7.9.05
நானாக நான் வாழ வேண்டும்
ஆன்மநெடும் பயணமதில்
ஒருநாளை வாழ்க்கையிலே
நானாக நான்வாழ
முடியாமல் போய்விடுமோ?
காலையிலே 'நான்' பிறந்தேன்
கருமிரவில் 'நான்' செத்தேன்;
நாள்தோறும் பலப் பலவாய்ப்
பிறவிகளைப் பெறுகின்றேன்.
'நான்' 'எனது' அற்றுவிட்டால்
பேரின்பம் இருக்குமென
நானும் நம்பினேன்; பின்
மகிழ்வுற்றேன்; மெதுவாய்என்
நான்எனதாம் சட்டைகளைக்
கழற்றினேன்-கழற்றினேன்......
''வான்தெய்வம் கண்ணன்தான்
வரவேண்டாம்''-என்பதுபோல்
நான்எனதாம் சட்டைகள்
வளர்ந்துவரக் கண்டேனே...
நேற்றென்னை மீன்கொத்தி
கேட்டது: ''ஏ நண்பா!
காற்றினிலே நான் பறந்து
மிதப்பதுபோல் மிதப்பாயா?''
இன்றென்னைக் கரிக்குருவி
கிண்டிற்று: ''ஏ நண்பா!
என்போல ஆட்டின்மேல்
அசைபயணம் கொள்வாயா?''
பசுவொன்றும் எனைப்பார்த்துக்
கத்திற்று: ''ஏ அன்பா!
பார் என்போல் பால்தந்து
வாழ்வாயா? மேய்வாயா?''
எருமையொன்று எனைமறித்து
வினவிற்று: ''ஏ அன்பா!
என்னைப்போல் குளத்தினிலே
நெடுநேரம் அமிழ்வாயா?''
ஓர் அறிவாம் ஆறு அறிவாம்
ஒவ்வொன்றும் பல வகையாம்
பேருக்கே நம் பெரியோர்
பிதற்றியதாம் இலக்கணங்கள்......
ஒரு
பறவைபோல் பசுவைப்போல்
வாழ்ந்திடவும் இயலாத
வேடிக்கை மனிதருக்கு
இவையெல்லாம் விளம்பரங்கள்!
(தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976. முன்: 'முல்லைச்சரம்,' நவம்பர் 1974)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment