2.8.15

விளம்பி நாகனார் என்ற தெளிவான புலவர்

விளம்பி நாகனார் குறித்து மிகுதியும் கூற வேண்டுவதில்லை. கீழ்க்கணக்கு நூல்களில் அடி அளவால் நாலடியார் பெயர் பெற்றதுபோல், நவில்பொருள் அளவால் - 'நான்மணிக் கடிகை' எனப் பெயர் பெற்ற நூலின் பாக்களை இயற்றியவர். [இத்தொகுப்பில் ஒவ்வொரு பாட்டும் - 'நான்கு இரத்தினத் துண்டங்கள்' [ - கொண்டது] என்பது நூற்பெயரின் பொருள். நூல் முழுவதையும் வாசிக்கச் செய்வதே நம் நோக்கம் ஆதலால், மூன்றே பாக்களின் பொருளை மட்டும் இங்கே தருகிறேன். 54ஆம் பாடற்பொருள்: "எவருக்கும் - கண்ணை விடவும் சிறந்த உறுப்பு வேறேதும் இல்லை; வாழ்க்கைத்துணையை விடவும் சிறந்த உறவினர் வேறு எவரும் இலர். பெற்ற பிள்ளைகளை விடவும் பெருஞ்செல்வம், வேறு எதுவும் இல்லை. தன்னைப் பெற்ற தாயை விடவும் உண்மையாக வேறொரு கடவுள் இல்லை." இன்னொரு பாட்டு சொல்கிறது: "இனிது உண்பான் என்பான் [ஒன்றின்] உயிர் கொல்லாது உண்பவன்; முனிவன் என்பான், தன் அடையாளம் மறைத்து வாழ்பவன்; [உண்மையிலேயே] தனிமையானவன் எவன் - என்றால், எவருக்கும் எந்த நன்மையும் செய்யாது தனக்காக மட்டுமே வாழ்பவன்; [எல்லோருக்கும்] இனியவன் என்பவன்,யார் யாரே ஆனாலும் அவர்களிடம் சாதி முதலான பேதம் பார்க்காமல் ஒருவரேபோல் கருதி நடந்துகொள்ளும் ஒழுக்கம் கொண்டவன்." 101 ஆம் பாடல்: "மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள் - தனக்குத் தகை சால் புதல்வர்; மன[து]க்கு இனிய காதல், புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும், ஓதின் - புகழ் சால் உணர்வு." #டான் பிரவுன் படைத்த 'ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ்' புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். தாய்மொழிவழி சொந்தக்காரரான விளம்பி நாகனார் மனதுக்குள் வந்து அழைத்தார். "கொஞ்சம் இங்கே வந்து இளைப்பாறிச் செல்!" என்று நான்மணிக் கடிகையைச் சுட்டினார். அதனால் விளைந்தது இக்குறிப்பு :-)
[Facebook note of Puducherry Devamaindhan (பசுபதி) on 03/08/2015]

No comments: