24.7.06
அற்புதங்களுக்கான இன்றைய தேவை
வறட்டுத்தனமானவையும் காட்டுத்தனமானவையுமான சூழ்நிகழ்வுகளுக்கு நடுவில் நாம் வாழ்க்கைச் சதுரங்கத்தில் பெரும்பாலும் முட்டாள்தனமாக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.
அற்புதங்களுக்கான தேவை நிகழுலகில் மிகுந்து வரும் அதே நேரம், விரக்தியும் வெறுப்பும் சகமனிதர்பால் மட்டுமல்ல, தனிமனிதனுக்குத் தன்பாலேயே அவநம்பிக்கையோடு கைகோத்துக்கொண்டு, எந்த நேரத்திலும் தாக்குவதற்கு, வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும் - மூலைமுடுக்கிலும் முகம் மறைத்துப் பதுங்கிக்கொண்டு காத்திருக்கின்றன.
இன்றைய மனிதனுக்கு முன்னோர் வார்த்தைகளில் நம்பிக்கை மட்டுமல்ல, வார்த்தைகள் மேலேயே அக்கறை இல்லாமல் போய்விட்டது. பணக்கற்றைகளின் மேல்தான் நோக்கம் எல்லாம், பெண்களுக்கு அடுத்தவள்(ர்) அணிந்திருக்கும் நகைகளின்மேல் உள்ளது போல.
ஒன்றே ஒன்று முக்கியம். நம்புவது. முதலில் தன்னை. இதையே பெரியவர்களும் முன்னோர்களும் சொல்லிச் சென்றார்கள். திரு. வி. க. அவர்கள் தம் ‘உள்ளொளி’ நூலில் சொல்லியுள்ளவையும் பொய்கள் என்று கூசாமல் சொல்லுகிறார்கள். பலருக்கு இப்பொழுதெல்லாம் ‘அரசியல் உளச்சிக்கல்’ [political complexக்குச் சரியான எடுத்துக்காட்டு-- “தனக்கென்று பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்! எனக்கொரு மகன் பிறப்பான்- அவன் என்னைப் போலவே இருப்பான்” என்ற திரைப்பாட்டு]என்பதையும் மீறி தங்கள் ‘குரு,’ தங்கள் ‘ஆன்மீக இயக்கத்தின் நடத்துநர்கள்’ தங்களின் ஆன்மிகத் தலைவர் மறைந்துவிட்டாலும் அவர் எழுதி ‘அருளிய’ புத்தகம்[இன்னும் பல..] சொல்வது மட்டுமே வேதவாக்கு, பிற கருத்துகள் கூற்றுகள் எல்லாம் பிண்ணாக்கு என்ற அளவு போவதை வேதனையோடு பார்க்க- கேட்க- பக்கமிருந்து உணர வேண்டியுள்ளது. என் கையில் இருந்த நூலை அருவருப்புடன் பார்த்த, அதே நூலின் இன்னொரு வடிவத்தை நம்புகிற, அதே மதத்தின் வேறோர் உட்பிரிவுக்குச் ‘சாட்சி’யாய் இருக்கிற நண்பரொருவரை இக்கணம் நான் நினைவுகூரவேண்டியுள்ளது. தாம் தமிழராயிருந்தாலும் அதைச் சொல்லவே வெட்கப்பட்டு ஆங்கிலத்தில் பேசும் அவர், ஆங்கிலத்தில் miracles என்னும் அற்புதங்கள் அல்லாவிட்டாலும் serendipity[விழைவுள்ள நலம்சேர்க்கும் பொருள்களை மிகவும் தற்செயலாகச் சந்திக்கநேர்வது], synchronicism[ஒத்தகால இயல்பான நிகழ்வு/coincidence in time] ஆகியவை இன்றும் எல்லோர்க்கும் நிகழும் நிகழ்வுகள் அல்லவா என்று நான் கேட்டதற்கு, “அதெப்படி முடியும்?[எங்கள்] ஆண்டவர் தவிர, அவருடைய மகன் செய்யக்கூடியவைகூட அற்புதங்கள் என்பதை நம்பக் கூடாதவர்களாகிய எங்களுக்கு நீங்கள் முட்டாள்தனமாக நம்புவதை அதெப்படி ஏற்றுக்கொள்ள இயலும்?” என்ற மட்டையடி மறுமொழிதான் கிடைத்தது.
அற்புதம்/miracle என்ற சொல்லுக்கு “ இயற்கையின் விதிகளை வைத்து விளக்க முடியாத நிகழ்வு” என்று மாக்மில்லன்(ப.907)சொல்லுகிறது.
ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களும் 31.3.1934 அன்று நியூசிலாந்தில் ஆற்றிய சொற்பொழிவு ஒன்றில், அற்புத நிகழ்ச்சிகளை ஒருவர் தேடிப்போவது என்பது - அவர் உள்ளத்தில் திருப்தியும் நலமும் அன்பும் குறைந்துபோய்விட்டதைத்தான் காட்டுகிறது என்றார்.
பாஸ்கல் கூறினார்: “கோட்பாடுகளை மதிப்பிட அற்புதங்கள் நமக்கு உதவுகின்றன; அதேபோல அற்புதங்களை மதிப்பிட நமக்குக் கோட்பாடுகள் உதவுகிறன.”[Pascal, PENSEES. Translated by: W.F. Trotter] எனக்கென்னவோ இது சமநிலையான கருத்து என்று தோன்றுகிறது.
இன்றைய மிகப்பெரிய மருத்துவமனைகளில் சேர்க்கப்பெற்று, மீண்டும் நாம் இல்லத்துக்குத் திரும்புகிறோமே அது அற்புதம் இல்லையா?
நம்முடைய[அல்லது என்னுடைய] விநோதமாகச் செயல்படுகிற, பதினான்காம் நூற்றாண்டின் உரையாசிரியர் நுட்பமாக மொழிந்த “சில்வாழ்நாள்- பல்பிணி- சிற்றறிவு”டைய உடம்பை வைத்துக் கொண்டு இன்னும் எழுதிக் கொண்டும் சிந்தித்துக்கொண்டும் வாழ்கிற என் ஒவ்வோர் அன்றாடத்தின் ஒவ்வொரு கணமும் எனக்கு அற்புதமாகத்தான் தோன்றுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வாழ்கையே முட்கள் நிறைந்தது தான்... அதில் காட்டுத்தனமான வாழ்க்கை வாழத்தான் அய்யா வேண்டும்.
தங்களின் மறுமொழி சரியானதுதான்.
தழும்புகள் மிக்க ஆழ்மனத்துக்கு நானும் சொந்தக்காரன்தான்.
-தேவமைந்தன்
Post a Comment