8.11.05
"எனக்கு வாழ்க்கை போரடித்ததில்லை" - லமார்த்தீன்
பேரா. க. சச்சிதானந்தத்தின் 'சுவையான பிரஞ்சுப்பக்கங்கள் II' புத்தகத்தில் நான் கண்ட சுவாரசியமான,இந்தக் காலத்தில் நமக்குப் பயன்படக் கூடிய செய்தி. லமார்த்தீன் என்ற பிரஞ்சுப் படைப்பாளனின் கருத்தோவியம். பார்வைப்புலன் இழந்தவன் ஒருவன் இந்த வாழ்வை எவ்வளவு நேசிக்கிறான்! நாட்குறிப்பு, நாட்காட்டி, கடிகாரம் என்று எதுவும் பார்க்க இயலாதிருந்தும் அவை எல்லாவற்றையும் 'தான்' ஆகவே சுயப்படுத்தி இருக்கிறான்! அவன் சொல்கிறான்:
"எப்போதுமே காலம் எனக்கு மிக நீண்டதாகத் தெரிவதில்லை. பருவநிலை நன்றாக இருக்கும்பொழுது, நான் வெயிலுள்ள நல்ல வாகான இடத்தில் அமர்ந்து சுவரின்மேலோ தேனீக்களின் பெட்டிமேலோ மரத்தின்மேலோ சாய்ந்து கொள்வேன்.
பள்ளத்தாக்கு, கோட்டை, மணிக்கூண்டு, புகைபோக்கிவழியாக புகையை வெளியிடும் வீடுகள், மேயும் காளைகள், பேசிக்கொண்டே வழிநடக்கும் பயணிகள் ஆகியவர்களை முற்காலத்தில் என் கண்களால் கண்டது போலவே இப்பொழுதும் என் மனக் கண்ணால் காண்கிறேன். கொள்ளுப்பயிர் பச்சை பிடித்தல், புல்வெளிகளில் புல்வெட்டுதல், கோதுமைக் கதிர்கள் முற்றுதல், இலைகள் பழுப்பேறுதல், பறவைகள் விரும்பும் முட்புதர்ப் பழங்கள் சிவத்தல் ஆகியவற்றை முற்காலத்தில் என் கண்களால் பார்த்தது போலவே இன்றும் எல்லாப் பருவ காலங்களிலும் நான் அறிவேன்.
என் கண்கள் இப்பொழுது என் காதுகளிலும் கைகளிலும் கால்களிலும் இருக்கின்றன. செயற்கைத்தேன் கூடுகளின் அருகில் மணிக்கணக்காக இருந்து, பெட்டியில் வைக்கோலின் அடியில் தேனீக்கள் செய்யும் ஒலியையும், அவை கதவின் வழியே ஒவ்வொன்றாக வெளிவந்து 'காற்று இனிமையாக வீசுகிறதா? மலர்கள் மலரத் தொடங்கிவிட்டனவா? என்று நோக்குவதையும் உணர்ந்து கேட்பேன். காய்ந்த கற்களில் உடும்புகள் ஓடுவதைக் கேட்பேன். எல்லாவகையான வண்டுகளும் வண்ணத்துப் பூச்சிகளும் என்னைச் சுற்றிப் பறப்பதை நான் அறிவேன். புற்களிலும் சருகுகளிலும் ஓடும் சிறு உயிரினங்களும் எனக்குத் தெரியும். அவைதாம் எனக்குக் கடிகாரம், நாட்காட்டி எல்லாம்.
அதோ குயில் கூவுகிறது. இது மார்ச்சு மாதம். வெயில் வந்துவிடும்.
அதோ கரிக்குருவியின் ஒலி. இது ஏப்ரல் மாதம்.
அதோ இசைக்குருவியின் பாட்டு, இது மே மாதம்.
அதோ வண்டின் ரீங்காரம். இது ஜூன் மாதம் 24ஆம் நாள்.
அதோ சிள்வண்டின் ஓசை. இது ஆகஸ்டு மாதம்.
அதோ பழுப்புக்குருவியின் ஒலி. இது கொடிமுந்திரியின் அறுவடைக்காலம். அது பழுத்துவிட்டது.
அதோ வாலாட்டிக் குருவி, அதோ காக்கைகள், இதோ குளிர்காலம்!" என்று நான் சொல்லிக் கொள்ளுவேன்.
இதே போல ஒவ்வொரு நாளின் மணிப்பொழுதையும் நான் நன்கு அறிவேன். பறவைகளின் பாடல்கள், வண்டுகளின் ரீங்காரம், சிற்றூர்களில் இலைகளின் எழுச்சி-வீழ்ச்சி ஒலிகள், வானத்தில் சூரியனின் ஏற்றம் இறக்கம் இவற்றைக் கொண்டு மணி என்ன என்பதைத் துல்லியமாக அறிவேன்.
காலையில் எல்லாம் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்; நடுப்பகலில் எல்லாம் அடங்கும்; மாலையில் மீண்டும் தொடங்கும்; சிறிது நேரத்தில் எல்லாம் முடிந்துவிடும்...எனக்கு எப்போதுமே சலிப்புத் தோன்றுவதில்லை.
அப்படித் தோன்றினால் "அது இருக்கிறதே!" என்று சொல்லிக் கொண்டே என் பையில் கையை விட்டுத் துழாவி மணிமாலையை எடுத்து என் கை சோரும்வரை உருட்டுவேன். உதடுகள் சோரும்வரை கடவுளை வேண்டுவேன்.
எப்பொழுதுமே காலம் எனக்கு மிக நீண்டதாகத் தெரிவதில்லை. அந்த நாட்களில், வழியில் நான் சந்தித்தவர்களின் - எனக்குத்தெரிந்தவர்களின் முகங்களை மீண்டும் காணுவதை மட்டும் நான் விரும்புகிறேன்."
புத்தகம் கிடைக்குமிடம்:
தமிழ்மணி பதிப்பகம்,
127,ஈசுவரன் கோவில் தெரு,
புதுச்சேரி - 605 001.
பக்கங்கள்: 160
விலை: ரூ. 50 - 00
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்லதொரு புத்தகத்தினை அறிமுகப்படுத்திய என் ஆருயிர் நண்பரே,
தங்கள் செயலுக்கு என் வாழ்த்துக்கள்.
அறிமுகத்துக்கு நன்றி!
கொஞ்சம் பத்தி பிரித்து எழுதினால் உங்களின் இடுகைகளைப்படிக்க வசதியாக இருக்கும்.
-மதி
Post a Comment