9.5.06

ஆன்மீகம்: 'சன்மார்க்க சங்கம்'

ஆன்மீகம்: சன்மார்க்க சங்கம் -சன்மார்க்க சாதனையாளர் கோவை.அ.குருநாதன் திருவருட்பிரகாச வள்ளலார் தனது 35-ஆவது வயதில் சென்னையைவிட்டு நீங்கிய பின்னர், அவர் நெடுங்காலம் வாழ்ந்தது வடலூருக்கு அடுத்த கருங்குழி என்னும் சிற்றூரில்தான். அங்கு வேங்கடரெட்டியார் என்னும் அன்பர் ஒருவர்வேண்டியதற்கிணங்க 1858-இலிருந்து 1867 வரை ஒன்பது ஆண்டுகாலம் அவருடைய இல்லத்தில் தங்கியிருந்தார். அங்கிருந்த காலத்தில் எண்ணற்ற அருட்பாக்களை எழுதிவந்தார். அவ்வாறு தங்கியிருந்த காலத்தில், 1865-ஆம் ஆண்டில், தன் கொள்கைகளைப் பரப்பவும், மக்கள் அவற்றைக் கடைப்பிடித்து உய்யவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சம்மதத்துடன் சன்மார்க்க சங்கம் ஒன்றை நிறுவ உளங்கொண்டார். தாசமார்க்கம், சற்புத்திரமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என்று நான்குவகை மார்க்கங்கள் உண்டு. அவற்றில் சன்மார்க்கம் ஒன்றே ஞானத்தைப் பெற வழிகாட்டும். ஆயினும், அது சமயத்தொடர்பாக இருந்தபடியால், சாதி, சமயம், மதம், சாத்திரங்கள் சார்பில்லாமல் எல்லாவகை மக்களும் ஏற்றுக்கொள்ளத் தக்கவகையில் அதைத் திருத்தி, மேம்படுத்தி ‘சுத்த சன்மார்க்க’த்தை வகுத்தார். சுத்த சன்மார்க்கம் என்பது உண்மைநெறியைக் குறிக்கும். இதன் அடிப்படையில் வள்ளலார் சங்கம் அமைத்தார். இச்சங்கத்திற்கு ‘சமரச வேத சன்மார்க்க சங்கம்’ என்று முதலில் பெயரிட்டார். பின்னர், 1872-இல் சங்கத்தின் பெயரை ‘சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம்’ என்று பெயர் மாற்றம் செய்தார். சன்மார்க்க சங்கத்திற்கு நிரந்தரத் தலைவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே என்று அவர் அறிவித்தார். தயை உடையோர் எல்லோரும் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்தவர்களே. சன்மார்க்க சங்கத்தவர்கள் வள்ளலாரின் கொள்கைகளைப் பின்பற்றுவதுடன், அவரின் பாடல்களைத் திரட்டி நூல்களாக வெளியிட்டும், தருமச்சாலை, ஞானசபை ஆகியவற்றை நடத்தியும் தொண்டாற்றி வருகின்றனர். வள்ளலார் தான் அவதரித்த நோக்கத்தை நிறைவேற்றும் முகமாக சன்மார்க்க சங்கத்தையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தினார். தீயவனையும், தூயவனாக மாற்றி, இவ்வுலகத்திலேயே மேலுலகப் பேரின்பத்தை அவன் பெற்று மகிழச் செய்யும் ஆற்றல் உள்ளது சன்மார்க்க சங்கம் ஆகும். வள்ளலார் கூற்றுப்படி,பெற்றதாய்போல் உரைப்பவர் சன்மார்க்க சங்கத்தவர். மரணத்தையும் வெல்ல வல்லவர் சன்மார்க்க சங்கத்தவர்களே. சாகாதவனே சன்மார்க்கி! சன்மார்க்க சங்கத்தில் உருவ வழிபாடு இல்லை; சமயச் சடங்குகள் இல்லை; ஆரவாரம் இல்லை. ஆனால் ஜோதிவழிபாடு மட்டும் உண்டு. சன்மார்க்க சங்கத்தின் முக்கிய கொள்கைகள்:- 1. கடவுள் ஒருவரே; அவர் ஒளிவடிவினர். அவரை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்க. 2. சிறு தெய்வ வழிபாடு கூடாது; உயிர்ப்பலியிடுதலும் விலக்குக. 3. சாதி, சமய, மத, இன, மொழி, நாடு பாகுபாடுகள் அனுசரித்தல் வேண்டாம். 4. எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையைக் கைக்கொள்க. 5. துன்புறும் உயிர்களுக்கு உதவுவதே இறைவழிபாடு. உயிர் இரக்கம் ஒன்றே இறைவனின் பேரருளைப் பெற வழிகோலும். 6. பசித்தோரின் பசியாற்றுதல் என்னும் ஜீவகாருண்யமே பேரின்ப வீட்டின் திறவுகோல். 7. புலால் உண்ணுதல் வேண்டாம். ஏனெனில், எல்லா உயிர்களிலும் கடவுள் விளங்குகிறார். 8. வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் ஆகியவற்றில் இலட்சியம் வைக்க வேண்டாம். 9. கண்மூடிப் பழக்கவழக்கங்களைக் கைவிடவேண்டும். 10. காது, மூக்கு குத்துதல் வேண்டாம். 11. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் யோகம் முதலிய சாதனங்கள் கற்பிக்க வேண்டும். பேதமற்று, படிப்பு முதலியவையும் சொல்லிக்கொடுக்க வேண்டும். 12. கணவன் இறந்தால் மனைவியிடம் தாலி வாங்குதல் கூடாது. 13. மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்யற்க. 14. இறந்தவர்களைப் புதைக்கவேண்டும்; எரிக்கக்கூடாது. 15. கருமாதி, திதி முதலிய சடங்குகள் செய்யாதீர்; மாறாக, உயிர்நீத்தவர் நினைவில் அன்னதானம் செய்தல் வேண்டும். 16. மக்கள் எல்லோர்க்கும் பொதுவான வழிபாடு ஜோதிவழிபாடே! 17. உண்மை அன்பால் கடவுள் வழிபாடு செய்து கடவுள் ஒளியை நமக்குள் காண்க. 18. பசித்திரு, தனித்திரு, விழித்திரு. 19. இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம, நித்திய ஜீவகாருண்ய ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க. 20. ஜீவகாருண்ய ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க ஏமசித்தி, சாகாக்கல்வி, தத்துவ நிக்கிரகம் செய்தல், கடவுள்நிலை அறிந்து அம்மயம் ஆதல் ஆகிய நான்கு பேறுகள் கிடைத்து, மரணமிலாப் பெருவாழ்வு பெறுதல் கூடும். 21. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டுதல் வேண்டும். 22. எதிலும் பொதுநோக்கம் வேண்டும்.

No comments: