5.9.06
பெண்ணின் உள்மன வெளிப்பாடு 2006இலும் 1984இலும்
-தேவமைந்தன்
பெண்ணின் உள்மன உளைச்சல்கள் வெளிப்படுவதில் நிகழ்நிலையும் இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முந்திய இறப்புநிலையும் ஒன்றாகவே இருப்பதை, தற்செயலாக என் குறிப்பேடுகளைப் புரட்டும்பொழுது கண்டு வியந்தேன்.
இன்றைய நிலைக்கு, இந்தக் கட்டுரையில், மாலதி மைத்ரி முதலான வெளிப்படையாகப் பெண்ணியத்தை அதன் கோட்பாட்டு அடிப்படையில் பின்பற்றுவோர் அல்லாமல் இதழ்களிலும் நூல்களிலும் அமைதியாய்ப் பெண்மன உளைச்சல்களை வெளிப்படுத்தும் 22 ஆண்டு இடைவெளியிலான கவிஞர் இருவரை வகைமாதிரிகளாகக் கொண்டிருக்கிறேன். இன்னொரு காரணம், அவர்களை எனக்குத் தெரியாது. தெரிந்து மதிப்பிடுவதில் பொய்ம்மை புகுந்துவிடும்.
சரி, கோட்பாடு அடிப்படையில் பெண்ணியம் பற்றி இன்று நவிலப்பட்டு வரும் விளக்கத்துக்கும் கலைச்சொல் அடிப்படையில் அகராதியில் - ‘பெண்ணியக் கலைச்சொல் விளக்கக் கையேடு’ (அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம், நவம்பர் 1992) - உள்ள விளக்கத்துக்கும் பெருத்த வேறுபாடு உண்டு.
“இலத்தீன் மொழியில் பெண் என்று பொருள் தரும் ‘பெமினா’ என்ற சொல்லிலிருந்து பெண்ணியம் என்ற சொல் வந்தது......1890 வரையில் பெண்ணியம் என்பதைக் குறிக்க மகளியம் என்ற (womanism) சொல்லே பயன்படுத்தப்பட்டு வந்தது. 1895ஆம் வருடம் ஏப்ரல் 27ஆம் நாளன்று வெளியிட்ட அத்தீனா என்ற கிரேக்கப் பெண் தெய்வக் கோயில் என்ற நூலில் ஆலிஸ் ரோசி என்பவர் மேலே குறிப்பிட்ட பெண்ணியம் என்ற சொல்லை மகளியம் என்ற சொல்லுக்கு மாற்றுச் சொல்லாகப் பயன்படுத்தினார். பெண் சமத்துவம் வேண்டிப் போராடும் பெண் இயக்கங்களையும் செயல்பாடுகளையும் இச்சொல் குறிக்கும்.” (மேலது, பக்.26-27)
இன்று, பெண்ணின் அகமன உளைச்சல்களை மட்டும் புலப்படுத்துவது மிதவாதப் பெண்ணியம் என்றும்; பெண்ணின், இதுவரை மறைத்துவைக்குமாறு ஆணாதிக்கத்தால் மேலாண்மை(prompt) செய்தும் நிர்பந்தித்தும் மறைத்துவைக்கப்பட்ட உடல் உளைச்சல் உண்மைகளைத் தம் படைப்புகள் வழியாக அணிகள்(figurative)வேயாமல் புலப்படுத்துவதும்; ஆணுடல் போலவே பெண்ணுடலும் அத்தனை அமைதிக்கும் ஓய்வுக்கும் ஆரோக்கியத்துக்கும் பேணப்படுதலுக்கும் உடலியல் ரீதியில் ஒரேமாதிரியான தேவை உடையதுதான் என்பதை ஓயாமல் வெளிப்படுத்துவதுமே உண்மையான பெண்ணியம் என்று வரையறுக்கப்பெற்றுள்ளது.
1984ஆம் ஆண்டு நர்மதா பிரசுரம் வெளியிட்ட ‘உன் தோழமையின் இருப்பில்’ என்ற தலைப்பிலுள்ள தேவகி அவர்களின் கவிதை ஒன்றைப் பார்ப்போம்.
சாத்தியம்
-தேவகி
உனக்கு உன்னைப்
பார்த்து
உனக்குள் உன்னைத்
தெரிந்தால் ---
உனக்கு என்னைப்
பார்க்கவும்
எனக்குள் என்னையும்
தெரியும்.
உனக்கு உன்மதிப்பு
உள்ளபடி
புரிந்தால்
உனக்கு என் மதிப்பும்
உள்ளபடி
புரியும்.
உனக்கு என்னோடு
உன் ‘நான்’ தள்ளி
வாழ முடிந்தால்
எனக்கும் உன்னோடு
என் ‘நான்’ எடுத்து
வாழ முடியும்.
‘பெண்ணியம்’ ஆகஸ்ட் 2006 இதழில் (ப.25) தி. கமலி அவர்களின் ‘தேடல்,’ கற்பிதம்,’ ‘அடையாளம்,’ ‘புரிதல்’ ஆகிய நான்கு கவிதைகள் வெளிவந்துள்ளன. அவற்றுள் கடைசியான ‘புரிதல்’ என்பதில் தி.கமலி மொழிகிறார்:
எனக்குப் புரியாத நீயும்
உனக்குப் புரியாத நானும்
எல்லாவிதப் புரிதல்களோடும்
வாழ முயற்சித்தல்
எங்ஙனம்
சாத்தியப்படும்?
பிரஞ்சுக் கவி லரி த்ராம்ப்ளே அவர்களின் ‘உறங்காத உள்மனது’ - என்ற நிறுத்தல் குறிகளே இல்லாத - நெடுங்கவிதைநூல் பற்றித் ‘திண்ணை’யில் ஏற்கெனவே தெரியப்படுத்தியுள்ளேன். அதன் உணர்த்தல் உத்தி [“மென்மையாக, ஆனால், ஆகவும் அழுத்தந்திருத்தமாகப் பெண்மனத்தின் உள்ளாழத்தை உணர்த்தல்”] இவ்விருவர் கவிதைகளிலும் இருபத்திரண்டு ஆண்டு இடைவெளியிலும் பதிந்திருப்பது கண்டு வியந்து போனேன். ‘காலம், நாடு என்னும் இடைவெளிகள் கவிஞர்களுக்கு இடையில் இல்லை’ என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
நன்றி: திண்ணை.காம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment