20.6.06

பணத்தின் பின்னால் ஓடுபவர்கள்!

"பணத்தைப் பொருள் என்று கொள்ளாதே!" என்று அறிவுறுத்தினார் அரவிந்தாசிரம அன்னை. "இந்த எல்லைக்குள் பணம் தன் மதிப்பை இழக்கிறது!" என்று அவர் அறிவித்த உலக நகரம் ஆரோவில்லின் பார்வையில் வாழும் நான், அன்னை அவர்கள் ஏன் அவ்வாறு அறிவித்தார் என்று விளங்கிக்கொள்ளாதிருந்தேன். விளங்கிக் கொள்ளும் வாய்ப்பு சில நாள்களுக்கு முன்னால் வாய்த்தது. 'பணப்பெட்டிக'ளின் முன் தலைகுனிய வேண்டிவந்தாலும் என் கால்களைப் பரப்பி நின்றேன். அழுத்தமாக நிலத்தில் என் பாதங்களை ஊன்றினேன்...பெற்ற என் தெய்வங்களின் இணையடிகளை என் நெஞ்சத்தில் வைத்தேன். 17/1/1988 அன்று தன் 96ஆவது வயதில், ஆழ்ந்த உறக்கத்தில் இறந்த என் தந்தையார், அந்த நாளுக்கு மூன்றுநாள் முன்னர் ஒரு வியாழக்கிழமையன்று பிற்பகல் சொன்ன சொற்கள் - “பிரச்சினையின் மையத்துக்கே செல். அஞ்சாதே. தன்னந்தனியனாய் நில். அந்தப் பிரச்சினையையே கேள்,உரத்த குரலில். "என்ன காரணம் இதற்கு?"... கட்டாயம் பதில்வரும். அந்தக் காரணத்தை அகற்று; காரியம் சரிப்படும்.” என் தாயார் எனக்கு அடிக்கடி அறிவுறுத்தியது - "பொன்னைவைத்தும் பெண்ணைவைத்தும் மண்ணைவைத்தும் எவரையும் எடைபோடாதே; மதிக்காதே; பகைக்காதே!" பதினாறே வயதுக்குள் பகவத் கீதைக்கு மராத்திமொழியில் இணையற்ற உவமைகளை ஏராளமாய்க்கோத்து 'பாவதீபார்த்த உரை' வகுத்தார் ஞானதேவர். (அதன் ஆங்கில மொழியாக்கம் கிடைக்கிறது.) “யானையை வைத்து யானையைப் பிடிப்பதுபோல, நிலவு முழுவதையும் ஓடைநீரில் கைப்பற்றுதல்போல, கூசுமொளிச் சூரியனை ஈரத் துண்டின்வழிப் பார்த்தல்போல ஓர்மையில் நிற்பாய்; உண்மையைக் காண்பாய்” என்பது அந்த உரைவிளக்கத்தில் ஒரு துணுக்கு. கடல்அலைபோல் பகைவந்தபோதும் ஒடிவந்து உதவக் கூடியவை பெரியோர் சொற்கள். அதனால்தானே நம் சொற்சிக்கனக்காரர் திருவள்ளுவரும் நமக்காக எழுபது சொற்களைச் செலவு செய்து, பெரியவர்களைத் துணைக் கொள்ளுமாறு வற்புறுத்துகிறார்!

7.6.06

புலவர் குழந்தையின் நூற்றாண்டு

புலவர் குழந்தையின் நூற்றாண்டு - 01/07/2006 - தேவமைந்தன் நான்கு திசைகளிலும் மலைகளால் சூழப்பெற்றது கொங்கு நாடு. அதனுள் ஈரோட்டுக்குத் தென்புறம் 25 கி.மீ. தொலைவில் உள்ள ஓலவலசு என்ற சிற்றூரில் புகழ்பெற்ற பண்ணயக்காரர் வீட்டில் 1906ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் முதல்நாளன்று முத்துசாமி கவுண்டர் அவர்களுக்கும் சின்னம்மா என்ற பெயருடைய அம்மையாருக்கும் பிறந்தவர், இன்று நூற்றாண்டு காணும் புலவர் குழந்தை. புலவர் குழந்தையைத் தவிர ஓலவலசில் எவரும் எழுதப் படிக்க அறியாதவர்கள். இவர் தலையெடுத்த பின்னர்தான் அவ்வூரில் எழுத்தறிந்தவர்கள் உருவாயினர். உருவாக்கியவர் புலவர் குழந்தை. ஆனால் பிறகு தாம் பணியாற்றிய பவானியையே வாழ்வதற்கு உரிய இடமாகத் தெரிவு செய்துகொண்டார். முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்தவர் புலவர் குழந்தை(1929-1962). பணிக்காலத்தின் பிந்திய இருபத்தோராண்டுகள், பவானி கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து பணிநிறைவு பெற்றார். தன் பத்தொன்பதாம் வயதில், அவ்வாண்டு தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பெற்ற தன்மானத் தமிழர் இயக்கத்தில் சேர்ந்து தொடக்கம் முதலாகவே மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றினார். அதனால்தான் தன்னை உருவாக்கிய தந்தை பெரியாரிடத்தும், ‘புலவர்’ என்று மட்டுமே சொல்லி எங்கும் தன்னைப் பெருமைப்படுத்திய பேரறிஞர் அண்ணாவுடனும், புலமையாலும் படைப்பாற்றலாலும் தன்னைப் பாராட்டிய பாவேந்தர் பாரதிதாசனாருடனும் மாறா அன்பு பூண்டார். தன்னை உருவாக்கிய தந்தை பெரியாரை மறவாமை மட்டுமன்று, எந்த நிலையிலும் அவரை விட்டுக் கொடுக்காமல் பெருமைப்படுத்தியவர் புலவர் குழந்தை என்று குறிப்பிட்டு வந்தார் கவியரசு கு. நடேச கவுண்டர் அவர்கள். அவரும் தன்னை உருவாக்கிய கொங்கு நாட்டுப் புலவர் நா. வையாபுரியாரை வாணாள் முழுதும் போற்றி மகிழ்ந்தவரல்லவா? கடவுள் மறுப்பாளராகவே தம்மை நிலைப்படுத்திக் கொண்டவர் புலவர் குழந்தை. தம் வாணாட்கோட்பாடாக அதை மதித்தார் அவர். கோயம்புத்தூரிலுள்ள வெள்ளக்கோயில் பகுதிசார்ந்த தீத்தாம்பாளையத்தில் நான்கு நாள்கள் இந்துமத பிரச்சாரகரும் ‘சமாதி யோகம்’ என்னும் யோகப்பயிற்சியைக் கற்றுத்தந்துவந்தவருமான சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்களுடன் “கடவுள் இல்லை” என்று சொற்போரிட்டார் புலவர் குழந்தை. தாம் உண்மையென்று தேர்ந்து தெளிந்த எதையும் ஒளிக்காமல் விண்டுரைக்கும் வழக்கம் அவருக்கு இருந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் 1938இலும் 1948இலும் மிகுந்த பங்கேற்றார் புலவர் குழந்தை. ‘இந்தி ஆட்சியானால்?’ என்ற அவரது கொள்கை பரப்பு நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவர்தம் புகழைப் பொறாத சிலர், கடவுள் மறுப்பாளரான புலவர் குழந்தையை ‘சாதிப் பற்றாளர்’ என்று பழியுரைத்து அதைப் பரப்பினர். அதற்கு அவர்கள் காட்டிய சான்று, அன்னார் நடத்திய ‘வேளாளன்’ இதழ். அன்று வேளாளர் பல குழுக்களாகப் பிரிந்து தம்முள் பூசலிட்டு வந்தனர். அவர்களை ஒன்றிணைக்க அரும்பாடுபட்டார் புலவர். தவிர, அவர்களிடம் நிலவி வந்த மூடநம்பிக்கைகளைப் போக்கவும் தம் ஆற்றல் மிக்க கட்டுரைகளை ‘வேளாள’னில் வெளியிட்டார். அதியமான் ஆண்ட தகடூரை அடுத்த அரூர் என்ற ஊரில் நிகழ்ந்த வேளாளர் மாநாட்டில் விதவையர் மணம் குறித்து ஒரு சமுதாயவியல் உரை ஆற்றியதோடு, விதவையர் மணத்தை வேளாளர் ஏற்கவேண்டித் தீர்மானமும் கொண்டுவந்து நிறைவேற்றினார். வாழ்நாளெல்லாம் தாம் கற்பித்த சீர்திருத்தக் கொள்கைகளைத் தாமும் கடைப்பிடித்து, மற்ற அனைவரையும் கடைப்பிடிக்கச் செய்தவர் அவர். திண்ணைப்பள்ளியில் மிகச் சிறிய காலமே பயின்ற பொழுதும், அப்பொழுதிருந்தே இனிய இசைப்பாடல்கள் இயற்றிப் பாடவும் வல்லவராயிருந்தார் புலவர் குழந்தை. அதனால்தான், தாமே முயன்று யாப்பிலக்கணத்தையும் கரைகண்டார். திருக்குறளுக்குப் புலவர் குழந்தை கண்ட புதிய உரை, பலரையும் திருக்குறளின்பால் ஈர்த்தது. பகுத்தறிவு நோக்கில் திருக்குறளுக்கு உரைகண்ட இருபதுக்கும் மேற்பட்டோருக்கும் முன்னோடி இவரே. கொள்கைக் குன்றான குழந்தை எவரிடமும் என்றும் தன் கொள்கையை விட்டுக் கொடுத்ததுமில்லை; தன்னைப் ‘புலவர்’ ‘புலவர்’ என்று எங்குபார்த்தாலும் எவரிடமும் போற்றிப்பாராட்டிய பேரறிஞர் அண்ணாவிடம்கூட எதையும் எதிர்பார்த்துப் போனதுமில்லை. கம்பனுக்குக் கைத்தாளம் போட்டால் நன்றாகப் பிழைக்கலாம் என்றிருந்த சூழலில், ‘இராவண காவியம்’ படைத்தவர் புலவர் குழந்தை. இராவண காவியத்தின் சிறப்புகள் நான்கு. 1.இராமனை விட ஏற்றம் மிகுந்தவன் இராவணன் என்பதை உறுதிப்படுத்தியது. 2.தமிழறிவும் பகுத்தறிவும் பின்னிப் பிணைந்த காவியம். 3. போலச்செய்த சார்புக் காவியமாக இல்லாமல், முழுமையான தமிழ்ப்பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்த பெரும் காவியமாகத் திகழ்ந்தது. 4.தன் புதுமை, பகுத்தறிவுக் கருத்துகளால் காங்கிரஸ் கட்சியரசை அச்சுறுத்தித் ‘தடை’போட வைத்தது. அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் இராவண காவியத்துக்கிருந்த தடையை நீக்கினார். ‘சாதிக் கொரு நீதி’படைத்தவர்களின் கைகளில் செய்திஊடகம் (பேரிதழ்களும் பெரும் நாளேடுகளும்) இருந்த காலத்திலும் பெரும் புகழ் பெற்றது. ‘காமஞ்சரி,’ சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்ட வகுப்புக்குப் பாடமாக விளங்கிய நாடக நூல்(1971ஆம் ஆண்டுப்பாடத்திட்டம்). மனோன்மணியம் எவ்வாறு லிட்டன் பிரபுவால் இயற்றப்பெற்ற ‘The Secret Way’ என்ற ஆங்கிலநூலைத் தழுவிப் படைக்கப்பெற்றதோ அவ்வாறே ஆங்கிலப் பெருங்கவிஞர் மத்தேயு ஆர்னால்ட் இயற்றிய ‘Shorab and Rustam’ என்ற நூலைத் தழுவிப் படைக்கப்பெற்றது. இதில் தமிழ் மரபுகள் பெரிதும் பேணப்பெற்றுள்ளன. ஆனால் ஆங்கிலக் கதையில் கையையே வைக்கவில்லை புலவர் குழந்தை. கதைமாந்தரின் பெயர்களும் இடப்பெயர்களும் தமிழுக்கேற்ப மாற்றப்பெற்றுள்ளன. சுந்தரனாரும் குழந்தையாரும் தம் தமிழ்ப் காவியங்களை நாடகங்களாக ஆக்க முயலாமற்போனதேன் என்பது குறித்த ஆய்வுக்கட்டுரை உள்ளதாக அறிந்தேன். இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை. புலவர் குழந்தையின் திருக்குறள் புத்துரையைப்போலவே, ‘நீதிக் களஞ்சியம் குழந்தையுரை’யும் முற்போக்கானது. 1962-இல் ஈரோடு இளங்கோ புத்தகசாலையால் வெளியிடப்பெற்றது. 784 பக்கங்களையுடையது. கல்வி முதல் நிலையாமை ஈறாக 71 தலைப்புக்களில் இருபத்திரண்டு அறநூல்களிலிருந்து பலரால் பிறழ உரைசெய்யப்பெற்ற அரிய பாடல்கள் புலவர் குழந்தையால் தெரிவு செய்யப்பெற்று, அவராலேயே புத்துரையும் வகுக்கப்பெற்றது. ‘திருக்குறளும் பரிமேலழகரும்,’ ‘தொல்காப்பியர் காலத் தமிழர்,’ ‘இன்னூல்,’ ‘யாப்பதிகாரம்,’ ‘தொடையதிகாரம்’, ‘நெருஞ்சிப்பழம்’[செய்யுள்], ‘திருநணாச் சிலேடை வெண்பா,’ ‘தமிழ் வாழ்க’[நாடகம்], ‘தமிழெழுத்துச் சீர்திருத்தம்,’ ‘கொங்கு நாடும் தமிழும்,’ ‘கொங்குக் குலமணிகள்,’ ‘தீரன் சின்னமலை,’ ‘அருந்தமிழ் விருந்து,’ ‘அருந்தமிழ் அமிழ்து,’ ‘பூவா முல்லை,’ ‘கொங்கு நாடு- தமிழக வரலாறு,’ ‘அண்ணல் காந்தி,’ ‘சங்கத் தமிழ்ச் செல்வம்’ ஆகியவை புலவர் குழந்தையின் பிற நூல்கள். இவற்றுள் சில இப்பொழுது கிடைப்பதில்லை. எனினும் யாப்பதிகாரம், தொடையதிகாரம் முதலியவற்றைப் புதிய பதிப்புகளாகக் கொண்டுவந்துள்ள சென்னை முல்லை நிலையமும் (9, பாரதி நகர் முதல் தெரு, தியாகராயர் நகர், சென்னை- 600 017) மற்றும் திருக்குறள் புலவர் குழந்தையுரையைப் புதிய பதிப்பாகக் கொண்டுவந்துள்ள சாரதா பதிப்பகமும் ( ஜி-4, சாந்தி அடுக்ககம், 3, ஸ்ரீகிருஷ்ணாபுரம் தெரு, இராயப்பேட்டை, சென்னை- 600 014) நம் பாராட்டுக்குரியவை. புலவர் குழந்தை பெற்ற சிறப்புகள் சில. விழுப்புரம் பகுத்தறிவுக் கழகம் புலவரைப் பாராட்டி விழாவெடுத்தபொழுது, தந்தை பெரியார் கைகளால் பொன்னாடை போர்த்தப் பெற்றார். பவானியில் குமாரபாளையம் பகுத்தறிவுக் கழகம் புலவர் குழந்தையைப் பாராட்டி விழா எடுத்தபொழுது புதுச்சேரி மாநில முதல்வராக விளங்கிய மாண்புமிகு பரூக் மரைக்காயர் அவரைப் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தார். புதுச்சேரியிலும், கொங்கு நாட்டின் பல இடங்களிலும் பகுத்தறிவுக் கழக அமைப்புக்களால் விழாக்கள் பல கொண்டாடப்பெற்று, பல்வேறு சிறப்புகள் வழங்கப்பெற்றார் புலவர் குழந்தை. “என்னை யலாதார் எழுதப் படிக்க(அ)றியார் தன்னை எழுத்தறியத் தான்செய்தேன் - என்னைகொல் சால வலசியன்னார் சங்கத் தமிழ்பாடும் ஓல வலசெங்கள் ஊர்” என்று ச.து.சு. யோகியார் அவர்களுக்கு 1927-இல் விடையாகக் கூறிய பாடல்மூலம், தன் இளம்பருவத்திலேயே ஊராருக்கெல்லாம் எழுத்தறிவித்த தன் சமூகப் பொறுப்பைப் பதிவு செய்து வைத்துள்ளார் புலவர் குழந்தை. “இராவண காவியம் படைத்த காப்பியப்பேராசான்” என்றும் “இலக்கியத்தில் முக்குளித்த கொங்கர் குலச் சோழன்” என்றும் “பெருவீரன் தீரன் சின்னமலையின் வரலாற்றை ஆராய்ந்து தமிழகத்தின்முன் வைத்த வரலாற்றியல் வரைவாளன்” என்றும் பாராட்டப்பெற்ற புலவர் குழந்தை, 1972ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் நாள் இயற்கையில் ஓய்வெடுத்துக்கொண்டார். நன்றி: 'வெல்லும் தூயதமிழ்' (இலக்கிய மாத இதழ்) இரட்டை(ஆனி)சூலை 2006 இதழ், புதுச்சேரி-605009