7.2.06

என் முதல் நாள் கல்லூரிப்பணி அநுபவம்- தேவமைந்தன்

என்னை இது தொடர்பாக எழுதவைத்தவர் சுதாகர். ''அனுபவம் வழுக்கை விழுந்தபின் கிடைக்கும் சீப்பு'' என்ற சொலவடை ஒன்றையும் சொல்லியிருந்தார். அது கல்லூரிக் கல்வி அநுபவத்துக்குப் பொருந்தாது என்று நினைக்கிறேன். என் தலைக்குப் பொருந்தவே பொருந்தாது. ''டையடிக்கக் கூடாதா?'' என்று நண்பர்கள் நொந்துபோய்க் கேட்கும்படியான தலைதான். நரைத்துப் போனதற்கும் பரம்பரைதான் காரணமே தவிர, செய்த பணி அல்ல. நேற்று பின்மாலைப் பொழுதிலும்கூட, பல்கலை. ஆய்வு செய்யும் என் பழைய மாணவர் நெடுநேரம் தொலைபேசியிருந்தார். அவருடைய மேற்பார்வையாளரிடமிருந்து[guide] விலகி அவ்வப்பொழுது, தாயைத்தேடி ஓடிவரும் கன்றுபோல், வீடு வருவார். நெடுநேரம் பேசியிருந்து, மீண்டும் தன்னுடைய ஊக்கம் என்ற 'பேட்டரி'யை 'ரீசார்ஜ்' செய்து போவார். என் 21 -ஆவது வயது முடிந்த சில மாதங்களில் புதுவை அரசுக் கல்லூரிப்பணியில் சேர்ந்துவிட்டதற்குக் காரணம் -- தொடக்கப் பள்ளி நிலையிலேயே 'டபிள் ப்ரமோஷன்' இருமுறை வாங்கிவிட்டதும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1969 ஏப்ரலில் எம்.ஏ. தேர்வெழுதிவிட்டு 'டைபாய்'டில் விழுந்து தேறும்பொழுது வந்த 'ரிசல்ட்'டில் உச்ச மதிப்பெண் பெற்ற கையோடு, சைதாப்பேட்டையில் என் பி.ஏ. அரசியல்(B.A. Political Science) ஆசிரியர் பேரா.தியாகராஜனைச் சந்தித்து ஆசீர்வாதம் வாங்கப்போக, அன்று சனிக்கிழமையாக இருக்க, அவர் தான் வாசித்துக் கொண்டிருந்த 'இந்தியன் எக்ஸ்பிர'ஸின் சனிக்கிழமை சிறப்புப் பிரதியில் புதுவை மாநில அரசின் கல்விச் செயலர் திரு ஜெயின் அவர்கள் தந்திருந்த விளம்பரத்தைக் காட்டி, அவரே வெள்ளைத்தாள் ஒன்றில் விண்ணப்பம் எழுத, நான் [செய்ததெல்லாம்] கையெழுத்திட்டு ‘கவர்’ வாங்கி அதில் அதைப்போட்டு அஞ்சல் தலை ஒட்டி அஞ்சல் செய்து விட்டதும் என்ற 'மிகவும் - தற்செயலான - சங்கிலித் தொடர் நிகழ்ச்சி'(Synchronicity) மட்டுமே. ''உரிய பொழுதில் எதுவும் பழுக்கும்'' என்று என் அம்மா சொல்வார்கள். அது நடந்தது. அவ்வளவுதான். அடுத்த சில நாட்களில் புதுச்சேரி நேர்காணல்.. புதுச்சேரி மாநிலம் என்பதால் என் திறமைக்கு வேலை கிடைத்தது. முதல்நாள் கல்லூரிக்குப்போய் முதல்வரிடம் உரியவற்றைத் தந்துவிட்டு, முதல் கையெழுத்தைப் போட்டுவிட்டு, துறைக்குச் செல்லும் வழியில், ' நோட்டீஸ் போர்ட்' பார்க்கலாமே என்று போய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு தடித்த கை, என் தோள்மேல் விழுந்து பற்றிக்கொண்டது. திரும்பினேன். ஆஜானுபாகுவாக மாணவர் ஒருவர். நானும் அவரும் அடுத்தடுத்து நின்றால் 10 போல் இருப்போம். நல்ல வேளை........ ஒன்று கூட... ' 'என்னப்பா கம்ராது! (பிரஞ்சில் ‘தோழா!’) என்ன... இன்னைக்குத்தான் வரீயா! என்ன குரூப்பு? தா பாரு! திரும்பி போறபோது நேரா பூடாதே! அதோ அந்த கொன்ன[கொன்றை] மரம் பக்கம் வந்து போவியாம்..[ரேகிங்]'' என்றார் அவர். ''சரிங்க! நான் நாலாம் க்ரூப்பு'ங்க(பி.யூ.சி. [எ] புகுமுக வகுப்பு - 1969-ஆம் ஆண்டு) வந்துடறேங்க!'' என்று சொன்ன பிறகுதான் அவர் 'பிடி' நெகிழ்ந்தது.. ''அக்காங்..'' என்று விடுவித்து அனுப்பினார். துறைக்குப் போனபின் சிரித்துக் கொண்டே வரவேற்ற தலைவர் பேரா. ம.ரா. பூபதி, எனக்குக் கொடுத்த முதல் வகுப்பே அந்த நாலாம் குரூப்'தான். போய் வருகைப் பதிவெடுத்தபொழுது அகரவரிசைப்படி முதலாவதாக இருந்த மாணவர், பெயர் சொன்னதும், ஆஜானுபாகுவாக எழுந்து, ஆனால் சங்கடத்துடன் நெளிந்து வளைந்து நின்றார். தோளில் கை போட்டு அழைத்தவர். நான் காட்டிக் கொடுக்கவில்லை. அதற்கப்புறம் அவர் என் முதலாவது மாணவராக மட்டுமே நடந்துகொள்ளாமல் தொடர்ந்து தோழராகவே நடந்து கொண்டார். 36 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இன்னும் பசுமையாக இருக்கிறது அந்த முதல் நாள்; முதல் வகுப்பு. ****** நன்றி: மரத்தடி மடற்குழு.

No comments: