2.10.05

என்னை எழுதும் அந்தக் கைக்கு......

என்னைத் தொடங்கிய நீ, எழுதிக் கொண்டிருக்கிறாய். என் அற்பத்தனங்கள் பொய்ம்மைகள் இருமுகங்களை முகமூடிகள் என்றொதுக்கவா, இல்லை கேடயங்கள் என்று உரிமை கொண்டாடவா? புலனில் பழுதுபட்ட அந்தப்பெண் அகவெளிச்சத்துடன் ஆகாசத்திலிருந்து இறங்கி வருகையில் அகத்தில் பழுதுபட்ட நான் புலன்முன் வெளிச்சத்துடன் தட்டுத் தடுமாறி மேலேற முயற்சி செய்கிறேன். மூளையில் மிகுதி சுமந்ததால் இதயம் பொக்கையாய் ஆயிற்று. நெம்புகோல் கவிதையும் செங்கோல் கவிதைகளும் அந்நியமாயின எனக்கு. மூக்கணாங்கயிறு மாட்டப்பெற்ற புலவர்களுக்கும் அந்நியமானேன் நான். எனக்கு நான் புறத்திலேயே மோதிக் கொள்வதால், பகைகள் எனக்குப் பரிதாபப்பட்டு வருந்தி ஒதுங்கிக் கொண்டன. ஒரு மர்மமான மாய முடிச்சு என் குரல்வளை இறுக்க, கனவிலும் தூக்கிலிடப் படுகிறேன். அந்த வல்லூறுக்கு இருக்கும் சுதர்மம் எனக்குப் புரியவில்லை. ஆடுகளோடு ஆடாகி, கறிகாய் வெட்டுபவரைக் கண்டாலும் என் மனது பதைக்கிறது. என்னைச் சார்ந்தோர் விரலில் புண்பட்டாலும் நெஞ்சில் குருதி வடிக்கும் 'அடியேன்' அயலார் கண்ணில் புண்பட்டு அழுது துடித்தாலும் மெளனஞானம் பூணுகிறேன். பாராட்டுப் பிச்சைக்கு மடியேந்தத் தயங்காதவன், விளம்பரப் பிச்சைக்காரரை வெறுத்துப் பேசுகிறேன். நீ போடும் கணக்கொன்று. நான் போடும் கணக்கொன்று. தத்துவங்கள் ஒத்துவரா வாழ்க்கை.. ஆதாரங்களும் அசைக்கப் படுகையில் அச்சம் வந்து ஆசனத்தே அமர்கிறது. இருப்பது ஓர் இருக்கை. ஒன்று,நீ அதில் உட்கார். இல்லையெனில் இருக்கையையே இல்லாமலாக்கு. நீ, எப்பொழுதுமே என் ஆண்டாளாகவும் ஆண்டானாகவும், நான், உன் அடிமையாகவும் மட்டுமே இருக்க வேண்டுமென்று சிலர் சொல்வதை நீயும் நம்புகிறாயா? நிபந்தனைகளின் பேரில் நான் வாழ்வதெனில், அழுதும் அரற்றியும் தொழுதும் தூமலர் தூவியும் உன்னை நான் வழிபட வேண்டுமெனில் உனக்கும் எனக்கும் உள்ள உறவின் இரகசியம் வெளிப்பட்டுவிட்டதா? நீ,என் நித்திய முதலாளி எனில், தொழிலாளியாகும் வாய்ப்பு உனக்கும் மறுக்கப்பட்டு விட்டதா? கேள்விகளாலேயே உன்னை இன்னும் எத்தனைக் காலம் அர்ச்சிப்பேன்? நீயின்றி நானில்லை எனில், என் செயல்களுக்கு மட்டும்தான் நான் பொறுப்பா? மஞ்சள் இலக்கியம் அசிங்கமெனில், நம்முறவுக்கு விளக்கமும் விதிமுறைகளும் இடும் ஆபாச வியாபாரிகள் மட்டும் 'தத்துவ ஞானிக'ளா? வியாக்கியானச் சங்கிலிகளில் என்னை மாட்டி வைத்துச் சின்னங்களின் முட்களில் என்னைக் கீறி, சுண்டல் விநியோகத்துக்குக் காத்திருக்கவைக்கும் கல்நெஞ்சுப் பேர்வழியா நீ? நாற்ற வாய்களிலிருந்து வரும் போற்றி நாராசங்களை எவ்வாறு நீ செவிமடுக்கிறாய்? உண்மையிலேயே நீ பொற்கிழி தருமிக்கு அருளும் அளவு சமரசம் செய்து கொண்டாயா? வெளவால் நாற்றப் பிரகாரங்களுக்குள் இருட்டுக் குகைக்குள் எண்ணைய்ப் பிசுபிசுப்பில் உன்னால் கொலு வீற்றிருக்க முடிகிறதா? என்னாலேயே மூச்சுவிட முடியாத இத்தனைக் குப்பை குவியலிலா உன் திருநாமங்கள் ஆராதிக்கப்படுகின்றன? அதில்வேறு, ஓரிரு மொழியறிவுதான் உனக்கு உள்ளதாமே? பக்திக் கதைகளைப் படித்து, படித்தபின் உன்னிடம் எனக்கு பயமே மேலிடுகிறது. பசி பல்லாயிரம் பேரை எரிப்பதற்கும் உனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையாமே? வறுமை பலருக்குப் பரிசளிக்கப் படுவதற்கு நீ எந்தவிதப் பொறுப்பும் ஏற்க மாட்டாயாமே? இன்னும் எத்தனை எத்தனை அவதூறுகள் உன்னைப் பற்றி! உன் அடையாளங்களை நீ காட்டாத பொழுதே உன்னை அரைநிர்வாண ஓவியமாக்கிய இந்தப் பேர்வழிகளின் உபதேசங்களையும் நானேற்கத்தான் இரண்டு காதுகளை எனக்குத் தந்தாயாமே? அதென்ன,எனக்கு நீ எந்தச் சொல்லையும் அனுப்பிவைக்காமல் இந்த அயோக்கியர்களுக்கு மட்டும் அடிக்கடி 'டெலிஃபோன்' செய்கிறாய்? தர்மங்களை அதர்மவாதிகள் பேசலாம், அதர்மத்தைத் தர்மவான்கள் தற்காலிகமாகவேனும் ஏந்தக் கூடாதா? எழுதுகோல் என்கையில் எழுதுகைக்கு மறுக்கிறதா? போகும் பாதைக்குப் பாதங்கள் என்ன செய்யும்? எழுதும் எழுத்துக்கு எழுதுகோல் பொறுப்பல்ல. எனைஎழுதும் கை செய்பிழைக்கு நானும் பொறுப்பல்ல. (31-12-1986: தேவமைந்தன், போன்சாய் மனிதர்கள், திசம்பர் 1993.)

No comments: