28.4.06
திபேத்தியப் பழமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்
திபேத்தியப் பழமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்
பேராசிரியர் அ.பசுபதி (தேவமைந்தன்)
இமயமலை விசும்பைத் தொட்டுவிடுவதுபோல் காட்சியளிக்கும் நிலப்பகுதியின் உட்பக்கம் விரிந்து பரந்து கிடக்கும் பனிப்பாலைவனமான மலைப்பகுதி, ‘இலே’[Leh] எனப்பெறும் இலடாக்கின் தலைநகர் ஆகும். இந்த ‘இலே’ நகரில் எப்பொழுதும் மிகையான குளிரும் மிகையான வெப்பமும் மாறி மாறி நிலவும்.
மக்களின் பண்பாடு உருவான வகை
இந்திய ஒன்றியத்தின் ஆகப்பெரிய மாநிலம் (முன்பு மாவட்டம் என்றே அழைக்கப்பெற்றது) இலடாக்கு; அதேபொழுது அதன் மக்கள் தொகையோ மிகவும் குறைவு. இப்பொழுது உள்ள மக்கள் தொகை மிகுதி .
1971-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பெற்ற கணக்கீட்டில், இலடாக்கின் 95,876 ச.அ.மா. பரப்பில், நூற்றைந்தாயிரம் மக்களே வாழ்ந்தனர் என்று உள்ளது. உணவையும், விலங்கினங்களுக்கான தீனியையும் வேண்டும் அளவுக்குமேல் உருவாக்கிய மக்கள் அவர்கள்.
கிழக்குத் துருக்கித்தானத்திலிருந்து பயணம் செய்து வரும் ஒட்டக வண்டியொழுகைக்கும், மாந்தருக்கும், அவர்கள் இவர்ந்துவரும் குதிரைகளுக்கும், கோவேறு கழுதைகளுக்கும் போதும் போதும் என்கிற அளவு உணவும் தீனியும் தந்த பின்பும் தங்களுக்கும் தங்கள் வீட்டு விலங்குகளுக்கும் உணவும் தீனியும் மிகுந்திருப்பதைக் கண்டு நிறைவுடன் வாழ்ந்த மக்கள்.
வடக்கே துருக்கித்தானமும்; கிழக்கே சீனமும்; தெற்கே குலு, அமிர்தரசு முதலான இந்திய நகரங்களும்; மேற்கே ஆப்கானித்தானமும், காசுமீரமும் என்ற நிலவியல் நிலையில், ‘இலே’ நகரம், நடுவண் ஆசிய வணிகத்திற்கு ஏற்ற நடுவமாகும். நெடும் பயணத்தால் களைத்துவரும் ஒட்டகங்களுக்கு நல்ல உணவும் நீரும் ஓய்வும் பண்டுவமும் அளிக்கும் புகலிடமுமாகும். இத்தகைய சூழலில், திபேத்திய மொழி மக்களின் பண்பாடு, முற்றிலும் உணவு- உடை- உறையுள் தொடர்பானதாகவும்; மாந்தரை விருந்தோம்புதல் என்பதற்கும் மேலாக விலங்குகளை விருந்தோம்புதல் என்பதைச் சார்ந்ததாகவும் அமைந்திருக்கிறது.
திபேத்தியப் பழமொழிகளுக்கும் தமிழ்ப் பழமொழிகளுக்கும் உள்ள முகாமையான வேறுபாடு
தமிழ்ப் பழமொழிகளில் பெரும்பான்மையும் தூயதமிழ்ச் சொற்களே காணப் பெறுகின்றன. ஒலிப்பும் அவ்வாறே. ஆனால் திபேத்தியப் பழமொழிகளிலோ மிகவும் இயல்பாக திபேத்தியம் அல்லாத மொழிகளின் சொற்கள் ஊடுருவியுள்ளன. எந்த அளவுக்கு மொழி ஊடுருவல் நிகழ்ந்துள்ளது என்றால் ஏற்கெனவே பழமொழிகளில் இருந்த தூய திபேத்தியச் சொற்கள் அகற்றப்பட்டு, அங்கே காசுமீரி, இந்துத்தானி அல்லது துருக்கி மொழிச்சொற்கள் இடம்பெற்று விட்டன.
என்ன கரணியம்?
நிலவியல் அடிப்படையிலும் மொழிநிலையிலும் வேறுபட்ட மக்களுக்கு இடமும் உணவும் தரும் பண்பாடு திபேத்தியருக்கு இருந்ததால், மெல்ல மெல்ல “ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியது போல” ஆனது. பழமொழிகளுக்கே இந்த நிலை என்றால், திபேத்திய மொழி என்ன ஆகியிருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ? இதனால்தான் அவர்களின் பழமொழி - “வருகைதரும் நல்ல வணிகப் பெருமக்களுக்குத் தோழமை காட்டு; களவாணியை விரட்டியடி!” (மறைத்திரு செர்கான் தொகுப்பு: எண்.644) என்று கூறுகிறது. வணிகத்தோடு வந்த மொழிதானே தமிழில் கலப்புக்குக் கரணியமானது? “வந்தவரெல்லாம் சந்தையில் குடியா?” என்ற தமிழ்ப் பழமொழி, சற்றொப்ப இதே கருத்தை உணர்த்துகிறது. திபேத்தில் நான்கு திசைகளிலிருந்தும் வேற்று நாட்டவரும் இனத்தவரும் எளிதில் புக நேர்வதால் அங்கு பழமொழி சற்று விரிவானதாக இருந்து, “களவாணியை விரட்டியடி!” என்பதும் இணைகிறது. இன்று மேற்கு வங்கத்தில் இந்நிலை இருப்பதைப் பார்க்கலாம்.
ஒத்த கருத்து; உணர்த்தல் வேறு!
திபேத்தியப் பழமொழியொன்று, “தன் விரலை வெட்டிக் கொண்டாலும், குருதி வீணாகாமல் பார்த்துக் கொள்வான்!”(மேலது: எண்.656) என்று சொல்கிறது. கஞ்சன் எனப்படும் இவறன்மை உடையவனைக் குறித்துக் கூறப் பெறுவது இது. “அறுத்த விரலுக்குச் சுண்ணாம்பு தடவமாட்டான், ஆண்டி வந்தாலும் பிச்சை போடமாட்டான்!” என்ற தமிழ்ப் பழமொழி, ஒத்த கருத்தை உடையது; ஆனால் உணர்த்துவது வேறாயிருக்கிறது. இந்தப் பழமொழி, ‘கழகப் பழமொழி அகரவரிசை’ நூலுள்(ப.27:எண்.798) இவ்வாறு உள்ளது. மக்கள் வழக்குகள், “அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கிடையாது,” “அறுத்த விரலுக்குச் சுண்ணாம்பு தரமாட்டான்” என்பவையே. ஒத்த கருத்துடைய விரல் குறித்த பழமொழிகள் தமிழிலும் திபேத்தியத்திலும்தாம் உள்ளன. ஆப்பிரிக்கப் பழமொழி ஒன்று, “வெறும் கையை நக்குவாரில்லை” என்று கையளவு போகிறது. அவ்வளவுதான்.( சான்றுகள்: ப. இராமசாமி, உலகப் பழமொழிகள், வள்ளுவர் பண்ணை, சென்னை 1964: சு. இலட்சுமி நாராயணன், உலகப் பழமொழிகள், வானதி, சென்னை 1994). தன் விரலை வெட்டிக் கொண்டாலும், குருதி வீணாகாமல் பார்த்துக் கொள்வதென்பது ‘இலே’ நகரின் குளிர்மிகுந்த பொழுதில் கூடுமானதே.
உயர்ந்தோர் குறித்த திபேத்திய - தமிழ்ப் பழமொழிகள்
“இறப்பைச் சந்திக்கவே நேர்ந்தாலும் சொந்த நல்லியல்பிலிருந்து வழுவ மாட்டார்கள் நேர்மையாளர்கள்!”(மறைத்திரு செர்கான் தொகுப்பு: எண்.988) என்ற திபேத்தியப் பழமொழி, பழமொழி இயல்பில் குன்றி, பொன்மொழி போலத் தெரிகிறது.
“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் / உயிர்நீப்பர் மானம் வரின்” (திருக்குறள்: 969) என்ற திருக்குறள் கருத்தினைத் திபேத்தியர் அறிந்திருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. கவரிமா என்பதைக் கவரிமான் என்று சொல்லக்கூடாது என்றார் மொழிஞாயிறு பாவாணர். ஏனெனில் கவரிமா என்பது குளிர் மிகுந்த நிலப்பகுதியில் மட்டுமே வாழக்கூடியது; ஆப்போலும் தோற்றம் உடையது என்றார் அவர். ஆனால், தமிழ் மரபுரையில், அவர் நேரிலுரைத்த இக்கருத்து காணப்பெற்றிலது.
விலங்குகள் உடம்பில் மயிர் முளைப்பது தொடர்பாக..
திபேத்தியருக்குச் சினம் வந்தால் மற்றவரை “உடம்பில் மயிர் முளைக்காத விலங்கே!” என்று திட்டுவார்களாம். சூழலுக்கும் விலங்கு வளர்ப்பு - விலங்கு விருந்தோம்பல் பண்பாட்டுக்கும் ஏற்பவே வசைமொழியும் பிறக்கும் என்பது மாந்தவியல் பேரறிஞரான மலினோவ்சுகியின் கருத்து.
ஓரிடத்தில் விருந்துச்சாப்பாடு போடுகிறார்கள் என்றால் விழுந்தடித்துக் கொண்டு ஓடுபவர்களைக் குறித்து, “உடம்பில் மயிர்முளைக்காத பன்றியைப் போன்றவர், உணவுக்குப் பின்னால் ஓடத்தானே செய்வர்?” என்றொரு திபேத்தியப் பழமொழி சொல்கிறது.(மேலது, எண்:991)
இழிந்தோரும் விலங்குகளும்
“அடுத்தவர் நலம் எண்ணாதோர், விலங்குகள் போல்வர்” (அதே நூல்: எண்:989), “பருகவும் தின்னவும் மட்டுமே அறிவன விலங்குகள்” (அதே நூல், எண்:990), “சோம்பேறிக் கழுதைக்குப் புல்லைத் தின்னவும் தெரியாது” [எளிதில் களைத்துப் போகிறவனை இவ்வாறு சொல்வர் திபேத்தியர்] (அதே நூல், எண்:367] என்பவை போன்ற பழமொழிகள் எண்ணற்றவை.
‘இலே’ நகரிலும் இலடாக்கு, இலஃகௌல், இசுபிட்டி, நாரிசு சுகோர்-க்சும் ஆகிய ஊர்களிலும் விலங்குகளை வைத்து மாந்தரைச் சுட்டும் பழமொழிகள் எண்ணில என்கிறார் மறைத்திரு செர்கான் அவர்கள்.
தட்ப வெப்பம் விளைவாக...
மிகுந்த குளிர்வீசும் நிலையைப் பெரும்பாலும் பட்டறிவதால்[மிகுந்த வெப்பமும் நிலவும் என்பதை ஏற்கெனவே பார்த்தோம்] திபேத்திய மக்கள், தாம் என்ன சொல்லியும் திருந்தாதவர்களிடம் பின்வரும் பழமொழியைச் சொல்வர்:
“மூக்கின்மேல் குளிர்ந்த காற்று மோதும்பொழுதுதான், உனக்கு அறிவு வரும்!” .(மேலது, எண்: 392)
கடினமான பட்டறிவு அவர்களுக்கு ஏற்படும்பொழுது,
“மண்டைத்தோல் கழன்று மலைகளுக்குப் போகிறது!”
என்ற பழமொழியைச் சொல்வர்.
மடங்களின் தலைவர்கள் பற்றி ..
திபேத்தில் இலாமாசரி என்றழைக்கப்பெறும் மடங்களும் இலாமாக்களின் தலைவர்களும் எப்படிப்பட்டவர்களாம்?
“மடத்தில் வளரும் நாயை அடிக்காதே,
மதகுருவின் பகையைத் தேடாதே!”
இதை அடியொற்றி இன்னொரு பழமொழியும் உண்டு. “ஒருபொருள் மிகவும் தேவையென்று வரும்பொழுது (மடத்தில் வளரும்) நாயின் மலமும் கிடைக்காது!”(அதே நூல், எண்:172)
இலையுதிர்காலத்தில் பால்வளமும் வீட்டு நாய்களும்
வீட்டில் வளர்க்கப்பெறும் நாய்களைப் பற்றிய பழமொழியொன்று:
“இலையுதிர்காலத்தின்பொழுது, உன் நாய்க்கு மோரைத் தராதே!”
இதன் கரணியம், ‘இலே’(Leh) நகரில் இலையுதிர்காலத்தின் பொழுது பால்வளம் மிகுந்திருக்கும் என்பது.
காலமும் மண்ணும் மக்களும் விலங்குகளும் எந்த அளவு திபேத்தில் இணைந்து உள்ளன என்பதை இதன்வழி உணர முடிகிறது.
“பதியெழு வறியாப் பழங்குடி”
இலடாக்கில் வாழும் மக்கள், தம் நாட்டை விடுத்து அயல்நாட்டை விரும்புகிறவர்களை வெறுக்கிறார்கள்:
“நீ சென்று இருந்து வாழ்ந்து பார்க்காத நாடு,
உனக்கு மிகவும் இனிமையானதே!”
என்பது அதற்கான திபேத்தியர் பழமொழி . இன்னும் எத்தனையோ பழமொழிகள் திபேத்தில் புழங்கினாலும், ஆயிரம் பழமொழிகளை மட்டுமே தொகுத்திருக்கிறார் மறைத்திரு செர்கான். அவற்றுள்ளும் சிலவற்றையே இக்கட்டுரையில் கண்டோம்.
துணைநூல்: Rev. J. Gergan, A Thousand Tibetan Proverbs and Wise Sayings, 1976. நன்றி: பிரஞ்சு நிறுவன ஆராய்ச்சி நூலகம் ( Research Library,Institut Francaise, Pondichery)
நன்றி: 'வெல்லும் தூயதமிழ்' (இலக்கிய மாத இதழ்) புதுச்சேரி-605009.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மிக்க நன்று
Post a Comment