3.4.06

சித்தரும் சூஃபியரும் - தொடர்ச்சி

சித்தரும் சூஃபியரும் -பேராசிரியர் அ. பசுபதி (தேவமைந்தன்) சென்ற இதழின் தொடர்ச்சி.. ஆனால் வள்ளலாரோ தன் உடல்முழுவதையும் வெண்மையும் தூய்மையும் நிரம்பிய ஆடையால் போர்த்துக் கொண்டே இயங்கியவர்; தலையையும் எப்பொழுதும் முக்காட்டிட்டுக் கொண்டவர். தன் அன்றாட வாழ்வில் உணவு முதலிய எல்லாச்செயல்களிலும் தூய்மையையும் ஒழுங்கையும் கடைப்பிடித்தவர். அவ்வாறு இல்லாதவர்கள் உயிரிரக்க ஒழுக்க[சீவகாருண்ணிய ஒழுக்க]த்தையோ அறச்செயல்களையோ உணவுவழங்குகை[அன்னதானம்]யையோ செய்யலாகாது என்ற கண்டிப்பை விதித்தவர். ஆகவே, பட்டினத்தார் புகன்ற சித்தர்களின் அகத்தோற்றம்தான் வள்ளலாருக்குப் பொருந்துமே தவிரப் புறத்தோற்றம் பொருந்தாது. பட்டினத்தார் கூற்றுப்படி வள்ளலார் சித்தர் ஆவதோடு மட்டுமல்லாமல், பட்டினத்தார்தம் சித்தர் விளக்கத்தில் உள்ள புறத்தோற்றத்துக்கும் சீர்திருத்தம் வகுத்தார் என்க. சூஃபியியம் எவ்வாறு தோன்றியது? சூஃபியியம் எவ்வாறு தோற்றம் கொண்டது என்பதற்கு முனைவர் க. நாராயணன் அரிய விளக்கம் தருகிறார்: “நம்பிக்கை அதிகாரம் ஆகிய இரு இரும்புக் கரைகளிடையே இசுலாமியச் சமய ஆறு ஓடியது. தடுக்கவோ திசை திருப்பவோ தடைகள் ஏதும் இல்லாத ஆறுபோல் இசுலாம் இயங்கியது. இசுலாமியச் சமயக் கருத்துக்களை முழுமையாக நம்பி நடைமுறைப்படுத்த வேண்டுமே தவிர ஏன் எதற்கு என்ற வினாக்கள் தொடுத்து ஆராயக்கூடாது. மரபாக வரும் இசுலாமியச் சமுதாயப் பழக்க வழக்கங்கள் ‘குர்-ஆன்’ எனும் சமயச் சட்ட நூலுக்கு விளக்கங்களாயின. ‘குர்-ஆன்’ நூலை மீறிய எண்ணங்களை இசுலாம் ஏற்காது. ‘குர்-ஆன்’ தீர்ப்பே இறுதித் தீர்ப்பு. “இசுலாத்தின் இறுக்கமான நம்பிக்கையும் அதிகாரமும் புதிய சிந்தனைகட்கு இடமளிக்கவில்லை. குர்-ஆன் கூறும் சட்டம், காலங்காலமாக வழங்கி வரும் மரபுகள், இசுலாமியச் சமுதாய ஒப்புதல் என்பனவற்றின் செல்வாக்கும் அதிகாரமும் புதிய எண்ணங்கள் எழத் தடைகளாயிருந்தன.”(Harold Titus, Living Issues in Philosophy, p.) ஆமைவேகத்திலும் திரைமறைவிலுமாக சில சிந்தனையாளர்கள் புதிய எண்ணங்களை எழுப்பிச் சமயப் புரட்சிக்கு வித்திட்டனர். இசுலாத்தின் பழைமைப் போக்கு மெல்ல மாறத் தொடங்கியது. நம்பிக்கையும் பகுத்தறிவும் முரண்படும் கட்டங்களில் இசுலாமிய ஞானிகள் சிலர் சமயக் கட்டுப்பாடுகளை மீறிச் சிந்தித்தனர். இறைவனிடம் சரண் புகுந்து அடிமைப் பணி புரிவதைக் காட்டிலும் அருளின் உருவமாக விளங்கும் இறைவனுடன் கலந்து ஐக்கியப்படுவதே சிறந்ததென்றும் அத்தகு ஐக்கியத்திற்குத் துணை செய்யுமாறு சமயங்கள் இயங்க வேண்டும் என்றும் புதிய சிந்தனையாளர் கூறினர். சூஃபியியம் தொடங்கிற்று.”(சித்தர் தத்துவம், மூன்றாம் பதிப்பு 2003, புதுச்சேரி.8., ப.202) சித்தாடல் முதலியவற்றை எதிர்த்த சூஃபியார் அபூ-யாசித் என்ற சூஃபியார் எட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் ஒன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியிலும் வாழ்ந்தவர். இறைவனோடு தம்மை இணைத்துக் கொள்வதைத் தவிர சித்தாடல், மந்திர தந்திரச் செயல்கள் புரிவதில் ஈடுபடல் முதலானவற்றில் சூஃபியர் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கிறார். (மேலது, ப.207) சித்தாடல் வல்லவர்கள் குறித்து... “சித்தாடல் வல்லவர்கள்தாம் சித்தர், ஆனால் சித்தாடல் புரிபவர் எல்லாம் சித்தர் அல்லர்” என்ற ஓர் ஏரணக் கூற்று, சித்தர் மெய்ப்பொருள் உண்ர்ந்தாரிடத்தே நின்று நிலவி வருகிறது. இதற்குமேல் சித்தாடல் குறித்தும் சித்தர் குறித்தும் நாம் மன்றாட வேண்டுவது இல்லை. சித்தர்-சூஃபியர் கருத்து ஒப்பீடு சித்தர் திருமூலரின் கருத்தும் சூஃபியார் குணங்குடி மசுத்தான் சாகிபு அவர்களின் கருத்தும் பல இடங்களில் ஒத்துப்போவதைக் காண வியப்பாக உள்ளது. காட்டாக, “ஊனாகி ஊனினுயி ராகியெவ் வுலகுமாய் ஒன்றா யிரண்டு மாகி உள்ளாகி வெளியாகி யொளியாகி யிருளாகி ஊருடன் பேரு மாகிக் கானாகி மலையாகி வளைகடலு மாகியலை கானக விலங்கு மாகிக் கங்குல்பக லாகிமதி யாகிரவி யாகிவெளி கண்டபொரு ளெவையு மாகி நானாகி நீயாகி அவனாகி அவளாகி நாதமொடு பூத மாகி நாடுமொளி புரியஅடி யேனுமுமை நம்பினேன் நன்மைசெய் தாளுதற்கே வானோரும் அடிபணி தலுள்ளநீர் பின்தொடர வள்ளல்இற சூல்வரு கவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண் மணியே முகியித் தீனே!” [குணங்குடி மசுத்தான் சாகிபு பாடல்கள்: பா.3] என்ற பாடலின் கருத்தோர்மையைப் பின்வரும் திருமூலர் பாடல்கள் காலத்தாலும் இடத்தாலும் முன்னரே கொண்டுள்ளன: “புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப் புகுந்துநின் றான்புகழ் வாய்இதழ் வாகிப் புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப் புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே. தானே திசையொடு தேவரு மாய்நிற்குந் தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந் தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந் தானே உலகில் தலைவனு மாமே. உடலாய் உயிராய் உலகம தாகிக் கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய் இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி அடையார் பெருவழி அண்ணல்நின் றானே.” [திருமந்திரம் -- இரண்டாம் தந்திரம்:10:காத்தல், பா.1-3] பீருமுகம்மது அப்பா அவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சூஃபியருள், அப்பா அவர்கள் பாடிய பாடல்கள் அடங்கிய தொகுப்புகளுள் ஒன்று ‘ஞானரத்தினக் குறவஞ்சி’ ஆகும். அதில் சிங்கன் சிங்கி உரையாடலாக அரும்பெருங்கருத்துக்களை எளிமையான தமிழில் எடுத்துக் கூறியிருக்கிறார். சான்று: “ என்ன விதமாகத் தன்னை மறப்பது சிங்கி? - அது ஒன்றைப் பொருந்தி ஒடுங்கி இருப்பது சிங்கா! என்ன விதமாக ஒன்றைப் பொருந்தலாம் சிங்கி? - அது எல்லாம் மறந்து இருளாய் இருப்பது சிங்கா! “ கண்புருவப் பூட்டும் புருவ நடு - வில் உவமையும் வள்ளலார், திருவருட்பா - ஆறாம் திருமுறையில் ‘கண்புருவப் பூட்டு’ என்ற தலலப்பில் பதினொரு தாழிசைகளில், சித்தர்கள் மிகவும் முகாமையாகக் குறிப்பிடும் நுண்ணுறுப்பு ஒன்றை விளக்குவார். திருக்குர்ஆனில் இதுவே உவமை அடிப்படையில் இடம்பெறுவதாக தேசமானிய, டாக்டர் ஏ. எம். முகம்மத் சகாப்தீன் தக்க சான்றோடு விளக்குவார். கண்புருவப்பூட்டு “ கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு” என்று வள்ளலார் இந்த நுண்ணுறுப்பைக் குறித்து விளக்குவார். ‘நுண்’ என்பது இங்கே ‘நுண்ணுட’லைக் குறிக்கும். செருமானியரான ஆனிமன் ஒப்பண்டு[ஓமியோபதி] மருத்துவத்தை இந்த நுண்ணுடல் அடிப்படையில்தான் உருவாக்கினார் என்பது கருதப்பெறத் தக்கது. கண்புருவப் பூட்டுக்கு வேறுபெயர்கள் ‘சிற்சபை,’ ‘சிற்றம்பலம்,’ ‘விந்து,’ ‘முச்சுடர்,’ ‘முச்சந்தி,’ ‘சபாத்துவாரம்,’ ‘மணிமேடை,’ ‘நெற்றிக்கண்,’ ‘கபாடம்,’ ‘சுழிமுனை,’ ‘சூன்யப்பகுதி,’ ‘பிரமரந்திரம்,’ ‘மகாமேரு,’ ‘மயானம்,’ ‘வரை,’ ‘அம்பலம்,’ முதல் இன்னும் பல பெயர்கள் புருவநடுவுக்கு உள்ளன.[முனைவர் இரா.மாணிக்கவாசகம், சித்தர்கள் பரிபாசை அகராதி, பக்.230-231.] சூஃபியாக்கள் சுட்டும் திருக்குர்ஆன் உவமை இத்தகைய இறைமருமத்தை இறைவன் நபிகள் நாயகம் அவர்களுக்கு வெளிப்படுத்தினான் என்று சூஃபியாக்கள் கூறுவர். அதற்கு அடிப்படையாகப் பின்வரும் திருக்குர்ஆன் பகுதியைக் குறிப்பிடுவார்கள்: “நெருங்கிப் பின்னர் அருகே வந்தார், வளைந்த வில்லின் இருமுனைகளைப் போல் அல்லது அதைவிடச் சமீபமாக அந்த நெருக்கம் இருந்தது. பிறகு அவன் தான் அறிவிக்க வேண்டியவற்றைத் தன் அடியாருக்கு அறிவித்தான்.(53:8-10).” நபிகள் நாயகம் இவ்வுரை வெளியாகும்பொழுது இறைவனுடன் நேர் தொடர்பு நிலையில் இருந்தார் எனவும் அந்நிலையில் இறைவன் ஒரு தெய்வீக மருமத்தை நபியவர்களுக்கு வெளிப்படுத்தினான் எனவும் சூஃபியாக்கள் கூறுவர். இந்திய நாட்டு சூஃபியாக்கள் சிலர் இவ்விதமான இறைஞானத்தை அடையும் ஓர் உறுப்பையும் குறிப்பிடுகின்றனர். இது இரண்டு புருவங்களுக்கு நடுவில் இருக்கும் பகுதியில்(இடையில்) இயங்கும் ஒரு ஞான அங்கமாகும் என்றும், திருக்குர்ஆன், இவ்விரு புருவங்களையும் உவமை அடிப்படையில் இவ்வில்லுக்கு ஒப்பிட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுவர். சூஃபித்துவ நெறியில், இறைவனை ஓர் ‘ஏகாந்த சிந்தனை’ என்றும் ஒளியென்றும் ‘ஆக்கும் சக்தி’யென்றும் வண்ணிக்கப்பெற்றிருக்கிறது.[இறைவனும் பிரபஞ்சமும், இலங்கை 1995, ப.108.] (நன்றி: வெல்லும் தூயதமிழ்[இலக்கிய மாத இதழ்] 2037, மீனம்[ஏப்பிரல் 2006] பக். 19 - 22.)

No comments: