8.4.12

ஆடு மேய்க்கலாம் - - ம.இலெ. தங்கப்பா


ஆடு மேய்க்கலாம் - வாடா
ஆடு மேய்க்கலாம்
கேடு செய்திடும் - கல்விக்
கிடங்கை விட்டு வா (ஆடு மேய்க்கலாம்)

ஒரு படித்தவன் மக்கட்கு
உழைக்கவில்லையே!
வருவதியாவையும் - போட்டான்
வயிற்றில் கொள்ளையே! (ஆடு மேய்க்கலாம்)

பாதி மாந்தர்கள் - ஐயோ,
பசியில் சாகிறார்.
ஏது செய்கிறார் - தம்பீ
இங்குக் கற்றவர்? (ஆடு மேய்க்கலாம்)

பொருளை நாடுவர் - பேயாய்ப்
போட்டி போடுவார்
பெரிய கல்வியர் - தாமே
பிழைகள் செய்கிறார் (ஆடு மேய்க்கலாம்)

கல்வி என்று போய் - நெஞ்சைக்
கறைப் படுத்தலின்,
புல் நிலங்களில் - தம்பி
புரள்தல் இன்பமே! (ஆடு மேய்க்கலாம்)

கற்ற பேர்களே - நெஞ்சின்
கனிவு மாறினர்
முற்றும் தன்னலம் - தன்னில்
மூழ்கிப் போயினர். (ஆடு மேய்க்கலாம்)

அன்பு செய்திடக் - கல்வி
அறிவு தேவையா?
பண்பில் மேம்பட - எழுத்துப்
படிப்பும் வேண்டுமா? (ஆடு மேய்க்கலாம்)

*** *** **
பாடல் இடம்பெற்ற இதழ்: நற்றமிழ், 12:1, தி.ஆ. 2043 கும்பம்(13-02-2012). பக்கம் 2. விலை: உரூ. 6-00.

நன்றி: ‘நற்றமிழ்’ - திங்களிதழ்,
43, அங்காடித் தெரு,
நெல்லித்தோப்பு,
புதுச்சேரி - 605 005
இந்தியா.

நிறுவுநர்: தமிழ்மாமணி புலவர் மு. இறைவிழியனார்
ஆசிரியர்: திருவாட்டி அரியநாயகி இறைவிழியனார்
பேசி: 0413 2266543, 9442608271.

Thanks for Image: davidsanger.com