6.1.06
பட்டினத்தார் பற்றிய புதிய நூல்!
"நான்
குரங்குக் குட்டி அல்ல
உணர்ந்து கொண்டேன்.
முயன்று முயன்று
முடியாமல்
சோர்ந்த பிறகே!
பூனைக் குட்டியாய்க்
குறுகிக் கிடக்கின்றேன்.
எடுத்துச் சென்றருள்
இறைவா பரிந்து!
-உரிமையுடன்
க. நாராயணன்"
என்ற 'விண்ணப்ப'த்துடன் இந்தியப் புதுச்சேரியின் ஓய்வு பெற்ற தத்துவப் பேராசிரியர் டாக்டர் க. நாராயணன் "பத்தராய், சித்தராய்... பட்டினத்தார்" என்ற அருமையான நூல் வடித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பரிசு பெற்றுள்ள நூல்களுக்குப் படைப்பாளரான இவர்தம் இந்நூல், தனது தன்மைகள் சிலவற்றால் முந்தியவற்றை விஞ்சிவிடுகிறது.
பன்னிரண்டு இயல்களால் அமைந்துள்ள இந்நூல், சித்தராய் விளங்கிய பட்டினத்தார் குறித்தும் - பக்தி இலக்கியம் படைத்த பட்டினத்தார் பற்றியும் பலவற்றைப் பாங்குடனே சொல்லிச் செல்கிறது.
இந்நூலுள் காணும் சில முகாமையான முடிபுகள்:
1. மரணத்தைக் கண்டு அஞ்சுவதும் அழுது புலம்புவதும் அறியாமையின் விளைவு.
2. அதைத் தவிர்ப்பதை விட்டுவிட்டு, மீண்டும் மீண்டும் உண்டாகும் பிறப்பைத் தவிர்ப்பதுவே சாலச் சிறந்தது.
3. உடலெடுத்துப் பிறந்த பிழைக்கு ஈடாக, அவ்வுடலைக் கொண்டே ஆக்க வழியில் மனமொன்றி இறைவனை வழிபட்டு பிறவாமைப் பேறு ஆகிய ஆன்ம விடுதலையை அடைய வேண்டும்.
4. தேவைகளைக் குறைப்பதுவே இல்லறத்தார்க்கும் ஒப்ப - உரிய - உயரிய வாழ்க்கை நெறியாகும்.
5. பிறருக்குப் பயன்பட்டு வாழும் மனநலம் உடையவனே உண்மை மாந்தன்.
6. பசிக்காகவோ சுவைக்காகவோ உயிர்க்கொலை செய்வதோ, கொன்றதைத் தின்பதோ கூடவே கூடாது.
7. சமூகத்தில், கொடியவர்களைப் போலவே வீணர்களும் கொடியவர்களே.
8. இழுக்கமுடையது இவ்வுலக வாழ்வு; இது புரிந்து கொண்டு, ஒழுக்கமுடனே வாழ்ந்து ஒண்பொருளாம் ஈசன் திருவடி சேரல் வேண்டும்.
9. "பயணிப்பது நம் கடமை; முடித்து வைப்பது அவன் பொறுப்பு. நல்லதே நடக்கும் என நம்புவோம். நடப்பதை எதிர்கொள்வோம். பட்டினத்தார் பாடலின் சுருக்கம் இது."
பட்டினத்தார் வாழ்க்கைக் குறிப்புகளின் குழப்பம் நீக்கி, சித்தரான பட்டினத்தாரையும் பத்தரான பட்டினத்தாரையும் வேறுபடுத்தி, அவரவர்க்கு உரிய முழுமதிப்புடன் ஆராய்ந்து இந்நூலைப் படைத்திருப்பது நூலாசிரியரின் உண்மை உழைப்புத் திறம்.
கிடைக்குமிடம்:
மாரி பதிப்பகம்
'சிவகலை' இல்லம்
29, நாகாத்தம்மன் கோயில் தெரு
கொட்டுப்பாளையம்
புதுச்சேரி - 605008
இந்தியா.
பக்கங்கள்: 160 [டெம்மி 1/8]
விலை: ரூ.75.00
பேசி: 0413 - 2251764.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நீங்கள் இந்தியாவுக்கு வரும்பொழுது நூலாசிரியருடனோ,PUSTHAK MANDHIR, rue Aurobindo, Pondicherry - 605001 என்ற விற்பனை நிலையத்துடனோ தொடர்பு கொள்ளலாம். என்னிடம் தாங்கள் கேட்ட pdf/html இல்லை. மன்னிக்கவும்.
Post a Comment