30.9.05
ஒரு தீர்மானத்துக்கு வருவோம்!
ஒவ்வொன்றையும் எழுதித் தீர்த்துவிட முடியாத அளவு அலப்பல்கள், இன்றைய மின்னிதழ்களிலும் குழுக்களிலும்...... பாராட்டுவோம் என்று எவர்க்கும் பின்னூட்டம் இடுகின்ற என்னை வெறுப்பேற்றினார் ஒருவர். எப்படி? மின்னிதழ் ஒன்றில் கவிதை எழுதியிருந்தார் அவர். அதில் என் விமர்சனம்( இன்னொருவர் பற்றி) வந்தபொழுது 'மெசஞ்சர்' வழி தொடர்பு கொண்டு, அவ்விதழில் வந்த தன் கவிதையை நான் கண்டேனா என்று கோடிட்டார். தேடி வாசித்துப் பின்னூட்டமிட்டு, படி ஒன்றையும் அனுப்பிவைத்தேன். வழக்கப்படி யூனிகோடு தமிழில்தான். மீண்டும் மெசஞ்சர். அதில் அவர் மீண்டும். ''தமிழ் ஃபாண்ட்களில் அனுப்பிவைக்க முடியுமா?'' என்று கேட்டார். யூனிகோடு, தமிழ் எழுத்துரு அல்லவா? சிலர், நான் யூனிகோடு குறித்துக் காசி அவர்கள் எழுதிய பாடங்கள் பற்றிச் சொன்ன பின்பும், தியாகு அறிவுறுத்திய 'Read Tamil: cascaded Tamil Style Sheet' குறித்து விவரம் தந்துவிட்ட பின்பும் ''தமிழ் ஃபாண்ட்ஸின் அழகு இதற்கு வருமா?'' என்று ''அடியைப் புடிடா பாரதபட்டா!'' என்று பல்லவியிலிருந்து மீண்டும் தொடங்குகிறார்கள். இதுதான் போகட்டும் என்றால், நல்ல உணர்வுள்ள தமிழ் ஆர்வலர்களின் மின்குழுவில் உள்ள 'சீனியர்' ஒருவர் - ''நான் ஏன் விலகுகிறேன் என்றால்.........." என்று பாரதம் படித்து, ''சேர வாரும் ஜெகத்தீரே!'' என்று 'இன்னொன்றில்' சேர அழைப்பு விடுக்கிறார். இதற்கு விதிவிலக்காக,"விடைபெறுகிறேன் நண்பர்களே!'' என்று பண்பாக விடைபெற்று, நம் கண்களில் நீர் வரும்படிஒருவரியில் விடைபெறுபவரும் இருக்கிறார். பண்பு என்பதுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. சங்க இலக்கியக் கலித்தொகை வரியொன்று, ''பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்'' என்கிறது. அடுத்தவர்களின் பாடுகள் அறிந்து பண்பும் நாகரிகமும் பொருந்த நடந்து கொள்ளுதலே வலையெழுத வருபவர்களும், வந்து 'ரொம்ப காலம்' ஆகிவிட்டவர்களும் பின்பற்ற வேண்டிய அடிப்படை வலைநேயம் ஆகும்.
25.9.05
ஒரு விடியலுக்கு முன் விளைந்த எண்ணப்பதிவுகள்
சற்றுப்பொறு.
என்னால் கவர்ச்சியாகவோ -
அதிர்ச்சியூட்டும் அழுத்தத்துடனோ
எதையும் எழுத முடியாது;
மற்றவர்களைப் புண்படுத்தியெழுத -
வரவே வராது. மிகையுணர்ச்சி ஊட்டும் எழுத்துகள்
வீச்சமெறியும் பலநாள் கருவாட்டு
சுண்டக் குழம்பின் சொட்டுகள்.
சிலருக்கு மிகவும் பிடித்துப் போகலாம். ஆனாலும்
எதனோடு, எதற்காக, எதைத் திருப்தி பண்ணிக்கொண்டு
அன்றன்று வாழ்வைப் புதுப்பித்துக் கொள்கிறோமோ,
அந்த - உடம்புக்கு ஆகாது என்பதையும் நாம்
ஏமாற்றிக் கொள்ளக்கூடாது. மூளை(எ) மனத்துக்கும்
மிகையுணர்ச்சி உதவாது.
புகைபிடித்த முதற்கணம், முழுமையாக மறுதலித்த
உடலும் மனமும் திணிக்கத் திணிக்க ஏற்றுக்கொள்வது,
வேறுவழியில்லாததால். சரியானது என்பதால் அல்ல.
உடலுக்கும் உளத்துக்கும் மூளைக்கும் மொழிக்கும்
வாழ்க்கைக்கும் அப்படியொன்றும் வேறுபாடுஇல்லை..
நிறப்பிரிகை ஒன்றின் வேறுவேறு
வண்ண ஒளிப் பாய்ச்சல்களே அவை.
கோமாளித்தனமும் பித்துக்கொள்ளித்தனமும்
அரசியலில் மட்டுமல்ல; எல்லாத் தளங்களிலும்
விலைபோகிறது. கலைநயம்
காத்திருக்க வேண்டும்தான்.
கண்டுகொள்ளப் படுமுன்பே காலம்ஆகவும்
வாய்ப்புண்டு. மறுபடியும் பிறப்போம். எழுதுவோம்.
மாலைவானின் முகில்தொகுப்பு வரைகலையும்
வண்ணச் சேர்க்கையும் அடுத்த
விடியல் வானத்தில் மீண்டும் பிறப்பதில்லையா?
மெழுகுத்திரி எரியும்பொழுது எதுவும் வீணாவதில்லை.
இயல்பாய் வாழ்வதால், எழுதுவதால்
யாருக்கும் நட்டமில்லை.
(தேவமைந்தன், 1977: புல்வெளி[கவிதைத் தொகுப்பு], திசம்பர் 1980)
20.9.05
எழுவாய் பயனிலை செயப்படுபொருள்
(அண்ணன்மார் கூத்து மெட்டு)
(எடுப்பு)
எத்தனைப் பாட்டை எழுதிப் போட்டாலும்
எதற்கும் இங்கே பயனிலை!
எழுவாய் நெஞ்சே செயப்படுபொருள்தான்
ஏதும் இங்கே தெளிவிலை... (எத்தனைப்......
(துணை எடுப்பு)
வள்ளுவருக்கே நாமம் போட்டவர் - நெஞ்சை
அள்ளும் சிலம்பை விற்று வாழ்பவர்
பாரதி பாவேந்தர் பெயர்களைச் சொல்லித்
தம்மை வளர்ப்பவர் நம்மை முறைக்கையில் (எத்தனைப்......
(முடிப்பு)
தமிழைக் காசாக்கிச் சொத்து சேர்த்தவர்
கம்பனைக் கரகம் ஆடிப் பிழைப்பவர் - கவி
அரங்கத்து வாய்ப்பை நாடி இளிப்பவர்
தரகு வேலையைத் தமிழில் திணிப்பவர்
தன்னை விளம்பரம் ஆக்கித் திரிபவர் - தமிழ்
மொழியை வாணிகம் பண்ணிச் செழிப்பவர்
இத்தனைப் பேரும் இத்தரை வாழ்கையில் (எத்தனைப்......
(தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976)
காக்கை அலைக்கும் சிறுவர்
புலம்தரு செந்நெல் புழுக்கிய முன்றில்.
விடாதொரு காக்கையை அலைக்கும் சிறுவர்:
கயிற்றால் காலைக் கட்டியே இழுத்தும்,
சிறகுகள் பிடித்துச் சிவ்வெனப் பிய்த்தும்,
நொய்யவும் நோகவும் தரைதனில் அறைந்தும்,
சிலுக்கெனச் சிதைந்து போகவும் வைக்க--
எவர்தாம் இவர்க்குஅதி காரம்
வழங்கினர்; வாழ்வா? ஓ!அது கொடிதே.
(தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976: சிறிது மாற்றப்பெற்றது.)
மன விடுதலையை அருள்வாய்!
விடுதலையை அருள்வாய்- தாயே, மன
விடுதலையை அருள்வாய்!
இன்பமும் துன்பமும் விடும்நிலை எய்திட
இயல்பாய் வாழ்ந்துநான் உண்மையை அறிந்திட (விடுதலையை......
உயிர்கள் அனைத்தும் ஒன்றென உணர்ந்தேன்
உண்மையாய் வாழ்வதே உயர்வெனத் தெளிந்தேன்
பொய்ம்மை வாழ்வினை நஞ்சென வெறுத்தேன்
தூய்மையே உலகின் தூண்எனப் புரிந்தேன் (விடுதலையை......
அரிமா வன்புலி மானினம் நரிகளும்
ஆவொடு பாம்புதேள் அனைத்தும் உன்வடிவே
மலரொடு செடிகொடி மலைகளும் அருவியும்
மாண்புறு பறவையும் நீயெனக் கொண்டேன் (விடுதலையை......
(தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976: முகப்புப் பாடல்)
17.9.05
அன்பு ஆன அப்பாவுக்கு... ...
தழைத்த வாழையின்
இருப்பும் கனமும்
அடிவாழைக்கு
அவஸ்தை ஆயிற்று.
அறிந்தோ அறியாமலோ
அதை உணர்ந்து
வாழைப் 'பெரிசு'
பக்கவாட்டில் சாய்ந்து வீழ்ந்தது.
அடிவாழை இப்பொழுது
தலைவாழை ஆனது.
தன்மேல் அடிக்கத் தொடங்கிய
வெயிலும் வறண்ட காற்றும்
எப்படிபபட்டவை என்பதை
இப்பொழுதுதான் தெரிந்துகொண்டது..
இத்தனைக் காலம் அத்தனைக் 'கிழம்'
இத்தனையும் தாங்கியதா?...
******************************
தன் அடிவாழைகளுக்கு
தான் சுமையாகாமல்
தவிர்ப்பது எங்ஙனம்
தவிர்வது எவ்வாறு
என்று ஓயாமல் சிந்திக்கிறது, இப்பொழுதெல்லாம் -
அந்தப் புதியதும்
இளையதுமாய் இருந்த
பழைய அடிவாழை.
(தேவமைந்தன், 28/01/1988: போன்சாய் மனிதர்கள், 1993)
சூரியகீதை
தான்
வெளிச்சமாய் இருப்பது
தெரியுமா
சூரியனுக்கு?
(தேவமைந்தன், 03/08/1988: போன்சாய் மனிதர்கள், 1993)
எது?
தாள்களை எழுதத் தந்து
பேனாவைக் கையில் திணித்து
எழுதம்மா எழுது என்றுன்
மோவாயை ஏந்தி நின்று
எத்தனைதான் கெஞ்சினாலும்
தொலைக்காட்சி தன்னைவிட்டுக்
கண்திருப்பா திருப்பவளே!
என்னைமட்டுமா எழுதவைத்தது?
என்னைமட்டுமா உழுதுபார்த்தது?
என்னைமட்டுமா பேசவைத்தது?
எத்தனை எத்தனை யோபேர்
எழுதவும் பேசவும் இடம்கொடுத்தது -
உன்னை மட்டும் வண்ணப் பெட்டி
முன்வைத்தது ஏன்பெண்ணே?
(தேவமைந்தன், 16/08/1988: போன்சாய் மனிதர்கள், 1993)
சொந்தபந்தங்கள்
நாம் சிரித்த பொழுது
வந்து குந்தி
தாம் நாம்'ஐ ஒப்பிட்டு
நொந்து நோக்கி நாள் கழித்து
போக வேண்டும் என்று வந்த போது
வம்பு வாது பண்ணி விட்டு
நோக வைத்துப் போகுமே
சொந்த பந்தம் என்றுமே.
(தேவமைந்தன்: 16/08/1988: போன்சாய் மனிதர்கள், 1993)
படிப்பினைகள்
எளியவர்கள் தோற்றுவிட எத்தரவர் வென்றிடுவர்.
உழைப்பவர்கள் மோதிக்கொள்ள உலுத்தரவர் உள்நுழைவர்.
பெற்றவர்கள் பிள்ளைகளை மற்றவர்கள் கொண்டுசெல்வர்.
கற்றவர்கள் நிலையங்களில் கல்லாதோர் விருதுகொள்வர்.
காக்கைதன் கூட்டினிலே குயில்சென்று முட்டையிடும்.
கறையானின் புற்றினிலே கருநாகம் குடியேறும்.
கானமயில் ஆடுவதை வான்கோழி திறனாயும்.
காடதிரப் பிளிறிவரும் களிறெதிரே எலிமுறைக்கும்.
பணமிருந்தால் போதுமவர் எதையும்பெற முடியும்.
பிணங்கூட மதிப்படையும்; பல்லக்கில் செல்லும்.
அறிவிருந்தும் அறிவில்லார் கீழ்ப்பணிகள் புரியும்
அறிவுடையர் சொல்லெங்கே அம்பலத்தில் ஏறும்?
எறும்பெல்லாம் உழைத்துழைத்துச் சேர்த்துவைத்த உணவை
சுறுசுறுப்பாய்ப் பெருச்சாளி தோண்டியபின் உண்ணும்.
வானமதில் விடுதலையாய் சிறகடிக்கும் புறாவை
வாட்டமுற்ற வல்லூறு வாய்போடப் பார்க்கும்.
இது என்ன இது என்ன
இதுஎன்ன நண்பா?
படிப்பினையா? பாடமா!
விழித்தெழுநீ நண்பா...... (1976: புல்வெளி,1980)
14.9.05
என்றும் புலம்பாதவள்.
வாசுகியாய் வாழ ஆசை!
வள்ளுவன்தான் வாய்க்கவில்லை.
உங்களைப்போல் புலம்ப மட்டும்
எனக்கு வராது!
சலித்துக்கொள்ளத் தேவை
எனக்கில்லை. எதற்காக?
என்னிடத்தில் குறை இல்லாதபொழுது
நான் ஏன் சபிக்கவேண்டும்?
சலித்துக்கொள்ளத்தான் வேண்டும்!
சராசரியாய் வாழ இஷ்டமில்லை எனக்கு.
ஏன், எதற்காக நான் அலட்டிக்கொள்ளவேண்டும்?
அலங்காரப் பதுமையும் அல்ல,
பசப்பலும் பாசாங்கும் எனக்கெதற்கு?
கணவன் வாய்த்தாலும் - அவன் அடிமனத்தையும்
ஊடுருவக்கூடிய நான்,
நாத்தனார் மாமியாரை
என்வசம் பூட்டிவைப்பேன் -
'டெஸ்க்டாப் ஐகான்'களாய்.
உள்நோக்கம் எதுவும் எனக்கில்லாததால்.
புலம்புவதில்லை இனிமேலும்.
புகழோடு வாழ்ந்தும்
புரியாமலென்னிடம்
விளையாடப் பார்த்த
வீணரை,நான் விட்டதில்லை.
கொங்கண முனிவர்களும்
துர்வாச ரிஷிகளும்
காயம்பட வைத்தவள்நான்.
அப்படி ஒன்றும் அபூர்வமான பிறவி அல்லள்.
தன்னை உணர்ந்த எவருக்கும் சாத்தியப்பாடு இது
என்னை உணர்ந்தவள் என்பதால்
நான்...............
11.9.05
எத்தனைக் குறைகள் இருந்தாலும்...
சோலையில் ஆயிரம்
மலர்கள் மலரினும்
எல்லாம் மல்லிகை
மலராகுமா?
உலகில் எத்தனை
நாடுகள் இருப்பினும்
எல்லாம் என்றன்
நாடாகுமா?
எத்தனைக் குறைகள்
இருந்தாலும் -- என்
இந்திய நாட்டுக்கு
இணையேது?
கோடியே நிறைகள்
குவிந்தாலும் -- அயல்
நாட்டினில் எனக்கு
மகிழ்வேது?
மொழி,இனம் கெடுக்க
முன்வரு வோரையும்
மதிக்கும் என் தமிழ்நாடே!
தமிழர் என்றே தம்மை
உணராதோ ரையும்
தாங்கிடும் தமிழ்நாடே! -- இன்னும்
எத்தனை குறைகள்
இருந்தாலும் -- நான்
உன்மேல் அன்புகொள்வேன் -- நான்
உன்னிடம் வாழ்ந்திருப்பேன்!......
(தேவமைந்தன், புல்வெளி, 1980) [ப:1976]
அரிது அரிது! குருவியாய்ப் பிறத்தல் அரிது!
சிட்டுக் குருவிகளின்--
பாதைகள் தனிப்பட்டும்
வேறுபட்டும் விரைவுகொண்ட
திட்டவட்டமான - ஒன்றுடன் ஒன்று
மோதிக்கொள்ள வேண்டாத
எடுபட்டுப் பறத்தல்கள்,
அவற்றின் பலகோணப் பார்வை,
வெட்டவெளியும் கட்டடங்களும்
கூரைச் சார்ப்புகளும் கொப்புகிளைகளும்
உள்ளடக்கிய வழித்தட வரைவு,
பறப்புக்கணக்கு,......துல்லியங்கள்.
ஓ! மனிதன் மட்டுமா
மகத்தானவன்?
(தேவமைந்தன், 1/8/1987, போன்சாய் மனிதர்கள், 1993)
9.9.05
எல்லைக்கு உட்பட்டும் - எத்தனைக் குதிகுதிப்பு?
முற்றிலும் எல்லைக்குட்பட்டு
விளிம்புகள் வரையறுக்கப்பெற்றன.
வெகுகண்டிப்பான, களங்களும் காட்சிகளும்
முன்னரே பணித்திட்டம் 'ஆகி'விட்ட இயங்குகை.
சிக்கல்மிக்க - ஆனால் - வெறுங்கருவி, உடம்பு.
பதின்மூன்று நிமிடத்துக்கொருமுறை
இயற்கை விட்டுவைக்கும் புதுப்பிப்பு.
துன்பம் இல்லாத பொழுது இன்பம்.
உடம்புக்குப் போட்டி மனம்.
அதற்கு ஆகாதன எல்லாம் இதற்கு ஆகும்.
ஆண் பெண், மேற்படிக் கருவியின்
உள்-வெளி வாங்கல்கள்.
இன உற்பத்தி வசதிக்காக
ஒருவர் இடம் மற்றவர்க்கு ஈர்ப்பு.
விதிவிலக்குகள், அதிலும்.
சதைபொதி கருவிகள் மற்ற
சதைபொதி ஊடகங்களை விழைதல்.
இவை வரையறை ஆனது
தானாக - தன்னிச்சையால்தானா?
(தேவமைந்தன், போன்சாய் மனிதர்கள், 1993)
8.9.05
எப்படியும் காதல் வருமாம்!
மேட்டுத்தெரு முனையில்
'டூவீலர்க'ளில் திரும்பும்பொழுது
மோதிக்கொள்ள இருந்தார்களாம்..
'சாரி' 'சாரி' என்று ஒருவருக்கொருவர்
வேண்டிக்கொண்டவாறு பார்த்துக்கொண்டபொழுது
"அண்ணலும் நோக்கினான் : அவளும் நோக்கினாள்!"
'ஃபார்முலா' அவ்விடமே 'க்ளிக்' ஆகிவிட்டதாம்!
'ட்ரில்லியன்' மின்னல்கள் வெட்ட
அகமதில் அதிர்ச்சிகள் ஆயிரம் இடிக்க
ஒன்று பிறந்ததாம் : அதுதான் காதலாம்.
புத்தகத்தை/குறுந்தட்டை/குறிப்பேட்டை
அவள் அவனுக்குத் திருப்பித் தந்தபொழுது
மெல்விரல்களின் நகநுனிகள் அவன் புறவிரல்கள்மேல்
பட்டுவிட்டதாம் : அடடே! அடடாவோ!
மற்றொரு காதல் மலர்ந்துவிட்டதாம்..
அரசின் நகரப் பேருந்தில் கூட்டநெரிசலில்
ஓட்டுநர் கருணையால் அவள் சாயநேர்ந்தபொழுது
பலகோடி யுகங்களாய்த் தவறவிட்ட அவன் தாங்குதல்
இன்னொரு காதலைத் தொடங்கிவிட்டதாம்...
பக்கத்துவீட்டுச் சாளரம் திறந்தபொழுது ஒருநாள்
திக்கென்று மனம்அடிக்கவைக்கும் கிழவிமுகம் தெரியாமல்
அழகுமுகம் தெரிந்ததாம்; அடுத்த ஊரின் வருகையாம்.
பழகும் வாய்ப்புக் கிடைக்கவே
'பக்'கென்று பற்றிக் கொண்டதாம் -
''காதல்தீ"யாம். நமக்கெலாம் தெரியாதாம்.
ம்..ம்..இன்னும் வார இதழ்கள் புரட்டப் புரட்ட
எத்தனைவகைக் காதலடா!
தெருவில் பெட்டிக்கடைமுன் சுவர்தோறும் - ஏன்
எங்கெங்கு நோக்கினும் இலவசமாய்க் காதலடா!
எழுதியவனாவது ஏட்டைக் கெடுத்ததோடு விட்டான்;
பாடியவனாவது பாட்டைக் கெடுத்ததோடு விட்டான்;
எம்தமிழ்த் திரைப்படம் எடுக்கின்ற பேர்வழியோ
எதையும் விடாமல் கெடுக்கின்றான் என்தாயே!
(தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976: 'சில காதல் சூழல்கள்'--
சில மாற்றங்களுடன்.)
7.9.05
வாழவேண்டிய வாழ்க்கை
எத்தனையோ பூமரங்கள்! பூக்களவை வார்ப்புக்கள்!
பார்க்கின்ற இடம்தோறும் பறவைவண்ண சாலங்கள்!
பித்தர்போல் நமையாக்கப் பேசிவைத்த செயல்முறைகள்!
இளம்பருவத் தூய்மைநிறை இன்பமிகு வடிவங்கள்!
இத்தனை இருந்திருந்தும் இவைநம்மை ஈர்க்காமல்
செய்திடவே நமைச்சுற்றிச் சுற்றத்தின் தொல்லைகள்!
வைத்தபல சிக்கல்கள்! சிந்தனையின் சூழ்ச்சிகள்......
வித்தினையும் கடக்கின்ற விளைசெடியின் மாற்றங்கள்!
பார்க்கின்ற குழந்தைதன் பழமுகத்தை நாடாமல்
தேர் ஆடித் தெருவில்வரும் தோற்றம்போல் இளமகளிர்
சேர்க்கின்ற அழகுதனைப் பருகாமல் நாள்தோறும்
குந்தி,நின்று குமைந்திருந்து கவலைகள் பட்டிருந்து
வேர்க்கின்ற விளையாட்டில் வேதனையை நீக்காமல்
வேளைவரும் காலம்வரை வெந்துயரைப் போக்காமல்
தூர்க்காத கிணறாகத் துயர்ச்சேற்றில் ஊறிநின்று
துன்பத்தை வரவழைத்துத் துயருடன்தான் வாழ்கின்றோம்!
இயற்கைத்தாய் உணர்த்துகிறாள் இன்பமிகு பாடங்கள்!
இத்தனையும் பார்த்திருந்தும் இயல்பாக உணர்ந்திருந்தும்
செயற்கைக்காய் வாழ்கின்றோம்! சேராமல் வாழ்கின்றோம்!
ஆமை,தான் முயல் ஆக முயலாமை கேட்டுள்ளோம்!
மயக்குகின்ற மல்லிகையும் மல்லிகையாய் உள்ளதன்றி
சண்பகமாய்த் தான்மாறி மணக்காமை உணர்ந்துள்ளோம்!
செயற்கரிய செயல்களைநாம் செய்வதுவாய் எண்ணிநின்று
செயவேண்டும் செயல்களையும் செய்திடவே மறக்கின்றோம்!
(தேவமைந்தன், விருந்து, மார்ச் 1975: உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976)
பிள்ளை ஒன்று......
ஒருவரை ஒருவர்..............
நானாக நான் வாழ வேண்டும்

அவலச் சிரிப்பு
கூரை பிரிந்த
குள்ளக் குடிசையின்
வெளியே தெருவில்
சாக்கடை ஓரம்
குவிந்த குப்பை
அருகில் ஒருவன்.
துன்பம் பொதிந்த
அழுக்கு மூட்டையாய்;
முற்றுப் புள்ளியே
இல்லாக் கதையாய்ச்
சுருண்டு படுத்து,
வாழ்வதே சுமையாய்
வாழும்
நிதர்சனம்
மறந்துபோய்,
உறக்கம் தன்னில்
சிரிக்கின் றானே.
(தேவமைந்தன், "முல்லைச்சரம்", திசம்பர் 1975)
கொசுவண்ணே, உனக்கு ஒரு கும்பிடு!
உடம்புத் தரையில்
இறங்கும் விமானம்.
'நகரா[?]ஆட்சி'களின்
திறமைக்குச் சான்றிதழ்.
தேசியத் திட்டங்களின்
காவியத் தலைவன்.
ஏழைகளின் காதருகில்
இலவச மெல்லிசை.
வலைபோட்டுப் பிடிக்க
முடியாத ஒரேஒரு
அரசியல் தலைவன்.
'ரத்தத்தின் ரத்தமே!
கொசுவண்ணே! உம்மைக்
கும்பிட்டு வாழ்த்துகிறேன்.
(தேவமைந்தன்,"புல்வெளி," 1980)
Subscribe to:
Posts (Atom)