18.11.05
தகுதிக்குத் தமிழ்மாமணி மு.இறைவிழியனார்
சில சமயங்களில் தகுதியும் நீதியும் வென்றுவிடுகின்றன என்பதற்குப் புதுவை அரசு தன் உயரிய விருதான தமிழ்மாமணி(2005)விருதை 'நற்றமிழ்' இதழாசிரியர் புலவர் மு.இறைவிழியனார் அவர்களுக்கு வழங்கியுள்ளமை சான்று. 27/10/2005 அன்று மாலை, அண்ணாமலை பேருணவகத்தில், கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் செல்வி ந. சுமதி அவர்கள் வரவேற்க, சட்டப் பேரவை எதிர்க்கட்சித்தலைவர் மேனாள் புதுவை முதல்வர் திருமிகு இரா.வே. ஜானகிராமன் அவர்கள் வாழ்த்துரைக்க, புதுச்சேரி மாநில அன்பு முதல்வர் மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்கள் இந்த உயரிய விருதினை மு. இறைவிழியனார்க்கு வழங்கினார்.
சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை வைக்க, மாண்புமிகு முதல்வர் அதை ஏற்று, விருது பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்த அரசியல் இணக்கத்தைப் புதுவை மாநில அரசியலில் மட்டுமே பார்க்க இயலும்.
பல ஆண்டுகளாக 'நற்றமிழ்' என்ற இதழை நடத்திவரும் மு. இறைவிழியனாரின் திங்களிதழில் மட்டுமே சற்றொப்ப முந்நூறு படைப்பாளியர் ஒவ்வொரு இதழிலும் பங்கேற்பதைப் பார்க்க முடியும். காட்டாக, இப்பொழுது வெளிவந்துள்ள 'நற்றமிழ்' நளி(கார்த்திகை)இதழில்[15/11/2005]'கொடுத்தபடி தொடுத்த பாடல்கள்' பகுதியில் மட்டும், பிரான்சு முதல் ரிசிவந்தியம் வரை உள்ள இடங்களில் வாழும் இருநூற்று எண்பத்து இரண்டு பாவலர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். பொன்னி, தென்றல் போன்று வெண்பாப் போட்டிகள் மட்டுமே நிகழ்த்தாமல், யாப்பியலில் வரும் பாக்களின் வகைகள் பலவற்றுக்கும் புலவர் அரங்க. நடராசன் குறிப்புகள் கொடுக்க அத்தனைப்பேர் அழகாக, தளைதட்டாமல் எழுதுகின்றனர். ஒன்றுவிடாமல் அத்தனையையும் பதிப்பிக்கிறார் இறைவிழியனார். இந்த இதழின் முப்பத்தைந்து பக்கங்களில் மட்டும் முன்னூற்று ஆறு பேர்களின் எழுத்துப்பங்கு இருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளலாம். ஏன் இவர்பால் அன்பும் தோழமையும் எண்ணற்றோருக்குத் தோன்றாது?
அவரே சொல்வதை இங்குத் தருகிறேன்: "இளமையில் அறிஞர் அண்ணாவின் 'திராவிட நாடு'- கிழமை இதழைத் தொடர்ந்து படித்ததால் தாய்மொழிப்பற்று வளர்ந்தது. தமிழ் வளர்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து தனியனாகவும் இயக்கங்கள் உருவாக்கியும் இதழ்கள் நடத்தியும் ஆற்றிவருகிறேன். விருதுகள், பட்டங்கள், பரிசுகளைக் குறியாகக் கொண்டு தொண்டாற்றி வந்திலேன்.இந்நிலையில் இவ்வாண்டு புதுவை மாநில உயர்விருதான 'தமிழ்மாமணி' விருது எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது நான் எதிர்பாராத ஒன்று. புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்கள் தூய தொண்டருக்கு அவ்விருதை அளிக்க விரும்பியுள்ளார். அந்த வாய்ப்பை நழுவ விடாமல் என் பெயரை முதல்வரிடம் மொழிந்துள்ளார் என்னை நன்குணர்ந்த அன்பர் ஒருவர். அவரின் கருத்தை மட்டுமே முதன்மையாகக் கொள்ளாமல் முதல்வரும் பலரிடம் உசாவி உள்ளார். பலர் என்னைப் பற்றிச் சிறப்பாகக் கூறியுள்ளனர். இவற்றையெல்லாம் நன்கு ஆய்ந்து பார்த்தும் உரிய விளக்கங்கள் பெற்றும் தெளிந்த முதல்வர் தடைகளைக் கடந்து என் பெயரை விருதுக்கு அறிவித்துள்ளார். எங்கள் மாநில முதல்வர் மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்களைக் காமராசரின் உருவமாகவே குறிப்பிடுவர். நானோ பல ஆண்டுகட்கு முன்பிருந்தே அவரை அண்ணாவும் காமராசரும் இணைந்த உருவமாகப் பார்த்து வருகிறேன். அவர் உருவால், உடையால் மட்டுமன்று உள்ளத்தாலும் எளியவரே......எல்லாவகையிலும் பாராட்டுக்குரிய எங்கள் மாநில முதல்வர் மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்களின் திருக்கைகளால் அவரால் மட்டுமே முடிவு செய்து தரப்பட்ட தமிழ்மாமணி விருதைப் பெற்றதை விருது பெறுவதைவிடப் பெரும்பேறாகக் கருதினேன். இந்த உயர் விருதுக்கு உரியவனாக மேலும் என் தமிழ்ப்பணி தொடரும்......எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள தமிழறிஞர்கட்கும் இனிய நண்பர்கட்கும் இளைஞர்கட்கும் இவ்விருதைப் படைக்கிறேன்."
இவர் தொடர்ந்து நடத்திவரும் 'நற்றமிழ்' இதழின் இணையாசிரியர்களாக [மற்றவர்கள் 'துணையாசிரியர்கள்' 'உதவி ஆசிரியர்கள்' என்றே குறிப்பர்; இவர் இதிலும் எளிய உள்ளம் கொண்டிருக்கிறார்] சந்தப்பாமணி புலவர் அரங்க. நடராசனும் புதுவையின் முதல் இணைய இதழான 'புதுச்சேரி.காம்'-இன் ஆசிரியர் புலவர் செ. இராமலிங்கனும் இருந்து அன்னாருக்குப் பேருதவி புரிந்து வருகின்றனர். புலவர்கள் இவ்வாறு அரசியல் தலைவர்கள் போலவே ஒற்றுமையாக வாழ்ந்து ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு தமிழ்ப்பணியைத் தளராமல் ஆற்றுகின்ற எங்கள் புதுவை மாநிலம் எல்லாவகைகளிலும் பிற மாநிலங்களுக்கு, ஏன், பிற நாடுகளுக்கும் ஏற்ற வழிகாட்டி ஆகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment