19.10.05
மீண்டும் டினோசார்களிடமா?
மீண்டும் டினோசார்களிடமா ஒப்படைக்கப் போகிறீர்கள்
நம் பேருலகத்தை! அந்தப் பெருவிலங்குகள்
ஊர்ந்து திரிவதற்கா?
ஓ! உன்னதங்களே!
அசிங்கமான உங்களின் இனவாத - குழுவாதங்கள் கொண்டு
எங்களை இன்னும் எத்தனைக் காலம்
பிளந்து, ஆப்பு வைக்கப் போகிறீர்கள்?
மறந்தொருநாள் ஆப்பைப் பிடுங்கி, உங்கள்
வாத-வால்மாட்டிக்கொண்டு -
நீங்களும்தான் போகப் போகிறீர்கள்...
"நுப்பும் நுரையுமாய் அடித்துச் செல்லும்
ஆற்று வெள்ளத்துக்கு அடையாளம் தெரியாது"
-கேள்விப்பட்டதில்லையா?
"ஊருக்குள்ளது உங்களுக்கும்!"
-சொலவடையை
செவிமடுத்ததில்லையா?
எங்களை எங்களின் நேசங்களிலிருந்தும்
பாசங்களிலிருந்தும் உங்கள்
கைத்தடியாகிவிட்ட அறிவியல்மூலம்
இன்னும் எத்தனைக்காலம்
பிரித்துவைத்திருக்கப் போகிறீர்கள்?
ச்சே! உங்களின் எந்திரங்களுக்கும்
போர் ஆயுதப் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளுக்கும்
எங்களின்
ஒற்றைக் கண்ணீர்த் துளியின்
உண்மையான சக்தி வருமா?
போயும் போயும் எந்திரங்களோடு
சைபர்வெளி இயக்கி வாழும் வாழ்வில்
எந்தப் பிடிமானம் நம்மை
இந்த முகமற்று இணையும் உடலியக்கத்தில்
நங்கூரமிட்டு
நிலைப்படுத்தப் போகிறது?
(தேவமைந்தன், போன்சாய் மனிதர்கள், திசம்பர் 1993: 'மீண்டும் ராட்சதப் பல்லிகளிடமா?' - கவிதையின் புதுவடிவம்.)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment