20.2.09

அறிஞர் அண்ணாவின் கதை சொல்லும் ஆற்றல் - தேவமைந்தன் தமிழக அரசியல், இலக்கிய வரலாற்றில் முதன்மையான இடம் வகித்த அறிஞர் அண்ணா அவர்களை முற்போக்கு இலக்கியத் திறனாய்வாளர்கள் - படைப்பாளர்களில் பெரும்பாலோர் குறைத்து எழுதியும் மதிப்பிட்டும் பேசியும் வருகிறார்கள். இது நம் நாட்டு இலக்கியவாதிகளிடம் உள்ள நுண்ணரசியலின் தாக்கம். திராவிட இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்பதை அகத்தியமானதொரு காலவரலாற்றுக் கட்டாயம் என்று இணக்கமான முறையில் சரியாகப் புரிந்துகொள்ள 'அறிவுஜீவிகள்' தவறிவிட்டனர். அன்னியமான அரசியல் பொருளாதார இலக்கியக் கண்ணோட்டத்தை அவர்கள் வரப்படுத்திக் கொண்டதே இதற்குக் காரணம். அண்ணாவின் கதை சொல்லும் ஆற்றலுக்குச் சான்று ஒன்று -'கலிங்கராணி' என்னும் புனைகதை, குலோத்துங்க சோழன் கலிங்கநாட்டின்மேல் பெற்ற வெற்றியைப் பின்புலமாக வைத்துப் படைக்கப்பட்டது. அதில் அறிஞர் அண்ணா, தமிழக வரலாற்றுப் பின்புலத்தில் தமிழ் மன்னர்களே தமிழ்ப் பண்பாட்டை அழிக்கக் காரணமாய், 'கூட இருந்தே குழி பறித்த' இனப் பகைவர்கள் யார் என்று அடையாளம் காட்டுகிறார். குலோத்துங்கன் அரண்மனைக்குளேயே இருந்து சூழ்ச்சி செய்தவர்கள் ஆரியர்கள் என்பதைக் கதை சொல்லும் போக்கிலேயே புலப்படுத்தி விடுகிறார் அண்ணா. மலர்புரி அரசி மருதவல்லியை எப்படியெல்லாம் ஓர் ஆரியன் ஏமாற்றுகிறான் அதற்குத் தமிழன் ஒருவனையே எப்படி அவன் பகடைக் காயாகப் பயன்படுத்துகிறான், மருதவல்லிக்கும் நடனாவிற்கும் உள்ள நட்பை ஆரியப் பெண்மணியான கங்கபாலா எவ்வாறு சதிசெய்து முறிக்கிறாள் என்பதையெல்லாம் வாசகர்கள் சலிப்படையாதபடி திறமையாகச் சொல்லிக் கொண்டு போகிறார் அண்ணா. மன்னன் குலோத்துங்கன் கூறுகின்றான்: "பெரியவரே! அஞ்சாதீர்! அவர்களின் கலை, நீர்மேல் எண்ணெய் போல் தமிழகத்திலே மிதப்பதை நானும் கண்டேன். நாளாவட்டத்தில் அதை நீக்குவோம். இது உறுதி; ஆரியர் தமிழகத்திலே தமது ஆதிக்கத்தைப் புகுத்த முயன்றால் கனக விசயர் கண்ட கதியே காண்பர்." இவ்வாறு அறிஞர் அண்ணா தமிழினத்தை விழிப்பூட்டுவதற்கான இயக்கக் கருத்தொன்றைத் தன் கதை சொல்லும் ஆற்றலால் எண்ணற்ற இளைஞர்களின் உள்ளங்களில் விதைத்தார். இதை இனவெறி என்று, நாசிசக் கொள்கை என்பதையே அறியாதவர்கள்தாம் கூறமுடியும். புகழ்மிக்க ஜெர்மன் திரைப்படமான 'Hitlerjunge Salomon'(இயக்கம்: Agnieszka Holland) ஆரியர்களின் இனவெறியை உலகறியச் சொன்னதெனில், அதை இனங்காட்டுவதும் அடையாளப்படுத்துவதும் எப்படி இனவெறி ஆகும்? இந்தப் புலப்பாட்டுக்குக் காரணம் அறிஞர் அண்ணா அவர்களின் கனல்பறக்கும் இயல்நடையில் அமைந்த கதைசொல்லலே ஆகும். இதைத்தான் கலையம்சம் குறைந்தது என்றும் வடவர் எதிர்ப்பு, பிராமணர் எதிர்ப்பு, ஆரியர் எதிர்ப்பு ஆகிய பிற இனவெறுப்பின் அடிப்படையில் அமைந்தது என்று அறிஞர் அண்ணா அவர்களின் கதை சொல்லும் ஆற்றலைக் குறித்து எஸ்.தோதாத்ரி போன்றோர் எழுதினர்.(1) பச்சையப்பன் கல்லூரியில் முதல்வராக இருந்த சின்னத்தம்பிப் பிள்ளை, அண்ணாவின் ஏழ்மை நிலையை அறிந்து பாடப்புத்தகங்கள் வாங்கித் தருவது முதலான உதவிகள் செய்து, பி.ஏ.ஆனர்ஸ் படிக்க வைத்தார். அரசியல், வரலாறு, பொருளியல் மூன்றையும் சிறப்பாகப் பயின்ற காலத்திலேயே மேடைப்பேச்சுகள் நிகழ்த்தி - தீண்டாமை எதிர்ப்பு, சாதியொழிப்பு முதலான சமூக சீர்திருத்தங்களை வலியுறுத்துவதற்குத் தோதாக, கதைசொல்லும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார் அறிஞர் அண்ணா. அவர் கதை சொல்லப் பயன்படுத்திய உரைநடை, அந்தக் காலத்துக்கு மிகவும் புதியது. சிந்தனையைக் கிளர்வது. சமூகத்தின் இருண்ட பகுதிகளை - மேல்மட்டத்தில் சகல வசதிகளோடு வாழ்ந்து கொண்டிருந்தவர்களின் ஊழல்களை, மற்றவர்களுடன் அவர்களும் வாசிக்கையில் பரிகசிக்கும்படி நாடக உரையாடல் பாணி நடையும் கலந்து எழுதப்பட்டது. 'திருமலை கண்ட திவ்யஜோதி,' 'புலிநகம்,' 'பிடிசாம்பல்,' 'தஞ்சை வீழ்ச்சி' முதலான அண்ணாவின் சிறுகதைகள், கற்பனை இழையோடும் நடையைக் கொண்ட வரலாற்றுச் சிறுகதைகளாக விளங்கின. 'அடைமொழிக்கும் அடுக்குமொழிக்கும் கூறவந்த கருத்தைவிட வலியுற்று நிற்கும் பயனிலையை முன்னிறுத்தி எழுவாயை அதன்பின் அமைந்த மொழிநடைப் பாங்கினை இவர்தம் நடையின் தனிக்கூறு எனலாம்' என்று முனைவர் இ. சுந்தரமூர்த்தி கூறுவார்.(2) 'பார்வதி பி.ஏ.' என்ற புதினத்தில் வரும் கதைப்பாத்திரம் டாக்டர் லலிதகுமாரி. தன் படைப்பான அவரைப் போலவே தானும் 'சமுதாய நோய்முதல் நாடிய நுழைபுல மருத்துவ'ராக அறிஞர் அண்ணா விளங்கினார்.(3) 'குமரிக் கோட்டம்,' 'சுடுமூஞ்சி,' 'பலாபலன்,' அன்னதானம்,' 'பேய் ஓடிப்போச்சு,' தேடியது வக்கீலை,' 'இரு பரம்பரை,' 'ராஜாடி ராஜா,' 'சூதாடி,' கருப்பண்ணசாமி யோசிக்கிறார்,' 'ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர்,' 'செவ்வாழை' ஆகிய சிறுகதைகள், அண்ணாவின் கதை சொல்லும் ஆற்றலால் எத்தகைய திடமான சமூக நோக்கை வாசகர் நெஞ்சில் விதைத்தன என்பதற்குச் சான்றுகள். சனாதன மிகைப்பற்றும் சாதிவெறியும், எளிமையானதும் உறுதியானதுமான பகுத்தறிவுக் கடைப்பிடியின் முன் வெல்ல முடியா என்பதைச் சொல்லும் கதைதான் 'குமரிக் கோட்டம்.' குமார கோட்டம் குமரிக் கோட்டம் ஆவதை, [கதையைச்]சொல்லிச் செல்லும் முறையில் உறுதிப்படுத்தி விடுகிறார் அண்ணா. குமரிக் கோட்டம், எளியோரின் புகலிடம். 'கண்ணீர்த் துளிகள்' என்று பெரியாரால் அழைக்கப்பட்ட காலகட்டத்தில், தாம் பெரியாரைப் பிரிந்ததால் எந்த அளவு பாதிப்பிற்குள்ளானார் என்பதை அறிஞர் அண்ணாவை விட எவராலும் இந்த அளவு கதையாகச் சொல்ல முடியாது. அதுதான் 'ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர்.' இந்த சுரண்டல் சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டு வாழ இயலாமல் போகும்பொழுது வேறு வழிகளில்லாமல் சிறு சிறு குற்றங்களில் ஈடுபடுவோரை எந்த அளவு வன்மத்துடன் இதே சமூகம் தண்டிக்கிறது என்பதை 'ராஜாடி ராஜா' வில் சொன்னார் அண்ணா. சீட்டாட்டம் சூதாட்டம். பணம் வைத்துச் சூதாடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று பிரகடனப்படுத்தும் போலிச் சமூகம், பங்குச் சந்தையில் பணவேட்டையாடுபவர்களை என்ன செய்கிறது? - என்று அன்றே கேட்டார் அண்ணா. இன்று பங்குச் சந்தைச் சூதாட்டத்தை எல்லோருக்கும் கற்றுத்தர ஊடகத்துறை முனைந்துள்ளதை நாமறிவோம். அதுபற்றி எவருக்கும் கவலையில்லை. மரத்துப் போய்விட்டது. 'சூதாடி' கதையில் அறிஞர் அண்ணாவின் சொல்லாடலை ஒருமுறை மீண்டும் படித்துப் பார்த்தோமானால் மனம் மீண்டும் உணர்வுபெறும். மனிதரின் மூடத்தனத்தை கடவுளர் எள்ளி நகையாடுவதாக அண்ணா சித்திரித்த கதைதான் 'கருப்பண்ணசாமி யோசிக்கிறார்.' 1951இல் லால்குடியருகே புஞ்சைச்சாங்குடி என்ற கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியே இந்தக் கதையின் அடித்தளம். இதை அண்ணா தவிர யார் சொன்னாலும் வெறும் செய்தி ஆகிப்போகும். வர்க்க சமூக பேதம், வீட்டு விலங்குகளைக்கூட விட்டு வைக்காது என்பதை அழுத்தம் திருத்தமாக அண்ணா சொன்ன கதை, 'இரு பரம்பரை.' 'தனம்' என்ற தமிழ்த் திரைப்படம் - 'சோதிடந்தனை இகழ்' என்பதை, பொருத்தமான கதை - நடிகர் - இயக்கம் ஆகிய கட்டமைப்போடு சொன்னது. தமிழினம், வழக்கம்போல அதற்குத் தரவேண்டிய ஆதரவு தரவில்லை. தினத்தந்தியே சோதிடம் பரப்பும் காலமல்லவா இது? இதே சேதியை அண்ணா ஐம்பதாண்டுகளுக்குமுன் சிறுகதைகளாகச் சொன்னார். கதைப்பாத்திரங்கள் மட்டும் ஆண்கள்தாம். 'சுடுமூஞ்சி,' 'பலாபலன்' என்பவையே அவை. அண்ணாவின் புதினம் ஒன்றனுக்கு வருவோம். 'ரங்கோன் ராதா'வில், சமூகத்தில் முக்கியத்துவம் பெறும் பெரிய புள்ளிகளின் அசலான இயல்பை, அண்ணா, தன் பாணியில் கதையாகச் சொன்னார். 'இத்தகைய பெரிய மனிதர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சமுதாயத்தை நேர்மை மனப்பான்மை கொண்ட தனிமனிதன் எதிர்க்கும் நிலையில் சந்திக்கும் இடையூறுகளையும் அண்ணாதுரை ரசமான கதைப்போக்கில் காண்பிக்கிறார்.(4:1) தர்மலிங்க முதலியார் என்பவர் பேராசை மிக்கதொரு பெரும்புள்ளி. தன் மனைவி ரங்கத்தின் தங்கையும் 'பகல்வேஷப் பகட்டுக்காரி'யுமான தங்கத்தை இரண்டாம் மனைவியாக தர்மலிங்கம் மணந்து கொள்கிறார். அந்த இருவரும் அடித்த கொட்டத்தில் விரக்தி அடைந்த ரங்கம், தனக்கு சமூகம் இட்டிருந்த வேலியைத் தாண்டுகிறாள். தன் ஆசைநாயகனுக்குப் பிறந்த ராதா என்ற மகளுடன் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் பர்மாவிலிருந்து தமிழகம் திரும்புகிறாள். நாகசுந்தரம் என்கிற தர்மலிங்கம் முதலியாரின் மகன் அவர்களைச் சந்திக்க நேர்கிறது. ராதா தன்னுடைய தங்கை முறை என்றறிந்த அவன், அவளுக்கு நல்வாழ்வு கொடுக்கப் பெருமுயற்சி எடுக்கிறான். நண்பன் பரந்தாமனுக்கு அவளை மணம் செய்து வைக்கிறான். அடுக்குச்சொற்கள் நிரம்பிய அணிநடையும் புராண இதிகாச அறிவும் அண்ணாவின் கதை சொல்லலை வலிமைப்படுத்துகின்றன. அதிலுள்ள ''பிரசார தொனி'க்கு அழுத்தம் தருவன அவர் கதை சொல்லும் முறையில் இடம்பெறும் அந்த இரண்டும்தான்.''(4:2) அண்ணாவின் வரலாற்றுக் கதை சொல்லும் பாணியில் வரலாற்றுண்மைகள் பல வெளியாயின. மிகச் சில சான்றுகள்: புத்த மார்க்கம் பரவாமல் தடுப்பதற்கு வைதிக சமயவாதிகள் நாலந்தா பல்கலைக் கழகம் தொடர்பாகச் செய்த கொடுஞ்செயலே 'ஒளியூரில்' என்ற கதையில் வெளிப்பட்டது. இஸ்லாமும் வைதிக சமயமும் முரண்பட்ட நிலையை மாவீரன் சிவாஜியின் வாழ்வு நிகழ்ச்சி ஒன்றைப் பின்னணியாக வைத்து அறிஞர் அண்ணா சொன்ன கதையே 'புலிநகம்' ஆகும். கிறிஸ்தவ மதமும் வைதிக மதமும் மோதிக் கொண்டன. திருமலை மன்னன் மறைவுக்கு அவனுடன் கிறித்தவப் பாதிரிமார் கொண்ட நட்பை வெறுத்த வைதிகர்களே காரணம் என்பதை திருமலை மன்னனின் அரசவைப் பணியாளர் லிங்கண்ணாவை வைத்து அண்ணா சொன்ன கதையே 'திருமலை கண்ட திவ்யஜோதி' ஆகும். சைவ வைணவப் பகையால் கருணாகரத் தொண்டைமான்(கலிங்கப்போரில் வெற்றிகண்டவன்) அடைந்த பாதிப்பை 'பிடிசாம்பல்' என்ற தலைப்பில் கதையாகச் சொன்னார் அண்ணா. வைணவர்களின் சூழ்ச்சி தாங்காமல்தான் படைத் தலைவனான அவன், சைவத் திருத் தொண்டராக மாறினான் என்பது கதையின் வாதம். கிறிஸ்தவம் பரவுவதைக் கண்டு இந்து சமயவாதிகள் கலங்கியதை 'சமயபுரத்து அம்மன் தொடுக்கும் மான நஷ்ட வழக்கு' என்ற கதையில் அண்ணா சொல்லுகிறார். 'எல்லாச்சமயமும் ஒரே நெறியையே காட்டுகின்றன என்று இந்து சமய நெறியாளர்கள் கூறிய போதிலும், தங்கள் சமயக் கருத்துக்களைப் பரப்புவதிலே நாட்டம் கொண்டிருப்பதும், பிற சமயக் கருத்துகள் மக்களிடையே செல்வாக்குப் பெறுவதைத் தடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பதும் இக்கதை வாயிலாக வெளிப்படுத்தப்படுகின்றன.(5) 'எண்ணாத்துறை நாடி எண்ணிப் பிறர்நலம் ஏற்பச் செய்தான் அண்ணாத்துரை' என்ற பாவேந்தர் பாரதிதாசன் பாவரிகளுக்கேற்ப, நாட்டார் இடையேயும் நகரத்தார் - உலகத்தார் இடையேயும் செல்வாக்கை மிகவும் பெற்ற கதைசொல்லல்(narrative/narration) ஆற்றலிலும் தலைசிறந்து விளங்கினார் அறிஞர் அண்ணா. ******** பார்வை நூல்கள்: 1. எஸ்.தோதாத்ரி, தமிழ் நாவல் - சில அடிப்படைகள். அகரம் வெளியீடு, சிவகங்கை 1980. 2. 'மொழிநடை,' கட்டுரை. இடம் பெற்ற தொகுப்பு - முற்போக்கு இலக்கியத் திறன் அரைநூற்றாண்டு(1940-1990). நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். சென்னை 1995. 3. முனைவர் மா.இராமலிங்கம், புனைகதை வளம். தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம். சென்னை 1973. 4. பெ.கோ.சுந்தரராஜன்(சிட்டி) சோ.சிவபாதசுந்தரம், தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும். கிறிஸ்தவ இலக்கிய சங்கம், சென்னை 1977. 5. முனைவர் இரா.சேது, அண்ணாவின் கதை இலக்கியம். பூம்புகார் பிரசுரம். சென்னை, 1983. ********

No comments: