27.7.06

எண்ண முடியாத எண்ணப் பயிர்கள்!

பாவலர் இலக்கியனின் ‘பாவேந்தர் புரட்சி நூறு’ (பாக்கள்) -பேராசிரியர் அ.பசுபதி(தேவமைந்தன்) தமிழ்மாமணி மன்னர்மன்னன் அவர்களின் உணர்வுமிகுந்த அணிந்துரையும் தமிழுணர்வு மிகுந்த பதிப்பாளர் திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்களின் பதிப்புரையும் சூழ, முன்னுரையிலேயே ‘பாவேந்தர் புரட்சி நூறு’ என்னும் தன் பாத்தொகை நூலுலகில் நின்று நிலவும் என்பதற்கான கரணியங்களைக் கோட்பாட்டு அடிப்படையில் நம்முன் வைத்துவிடுகிறார் பாட்டறிஞர் இலக்கியன். உலகப் பாவலர்களின் வரிசையில் முகாமை தரப்பெற வேண்டியவர் பாவேந்தர்; அவரே புரட்சியின் வடிவம்; ஒரு வரலாறு; சுவைமிக்க பாவியம்; ஒரு வழிகாட்டி; ஒரு கலங்கரை விளக்கம். அவர்தம் படைப்புகள் திருத்தமான வாழ்க்கைக்குத் திருப்புமுனைகளாகும் - இருள்படிந்த வாழ்க்கைக்கு ஒளிவிளக்குகளாகும் - நம்மைக் கரைசேர்க்கும் பாட்டுப் படகுகளாகும். பாவேந்தர் புரட்சியே தமிழுக்கு உரிய இடம் அளிப்பதுதான். பாவேந்தர் புரட்சிநூறு என்னும் இந்நூலில் உள்ள கருத்துகள் என்றைக்கும் தேவைப்படுவன. மாந்தநேயம், பகுத்தறிவு, தமிழுணர்ச்சி என்ற மூன்றும் பாவேந்தரால் மிகுதியாக வலியுறுத்தப்பெற்றவை. இவை மூன்றையும் தமிழர்கள் கடைப்பிடிக்காவிட்டால் வாழ்க்கை ஏது? பாவேந்தருடைய அரிய வாழ்க்கை நிகழ்வுகளும் புரட்சிகளும் இந்நூலில் பாக்களாக்கப்பெற்றுத் தரப்பெற்றுள்ளன. அவர் சுட்டிய வாழ்க்கை நெறிகள் பொன்னகையில் மணிகள் பொதிந்துவைத்தாற்போல ஆங்காங்கு சுட்டப்பெறுகின்றன. அடிப்படையில் மாந்தரை ஆட்டிப்படைப்பது கடவுள் நம்பிக்கை ஆகும். அதிலிருந்து மதம் தோன்றி ஆத்மா மோட்சம் நரகம் முதலானவை கிளைக்கின்றன. ஒட்டுமொத்தமாக இவற்றை அடிப்படையிலேயே மறுத்தவர் பெரியார். ‘வெங்காயம்’ என்ற ஓர் ஒற்றை இயற்கைப் பொருட்சொல்லால் இவற்றைச் சுழற்றிச் சுருட்டிக் குளிகை உருவமாக எங்கும் பேசி வந்தார் பெரியார். அதுகுறித்த பெரியார் சொற்கள்: “எப்போதுமே நான் கடவுளையும் மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே ‘வெங்காயம்’ என்றுதான் சொல்லுவேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது; வெறும் சதை. அச்சொல்லின் பொருள் வெங்காயம் - வெறும் காயம்; உயிரற்ற உடல்; விதை இல்லாதது; உரிக்க உரிக்கத் தோலாகவே - சதையாகவே வந்து முடிவில் சூனியமாய் - விதை இல்லாத தன்மையதாய் முடிவது என்பது பொருள். ஆகவே விதை, வித்து இல்லாத காரணத்தால்தான் அதற்கு வெங்காயம் என்ற பெயர் உண்டாயிற்று. அது போன்றவைதான் கடவுளும் மதமும் ஆகும்.” (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்: மடலம்-2, வே. ஆனைமுத்து பதிப்பு, 1-7-1974; பக்கம் 1063.) முன்னாள் கடவுளை ஏற்று, பின்னாளில் உணர்ந்து கடவுளை மறுத்தவர் பாரதிதாசனார் என்ற பாவேந்தர் குறித்த தரவு பயின்று வரும் ‘புரட்சி மின்விசை’[ப.56] என்னும் 44-ஆம் பாட்டுக்குக் கரணியம், பெரியார்வழியைப் பின்னாளில் பாவேந்தர் போற்றியதேயாகும். இதே தரவானது சற்றும் மாறுபடாமல் ஏற்ற இடங்களில் இப்பாத்தொகையுள் பரந்து கிடக்கிறது. [தலைப்புகள் 5,19,21,44,50,63:பக்.17,19,33,62,75.] “தமிழர்கள் செய்த தவப் பயனாகக் கடந்த 2000 ஆண்டுகட்குப் பின்னர் நமக்குக் கிடைத்த ஒரே தலைவர் பெரியார். அவரால்தான், வீழ்ச்சியுற்ற நம் வாழ்வு வளம் பெற முடியும்” என்று அவர் தம் தலைமையுரை ஒன்றில் முழங்கியமை குயில் [2-1;நாள்:9-6-1959] இதழில் பதிவாகியுள்ளது.(பாவலர் இலக்கியன், பாவேந்தர் குயில் ஓர் ஆய்வு, பயோனியர் புக் சர்வீசஸ், சென்னை-5. திசம்பர்,1989. ப.143.) பாவலர் இலக்கியன் வரிகள்: “கடவுளை ஏற்றவர்! பின்னாள் உணர்ந்து கடவுளை மறுத்தவர் பாரதி தாசனார்.” அத்துடன் நிறுத்தினால் பாவேந்தரின் தனித்தன்மை புலப்படாது. மேற்படி கடவுட்கொள்கையில் ‘பிழைக்க’த் தெரிந்த பிறர் செய்தி என்னவாம்? “கடவுளை மறுத்துப் பின்னாள் பிழைக்கக் கடவுளை ஏற்று வாழ்ந்த வரும்,பலர்!” அதனால் எந்தப் பயனும் நாட்டுக்கு விளையவில்லை. அதனால் புரட்சி மின்விசையையே நாட்டுக்குத் தந்தார் பாவேந்தர் - என்பதை, “வண்ணம் மாறினால் வருமோ புரட்சி? எண்ண மாற்றமே எழுப்பும் புரட்சியை! மன்பதை மலர மாபெரும் புரட்சி மின்விசை தந்தவர் விளங்குபா வேந்தரே!” என்றவாறு தெரிவிக்கிறார் பாவலர் இலக்கியன். [மங்காத் தமிழின்] மாண்புறு பாவலன், எங்களின் ஏந்தல்[ப.57], தனிப்பெரும் பாவலன், தமிழ்த் தொண்டன், தமிழிசைக் காவலன், படத்துறைப் பாவலன், பாட்டுத் தலைவன், மக்கள் பாவலன், [உழைப்பவர் உறுதுயர் தீர்த்திட]அழைப்பு விடுத்தவன், சேவற்குரலோன், எரிகதிர்ப்பாவலன், [தன்னலம் துறந்த] தமிழின் வள்ளல் போலத் தன் இயல்பாலும் செயல்திறத்தாலும் தகுதியாலும் தனித்தன்மையாலும் பணிச்சிறப்பாலும் புரட்சி மனத்தாலும் போர்க்குணத்தாலும் பாவேந்தர் பெற்ற சிறப்புக்களைத் தன் இந்நூலின் தலைப்புகளாக்கியுள்ளார் பாவலர் இலக்கியன். மற்றவற்றைக் காட்டிலும் பாவேந்தரைப் புரட்சியின் எழுச்சியதன் இயல்பாகப் படிமநிலை(imagery)யில் காணும் பாவலர் உள்ளம் இதோ: “தீந்தமிழ்ப் புதுவைத் திருநகர் தன்னில் வேந்தென விளங்கிய வெற்றிப் பாவலன் ஏந்துகோட் டியானை எழுந்தாற் போல அழுந்திய பழமைக் களரினை யகற்றிப் பழுதிலாப் புலமைப் பாரதி தாசன் எழுந்தனன் ஈங்கே! எழுந்தது புரட்சி! விழுந்தது மடமை! விளங்கிய தறிவே! தொழத்தகு தமிழொளி தோன்றி எழுச்சி தந்தது எந்தமி ழோர்க்கே!” புரட்சியின் எழுச்சி தோன்றுமிடம் - ஊர், எத்தகையதாய் விளங்க வேண்டும்? ‘தீந்தமிழ்ப் புதுவைத் திருநக’ராய் விளங்க வேண்டும். அதன் இயல்புகள் நவிலப்பெறும் பாத்திறம் இதோ: “அலைகடல் விளங்கும் அழகிய மூதூர்! கலைபல வலர்க்கும் கவின்மிகு பேரூர்!” மறுக்க முடியுமா? மறுக்க மனம் வந்தால் அந்த மனம் யாருக்குச் சொந்தம் தெரியுமா? பாவேந்தர் கூற்றின்வழிப் பார்ப்போமா? “மன்னு தமிழ்க்குடியாம் வாழையடி வாழையென இந்நிலத்தில் எங்குறைவா ரும்தமிழர் - பன்னுமிந்த வாய்ப்பில்லார் தம்மை,அவர் வைப்பாட்டி மக்களை ஏற்கமாட் டோம்தமிழர் என்று” (பாரதிதாசன் பன்மணித் திரள், சென்னை, 1-8-1963) என்று பாவேந்தர் ‘தமிழர்’ என்று ஏற்க மறுத்தவர்க்குச் சொந்தம் அந்த மனம். இன்னும் புதுவையின் இயல்புகள், இயல்பாய் இலக்கியன் பாவரிகளாய் வருகின்றன: “தொலையா நல்லிசைத் தொல்லோர் மரபினர் விலையிலாப் பனுவல் விளைக்கும் சீரூர்!” -உண்மை. பரப்பளவு, மக்கள் தொகைக் கணக்கை வைத்துப்பாருங்கள். சுண்டைக்காய் மாநிலம் என்று பூசுணைக்காய்கள் சொல்லும் இந்தச் சிறிய, இந்திய ஒன்றிய எல்லையில் மட்டும் இந்நூல் உட்பட எத்தனை நூல்கள் தமிழ்க் கழனியில் விளைகின்றன என்ற கணக்கெடுத்துப் பார்த்தால் மலைத்துப் போய்விடுவார்கள் மற்றவர்கள். இயற்கை நலம், இனித் தொடர்கிறது: “நெய்தலும் மருதமும் நெடிது விளங்கும்! பெய்யும் மழையினாற் பெருவளஞ் சேரும்! நன்னீர் ஊற்றுகள் நலம்செயும்; எங்கும் பொன்னிறக் கொன்றை பூத்துக் குலுங்கிடும்! செம்புலம் ஒருபுறம் சிறந்து தோன்றும். வெம்மை தணிக்கும் வியன்பொழில் சூழ்ந்தே! நேருற விளங்கிடு நெடிய மறுகுடன் ஏர்பெற நிவந்த எழில்மா ளிகையொடு மரம்பல செறிந்து மாநிழல் தந்திடும்!” கழககால ஒளவைசொன்ன “அவ்வழி நல்லை வாழிய!” தொடர்கிறது: “கரவிலா நெஞ்சினர் கனிவுடன் வந்தவர்க் கீந்தும் இன்விருந் தோம்பியும் வாழ்ந்திடும் தீந்தமிழ்ப் புதுவைத் திருநகர்” -இத்தகைய திருநகரில்தானே ‘ஏந்துகோட் டியானை எழுந்தாற் போலே’ ‘வேந்தென விளங்கிய வெற்றிப் பாவலன்’ ‘பழுதிலாப் புலமைப் பாரதி தாசன்’ புரட்சியே எழுந்தாற்போல எழுந்திடல் இயலும்? ‘மக்கள் பாவலன்’[ப.33] என்ற - பாவேந்தர் புரட்சி நூறில் இருபத்தொன்றாம் பாட்டு, சமநிலையாகவும் செவ்வியல் முறையிலும் பாவலரின் பாவேந்தர் குறித்த வீறுகளைச் செப்பமாகப் பதிவுசெய்துள்ளது. வேறு சொற்களில் சொல்லப்போனால், ஏனைய பாடல்களில் புரட்சிப் பாவேந்தமாக நவிலப் பெற்றவற்றுக்கெல்லாம் சாரமான போக்கில் சரளமான நடையினில் அமைந்திருக்கிறது. மதுரை முல்லைப் பதிப்பகம் அறுபத்தெட்டாண்டுகளுக்கு முன்னர் மூன்றுருவா எட்டணாவுக்கு வெளியிட்ட ‘பாரதிதாசன் கவிதைகள்’ முதற் பகுதி நூலின் உள்ளுறைக்கு முந்திய பக்கத்தில் இடம் பெற்றுள்ள பாவலர் வால்ட் விட்மன் கருத்துக்குப் பொருந்தியிருக்கிறது. அது, “உள்ளத்தை வெளிப்படையாக, சீர்தளைகளுக்குக் கட்டுப்படாமல், தைரியமாகச் சொல்பவனே கவிஞன். அவன், எதுகை மோனையின் அடிமையல்லன். சொல்லிற்கும், யாப்பிற்கும், இலக்கணத்திற்குங்கூட அடிமையல்லன். அவன் அவற்றின் தலைவன்; கருத்தின் முதல்வன்; அவன் ஒரு படைப்புத் தலைவன். பாடலைப் பார்ப்போம். “தந்தை பெரியார் கொள்கையைத் தலைமேல் முந்தி ஏற்ற மூதறி வாளன். முன்னாள் கடவுள் வழியைக் காணினும் பின்னாள் அதனைப் பிழையென் றுணர்ந்தவன்! கண்டதைப் பாடும் கயமை விடுத்துளம் கொண்டதைப் பாடிய கொள்கை யாளன், மூட முட்புதர்க் காட்டினைத் தன்னுயர் பாடற் கருத்தால் பட்டிடச் செய்தவன்! எவ்வழி மக்களுக் கேற்புடைத் தென்றுணர்ந் தவ்வழிப் பாட்டை அளித்த தோன்றல்!” இதே எளிமை ‘பாட்டுத் தலைவன்’ பாட்டிலும் படிந்து கிடக்கிறது. “குவலயம் போற்றும் குடும்ப விளக்கும், எவர்க்கும் கல்வி வேண்டு மென்றே இடித்துரைக் கின்ற இருண்ட வீடும், வெடிக்கும் புரட்சி விளைக்கும் பாவியம் பாண்டியன் பரிசும், பழந்தமிழ் உணர்வைத் தூண்டும் குறிஞ்சித் திட்டும், எங்கள் பாட்டுத் தலைவன் பாரதி தாசன் நாட்டுக் களித்த நன்கொடை!” இதுதான் பாவலர் இலக்கியனின் பாட்டுத்திறம். ‘கடந்த மூன்று நூற்றாண்டுகளாக’ என்றே தமிழுக்கும் தமிழருக்கும் வேற்றுமொழிப்பகை வந்தமையைக் குறிப்பர் பல்லோர். மெய்யாக, நாவலந்தீவின்மேல் கி.பி.1008ஆமாண்டு இசுலாமியர் படைஎடுத்தபொழுதே நாவலந்தீவின் தென்பகுதியும் மொழி-இனம் என்ற இரு நிலைகளிலும் தாக்குதல்பெறத் தொடங்கிற்று. கி.பி.1674ஆமாண்டு பிரஞ்சியர் புதுச்சேரியைப் பிடித்துக் கொண்டனர். இதற்குப் பதினாறாண்டுகளுக்குப் பின்பே கல்கத்தாவில் ஆங்கிலர் வேரூன்றிக் கொண்டனர். கி.பி.1857ஆமாண்டில் படைவீரர் கலகம் (சிப்பாய்க் கலகம்) வெடித்தது. கி.பி.1858ஆமாண்டு தான் நம் நாடு நேரடியாக ஆங்கில முடியாட்சிக்குள் வந்தது. கி.பி.1875ஆமாண்டில் இந்திய தேசியப் பேராயம் தொடங்கியவுடன் இந்திமொழி ஆதிக்கம் தென்னாட்டில் தொடங்கியது. இவற்றுக்கெல்லாம் இணைகோடாகத் தமிழ்த் தேசியமும்; பெரியார், பேராயக் கட்சியினின்று பிரிந்து விடுதலையாகச் செயல்படத் தொடங்கியபின் நேர்கோடாக இடதுசாரித்தமிழ்த்தேசியமும் செயல்படத் தொடங்கின. இந்நோக்கின் விரிவாழங்களுக்குத் தோழர் சுப. வீரபாண்டியன் அவர்களின் ‘பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்’ (தமிழ் முழக்கம், 345, அண்ணா சாலை,சென்னை-600 006: 2005. பக்கம் 20 முதல்...)ஆய்வுநூலை வாசியுங்கள். இத்தகைய வாசிப்பும் புரிந்து கொள்ளுதலும் இல்லாவிடில் ஆங்கிலப்பகை குறித்தும் இந்திப்பகை குறித்தும் பாவேந்தரின் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் பாவலர் இலக்கியனின் உணர்த்தல்களைப் புரிந்துகொள்ள முடியாது. குறுகிய மனப்பான்மை என்றே சொல்லவரும். இதனால்தான் புதுவைத் தமிழ்மாமணி புலவரேறு அரிமதி தென்னகனாரும் “செத்த காக்கைச் சிறகைப் பறக்கவிடும் உத்தியைத் தம் ‘வெல்லும் தமிழியக்கம்’ என்னும் இனவெழுச்சிப் பாத்தொகையுள் பின்வருமாறு மொழிகிறார்: “முட்டாள் இனத்திற்கு மோதி உதைத்தால்தான் எட்டும் சிலஉண்மை! எத்தனைநாள் வாய்நோக நீட்டி முழக்கி நிலவுக் குளிர்ச்சியினைக் காட்டும்சொல் கூறிக் கரை(றை)வோம் தமிழினமே! செத்தஒரு காக்கைச் சிறகைப் பறக்கவிடில் கொத்தவரும் காக்கைக் குலமே பறந்துவிடும்! காயவைத்த நெற்களத்தைக் காக்கும் வழிஇதனை ஏயவகை ஆய்ந்துணர்ந்தே ஏற்பாய் தமிழினமே!” பாவலர் இலக்கியன் கூறுகிறார்: “பாரதி தாசன் பிறந்த மண்ணில் சீரக முனையும் செந்தமிழ் இல்லை: எங்கும் ஆங்கிலம்! எதிலும் ஆங்கிலம்1 பொங்கி வழிகிறது ஆங்கில மதுவே! தமிழால் உயர்ந்த தமிழ ராலும் தமிழ்க்கு நலமிலை; தமிழ்க்கு வாழ்விலை; மண்ணின் மைந்தர் மருண்டு கிடக்கிறார்.” “பழஞ்சுவடி விரித்தாற்போல் பரந்த நெற்றி, பார்வையிலே தமிழொளியே பாய்ந்து நிற்கும்” தகவுடைய பாவேந்தர், “தமிழர்க்குத் தமிழ்மொழியை வாழவைக்கும் தனிக்கடமை உண்டென்றே சொல்லிச் சென்றார். தமிழர்கள் ஆங்கிலத்தைப் பெரிதாய்க் கொண்டார். தமிழ்வாழப் பாவேந்தர் சொல்லைக் கேட்பீர்” இந்த முறையில்தான் ‘பாவேந்தர் புரட்சிநூறு’ என்னும் இப்பாத்தொகை பாவேந்தர் குறித்து இதுவரை வெளிவராத தரவு-ஆவண-வரலாற்றுக் களஞ்சியமாகவும் திகழ்கிறது. தலைப்புகள் 8,18,56,71,77,79,81,83[பக்கம் 20,30,68,83,89,91,93,95] இப்பொருண்மை உள்ள பாக்களைக் கொண்டுள்ளன. இவற்றுள்ளும் 56-ம் 83-ம் குறிப்பாக வேறுபடுகின்றன. முதலாவது, “ஆங்கிலப் பேரா சிரியர் ஒருவர் ஓங்கு புலமையும் உயர்வும் உள்ள திரு.வி.க.வின், மறைமலை யடிகளின் பெருமை மிக்க உரைநடை தன்னைத் திட்டிப் பேசிய தீங்குறு செயலைத் தட்டிக் கேட்க ஆளிலை யோவெனச் சீற்றம் மேலிடப் பாரதி தாசனாம் ஆற்றல் அரிமா முழங்கிய தாங்கே!” என்பது. அடுத்தது, பாரதிமேல் பாவேந்தர் கொண்டிருந்த பற்றையும் பாரதி ஆங்கிலத்தின் எதிப்பை மேற்கொண்டவர் என்பது குறித்தும் மொழிவது: “பாரதி வாழ்வினில் படிந்த பாவலன். பாரதி யாரொடு பழகிய பாவலன். பாரதி தாசனாய் மலர்ந்த பாவலன். பாரதி பெயரைப் பாரதி தாசன் தாங்கியதாலே தமிழ்ப்பகை என்று தாங்கா மனத்தினர் தாக்கிப் பேசினர். தூங்கிய தமிழினம் துடித்தெழப் பாரதி ஆங்கிலக் கல்வியை அறவே வெறுத்தனன். வேங்கை பாரதி வேற்று மொழியின் தீங்கினை உணர்த்திய திறல்மிகு பாவலன். அத்தகு பாரதியின் அரிய புகழினை இத்தரை வைத்தவன் எம்பா வேந்தனே!” பாவேந்தர் உணர்த்திய அன்பு வாழ்க்கை, காதல் உயர்வு, முதியோர் காதல் ஆகியவற்றை பாக்களால் எடுத்துச் சொல்லும் பாவலர் இலக்கியன், குழந்தை மணத்தின் கொடுமையைப் பாவேந்தர் தம் பாக்களால் களைய முற்பட்ட சிறப்பைக் “கன்றுகள் காத்தவன்” என்ற தலைப்பிட்டுச் சொல்லியிருப்பது புதுமை. “மணக்கொடை வாங்கும் வழக்கினைத் தணலில் இட்டான் தமிழ்ப்பா வேந்தனே!”(பா.29), “மெல்லிய ரெல்லாம் மேன்மை மிக்க கல்விக் கண்களைப் பெறுதல் வேண்டும் என்று பாடிய எழுச்சிக்குன்றமே! குன்றாப் புதுவைப் புரட்சிக் குன்றம்!(பா.31), “வேரிற் பழுத்த பலாக்க ளுக்குக் கோரினான் விடுதலை, கொள்கைத் தேரினில் வந்த பாட்டுப் பாரியே!(பா.33), “பதுமையாய் வாழும் பாவை மார்க்குப் புதுமை உலகைக் காட்டப் புதுவைப் பாவலன் புறப்பட் டானே!”(பா.37) முதலானவற்றுள் மகளிர்க்காகப் பாவேந்தர் ஆற்றிய புரட்சி வெளிப்படும். வாணிதாசனார்க்கும் பாவேந்தருக்கும் நிலவிய உறவின் சிறப்பை “எழுதத் தூண்டினார்!” என்ற பாடல் புலப்படுத்துகிறது. கோவை முத்தமிழ் மாநாட்டிற்கு இருவரும் சென்றுதிரும்பியபொழுது வாணிதாசனார்க்குப் பாவேந்தரால் ஏற்பட்ட அதிர்ச்சியும் அது நீங்கிய வயணமும் அருமையாகச் சொல்லப்பெற்றுள்ளன. அதேபோல் “பறந்தது பகைமை!” என்ற பாடல், துரைசாமிப் புலவர் - பாவேந்தர் - வாணிதாசனார் இடையில் நிகழ்ந்த ஓர் நிகழ்வுத்தொடரைச் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. 73ஆம் பாடலான “எரிகதிர்ப் பாவல”னுடன் இதை ஒப்பிட்டுப் படித்துப் பார்த்தால் மேலும் சிறப்பு வெளிப்படும். “அழைப்பு விடுத்தவன்,” “விண்கோள்,” என்பவை முறையே புரட்சிப் பாவேந்தரின் பொதுமை உணர்வையும் மொழிஉணர்வையும் ஒளி+ஒலிக் காட்சிகளாய் வெளிப்படுத்துவன. “இலக்கணத்திற் புலியாகத் திகழ்ந்து வந்த குமாரசாமிப் புலவருக்கு, அவர் துரைசாமிப் புலவரின் மாணாக்கராயிற்றே என்றும் பகை பாராமல், பாராட்டு விழா எடுத்து காமராசர் கைகளால் பொன்னாடை அணிவித்த பாவேந்தரின் சிறப்பை “ மலையருவி” எனும் பாடலில்(48)இனிதாய்க் காணலாம். இதையும் “எரிகதிர்ப்பாவல”னுடன்(73) ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். பாவேந்தர் பாசறைப் பாவலர்களையும் இவண் பாவலர் சுட்டியிருப்பது பெருந்தன்மையைக் காட்டும். மேலும், “தமிழிசைக் காவலன்” பாவேந்தர் - “வள்ளல் அண்ணா மலையரும் போற்றும் இசைத் தமிழ்க் கழகம் இனிது நிறுவி இசைத்தமிழ் வளர்த்ததை”யும்; “நல்ல கொள்கை,” பாவேந்தர் இலக்கியம் குறித்துக் கி.ஆ.பெ. புகழ்ந்து செப்பியதையும்; “படத்துறைப் பாவலன்,” வளையாபதி படத்தில் தானெழுதிய சில வரிகளை மாற்றி எழுதிய வன்செயலுக்காக நாற்பதாயிரம் உருவா ஒப்பந்தத் தொகையை வீசி எறிந்த பாவேந்தர் செய்கையையும்; “கைம்மாறு கருதாதவர்,” தனக்கு எல்லையில்லாத் தொல்லைகள் தந்த கல்வி அதிகாரியின் மகனுக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இடமும் விடுதியும் பெற்றுத் தந்த அன்னாரது சிறப்பையும்; “அடிமைக் கல்வி,”பிரஞ்சியர் ஆட்சியில் கெஞ்சிக் கிடந்த பல்லோர்க்கிடையிலும் துணிவோடு நின்ற பாவேந்தரின் பெருமையையும்; ‘வெங்கண் வேழம்,” பாரதி பற்றிய படமும் பாண்டியன் பரிசு படமும் எடுக்கும் முயற்சியில் ஏற்பட்ட நம்பிக்கைத் துரோகத்தால் பாவேந்தர் முடங்கிப்போக நேர்ந்ததையும்; “வென்றது தமிழே,” நாகர்கோவில் நிகழ்ச்சியில் பாவேந்தர்க்கு உருவான கலைவாணர் அரணையும் கவிமணி முரணையும் அருமையாகச் சித்திரிக்கின்றன. “சேவற் குரலோன்” என்னும் தலைப்பும் புதுமை. “கன்றுகள் காத்தவன்” தலைப்பைப் போலவே இதிலும், பழைமை - புதுமையில் பாய்ந்திருக்கிறது. “உழைப்பின் வறியவர் ஓடாய்த் திரிவதும் உழைக்காச் செல்வர் உயர்வை அடைவதும் உலகம் ஒப்பிய வொன்றாய் இருந்திடில் நலமார் புரட்சி நாட்டில் எழுந்திட சேவற் குரலால் செவிப்பறை கிழிந்திட பாவின் வேந்தன் பரப்பினன் ஈங்கே!” என்பதிலிருந்து இதனை உணரலாம். அருமைப் புதுவை அந்நாளில் எவ்வாறிருந்தது? இந்நாளில் எவ்வாறு இழிந்தது என்பதைப் பாவேந்தம் என்னும் பகைப்புலனில்(contrast) பாவலர் இலக்கியன் “நலமே நாடி!” என்ற பாடலில்(71)படம்பிடித்திருப்பது, உணரத் தக்கதாம். சுந்தர சண்முகனாரின் கரவற்ற உள்ளமும் பாவேந்தரின் பரந்த உள்ளமும் ஒன்றை ஒன்று மதித்த திறத்தை “எழுவோம் யாமே!” எடுத்துச் சொல்லுகிறது. இன்னும் “முத்திரை பெற்றவர்,” “புரட்சி வெடிக்கும்(இரவலாய்ப் புத்தகம் வாங்குதல் இழிவே என்னும் பாவேந்தர் முழக்கம்),” “தமிழ் வள்ளல்,” “ஆய்வுகள்(பித்தர்தம் ஆய்வுகள் குறித்த பாவேந்தர் சினம்),” “சிறுத்தை வந்தது,” “நடைமுறைப் படுத்துக,” “புகழே பெறு,” “வரிப்புலியாய்ச் செயல்படு,” “வெஞ்சின வேங்கை,” “புறாக்களாய் மகிழ்ந்தார்!(பிரஞ்சுக் குடியரசுத் தலைவராயிருந்த ழுயில்பெரி அவர்களைப் பாவேந்தர் பெருமைப்படுத்தியபொழுது நிகழ்ந்தது),” “தமிழர் நிமிர்ந்தார்!(குழித்தலை மாநாடு), “புரட்சிக் குடியரசு(பாவேந்தரின் -‘குடியரசு” இதழ்த் தோய்வு),” “தமிழ் வீரம்(பாவேந்தருக்கு முன்னால் பேரறிஞர் அண்ணா அமரவே மாட்டார் - போலும் தறுகண்மைச் செய்திகள்),” “புத்துரை வழங்கியவன்(திருக்குறளுக்குப் புத்துரை),” “குழந்தை உள்ளம்,” “மானக் களிறு(பள்ளியில் பேசிய நிகழ்ச்சி)” ஆகியவை பன்முறை வாசித்துச் சுவைக்கத் தக்கவை. அவற்றுள்ளும் “மானக் களிறு” பாடலில் வரும் நகைச்சுவை மிகவும் குறிப்பிடத்தக்கது. தன்னால் தலைமையாசிரியர் ஒருவருக்குப் பணியிடமாற்றத்தைப் போக்கிக்கொள்ள அவருக்குப் பாவேந்தர் கூறிய உத்தி, வியப்பானது. நூறாம் பாடலான “ஒண்டமிழ்ப் போர்வாள்!” என்பதில் பின்வருமாறு பாவேந்தர்தம் சிறந்த நூல்கள் நிரல்படுத்தப் பெறுகின்றன: “அவரது நூல்கள் அமர்க்கள வேல்கள்! எவரையும் எதிர்த்திட ஏந்தும் துமுக்கி! குடும்ப விளக்கோ வாழ்க்கை விளக்கு! இடும்பை தீர்க்கும் இருண்ட வீடு! தமிழை இயக்கும் தமிழ்இயக் கம்தான்! அமிழ்தைச் சுரக்கும் அழகின் சிரிப்பு! தேனின் அருவி தெளிவை ஊட்டும்! கூனல் நிமிர்த்தும் குறிஞ்சித் திட்டு! பழச்சுளைப் பாவியம் பாண்டியன் பரிசோ பழகுநல் லினிமையும் புதுமை அறிவும் இழைந்தே ஒளிர்ந்திடும் ஒண்டமிழ்ப் போர்வாள்! விழைவுச் செம்பயிர் விளைக்கும் நிலமே.” நூறு பாடல்கள்; நூற்றுப் பன்னிரண்டு பக்கங்கள். ஆனால், பாவலர் இலக்கியன் படைத்துள்ள இந்தப் “பாவேந்தர் புரட்சி நூறு” நூல் விளைவிப்பதுவோ எண்ண முடியாத எண்ணப் பயிர்கள்! ஆசிரியர் முகவரி:பாவலர் இலக்கியன், 16, பதினைந்தாவது குறுக்குத் தெரு, அண்ணா நகர், புதுச்சேரி - 605 005. பேசி: 0413 2201786 வெளியீட்டாளர் முகவரி: வெள்ளையாம்பட்டு சுந்தரம், சேகர் பதிப்பகம்,66/1, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை-600 078. பக்கம்: 12+100=112. விலை:உரூ.35-00.

24.7.06

அற்புதங்களுக்கான இன்றைய தேவை

வறட்டுத்தனமானவையும் காட்டுத்தனமானவையுமான சூழ்நிகழ்வுகளுக்கு நடுவில் நாம் வாழ்க்கைச் சதுரங்கத்தில் பெரும்பாலும் முட்டாள்தனமாக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். அற்புதங்களுக்கான தேவை நிகழுலகில் மிகுந்து வரும் அதே நேரம், விரக்தியும் வெறுப்பும் சகமனிதர்பால் மட்டுமல்ல, தனிமனிதனுக்குத் தன்பாலேயே அவநம்பிக்கையோடு கைகோத்துக்கொண்டு, எந்த நேரத்திலும் தாக்குவதற்கு, வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும் - மூலைமுடுக்கிலும் முகம் மறைத்துப் பதுங்கிக்கொண்டு காத்திருக்கின்றன. இன்றைய மனிதனுக்கு முன்னோர் வார்த்தைகளில் நம்பிக்கை மட்டுமல்ல, வார்த்தைகள் மேலேயே அக்கறை இல்லாமல் போய்விட்டது. பணக்கற்றைகளின் மேல்தான் நோக்கம் எல்லாம், பெண்களுக்கு அடுத்தவள்(ர்) அணிந்திருக்கும் நகைகளின்மேல் உள்ளது போல. ஒன்றே ஒன்று முக்கியம். நம்புவது. முதலில் தன்னை. இதையே பெரியவர்களும் முன்னோர்களும் சொல்லிச் சென்றார்கள். திரு. வி. க. அவர்கள் தம் ‘உள்ளொளி’ நூலில் சொல்லியுள்ளவையும் பொய்கள் என்று கூசாமல் சொல்லுகிறார்கள். பலருக்கு இப்பொழுதெல்லாம் ‘அரசியல் உளச்சிக்கல்’ [political complexக்குச் சரியான எடுத்துக்காட்டு-- “தனக்கென்று பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்! எனக்கொரு மகன் பிறப்பான்- அவன் என்னைப் போலவே இருப்பான்” என்ற திரைப்பாட்டு]என்பதையும் மீறி தங்கள் ‘குரு,’ தங்கள் ‘ஆன்மீக இயக்கத்தின் நடத்துநர்கள்’ தங்களின் ஆன்மிகத் தலைவர் மறைந்துவிட்டாலும் அவர் எழுதி ‘அருளிய’ புத்தகம்[இன்னும் பல..] சொல்வது மட்டுமே வேதவாக்கு, பிற கருத்துகள் கூற்றுகள் எல்லாம் பிண்ணாக்கு என்ற அளவு போவதை வேதனையோடு பார்க்க- கேட்க- பக்கமிருந்து உணர வேண்டியுள்ளது. என் கையில் இருந்த நூலை அருவருப்புடன் பார்த்த, அதே நூலின் இன்னொரு வடிவத்தை நம்புகிற, அதே மதத்தின் வேறோர் உட்பிரிவுக்குச் ‘சாட்சி’யாய் இருக்கிற நண்பரொருவரை இக்கணம் நான் நினைவுகூரவேண்டியுள்ளது. தாம் தமிழராயிருந்தாலும் அதைச் சொல்லவே வெட்கப்பட்டு ஆங்கிலத்தில் பேசும் அவர், ஆங்கிலத்தில் miracles என்னும் அற்புதங்கள் அல்லாவிட்டாலும் serendipity[விழைவுள்ள நலம்சேர்க்கும் பொருள்களை மிகவும் தற்செயலாகச் சந்திக்கநேர்வது], synchronicism[ஒத்தகால இயல்பான நிகழ்வு/coincidence in time] ஆகியவை இன்றும் எல்லோர்க்கும் நிகழும் நிகழ்வுகள் அல்லவா என்று நான் கேட்டதற்கு, “அதெப்படி முடியும்?[எங்கள்] ஆண்டவர் தவிர, அவருடைய மகன் செய்யக்கூடியவைகூட அற்புதங்கள் என்பதை நம்பக் கூடாதவர்களாகிய எங்களுக்கு நீங்கள் முட்டாள்தனமாக நம்புவதை அதெப்படி ஏற்றுக்கொள்ள இயலும்?” என்ற மட்டையடி மறுமொழிதான் கிடைத்தது. அற்புதம்/miracle என்ற சொல்லுக்கு “ இயற்கையின் விதிகளை வைத்து விளக்க முடியாத நிகழ்வு” என்று மாக்மில்லன்(ப.907)சொல்லுகிறது. ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களும் 31.3.1934 அன்று நியூசிலாந்தில் ஆற்றிய சொற்பொழிவு ஒன்றில், அற்புத நிகழ்ச்சிகளை ஒருவர் தேடிப்போவது என்பது - அவர் உள்ளத்தில் திருப்தியும் நலமும் அன்பும் குறைந்துபோய்விட்டதைத்தான் காட்டுகிறது என்றார். பாஸ்கல் கூறினார்: “கோட்பாடுகளை மதிப்பிட அற்புதங்கள் நமக்கு உதவுகின்றன; அதேபோல அற்புதங்களை மதிப்பிட நமக்குக் கோட்பாடுகள் உதவுகிறன.”[Pascal, PENSEES. Translated by: W.F. Trotter] எனக்கென்னவோ இது சமநிலையான கருத்து என்று தோன்றுகிறது. இன்றைய மிகப்பெரிய மருத்துவமனைகளில் சேர்க்கப்பெற்று, மீண்டும் நாம் இல்லத்துக்குத் திரும்புகிறோமே அது அற்புதம் இல்லையா? நம்முடைய[அல்லது என்னுடைய] விநோதமாகச் செயல்படுகிற, பதினான்காம் நூற்றாண்டின் உரையாசிரியர் நுட்பமாக மொழிந்த “சில்வாழ்நாள்- பல்பிணி- சிற்றறிவு”டைய உடம்பை வைத்துக் கொண்டு இன்னும் எழுதிக் கொண்டும் சிந்தித்துக்கொண்டும் வாழ்கிற என் ஒவ்வோர் அன்றாடத்தின் ஒவ்வொரு கணமும் எனக்கு அற்புதமாகத்தான் தோன்றுகிறது.