2.12.07

சூரியன் தனித்தலையும் பகல்: தமிழ்நதியின் கவிதைகள் -தேவமைந்தன் "இதை வாசித்தபின் நீங்கள் என்னை நிமிர்ந்து பார்க்க வேண்டியதில்லை எழுதா விதிகள் காலச்சரிவிலும் புதைவதில்லை நண்பர்களே" - இந்தக் கவிதை வரிகளே, 'தனது வாழ்வின் அடையாளம் எழுத்து மட்டுமே' என்னும் தமிழ்நதியை அவர் எதிர்பார்ப்பிற்கேற்ப அடையாளப்படுத்தி விடுகின்றன. முதல் முயற்சி என்று எண்ண இயலாத அளவு புலப்பாட்டு முதிர்ச்சி நிரம்பிய உயிர்ப்புடைய கவிதைகள். "குளிரூட்டப்பட்ட அறைகளுள் இருந்தபடி/இதை வாசிக்கின்ற கனவான்களே/மன்னித்துக்கொள்ளுங்கள்/மழையைக் குறித்தும் மலர்கள் குறித்தும் எழுதாமல்/உங்கள் மெல்லுணர்வுகளின் மீது அமிலம் எறிவதற்கு"('அதிகாரமும் தேவதைக்கதைகளும்') என்று அறிவித்துக்கொள்ளும் அமிலக் கவிதைகள். போரும் புலப்பெயர்வும் அதனால் இருப்பற்று அலையும் துயரும் தனக்குள் உண்டாக்கிய வெறுமையை எழுதுதல் - இவர் கவிதையைத் தன் மொழியாகத் தேர்ந்துகொண்ட நோக்கம். ஐரோப்பியத் தனிமை அல்ல இவரது சுதந்திர வெளி. மரணம் சாவதானமாக உலவுகிற, தொடக்கமும் முடிவும் அழிந்துபோன தெருக்கள் கொண்ட, ஒவ்வோர் இரவையும் குண்டு தின்கிற, தினம்தினம் போர்தின்னும் தன் தேசத்தில் - மரத்தில் நிலத்துள் வீட்டினுள் எங்கெங்கும் சாவு ஒளிந்துளது என்று உணரும் கவிஞர் சிட்டுக்குருவியொன்றைப் பார்த்து அறிவுறுத்துகிறார்: "சின்ன மணிக்கண் உருட்டி விழிக்கும் குருவீ தனித்தலையாமல் சிறகுவலித்தெங்கேனும் ஏகு முன்னொருபொழுதில் நீ வந்து கொத்திய முகம் பார்க்கும் கண்ணாடிபோல் சிதறிப்போனதெம் வாழ்வு" 'சத்தத்தில், மௌனத்தில், கூட்டத்தில், தனிமையில், உறக்கத்தில், விழிப்பில், களிப்பில், கண்ணீரில்' குற்றம் சாட்டிக்கொண்டேஇருப்பது இவரது - எழுதப்படாத கவிதையின் குரல் மட்டுமல்ல. எழுதப்பட்ட கவிதையின் குரலும்தான்.. அது - "பாவாடை அலையாடும் குழந்தையொன்று இறந்த நகரங்களை உயிர்ப்பித்த அதிமானிடரின் கதைகளைச் சொல்லும்போது குற்றவுணர்வின் கிளையொன்றில் சுருக்கிட்டுத் தொங்குதல் கூடுமென் மனச்சாட்சி ('இறந்த நகரத்தில் இருந்த நாள்') கனடாவுக்குப் புலம்பெயர்ந்து, அங்கே உலவும் இயந்திர மனிதம் பிடிக்காமல் ஈழத்திற்குச் சென்று வாழமுற்பட்டவரை மீண்டும் தொடங்கிய போர் விரட்ட, எங்கே வந்து வாழ்கிறார்? "காய்கறி விற்பவன்/கண்கள் சுருக்கி/நான்காவது தடவையாகக் கேட்கிறான்/கேரளாவா?"('திரும்பிச் செல்ல விரும்புகிறேன்') விடுதலையே இயல்பான மற்றவர்களின் மனவெளிக்குள் அத்துமீறி நுழைவதையே இயல்பாகக் கொண்டுவிட்ட மனிதர்கள் வாழும் சென்னைக்கு. கனடாவின் டொரண்டோவில் இவ்வாறெழுதினார் தமிழ்நதி : "ரொறன்ரோவின் நிலக்கீழ் அறையொன்றின் குளிரில் காத்திருக்கின்றன இன்னமும் வாசிக்கப்படாத புத்தகங்கள் நாடோடியொருத்தியால் வாங்கப்படும் அவை கைவிடப்படலை அன்றேல் அலைவுறலை அஞ்சுகின்றன" 'நாடோடியின் பாடல்,' மறைக்காமல் உண்மைகள் சிலவற்றை முன்வைக்கிறது. "வஞ்சினத்தை வாழ்விழந்த சோகத்தைப்/பயத்தின் பசி விழுங்கும்," "அடையாள அட்டையெனும் நூலிழையில்/ஒட்டிக்கொண்டிருக்கும் உயிர்," "உயிராசையின் முன்/தோற்றுத்தான்போயிற்று ஊராசை" என்பவை, பட்டறிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த புலம்பெயர்தலின் சோகங்கள் அல்லவா? பெண்ணிய வெளியில் ஆகவும் அதிகம் பதிவாவன ஆண் அடாவடித்தனமும் வலாற்காரமும். 'சிறகுதிர்க்கும் தேவதைகள்,' 'எழுது இதற்கொரு பிரதி,' 'துரோகத்தின் கொலைவாள்,' 'கடந்துபோன மேகம்,' 'விசாரணைச் சாவடி,' 'ஒரு பிதாமகனின் வருகை,' 'ஆண்மை' போன்ற கவிதைகள் இப்படிப் பதிவானவை. 'அதிகாரமும் தேவதைக்கதைகளும்' என்பதில், மனிதமூளை பிறப்பிக்கும் மனிதஇன அழிவுக்கான கட்டளைகள், எப்படி தாய் - மகவுறவு முதலான மானுடத்தின் அடிநாதமான கூருணர்வுகளைச் சிதறடித்து அழிக்கின்றன என்னும் அழிவின் இயங்கியல் அதிநுட்பமாகச் சித்தரிக்கப்படுகிறது. 'குற்றமேதும் புரியாத உடலின்மேல் முள்பதித்த சாட்டையெறிகிறேன்'('துரோகத்தின் கொலைவாள்'), 'மரணத்தின் மின்னஞ்சலை/ஒளித்துவைத்து வாசிக்கும்/இவ்வுடலின் வாதை'('ஒரு கவிதையை எழுதுவது'), 'காதலும் காமமும் போர்தொடுக்கும் பெருவெளியில் நிராயுதபாணியாய் நிறுத்தப்பட்டவள்'('சிறகுதிர்க்கும் தேவதைகள்'), 'மிகுபசிகொண்ட உடல்கள் விழித்திருக்கின்றன'('உடலின் விழிப்பு') போன்ற உடல்குறித்த விழிப்புணர்வுகளும் இத்தொகுப்பில் நிறையவே இருக்கின்றன. 'யசோதரா' என்ற கவிதை, மிகவும் இறந்த காலத்துக்கே சென்று "பூக்கள் இறைந்த கனவின் வழியில்/இதழ்பிரியச் சிரித்த முகம்விலக்கி/இருளுள் கரைகிறான் சித்தார்த்தன்/ அரசமரத்தடியில் நெடிய இமையிறுக்கி/மறந்துபோகிறான் துணையை//அவன் தேர் நகர்ந்த வீதியும்/நெகிழ்ந்ததோ நனைந்ததோ//சாளரத்தின் ஊடே அனுப்பிய/யசோதரையின் விழிகள் திரும்பவே இல்லை/பௌர்ணமி நாளொன்றில்/அவன் புத்தனாயினான்/அவள் பிச்சியாகினாள்//"அன்பே என்னோடிரு என்னோடிரு"//கண்ணீரில் நெய்த குரலை/அரண்மனைச்சுவர்கள் உறிஞ்ச/வரலாற்றிலிருந்தும் போனாள்/அவளும் போனாள்// சுழலும் ஒளிவட்டங்களின்/பின்னால்தானிருக்கிறது/கவனிக்கப்படாத இருட்டும்" சித்தார்த்தனுக்குள் இருந்த ஆண்மனத்தை வெளிக்கொண்டு வருகிறது. 'யன்னல்' கவிதை - சாளரத்தின் மூலம் உள்வரும் உலகை அறிமுகப்படுத்துகிறது. பெண்-ஆண் நேசக்கதை முடியுமிடம் எவ்விதமென்று 'சாத்தானின் கேள்வி'' சாடைகாட்டுகிறது. மனிதநேயத்தின் கடநிலைப்பதிவு 'ஏழாம் அறிவு.' காதலில் தொடங்கி ஆளுமையில் முடியும் ஆணாலான இழப்பை 'ஈரமற்ற மழை' புலப்படுத்தும். நதியின் சுமைதாங்கும் பொறையுடைமை, மனிதர் ஓயாது கலந்துவிடும் கழிவுகளினூடும் தன்னைத்தானே அலசிக் கொண்டு தளராது சலசலத்தோடும் திறனுடைமை ஆகியவை 'நதியின் ஆழத்தில்' கவிதையில் நன்றியுடன் போற்றப்படுகின்றன. மேலாக, ''ஆழத்தின் குளிர்மையைப்/பேசித் தேய்ந்து அடிமடியில்/ மௌனம் பழகிவிட்ட கூழாங்கற்களை/கடலின் நெடுந்தொலைவை/எவரும் அறிவதில்லை// கடந்த வழியொன்றில்/கரையோரம் நிழல்விழுத்திக்/காற்றடிக்கக் கண்ணிமைத்து/நெடுநாளாய் நிற்கும் மருதமரத்தின்மேல்/நதி கொண்ட காதலை/ அந்த நாணலும் அறியாது " என்ற தீர்க்கமான காதலைப் பொதிந்தும் வைக்கிறது. 'நீ நான் இவ்வுலகம்' கவிதையும் உலகியல் நிர்ப்பந்தங்களினூடு நிகழும் இதே ஆழமான மனிதர்க் காதலை வரிவடிவில் முன்வைக்கிறது. புலம் பெயர்தலின் அதிதீவிரமான அன்னியமாக்கப்படுதலால் இருப்பற்று அலையும் துயரை இவ்வாறு புலப்படுத்துகிறார் தமிழ்நதி: "நேற்றிரவையும் குண்டு தின்றது மதில்விளக்கு அதிர்ந்து சொரிந்தது சூரியன் தனித்தலையும் இன்றைய பகலில் குழந்தைக்குப் பாலுணவு தீர்ந்தது பச்சைக் கவசவாகனங்களிலிருந்து நீளும் முகமற்ற சுடுகலன்கள் வீதிகளை ஆள வெறிச்சிடுகிறது ஊர் பூட்டப்பட்ட வீடுகளைச் சுற்றி பசியோடு அலைந்துகொண்டிருக்கின்றன வளர்ப்புப்பிராணிகள் சோறுவைத்து அழைத்தாலும் விழியுயர்த்திப் பார்த்துவிட்டுப் படுத்திருக்கும் நாய்க்குட்டியிடம் எப்படிச் சொல்வது திரும்பமாட்டாத எசமானர்கள் மற்றும் நெடியதும் கொடியதுமான போர்குறித்து ............... ............. .................. இருப்பைச் சிறுபெட்டிக்குள் அடக்குகிறேன் சிரிப்பை அறைக்குள் வைத்துப் பூட்டுகிறேன் எந்தப் பெட்டிக்குள் எடுத்துப்போவது எஞ்சிய மனிதரை சொற்களற்றுப் புலம்புமிந்த வீட்டை வேம்பை அது அள்ளியெறியும் காற்றை காலுரசும் என் பட்டுப்பூனைக்குட்டிகளை ******************** சூரியன் தனித்தலையும் பகல் - தமிழ்நதி. வெளியீடு: பனிக்குடம் பதிப்பகம், 137 (54), இரண்டாம் தளம், ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014. ஆகஸ்ட் 2007. பக்: 64. விலை: ரூ.40. நன்றி: அணங்கு [பெண்ணிய வெளி]

No comments: