20.2.09

தெளிவு -தேவமைந்தன் ஏதேதோ சாப்பிடுகிறோம். ஏதேதோ குடிக்கிறோம். எங்கெங்கோ போகிறோம். யார்யாருடனோ என்ன என்னவெல்லாமோ பேசுகிறோம்; சிரிக்கிறோம்; சிரிக்க வைக்கிறோம்; புண்படுகிறோம்; புண்படுத்துகிறோம்; மகிழ்கிறோம்; மகிழ்விக்கிறோம்; வருந்துகிறோம்; வருத்துகிறோம்... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். மாட்டிக்கொள்ளுதல்கள்(commitments) பல: உடன்பாடுகளோ பற்பல; வாக்குறுதிகள் மேலும் பல; நமக்கென்றே அவற்றை மீறிக்கொள்ள ஒரு தனிப்பாணியைக் கண்டுபிடித்துக் கொள்கிறோம். மீறுகிறோம்; ‘அப்பாடா’ என்று நிம்மதி அடைகிறோம். பிறகென்ன? தூங்குகிறோம். நிம்மதியாகவா? இல்லை, பகல்நேர வாழ்க்கையைவிடவும் அபத்தமான கனவுகளோடு. “உங்கள் நண்பர்கள் யார்யார் என்று காட்டுங்கள்; நீங்கள் யாரென்று சொல்லிவிடுகிறேன்!” என்ற அறிவுமொழி ‘அரதப் பழசு.’ புதுமொழி என்ன தெரியுமா? “உங்கள் கனவுகள் எவை, எவை என்று சொல்லுங்கள்; நீங்கள் யாரென்று சொல்லிவிடுகிறேன்!...” “நீங்கள் வாசிக்கும் புத்தகங்கள் எவை?” என்ற கேள்விக்கு ‘இல்லாத புத்தகங்க’ளின் பட்டியலைக் கொடுத்து தப்பிவிடமுடிவதுபோல, கனவுகள் விஷயத்தில் செய்துவிட முடியாது. கண்களே காட்டிக் கொடுத்து விடும். சந்திக்கும் உங்கள் நண்பர் ஒவ்வொருவரிடமும் கேட்டுப் பாருங்கள். “தெளிவு’ என்றால் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள்!” என்றுதான்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கம் தருவார்கள்... என் தமிழ் ஆசான் அந்தச் சொல் இடம்பெறும் பாடல் ஒன்றைச் சொல்லிக் காட்டியிருந்தார். யாரிடம் வேண்டுமானாலும் அதன் விளக்கத்தைக் கேட்டுப் பார்க்கலாம் என்றும் சலுகை தெரிவித்திருந்தார். என் ஊரில் பெரியவர் ஒருவரிடம் இதை நான் கேட்டேன். அவர் பெயரே வேடிக்கையானது. ‘பேயன்பழத் தாத்தா.’ இயற்கை மருத்துவர். சித்தர் என்றும் சொல்வார்கள். எந்த நோயாய் இருந்தாலும், கிழக்குப் பக்கமாக மோட்டுவளையைப் பார்த்து, ஏதேதோ முணுமுணுத்துவிட்டு, அவர் கட்டிலுக்கு உட்பக்கமாக, வெளியே ஒரு பகுதி வாயைக் காட்டிக் கொண்டிருக்கும் அண்டா ஒன்றில் கைவிட்டு, நன்கு பழுத்துக் கறுத்திருக்கும் பேயன்பழம் ஒன்றைத் தருவார். பலபேருக்கு நோய் குணமாயிற்று. ‘பேயன்பழத் தாத்தா’ தனக்கென்று திட்டவட்டமான முடிபுகளைக் கொண்டிருந்தார்.. “தெளிவு’ன்னா இன்னா’ன்னுதா’னே கேட்டே..?” என்று சொல்லிவிட்டு சாதிக்காய்ப் பெட்டி ஒன்றைத் திறந்தார். உள்ளே திருநீறு மணந்துகொண்டிருந்த ஒரு பழைய புத்தகத்தை எடுத்துத் தந்தார். அது ‘திருமந்திரம்.’ “பிரி, அந்த நூத்திமுப்பத்தொன்பதாம் பாட்டெ.. ஆங்ங்.. பட்டுக்கயிறு சாத்தி வச்சிருப்பன்’ல.. அந்தப் பக்கத்தெ எடு...” அவர் பேசியது இன்னும் என் செவிகளில் ‘ரீங்கார'மிட்டுக் கொண்டிருக்கிறது. இசைபோல இருக்கும் அவர் பேச்சு.. வாசித்துக் காட்டச் சொன்னார். வாசித்த முறையைத் திருத்தினார். “ஆங்.. பாட்டெல்லாம் இப்ப்’டிப் படிக்கக் கூ..டாதே.. திருத்தமா, ஒப்புராவா, ஓசை நிரவி, படி!” “ தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே” படித்தேன். பொருள் கேட்டேன். எனக்கு அப்பொழுது பன்னிரண்டு வயதிருக்கும். ஒருமாதிரி மருமமாக சிரித்தார். “பொருள் சொல்ல்’றதா.. சொன்னா எல்லா’ வெளங்காது.. நீயா படி.. ஒவ்வொரு தாட்டியும் படி.. ஒவ்வொரு வயசில’யுந்தான்.. புதிசு புதிசா வெளங்கும்.. ஒவ்வொரு தீவாளிக்கும் பொங்கலுக்கும் ஒனக்கு புதிசு புதிசா’த் துணியெடுத்துத் தர்’றாங்கள்’ல.. அதுமாதிரி ‘குரு’ ஒனக்கு ஒவ்வொரு தாட்டியும் புதிசு புதிசா பொருள் வெளங்கறமாதிரி கத்துக் கொடுப்பார்..” என்றார். “தாத்தா!.. ‘குரு’ன்னா வாத்தியாரா? ... கேட்டேன். “ம்ம்.. அப்ப்”டியும் வச்சுக்கோ.. ஒவ்வொரு சமயம், ஒவ்வொரு குரு..” என்று கண்களை அழுத்தமாக மூடியவாறு எங்கோ சஞ்சரித்த குரலில் பேசினார். “பசுவதீ! இதெல்லாம் ‘டக்’னு முன்னாலெ எடுத்து வைக்கிற சமாச்சாரம் இல்லே’ப்பா.. ஒன் வாழ்க்கை’லே..அட என்னாப்பா.. ஒவ்வொருத்தங்க வாழ்க்கை’லே அடிபட்டு அடிபட்டு.. தெளிஞ்சு எந்திரிக்குறபோது வர்’றதுதாம்ப்பா தெளிவு..அட..ஒஞ்சாமி மட்டும் இல்ல.. அது ஒனக்கு அப்பப்ப அடி விழறபோது தருது பாரு.. ஒரு பாடம்.. அதுக்கு இன்னொரு பேர் தெளிவு.. அத்'தெக் குடுக்குது பாரு.. அதான் குரு.. குரு’ன்னு இன்னார்தான், இதுதான்’னு இல்ல.. அதென்னவோ ஒரு உபநிசத்து’ங்றாங்க..அதுல சொல்’றாராம் ஒரு ரிசி..அவருதாம்’ப்பா..முனிவரு..ஆங்ங்..தத்தாத்திரேயரு... தனக்கு சாமி, ஆசாமி’ல இருந்து வேசி, குப்பக்கோழி வரெ இருபத்தாறு குருமாருங்க’ங்றாராமல்ல’ப்பா..சொலவம் வருதாமல்ல அப்பிடி?...” அவர் அன்று இதைச் சொன்னபொழுது விளங்கியதைவிட முப்பது வயதில், நாற்பது வயதில், ஐம்பது வயதில் மேலும் அதிக அதிகமாக விளங்கியது; விளங்கியது என்பதைவிடவும் 'உறைத்தது' என்று சொல்லுவது மிகவும் பொருத்தம். ஒரே பாட்டு, ஒரே சொலவம், ஒரே சொலவடை, ஒரே செய்யுள், ஒரே கவிதை, ஒரே பழமொழி - ஆண்டுகள் பல ஆக ஆக, வேறு வேறு அர்த்தம் தருகிறதே..எப்படி? ****************************** நன்றி: திண்ணை.காம் வலையேட்டில் வந்த கட்டுரையை வாசித்து மின்னஞ்சல் விடுத்த அன்பர்களின் கருத்துகள் சிலவற்றை ஏற்று, சற்றுத் திருத்தி மாற்றிய பதிவு. **** karuppannan.pasupathy@gmail.com

No comments: