19.1.06

உங்கள் பேச்சைப் பதப்படுத்திக்கொள்வது எப்படி?

இப்படி ஒரு கேள்வியுடன் தொடங்கும் டேவிட் கீலிங்'கின் கட்டுரையொன்றை டெக்கான் க்ரானிக்கிள் நாளேட்டில் வாசித்தேன். அதில் அவர் நம் பேச்சை எப்படிப் பதப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைப் பக்குவமாகக் குறிப்பிட்டிருக்கிறார். முட்டை வேக்காட்டை உதாரணமாகக் காட்டி அதை அவர் விளக்கியுள்ள விதம் அருமை. கஃன்ஸாமா[khansama] ஒருவர் முட்டையைத் தன் சிறப்பான சமையல் பக்குவத்துக்கு எப்படி அவிப்பார்? மலைப்பகுதிகளிலும் கூட, இலேசாக முட்டையை அவிக்க இரண்டரை நிமிடம்தான் பிடிக்கும். அந்த அளவுமட்டுமே அவித்தால்தான் 'டோஸ்ட்'ஐ சுவையாக வறுக்க முடியுமாம். மூன்று நிமிடம்வரை முட்டையை அவித்தால், அந்த முட்டை திடமாகி 'டோஸ்ட்'டோடு பிணயாமல் தனித்தன்மை காத்து, இரண்டையும் கெடுத்து விடுமாம். முட்டையை நான்கு நிமிடம் அவித்து வைத்தால் 'டோஸ்ட்' திட்டமே குட்டிச்சுவராகிவிடுமாம். அட, வெறும் முட்டையையாவது தின்று வைப்போமே என்று தின்றால் ஒரு பகுதி நன்றாக இருக்கும்; அடுத்த பகுதி வெறுப்பேற்றிவிடுமாம். இப்பொழுது ஒப்பிட்டுப் பாருங்கள்! சிறந்த சமையற்காரரின் முட்டைப் பக்குவம் போல், கச்சிதமாக, உரிய நேரத்திற்குள் பதமாக நம் பேச்சை முடித்துக்கொண்டு விட்டால் நல்ல பெயர் கிடைக்கும். சில பேருக்கு ஒலிவாங்கி கிடைத்துவிட்டால் தலைகால் புரியாது. அவையினர் தன்மையை அறியாமல், உணவு நேரம் வந்துவிட்டபின்பும் வறுத்து எடுப்பார்கள். இதில் வள்ளுவர் குறள் ஒன்றையும் எடுத்துவிடுவார்கள். "செவிக்கு உணவில்லையேல் சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்" என்று இளித்துக் கொண்டே கொடுமைப் படுத்துவார்கள். இவர்களை நினைத்து வள்ளுவர் இந்தக் குறளைச் சொல்லவில்லை; இவர்களுக்கென்றே 'அவையறிதல்' என்று பத்துக்குறள்களை ஒதுக்கியிருக்கிறாரென்பதை வசதியாக மறந்து விடுவார்கள்; அல்லது அதுவும் தெரியாதிருப்பார்கள். இப்படித்தான் ஒரு பள்ளியின் சிறப்பு விழாவொன்றில் கட்டாயமாகப் பேச வந்த ஊர்த் தலைவர் பிள்ளைகளைப் பார்த்துச் சொன்னாராம்: "பிள்ளைங்களா! நீங்க எல்லாரும் திருக்குறளை முழுசாத் தெரிஞ்சு வச்சிருக்கோணும்! ஒரு நாளைக்கு ஒரு திருக்குறள்'னு படிச்சீங்கண்ணாலாவது ரெண்டாயிரம் நாள்'ல திருக்குறள் முழுசும் படிச்சுடாம்'ல?" என்று சொன்னவுடனே பிள்ளைங்களும் ஆசிரியர்களும் 'கொல்'ல்லென்று சிரித்துவிட்டார்களாம். தன்னைப் பாராட்டித்தான் அவர்கள் சிரிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு அவர் உற்சாகமாக மேலும் மொழிந்தாராம். "அதான் - "வாய்விட்டுச் சிரிச்சா நோய்விட்டுப் போகும்"னு ஒளவைப்பாட்டி 'நாலடியார்'ல சொல்லியிருக்குதாம்'ல..என்ன?"

No comments: