
31.8.05
ஆயுள் இன்சூரன்ஸ் மற்றும் முகவர்களோடு......

27.8.05
எங்கள் இருப்பும் இங்கேதான்!
வெண்புறா சிறகடித்து
விண்ணீலப் பெருவெளியில்
செவ்வலகு விரித்திசைத்துக்
காற்றாட்டும் ஊஞ்சலிலே
வெண்பஞ்சு முகிலூடு
வேண்டுமட்டும் பறப்பதுபோல்......
செவ்வானம் செழுநிலத்தைத்
தழுவிக்கொள்ளும் விளிம்பருகே
சாய்கின்ற சூரியன்முன்
கருநிறத்து வரைகோடாய்
கடல்நாரைப் புள்ளினங்கள்
உடல்நீட்டிப் பறப்பதுபோல்......
பரந்தபெரு நீர்க்கடலில்
பல்வகையாம் உயிர்மீன்கள்
நேர்சென்றும் திரும்பியும்
வளைந்தும்பின் வாலடித்தும்
எதுவருமோ ஏதுறுமோ
என்றெண்ணா தலைவதுபோல்......
இருக்க முடிவதில்லை.
வாழும் நொடியொன்றில்
தாழும்பல நினைவுகளால்
அலைப்புண்டு தடுமாறி
கவலைகளால் மொத்துண்டு
சாலையில் அடிபட்டுச்
செத்தொதுங்கிக் கிடக்கின்ற நாய்போல் உருமாறி
நாங்களும்தாம் 'இருக்கின்றோம்'!
-தேவமைந்தன்
(புதுச்சேரி, 'கவிதாமண்டலம்,'[ஆசிரியர்: மறைந்த 'எஸ்.ஆர்.எஸ்.'],வைகாசி 1980 - இதழிலும், பின்னர் புல்வெளி[1980] கவிதைத் தொகுப்பிலும் வெளிவந்தது.)
உங்கள் தெருவில் ஒரு பாடகன் [1976]
நானொரு பாட்டுப் பாடவந்தேன் - அதை
நலமிகு முறையில் பாடிநின்றேன்
நான் பாடிய பாடல் பலரும் கேட்கும்
பாக்கியம் பெறவில்லை - ஆம்
பாக்கியம் பெறவில்லை [நானொரு...
தெருக்கள் கூடும் சந்திகளில்நான்
தெளிவாய்ப் பாடிநின்றேன்
உமட்டும் சாக்கடை ஓரம்நின்றும்
உண்மையைப் பாடவந்தேன் - ஆம்
உண்மையைப் பாடவந்தேன் [நானொரு...
நான் பாடும்பாடல் பாடியபின்னால்
எனக்கே சொந்தமில்லை
வானில் பாடித்திரியும் பறவைகளாலே
யாருக்கும் தொல்லையில்லை - ஆம்
யாருக்கும் தொல்லையில்லை [நானொரு...
தோப்பினில் மாங்குயில் கூவிடுமே! அது
கேட்பவர் புகழ்ச்சியை நாடிடுமோ?
இங்கே சிலநாள் பாடிடுவேன் - பின்
எங்கோ சென்று மறைந்திடுவேன் [நானொரு...
(தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், சனவரி 1976)
முளைகள்
சமுதாய வயல்களில்
உழவுப் பெற்றோர்கள்
இன்று தெளித்துள்ள
முளைகள்.................
ஒன்றும் தெரியாது
தெரியவும் வேண்டாம்
அதே நேரத்தில்
எல்லாமும் வேண்டும்
என்றொரு முளை.
எதிர்காலத் தகுதியெல்லாம்
அதற்குத் தானோ?
ஓய்ந்திருக்க லாகாமல்
ஓடிவிளையாடும் பாப்பா
இத்துடன் மொத்தம்
நசுக்கினாள் முப்பது
கட்டெறும்பை...
வருங்கால நடிகையோ
இந்த முளை?
தன் சட்டையைத்
தானே முறைத்துக்கொண்டு
தன்நகம்-தன்சதை-தான் மட்டுமே
எல்லாம் என்று
உறுதியாக நம்புகிற இந்த முளை
வருங்கால வலைப்பதிவரோ?
இப்பொழுதே குழுசேர்ப்பான்
தானும்தன் குழுவும்தான்
உலகமென்பான்...
அடுத்தவனுக்கு
என்னதெரியும் என்று இறுமாந்திருப்பான்!
அடுத்தவரைக் கண்டுகொள்ளவும்
விரும்பான்; இவனே
வெற்றிபெற்றும் வீணாகும்
முளை.
[தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், சனவரி 1976. சிறிது மாற்றம் பெற்ற வடிவம்]
26.8.05
செருப்பின் இடையே சிறு கல்!
சாலையில் வழுக்கும் விமானத்தைப் போலவே
சகலவித்தைகளையும் காட்டுமெங்கள்
நகரப்பேருந்து,
பக்கவாட்டில் முளைத்த
தலைகளோடும் - வியர்த்த மானுட உடம்புகளோடும்
அந்தக் காலத்தின் அழகுவழிந்த
"ருக்குமணிவண்டி" போலவே,
ஆனால் கொஞ்சம்போல
சலசலத்தும் கலகலத்தும்
அலுப்போடும் ஆயாசத்தோடும்
வந்து சேர்ந்தது.
ஓடிப் பிடிக்க விரைகிறேன்.
அப்பொழுது பார்த்து-
பாதத்தோடு செருப்பும் இழுக்கிறது.
ஓட முடியவில்லை.
இழுத்து இழுத்து நடக்கிறேன்.............
ஓரிரு உடம்புகளை
உள்ளே இழுத்துக்கொண்டு
பேருந்து- என் வாடிக்கை மறந்து
ஓ!...நழுவிப் போகிறது......
எரிச்சலோடு
செருப்பை உதறுகிறேன்.
கிஞ்சித்தும் அலட்டல் இல்லாமல்
வந்து சாலையோரம் விழுகிறது,
ஒரு சிறு பருக்கைக் கல்.
அன்றாடம் எம்
இயல்பான வாழ்வில்
இடையிடும்
அற்பச் சிறுமதியோ, அது?
Sir! Shall I Ask You A Simple Question?
Sir!
Have this tea.
Feel like…smoke.
Get relaxed,
Retreat.
Sir, you are tense…
Push back your seat,
Rest your head,
Stretch your legs,
Hum some tunes.
Enjoy.
Sir, now
A question-
The only question
I put forth,
Will you please answer?
Yes, your wisdom will.
May I be given to understand
Whether you know
“What is Life?”
Do you feel
Of course, that you live
A wholesome
Life?
Or at least have you given
A little time
In your entire life
To gain a
Wholesome perspective
That’s ever New?
[Devamaindhan’s “Theeneer Konjcam ArunthungkaL,” from “Virunthu”(Tamil Magazine)-December, 1974: published in
“UngkaL Theruvil Oru Paadagan”, Jan. 1976: Translated by Mrs. P. R. Kalavathi, Pondicherry]
25.8.05
போன்சாய் மனிதர்கள்
விதவிதமான தொட்டிகளில்மொழிபேசும் நிலைமறந்துஓடிஆடும் வெளிமறந்துசின்னத் திரைமுன்சிலைகளாய் அமர்ந்திருக்கும்போன்சாய் மனிதர்கள்!வீட்டுக்கு முன் அசையும்முருங்கை மரம்கூடஅந்தச்சின்னத்திரையில் வந்தால்தான்கொஞ்சம் பார்ப்பார்கள்! வீடுதோறும்கட்டை குட்டையாய்கறுப்பாய் வெளுப்பாய்சிவப்பாய் மாநிறமாய்,கூடத்தின் தொட்டிகளில்--சாட்டிலைட்டுகள் தாம்மட்டும்விண்ணில் இயங்கி, கீழேமண்தொட்டிகளில் நட்டுஇயக்கும் இந்தபோன்சாய் மனிதர்கள் 21-ஆம் நூற்றாண்டுக்காக.
(28/02/1993: தேவமைந்தன், ''போன்சாய் மனிதர்கள்,'' திசம்பர் 1993)
23.8.05
மக்கள் ஆள்கிறார்களா?
மாதத்தின் முதல் வாரம் மட்டுமே
மனிதராக வாழக்கூடியவொரு
மாதச்சம்பளக் காரரிடம்போய்
கட்டாய வருமானவரி வசூல்.
மடிக் கம்ப்யூட்டரின் 'மெமரி'யில்,
மனிதமூளையால் எண்ணமுடியாத-
எண்ணமுயன்றால் விக்கிக்கொள்ளும்-
சொத்துக் கணக்குகள் குவித்த
உபரி-உதிரி மனிதப்போலிகளிடம்
மண்டிபோட்டுத் தேர்தல்வசூல் மட்டும்தானா?
ரேஷன் கார்டை ஒழுங்குபடுத்த-
மக்களாட்சி மன்னர்களுக்கு
வயிற்றில் அடிபடும்படி
"நாளைக்கு வா!"
"ஒவ்வொரு மாதத்திலும் இந்த இந்தத் தேதிகளில்
இந்த இந்த மணிகளுக்குள் வா! 'க்யூ'வில் நில்!"
என்ற அடுக்கடுக்கு நிபந்தனைகள்.
தொழில் தொடங்கித்தான் வாழ முடியும்
என்றநிலை இளைஞருக்கு 'செக்யூரிட்டி' பிடுங்கல்கள்!
ஊரோடு உலகையும் ஏமாற்றி உலையில் இடுபவர்க்கு--
"சொல்லி அனுப்பினால் நாங்கள் வரமாட்டோமா?"
--உபசாரங்களோடு கோடிக்கணக்கில் கடன்வசதிகள்,
மக்களாட்சி மன்னர்கள் செலுத்தும் வரிப்பணம்,
நரிகளுக்கும் பேராசைப் பேய்களுக்கும்-- வாரிவழங்கல்.
ஒரே ஒரு சந்தேகம்--
தேசபக்தி
குடிசனங்களுக்கு மட்டும்தான்
பரிந்துரையா?
21.8.05
புல்வெளி மலர்கள்
தரையினில் பரந்த
பசுமை வானம்.
பசுமை வானில்
புதியவிண் மீன்கள்,
பலநிறம் பூக்கும்
புல்வெளி மலர்கள்.
நீங்கள்
நடக்கும் பொழுது
மிதிக்கும் பூக்கள்.
நடக்கும் பொழுது
மிதிக்காமல்,
சற்று
ஒதுங்கி நின்றே
உற்றுப் பாருங்கள்.
புன்னகை பூக்கும்
புல்வெளி மலர்கள்......
(தேவமைந்தன், புல்வெளி, 1980)
19.8.05
வேறு வழி இல்லாததாலும்
"கடமையைச் செய்; செய்தபின்
பலனை எதிர் பாராதே" என்பது
'கீதை காட்டும் பாதை'
என்பதால் மட்டும் அல்ல,
வேறு வழி இல்லாததாலும்
எனக்கு மிகவும்
பிடிக்கிறது.
(தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976)
ஓ! வண்டிக்காரா......

திருத்தவா? திருந்தவா!
கவலைகளை வரவேற்றுக்
காபிகொடுத்து உபசரிக்கும்
உங்களை என்னால்
திருத்தவே முடியாது.
உங்களுக்கேற்ப என்னால்
திருந்தவும் முடியாது.
என்வழி எவ்வழி
அவ்வழி நல்வழி.
(தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976)
16.8.05
குமிழிகள்
காற்றில் நிரவி மிதக்கும் குமிழிகள்
என் உச்சந் தலையிருந்து,மேலே.
பார்க்க விருப்பம்தான்.
மற்றவர்களுக்கும் தெரியவில்லை.
என் மிகநெருங்கிய தோழன் தோழிக்குங் கூடத்தான்.
புலப்பாடற்ற யதார்த்தம் இது.
எல்லாரும் உணர்ந்திருப்பார்கள்.
பரபரத்த சாலையில்
இருசக்கர வாகனத்தில் வருகையில்
சிக்னலில் நின்றிருந்தபொழுது
பளிச்சிட்ட எண்ணம்
"பச்சை" விழுந்தததும்
அடித்துப் பிடித்து
வீடு வந்து சேர்ந்ததும்
எழுத்தாகப் பதியுமுன்
"ஞே"என்று கரைந்து
காணாமல் போகிறது.
மூழ்கிப்போன
டீ.வி. சீரியலிலிருந்து
தலையெடுத்து,
"'தொடர்' நாயகியின்
விசும்பல்கள், கேவல்கள்,
"ஓ"லங்கள்,குடும்பங்கள்,
வில்லிகளின் 'க்ளோசப்' முகங்கள்,
கொடூர வக்கணைகள்--
இவை எல்லாவற்றிலிருந்தும்
தற்காலிகமாகவேனும் என்னை
மீட்கவந்த நாயகரே!"--
என்று சொல்லாவிட்டாலும் பரவாயில்லை,
"இந்த முக்கியமான கட்டத்தில் வந்து
'இது'நிற்கிற அழகைப்பார்!"
என்ற முகமொழியோடு--
"ஏன் இவ்வளவு நேரம்?" என்னும்
எப்பொழுதும் கேட்கும்
பதில்வேண்டாக் கேள்வியோடும்
"ஃப்ரண்ட்ஸோ'ட 'டீ'க்குடிச்சிட்டுவந்திட்டீங்கதானே?" என்னும்
பதில்சொல்லக்கூடாத கேள்வியதைக் கேட்டவுடன்.
--தேவமைந்தன்
15.8.05
"டுபுக்"கு:முதலில் சொன்னவர் பாரதிதான்!
புலப்பாடு : இரண்டு
எழுத்தாளர் ப.ரா.கலாவதி என்னிடம் வேடிக்கையாக ஒரு கேள்வி கேட்டார்: "டுபுக்கு'ன்னு மொதமொத'லா சொன்னவர் யாரு?"... வழக்கமான சாமர்த்தியத்துடன், "நீங்க சொல்லுங்க பார்க்கலாம்!" என்றேன். அவர் சொல்லத் தொடங்கினார். "ஜகத் சித்திரம்"என்கிற சிறு நாடகத்தில்தான் பாரதி, நாகணவாய்[இன்றைய மைனா] சொல்லுவதாக "டுபுக்(கு" சொன்னார். "டுபுக்! பாட்டைக் காட்டிலும் ரசமான தொழில் வேறில்லை" என்ற வசனந்தான் அது. கிளி, குயில்கள்,குருவிகள்,நாகணவாய், காக்கை,மற்ற பறவைகள்,அணிற்பிள்ளை,பசுமாடு,எருமைமாடு-- இவர்களே ["இவைகளே" என்று இலக்கணப்படிச் சொல்ல மனசு வரவில்லை] கதாபாத்திரங்கள். கிளி சொல்கிறது:"தோழர்களே! தன்னைத்தான் மனத்தால் துன்புறுத்திக் கொள்வதைக்காட்டிலும் பெரிய பேதைமை வேறில்லை!"
எருமைமாடு கேட்கிறது:"பட்சிஜாதிகளுக்குள்ள சந்தோஷமும், ஜீவ ஆரவாரமும்,ஆட்ட ஓட்டமும், இனிய குரலும் மிருக ஜாதியாருக்கும், மனுஷ்ய ஜாதியாருக்கும் இல்லையே! இதன் காரணம் யாது?" அதற்குப் பதிலாகத்தான் நாகணவாய்ப்புள்[மைனா]:"டுபுக்! வெயில், காற்று,ஒளி இவற்றின் தீண்டுதல் மிருக மனிதர்களைக் காட்டிலும் எங்களுக்கு அதிகம். எங்களுக்கு உடம்பு சிறிது. ஆதலால் தீனி சொற்பம்; அதைச் சிறிது சிறிதாக நெடுநேரம் தின்கிறோம். ஆதலால் எங்களுக்கு உணவின்பம் அதிகம். மிருக மனித ஜாதியார்களுக்குள் இருப்பதைக் காட்டிலும் எங்களுக்குள்ளே காதலின்பம் அதிகம்.......இருந்தாலும் கிளியரசு சொல்லியதுபோல், காலனுக்குத் தூதனாகிய மனக்குறை என்னும் பேய் எங்கள் குலத்தையும் அழித்துவிடத்தன் செய்கிறது. அதற்கு நிவாரணம் தேடவேண்டும். கவலையைக் கொல்வோம். வாருங்கள். அதிருப்தியைக் கொத்துவோம், கொல்லுவோம்!"...... மற்ற பறவைகளும் அதை வழிமொழிந்து கோஷமிடுகின்றன. விக்கிரமாதித்தன் மற்ற உயிர்களின் மொழியும் அறிந்திருந்தானாம். அடுத்து, பாரதிதான் போல. கேட்டுவிட்டுச் சும்மா இராமல் என் ந்ண்பரான விலங்கியல் துறைப் பேராசிரியரிடம் இதைச் சொன்னேன். முறைத்துப் பார்த்துவிட்டுச் சொன்னார்: "ஏங்க! ஒங்களுக்கெல்லாம் கற்பனை'ய விட்டா வேற போக்கிடமே இல்லியா? பறவெ--மிருகம், இதுக்கெல்லாம் நமக்குள்ள அத்தனெ கோளாறும் இருக்குதுங்க! கவலெ இருக்குன்னா, மனுசனுக்குள்ள அத்தினியும் இருக்குன்னு அர்த்தம். கண்டுபுட்சீங்களா?[புதுவைப் பேச்சுவழக்கு-'தெரிந்துகொண்டீர்களா' என்று அர்த்தம்] நமக்கு என்னென்ன சர்ஜரி பண்றாங்களோ அத்துனியும் அதுகளுக்கும் பண்றாங்க..." என்று. நமநமத்த வாய் சும்மாயிராமல் கேட்டது:"ஏங்க! அப்போ உங்களப்போல அங்கயும் இருக்காங்க போலிருக்கு!" அவ்வளவுதான். ஜிவுஜிவுத்தது அவர் முகம். "இதுக்குத்தான் தமிழு ஆளுங்களோட நா' பேச்சே வச்சிக்கிறதில்லெ! சுத்த அன்சயின்டிபிக் பேர்வழிங்க! எப்பய்யா நீங்கள்'ளாம் ஒலகத் தரத்துக்கு வரப்போறீங்க?" என்று நொந்து கேட்டுவிட்டு நடையைக் கட்டினார். ம்..ம்... நல்லவேளை பாரதி இப்பொழுது இல்லை. அவர் ஒன்றும் இதற்காகக் கவலைப்பட்டிருக்க மாட்டார். அவர் விளாசும் விளாசலில், வேறு துறையில் பணிபுரிந்ததாலேயே தான் "ரொம்பவும் ஒஸ்தி" என்ற நினைப்பில் இருக்கும் நண்பர்தான் படாதபாடு பட்டிருப்பார். நன்கு கவனித்துப் பாருங்கள். தமிழுக்கு வந்து 'சேவை'புரியும் பிறதுறை நண்பர்கள் பலர் எப்பாடுபட்டாகிலும் 'யாப்பு' கற்றுக்கொண்டு மரபுக்கவிதைகள்தாம் இயற்றுவார்கள்; இலக்கணத்தில் மட்டுமே தீவிர ஆர்வம் காட்டுவார்கள். 'யூனிகோடு' பற்றிய விவரம் கேட்ட வேறொரு நண்பருக்கு, "என்கோடு,உன்கோடு,யுனிகோடு,தனிகோடு" என்ற மின்கட்டுரையைக் குறுவட்டில் பதிந்து தந்தேன். போட்டு வாசித்துப் பார்த்துவிட்டு வந்து சொல்கிறார்: "உம்மைப் பற்றி நான் வச்சிட்டிருக்கிற அபிப்ராயம் சரிதான்! என்னய்யா நீர் கொடுத்த சித்தூரார் கட்டுரை'ல பாய்ண்ட்ஸ் 'நெல்லா'ருந்தாலும், நடை வக்கணையா'ல்ல இருக்கு! இப்படியெல்லாம் எழுதலாமோ"... பழக்கப்பட்ட என் வாய் மீண்டும் நமநமத்தது. சொன்னேன்: "அவர் உங்களுக்காக எழுதல்லே! எல்லாருக்காகவும்தான் அப்படி எழுதறார். நீங்க'ள்ளாம் சொல்ற நடை'லே அவர் அந்த யூனிகோடு பாடங்களை எழுதியிருந்தா உங்க க்ளாஸுக்கு நம்ம பசங்க கொடுக்கிற 'ரெஸ்பான்ஸ்"தான் கெடைக்கும்...வுடுங்க!..'போர்'அடிக்கிற சமாச்சாரத்தையும் 'இண்டரெஸ்டிங்'காகச் சொல்'ற நடை அது! உங்களுக்கு அதெல்லாம் வராது!"...அதுசரி, அது ஏன் இவர் முகமும் ஜிவுஜிவுக்கிறது?
14.8.05
ஆதலால்.......
முயற்சி செய்து முயற்சி செய்து
தோற்றே போனேன்.
என் 'உள்'ளில் அந்த முகம்,
வேறெந்த முகத்தையும்--மட்டுமல்ல
வேறெந்த முகம்குறித்த தரவுகளையும்கூட,
ஞாபகப் பேழையுள்
எனது 'நான்'
சேமிக்க விடாமல்
அலம்பல் செய்கிறது.
ஏன் என் தோழி--என்
ஏழுவயது முதல்,
சரசக்காவின்
நொய்யல் ஆறுநோக்கிய
நெடுஞ்சாலையோரத்து வீட்டில்
சந்தித்துப் பழகினாள்?
தன்னை எனக்கு உணர்த்தாமல்
என்னையே எனக்கு உணர்த்திவிட்டாள்?
என் தோழி, எனக்குத்
தோழியாகவே நீடித்து இருந்தாள். ஆனாலும்
கணம் ஒருபாழில் நினைவிழந்து போனாள்.
கால இடைவெளியும்
மரண மறதியும்
எங்கள் நட்புக்குத் தம்மை
விட்டுக் கொடுத்தன--
இன்றிருக்கும் நான்
அன்றிருக்கவில்லை ஆதலால்.
10.8.05
புலப்பாடுகள்
புலப்பாடு: ஒன்று:-
தொடரும் கணங்கள்
காற்றைப் பிடிக்க
எழும்பி
வீழும் கடலலைக்
கணங்களாய் -
கவிதை ஊற்றைப்
பிடிக்க
உள்வெளி ஆழ்ந்தேன்.
கணங்கள் சிலவற்றில்
கரைந்து போனதாய்க்
கருதிக் கொண்டு
காணாது போனேன்.
ஆமாம்! நம்ப முடியாதுதான்.
தேடிவருகிறேன் இன்றும்
இன்னொரு என்னை.
கைவாளுமில்லை உரைவீச்சுமில்லை
சிறகுகள் முளைத்த
சிந்தனை நெருப்புமில்லை
ஜோடனைகள் மறந்த
என் கவிதைகள்
வெறும் புலப்பாடுகளே.
உணர்த்துதல்கள்
பூட்டன் பூட்டிகள்
தாத்தா பாட்டிகளாகியும்
தாத்தா பாட்டிகள்
அம்மா அப்பாக்களாகியும்
தங்களைத்தான்
உணர்த்தினார்கள்.
அம்மா அப்பா வழியாகவே
நாம்தான் அவர்களென
உணர்ந்து கொண்டோம்.
பேத்தி பேரன்களும்
அப்படித்தான்
நாம்தாம் தாமென்றுணரப்
போகிறார்கள்.
இன்னுமொரு முப்பது
வருடங்களுக்குப் பின்னால்
'புரொகிராம்'கள்
பரம்பரை மரம்
வரைந்து காட்ட -நாம்
இப்பொழுதுள்ள நம்மை
அப்பொழுதும் புரிந்துகொள்வோம்.
9.8.05
திருநள்ளாற்றுக்காக வந்த பிரான்சுத் தங்கையுடன்...
இப்பவும் நான் சுறுசுறுப்பாக இயங்கிகொண்டுதான் இருக்கிறேன். மதிய உணவு உண்டபின் சற்று நேரம் ஓய்வெடுப்பது, எனக்கும் பழக்கம் தான். ஆனால் ஒரு மாதமாக ஓய்வு எனக்கு 'டாட்டா' காட்டிவிட்டது காரணம், என் ஓரே தங்கை பிரான்சிலிருந்து விடுமுறைக்கு வந்திருப்பதுதான். ஒவ்வோர் ஆண்டும் வருபவள்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புதிய நேர்த்திக்கடனோடு வருவதில் அவளுக்கு இணை அவளேதான்.
இந்த முறை, தன் மூத்த மகளோடும் வருங்கால மருமகனோடும் வந்திருந்த அவளுக்குப் புதிய நேர்த்தி. திருநள்ளாற்றுக்குப் போய், அங்குள்ள நளதீர்த்தத் திருக்குளத்தில் தன் மகளும் வருங்கால மருமகனும் முழுக்குப் போட்டு , அணிந்துவரும் (பிரான்சில் வாங்கிய) புத்தாடைகளை அந்தக் குளத்திலேயே கழித்து விடுவதென்பதுவே அது. இது மாதிரியான நேர்த்திகளால் லாபம்தான், மற்றவர்களுக்கு. இப்படிக் கழிக்கும் துணிகள் பத்து லட்சம் ரூபாய் ஆண்டு ஏலத்துக்குப் போவதுடன் புத்துணர்ச்சியும் புதுப்பொலிவும் 'ஊட்ட'ப்பெற்று, வாரக் கடைசிகளில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் 'ஓஹோ'வென கூட்ட நெரிசலுடன் நடத்தப்படும் ஞாயிறு அங்காடிகளில் நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன என்று சனீஸ்வரர் தரிசனப் பகுதியைக் கவனிக்கும் முக்கியமானவர் ஒருவரால் கிசுகிசுக்கபட்டதைப் பட்டவர்த்தனமாக அதிகாரி ஒருவர் பரசியமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். போதாதற்கு, அந்த 'முக்கியம்' சனீஸ்வரர் சந்நிதிக்கு இடதுபுறம் சற்றுத்தள்ளி அமர்ந்துகொண்டு பிரசாதம் தருவதுபோல் உடல்மொழியை உருவாக்கிக் கொள்வாராம். சனீஸ்வரரை மெய்மறந்து துதித்துக்கொண்டிருக்கும் பக்தைகளின் கவனத்தை ஈர்த்து, சந்நிதியைவிட்டே அவர்களை வெளியேற்றிவிட்டு, தன் 'சகா'க்களைப் பார்த்து "எப்படி என் சாமர்த்தியம்?" என்பதுபோல் சேட்டைவேறு செய்வாராம். இதைமட்டும் கொஞ்சம் வேதனையோடு சொன்னார். பாவம், அவர் மனைவியும் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவர்போல் இருக்கிறது.
என் 'பிரான்சுத் தங்கை' அதுகுறித்தெல்லாம் சட்டையே செய்யாமல் தன் காரியத்திலேயே குறியாக இருந்தாள். நான் நினைத்ததற்கு மாறாக அவளின் மகளும் வ.மருமகனும் ஆனந்தமாகவே அந்த எண்ணைக்குளத்தில் "முங்கி முங்கி" எழுந்து துணிகழித்து மாற்றுத்துணியணிந்தனர். "ஏண்டீ! நீ மட்டும் முங்கவில்லையா?" என்று நான் கேட்டதற்கு ஒரு மாதிரி முறைத்துவிட்டு, "நாந்தான் மாத்தத் துணி கொண்டு வரலியே! நீயாவது ஞாபகப்படுத்தக்கூடாதா?" என்று என்மேலேயே பழி போட்டாள். அதுவும் அவளுக்குக் கைவந்த தந்திரம். அதைக்கேட்ட அவள் மகளுக்கும் வ.மருமகனுக்கும் ஒருவித திருப்தி -முகத்தில். பிறகு என்ன? நெற்றுத் தேங்காயின் கண்ணொன்றின் 'பொக்கை'மேல் கட்டிக்கற்பூரம் ஏற்றி க் குளத்துப்பிள்ளையார் கோயில் வலதுபுறம் அமைக்கப்பட்டுள்ள 'கண்ணேறுகழி கற்சுவர்'மீது எறிந்து 'சூறை' தெறித்தார்கள். இவையெல்லாம்-- கூட வந்த புதுவை வீடியோ நண்பர் ஒருவரால் 'சிறப்பாக' படம் பிடிக்கப்பட்டன. பிரான்சுக்குத் திரும்பியபின் கணவருக்கும் குடும்ப நண்பர்களுக்கும் போட்டுக்காட்டினால்தான் விடுவார்களாம். எப்படியோ தங்கைக்குத் திருப்தி; எனக்கு இன்னும் அவளோடு இப்படிப்போய்வந்த அசதியும் அலுப்பும் நீங்கவில்லை. ம்..ம்..சொல்ல மறந்துவிட்டேனே.. அந்த சனிக்கிழமை திருநள்ளாற்றுக்கு வந்த பக்தகோடிகளின் எண்ணிக்கை, எங்களையும் சேர்த்து(!) 1,50,000-த்தையும் தாண்டியதாம்! இது எப்படி இருக்கு?
மூளைத் தூய்மை
நேரடியாகவே விஷயத்துக்கு வருவோம்.
வள்ளுவர் சொன்ன புறந்தூய்மை அகந்தூய்மைகளில் இன்று "புறந்தூய்மை ஸ்ப்ரேக்களால் அமையும்" நிலை. அகந்தூய்மைக்கு அகத்தியமான வாய்மை, அண்ணல் காந்தி அடிகளின் தமிழ்நாட்டுப் படங்கள் பலவற்றில் காணக் கிடக்கிறது. நிகழ் உலகில், நாம் சாதிக்கக் கூடியதும் சாதித்தே ஆகவேண்டியதுமான ஒன்றுள்ளது. அதுதான் மூளைத்தூய்மை.
விடிகாலையில், நம்மில் சிலர் எழுகிறோம். ஆகச்சிலர் விடியலுக்கு முன்பே எழுந்து விடுகிறோம். இதற்காகக் கர்வம் கூடாது. முன்னிரவில் குடும்பத் தொடர்களும் பின்னிரவில் குற்றத் தொடர்களும் தொ.கா.'வில் பார்க்கவேண்டிய 'பழக்க அடிப்படை-மன உந்துத'லில் ஜீவிக்கும் சகஜீவிகள் பாவம். விடுமுறைகளில் காலை பத்து மணிக்குமேல் எழுவதே 'பிரம்மப் பிரயத்தனம்.' முழுமையாக விழிப்பு வந்து பொருந்தும்பொழுது நண்பகல் வந்துவிட்டதை அறிந்து கொள்கிறார்கள். அப்புறம், பேப்பர் படித்துக்கொண்டே காபி, இத்யாதிகள்.
இதில் ஒரு தொடர் நிகழ்வு நிகழ்ந்தேறிக்கொண்டே இருக்கிறது. கண்திறந்து கொண்டபின்பு, நம் மூளையில் தொடர்ந்து செய்திகள் கொட்டப்பட்டுக்கொண்டே உள்ளன. குறிப்பிட்ட ஒரு செய்தித்தாளையோ, தெரிவுசெய்த ஒரு தொ.கா. அலைவரிசையையோ வாசிக்கும்/பார்க்கும் நண்பரொருவரிடம் நீங்கள் ஏதேனும் பிரச்சினையொன்றை விவாதித்தீர்கள் என்றால், அதற்கு அவர் சொல்லும் பதில் -- அவர் தொடர்ந்து வாசிக்கும் பத்திரிக்கையின் கோட்பாடாக இருக்கும்; அவர் தொடர்ந்து பார்க்கும் தொ.கா.'வின் பின்னணியில் உள்ள கட்சி/குழுவுடைய மறைமுகப் பிரச்சாரமாக இருக்கும். சென்ற நூற்றாண்டின் நாற்பது-ஐம்பதுகளில் -- 'பெரிசு'களாக இன்றிருக்கும் அன்றைய இளைஞர்கள், தங்களின் மீசையைக்கூட கட்சி பாணியில் வைத்தார்கள். இன்று செல்பேசியாகட்டும், தெருவிளம்பரமாகட்டும், நாட்காட்டியாகட்டும்,எதுதானாகட்டும் - அதில் செய்திகள்,செய்திகள்! இந்தச் செய்திக் குப்பைக் கழி வுகள் நாம் அறியாமலேயே நம் மூளைக்குள் கொட்டப்படுவதிலிருந்து நம் மூளைகளைக் காப்பாற்றிக் கொள்ள "யாதானுஞ் சற்றே" வழியிருந்தால் "கூறீரோ!"..............
Subscribe to:
Posts (Atom)