16.10.05
'சுந்தரி'(1917) சமூக நாவல் காட்டும் வ.ரா.'வின் பின்னணி
'சுந்தரி' என்ற சமூக நாவலை வ.ரா. அவர்கள் 1917-ஆம் ஆண்டு படைத்தார். ஆனால், 'அந்தரப் பிழைப்பு' என்ற மறுபெயரோடுதான் அந்த நாள்களில் அது அவராலேயே வெளியிடப்பெற்றிருக்கிறது. காரணம், அவர் வாழ்க்கையே அப்பொழுது அப்படித்தான் இருந்திருக்கிறது.
1910-ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு அவர் வந்தார். பாரதியாரையும் அரவிந்தரையும் சந்திக்கும் நோக்கத்தோடுதான் வந்தார். வந்தவர் அவர்களோடு தினமும் பழகி இருந்தார். 21/1/1914 ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்றுதான் புதுச்சேரியை விட்டு சென்னைக்குச் சென்றார். சரி..ஏன் வந்தார்? ஏன் நான்காண்டுகள் புதுவை வாழ்க்கை நிறையுமுன்பே போய்விட்டார்?
அவர் வார்த்தைகள்: "வாழ்க்கையில் யோகமும் வேதாந்தமும் பேசிக் கொண்டிருப்பது எனக்கு எப்பொழுதுமே பிடிப்பதில்லை. அற்புதங்களைச் செய்ய, ஆற்றல் பெற்றது அறிவு. மனிதனுடைய உணர்ச்சி வெள்ளமோ, கலைகளை வானில் முட்டும்படியாக, அவ்வளவு உயர்த்தக்கூடிய சக்தி படைத்தது. இவ்விரண்டு அருமையான சாதனங்கள் இருந்தும், தமிழன் ஜாதிக்கும் ஆங்கில சாம்ராஜ்யத்துக்கும் அடிமைப்பட்டிருப்பதைக்காண, என் கண் அப்பொழுதே கூசிற்று; இப்பொழுதும்(1942) கூசுகின்றது."
ஆனால், பின்னர் சொல்லுகிறார்" "புதுச்சேரியிலிருந்து வந்ததும்(சென்னை நுங்கம்பாக்கத்திலிருந்து 1942-இல் வ.ரா. எழுதிய குறிப்பு இது), நான் கண்டதெல்லாம் என் மனதை மிகவும் வாட்டி வதைத்தன."
அடுத்து, தன் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் திருப்பழனத்துக்கு மனச்சோர்வுடன் சென்ற சில மாதங்களில் இதயக் கோளாறு அடைந்தார்.
(ஆதாரம்: அல்லையன்ஸ் கம்பெனி வெளியிட்ட 'சுந்தரி' நாவலில் "சுந்தரியின் புனர் ஜனனம்" என்ற தலைப்பின்கீழ் வ.ரா. எழுதியவை)
1919-ஆம் ஆண்டு புதுச்சேரியை விட்டு பாரதியாரும் சென்றார். சென்ற இரண்டு ஆண்டுகளிலேயே அவர் இயற்கை எய்தியமை இங்கே ஒப்பிட்டு நோக்கத் தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment