10.9.09

‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்னும் ஆராய்ச்சி - தேவமைந்தன்

புதுச்சேரியில் உள்ள இலக்கியப்பொழில் இலக்கிய மன்றம் என்னும் அமைப்பு, ‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்ற தலைப்பிலான முனைவர் அ. கனகராசு அவர்களின் ஆய்வை வெளியிட்டிருக்கிறது. முனைவர் அ. கனகராசு, புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறையிலுள்ள தமிழ் வளர்ச்சிச் சிறகத்தின் ஆராய்ச்சி உதவியாளர். அம்பா பாடல் அமைப்பியல் ஆய்வு, பாரதிதாசன் குயில் அடைவு, புதுச்சேரி மாநில நாட்டுப்புற விடுகதைகள் காட்டும் மக்கள் வாழ்வியல் முதலான இவர்தம் ஆய்வுநூல்கள் வெளியாகியுள்ளன. திண்ணை.காம் வலையேட்டில், இவருடைய ‘புதுச்சேரி மாநில நாட்டுப்புற விடுகதைகள் காட்டும் மக்கள் வாழ்வியல்’ தொடர்பாக நான் எழுதிய கருத்துரை, ‘தமிழர் கருத்துக் கருவூலம்’ என்ற தலைப்பில் வெளியானது. ‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்ற இந்தப் புத்தகத்தில் உள்ள குறிப்பிடத்தக்க செய்திகள் பின்வருமாறு: ஆட்சித்தமிழ் தொடர்பாக நடுவணரசும் தமிழ்நாட்டு அரசும் புதுச்சேரி அரசும் 1965 முதல் அவ்வப்பொழுது வெளிப்படுத்திய முதன்மையான அரசாணைகளும் அறிவிக்கைகளும் சுற்றறிக்கைகளும் இந்தப் புத்தகத்தில் தரப்பெற்றுள்ளதால், ஆட்சிமொழியாகத் தமிழ் வீற்றிருக்க என்னதான் அரசியலார் முயன்றிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எளிதாகக் கிடைத்திருக்கிறது. இத்தகைய நெறியில் தமிழக அரசு வெளியிட்ட ஆணைகள் எண்பத்தெட்டை நாம் இதில் வாசித்து அறியலாம். மாநிலத்தின் ஆட்சிமொழியாக எல்லாவகைகளிலும் தமிழே இருக்க வேண்டும் என்ற ‘1956ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்டம் (த.நா. சட்ட எண்: XXXIX/1956),’ “தீர்ப்புகள் - தீர்ப்பாணைகள் - ஆணைகள் ஆகியவற்றை எழுதுவதற்காகத் தமிழை நீதிமன்றமொழி என்று சொல்லியிருக்கிறது. இது ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே சட்டமாகியும் செயற்பாட்டுக்கு வர இயலாமல் போடப்பட்ட முட்டுக்கட்டைகள் குறித்து ஆராய்ந்து இன்னொரு தனிப் புத்தகத்தையே முனைவர் அ. கனகராசு எழுதலாம். அரசு ஊழியர்கள் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் (ஆணை (நிலை) எண்:1134 / நாள்: 21.6.1978). தங்கள் பெயருக்கு முன்னுள்ள தலைப்பெழுத்துக்களை (initials) தமிழிலேயே எழுத வேண்டும் (ஆணை (நிலை) எண்: 431 / நாள் 16.9.1998 [திருவள்ளுவராண்டு 2029, வெகுதான்ய, ஆவணி 31) முதலான பலவற்றை இந்த நூலால் எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. தமிழ் வளர்ச்சித் துறை என்பது என்ன? அதன் முதன்மையான பணிகள் எவை என்பனவற்றை விளக்கிய பின், இருபத்தொன்பது செயல் திட்டங்கள் தரப்பெற்றுள்ளன. “திராவிடப் பல்கலைக் கழகத்திற்குப் புதுச்சேரி அரசின் பங்களிப்பைச் செலுத்தித் தமிழாய்விற்கு வழிவகுத்தல்” என்பதும் அவற்றுள் ஒன்று. தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சிமுறை அட்டவணை(Administration Chart) ஒன்றும் தெளிவாகத் தரப் பெற்றுள்ளது. புதுச்சேரி சட்டப் பேரவையில் இது தொடர்பாக 1965இல் நடந்த அனல் பறக்கும் உரையாடல்களை (பக்.25 முதல் 46 வரை) தவறாமல் கொடுத்துள்ளார் நூலாசிரியர். ஜே.எம்.பெனுவா என்ற சட்டப் பேரவைச் செயலருடைய ஒப்பத்துடன் உள்ள பதிவு அது. இரு பகுதிகள்: “SRI. S. THILLAI KANAKARASU: இதிலே சுதந்திரா பார்ட்டி, டி.எம்.கே பார்ட்டி என்று சொன்னதற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. டி. எம்.கே. காரர்கள் தமிழ், தமிழ் என்று சொல்கிறார்கள், ஆனால் டி.எம்.கே. என்று சொல்லும்போது இங்கு வேறு மாதிரி ஓசை கேட்கிறது. இப்போது கேரளா ரெபெல் காங்கிரசைப்பற்றிச் சொன்னார்கள். ஆனால், அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. காரணம், பாண்டிச்சேரியில் சுதந்திரா பார்ட்டி இருப்பதாகத் தெரியவில்லை. எப்படியிருந்தாலும் தமிழை ஆட்சிமொழியாகக் கொண்டு வந்தது பற்றிச் சந்தோஷப்படுகிறேன். இதைக் காலம் கடத்தி அடுத்த செஷனுக்குக் கொண்டு வருவதால் நமக்கு நஷ்டம் ஏற்படுமே தவிர நலன் இருக்காது. எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் கொண்டுவருகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லதுதான் என்று சொல்லிக்கொண்டு, ஆட்சிமொழிச்சட்டமாகிய மசோதா எண் 10-ஐ ஆதரித்து என் பேச்சை முடித்துக்கொள்கிறேன்.” “SRI V. KAILASA SUBBIAH: ..... ஆங்கில மொழி நீடித்திருக்க வேண்டும் என்று சென்னையில் திராவிட முன்னேற்றக் கழகம் சொல்கிறது. ஆனால் இங்கு ஆங்கிலம் வருவதால் பிரெஞ்சு மொழி போய்விடும் என்று பிரெஞ்சு மொழிக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள். அங்கே ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்று சொல்கிறர்கள். ஆனால் இங்கே ஆங்கிலம் வருவதால் பிரெஞ்சு அழிந்து விடும், அழிந்துவிடும் என்று பேசுகிறார்கள். ஆகவே அவர்கள் இரண்டு நாக்குகளுடன் பேசுகிறார்கள் என்று கருத வேண்டும். இப்படிப்பட்ட ஒரு நிலை வருவதற்குக் காரணம், நம் பிரதேச மொழியான தமிழை வளர்க்கும் வகையில் இந்த நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதற்கொண்டு, சரியான முறையில் ஆட்சியிலுள்ளவர்கள் நடவடிக்கை எடுக்காததுதான் என்று நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இன்றும் ஆங்கில மொழி மீதும், பிரெஞ்சு மொழியின் மீதும் சிலருக்கு ஒரு மோகம் இருக்கிறது.” “1965 - ஆட்சிமொழிச் சட்டம் 1977 - பெயர்ப்பலகை ஆணை 1997 - தமிழில் ஒப்பமிடும் ஆணை அரசிதழைத் தமிழில் வெளியிடும் ஆணை 2006 - நடுவணரசு பிறப்பித்த புதுச்சேரிப் பெயர்ச் சட்டம் ஆகிய அனைத்தையுமே ‘கண்டு கொள்ளாமல்’ அரசு பணியாற்றி வருவோர் இன்னும் உள்ளமைக்குக் காரணம், அவற்றை மீறுவோர்க்கு எந்தத் தண்டனையும் இல்லை என்பதே” என்று இரா. திருமுருகன் அவர்கள் குறிப்பிட்டிருப்பதுவும் முன்பகுதியில் உள்ளது. புலவர்கள் கீ. இராமலிங்கனார் முதலானோரும்; முனைவர்கள் திருமுருகன், அறிவுநம்பி, சுதர்சன், இராமமூர்த்தி, இறையரசன் முதலானோரும்; பாவலர்கள் காசி ஆனந்தன், தமிழமல்லன் முதலானோரும்; நீதித்துறைத் தலைவர்கள் தாவித் அன்னுசாமி முதலானோரும் இது தொடர்பாக எழுதியவற்றை உள்வாங்கிக் கொண்டு இந்த - பயனுள்ள ஆராய்ச்சியைச் செய்திருக்கிறார் நூலாசிரியர். ******** (ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும். பக்கங்கள் 228. விலை ரூ. 200.) தொடர்புக்கு: முனைவர் அ.கனகராசு, 3, அரவிந்தர் வீதி, பெசண்ட் நகர், குறிஞ்சி நகர் விரிவு, இலாசுப்பேட்டை அ.நி., புதுச்சேரி - 605008. தொ.பே. 0413 2256647 *** நன்றி: திண்ணை.காம்

No comments: