20.2.09

ஐயை கவுந்தியடிகளும் கண்ணகியும் கோவலனும் - முதல் நாளைப்போலவே இரவில் பயணம் செய்தனர். அடுத்த விடியலின்பொழுது, மதுரை மாநகரின் முரசொலிகளைக் கேட்டதால் மிகுந்த மகிழ்வு எய்தினர். நடக்க, நடக்க - களிறுகளின் பிளிறல் ஒலியையும்; போர்க்குதிரைகளின் கனைத்தல் ஒலியையும்; ஓதுவார்களின் தமிழ்ப்பண்ணோசையயும் பாணர்களின் வள்ளைப்பாட்டையும் செவி மடுத்து மனம் நிறைந்தனர். மூவரின் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கியது. திருவோங்கிய வையை ஆற்றை அடைந்ததும் - பாவலர்தம் பாடல்களைக் கேட்டு, தூயதமிழ் மாமதுரை வந்து அடைந்தோம் என்று மனமகிழ்ந்தனர். குதிரை முகம், சிங்கமுகம், யானைமுகமுடைய படகுகளில், பொதுப்படகுத்துறையில் - மக்கள் இடைவிடாது, சாரிசாரியாக வையை ஆற்றைக் கடந்தவண்ணம் இருந்தனர். அந்தக் கூட்டத்தைக் கண்டு மருட்கையுற்று ஒதுங்கி, மக்கள் நெரிசல் குறைந்த ஒரு சிறு துறையை அணுகி, புணையொன்றில் ஏறி, வையையின் தென்கரை அடைந்தனர். மதுரையின் கீழைக்கோபுர வாயிலின் அருகே மதிற்புறத்திலுள்ள சிற்றூரொன்றில் தங்கினர். மறுநாள் காலையில், மதுரை மாநகரின் பல்வேறு வகைப்பட்ட முரசொலிகளைக் கேட்டதும், கோவலன் கவுந்தியடிகளை அணுகி, மதிப்பார்வத்துடன் வணக்கம் செய்து, கடந்த தன் வாழ்க்கையைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டான். தான் மதுரை மாநகருக்குச் சென்று திரும்பும் வரை கண்ணகியைக் கவுந்தியடிகளின் பாதுகாப்பில் விட்டுச் சென்றான். கோவலனும் கண்ணகியும் கால்நடையாகவே வந்து சேர்ந்த செய்தியைக் கேள்விப்பட்டு, மாடலன் , இடையில் வந்திருந்தான். கவுந்தியடிகளும் மாடலனும் கலந்துபேசி, வெட்டவெளியில் துறவியரோடு கண்ணகி கோவலரைத் தங்கவைத்தல் முறையன்று என்று முடிவு செய்தனர். அன்று பகல் பொழுது அடைவதற்கு முன்னால், அவ்விருவரையும் மதுரைக்குச் சென்று தங்குமாறு செய்தல் வேண்டும் என்று தீர்மானித்தனர். திரும்பி வந்த கோவலனும் மாடலனும் கவுந்தியடிகளும் உரையாடிக்கொண்டிருக்கையில், புறஞ்சேரியிலிருந்த இயக்கி என்னும் பெண்தேவதைக்குப் பாற்சோறு படைத்துவிட்டு மாதரி அங்கே தற்செயலாக வந்தாள். கவுந்தியடிகளைக் கண்டதும் தொழுது நின்றாள். அவளைக் கண்ட மாதவத்தாட்டிக்கு, குற்றமற்ற ஆயர்குல வாழ்க்கையை உடைய அவளிடம் - ஏன் கண்ணகியையும் கோவலனையும் அடைக்கலமாகக் கொடுக்கக் கூடது என்ற சிந்தனை பிறந்தது. சிந்தனையைச் செயலாக்கினாள். மாதரி என்ற அந்த இடைக்குல மடந்தையின் மகளே ஐயை. தன் தாய் அடைக்கலமாகப்பெற்று அழைத்துவந்த கண்ணகிக்கு அவள் துணையாய் இருந்தாள். அங்கே, கண்ணகி தன் கணவனுக்குச் சமையல் செய்தல் பொருட்டு, அடுப்பை மூட்டிக் கொடுத்தவளே ஐயைதான். கண்ணகிக்கு வேண்டிய பணிவிடைகளை விருப்பமுடன் செய்தாள். அவ்வாறு செய்துவந்த இடைக்குலச் சிறுமியாகிய ஐயை, கோவலன் கொலையுண்ட செய்தியையும் பாண்டிய வேந்தனிடம் கண்ணகி வழக்குரைக்கச் செல்ல நேர்ந்த செய்தியையும் கேட்டு எந்த அளவு வருந்தி அரற்றியிருப்பாள் என்று நம்மால் கற்பனைகூடச் செய்து பார்க்க இயலாது. தான் அடைக்கலமாகப் பெற்ற கோவலனுக்கும் கண்ணகிக்கும் இவ்வாறாகியதே என்ற குற்ற உணர்வு தாங்காமல் - தனது தாயாகிய மாதரியும் தீயில் புகுந்து இறக்கவே, செய்வதறியாமல் திகைத்தாள் ஐயை. பின்னர், தேவந்தி என்பவள் கண்ணகியைத் தேடி மதுரைக்கு வந்தபொழுது, அவளுடன் ஐயையும் சேரநாட்டுக்குச் சென்று சேர்ந்தாள். பத்தினிக் கோட்டமாகிய கண்ணகியின் கோவிலில் புகுந்து பத்தினிக்கடவுளைப் பரவினாள். பத்தினிக் கடவுளாய் மாறிய சோழநாட்டு வணிகன் மாநாய்கனின் மகள் கண்ணகியை அடைக்கலமாகப்பெற்ற இடைக்குல மடந்தை மாதரியின் கள்ளமில்லா உள்ளத்துச் சிறுமி ஐயையின் அன்புப் பெருக்கை, உலகில் எவராவது வியந்து பாராட்டாமல் இருக்க முடியுமா?

No comments: