8.10.05

'முட்டாள்கள் தினம்' - படையல்கள்

(இலக்கணம்) முட்டாள் எனப்படுவோன் யார்எனின் மூளையில் யாதொன்றும் வையா தவன் தலைக்கனம் மன்னார்குடியில் மருத்துவர் ஒருவர். அறுவை மருத்துவம் தேர்ந்த வித்தகர். அவரிடம் ஒருநாள் - நொந்தே ஒருவர் நோயால் வந்தார். நோய்ப்பெயர் 'தலைக்கனம்;' அறுவை நடந்தது; மருத்துவர் திகைத்தார்; உள்ளே மூளையே இல்லையாம். பெரும்புகழ் நடிகை அரவங் காட்டில்ஓர் அழகிய பெண்ணாள்; சென்னை சென்று 'பெரும்புகழ்' ஈட்டவே 'சேட்'டிடம் அழகை அடகாய் வைத்தாள். ஆயிரம்பத்து அடகால் பெற்றவள் மீண்டும் இதுவரை மீட்கவே இல்லையாம். இப்பொழுது அவளோ பெரும்புகழ் நடிகை. காலாட்டி காஞ்சி புரத்தில் காலாட்டி ஒருவர். செஞ்சியில் நாடி சோதிடம் பார்க்கவே சென்றார். சுவடியில் தேடிக் கண்ட சோதிடர் - "முன்னர்ப் பிறந்த பிறப்பில் நீங்கள்,ஓர் பஞ்சகல்யாணிக் குதிரை!" என்றார். "அப்படி யானால் அடுத்த பிறப்பில் என்ன ஆவேன்?" என்றார். சுவடி தேடிய சோதிடர் கண்டார். தயங்கினார் சொல்ல. இவர்வற் புறுத்தவே, சொன்னார்; " கழுதையாய்ப் பிறந்துதான் கால்களை ஆட்டுவீர்!" நூலாசிரியர் குட்டிகள் போடும் பன்றியின் திறமை தோற்கும் படியாய் நூறிரு நூறு புத்தகம் 'போட்டவர்.' பத்துநூல் வெட்டிப் புதியநூல் பதிப்பார். பட்டம் விருதுகள் பற்பல 'வாங்குவார்.' ஆண்டவர் ஒருநாள் அவரது கனவில் நாடியே வந்தார்; "மெச்சினேன் பெருமை! மகனே! என்ன வேண்டுமோ அதுகேள்! எதுவேண் டினும்அது தருவேன்!" யோசித்துப் பார்க்கவும் நேரம்இல் லாதவர் உடனே கேட்டார்: "ஆண்டவ ரே!உம் அத்தனைப் பட்டப் பெயர்களும் புராணம் பற்பல உம்மைப் புகழும் கதைகளும் எனக்கே எனக்காய் வாய்த்திடல் வேண்டும்?" அதிர்ச்சி உற்ற ஆண்டவர் கேட்டார்: "பிறகு நான்,என் செய்ய?" 'சுயதம் பட்டம்' சற்றும் கூசாமல் சொன்னார்: " உலகில் இருப்பீர்; எனது நூல்கள் எல்லாம் தருகிறேன். படித்து மகிழ்வீர்!" என்றார் பெருமையாய். அடுத்தொரு சத்தம். புகையின் நடுவில் ஆண்டவர் மறைந்தார்; நம்மவர் விழித்தார். (தேவமைந்தன்,ஏப்ரல் 1, 1975: உங்கள் தெருவில் ஒரு பாடகன், சனவரி 1976. திருத்தம் பெற்றது.)

1 comment:

b said...

மன்னார்குடி மருத்துவர் என்றதும் எனக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்தன.

மன்னார்குடியில் புகழ்பெற்ற இரண்டுரூபாய் மருத்துவர் என்றால் சிறு குழந்தையும் கைகாட்டும். ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றிவிட்டு பின்னர் வந்து மன்னார்குடியில் தனி மருத்துவமனை திறந்து அறுவை சிகிச்சையின்போது கத்திரியை உள்ளே வைத்து தைத்துவிட பாதிக்கப்பட்டவர்கள் கேஸ்போட்டு வென்றுவிட அன்று முதல் அரை(!)யானார்.

பேச்சு நன்றாகப் பேசுவார். 2ரூபாய்க்குமேல் கேட்க மாட்டார். எல்லா மருந்தும் மாத்திரையும் அவரிடம் இருக்கும். எந்த இடத்தில் வலியோ அதே இடத்தில் ஊசி போடுவார்!!! நொடியில் குணமாகும். ஏழைகளின் டாக்டர் அவர்.