3.12.05
கணங்களைத் தொலைத்திடும் நிகழ்ச்சிகள்!
நிகழ்ச்சிகள் பலவற்றுக்கு அழைப்பிதழ் அனுப்புகிறார்கள். சிலவற்றுக்கு நேரே வந்து வாயெல்லாம் நிறைய வாருங்கள் என்று வேண்டி அழைப்புத் தருகிறார்கள். நாமும் அவர்களின் அன்புக்கு இணங்கிச் செல்லுகிறோம். ஆனால், அங்கே நிகழ்வது என்ன? நம் நேரம் தொலைகிறது. வாழ்க்கையின் கணப்பொழுதுகள் களவாடப்படுகின்றன. நாம் இத்தோடு விட்டு விடுகிறோம். ஆனால் இயல்பு வாழ்க்கையை அன்புடன் விரும்புகின்ற பாவலர் ம.இலெ. தங்கப்பா அவர்களோ இந்த இழிவைப் பொறுக்காமல் ஆறாண்டுகளுக்கு முன்னர், சரியாகச் சொல்லவேண்டுமானால் 01.08.1999 ஆம் நாளன்று இது குறித்து வன்மையாகச் சாடும் அருமையான பாடலொன்றை இயற்றி அச்சிட்டு அஞ்சாது பரப்பினார். அப் பாவினை வாசித்து நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பலர் நொந்து போயினர். உண்மை சுடும்தானே? பாவலர் ம. இலெனின் தங்கப்பா எல்லோருடைய அன்பையும் சம்பாதித்துக் கொண்டவர் என்பதனால் அமைதி ஆயினர். உண்மைக்கும் அன்புக்கும் இயல்பான வாழ்க்கைக்கும் உள்ள தகுதி இதுதான். இனி அந்தப் பாவினைப் பார்ப்போம்:
உருப்பட மாட்டாய்!
உருப்பட மாட்டாயடா, தமிழா!
உருப்பட மாட்டாயடா!
குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சி நடத்திடும்
கொள்கையும் உணர்ச்சியும் உனக்கு வருமட்டும் (உருப்பட....)
ஐந்து மணிஎன அழைப்பில் முழங்குவாய்;
ஆறரைக் கேஅந்தக் கூட்டம் தொடங்குவாய்!
நந்தம் தமிழர் பழக்கம் இது என்பாய்;
நாணமில் இந்நிலை ஒழித்திடு மட்டும் நீ (உருப்பட....)
ஆள்சேர வில்லை என்று அரைமணி நீட்டுவாய்;
அரிய தலைவர்தாம் வராமையைக் காட்டுவாய்;
நீள்உரை ஆற்றுவோர் மேல் குற்றம் சாட்டுவாய்;
நித்தமும் இப்படிப் பொழுதெல்லாம் ஓட்டுவாய்; (உருப்பட....)
இரண்டே நொடியில் முடிப்பதாய்ச் சொல்லுவாய்;
இருபது மணித்துளி வெறும்வாயை மெல்லுவாய்;
திரண்டுள மக்களின் உணர்வையும் கொல்லுவாய்;
செயல்திறம் இன்றி நீ எப்படி வெல்லுவாய்? (உருப்பட....)
முன்னிலை யாளர்கள் பன்னி உரைப்பதும்,
மூத்தவர் வாழ்த்துரை சொல்லிக் கழிப்பதும்,
பின் உரையாளர்கள் சொல் வானைக் கிழிப்பதும்,
பேச்சுப் பேச்சே, வெறும் பேச்சுன்னை அழிப்பதும். (உருப்பட....)
உரிய பொழுது ஒன்றைத் தொடங்கி முடிக்கிலாய்
ஒவ்வொரு பேச்சுக்கும் நேரம் வகுக்கிலாய்;
இருபது பேர்களைப் பேச அழைக்கிறாய்;
ஏழில் தொடங்கி நள்ளிரவில் முடிக்கிறாய்; (உருப்பட....)
- தங்கப்பா
1.8.99
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
உண்மையான கருத்து; உருப்படியான பாடல்.
அன்புடன்,
இராம.கி.
தாங்கள் அடையாளம் கண்டு பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
நன்று. :-)
மிகவும் நன்றி.
About this post in today's dinamalar...
http://www.dinamalar.com/2006jan08/flash.asp
migavum nandri!
Post a Comment