17.11.05

உலக நகரம் ஆரோவில்லின் தமிழ்க் கவிஞர்

புதுவை அருகே உள்ள உலக நகரம் ஆரோவில். அரவிந்த ஆசிரம அன்னை அவர்களின் கனவின் நனவு அது. அங்கே முப்பது ஆண்டுகளாகத் தங்கிப் பணிகள் பலவற்றை ஆற்றிவருவதுடன், சிறந்த தமிழ்க்கவிஞராகவும் திகழ்ந்து வருபவர் கவிஞர் இரா. மீனாட்சி. சூது, வாது, வஞ்சகம், உலோபம், மூடம், மதம், மாச்சரியங்கள் நிரம்பிய உலகில் - கள்ளம் கபடமற்று இந்த வயதிலும் ஒரு குழந்தைபோல், தன்னுடன் பழகுபவர்களிடம் உண்மையான அன்புடன் உரையாடி, அவர்களுக்கு ஆவன புரிவதை இவருடைய பழக்கமாக, கடந்த முப்பது ஆண்டுகளாக நான் அவதானித்து வருகிறேன். திருமதி இரா. மீனாட்சி அவர்கள், கவிஞர் என்ற தளத்தில் நிற்கும் பொழுதுகளில், இந்த நிகழ் உலகத்தின் இயங்கியலையும் அதில் குறிப்பாக சமகால மனிதர்களின் வலிவு மெலிவுகளையும் உள்ளாழ நோக்குவதில் வல்லவர் என்பதை நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறுபயணம்(இடுமொழி) ஆகிய அவர்தம் கவிதைத்தொகுப்புகள் எண்பிக்கின்றன. ஆரோவில்லின் ஸ்ரீ அரபிந்தோ பன்னாட்டுக் கல்வி ஆய்வு மையத்தில் பணி புரிந்து வரும் இவர், மனையியலில் பி.எஸ்சி பட்டமும் சமூகப்பணியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். ஆரோவில்லுக்கு உலகமெங்கிலுமிருந்து வருகை புரியும் உள்ளங்களைக் கவரும் மாத்ரி மந்திர் நர்சரித் தோட்டங்கள் பகுதியில் இயற்கையின் மடிதவழ் மழலையாக வாழ்ந்துவரும் பெரும் பேற்றைப் பெற்ற கவிஞர் இரா. மீனாட்சி, அண்மையில் அங்கே மலர்ந்து மலர்ந்து உதிரும் மழைக்கால மரமல்லி மலர்களைப் பற்றி அழகாகக் குறிப்பிட்டபொழுது - புதுவை மாநிலம் காரைக்காலில், திருநள்ளாற்றுக்குச் செல்லும் வழியில் உள்ள இயற்கை நலம் செறிந்த பச்சூர் இடுகாட்டில் 1988 சனவரி 17ஆம் நாள் ஒடுக்கம் கொண்ட எம் தந்தையார் இராஜயோகி பி.கே. அண்ணன் தமது உடல் செறிந்த மண்மேல் இன்று தன் மலர்களைப் பொழிந்திருக்கும் பதினேழு வயது நிரம்பிய மரமல்லி மரம், எங்கள் இனிய நன்றிக்கு வித்தானது. தந்தையார் ஒடுங்கிய ஞான்று, மறைந்த என்னரும் நண்பர் டாக்டர் நாகப்பா நாச்சியப்பன் அவர்கள் ஏற்பாட்டின்படி, திரு பொன்னம்பலம் என்பவர், அதை அங்கே நட்டார். அடடா! மனித வாழ்க்கையில் மரங்களும் அவை பொழியும் மலர்களும் கொண்டுள்ள ஆழமான உறவை எத்தனை அழகாக ஞாபகப் படுத்திவிட்டார் சகோதரி மீனாட்சி!

2 comments:

b said...

கவிஞர் மீனாட்சி பற்றி வாசகர்களோடு கலந்து கொண்டதற்கு நன்றி பசுபதி.

ஆரோவில் தமிழ்நாடு, பாண்டிக்கு உட்படாமல் இன்றைக்கும் ப்ரெஞ்சு ஆதிக்கத்தின்கீழ் என்று கேள்விப் பட்டேன். அது உண்மையா என்று தெரியவில்லை.

மற்றபடி புதுச்சேரி என்ற இணையத்தளத்தினை நடத்தி வரும் தியாகு அண்ணா அவர்களும் பாண்டியில்தான் வசிக்கிறார்.

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

ஆரோவில் சுதந்திரமாக இயங்குகிறது.
இராஜ. தியாகராஜன் [தியாகு]என் இனிய நண்பர். புதுச்சேரி இணைய இதழின் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும், இவ்விதழின் செயல்மன்றத் தலைவராகவும் என்னை ஆக்கியுள்ளவர்.
தங்களின் அன்புக்குத் தலைவணங்குகிறேன். தங்களின் பின்னூட்டங்களுக்கு மிகவும் நன்றி மொழிகின்றேன்.