22.11.05

'சும்மா இரு'க்க முடியாதா?

முதலில் நன்றி சொன்னேன், அருணகிரிநாதருக்கு - தன் கந்தரநுபூதிக் கவிதை ஒன்றில் இந்தத் தொடரை, அறிவுரையை வெளியிட்டமைக்கு. இலேசாகச் சொல்லிவிடமுடியும் - ஆனால் 'தாவு தீர்ந்துவிடும்' செயல்கள் இருக்கின்றன. ஒவ்வொருவர் வாழ்விலும் கொஞ்சம் வேறுபாடாய்.. சொல்லலாம், செய்துவிடமுடியாது. அப்படிப்பட்டவற்றுள் பிரதானமான ஒன்றுதான் இந்த 'சும்மா இரு!....' ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவன் வருகிறான். நம்மிடம் ஏதோ கேட்கிறான். சிறு விஷயம். கேட்டு முடிப்பதற்குள் நாற்காலியை அப்படி இப்படி ஆட்டுகிறான். அதை இதைப் பிடித்துத் திருகிறான். அங்கிருக்கும் ஒரு கண்ணாடிப் பொருளை எடுத்து அஜாக்கிரதையாய்க் கையாளுகிறான். நமக்கோ 'டென்ஷன்.' மனசு எரிச்சலுடன் தனக்குள் அவனைத் திட்டித் தீர்க்கிறது..''அட, அவசரத்துக்குப் பிறந்த பயலே!'' சரி. அவன் அவசரத்துக்குப் பிறந்தவன். நம்மில் பலர் டென்ஷனுக்குப் பிறந்தவர்களா? இல்லை, இல்லை என்கிறீர்களா? அப்படியானால் நாம் - 1. எதையும் ஒன்றன்பின் ஒன்றாகத்தான் செய்து முடிக்கிறோமா? 2. ஒன்றைச் செய்யும்பொழுது, இன்னொன்றைப்பற்றி நாம் நினைப்பதுகூடக் கிடையாதா? 3. ஒவ்வொரு நாளும் ஒருசில மணிப்பொழுதுகள் - இல்லாவிட்டாலும் - ஓரிரு மணி நேரம், நம்மால் எதையும் செய்யாமல், 'சும்மா' மரங்களைப் பார்த்துக் கொண்டும், எதிரே தெரியும் இயற்கையைப் பார்த்துக் கொண்டும் - அட, அதெல்லாம் என் ஒண்டுக்குடித்தனத்தில் கூடாதப்பா என்றால் - வெறுமனே, சுவரில் மாட்டி வைத்திருக்கும், மனத்துக்குப் பிடித்தமான படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டும் இருக்க முடிகிறதா? - மனத்துக்கு மாறுபடாமல் சொல்லுங்கள் பார்ப்போம். 4. குறைந்தபட்சம் வேறு ஒருவரையும் குறைசொல்லாமல் ''என்னால் இப்படி 'சும்மா' இருக்கமுடியவில்லை; கை பரபரக்கிறது; கண் துறுதுறுக்கிறது; மனம் அலைபாய்கின்றது!'' என்றாவது ஒத்துக்கொள்ள முடிகிறதா சொல்லுங்கள். 5. ''நான் பெரிய மனிதன்! என் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் இந்த உலகம் ஏங்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எனக்குக் கடமைகள் காத்துக் கிடக்கின்றன!'' என்று நம்மை ஒரு நாளுக்கு ஒரே மணி நேரமாவது ஏமாற்றிக்கொள்ளாதிருக்கிறோமா? சொல்லுங்கள். ''சரியப்பா..விடு, விடு! அருணகிரி எதற்காக இப்படியொரு வில்லங்கத்தைத் தன் அநுபூதியில் பொதிந்திருக்கிறார்?'' - என்கிறீர்களா! ஒருமுறை என் சிற்றூர் சார்ந்த 'பேயன்பழத் தாத்தா' என்ற சித்த[மருத்துவ]ரிடத்தில் இது பற்றி நான் கேட்டபொழுது அவர் சொன்ன விளக்கம் எனக்கு மயக்கத்தையே வரவழைத்தது... அப்படி அவர் என்ன சொன்னார்....? ''சும்மா இரு'ன்னா மனமடங்கி இரு'ன்னு அர்த்தம்.. மனமடங்கியிரு அப்படி'ன்னா மனம் ஒழிந்து இரு'ன்னு பொருள்..மனம் ஒழிந்து'ன்னா ''எண்ணம் எழாமல்'ன்னு அர்த்தம்.. ஒங்கப்பன் அடிக்கடி சொல்றாரே.. ஒங்கண்ணனுக்குக்கூட அவர் பெயரை வச்சாரே!.. அந்த ஜே. கிருஷ்ணமூர்த்தி அதச் சாதிச்சிருக்கிறாராமே.. தெரியுமா!...நாப்பத்தெட்டுமணிநேரம் அதுபோல இருந்திருக்கிறாராமே... எண்ணமே எழாமல்.. ஒனக்குத் தெரியுமா?'' எனக்கு ஒன்றும் தெரியவில்லை. உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ''சித்தத்தில் எண்ணம் எதுவும் எழாமல் சும்மா இருக்கும் திறம்'' - உங்களுக்குத் தெரிந்திருக்கும்தானே!

4 comments:

குமரன் (Kumaran) said...

நிச்சயமாய் எனக்குத் தெரியவில்லை பசுபதி. நான் இந்தப் பதிவைப் படிக்கும் போது கூட நாற்காலியை ஆட்டிக்கொண்டே தான் இருந்தேன். :-)

ஞானவெட்டியான் said...

ஐயன்மீர்,
மனிதன் நான்கு நிலைகளைக் கடக்கவேண்டும்.அவை:
அறிவு,உணர்வு,நினைவு,கருத்து.
உணர்வு நினைவினில் ஒன்ற மனம் வயப்படும். மற்ற எண்ணங்கள் தோன்றாது.
ஒரு நாளைக்கு ஏதோ இரண்டு மணி நேரம் "சும்மா இருக்கலாம்". ஆனால் 48 மணி நேரம்.... ம் ம் ஒரு சாதனைதான்.

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

அன்பார்ந்த குமரன் அவர்களே!
தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இன்று, இப்பொழுதுதான் என் வலைப்பதிவுக்கு வந்தேன்.[காரணம் - சுருக்கமாக - என்னை வாட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிண்ட்ரோம்]
தங்களின் எளிமையானதும் நேர்மையானதுமான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. அந்த 'பேயன்பழத் தாத்தா' குறித்து 'திண்ணை.காம்' இல் இலக்கியக் கட்டுரைகள் பகுதியில் 'தெளிவு' என்று ஒன்றை - நிகழ்ந்ததை எழுதியுள்ளேன்.

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

அன்பார்ந்த ஞானவெட்டியான் அவர்களே! நாள்பல கடந்து நன்றி நவில்வதற்குப் பொறுத்தாற்றுங்கள். இது பற்றி ஜே.கே. கூறியுள்ள கருத்துகள், KRISHNAMURTI'S JOURNAL[Krishnamurti Foundation Trust Ltd., Brockwood Park, Bramdean, Hampshire SO24 OLQ, England]என்ற சிறு நூலில் உள்ளன. அது வித்தியாசமான சிறுநூல். தங்களின் கருத்தை உட்கொண்டேன். மிக்க நன்றி.