. அழகிரிசாமியாக உருவாக்கியவர்களில் அண்ணாச்சியின் பெரும்பங்கு [அழகிரிசாமி மகாகவி பாரதியைப்போல ஒரு பெரிய்ய கவிஞனாகத் திகழவேண்டும் என்பது அண்ணாச்சியின் கனவு. ப.134]; குருவிகுளம் குருபரக் கவிராயர் தான் எழுதிய அண்ணாச்சி திருமண வாழ்த்துப்பா, கு. அழகிரிசாமி பெயரில் அச்சாவதற்கு உடந்தையாக இருந்தது [‘எங்களில் கவிதை எழுதுகிறவன் அழகிரிசாமி ஒருத்தன்தான். ஆனால் அவனுக்கு கல்யாண வாழ்த்துப்பா எழுதுகிற சமாச்சாரமே பிடிக்காது; எரிந்து விழுவான்.’ ப.135] முதலான சேதிகள் அன்றைய கவிஞர்களின் உலகத்தைக் காட்டுகின்றன. உலகப்போர்க் காலத்தில் பேருந்து நடத்துநர்கள் எப்பேர்ப்பட்ட கௌரவம் பெற்றிருந்தார்கள் என்றால், ‘கண்டக்டர் பெருமான்க’ளாகவே பயணிகளுக்குக் காட்சி தந்திருக்கிறார்கள். கு.அழகிரிசாமியும் அண்ணாச்சியும் லாயல்மில் நடராஜனும் கி.ரா.வும் மதுரைக்குப் போனபொழுது ஓட்டலில் சாப்பிடவேண்டி வந்த ‘கனமான பெரிய்ய கோதுமைத் தோசை’யால் பெற்ற அதிர்ச்சியும்; லாயல்மில் நடராஜனின் ‘தாய்மாமனார்’ வீட்டில் அன்றிரவு அவர்களுக்கு அன்புடன் பரிமாறப்பெற்ற ‘நெய்மணத்த அரிசிச் சோறு’ [‘வயிறு கொண்டா கொண்டா என்று ஏற்றுக்கொண்டது.’ ப.141] தந்த சுகமும் கி.ரா.வால் சொல்லப்படும்பொழுது நாமே அவற்றைப் பட்டறிவதுபோல் உள்ளது. சோறு தந்த சுகம் மட்டுமா? நீர் பிரிவதிலுள்ள சுகமும்[ப.142]; புகைபிடித்துக்கொண்டு வெளிக்குப் போகப் பழகியவர்களுக்கு அது படும் அவசியமும் [ப.144] இன்னும் சில மறைவான சேதிகளும் கூட இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கின்றன. தன் குணத்துக்கு மாறாக அண்ணாச்சியின் மனைவியார் சமைத்துப்போடும் ‘திவ்யமான ருசியும் மணமும் கொண்ட’ கீரைக்குழம்பு பற்றியும் ‘சாதம் வடிப்பதில் அவர்கள் பின்பற்றிய சமையல்’ ரகசியம் [“கட்டியாக இலையில் வைக்கப்படும் சாதம் அதன்மேல் கைவைத்தவுடன் பொலுபொலுவென்று அதே சமயம் மெத்தென்று ஆகிறது எப்படி?] குறித்தும் சொல்லப்பெறுபவை கி.ரா.வின் உணர்த்தாற்றலைக் காட்டுகின்றன. ‘கப்பலை விற்று டொரியான் பழம் தின்றான்’ என்ற மலேசியப் பழமொழியின் காரணத்தை, ‘நாடு கண்ட செட்டியா’ரிடமிருந்து கு.அழகிரிசாமி அறிந்து கொண்டது; முட்டை வெறுப்பாளியாக விளங்கிய அண்ணாச்சியை (பாம்புபோல்) முட்டைமுழுங்கியாக மாற்றியது; ‘குத்துத்தரம்’ என்ற பாம்பு குத்தும் கருவி குறித்த சேதி; அண்ணாச்சி கடையிலிருந்ததும் அவர் அதை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருந்ததுமான குடையை இரவல் வாங்கிக்கொண்டுபோய்க் கி.ரா. படுத்திய பாடு; இடைசெவல் ரோட்டுக்கடை கருப்பையா செட்டியார் கடையின் முதல்தரமான காபி [‘அந்தக் காபியெல்லாம் இப்பொ எங்கெபோயி ஒளிந்து கொண்டதோ தெரியலை’] குறித்த நினைவு முதலிய பல இந்தக் கட்டுரையில் அம்பாரமாகக் குவிந்து கிடக்கின்றன. உடனிருந்தவர்களைக் குறித்து கி.ரா. இதில் தரும் விவரங்கள் பலவற்றில் ஓரிரண்டை மட்டும் தருகிறேன். கு.அழகிரிசாமியின் மாமனார் சந்திரகிரி ஆசாரியார் என்பவர். எப்பொழுதுமே எதற்கும் வேடிக்கைப்பேச்சுப் பேசுவது அவர் வழக்கம். “எந்தப் பேச்சானாலும் செக்ஸில்க் கொண்டுபோய் ஒட்டவைத்து ‘அளகு’ பார்க்கவில்லையென்றால்த் தூக்கம் வராது.” [பக்.150-151] அப்படிப்பட்ட அவர் பேச்சுகள் அவ்வப்பொழுது இக்கட்டுரையில் உரிய இடங்களில் வருகின்றன. லாயல்மில் நடராஜனுக்கு உரக்க வாய்விட்டுச் சிரிக்க வராது. “சில வீடுகளில் பெரியவர்கள் குழந்தைகளை அறட்டி சத்தம்போட்டு அவர்களை உரக்க சிரிக்க விடாமலே பழக்கி வளர்ப்பார்கள். இவர் அப்படி வளர்க்கபட்டவரோ என்னமோ; சத்தமில்லாமல் குலுங்கினார். கண்களிலிருந்து நீர் மளமளவென்று கொட்டியது, அவர் சிரித்த சிரிப்பில். கொஞ்ச நேரம் கழித்து “நல்ல தமாஷ்தான் போங்கள்” என்று சொல்லி கண்களைத் துடைத்துக்கொண்டார் கைக்குட்டையினால்.”(ப.145) அந்தச் சிரிப்பு வேதனைக்கான காரணமாக லாயல்மில் நடராஜனின் தாய்மாமனார் வீட்டு மொட்டை மாடியில் ‘ராத்திரி நடந்த கூத்து’(பக்.141-143) வாசித்துச் சிரிக்க வேண்டியது. இங்கே எடுத்துத்தர இயலாது. ஒரு - முப்பத்திரண்டு பக்கக் கட்டுரைதான் இது; தனிப் புத்தகம் அல்ல; ஆனால் நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ.. வகைமாதிரிகளாக மிகச் சிலவற்றையே என் இந்தக் கட்டுரையில் தந்திருக்கிறேன். இந்த ‘அண்ணாச்சி’ என்ற அருமையான கட்டுரையுடன் மேலும் அறுபத்து நான்கு கட்டுரைகளையும் கொண்ட பெரிய அளவு தொகுப்பு - கி.ராஜநாராயணன் கட்டுரைகள் அகரம் மனை எண்:1, நிர்மலா நகர் தஞ்சாவூர் - 613 007. பக்கங்கள்: 488 விலை: ரூ.275 (வாசிப்புக்கு உதவிய நண்பர் முனைவர் சு.ஆ.வெங்கடசுப்புராய நாயகருக்கு நன்றி.) ******** நன்றி: திண்ணை.காம்

10.9.09

‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்னும் ஆராய்ச்சி - தேவமைந்தன்

புதுச்சேரியில் உள்ள இலக்கியப்பொழில் இலக்கிய மன்றம் என்னும் அமைப்பு, ‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்ற தலைப்பிலான முனைவர் அ. கனகராசு அவர்களின் ஆய்வை வெளியிட்டிருக்கிறது. முனைவர் அ. கனகராசு, புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறையிலுள்ள தமிழ் வளர்ச்சிச் சிறகத்தின் ஆராய்ச்சி உதவியாளர். அம்பா பாடல் அமைப்பியல் ஆய்வு, பாரதிதாசன் குயில் அடைவு, புதுச்சேரி மாநில நாட்டுப்புற விடுகதைகள் காட்டும் மக்கள் வாழ்வியல் முதலான இவர்தம் ஆய்வுநூல்கள் வெளியாகியுள்ளன. திண்ணை.காம் வலையேட்டில், இவருடைய ‘புதுச்சேரி மாநில நாட்டுப்புற விடுகதைகள் காட்டும் மக்கள் வாழ்வியல்’ தொடர்பாக நான் எழுதிய கருத்துரை, ‘தமிழர் கருத்துக் கருவூலம்’ என்ற தலைப்பில் வெளியானது. ‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்ற இந்தப் புத்தகத்தில் உள்ள குறிப்பிடத்தக்க செய்திகள் பின்வருமாறு: ஆட்சித்தமிழ் தொடர்பாக நடுவணரசும் தமிழ்நாட்டு அரசும் புதுச்சேரி அரசும் 1965 முதல் அவ்வப்பொழுது வெளிப்படுத்திய முதன்மையான அரசாணைகளும் அறிவிக்கைகளும் சுற்றறிக்கைகளும் இந்தப் புத்தகத்தில் தரப்பெற்றுள்ளதால், ஆட்சிமொழியாகத் தமிழ் வீற்றிருக்க என்னதான் அரசியலார் முயன்றிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எளிதாகக் கிடைத்திருக்கிறது. இத்தகைய நெறியில் தமிழக அரசு வெளியிட்ட ஆணைகள் எண்பத்தெட்டை நாம் இதில் வாசித்து அறியலாம். மாநிலத்தின் ஆட்சிமொழியாக எல்லாவகைகளிலும் தமிழே இருக்க வேண்டும் என்ற ‘1956ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்டம் (த.நா. சட்ட எண்: XXXIX/1956),’ “தீர்ப்புகள் - தீர்ப்பாணைகள் - ஆணைகள் ஆகியவற்றை எழுதுவதற்காகத் தமிழை நீதிமன்றமொழி என்று சொல்லியிருக்கிறது. இது ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே சட்டமாகியும் செயற்பாட்டுக்கு வர இயலாமல் போடப்பட்ட முட்டுக்கட்டைகள் குறித்து ஆராய்ந்து இன்னொரு தனிப் புத்தகத்தையே முனைவர் அ. கனகராசு எழுதலாம். அரசு ஊழியர்கள் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் (ஆணை (நிலை) எண்:1134 / நாள்: 21.6.1978). தங்கள் பெயருக்கு முன்னுள்ள தலைப்பெழுத்துக்களை (initials) தமிழிலேயே எழுத வேண்டும் (ஆணை (நிலை) எண்: 431 / நாள் 16.9.1998 [திருவள்ளுவராண்டு 2029, வெகுதான்ய, ஆவணி 31) முதலான பலவற்றை இந்த நூலால் எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. தமிழ் வளர்ச்சித் துறை என்பது என்ன? அதன் முதன்மையான பணிகள் எவை என்பனவற்றை விளக்கிய பின், இருபத்தொன்பது செயல் திட்டங்கள் தரப்பெற்றுள்ளன. “திராவிடப் பல்கலைக் கழகத்திற்குப் புதுச்சேரி அரசின் பங்களிப்பைச் செலுத்தித் தமிழாய்விற்கு வழிவகுத்தல்” என்பதும் அவற்றுள் ஒன்று. தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சிமுறை அட்டவணை(Administration Chart) ஒன்றும் தெளிவாகத் தரப் பெற்றுள்ளது. புதுச்சேரி சட்டப் பேரவையில் இது தொடர்பாக 1965இல் நடந்த அனல் பறக்கும் உரையாடல்களை (பக்.25 முதல் 46 வரை) தவறாமல் கொடுத்துள்ளார் நூலாசிரியர். ஜே.எம்.பெனுவா என்ற சட்டப் பேரவைச் செயலருடைய ஒப்பத்துடன் உள்ள பதிவு அது. இரு பகுதிகள்: “SRI. S. THILLAI KANAKARASU: இதிலே சுதந்திரா பார்ட்டி, டி.எம்.கே பார்ட்டி என்று சொன்னதற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. டி. எம்.கே. காரர்கள் தமிழ், தமிழ் என்று சொல்கிறார்கள், ஆனால் டி.எம்.கே. என்று சொல்லும்போது இங்கு வேறு மாதிரி ஓசை கேட்கிறது. இப்போது கேரளா ரெபெல் காங்கிரசைப்பற்றிச் சொன்னார்கள். ஆனால், அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. காரணம், பாண்டிச்சேரியில் சுதந்திரா பார்ட்டி இருப்பதாகத் தெரியவில்லை. எப்படியிருந்தாலும் தமிழை ஆட்சிமொழியாகக் கொண்டு வந்தது பற்றிச் சந்தோஷப்படுகிறேன். இதைக் காலம் கடத்தி அடுத்த செஷனுக்குக் கொண்டு வருவதால் நமக்கு நஷ்டம் ஏற்படுமே தவிர நலன் இருக்காது. எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் கொண்டுவருகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லதுதான் என்று சொல்லிக்கொண்டு, ஆட்சிமொழிச்சட்டமாகிய மசோதா எண் 10-ஐ ஆதரித்து என் பேச்சை முடித்துக்கொள்கிறேன்.” “SRI V. KAILASA SUBBIAH: ..... ஆங்கில மொழி நீடித்திருக்க வேண்டும் என்று சென்னையில் திராவிட முன்னேற்றக் கழகம் சொல்கிறது. ஆனால் இங்கு ஆங்கிலம் வருவதால் பிரெஞ்சு மொழி போய்விடும் என்று பிரெஞ்சு மொழிக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள். அங்கே ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்று சொல்கிறர்கள். ஆனால் இங்கே ஆங்கிலம் வருவதால் பிரெஞ்சு அழிந்து விடும், அழிந்துவிடும் என்று பேசுகிறார்கள். ஆகவே அவர்கள் இரண்டு நாக்குகளுடன் பேசுகிறார்கள் என்று கருத வேண்டும். இப்படிப்பட்ட ஒரு நிலை வருவதற்குக் காரணம், நம் பிரதேச மொழியான தமிழை வளர்க்கும் வகையில் இந்த நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதற்கொண்டு, சரியான முறையில் ஆட்சியிலுள்ளவர்கள் நடவடிக்கை எடுக்காததுதான் என்று நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இன்றும் ஆங்கில மொழி மீதும், பிரெஞ்சு மொழியின் மீதும் சிலருக்கு ஒரு மோகம் இருக்கிறது.” “1965 - ஆட்சிமொழிச் சட்டம் 1977 - பெயர்ப்பலகை ஆணை 1997 - தமிழில் ஒப்பமிடும் ஆணை அரசிதழைத் தமிழில் வெளியிடும் ஆணை 2006 - நடுவணரசு பிறப்பித்த புதுச்சேரிப் பெயர்ச் சட்டம் ஆகிய அனைத்தையுமே ‘கண்டு கொள்ளாமல்’ அரசு பணியாற்றி வருவோர் இன்னும் உள்ளமைக்குக் காரணம், அவற்றை மீறுவோர்க்கு எந்தத் தண்டனையும் இல்லை என்பதே” என்று இரா. திருமுருகன் அவர்கள் குறிப்பிட்டிருப்பதுவும் முன்பகுதியில் உள்ளது. புலவர்கள் கீ. இராமலிங்கனார் முதலானோரும்; முனைவர்கள் திருமுருகன், அறிவுநம்பி, சுதர்சன், இராமமூர்த்தி, இறையரசன் முதலானோரும்; பாவலர்கள் காசி ஆனந்தன், தமிழமல்லன் முதலானோரும்; நீதித்துறைத் தலைவர்கள் தாவித் அன்னுசாமி முதலானோரும் இது தொடர்பாக எழுதியவற்றை உள்வாங்கிக் கொண்டு இந்த - பயனுள்ள ஆராய்ச்சியைச் செய்திருக்கிறார் நூலாசிரியர். ******** (ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும். பக்கங்கள் 228. விலை ரூ. 200.) தொடர்புக்கு: முனைவர் அ.கனகராசு, 3, அரவிந்தர் வீதி, பெசண்ட் நகர், குறிஞ்சி நகர் விரிவு, இலாசுப்பேட்டை அ.நி., புதுச்சேரி - 605008. தொ.பே. 0413 2256647 *** நன்றி: திண்ணை.காம்

8.5.09

தமிழர்களுக்குத் தங்கப்பா சுட்டும் பனிப்பாறை நுனிகள்

தமிழர்களுக்குத் தங்கப்பா சுட்டும் பனிப்பாறை நுனிகள் - தேவமைந்தன் சென்ற திங்கள் நான் குறிப்பிட்டிருந்த தங்கப்பாவின் 'வேப்பங்கனிகள்' பாத்தொகுப்புக்குப் பின் 'கள்ளும் மொந்தையும்' என்ற நூல் வெளிவந்தது. அவற்றின் தொடர்ச்சியாகவே இந்தப் 'பனிப்பாறை நுனிகள்' நூல் 1998ஆம் ஆண்டு வெளிவந்தது. நூலாசிரியரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்த முனைவர் இரா. திருமுருகனார், "ஆங்கிலப் புலவர் மில்டன் எண்ணத்தில் மூழ்கிய மாந்தன்(pensive man) என்று ஒருவனைப் படைத்துள்ளார். அவன் தீர எண்ணித் தெளிபவன். அமைதியையும் தனிமையையும் விரும்புபவன். ஆரவாரத்தையும் ஆடம்பரத்தையும் வெறுப்பவன். இயற்கையில் இன்பம் காண்பவன். அழகை வழிபடுபவன். நிலவின் வெளிப்பாடும் பறவையின் பாடலும் அவனுக்குப் பேரின்பம் தரும். தங்கப்பாவுடன் உரையாடும்போதும், அவர் வாழ்க்கையைக் காணும்போதும் எனக்கு அப் பாமகனின் நினைப்பு வருவது உண்டு" என்று பொருத்தமாக மொழிந்திருந்தார். "தங்கப்பா கூட எங்கள் வழிக்கு வந்துவிட்டார், பார்த்தீர்களா?" என்று என்னிடம் களிப்புடன் சொன்ன முனைவ - பேராசிரிய - புதுப்பாவலர் ஒருவரிடம், "இந்நூலில் உள்ள பாடல்கள் மரபுவழிப் பாடல்களே. இணைக்குறள் ஆசிரியப்பாவில் சொற்சீரடிகள் விரவி வந்துள்ள பாடல்கள் இவை. இடையிடையே மிகச்சில நெகிழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன(பக்.ix-x)" என்ற பகுதியைக் காண்பித்தேன். அதனால்தான் தங்கப்பா, "மரபு வழி முயற்சிகள் மிகக் கடினமானவை. யாப்பிலக்கணம் படைப்பாற்றலுக்குத் தேவையற்றது. அவை பழமையின் அடையாளங்கள் என்று எண்ணும் அவர்கள் தங்கள் எண்ணங்கள் பிழையானவை.. கொஞ்சம் முயன்றால், கொஞ்சம் அக்கறை செலுத்தினால் எளிய மரபு வடிவங்களைக் கொண்டே பாட்டுணர்வை நன்கு வெளிப்படுத்த முடியும் என்று தெரிந்து கொள்வதற்கு இப்பாடல்கள் பயன்படுமானால் அதுவே எனக்கு மகிழ்ச்சி தருவதாயிருக்கும்" என்று பனிப்பாறை நுனிகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். என் கனவுப் பனிப்பாறை கடல் மேல் தெரிவது கழுத்துக்கு மேல்தான் என்று 'போதாமை'யைக் குறிப்பிட்டிருக்கிறார். இரவும் பகலும் எள் இடைவிடாமல் உள்ளிருந்து என்னுள் உயிர்க்கூத்தாடும் இயற்கைக் காதல் முழுமையும் உணர்த்திட வெளிச்சம் போதவில்லையே என்பதுவே அப் 'போதாமை.' 'விட்டு விட்டு எழுந்து வா' என்ற பாடலில் வாழ்க்கையின் பொய்ம்மையைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்: இன்னும் எத்தனைக் காலம் மரப்பாச்சியையும் மணல்வீடுகளையும் வைத்துக்கொண்டிருப்பாய்? விட்டு விட்டு எழுந்து வா, திருமண மேடை காத்திருக்கின்றது. எத்தனைப் பேர்கள் பிறந்து இறக்கின்றோம். வாழ்க்கையை வாழ்பவர் எங்கோ ஒருவரே. உண்மையானவருக்கு அடையாளம், 'முகத்துதிக'ள் எனப்படும் பாராட்டுரைகளால் தாக்கப்பெறாமல் எப்பொழுதும்போல் இயல்பாக இருப்பதுதான். அதற்கு ஒரு காட்சிப் படிமம் தருகிறார் தங்கப்பா. உண்மை மெழுகு அவன் உண்மை என்னும் மெழுகு பூசிக் கொண்டிருக்கின்றான். பாலும் தேனுமாய்ப் பாராட்டு உரைகளைத் தலையில் கொட்டினும் வழிந்து கீழ்ப் போகுமே அன்றி ஒருதுளி அவன்மேல் ஒட்டுவதில்லையே. அறிவின் தோல்வி கண்டு அஞ்சுபவர்கள் பலர். ஆனால் அறிவுதான் படைப்பாற்றல் மிக்க 'பாட்டு வாழ்க்கை'க்குத் தடையாக இருக்கிறது. 'எது வாழ்க்கை?' என்ற தேடல் தோல்வியில் முடிவதற்குக் காரணம் அந்தத் தேடலுக்கும் அறிவே துணையாக வருவதுதான். இதை எத்தனைப் பேர் அறிந்திருக்கிறார்கள்? அறிய வேண்டியது அதுவே. அறிவு அதற்குத்தான் பயன்படும். வறட்டுத்தனத்தைத் தான் வெறும் அறிவு தரும். படைப்பாற்றலுக்கு அறிவின் வழிப்பட்ட வழிகாட்டி உரைநூல் கிடையாது. படைப்பாற்றல் - "பாட்டு மீன் துள்ளி/ மடியில் விழுந்தது"(ப.பா.நு. பக்.10) என்பதுபோல் மிகவும் தற்செயலாக நிகழ்வது. வாழ்வியல் அடிப்படைகள் கூட கிடைக்காமல், கணக்கற்ற மக்கள் இலங்கையிலும் சூடான் எத்தியோப்பியா இந்தியா முதலான நாடுகளில் திண்டாடித் தவிக்கும்பொழுது மேலும் மேலும் தம் வாழ்வில் வண்ணம் சேர்த்துக் கொண்டு போகும் தன்னலப் புழுக்களை எங்கெங்கும் காண்கிறோம். தன் வாழ்வில் தற்செயலாக ஏற்பட்டுவிட்ட ஏந்துகளையும் எடுத்து விடலாமா... என் வாழ்க்கைக்கு இன்னும் வண்ணம் தீட்டச் சொல்கிறாய். வெற்றிடங்களை நிரப்பச் சொல்கிறாய். இருக்கும் வண்ணத்தையும் எடுத்து விடலாம் என்று நினைக்கிறேன். வெற்றிடங்களும் கருத்துணர்த்துமே. உயிர்ப்பு வெளிப்பட ஓரிரு கோடுகள், வளைவுகள் போதும். வண்ணம் எதற்கு? இவ்வாறு சிந்திக்கும் தங்கப்பாவின் பாடல் 'வாழ்க்கை ஓவியம்.' கருப்பு வெள்ளை வண்ணப் படங்களையே காண மறுக்கும் கண்களுக்கு இந்தக் கருத்தாடல் பிடிக்காதுதான். "ம்...வாழ்க்கையில் வளரவே வேண்டாமென்கிறாரா தங்கப்பா? இவர்போல ஒரு மிதிவண்டியில் காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு நாமும் மிதிக்க வேண்டுமா?.. சிற்றூர் மக்கள்தாம் உயர்ந்தவர்களாம். அவர்களிடம் உள்ள கரவுள்ளம் நகர மாந்தர்க்கு வருமா? ம்..ம்..சிற்றூர்களில் என்ன உள்ளது? 'ஷாப்பிங் ஃபெசிலிட்டீஸ்' கொஞ்சமாவது உண்டா?" என்று முனகும் இன்றைய தமிழருக்கு 'வாழ்க்கை ஓவியம்' பாடல் உறைக்காதுதான். ஆனால் இதோ இந்தப் பாடல் மெத்தவும்தான் சுவைக்கிறது. கனடாவில் தமிழ்ச் சிறார் சிறுமியர் இடை 'ஆடப்படும்' பாடல் - ‘டாடி மம்மி வீட்டில் இல்லே தடைபோட யாருமில்லே விளையாடுவோமா உள்ளே வில்லாளா இண்டோர் கேம் இது................. மைதானம் தேவையில்லே, அம்பயரும் தேவையில்லே யாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா!” என்பதாம். தமிழ்ப்பற்றுள்ள தங்களை டாடி மம்மி என்றழைக்க, புலம்பெயர்ந்தோர் மனங்கள் எவ்வாறு ஒப்புகின்றன? - என்று நொந்து கேட்டிருந்தார் கனடாவைச் சார்ந்த கட்டுரையாளர்.(வி.என். மதிஅழகன், ‘கலாச்சாரம் காக்கத் துடிக்கும் கனேடிய டாடி மம்மிகள்’ (பத்தி), யுகமாயினி 2:6, எண்:18, மார்ச் 2009. பக். 18-21.) அவர்களே இப்படி எனில், தமிழக மக்களிடையே எளிமையை, தமிழுணர்வை எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆராய்ச்சி மூளையை அறவே சாடுகிறார் தங்கப்பா. துருவிப் பார்க்கும் உனது மூளையாம் நுண்பெருக் காடியைத் தூக்கி வீசு. கொசுவும் கூடப் பூதமாய் வெளிப்படும்; வேண்டாம். வியப்புறும் விழிகள் விரியட்டும் அன்பால். வாழ்க்கை விளங்கும். ஏன்? எதையெடுத்தாலும் நோண்டி நோண்டி, தோண்டித் துருவிப்பார்க்கும் மூளைக்கு அன்பு புலப்படாது என்பதால்தான். அது தன்னகந்தையிலே திளைக்கும். அடிவருடிகளை ஒழுங்கு செய்து கொள்ளும். விழா விருதுகளுக்கு ஏற்பாடு செய்து கொள்ளும். தன்னைக் கொண்டவனின் ஒவ்வொரு காலடியும் தன் நலத்தை நோக்கி நடைபோடுகிறதா அல்லவா என்று உளவு பார்க்கும். யாரை வீழ்த்தலாம், எப்படி வீழ்த்தலாம் என்று ஒவ்வொரு கணமும் திட்டமிடும். அது நடத்து விழா பற்றி, 'பனிப்பாறை நுனிகள்' நூலில் அருமையான பகடிப் பாடல் ஒன்றிருக்கிறது. அது இது: எப்படி? அரசியல் தலைவர் பிறந்தநாள் விழாவில் மேடை மீது வீற்றிருந்தவர்களின் கால்களை எண்ணினேன். சரியாய் நாற்பது. வாழ்த்துப் பாட எழுந்து நிற்கையில் முகங்களை எண்ணினேன் அவையும் நாற்பது! அடடே, எப்படி? வாசித்தீர்கள் அல்லவா? இந்தக் கணக்கு உங்களுக்குப் பிடிபட்டதா? பிடிபடவில்லையென்றால் தமிழகத்துக்கு வந்து அத்தகையதொரு மேடைமுன் அமர்ந்து எண்ணிப் பாருங்கள். புலப்படும். இதுதான் போகிறது! அரசு விழாக்கள் எப்படி? 'தமிழன் என்றோர் இனமுண்டு / தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்று நாமக்கல் கவிஞர் பாடினார்.. அந்த இனத்தின் (தமிழ்நாடு, புதுச்சேரி) அரசுகள் நடத்தும் விழாக்கள் குறித்த தங்கப்பாவின் பாடல்: அரசு விழாக்கள் குயில்களாய்ப் பாடக் கோட்டான் கூட்டமும், மயில்கள் போல் நடிக்க வான் கோழிகளும் அழைக்கப் பட்டன - அரசு விழாக்கள். மெத்தப் படித்தவர்கள் நடத்தி மகிழும் கருத்தரங்குகளுக்கும் மேனிமினுக்கிகள் தொலைக்காட்சிகளில் நடத்திக் கொழுக்கும் ஆடரங்குகளுக்கும் ஒன்றும் பெரிதாக வேறுபாடு இல்லை. அவை அறிவின் கொழுப்புகள். இவை உடலின் கொழுப்புகள். அத்தகையதொரு திரைக்கொழுப்பினால்தானே டானி பாயில் நம் சேரி மக்களை 'சேரிநாய்கள்' என்றான்? வறுமையைக் கண்டு பொங்கி எழ வைக்காமல், பொழுதுபோக வைத்த டானி பாயிலுக்குப் புகழ்.. உடலாலும் உளத்தாலும் ஊனமுற்றவர்கள் யார் யார் என்று இனங்காட்டிய பாலாவுக்குக் கண்டனம்(படம்: 'நான் கடவுள்'). இது இன்றைய உலகம். அதனால்தான் 'அறிவுச் செவி'டாகவே இருந்துவிட்டுப் போகிறேன் என்கிறார் தங்கப்பா....... அறிவுச் செவிடு வேண்டாம் என்று சொல்லச் சொல்ல என்னை மேடையில் ஏற்றி வைத்தனர். படித்தவர்களின் பளபளப்புகளில் கண்கூசிப் போனேன் என் காதுகளும் அறிவுச் செவிடு உலகையே புரட்டும் உரைகள் நடுவிலும் உறங்கிப் போகிறேன். இலையில் வைத்த இடியாப்பத்தில் அடிமுடி காணும் ஆராய்ச்சி எல்லாம் என் மூளைக்குள் எட்டுவதில்லை. மெத்தப் படித்தவர்கள் கொழுத்த சம்பளம் வாங்கிக் கொண்டு தம் தாய்மொழி வளர்ச்சிக்கும் இனமான வளர்ச்சிக்கும் அன்றாடம் ஆற்றிவரும் அழிம்புகள் எண்ணிலடங்கா. வெய்துயிர்ப்பு மட்டுமே நமக்கு எஞ்சும். ஆனால் தங்கப்பா அவற்றை ஆவணமாக்குகிறார்: எதைச் செய்யட்டும்? மேடைகள் மீது நடக்கும் உங்கள் பொய் வழிபாடுகள் நடுவில் சட்டையைக் கிழித்துக் கொண்டு கத்தத் துடிக்கிறேன். சட்டியில் பொத்தல் போட்டுக் கழுத்தில் மாட்டிக் கொள்ளவும், முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்திக் கொண்டு, உங்கள் ஆய்வரங்குகளில் கோணங்கித் தனங்கள் செய்யவும் நெஞ்சு துருதுருக்கின்றது. விளையாட்டில்லை ஐயா மார்களே, வினையாகத்தான் சொல்கிறேன், உங்கள் போலிப் புனிதங்களைத் திரை கிழித்துக் காட்டுதற்கும் உங்கள் பண்பாட்டுப் பொய்முகங்களை உடைப்பதற்கும் எனக்கு வேறு வழி எதும் தெரியவில்லை. ...................................................... மண்ணின் மக்களைத் தீயிட்டுக் கொளுத்தி மனுதருமங்கள் தத்துவம் பேசுகின்றன. இனவெறி அரசுகள் இணைந்து நடத்தும் மக்கள் படுகொலைகளிலும், பட்டாளங்களின் அட்டூழியங்கள், காவல்நிலயக் கற்பழிப்புகளிலும் வாழ்க்கையே மாசு பட்டழிகின்றது. இங்கே, நீங்கள், சும்மா அறிவுப் புலியாட்டங்கள் ஆடியும் இலக்கியப் பொய்க்கால் குதிரை ஏறியும் விளக்கின் நெய்யைத் திருட்டில் விற்று வெளிச்சத்தைப் படம் வரைந்து காட்டிப் புகழ் வாங்குகின்றீர். வாழ்க்கை சவமாய் வலித்துப் போகின்றது. அதற்குப் பளபளப்புச் சட்டை மாட்டிப் பண்பாட்டு நறுமணம் பூசுகின்றீர்கள். ஒன்று நான் கொலை வாளைத் தூக்க வேண்டும், அல்லது கோமாளி ஆகி வாழ்க்கையை மாசு படுத்தும் உங்கள் வழிபாடுகளை மாசு படுத்தி அதிர்ச்சி மருத்துவம் அளிக்க வேண்டும். எதைச் செய்யட்டும்? என்ன இது? அன்பு வழி என்கிறார் தங்கப்பா. அவருக்குள் இவ்வளவு மறவுணர்வா..என்பவர்களுக்கு வள்ளுவர் முன்பே விடையிறுத்து விட்டார்: அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை இந்தக் குறள் உரையாசிரியர்களால் வைக்கப்பட்டிருக்கும் அதிகாரமும் 'அன்புடைமை'யே. மனநலமுடைய வாழ்க்கை குறித்து தங்கப்பா இந்நூலில் நிறைய மொழிந்திருக்கிறார். காட்டுகள் சில: ஆக வேண்டியது ஒன்றுமே இல்லை; அன்பாய் ஒரு சொல். (ப.37) மீசை நரைத்துத் தலை வெளுத்தாலும் விளையாட்டு உள்ளம் வேண்டும் நண்பர்காள். ஆசைக் கடலில் தோணி ஓட்டலாம் அன்புள்ளே இருந்தால் தப்பு வராது. பாசி பற்றாமல் வாழ்ந்து பாருங்கள் பளிச்சென்று உள்ளே வெளிச்சம் தெரியுமே.(ப.38) இயக்குநர் அகிரோ குரோசாவா பாராட்டிய திரை உத்தி - 'கணப்பொழுது இயங்கும் உறைந்த படிமம்.' அது இயற்கைக் காட்சியாகவும் இருக்கலாம். வியர்த்துப்போன உழைப்பாளியின் தோற்றமாகவும் விளங்கலாம். மழலையின் முகமாகவும் திகழலாம். அப்படிப்பட்ட காட்சிகள் பனிப்பாறை நுனிகளாகச் சில உள்ளன. பாருங்கள்: மரங்களில் சொட்டும் இம் மழைத் துளிகள் இலைக் காதுகளில் என்னதான் அப்படிப் பேசுகின்றன? இப்படித் தலை ஆட்டுகின்றனவே அந்த இலைகள்! *** நீல நெளிவில் ஓசைச் சுழிப்பு. நிலையில் பறந்து மடுவில் குதிக்கும் புள்ளிப் பாய்ச்சல். உள்ளான் கழுத்தில் ஒளியின் சுளுக்கு. முங்கி எழுந்த மூக்கின் முனைக்கீழ் ஆடி அடங்கும் அலைவட்டங்கள். *** பட்ட மரத்தின் வெட்டுவாய்ப் பொந்தில் பசுமை தளும்பி ஒரு நுணாக் கன்று. குடு குடு கிழவன் தோளில் தாங்கிய கொழு கொழு குழந்தை. *** பன்றி கிளறிய குழியில் காட்டுக் கோழி இட்ட முட்டை முகிலிடை முழுநிலா. ******** நன்றி: தமிழ்க்காவல்.நெட்.

தமிழர் நலங்காக்க தங்கப்பா அளிக்கும் வேப்பங்கனிகள்

தமிழர் நலங்காக்க தங்கப்பா அளிக்கும் வேப்பங்கனிகள் - தேவமைந்தன் புதுச்சேரி நகரத்தின் கடற்கரைப் பக்கம் புன்னை மரங்களும்; கடற்கரைக்கு மேற்கிலுள்ள நகரத் தெருக்களில் வேப்ப மரங்களும் இன்றும் இயற்கை நலம் ஈந்து கொண்டிருப்பதைக் கண்டு வியந்த ஈரோடை நகர் நண்பர் ஒருவர், என்னிடம் தொல்லையான வினாவொன்றையும் முன்வைத்தார். வேப்ப மரத்தின் நெய், பட்டை(மேற்பட்டை, வேர்ப்பட்டை), பிண்ணாக்கு, பூ(பச்சை அல்லது நாட்சென்ற பூ), வித்து, இலை ஆகியவற்றை மருத்துவப் பலன் கொண்டு புகழும் 'மூல வருக்க பொருட்குண' விளக்கத்தார் - வேப்பம்பழங்களை மட்டும் பயன் சுட்டாது விட்டமை ஏன்? - என்பதே அந்த வினா. நொய்யல் ஆற்றின் அருகில் மதகுப் பக்கத்து வேப்ப மரத்திலிருந்து தாமே உதிரும் அல்லது காக்கைகள் கொத்தும் பொழுது உதிரும் வேப்பம் பழங்களைத் தின்னும் இளமைப் பருவத்தைக் கழித்த நான், அவருக்கு என்ன மறுமொழி சொல்வது என்று திகைத்தேன். நான் மருத்துவரல்லவே! வீட்டுக்கு அவர் வந்த பொழுது, "வேப்பம் பழங்கள் குறித்துக் கேட்டீர்களே! இந்தாருங்கள்.. தமிழர் அகநலங் காக்க நம் தங்கப்பா தந்த 'வேப்பங்கனிகள்'' என்று நூலொன்றைத் தந்தேன். ஆண்டு குறிப்பிடாமல், தோழர் த. கோவேந்தன் வெளியிட்ட தங்கப்பாவின் நூலது. தோராயமாக முப்பதாண்டுகளுக்கு முன் வெளியிட்டிருக்கக் கூடும். அதனுள்ளிருந்து வேப்பம்பழங்கள் சில: "வாய்பெருத்த வயிற்றுக் கடவுளின் கோயில் தோறும் கொழுமடைப் பள்ளியில் எரிகழல் உமிழ்வன எத்தனை அடுப்புகள்! நாகரிக மகள் நாட்டிய மேடையில் உடைகள் விலகலை ஒளியிட்டுக் காட்ட எத்தனை ஆயிரம் மின்விளக்குகள்! வேட்கை நெஞ்சின் வெறித்தழல் ஏறிய பதவிக் கொள்ளைப் பந்தயக் குதிரையை இராவழி விரட்ட என்ன தீவட்டிகள்! அம்பல நடுவில்தன் அழகொளி மாளிகை மறைப்பன என்றே மற்றவர் குடிசையைக் கொளுத்திட எத்தனைக் கொள்ளிக் கட்டைகள்!" என்ற வினாக்கள் அடுக்கடுக்காய் ஒரு பாவில். 'இராவழி ' என்ற சொல்தரும் ஆழமான பொருள் உன்னத் தக்கது. பட்டி மண்டபங்கள், அரட்டை அரங்கங்கள் முதலானவற்றை, வயற்காட்டு வாழ்வை உணர்ந்து வாழ்ந்த பாவலன் மதிக்க மாட்டான். தன்னை ஏமாற்றிக்கொண்டு பிறரையும் ஏமாற்ற விரும்பும் சொல்வணிகர்களே விழைவார்கள். "உங்கள் பட்டி மண்டபங்களையும் காட்டுக் கத்தல் கருத்தரங்குகளையும் நெருப்பிலிட்டுக் கொளுத்துங்கள், போங்கள்! வெறுஞ் சொல் மினுக்கும் வேடிக்கைவிட்டு வாழ்க்கையை நேராய் வந்து பாருங்கள்" இதிலே வரும் வாழ்க்கை என்பது ஒரு தலைமுறைக்குப் பின்[தலைமுறை = 33 1/3 ஆண்டுகள்] ஈழத் தமிழர் வாழ்க்கையைக் குறிப்பதாக மாறிப்போனதை நொந்த நெஞ்சங்கள் உணரும். ஆம். வெறுஞ்சொல் மினுக்கும் வேடிக்கைப் பயல்கள் தமிழகமெங்கும் நிறைந்திருப்பதால்தானே ஈழத் தமிழர்கள் குடும்பம் குடும்பமாய்க் கொல்லப்படுவது கண்டும்; குழந்தைகள் கூட, போர்மாட்சி - படைமாட்சி தெரியாத காடையர்களால் போர் என்னும் பேரில் கொல்லப்படுவது கண்டும் - கட்சி அரசியலுக்கும், பணம் கொல்லும் தேர்தலுக்கும் மனமுவந்து பாடுபட முடிகிறது. தமிழர் நலங்காப்பதாய்ச் சொல்லிக் கொள்ளும் நாளேடுகள் - உட்பக்கமொன்றில் ஈழத்தமிழர் இன்னல் குறித்தும் தலைப்புப் பக்கத்தில் தொகுதி உடன்பாடு குறித்தும் செய்தி வெளியிடுவதைப் பார்க்கவில்லையா? இன்றைய இலக்கியம் என்று தமிழில் அறிவிக்கப்படுபவை எப்படி இருக்கின்றன? இன்றைய எழுத்தாளர்/படைப்பாளர் என்று தம்மைப் 'பிரகடன'ப் படுத்திக் கொள்பவர்கள், நூல்கள் பலவற்றை நெய்து குவிக்கும் தமிழாசிரியர்கள், ஓயாமல் பாமாலை கட்டி அரங்கம் தேடி வந்து பாடும் பாவலர்கள், இன்றைய ஆய்வாளர்கள்... இவர்களெல்லாரும் எப்படிப் பட்டவர்கள்? பழைய இலக்கியக் கடைகளில் பொறுக்கிய தாள்களைச் சேர்த்துத் தைத்த நூல்களில் தம் பெயர் எழுதும் தமிழாசிரியர்கள். பட்டி மண்டபப் பரத்தையின் மடிமேல் வெட்டிப் புலவர்கள் இளித்திடும் கொஞ்சல்கள். காயடித்த 'கவிஞர்கள்' கூடி வாயடி அடிக்கும் பாட்டரங்குகள். .......... ............ ................ அலைகடல் தாண்டி அயல்நாட்டுச் சந்தையில் ஏட்டுச் சுரைக்காய் கறிசமைத் துண்டு வீட்டுக்கு வந்தவர் விட்டிடும் ஏப்பங்கள். சாய்க்கடை மண்ணைச் சலித்துச் சலித்துப் பார்க்கையில் வெளிப்படும் பாசியைப் பகுத்தும், போக்கில் நெளியும் புழுக்களை எண்ணியும் அடிக் குறிப்பெழுதி ஆய்வுகள் இயற்றும் வடித்தெடுத்த உலக்கைக் கொழுந்துகள். அரைத்த மாவையே அரைத்துக் கலக்கிய புளித்த மாத் தோசை போதும் என்பதால் மதுக்கடை வண்டலைப் பச்சையாய்க் கலக்கிப் புதுப் பலகாரம் படைக்கும் 'புதிது'கள்! எத்தனை அழுகல்! என்ன தீ நாற்றம்! இதுதான், இதுதான் ஐயா, இற்றைத் தமிழரின் இலக்கிய உலகமே" வெளிப்படையாக அவரவர் இங்கே தங்கப்பா சுட்டியவற்றை மறுக்கலாம்; அவர்களின் மனச்சான்று, அப்படி ஒன்று இருந்தால், அமைதியாக ஆம் ஆம் என்று ஏற்றுக் கொள்ளும். கொடுமையிலும் கொடுமை எது என்னவென்றால் மாந்தர் பலருக்கு அகமும் புறமும் ஒவ்வாதிருக்கும் இரட்டை நிலைதான். 'உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்' என்று வள்ளலார் பாடினார். அவ்வாறு உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று நடக்கும் பேர்வழிகளைத் தங்கப்பா பட்டியலிட்டே காட்டி விடுகிறார். புதையல் பேய்களின் பூசாரிமார்கள் புத்தரைப் போலவும், கறிக்கடை நடத்தும் கறுப்ப சாமிகள் வள்ளுவர் போலவும் திகழ்கின்றார்கள். மல்லிகைப் பூக்களின் மனத்தைத் திருடிக் காகிதப் பூக்கள் கடை நிறைக்கின்றன. உலகியல் சூளையின் உலர்ந்த செங்கல்கள் வெண்ணெயில் மறைந்தே உணவுத் தட்டில் வந்து உட்காருகின்றன. விழா அரங்குகளில் வெள்ளைச் சட்டையும் கருப்பு நெஞ்சுமாய்க் குள்ள நரிகள் குறுநகை பூத்துத் தலையை ஆட்டியும் தழுவியும், வணங்கியும் தூய்மையே உருவாய் வாழ்த்துரை வழங்கையில் அவற்றின் மனங்களோ மாலை எப்போது மயங்கும் என்று 'நீலச் சுருள்'களை நினைந்திருக்கின்றன. ஆன்மிகம் முழங்கும் ஆச்சிரமங்களின் விருந்து மாளிகைகளில் அரபிய இரவின் அம்பு மலர்கள் பதவி நாயகர்களைப் பாகாய் உருக்கி நிலுவைக் கணக்கை நேர் செய்கின்றன. படிப்புச் சுரைக்காய்ப் பந்தல்கள் அடியில் உலக ஒருமையும் உடன்பிறப்பு அன்பும் சந்தன மாக நாக்கில் மணக்கையில் கழற்றி வைத்த செருப்பி லிருந்து சாதிச் சகதியும் சமயக் கொலைகளும் நடுத் தெரு வரைக்கும் நாறு கின்றன..." 'கிண்டற் பித்தன்' என்ற புனைபெயர் தங்கப்பாவுக்கு உண்டு. 'மன்னூர் மாநாடு' என்ற அவருடைய நெடும்பாப்போல அங்கதச் சுவையும் நெருப்புத் திறனாய்வும் கொண்ட மற்றொரு பாவைப் பார்த்தல் அரிது. சற்று வேறுபாடாக, மிகவும் மென்மையான 'தொனி'யில் மிகவும் முதன்மையானதொரு நிகழ்வை அங்கதப்படுத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக 'வேப்பங் கனிக'ளில் வரும் 'எங்கும் தமிழ்!' என்ற பாவைக் குறிப்பிடலாம். "எங்கள் தமிழைப் பாடமொழியாய் வைத்திட மாட்டோம். அறிவியல், தொழிலியல் மருத்துவம் சட்டம் என்று எதற்கும் தமிழை எடுக்கவே மாட்டோம் அலுவல் மொழியாய் ஆக்கவும் மாட்டோம். தமிழறிந்தோருக்கு அலுவலில் முதன்மை அளிக்கவும் மாட்டோம். ஆனால், உலக அரங்குகளில் எம் உயர்தமிழ்த் தாயை உலவச் செய்வோம்! மாண்புமிகு தமிழ் மாநாடுகளின் உயர்ந்த கோபுரங்களில் அவளை ஏற்றுவோம். வேட்டுகள் முழக்கி விழாப் பல எடுப்போம். ஆனைமேல் ஏற்றி ஊர்வலம் வருவோம். மன்றங்கள் தோறும் படமாய் மாட்டி வீதிகள் தோறும் சிலையாய் நிறுத்திப் பூவும் புகையும் தூவிப் பூசைகள் பலப்பல செய்வோம்! நாடு முன்னேறும்; நாமும் முன்னேறலாம்." 'Gentle sarcasm' என்று மேலைத்திறனாய்வாளர் போற்றும் மென்மையான நையாண்டியை மேலுள்ள பாவில் காணலாம். 'மேலிருக்கும் மாடுகள்' என்றொரு பா. நண்பகலொன்றில் தங்கப்பா ஒரு காட்சியைக் கண்டார். நிழல்தரும் சாலை. வேப்ப மரம். அதன் தழையை வளைத்து, தான் ஓட்டி வந்த மாட்டின் வாயில் ஊட்டுகிறான் கிழவன் ஒருவன். பசுமைக்குக்கேடு விளைவிக்கிறானே அவன்! - என்று திட்டுகிறார் அவனை. தலை கவிழ்ந்தவாறே தன் வழியில் மாட்டை ஓட்டிக் கொண்டு போகிறான் அவன். இப்பொழுது பாவலரின் மனதுக்குள் ஒரு குரல்: " பசித்த மாட்டுக்குப் பச்சை காட்டிய ஏழைக் கிழவனை ஏசி விரட்டினாய். ஊரின் பசுமை ஒருதுளிர் விடாமல் வலைத்து முரித்து வாயில் போட்டுக் கோடி கோடியாய்க் கொழுக்கின்றனவே மேலிருக்கும் பெரிய மாடுகள். அவற்றைத் தடுக்க உன்னால் முடிந்ததா? எல்லார் கடுமையும் ஏழைக ளிடமா? பொல்லாத ஒழுங்கு! போடா மடயனே!" பொதுவான மாந்தருக்கும் - நிரம்பிய பாவலன் ஒருவனுக்கும் இதுதான் வேறுபாடு. நம் நாடு விடுதலைக்குப் பின்பு எத்தகைய முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதைச் சுட்டும் வேப்பங் கனிகள் இரண்டு. அவற்றைப் பார்த்து இக்கட்டுரையை நிறைவு செய்வோம்: நம்மை நாமே எப்படிப் பொறுப்போம்? எப்படிப் பொறுப்போம்? நமக்கே உரிமையாம் நம் தாய்நாட்டைப் பொன்னாய்க் கொழிக்கும் இப் புனித மண்ணினை வேற்று நாட்டு வெள்ளைப் பறங்கிகள் சுரண்ட விட்டு நாம் சும்மா இருப்பதா? எழுங்கள்! வீறுகொண்டெழுங்கள்! வெள்ளைப் பறங்கியை விரட்டி அடிப்போம்! சொந்த மண்ணை, நம் தாய்த் திரு நாட்டைப் பிறர் சுரண்டாமல் நாமே சுரண்டுவோம். இந்தப் பா, தோராயமாக முப்பதாண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டிருக்கலாம். "வெள்ளைக்காரன் போய், கொள்ளைக்காரன் ஆளவந்தான்" என்ற புதுக்கவிதை வரியொன்று பின்புதான் வந்தது என்பதை நாம் மனத்துட் கொள்ளவேண்டும். வெண்கலத் திருவோடு முன்பு நான் ஓட்டைச் சட்டியில் பிச்சை எடுத்தேன். இப் பொழுது, இவர்கள் எனக்குப் புதிதாய்ப், பளபளப்பாக வெண்கலத் திருவோடு அன்பளிப்புச் செய்து விட்டார்கள்! என்ன குறைச்சல் இனிமேல் எனக்கே? இந்தப் பாவில் வரும் வெண்கலத் திருவோடு, இலவய வண்ணத் தொலைக்காட்சியை நினைவு படுத்தவில்லையா? ******** நன்றி: தமிழ்க்காவல்.நெட். க, மீனம் 2040 / 14-03-2009.

20.2.09

தமிழர் கருத்துக் கருவூலம் - அன்றைய விடுகதையும் இன்றைய விடுகதையும் -தேவமைந்தன் பிசி என்று பழந்தமிழரால் அழைக்கப்பட்ட விடுகதை, இன்றைய தமிழர்களால் விடுகதை எனவும் புதிர் எனவும் சொல்லப்படுகிறது. அறிஞர் சண்முகம், விடுகதை என்றால் 'விடுவிக்க வேண்டிய புதிர்' என்று தம் தமிழ்-தமிழ் அகரமுதலியில் குறிப்பிட்டார். அதே பொழுது 'விடுகவி' என்பது கவிதை வடிவிலான விடுகதை அன்று; விடுகவி என்பது தனிப்பாட்டு என்பதை மட்டுமே குறிக்கும் என்பதையும் தெளிவு படுத்தினார். பிசி என்பது விடுகதை வடிவத்துக்கு மூத்தது. உவமிக்கப்படும் பொருளை உவமைப் பொருளால் குறிப்பித்துக் கூறுவதையே பழந்தமிழர் பிசி என்றனர். இப்பொழுது வழங்குகிற விடுகதை, பிசி என்றதன் செறிவும் அழுத்தமும் கொண்டதன்று. விடுகதையைத் தமிழ் நாட்டுப்புற மக்களே சிறப்பாக வழங்குகின்றனர். பட்டணத்து நாக்குகளை விடுகதைகள் அணிசெய்வதில்லை. எல்லோருக்கும் தெரிந்த ஓர் உண்மையைத் தளர்த்தி வெளிப்படுத்துவது 'நொடிவிடுத்தல்' என்று தென்னார்க்காட்டுச் சிற்றூர்களில் சொல்லப்படுகிறது. "எங்கே நொடி விடு பார்க்கலாம், விடுவித்துக் காட்டுகிறேன்!" என்பார்கள். ஏற்புடைய விடை கூறுவதற்கு 'நொடி விடுவித்தல்' என்று பெயர். குறிப்புகள் காட்டி விடை கேட்பதுவே புதிர் ஆகும். "கலை அழகோடும், மறைப்பு வித்தையோடும் தேடச் சொல்வது விடுகதை; யோசிக்க வைப்பது இதன் நோக்கம். நேசிக்க வைப்பது இதன் நேர்த்தி" என்று சிற்பி பாலசுப்பிரமணியம் இதற்கு விளக்கம் தருகிறார்.('கொங்கு விடுகதைகள்' நூலில்) நாட்டுப்புற இலக்கியமான விடுகதை, காலங்காலமாய் ஒருவரின் இயல்பான மொழிதலிலிருந்து மற்றவர் கேள்விக்கு இடைவிடாது பயணம் செய்துகொண்டே உள்ளது. மொழியின் - மக்கள் சார்ந்த ஆற்றல்களுள் ஒன்றாகவும் முதன்மையானதாகவும் புதிர் அல்லது விடுகதையை அறிஞர் நோம் சோம்ஸ்கி அடையாளப் படுத்தினார். சான்றாக, தண்டியம் என்றொரு அழகான சொல் கொங்கு நாட்டில் புழங்குகிறது. தூயதமிழ்ச் சொல். வீட்டின் புறக்கூரையைத் தாங்கும் கட்டையை, வாயிற்படியின் மேற்குறுக்குக் கட்டையைத் தண்டியம் என்று சொல்வார்கள். 'இரண்டு வீட்டுக்கு ஒரு தண்டியம்' என்றொரு விடுகதை. எங்காவது இரண்டு வெவ்வேறு வீட்டுக்காரர்கள் இவ்வமைப்பை ஏற்றுக்கொள்வார்களா? அப்படியானால் இதற்கு வேறுபொருள் அல்லது புதிர் விடுவிப்பு இருக்க வேண்டும். அது என்ன? முகத்திற்கு இரு பகுதிகள். வலம் இடம் என்று இரண்டு. இரு பகுதிகளிலும் காலதர்(வெண்டிலேட்டர்) போல இரு புருவக்கூடுகளின்கீழ் கண்கள் இரண்டு. இரண்டு பகுதிகளையும் சிறப்பாகக் குறுக்குக் கட்டை/தண்டியமாகிய மூக்கு பிரிக்கிறது; அதேபொழுது சேர்த்தும் வைக்கிறது. எனவே அந்த விடுகதைப் புதிருக்கு விடுவிப்பு - 'மூக்கு' என்பதே. இப்படிப் பல. அவற்றுள் சில: இரவிலே சுமப்பான். பகலிலோ சுருண்டு போவான்.(பாய்) இறந்த மாட்டை அலற அலற அடிக்கிறான் பார்.(மத்தளம்) இருட்டு வீட்டிலே குருட்டுக் குள்ள எருமை மேயுது பார். (பெருச்சாளி) பார்க்க அழகு. பாம்புக்கோ பகை. அவன் யார்?(மயில்) அடிபட்டவன் உரக்க உரக்க அழுகிறான். அதைப்போய் மங்கலம் என்கிறது ஊர். அது என்ன?(கொட்டுமேளம்) சடசட மாங்காய். சங்கிலி ரோடு. விழுந்தா கறுப்பு. தின்னா தித்திப்பு. அது என்ன?(நாவல் பழம்) உழைக்கத் தெரிந்தவனுக்கு உதைக்கவும் தெரியும். அவன் யார்?(கழுதை) ஒரு நாள் மட்டுமே ஓய்வெடுக்கும் ஒரே விளக்கு. ஊருக்கெல்லாம் பொது விளக்கு. அது என்ன?(நிலவு) கிச்சா பிச்சா ஊதா ரவிக்கை.(கேழ்வரகு) குண்டப்பன் குழியில் விழுந்தான். எழுந்தான் பார். எல்லார் வாயிலும் விழுந்தான். அவன் யார்?(குழிப் பணியாரம்) ஆனை போவுது. தாரை தெரியவில்லை.(கரிசல்) சிவப்பு ஜிப்பாப் பைக்குள்ளே சில்லறை கொட்டிக் கெடக்குது. (காய்ந்த மிளகாய்) சுட்ட பொணத்தை சுட, செத்த பொணம் வந்திருக்கு. அது என்ன?(கரித் துருத்தி) சூடுபட்டுச் செவந்தவன்தான் வீடுகட்ட ஒதவுவான். அவன் யார்?(செங்கல்) சொறி புடிச்சவனெக் கறி சமைச்சு, சோறெல்லாம் கசப்பு. அவன் யார்?(பாகற்காய்) தங்கச்சி போட்ட சித்திரம் தரையெல்லாம் தவழுது பார்! அது என்ன?(கோலம்) சற்றுப் பெரிய விடுகதைகள்: வலதுபுறம் விளையாடி வலையில் பூரும். வாடாது வதங்காது மண்மேல் போட்டால். (எழுத்தாணி) [நன்றி: அல்லியங்கோதை அம்மாள்] ஆனை செத்து ஆறு மாசம். ஆனாலும் அதன் தடம் அழியவில்லை. அது என்ன?(நெல்) அழகான குழந்தைக்கு பலமா மூணாங்கை. அது என்ன?(அழுகை) கடுகுபோல் வாயிருக்கும். கணக்கற்ற பல்வரிசை. அடுக்கடுக்காய் எலும்பின்றி ஆயிரத்துப் பல்வரிசை. அது என்ன? (நத்தை) பறக்காத பூப்பந்து. பகட்டான சிறுபந்து. வாயிலே இட்டால் தேன்பந்து. ஏழுமலையிலோ பெரிய பந்து. அது என்ன?(லட்டு) அரைப்படி அரிசி பொங்கி, ஆயிரம் பேர் வாயில போட்டும் அரைச்சட்டி மிச்சம். அது என்ன?(சுண்ணாம்பு) மண்ணுக்குள்ள கயிறு. மக்காத(மட்காத) கயிறு.(மண்ணுள்ளிப் பாம்பு) மாரி இல்லாம ஆமை கெட்டது. ஆமை இல்லாம சீமை கெட்டது. அது என்ன?(வெள்ளாமை/வேளாண்மை) தம்பிக்கு எட்டும். அண்ணனுக்கு எட்டாது. அது என்ன?(உதடு) வெள்ளை வெள்ளைத் தண்ணீலே வேசை ஆடுறா பாருக்கா!(மத்து) வெள்ளசீல சுத்தியிருப்பாள் சின்ன குண்டக்கா. அது என்ன?(மோதகம்) பஞ்சே இல்லாம நூல் விப்பான். பலே கைகாரன். அவன் யார்?(சிலந்தி) கொம்பு ரொம்ப கம்பு. தொட்டுப் பாத்தா வம்பு. அது என்ன?(தேளின் கொடுக்கு) ஒரு எழுத்து உமிழும். ஒரு எழுத்து கேக்கும். அது என்ன?(தூ. தா) உத்தியோகம் இல்லே. ஊர் சுத்தி திரிவான். அலைச்சலுக்குப் பஞ்சமில்லே. தெருவுல சோறு. அவன் யார்?(தெரு நாய்) ஊளை மூக்கன். சந்தைக்குப் போறான். அவன் யார்?(பனைநுங்கு) கண்ணுண்டு. பார்வையில்லை. ஆனா, கோத்து வாங்குவான். அவன் யார்?(தையல் ஊசி) மூடி திறந்ததும் மூக்கை வாசனை தொளைக்குது. அது என்ன?(பலாப்பழம்) ஒரே மரத்துல அஞ்சு விதமான பழம். அது என்ன?பால், தயிர், வெண்ணெய், மோர், நெய்) ஆயிரமாயிரம் பேர் அணிவகுத்து வந்தாலும் புளுக்கூண்டு தூசி கெளம்பாது.(எறும்பு வரிசை) பல பேருக்கு ஒரே குடுமி. அது என்ன?(பூண்டு) பூப்போல மவராசி. காயமானாலும் துணைவருவாள். அவள் யார்?(பஞ்சு) அழகான வீட்டுக்கு அரக்கன் தலை அலங்காரம். அது என்ன? (திருஷ்டி பொம்மை) கணக்குப்பிள்ளை பொண்டாட்டி தினுக்குப்போட்டு ஆடினாள். அவள் யார்?(ஆவாரங்காய்) தற்காலத்தில் உருவாக்கப்பட்டுள்ள விடுகதைகளுள் சில: பூத்தா மஞ்சள். காய்ச்சா சிவப்பு. பழுத்தா கறுப்பு. சாப்[பிட்]டா இரும்பு. அது என்ன?(பேரீச்சம்பழம்) குதிகுதி என்று குதிக்கிறாள். கொட்டைப் பல்லால் சிரிக்கிறாள். அவள் யார்?('பாப் கார்ன்' எனப்படும் சோளப்பொரி) பல்லைப் பிடிச்சு அழுத்தினா பதறிப் பதறி அழறா. அவள் யார்?(ஆர்மோனியம்) கல்லுமேலே பூர்ண சந்திரன். வாங்க. புட்டுப்புட்டுத் தின்னலாம். (தோசை) தலையைச் சீவினால் தாளில் சீராக நடப்பான். அவன் யார்?(பென்சில்) இதுவரை இல்லாதது. ஆனால் எப்போதும் இருப்பது. எவருமே அறியாதது.(அடுத்த/வரும் நாள்) ஒருநாடு போ என்கிறது. ஒரு நாடு வா என்கிறது. அவை என்ன? (போலந்து, வார்சா) வேட்டை ஆட முடியாது. வேடர் உள்ள தீவு.(அந்தமான்) கண்ணுக்குக் கரையே தெரியாது. தண்ணியே இல்லாத தடாகம். அதுல தாவிப்பாயுது பார் சீவனுள்ள கப்பல்.(ஒட்டகம்) வெளி'ல இருப்பவனைத் அழுத்தினா உள்ளே இருக்கிறவன் அலறி வூட்டையே நடுக்கடிக்கிறான். அவன் யார்?(அழைப்பு மணி) கையைப் புடிச்சார். காசு கேட்டார். தட்டிக் கேட்கவோ ஆரும் வரலை. அவர் யார்?(மருத்துவர்) முச்சந்திலே மூணு விளக்கு. பாத்து நடந்தீர்'னா பாதகமில்லே. அது என்ன?('சிக்னல்') வாயில்லாப் பிள்ளை ஊர் ஊராய்ப் பறக்குது. அது என்ன?(விமானம்) காத்தடிச்சா பறக்கும் காயிதம். பாத்தா எவனும் பொறுக்கி எடுக்குறான். அது என்ன?(ரூபாத் தாள்) பூமியிலே பிறக்கும். புகையாகப் போகும். அது என்ன?('பெட்ரோல்') சண்டையில்லே. யுத்தமில்லே. ஆனா உயிரை காத்துக்க இன்னைய வீரனுவோ போடறது. அது எது? ('ஹெல்மட்') ஓலம் இட்டாலும் சோறாக்குவான். அவன் யார்?('குக்கர்') நாளுக்கு நாள் இளைக்கிறவனுக்கோ நாள் காட்ற வேலை. அவன் யார்?(தினசரி காலண்டர்) ரெண்டு பேருக்குமேல ரெண்டு பேர் தொணை. அவங்க யார்?(மூக்குக் கண்ணாடி) மண்ணுக்குள்ள மயிர்கோதி.(பனங்கிழங்கு) நாராசமா ஓசை பண்ணி ஒன்ன கூப்புடும். ஒன் காதுல மட்டும் ஊர்க்கதையெல்லாம் சொல்லும். அது என்ன?(தொலைபேசி) வீடில்லா நகரங்கள். நீரில்லா சமுத்திரங்கள். அது என்ன?(தேசப்படம்) சிறகில்லாப் பறவை. நாடெல்லாம் சுத்தும். அது என்ன?(தபால்) கறுப்பனுவ கொஞ்சம் அசந்துட்டா வெள்ளைக்காரனுவ ஆட்டம். அது என்ன?(நரை) புடிக்கவே முடியாது. அத்தனெக் கள்ளப்பய.(புகை) குண்டுமுழி ராசாவுக்கு குடலெல்லாம் பல்லு. அது என்ன?(மாதுளை) போறப்போ கெழவி. வர்ரப்போ கொமரி.(சால்) [சால்= ஏற்றம், கமலை முதலியவற்றில் நீர் முகப்பதற்குப் பயன்படுத்தும் கலன்/container made of leather] குள்ளமான கோழிக்கு கொடலுக்குள் சதங்கை.(நிலக்கடலை) கைக்குள்ள அடங்கிக்கிடுவான். கண்ணத் தொறந்து மின்னுவான். அது என்ன?('டார்ச் லைட்') போட்டா பொரியும் இங்கிலீசு முட்டை.(கடுகு) மண்ணுக்குள்ள மயிரு... பயிராகுது.(வெட்டிவேர்) வளைக்க முடியும். ஒடிக்க முடியாது. அது என்ன?(தலைமயிர்) வெள்ளிப் பணம் துள்ளி விழும். அது என்ன?(மீன்) குளிர் இல்லே. கூதல் இல்லே. குளிர் காயறாங்க. யார்?(கொல்லர்) சண்டை போடலை. சச்சரவில்லை. குடுமியைப் பிடிக்கிறார். அவர் யார்?(முடிதிருத்தம் செய்பவர்) சிலுசிலுத்த தண்ணியில செம்மறி ஆடுக மேயுது. அது என்ன?(எண்ணெய்ப் பலகாரம்) ‘கேள்வியினால் வளரும் அறிவு’ என்பதுபோல், சொல்லியும் கேட் டும் வளரும் விடுகதை எனும் செவிச்செல்வத்தை முழுமையாகத் திரட்டித் தொகுக்க ஆசைப்பட்டனர் அறிஞர் பலர். பூர்ணிமா சகோதரிகள்[1963], ரோஜா முத்தையா[காரைக்குடி 1963,1965], பண்டிதர் வேதமுத்து ஐயா [1971,1975], பி.சி.எஸ். மணியன்[1974] எஸ்.ஏ. ஆறுமுகச்சாமி ('சிந்தனையூட்டும் விடுகதைகள்.' ஆண்டு குறிக்கப்படவில்லை) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்கின்ற பலர் தேடித்திரட்டி அனுப்பிய விடுகதைகளை முனைவர் க. காந்தி துணையுடன் சென்னை தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரும் முதன்மைப் பேராசிரியருமான முனைவர் ச.வே. சுப்பிரமணியன் 1975ஆம் ஆண்டில் தொகுத்துப் பதித்து வெளியிட்டார். திரட்டிய 3500 விடுகதைகளை அலசி ஆய்ந்து பொருத்தப்பாடுடைய 2504 விடுகதைகளை மட்டும் தெரிவு செய்தார். புதுச்சேரி நாட்டுப்புற விடுகதைகளை முனைவர் அ. கனகராசு ஆராய்ந்து 1998ஆம் ஆண்டு வெளியிட்டார். முனைவர் தி. பெரியசாமி கொங்கு நாட்டுப்புற விடுகதைகளுள் பாலியல் சார்பு வாய்ந்தவற்றையும் விட்டுவிடாமல், பல தலைப்புகளின்கீழ் பகுத்து நூலாக்கினார். சென்னை ‘தன்னன்னானே’ பதிப்பகம், 1006 விடுகதைகள் கொண்ட தொகுப்பாக அதை வெளியிட்டது. பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம் 1964ஆம் ஆண்டில் ‘வாய்மொழி இலக்கியம்’ என்ற தலைப்பில் விடுகதைகளைக் குறித்த ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட்டார். முனைவர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள், தம் ‘சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும்’ என்ற நூலிலும், கி.வா.ஜகந்நாதன் ‘கஞ்சியிலும் இன்பம்’ போன்ற நூல்களிலும், முனைவர்கள் வி.மி. ஞானப்பிரகாசம், க.ப.அறவாணன் ஆகியோர் தாம் பதிப்பித்த ‘நாட்டுப்புற இலக்கியப் பார்வைகள்’(சென்னை,1974) நூலிலும், முனைவர் ஆறு. அழகப்பன் தம் ‘நாட்டுப்புறப் பாடல்கள்-திறனாய்வு’(சென்னை,1974) நூலிலும் இவற்றைக் குறித்துப் பல்வேறு வகைகளில் ஆராய்ந்தனர். குழந்தையைக் குறித்து சொல்லப்படும் மிகச் சிறந்த விடுகதைகளாகக் கருதப்பெறுபவை: தமிழ் வழங்கும் எவ்விடமும் சென்று "வருத்தம் இலாத சுமை - அது என்ன?"**** என்று கேட்டோமானால் உடனே 'குழந்தைச்சுமை' என்ற விடை வரும். கொங்கு நாட்டுப் பக்கம் சென்று, "காத வழி போனாலும், கைகடுக்காச் சுமை என்ன சுமை?"*** என்று கேட்டால் அதே விடை கிடைக்கும். புதுச்சேரிச் சிற்றூர்களில் "சும்மா இருக்காது, சொல்லவும் தெரியாது - அது என்ன?" என்று கேட்டால் 'குழந்தை' என்ற விடை வரும்.(**) இதேபோல் எல்லா விடுகதைகளும் பொதுவான விடை பெறுவதில்லை. கொங்குப் புறத்துக்கே உரிய பேச்சுவழக்கில் அமைந்த நெருஞ்சி முள்ளைச் சுட்டும் ''சின்ன மச்சான் குமிய வச்சான்''*** என்ற கொச்சை வழக்கு, பிற பகுதிகளில் வழக்கில் இல்லை. புதுச்சேரிச் சிற்றூர்களுக்கே சொந்தமான விடுகதைகள் சிலவற்றைப் பார்ப்போம். "ஓகோ லேலோ உயர்ந்த லேலோ கண்டந் துண்ட சப்லட்டு லேலோ - அது என்ன?"** என்று புதுவைக் கடற்புரச் சிற்றூர்களில் முருங்கைக்காய் சொல்லப்படுவதுபோல நல்ல தமிழில் வயற்புறச் சிற்றூர்களில், "உச்சாணிக் கிளையிலே ஊசிகட்டித் தொங்குது - அது என்ன?"*** என்ற வழக்குக்கு உரியதாகிறது. தூக்கணங்குருவிக்கூடு குறித்த விடுகதையான, "சின்னச் சிறுக்கியும் சின்னப் பையனும் சிரித்துக் கட்டின தாலி சிக்கில்லாமல் அவிழ்ப்பவர்க்குச் சென்னப் பட்டணம் பாதி - அது என்ன?"** என்பதில் தாலிக்குக் கொடுக்கப்படும் முதன்மை தெரிகிறது. குருவிக் கூட்டைத் தாலியாகக் கருதுமளவு புதுவைச் சிற்றூர்களில் தாலிக்கு முக்கியத்துவம் இருந்திருக்கிறது. சாதி-தொழில் அமைப்புகள், கல்வி, எண்ணும் எழுத்தும், புழங்கும் ஆங்கிலச் சொற்கள், வண்ணங்கள், வழிபாடுகள், மகளிர் பற்றிய வசைமொழிகள், மனைப்பொருட்கள்-பயன்பொருட்கள், ஆண்-பெண் ஆடை அணிகலன்கள், இசைக்கருவிகள், ஊர்திகள், திருமணம்- மகப்பேறு, முறையற்ற பாலியல் உறவுகள் குறித்த விடுகதைகள் மேலும் எத்தனையோ உள்ளன.** ******** பார்வை: தமிழ் விடுகதைகள் தேவமைந்தன் திண்ணை.காம் 06-7-6. எஸ்.ஏ. ஆறுமுகச்சாமி(தொகுப்பாசிரியர்), சிந்தனையூட்டும் விடுகதைகள். சிவகாசி. **முனைவர் அ. கனகராசு, புதுச்சேரி மாநில நாட்டுப்புற விடுகதைகள் காட்டும் மக்கள் வாழ்வியல். புதுச்சேரி. *** முனைவர் தி. பெரியசாமி, கொங்கு நாட்டுப்புற விடுகதைகள். சென்னை. **** முனைவர் ச.வே. சுப்பிரமணியன், தமிழில் விடுகதைகள். சென்னை. **** நன்றி: திண்ணை.காம்
தெளிவு -தேவமைந்தன் ஏதேதோ சாப்பிடுகிறோம். ஏதேதோ குடிக்கிறோம். எங்கெங்கோ போகிறோம். யார்யாருடனோ என்ன என்னவெல்லாமோ பேசுகிறோம்; சிரிக்கிறோம்; சிரிக்க வைக்கிறோம்; புண்படுகிறோம்; புண்படுத்துகிறோம்; மகிழ்கிறோம்; மகிழ்விக்கிறோம்; வருந்துகிறோம்; வருத்துகிறோம்... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். மாட்டிக்கொள்ளுதல்கள்(commitments) பல: உடன்பாடுகளோ பற்பல; வாக்குறுதிகள் மேலும் பல; நமக்கென்றே அவற்றை மீறிக்கொள்ள ஒரு தனிப்பாணியைக் கண்டுபிடித்துக் கொள்கிறோம். மீறுகிறோம்; ‘அப்பாடா’ என்று நிம்மதி அடைகிறோம். பிறகென்ன? தூங்குகிறோம். நிம்மதியாகவா? இல்லை, பகல்நேர வாழ்க்கையைவிடவும் அபத்தமான கனவுகளோடு. “உங்கள் நண்பர்கள் யார்யார் என்று காட்டுங்கள்; நீங்கள் யாரென்று சொல்லிவிடுகிறேன்!” என்ற அறிவுமொழி ‘அரதப் பழசு.’ புதுமொழி என்ன தெரியுமா? “உங்கள் கனவுகள் எவை, எவை என்று சொல்லுங்கள்; நீங்கள் யாரென்று சொல்லிவிடுகிறேன்!...” “நீங்கள் வாசிக்கும் புத்தகங்கள் எவை?” என்ற கேள்விக்கு ‘இல்லாத புத்தகங்க’ளின் பட்டியலைக் கொடுத்து தப்பிவிடமுடிவதுபோல, கனவுகள் விஷயத்தில் செய்துவிட முடியாது. கண்களே காட்டிக் கொடுத்து விடும். சந்திக்கும் உங்கள் நண்பர் ஒவ்வொருவரிடமும் கேட்டுப் பாருங்கள். “தெளிவு’ என்றால் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள்!” என்றுதான்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கம் தருவார்கள்... என் தமிழ் ஆசான் அந்தச் சொல் இடம்பெறும் பாடல் ஒன்றைச் சொல்லிக் காட்டியிருந்தார். யாரிடம் வேண்டுமானாலும் அதன் விளக்கத்தைக் கேட்டுப் பார்க்கலாம் என்றும் சலுகை தெரிவித்திருந்தார். என் ஊரில் பெரியவர் ஒருவரிடம் இதை நான் கேட்டேன். அவர் பெயரே வேடிக்கையானது. ‘பேயன்பழத் தாத்தா.’ இயற்கை மருத்துவர். சித்தர் என்றும் சொல்வார்கள். எந்த நோயாய் இருந்தாலும், கிழக்குப் பக்கமாக மோட்டுவளையைப் பார்த்து, ஏதேதோ முணுமுணுத்துவிட்டு, அவர் கட்டிலுக்கு உட்பக்கமாக, வெளியே ஒரு பகுதி வாயைக் காட்டிக் கொண்டிருக்கும் அண்டா ஒன்றில் கைவிட்டு, நன்கு பழுத்துக் கறுத்திருக்கும் பேயன்பழம் ஒன்றைத் தருவார். பலபேருக்கு நோய் குணமாயிற்று. ‘பேயன்பழத் தாத்தா’ தனக்கென்று திட்டவட்டமான முடிபுகளைக் கொண்டிருந்தார்.. “தெளிவு’ன்னா இன்னா’ன்னுதா’னே கேட்டே..?” என்று சொல்லிவிட்டு சாதிக்காய்ப் பெட்டி ஒன்றைத் திறந்தார். உள்ளே திருநீறு மணந்துகொண்டிருந்த ஒரு பழைய புத்தகத்தை எடுத்துத் தந்தார். அது ‘திருமந்திரம்.’ “பிரி, அந்த நூத்திமுப்பத்தொன்பதாம் பாட்டெ.. ஆங்ங்.. பட்டுக்கயிறு சாத்தி வச்சிருப்பன்’ல.. அந்தப் பக்கத்தெ எடு...” அவர் பேசியது இன்னும் என் செவிகளில் ‘ரீங்கார'மிட்டுக் கொண்டிருக்கிறது. இசைபோல இருக்கும் அவர் பேச்சு.. வாசித்துக் காட்டச் சொன்னார். வாசித்த முறையைத் திருத்தினார். “ஆங்.. பாட்டெல்லாம் இப்ப்’டிப் படிக்கக் கூ..டாதே.. திருத்தமா, ஒப்புராவா, ஓசை நிரவி, படி!” “ தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே” படித்தேன். பொருள் கேட்டேன். எனக்கு அப்பொழுது பன்னிரண்டு வயதிருக்கும். ஒருமாதிரி மருமமாக சிரித்தார். “பொருள் சொல்ல்’றதா.. சொன்னா எல்லா’ வெளங்காது.. நீயா படி.. ஒவ்வொரு தாட்டியும் படி.. ஒவ்வொரு வயசில’யுந்தான்.. புதிசு புதிசா வெளங்கும்.. ஒவ்வொரு தீவாளிக்கும் பொங்கலுக்கும் ஒனக்கு புதிசு புதிசா’த் துணியெடுத்துத் தர்’றாங்கள்’ல.. அதுமாதிரி ‘குரு’ ஒனக்கு ஒவ்வொரு தாட்டியும் புதிசு புதிசா பொருள் வெளங்கறமாதிரி கத்துக் கொடுப்பார்..” என்றார். “தாத்தா!.. ‘குரு’ன்னா வாத்தியாரா? ... கேட்டேன். “ம்ம்.. அப்ப்”டியும் வச்சுக்கோ.. ஒவ்வொரு சமயம், ஒவ்வொரு குரு..” என்று கண்களை அழுத்தமாக மூடியவாறு எங்கோ சஞ்சரித்த குரலில் பேசினார். “பசுவதீ! இதெல்லாம் ‘டக்’னு முன்னாலெ எடுத்து வைக்கிற சமாச்சாரம் இல்லே’ப்பா.. ஒன் வாழ்க்கை’லே..அட என்னாப்பா.. ஒவ்வொருத்தங்க வாழ்க்கை’லே அடிபட்டு அடிபட்டு.. தெளிஞ்சு எந்திரிக்குறபோது வர்’றதுதாம்ப்பா தெளிவு..அட..ஒஞ்சாமி மட்டும் இல்ல.. அது ஒனக்கு அப்பப்ப அடி விழறபோது தருது பாரு.. ஒரு பாடம்.. அதுக்கு இன்னொரு பேர் தெளிவு.. அத்'தெக் குடுக்குது பாரு.. அதான் குரு.. குரு’ன்னு இன்னார்தான், இதுதான்’னு இல்ல.. அதென்னவோ ஒரு உபநிசத்து’ங்றாங்க..அதுல சொல்’றாராம் ஒரு ரிசி..அவருதாம்’ப்பா..முனிவரு..ஆங்ங்..தத்தாத்திரேயரு... தனக்கு சாமி, ஆசாமி’ல இருந்து வேசி, குப்பக்கோழி வரெ இருபத்தாறு குருமாருங்க’ங்றாராமல்ல’ப்பா..சொலவம் வருதாமல்ல அப்பிடி?...” அவர் அன்று இதைச் சொன்னபொழுது விளங்கியதைவிட முப்பது வயதில், நாற்பது வயதில், ஐம்பது வயதில் மேலும் அதிக அதிகமாக விளங்கியது; விளங்கியது என்பதைவிடவும் 'உறைத்தது' என்று சொல்லுவது மிகவும் பொருத்தம். ஒரே பாட்டு, ஒரே சொலவம், ஒரே சொலவடை, ஒரே செய்யுள், ஒரே கவிதை, ஒரே பழமொழி - ஆண்டுகள் பல ஆக ஆக, வேறு வேறு அர்த்தம் தருகிறதே..எப்படி? ****************************** நன்றி: திண்ணை.காம் வலையேட்டில் வந்த கட்டுரையை வாசித்து மின்னஞ்சல் விடுத்த அன்பர்களின் கருத்துகள் சிலவற்றை ஏற்று, சற்றுத் திருத்தி மாற்றிய பதிவு. **** karuppannan.pasupathy@gmail.com
அறிஞர் அண்ணாவின் கதை சொல்லும் ஆற்றல் - தேவமைந்தன் தமிழக அரசியல், இலக்கிய வரலாற்றில் முதன்மையான இடம் வகித்த அறிஞர் அண்ணா அவர்களை முற்போக்கு இலக்கியத் திறனாய்வாளர்கள் - படைப்பாளர்களில் பெரும்பாலோர் குறைத்து எழுதியும் மதிப்பிட்டும் பேசியும் வருகிறார்கள். இது நம் நாட்டு இலக்கியவாதிகளிடம் உள்ள நுண்ணரசியலின் தாக்கம். திராவிட இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்பதை அகத்தியமானதொரு காலவரலாற்றுக் கட்டாயம் என்று இணக்கமான முறையில் சரியாகப் புரிந்துகொள்ள 'அறிவுஜீவிகள்' தவறிவிட்டனர். அன்னியமான அரசியல் பொருளாதார இலக்கியக் கண்ணோட்டத்தை அவர்கள் வரப்படுத்திக் கொண்டதே இதற்குக் காரணம். அண்ணாவின் கதை சொல்லும் ஆற்றலுக்குச் சான்று ஒன்று -'கலிங்கராணி' என்னும் புனைகதை, குலோத்துங்க சோழன் கலிங்கநாட்டின்மேல் பெற்ற வெற்றியைப் பின்புலமாக வைத்துப் படைக்கப்பட்டது. அதில் அறிஞர் அண்ணா, தமிழக வரலாற்றுப் பின்புலத்தில் தமிழ் மன்னர்களே தமிழ்ப் பண்பாட்டை அழிக்கக் காரணமாய், 'கூட இருந்தே குழி பறித்த' இனப் பகைவர்கள் யார் என்று அடையாளம் காட்டுகிறார். குலோத்துங்கன் அரண்மனைக்குளேயே இருந்து சூழ்ச்சி செய்தவர்கள் ஆரியர்கள் என்பதைக் கதை சொல்லும் போக்கிலேயே புலப்படுத்தி விடுகிறார் அண்ணா. மலர்புரி அரசி மருதவல்லியை எப்படியெல்லாம் ஓர் ஆரியன் ஏமாற்றுகிறான் அதற்குத் தமிழன் ஒருவனையே எப்படி அவன் பகடைக் காயாகப் பயன்படுத்துகிறான், மருதவல்லிக்கும் நடனாவிற்கும் உள்ள நட்பை ஆரியப் பெண்மணியான கங்கபாலா எவ்வாறு சதிசெய்து முறிக்கிறாள் என்பதையெல்லாம் வாசகர்கள் சலிப்படையாதபடி திறமையாகச் சொல்லிக் கொண்டு போகிறார் அண்ணா. மன்னன் குலோத்துங்கன் கூறுகின்றான்: "பெரியவரே! அஞ்சாதீர்! அவர்களின் கலை, நீர்மேல் எண்ணெய் போல் தமிழகத்திலே மிதப்பதை நானும் கண்டேன். நாளாவட்டத்தில் அதை நீக்குவோம். இது உறுதி; ஆரியர் தமிழகத்திலே தமது ஆதிக்கத்தைப் புகுத்த முயன்றால் கனக விசயர் கண்ட கதியே காண்பர்." இவ்வாறு அறிஞர் அண்ணா தமிழினத்தை விழிப்பூட்டுவதற்கான இயக்கக் கருத்தொன்றைத் தன் கதை சொல்லும் ஆற்றலால் எண்ணற்ற இளைஞர்களின் உள்ளங்களில் விதைத்தார். இதை இனவெறி என்று, நாசிசக் கொள்கை என்பதையே அறியாதவர்கள்தாம் கூறமுடியும். புகழ்மிக்க ஜெர்மன் திரைப்படமான 'Hitlerjunge Salomon'(இயக்கம்: Agnieszka Holland) ஆரியர்களின் இனவெறியை உலகறியச் சொன்னதெனில், அதை இனங்காட்டுவதும் அடையாளப்படுத்துவதும் எப்படி இனவெறி ஆகும்? இந்தப் புலப்பாட்டுக்குக் காரணம் அறிஞர் அண்ணா அவர்களின் கனல்பறக்கும் இயல்நடையில் அமைந்த கதைசொல்லலே ஆகும். இதைத்தான் கலையம்சம் குறைந்தது என்றும் வடவர் எதிர்ப்பு, பிராமணர் எதிர்ப்பு, ஆரியர் எதிர்ப்பு ஆகிய பிற இனவெறுப்பின் அடிப்படையில் அமைந்தது என்று அறிஞர் அண்ணா அவர்களின் கதை சொல்லும் ஆற்றலைக் குறித்து எஸ்.தோதாத்ரி போன்றோர் எழுதினர்.(1) பச்சையப்பன் கல்லூரியில் முதல்வராக இருந்த சின்னத்தம்பிப் பிள்ளை, அண்ணாவின் ஏழ்மை நிலையை அறிந்து பாடப்புத்தகங்கள் வாங்கித் தருவது முதலான உதவிகள் செய்து, பி.ஏ.ஆனர்ஸ் படிக்க வைத்தார். அரசியல், வரலாறு, பொருளியல் மூன்றையும் சிறப்பாகப் பயின்ற காலத்திலேயே மேடைப்பேச்சுகள் நிகழ்த்தி - தீண்டாமை எதிர்ப்பு, சாதியொழிப்பு முதலான சமூக சீர்திருத்தங்களை வலியுறுத்துவதற்குத் தோதாக, கதைசொல்லும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார் அறிஞர் அண்ணா. அவர் கதை சொல்லப் பயன்படுத்திய உரைநடை, அந்தக் காலத்துக்கு மிகவும் புதியது. சிந்தனையைக் கிளர்வது. சமூகத்தின் இருண்ட பகுதிகளை - மேல்மட்டத்தில் சகல வசதிகளோடு வாழ்ந்து கொண்டிருந்தவர்களின் ஊழல்களை, மற்றவர்களுடன் அவர்களும் வாசிக்கையில் பரிகசிக்கும்படி நாடக உரையாடல் பாணி நடையும் கலந்து எழுதப்பட்டது. 'திருமலை கண்ட திவ்யஜோதி,' 'புலிநகம்,' 'பிடிசாம்பல்,' 'தஞ்சை வீழ்ச்சி' முதலான அண்ணாவின் சிறுகதைகள், கற்பனை இழையோடும் நடையைக் கொண்ட வரலாற்றுச் சிறுகதைகளாக விளங்கின. 'அடைமொழிக்கும் அடுக்குமொழிக்கும் கூறவந்த கருத்தைவிட வலியுற்று நிற்கும் பயனிலையை முன்னிறுத்தி எழுவாயை அதன்பின் அமைந்த மொழிநடைப் பாங்கினை இவர்தம் நடையின் தனிக்கூறு எனலாம்' என்று முனைவர் இ. சுந்தரமூர்த்தி கூறுவார்.(2) 'பார்வதி பி.ஏ.' என்ற புதினத்தில் வரும் கதைப்பாத்திரம் டாக்டர் லலிதகுமாரி. தன் படைப்பான அவரைப் போலவே தானும் 'சமுதாய நோய்முதல் நாடிய நுழைபுல மருத்துவ'ராக அறிஞர் அண்ணா விளங்கினார்.(3) 'குமரிக் கோட்டம்,' 'சுடுமூஞ்சி,' 'பலாபலன்,' அன்னதானம்,' 'பேய் ஓடிப்போச்சு,' தேடியது வக்கீலை,' 'இரு பரம்பரை,' 'ராஜாடி ராஜா,' 'சூதாடி,' கருப்பண்ணசாமி யோசிக்கிறார்,' 'ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர்,' 'செவ்வாழை' ஆகிய சிறுகதைகள், அண்ணாவின் கதை சொல்லும் ஆற்றலால் எத்தகைய திடமான சமூக நோக்கை வாசகர் நெஞ்சில் விதைத்தன என்பதற்குச் சான்றுகள். சனாதன மிகைப்பற்றும் சாதிவெறியும், எளிமையானதும் உறுதியானதுமான பகுத்தறிவுக் கடைப்பிடியின் முன் வெல்ல முடியா என்பதைச் சொல்லும் கதைதான் 'குமரிக் கோட்டம்.' குமார கோட்டம் குமரிக் கோட்டம் ஆவதை, [கதையைச்]சொல்லிச் செல்லும் முறையில் உறுதிப்படுத்தி விடுகிறார் அண்ணா. குமரிக் கோட்டம், எளியோரின் புகலிடம். 'கண்ணீர்த் துளிகள்' என்று பெரியாரால் அழைக்கப்பட்ட காலகட்டத்தில், தாம் பெரியாரைப் பிரிந்ததால் எந்த அளவு பாதிப்பிற்குள்ளானார் என்பதை அறிஞர் அண்ணாவை விட எவராலும் இந்த அளவு கதையாகச் சொல்ல முடியாது. அதுதான் 'ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர்.' இந்த சுரண்டல் சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டு வாழ இயலாமல் போகும்பொழுது வேறு வழிகளில்லாமல் சிறு சிறு குற்றங்களில் ஈடுபடுவோரை எந்த அளவு வன்மத்துடன் இதே சமூகம் தண்டிக்கிறது என்பதை 'ராஜாடி ராஜா' வில் சொன்னார் அண்ணா. சீட்டாட்டம் சூதாட்டம். பணம் வைத்துச் சூதாடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று பிரகடனப்படுத்தும் போலிச் சமூகம், பங்குச் சந்தையில் பணவேட்டையாடுபவர்களை என்ன செய்கிறது? - என்று அன்றே கேட்டார் அண்ணா. இன்று பங்குச் சந்தைச் சூதாட்டத்தை எல்லோருக்கும் கற்றுத்தர ஊடகத்துறை முனைந்துள்ளதை நாமறிவோம். அதுபற்றி எவருக்கும் கவலையில்லை. மரத்துப் போய்விட்டது. 'சூதாடி' கதையில் அறிஞர் அண்ணாவின் சொல்லாடலை ஒருமுறை மீண்டும் படித்துப் பார்த்தோமானால் மனம் மீண்டும் உணர்வுபெறும். மனிதரின் மூடத்தனத்தை கடவுளர் எள்ளி நகையாடுவதாக அண்ணா சித்திரித்த கதைதான் 'கருப்பண்ணசாமி யோசிக்கிறார்.' 1951இல் லால்குடியருகே புஞ்சைச்சாங்குடி என்ற கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியே இந்தக் கதையின் அடித்தளம். இதை அண்ணா தவிர யார் சொன்னாலும் வெறும் செய்தி ஆகிப்போகும். வர்க்க சமூக பேதம், வீட்டு விலங்குகளைக்கூட விட்டு வைக்காது என்பதை அழுத்தம் திருத்தமாக அண்ணா சொன்ன கதை, 'இரு பரம்பரை.' 'தனம்' என்ற தமிழ்த் திரைப்படம் - 'சோதிடந்தனை இகழ்' என்பதை, பொருத்தமான கதை - நடிகர் - இயக்கம் ஆகிய கட்டமைப்போடு சொன்னது. தமிழினம், வழக்கம்போல அதற்குத் தரவேண்டிய ஆதரவு தரவில்லை. தினத்தந்தியே சோதிடம் பரப்பும் காலமல்லவா இது? இதே சேதியை அண்ணா ஐம்பதாண்டுகளுக்குமுன் சிறுகதைகளாகச் சொன்னார். கதைப்பாத்திரங்கள் மட்டும் ஆண்கள்தாம். 'சுடுமூஞ்சி,' 'பலாபலன்' என்பவையே அவை. அண்ணாவின் புதினம் ஒன்றனுக்கு வருவோம். 'ரங்கோன் ராதா'வில், சமூகத்தில் முக்கியத்துவம் பெறும் பெரிய புள்ளிகளின் அசலான இயல்பை, அண்ணா, தன் பாணியில் கதையாகச் சொன்னார். 'இத்தகைய பெரிய மனிதர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சமுதாயத்தை நேர்மை மனப்பான்மை கொண்ட தனிமனிதன் எதிர்க்கும் நிலையில் சந்திக்கும் இடையூறுகளையும் அண்ணாதுரை ரசமான கதைப்போக்கில் காண்பிக்கிறார்.(4:1) தர்மலிங்க முதலியார் என்பவர் பேராசை மிக்கதொரு பெரும்புள்ளி. தன் மனைவி ரங்கத்தின் தங்கையும் 'பகல்வேஷப் பகட்டுக்காரி'யுமான தங்கத்தை இரண்டாம் மனைவியாக தர்மலிங்கம் மணந்து கொள்கிறார். அந்த இருவரும் அடித்த கொட்டத்தில் விரக்தி அடைந்த ரங்கம், தனக்கு சமூகம் இட்டிருந்த வேலியைத் தாண்டுகிறாள். தன் ஆசைநாயகனுக்குப் பிறந்த ராதா என்ற மகளுடன் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் பர்மாவிலிருந்து தமிழகம் திரும்புகிறாள். நாகசுந்தரம் என்கிற தர்மலிங்கம் முதலியாரின் மகன் அவர்களைச் சந்திக்க நேர்கிறது. ராதா தன்னுடைய தங்கை முறை என்றறிந்த அவன், அவளுக்கு நல்வாழ்வு கொடுக்கப் பெருமுயற்சி எடுக்கிறான். நண்பன் பரந்தாமனுக்கு அவளை மணம் செய்து வைக்கிறான். அடுக்குச்சொற்கள் நிரம்பிய அணிநடையும் புராண இதிகாச அறிவும் அண்ணாவின் கதை சொல்லலை வலிமைப்படுத்துகின்றன. அதிலுள்ள ''பிரசார தொனி'க்கு அழுத்தம் தருவன அவர் கதை சொல்லும் முறையில் இடம்பெறும் அந்த இரண்டும்தான்.''(4:2) அண்ணாவின் வரலாற்றுக் கதை சொல்லும் பாணியில் வரலாற்றுண்மைகள் பல வெளியாயின. மிகச் சில சான்றுகள்: புத்த மார்க்கம் பரவாமல் தடுப்பதற்கு வைதிக சமயவாதிகள் நாலந்தா பல்கலைக் கழகம் தொடர்பாகச் செய்த கொடுஞ்செயலே 'ஒளியூரில்' என்ற கதையில் வெளிப்பட்டது. இஸ்லாமும் வைதிக சமயமும் முரண்பட்ட நிலையை மாவீரன் சிவாஜியின் வாழ்வு நிகழ்ச்சி ஒன்றைப் பின்னணியாக வைத்து அறிஞர் அண்ணா சொன்ன கதையே 'புலிநகம்' ஆகும். கிறிஸ்தவ மதமும் வைதிக மதமும் மோதிக் கொண்டன. திருமலை மன்னன் மறைவுக்கு அவனுடன் கிறித்தவப் பாதிரிமார் கொண்ட நட்பை வெறுத்த வைதிகர்களே காரணம் என்பதை திருமலை மன்னனின் அரசவைப் பணியாளர் லிங்கண்ணாவை வைத்து அண்ணா சொன்ன கதையே 'திருமலை கண்ட திவ்யஜோதி' ஆகும். சைவ வைணவப் பகையால் கருணாகரத் தொண்டைமான்(கலிங்கப்போரில் வெற்றிகண்டவன்) அடைந்த பாதிப்பை 'பிடிசாம்பல்' என்ற தலைப்பில் கதையாகச் சொன்னார் அண்ணா. வைணவர்களின் சூழ்ச்சி தாங்காமல்தான் படைத் தலைவனான அவன், சைவத் திருத் தொண்டராக மாறினான் என்பது கதையின் வாதம். கிறிஸ்தவம் பரவுவதைக் கண்டு இந்து சமயவாதிகள் கலங்கியதை 'சமயபுரத்து அம்மன் தொடுக்கும் மான நஷ்ட வழக்கு' என்ற கதையில் அண்ணா சொல்லுகிறார். 'எல்லாச்சமயமும் ஒரே நெறியையே காட்டுகின்றன என்று இந்து சமய நெறியாளர்கள் கூறிய போதிலும், தங்கள் சமயக் கருத்துக்களைப் பரப்புவதிலே நாட்டம் கொண்டிருப்பதும், பிற சமயக் கருத்துகள் மக்களிடையே செல்வாக்குப் பெறுவதைத் தடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பதும் இக்கதை வாயிலாக வெளிப்படுத்தப்படுகின்றன.(5) 'எண்ணாத்துறை நாடி எண்ணிப் பிறர்நலம் ஏற்பச் செய்தான் அண்ணாத்துரை' என்ற பாவேந்தர் பாரதிதாசன் பாவரிகளுக்கேற்ப, நாட்டார் இடையேயும் நகரத்தார் - உலகத்தார் இடையேயும் செல்வாக்கை மிகவும் பெற்ற கதைசொல்லல்(narrative/narration) ஆற்றலிலும் தலைசிறந்து விளங்கினார் அறிஞர் அண்ணா. ******** பார்வை நூல்கள்: 1. எஸ்.தோதாத்ரி, தமிழ் நாவல் - சில அடிப்படைகள். அகரம் வெளியீடு, சிவகங்கை 1980. 2. 'மொழிநடை,' கட்டுரை. இடம் பெற்ற தொகுப்பு - முற்போக்கு இலக்கியத் திறன் அரைநூற்றாண்டு(1940-1990). நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். சென்னை 1995. 3. முனைவர் மா.இராமலிங்கம், புனைகதை வளம். தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம். சென்னை 1973. 4. பெ.கோ.சுந்தரராஜன்(சிட்டி) சோ.சிவபாதசுந்தரம், தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும். கிறிஸ்தவ இலக்கிய சங்கம், சென்னை 1977. 5. முனைவர் இரா.சேது, அண்ணாவின் கதை இலக்கியம். பூம்புகார் பிரசுரம். சென்னை, 1983. ********
ஐயை கவுந்தியடிகளும் கண்ணகியும் கோவலனும் - முதல் நாளைப்போலவே இரவில் பயணம் செய்தனர். அடுத்த விடியலின்பொழுது, மதுரை மாநகரின் முரசொலிகளைக் கேட்டதால் மிகுந்த மகிழ்வு எய்தினர். நடக்க, நடக்க - களிறுகளின் பிளிறல் ஒலியையும்; போர்க்குதிரைகளின் கனைத்தல் ஒலியையும்; ஓதுவார்களின் தமிழ்ப்பண்ணோசையயும் பாணர்களின் வள்ளைப்பாட்டையும் செவி மடுத்து மனம் நிறைந்தனர். மூவரின் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கியது. திருவோங்கிய வையை ஆற்றை அடைந்ததும் - பாவலர்தம் பாடல்களைக் கேட்டு, தூயதமிழ் மாமதுரை வந்து அடைந்தோம் என்று மனமகிழ்ந்தனர். குதிரை முகம், சிங்கமுகம், யானைமுகமுடைய படகுகளில், பொதுப்படகுத்துறையில் - மக்கள் இடைவிடாது, சாரிசாரியாக வையை ஆற்றைக் கடந்தவண்ணம் இருந்தனர். அந்தக் கூட்டத்தைக் கண்டு மருட்கையுற்று ஒதுங்கி, மக்கள் நெரிசல் குறைந்த ஒரு சிறு துறையை அணுகி, புணையொன்றில் ஏறி, வையையின் தென்கரை அடைந்தனர். மதுரையின் கீழைக்கோபுர வாயிலின் அருகே மதிற்புறத்திலுள்ள சிற்றூரொன்றில் தங்கினர். மறுநாள் காலையில், மதுரை மாநகரின் பல்வேறு வகைப்பட்ட முரசொலிகளைக் கேட்டதும், கோவலன் கவுந்தியடிகளை அணுகி, மதிப்பார்வத்துடன் வணக்கம் செய்து, கடந்த தன் வாழ்க்கையைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டான். தான் மதுரை மாநகருக்குச் சென்று திரும்பும் வரை கண்ணகியைக் கவுந்தியடிகளின் பாதுகாப்பில் விட்டுச் சென்றான். கோவலனும் கண்ணகியும் கால்நடையாகவே வந்து சேர்ந்த செய்தியைக் கேள்விப்பட்டு, மாடலன் , இடையில் வந்திருந்தான். கவுந்தியடிகளும் மாடலனும் கலந்துபேசி, வெட்டவெளியில் துறவியரோடு கண்ணகி கோவலரைத் தங்கவைத்தல் முறையன்று என்று முடிவு செய்தனர். அன்று பகல் பொழுது அடைவதற்கு முன்னால், அவ்விருவரையும் மதுரைக்குச் சென்று தங்குமாறு செய்தல் வேண்டும் என்று தீர்மானித்தனர். திரும்பி வந்த கோவலனும் மாடலனும் கவுந்தியடிகளும் உரையாடிக்கொண்டிருக்கையில், புறஞ்சேரியிலிருந்த இயக்கி என்னும் பெண்தேவதைக்குப் பாற்சோறு படைத்துவிட்டு மாதரி அங்கே தற்செயலாக வந்தாள். கவுந்தியடிகளைக் கண்டதும் தொழுது நின்றாள். அவளைக் கண்ட மாதவத்தாட்டிக்கு, குற்றமற்ற ஆயர்குல வாழ்க்கையை உடைய அவளிடம் - ஏன் கண்ணகியையும் கோவலனையும் அடைக்கலமாகக் கொடுக்கக் கூடது என்ற சிந்தனை பிறந்தது. சிந்தனையைச் செயலாக்கினாள். மாதரி என்ற அந்த இடைக்குல மடந்தையின் மகளே ஐயை. தன் தாய் அடைக்கலமாகப்பெற்று அழைத்துவந்த கண்ணகிக்கு அவள் துணையாய் இருந்தாள். அங்கே, கண்ணகி தன் கணவனுக்குச் சமையல் செய்தல் பொருட்டு, அடுப்பை மூட்டிக் கொடுத்தவளே ஐயைதான். கண்ணகிக்கு வேண்டிய பணிவிடைகளை விருப்பமுடன் செய்தாள். அவ்வாறு செய்துவந்த இடைக்குலச் சிறுமியாகிய ஐயை, கோவலன் கொலையுண்ட செய்தியையும் பாண்டிய வேந்தனிடம் கண்ணகி வழக்குரைக்கச் செல்ல நேர்ந்த செய்தியையும் கேட்டு எந்த அளவு வருந்தி அரற்றியிருப்பாள் என்று நம்மால் கற்பனைகூடச் செய்து பார்க்க இயலாது. தான் அடைக்கலமாகப் பெற்ற கோவலனுக்கும் கண்ணகிக்கும் இவ்வாறாகியதே என்ற குற்ற உணர்வு தாங்காமல் - தனது தாயாகிய மாதரியும் தீயில் புகுந்து இறக்கவே, செய்வதறியாமல் திகைத்தாள் ஐயை. பின்னர், தேவந்தி என்பவள் கண்ணகியைத் தேடி மதுரைக்கு வந்தபொழுது, அவளுடன் ஐயையும் சேரநாட்டுக்குச் சென்று சேர்ந்தாள். பத்தினிக் கோட்டமாகிய கண்ணகியின் கோவிலில் புகுந்து பத்தினிக்கடவுளைப் பரவினாள். பத்தினிக் கடவுளாய் மாறிய சோழநாட்டு வணிகன் மாநாய்கனின் மகள் கண்ணகியை அடைக்கலமாகப்பெற்ற இடைக்குல மடந்தை மாதரியின் கள்ளமில்லா உள்ளத்துச் சிறுமி ஐயையின் அன்புப் பெருக்கை, உலகில் எவராவது வியந்து பாராட்டாமல் இருக்க முடியுமா?