28.4.06
சித்தரும் சூஃபியரும் - நிறைவுப் பகுதி
சித்தரும் சூஃபியரும்
பேராசிரியர் அ. பசுபதி
(தேவமைந்தன்)
தொடர்ச்சி ...
சித்தர் பாடல்களில் கலப்படம்
சித்தர் பாடல்களின் பதிப்புகளிலும் அதற்கு முன்னர் அவற்றைச் செவிவரலாறாகக் கேட்டு எழுதிய பதிவுகளான ஓலைச்சுவடிகளிலும் காலந்தோறும் கலப்படம் நிகழ்ந்து வந்திருக்கிறது. அதனால்தான் கயிலாயக் கம்பளிச்சட்டைமுனி நாயனார் போன்ற சித்தர் பாடல்களில் முன்னுக்குப் பின் முரண்களும் கருத்தோர்மைச் சிதைவும் மிகவும் கொடுமையாக ஏற்பட்டுள்ளன. சான்று:
“மயங்குவான் பொன்தேடப் புரட்டுப் பேசி
மகத்தான ஞானமெல்லாம் வந்த தென்பான்;
தயங்குவான் மண்ணாலே சார்வு காணான்
சாதகமா யோகத்திற் சார்ந்தே னென்பான்”
என்றும்,
“ஆரப்பா உலகத்தில் ஞானி யுண்டோ?
ஆராய்ந்து நான்கண்டே னென்பார் கோடி;
ஏரப்பா உழுத(ல்)லோவெள் ளாமை யாகும்?
ஏரில்லான் அறுத்தடித்த கதையும் ஆச்சே!”
என்றும் வருபவை அவருடையவை.
ஏரண ஞாயம் சுட்டும் கலப்படம்
மேலே உள்ள பாட்டின் மூன்றாவதும் நான்காவதும் ஆன அடிகளில் கயிலாயக் கம்பளிச்சட்டைமுனி நாயனார் உலகோர்முன் வைக்கும் ஏரண ஞாயம் மிகவும் துல்லியமானது. ‘அங்கை நெல்லி’யெனும் மற்றொரு ஞாயம் போல ‘நெற்றியடி’ அடிப்பது. கொங்குப்புலவர் ஆன நா. வையாபுரியாரின் தலைமாணாக்கர் அறிஞர் கு. நடேச(க் கவுண்ட)ர் இயற்றிய ‘நியாயக் களஞ்சியம்’ என்ற அரிய நூலை முழுவதுமாக வாசித்தால், இதில் பொதிந்துள்ள ஏரண ஞாயம் ‘பொறி தட்டியது போல’ப் புலனாகும். இவ்வாறு ஆழ்ந்தகன்ற நுட்பத்துடன் பாடிய கம்பளிச்சட்டைமுனிச் சித்தரின் மற்றொரு அல்லது கடைசிப் பாடலாகப் பதிப்புகள் பலவற்றுள் வந்துள்ள மற்றொரு பாடல் இதோ:
“மெளனமென்றீர் எனையாண்ட தட்சிணாமூர்த்தி
மலர்பணிந்தே ஞானமது நூறுஞ் சொன்னேன்
மெளனமென்ற நாதாக்கள் பதத்தைப்போற்றி
வகையோடே நிகண்டாக வாதஞ் சொன்னேன்
மெளனமென்றீர் ஞானம்பொய் யென்று சொல்லி
வாகான செயமண்டி போட்டே நூற்றில்
மெளனமென்ற சமரசத்தான் மக்காள் மக்காள்
வாகான ஞானமுறை முற்றுங் காணே”
கயிலாயக் கம்பளிச் சட்டைமுனி நாயனாரின் முந்திய பாடல் பகுதிகளின் பொருள்கோளுக்கும் இதற்கும் எத்தனை வேறுபாடு?
சித்தர், சித்த மருத்துவர், ‘ஆயுள்வேத’ மருத்துவர்.. அடையாளக் குழப்பம்
தெரிந்தே செய்தார்களா அல்லது தெரியாமல் செய்துவிட்டார்களா என்று தெரிந்துகொள்ள முடியாத ஓர் அடையாளக் குழப்பம் சித்தர் என்பதற்கும் சித்தமருத்துவர் என்பதற்கும் இடையில் உள்ளது. சித்தர்கள் இயற்கை மருத்துவர்களாகவோ, தமிழ் மருத்துவர்களாகவோ திகழ்ந்திருக்கலாம்; தம்மைச் சார்ந்த குமுகத்திற்கு இவ்வகையில் அவர்கள் உதவியிருக்கலாம். சித்த மருத்துவர்களும் ‘ஆயுள்வேத’ மருத்துவர்களும் தொழில்முறை மருத்துவர்கள். அவர்களைச் சித்தர் என்று கொள்ளல் ஏற்புடையதா?
“சித்தர் களஞ்சியம்”
நம் புதுச்சேரியிலுள்ள பிரஞ்சு நிறுவன நூலகத்தில் ஒரு பழைய நூல் உள்ளது. அதன் பெயர் “சித்தர் களஞ்சியம்.” குடந்தை பரஞ்சோதி மருத்துவசாலை பொன்னம்பலனார் (K.S. பொன்னம்பலம் என்றுள்ளது) இயற்றியது. ‘பாரம்’ என்பது எட்டுப் பக்கங்களாக இருந்த பிரித்தானியர் காலத்தில் அச்சியற்றப்பெற்றது. அந்நூலுக்கு மதிப்புரை ‘பார்த்துரை’ என்ற பெயரில் உள்ளது. வழங்கியவர் ‘யதார்த்தவசனி’ இதழாசிரியர் தி(டி).வி. கோவிந்தசாமி(ப் பிள்ளை) அவர்கள்.
சித்தர் களஞ்சியத்தின் பார்த்துரை
அந்தப் ‘பார்த்துரை’யின் பகுதி வருமாறு:
“கும்பகோணம் வைத்திய இரத்தினம் எனும் நற்பெயர் படைத்த ஆயுள்வேத பண்டித சிகாமணியாகிய மகா-ள-ள-ஸ்ரீ பொன்னம்பல பண்டிதர் பிரசுரம் செய்துள்ள “சித்தர் களஞ்சியம்” என்னும் நன்னாமம்பூண்ட நூல்பிரதி ஒன்றை நாம் பார்வையிட்டோம். சகல சித்திகளையும் அடைபவர் சித்தர் எனினும் ஆயுள்வேதியர்க்கு சித்தர்நூல் இன்றியமையாத துணைக்கருவியாகும்...”
குழப்பம்
மேலே சாய்வெழுத்தில் வந்த பகுதி, சித்தர்நூலைத் துணைக்கருவி என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. “சித்தர் களஞ்சியம்” நூலிலோ ஓகமுறைகளும் இருக்கை[ஆசனம்] முறைகளும் மருத்துவ முறைகளுமே உள்ளன. ‘காப்பு நேரிசை வெண்பா,’ ‘விநாயகர் துதி,’ ‘பரமசிவ வணக்கம்,’ ‘அம்பிகை தோத்திரம்” என்று தொடங்கி, ‘சித்தர்கள் தோத்திரம்” கட்டளைக் கலித்துறையில் படைக்கப்பெற்று, ‘வழிபடு குருவணக்கம்,’ ‘குருவணக்கம்,’ ‘அவையடக்கம்,’ ‘சரிதை’[சரியை அன்று], ‘கிரியை,’ ‘யோகம்,’ என்ற தலைப்புகளில் பாயிரம் அமைந்து, ‘அதிகாரியின் இலக்கணம்’[ஓகம் செய்யும் அதிகாரம் பெற்றவர்] என்று நூலின் தொடக்கம் ஐந்தாம் பக்கத்தில்தான் அமைகிறது. இந்தப் பக்கங்களுக்கு முன் உரோமன் எழுத்துகளில் பதினாறு பக்கங்கள் நூலைப் பற்றியவை. அவற்றுள் கடைசி மூன்று, ‘விஷயசூசிகா’ என்னும் பொருளடக்கம். எழுபத்தாறு தலைப்புகளில் நூல் இயன்றுள்ளது. எங்கும் ஓகமும் மருத்துவமுமே.
தெளிவான சூஃபியர் வயணங்கள்
சித்தர் குறித்த சிதைவு நூல்கள் இங்கு விற்பனை செய்யப்பெறுவதுபோல் சூஃபியாக்கள் குறித்து எழுதவோ எழுதியதைப் பதிக்கவோ முடியாதபடி பாரசீக மொழிவாணர்களும் அமீரகவாணரும் வளைகுடா நாடுகளில் வாழ்வோரும் விழிப்புடன் இருக்கிறார்கள். குர் ஆன் அருளப்பெற்ற வகை குறித்து எவ்வகைக் குழப்பமும் சூஃபியருக்கு இல்லை. பதிப்புகள் எவற்றிலும், ஏன், இணைய/வலைத் தளங்களிலும் கூட முரண் சிறிதுகூடப் பார்க்க முடியாது.
வலையிதழ்ப் பதிப்பும் அச்சிதழ்ப் பதிப்பும் - விழித்துக் கொள்க!
இங்கு இதைக் குறிப்பிட வேண்டிய அகத்தியம் இருக்கிறது. ‘இருவேறு உலகத்தியற்கை’ என்று வள்ளுவர் மொழிந்தமை நிகழ் உலகில் வேறு ஒன்றனுக்கும் பொருந்தும். அதுவே எழுத்துலகம். ஒருபக்கம் அச்சிதழ். மறுபக்கம் இணைய இதழ். இரண்டின் அமைப்பு முறையும் வேறுவேறு. அண்மையில் என் படைப்பைத் ‘திண்ணை’ வலையிதழின் இல்லப் பக்கத்[Home]தில் தேடிய நண்பர் சுட்டியைக் கீழிறக்கி மற்றொரு தலைப்பைப் பார்க்காததால் தவறவிட்டார். அச்சிதழ் அவ்வாறன்று அல்லவா? ஆனால் அச்சிதழ் ஆசிரியர்கள், தொடர்ந்து பன்முகமாகப் பரவி வரும் வலை இதழ்களை நோக்கத் தவறினால், அவர்களின் படைப்புகளும் அவர்கள் இதழ்களில் வரும் வேறு படைப்புகளும் படைப்பாளர் பெயர் மாற்றப்பட்டோ, நடை மாற்றப்பட்டோ வேறு எழுத்தாளர் பெயரில் பதிவாகி விடுவதை அவர்களால் தவிக்க இயலாது. ‘சைபர்வெளி’யில் எதிர்காலம் இவர் படைப்பை ‘அவர்’ படைப்பாகவே ஐம்பதாண்டுக் காலத்திற்குப்பின் சுட்டும். இதே நிலை, வலை இதழ்களுக்கு இப்பொழுதே நேர்கிறது. இணையத்தில் வாய்த்துள்ள ஏந்துகளுள் ஒன்றான ‘தேடல்’[Search] என்பதை பயன்படுத்தி, புகழ்மிக்க தமிழ் எழுத்தாளர் ஒருவர், அறிவியல்சார் வலைத்தளங்களிலிருந்து வேண்டிய பகுதிகளைத் தெரிவு செய்து[Select] படி[Copy]பண்ணி, பின் அவற்றை ஒட்டி[Paste], பின்னர் தன் நடைக்கு மாற்றி கட்டுரைகளை அடுத்தடுத்து அறிவியல் தொடர்பாக வெளியிட்டு வருவதை ‘விடுதலை’ இதழின் விழிப்புணர்வுக் கட்டுரையொன்று அம்பலப்படுத்தியது. வலைத்தளங்களில் அவற்றை ஆய்ந்து பதிவிட்டோர், இரவும் பகலும் எத்துணைத் தொல்லைப் பட்டிருப்பர்?
சூஃபியம் - முரண் இன்மை - வலைச் சான்று
இணையஉலாவுபுலங்களுக்குச்[browsingcentres]செல்வோர்[இக்கட்டுரையாசிரியரும் உலாவுபுலங்களிலிருந்து இணையப்பணி புரிபவர்களுள் ஒருவர்தான்], உலாவியில் “கூகிள்.கோ.இன்”[google.co.in] என்று முகவரியைத் தட்டெழுதுக. வரும் ‘கூகி’ளின் தேடல் இல்லப் பக்கத்தில் ‘தமிழ்’ என்று ஆங்கிலத்தில் உள்ள சொல்லைச் சொடுக்குக. ‘கூகிள்’ உங்களுக்குத் தமிழில் நீங்கள் தட்டெழுதும் எதையும் தேடித்தர அணியமாகிவிடும். ‘சூஃபியம்’ என்று இடுங்கள்.இப்பொழுது,‘தமிழோவியம்’[http://www.tamiloviyam.com]வலையிதழ்
வெளியிட்டுள்ள “தொடர்: அமானுடகேள்விகளும்,அரைகுறை ஞானிகளும்[குர்ஆன் அருளப்பட்ட விதம்]” என்ற விரிவான விளக்கம் தோன்றும். திருக்குர்ஆன் அருளப்பெற்ற முறை குறித்தும், சூஃபியாக்கள் இறைவேதத்தின் உண்மையான பின்னணியை அறிந்து வைத்தவர்களே என்பது குறித்தும் அத்தொடர் தெளிவாக மொழிகிறது. சித்தர்கள் கூறியவை குறித்து இத்தகைய திண்ணிய, கட்டுப்பாடான, ஒழுங்கான, ஓர்மையுடன் கூடிய பதிப்பு முயற்சியே இன்றைய தேவையாகும்.
***********************************
(நன்றி: வெல்லும் தூயதமிழ் - இலக்கிய மாத இதழ் மேழம் 2037 / மே 2006)
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்ல அருமையான கருத்துக்கள். புதிய கருத்துக்கள். நன்றி!
Post a Comment