19.9.06

ஒரு மனிதரின் வாழ்க்கை - தேவமைந்தன்

"குன்றின்மேல் இட்ட விளக்காக,பரவலாக, ஊடகங்களாலும் விளம்பரங்களாலும் புகழ்பெற்றவர்களின் வாழ்க்கையை அறிவதோடு மட்டும் திருப்தி அடைவதைவிடவும் மேலானது, ஆடம்பரம் இல்லாமல் அகல் விளக்காக வாழ்ந்து, சாதித்து மறைந்த சான்றோர்களின் வாழ்க்கை வரலாறுகளை அறிதல்..." - டேவிட் லிண்ட்சே(David Lindsey) இலண்டன் மிஷன் ஸ்கூலின் மெட்ரிகுலேஷன் தேர்வில், ஆங்கிலப் பாடத்தில் ஒரே ஒரு மதிப்பெண் குறைந்ததால் தோல்வியுற்ற ஆத்திரம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள சங்கராபுரத்தில் பிறந்து வளர்ந்து கோவையில் படித்த கறுப்பண்ணனை, யாரிடமும் சொல்லாமல் சென்னைக்கு இரயிலேறி ஓடி, அங்கே ஹார்பரில் நங்கூரம் விலக்கிக் கொண்டிருந்த கப்பலொன்றில், அது எங்கு சற்று நேரத்தில் பயணம் ஆகப்போகிறது என்றே தெரியாமல், ஒளிந்துகொள்ளச் செய்தது.இன்று அந்நிகழ்ச்சி நடந்திருந்தால் அது வேறு கதை. ஆனால் அது நடந்தது, சற்றேறக் குறைய, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்துப் பத்துகளில் என்பதால், மனிதாபிமானத்தோடு வாழ்ந்த ஆங்கிலேயக் கேப்டன் ஒருவரால் கறுப்பண்ணனின் வாழ்க்கை ஆரோக்கியமாகத் திசை திரும்பியது. அவன் ஒளிந்திருந்த இடம் அந்தக் கேப்டனின் அறைக்குப் பக்கத்தில்தான் இருந்தது. வளர்த்துவானேன்?'அந்தக் காலத்து மெட்ரிக் ஆங்கிலத்தில்' கறுப்பண்ணன் சொன்ன விவரமெல்லாம் கேட்டறிந்த கேப்டன், கறுப்பண்ணனைத் தன்னுடன் இருக்கச் செய்து ஆங்கிலத்திலும் அந்தக் கப்பல் ஏற்றிருந்த "மெர்குயி டின் ட்ரேடிங் கம்பெனி' வியாபாரத்திலும் பயிற்சி கொடுக்கத் தீர்மானித்த சில மணி நேரங்களில் 'பம்பஃஹ்' என்று சிலமுறை ஆரவாரித்தவாறு அந்தக் கப்பல் புறப்பட்டுவிட்டது.சில காலம் அந்தக் கேப்டனின் அன்பிலும் கண்டிப்பான பயிற்சியிலும் நனைந்து காய்ந்த கறுப்பண்ணனுக்கு, அந்த ஆங்கிலேயன் தொடர்பால் மூன்று கருத்துகள் உள்ளத்தின் ஆழத்தில் சென்று தைத்துக் கொண்டு விட்டன; கடைசிவரை அங்கேயே தங்கவும் தங்கி விட்டன.முதலாவது, சாதிப்பெயரைத் தன் பெயருடனோ அல்லது தன் பெயராகவோ வைத்துக்கொள்ளக் கூடாது. இரண்டாவது, குருதியைத் தெளிப்பதுபோல் எக்காலத்திலும் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு எச்சிலைத் தரையில் உமிழக் கூடாது. மூன்றாவது, தன்பெயரில் அறிந்தோ அறியாமலோ நிறவெறி சார்ந்த அம்சம் நிலைபெறக் கூடாது.'கறுப்பு' என்பது தமிழ்நாட்டில் உள்ள கிராம தேவதை என்று அறிந்து கொள்ளாததாலோ, நிறவெறி நிரம்பித் ததும்பிக் கொண்டிருந்த அந்தக் காலத்திலும், தான் ஓர் ஆங்கிலேயன் - வெள்ளையன் என்ற வெறியில்லாமல் 'கறுப்பு' என்றால் கறுப்பினத்தவரையோ ஒடுக்கப்பட்டவர்களையோ குறிக்கும் என்று நினைத்துக் கொண்டதாலோ, அல்லது அதற்கு எதிர்மாறாகக் கறுப்பு நிறத்தைக் கறுப்பர்களின் அடையாளமாகக் கருதி உள்ளுக்குள் வெறுத்திருந்ததாலோ - அந்த ஆங்கிலேயர் மேற்படி மூன்றாவது உணர்வை உள்ளத்துள் விதைத்த விளைவாக, கறுப்பண்ணன் என்ற தன் பெயரை K.அண்ணன் என்று சுருக்கிக் கொண்டும் பெரியதம்பி என்ற தன் தந்தையின் பெயரைப் P என்ற தலைப்பெழுத்தாக முன்னிட்டுக் கொண்டும் P.K.அண்ணன் என்று மட்டும் தன் பெயரைப் பதிவு செய்து கொண்டார். [வளர்ந்துவிட்டார் அல்லவா? அதனால்..'ஆர்' விகுதி.] கப்பல் இங்கிலாந்தில் நங்கூரமிட்டபொழுது கேப்டன் உதவியுடன் பெயர்ப் பதிவு நிகழ்ந்தது.முதல் உலகப் போரின் பாதிப்புகள் ஐரோப்பாவை விட்டு நீங்காத காலம்...ஆண்டுகள் சில உருண்டோடின. பர்மாவில் கப்பல் நங்கூரமிட்டபின் பி.கே.அண்ணன் வாழ்வு மீண்டும் திசை மாறியது. முன்பு, சென்னையிலிருந்து வங்கக் கடலில் செல்லும் பொழுது. இப்பொழுது, வங்கக் கடல் வழியே பர்மாவுக்குச் சென்ற பொழுது. கேப்டன் விடை பெற்றுக் கொண்டு கடல்மேல் செல்ல, பர்மாவில் தங்கி, அங்கிருந்த 'மெர்குயி டின் ட்ரேடிங் கம்பெனி'யைக் கவனித்துக் கொண்டார். சில ஆண்டுகளில், தான் நண்பர்கள் சிலர் மூலம் கற்ற பின்னலாடை எந்திரங்களைப் பற்றிய அறிவைக் கொண்டு பர்மாவின் தலைநகரான ரங்கூனில் ஸ்பார்க்ஸ் சாலை 51ஆம் இலக்கமிட்ட - மரக்கட்டுமானமே பெரும்பாலுமான கட்டடத்தில் 'ஓரியண்டல் நிட்டிங் ஃபாக்டரி'’ என்ற பின்னலாடைத் தொழிலகத்தைத் தொடங்கினார். கோவையிலிருந்த தன் பெற்றோரையும் சகோதரர்களையும் ரங்கூனுக்கே அழைத்துக் கொண்டார். சகோதரர்களுக்குத் தன் ஃபாக்டரியில் பயிற்சி தந்து பின்னர் உரிய பொறுப்புக்களையும் தந்தார். அப்பொழுது, பிரிட்டன் பர்மாவை இந்தியாவின் ஒரு பகுதியாகக் கொண்டு ஆண்டுவந்தது. இவ்வாறு நிகழ்ந்த 1937ஆம் ஆண்டுவரை [அதே 1937இல் சுயாட்சியும், 1948இல் முழுச் சுதந்திரமும் பர்மா பெற்றது], கோவையிலிருந்து என்பதைவிடப் பெரும்பான்மையாகச் செட்டிநாட்டுப் பகுதிகளிலிருந்தும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலிருந்தும் பர்மாவுக்குத் தமிழர்கள் பலர் சென்று அங்கேயே தொழில்கள், வணிகமுறைகள் பலவற்றைச் செய்து வளமாக வாழ்ந்தனர்.தான் நிறுவிய பின்னலாடைத் தொழிலகத்தில், தன் உடன் பிறந்தாருக்கு மட்டுமல்ல உள்ளூர்க்காரர்களான பர்மாக்காரர்களுக்கு முதன்மையான வேலைகள் தந்ததாலும், பர்மியர்களுடனும் அங்கு வாழ்ந்த சீனர்களுடனும் ஒன்றுபட்டுக் கலந்து வாழ்ந்ததாலும் பி.கே. அண்ணன் அவர்களை அவர்கள் மிகவும் நேசித்தார்கள். அதற்கு ஓர் அடையாளம், இத்தனை ஆண்டுகள் கழித்த பின்பும், உள்ளது. புதுச்சேரியில்... பி.கே.அண்ணன் அவர்களின் கடைசி மகனின் வழிப் பேரனார் இல்லத்தில். தேக்கில் செய்யப்பெற்ற திருக்கோயில். மேலே உள்ள மூன்று கும்பங்களையும், நடுவில் உள்ள நான்கு தூண்களையும், தளத்தையும், அடித்தளத்தையும் எளிதாகக் கழற்றி விடலாம்; மீண்டும் பூட்டிக் கொள்ளலாம். நல்ல கனம். ஐராவதி என்ற கப்பலில், இரண்டாம் உலகப் போரின் இறுதியில், ரங்கூன் பி.கே.அண்ணார் [அச்சமயத்தில் அப்படி அழைக்கப்பெற்றார்] அவர்களுடைய குடும்பத்தாருக்குத் துணையாக அந்தக் கோயிலும் சென்னைக்கும், பின் கோவைக்கும் வந்தது. பின்னர், இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் புதுவைக்கும், அடுத்து ஐந்தாண்டுகளுக்குப் பின் காரைக்காலுக்கும், அடுத்தடுத்து ராஜயோகி ரங்கூன் பி.கே. அண்ணாரும் அவர் துணைவியார் தெய்வானை அம்மாள் அவர்களும் 1988ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் சமாதி எய்திய பின்னர் புதுச்சேரிக்கும் துணையாகச் சென்றது. அது தேக்கினால் ஆனது மட்டுமன்று. நல்லதொரு சீன மனிதரின் கலைத் திறனால் ஆனது. புதுச்சேரியில் ஆனந்தாசிரமத்தின் நிறுவனரும் தலைமை யோகியுமான கீதானந்தா அவர்களால் 1970ஆம் ஆண்டில் ‘ராஜயோகி’ என்ற சிறப்புத் தலைப்பு வழங்கிக் கெளரவிக்கப் பெற்றார். இதற்கும் இவர் துணைவியார் சிவதீட்சை பெற்று நாற்பத்தாறு ஆண்டுகள் நியமமான வாழ்க்கை வாழ்ந்தமைக்கும் அருணாசல சுவாமிகள் என்ற துறவியாரே காரணம். வேடிக்கை என்னவென்றால், இவர் வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்புமுனையிலும் உன்னதமும் சத்தியமும் வாய்ந்த துறவியர் சிலர், இவரைத் தளராமல் பார்த்துக் கொண்டு வழிநடத்தியதும்தான். இதற்குச் சரியானதொரு சான்று:இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில், ஜப்பான் நாடு தன் இராணுவ பலத்தால் அமெரிக்காவையும் அஞ்ச வைத்துக் கொண்டிருந்த காலகட்டம். பர்மாவில் நுழைந்து அட்டகாசம் செய்த ஜப்பான் படைகள், ரங்கூனுக்குள்ளும் புகுந்து சூறையாடின. அங்கே வளமாக வாழ்ந்த தமிழர்களும் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆட்பட்டனர். பானைச்சோற்றுக்கொரு பதமாக, ரங்கூன் பி.கே.அண்ணார் தொடர்பாக நிகழ்ந்த சூறையாடலைப் பார்ப்போம்.மற்ற தமிழர்களைப் போல, தன் குடும்பத்தார் அனைவரையும் சீனக் கலைஞர் செய்து தந்த தேக்குக் கோயிலையும் கப்பலேற்றித் தாயகத்துக்கு அனுப்பியபின் ஒருநாள் காலை... ஜப்பான் இராணுவம், ரங்கூனுக்குள் புகுந்து சூறையாடத் தொடங்கிய நேரம். ஜப்பான் இராணுவத்தினர் சிலர், இவர் வீட்டுக் காம்பவுண்டுக் கதவுகளை அதிரடியாகப் பெயர்த்துக் கொண்டு வந்தனர். இவரை அழைத்து, இவர் பார்க்கப் பார்க்க, ஷெட்டில் நின்று கொண்டிருந்த - இவருடைய - தட்டெழுதும் வசதி சேர்ந்த [இன்று கார் ஸ்டீரியோ வசதி போல] ஆர்ம்ஸ்ட்ராங் சிட்னி என்ற அந்தக் காலச் சொகுசுக்காரையும் போர்ட் காரையும் வெடிகுண்டு வீசித் தகர்த்து விட்டு - "இனியும் நீங்கள் தாமதித்து இங்கிருந்தால், உங்களுக்கும் இதே கதி நிச்சயம். நாளைக்கு வருவோம்!" என்று எச்சரித்துப் போய்விட்டார்கள்.நல்ல வேளை. குடும்பத்தார் நிம்மதியாகக் கப்பலில் போய்க் கொண்டிருக்கிறார்கள்... இவருக்கு அந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் சிறந்த நண்பர்கள் இருந்தனர். அவர்களைத் தொடர்பு கொள்ள இவர் போன வழியில் அவர்களே நடைப் பயணமாக, எதுவும் கைகளில் எடுத்துக் கொள்ளாமல், சிரபுஞ்சி வழியாகவும் இந்தியாவின் வடகிழக்கு வாயில் வழியாகவும் தாயகத்துக்கே திரும்பும் நோக்கத்துடன் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுடன் ரங்கூன் பி.கே.அண்ணாரும் நடைப்பயணம் தொடங்கினார். வழியில் 'ஸ்டேட் எக்ஸ்பிரஸ்' சிகரெட் டின்கள் இரண்டில் ஒன்றில் அரிசியும் இன்னொன்றில் உப்பும் தாங்கி நடந்து தின்று உயிர்சுமந்து வந்த போராட்டத்தில், பிழைத்தவர்கள் சிலரே.இந்தியாவுக்குள் நுழைந்து விட்டபின், மற்றவர்களைப் போல உடனே தென்னகம் திரும்பாமல் ரிஷிகேசத்தில் உள்ள சுவாமி சிவானந்தர் குடீரம் என்னும் குடிலில் ஒரு மாதத்துக்குமேல் தங்கி உள்ளத்தைத் தெளிவாக்கிக் கொண்டார். மாலையிட்டு வழிபடப்பெற்றுக் கொண்டிருந்த தன் படம் இருந்ததும்; கோவை செல்வபுரத்தில் தன் குடும்பத்தார் வாழ்ந்திருந்ததும் ஆன வீட்டுக்கு அவர் போய்ச் சேர்ந்தபொழுது, அக்குடும்பத்தார் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை ஊகிக்கக் கூட முடியாது.அப்புறமும் தன் குடும்பத்தார் நலத்துக்காக, எழுபத்திரண்டு வயது வரை உழைத்தார். பழைய செல்வ வாழ்க்கை தன்னை விட்டுப் போனபின்பும் மனம் தளராமல் 27 இஞ்ச் பிலிப்ஸ் சைக்கிளில் வேலைக்குச் சென்றதோடு, தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கும் தொடர்ந்து சென்றுவந்தவரை மதித்துப் பாராட்டியவர்கள் - தமிழ்வாணன் முதல் ஆன்மீகப் பேச்சாளர் நா.கிரிதாரி பிரசாத் வரை பலர். இதைவிடவும் வியப்பானது, எந்த பர்மாவிலிருந்து தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடந்து வந்தாரோ, அதே நாட்டுக்குத் தன் இரண்டாம் மகனார் திரு ஏ.கே. மூர்த்தியும் அடுத்தவர் திரு சிவப்பிரகாசமும் (மீண்டும்) பர்மாவுக்குச் சென்றபொழுது ஊக்குவித்தார். அவர் எண்ணம் போலவே, அவ்விருவரும் மிகவும் சிறப்பாக பர்மாவில் வாழ்ந்தனர். தமிழ்வாணன் தன் 'கல்கண்டு' இதழில் பர்மா ஏ.கே. மூர்த்தி அவர்களின் முயற்சிமிக்க அரிய வாழ்வைப் பற்றி விரிவாக (Profile) எழுதிப் பாராட்டினார்.இன்னும் சொல்ல எத்தனையோ உண்டு, இராஜயோகியாகத் தன் தொண்ணூற்றாறு வயதில் காரைக்காலில் பச்சூரில் ஒடுக்கமான பி.கே.அண்ணார் வாழ்க்கையில்.குன்றின்மேல் இட்ட விளக்காக,பரவலாக, ஊடகங்களாலும் விளம்பரங்களாலும் புகழ்பெற்றவர்களின் வாழ்க்கையை அறிவதோடு மட்டும் திருப்தி அடைவதைவிடவும் மேலானது, ஆடம்பரம் இல்லாமல் அகல் விளக்காக வாழ்ந்து, சாதித்து மறைந்த சான்றோர்களின் வாழ்க்கை வரலாறுகளை அறிதல்.அறிவோம். வாழ்வோம்.

No comments: