31.8.12

பாவலர் தாராபாரதி

வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்...தோல்விகள் ஏதும் உனக்கில்லை - இனித்
தொடுவானம்தான் உன் எல்லை!
-
தாரா பாரதி

படத்துக்கு நன்றி:  palakani.com

பண்டிதை கண்ணம்மாள் அவர்கள்

பண்டிதை கண்ணம்மாள். 14 வயதில் 23வயது மா.இராசமாணிக்கனாரை மணம்புரிந்து வாழ்வாங்கு வாழ்ந்து பெருங்குடும்பியாக இருந்தபோதும் அக்காலத்தில் பெறக்கடினமான 'பண்டிதை' பட்டம் பெற்றவர்.(நன்றி: இரா.கலைக்கோவன். வரலாறு 21 ஆய்விதழ் 2011)

22.8.12

பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனம்,புதுச்சேரி(Institut Francais de Pondichery)

என் முதல் கோயில் தாகூர் கலைக் கல்லூரி என்றால், இரண்டாம் கோயில் புதுச்சேரியிலுள்ள பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனமும் அதில் உள்ள நூலகமும்தான். இங்குதான் அரிய தமிழ் நூல்களை வாசித்திருக்கிறேன். அக்காலத்தில் நூற்கடல் தி.வே.கோபாலய்யர் முதல் இக்காலத்தில் வில்லியனூர் வரலாற்று ஆய்வாளர் வேங்கடேசனார் வரை சந்தித்து உடன் அமர்ந்து வாசிப்பதும் குறிப்பெடுப்பதுமாக உள்ளேன். பழைய திண்ணை.காம் வலையேட்டில், 'தேவமைந்தன்' என்ற என் புனைபெயரில் எழுதிய, பாராட்டுப்பெற்ற அத்தனைக் கட்டுரைகளுக்கும் இப்பொழுது முகநூலில் 'அண்ணன் பசுபதி' பக்கத்தில் இடம்பெற்ற 'பண்டிதை கண்ணம்மாள்' வரையுள்ள குறிப்புகளுக்கும் தரவு கொடுத்துதவியது இந்த நிறுவனத்தின் நூலகமேஇங்கு இணையம் கூடிய கணினி ஏந்து உள்ளமை என்னைப்போன்ற இணைய வலையேட்டெழுத்தாளர்களுக்கு அரிய பேறேயாகும். முகஞ் சுளிக்காமல் எப்பொழுதும் அன்புடன் உதவுகிற நூலக நண்பர்கள் - சூழலியல் நூலகர் திரு ஜி. சரவணனும்(Facebook Public ID: Saravanan Govindaraj) சமூக அறிவியல்கள் நூலகர் திரு கே. இராமானுஜமும் ஆவர். இந்தியவியல் நூலகர் திரு ஆர். நரேந்திரனும் முதன்மை நூலகர் செல்வி அனுரூபா நாயக் அவர்களும் இங்கே குறிப்பிடத் தக்கவர்கள். பிரெஞ்சு இந்தியவியல் ஆய்வாளரும் நூலறிஞருமான திரு கண்ணன், தோற்றத்தில் மிகுந்த இயல்பானவர்; அறிவில் ஆழம் மிகுந்தவர். தன்னை எனக்கு அறிமுகம் செய்து வைத்த, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு நடுவத்தின் பிரெஞ்சுப் பேராசிரியரும் நண்பருமான முனைவர் சு.ஆ.வெங்கடேச சுப்புராய நாயகருடன் பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கேற்று புதுச்சேரிப் பழமொழிகள் குறித்த ஆய்வுரையை ஆங்கிலத்தில் வாசிக்க வைத்து, அதற்கான பெருந்தொகுப்பில் அதை வெளியிடவும் செய்தவர். சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு பெருமைக்குரியது இந்தப் பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனமும் இதன் நூலகமும்.

2.8.12

வள்ளலார் சினம்: பின்புலங்கள் (பேரா.முனைவர் இரா.செல்வக்கணபதி கட்டுரைப்பகுதி)

ஏறத்தாழ ஐம்பது ஆண்டுக்கால வள்ளலார் வாழ்வில், கடைசிப் பதினைந்து ஆண்டுகளில் மாற்றங்கள் தோன்றியுள்ளன. அவர் பாடிய ஆறாம் திருமுறைப் பாடல்களுள் பல, அவரது முன்னைய கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் எதிராக அமைந்தன. சைவ சமயம் வெளிப்படுத்திய உயர்கொள்கை வழி வாழாது, அவற்றுக்கு முரணாக வாழ்ந்த சைவமக்கள் மீது அவர் சினம் கொண்டார். சைவத்தில் சில உயர்சாதிக்காரர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதையும், சைவக் குருக்கள்மார்களும், ஆதீனத் தலைவர்களும், உண்மைச் சைவர்களையும் சாதிவழி மதிப்பிட்டு, மரியாதை வழங்கியதும் அவரைச் சினமடைய வைத்திருக்க வேண்டும். அன்புச் சமயமாகிய சைவத்தில், கடவுள் பெயரால், சிறு தெய்வங்களுக்கு நிகழ்த்தப்பட்டு வந்த உயிர்ப்பலிகளை அவர் வெறுத்தார். புலால் உண்பார் சிவநெறி நிற்பது எங்ஙனம் சாலும் என வினா எழுப்பினார். வாழ்வின் கடைசிப் பகுதியில் சைவத்தைச் சீர்திருத்தும் எண்ணம் செழிக்க மூன்று புதிய அமைப்புகளை உருவாக்கினார்.
     1865-இல் சமரச சன்மார்க்க சங்கம்
     1867-இல் சத்திய தருமச் சாலை
     1872-இல் சத்திய ஞான சபை
என்பன அவரால் உருவாக்கி வைக்கப்பெற்று, நெறிமுறைகளும் அறிவிக்கப் பெற்றன.
[நன்றி: வள்ளலார் கண்ட சாகாக்கலை. கலை 6. வள்ளலார் ஆண்டு – 189/ஆடி/ஜூலை-15-2012 / ஒழுக்கம்-07 பக்கங்கள் 21-22. நன்றி: கடவுள்மங்கல விழாமலர், வடக்குப் பொய்கை நல்லூர்.]