23.8.07
"இழுக்குடைய பாட்டுக்கு இசை நன்று!" - தேவமைந்தன்
பாட்டுப் போட்டிகள் பலவகையாக இன்று நடத்தப் படுகின்றன. 'பாட்டுக்குப் பாட்டு' முதலான ஊடகவழிப் போட்டிகள் எல்லார் வீட்டுக் கூடங்களிலும் விரும்பிப் பார்க்கப் படுகின்றன. பள்ளிகளில் குடியரசு நாள், விடுதலை நாள் முதலான சிறப்பு நாள்களில் நடத்தப்படும் பாட்டுப் போட்டிகள் தமிழார்வலர் பலர் கவனத்தைக் கவருவதில்லை. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் சிலர், பாரதக் குடியரசு - விடுதலை நாள்களில், அடையாளம் சரிவரத் தெரியாத திரைப்படப் பாட்டுக்களை முன்னிறுத்தி பாரதியார் நாமக்கல் கவிஞர் முதலானோரின் தேசபக்திப் பாடல்களைப் (பிள்ளைகள் பரிசுபெறுவதில்) பின்னிறுத்தி விடுகிறார்கள். அதைப் பற்றியதே இந்தக்கட்டுரை.
முன்பெல்லாம் தனியார் பள்ளிகளில், மேலும் அவர்களின் கட்டடங்களை விரிவாக்குதல் போன்ற காரணங்களுக்காகத் தங்கள் மாணவர்களிடம் நன்கொடை இலக்கை வரையறுத்துத் 'தண்டச்' சொல்வார்கள். பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர் அதிகமாகவும், ஒன்பதாம் எட்டாம் ஏழாம் ஆறாம் வகுப்புக்களில் படிப்பவர்கள் அடுத்து அடுத்துக் குறைவாகவும் நன்கொடை வசூலிக்க வரையறுப்பார்கள்.
அதன் பிறகுதான் அந்தப் பிள்ளைகளுக்குத் தங்கள் இல்லத்தின் அக்கம் பக்கம் வாழ்பவர்களாகிய நாம் கண்ணுக்கே புலப்படத் தொடங்குவோம். அதுவரை நம்மை ஒரு திரைப்பாட்டின் முதல் வரி முணுமுணுப்போடு அலட்சியமாகக் கடந்து செல்பவர்கள், இப்பொழுது முழுமையான அக்கறையுடன், நம் இல்லங்களுக்கே வந்து வாய்நிறைய 'அங்கிள்' 'ஆண்ட்டி' (மாமா, மாமி எல்லாம் என்னமோ போல் உள்ளனவாம்) என்று அழைத்து, விலாவாரியாக விவரம் சொல்லி நன்கொடை பெற்று, இவ்வாறு தங்களுக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் 'வரி தண்டி' தங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த நன்கொடை இலக்கைத் தங்கள் பள்ளியுடன் நேர் செய்து கொள்வார்கள்.
இப்பொழுதோ ஒரு புதிய பூதம் புறப்பட்டிருக்கிறது.
பள்ளிகளில் போட்டிகள் நிகழ்த்தப்படும்பொழுது, குறிப்பாக நம் நாட்டுக் குடியரசு - விடுதலை நாட்களில் அவற்றுக்குப் பரிசு தரப்படும் என்னும் பொழுது, பள்ளி மாணவர்களுக்குச் சில பணிகள் தரப்படுகின்றன. அவற்றை அவர்களாகவே செய்து கொள்ள முடியாத படிக்கு மிகவும் குறுகிய காலம் தரப்பட்டு, 'உயிர்க்கும் நேரம்'('breathing time') கூட இல்லாமல் 'திண்டாடித் தெருவில் நிற்க வைக்கப்' படுகிறார்கள். ஏற்கனவே குறைந்த சம்பளத்தில் தாங்கள் அளவுக்கதிகமான வேலைகளைச் செய்ய வேண்டியுள்ள அவலநிலையும்; அரசுப்பள்ளிகளில் தங்களைப் போன்றவர்கள் "நன்ன்றாக"க் குப்பை கொட்டுகையில் - தங்களுக்கு மட்டும் இந்த "லபோ திபோ ஏன்?" என்ற கழிவிரக்கமும்(self pity) சேர்ந்து கொண்டு அவர்களைப் பாடாய்ப் படுத்துகின்றன. விளைவாக, அவர்கள் தங்களிடம் படிக்க 'நேர்ந்தவர்களை'ப் பாடாய்ப் படுத்துகின்றனர். இவர்களுக்கு நாம் தெரியத் தொடங்குகிறோம். நம் காலம் நம் கண் முன்னாலேயே கொள்ளையடிக்கப் படுகிறது.
நடந்த நிகழ்ச்சி......
ஆகஸ்ட் 14 ஆம் நாள் மாலை. நண்பர் தந்த கதையொன்றையும், இன்னொருவர் செய்துள்ள அதன் ஆங்கில ஆக்கத்தையும், நண்பர் தற்பொழுது செய்துகொண்டுள்ள அதன் பிரெஞ்சு ஆக்கத்தைச் சரிபார்த்து உதவும் பொருட்டு ஆழமாக வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
தெரிந்த ஒருவர், தன் மகளுடன், முகத்தில் பூசிக் கொண்ட புன்னகையுடன் வீட்டினுள் நுழைகிறார்.
"நாளைக்கே பாடணுமாம்.. இன்னைக்குச் சொல்றாங்க.. சுதந்திர தினத்துல பரிசு தராங்களாம். ரெண்டு பாட்டு மொத வரி தந்திருக்காங்க இவங்க மிஸ்ஸு... ஏம்மா.. அந்த பாட்டு வரி ரெண்டையும் இவங்ககிட்ட காட்டு.." - சொல்கிறார்.
"பாரு பாரு பாரதப் பண்பாடு" என்று தொடங்கியது, முதல் பாட்டு. அதைப் போலவே 'ஓரிரவு' திரைப்படத்தில் திரு ஏ.கே.சண்முகம் பாட்டொன்றை எழுதியிருந்தார். இது அதுவா...." என் மனத்துள் கேட்டுக் கொண்டேன்.....
"சார்! பாரதி பாட்டுப் புஸ்தகமெல்லாம் ஒங்ககிட்ட இருக்கும்'னு சொல்றாங்க! அதுல பாத்தாவது சொல்லுங்க!" என்றாள் அந்தப் பெண்.
"அம்மா இந்தப் பாட்டு பாரதியோ பாவேந்தரோ பாடினதில்ல.. ஏன் சினிமாவுல கண்ணதாசனோ வைரமுத்தோ பாடினதும்கூட இல்ல..." என்றேன்.
"சார்! பாரதி பாட்டுப் புஸ்தகம் கொடுங்க.. நான் பாத்துக்கிறேன்.."
கொண்டு வந்து கொடுத்தேன்.
"அடுத்த பாட்டு என்னம்மா?"
"இதோ எழுதிக் குடுக்குறேன் சார்!"
தொடக்கம் மட்டும் இல்லாமல் அடுத்த சில வரிகளையும் அந்த மாணவி எழுதிக் கொடுத்தாள். அதை இங்கு அப்படியே தருகிறேன்.. அவற்றுள் உள்ள பிழைகளைத் திருத்தாமல்..
"இமயம் முதல் குமரி வரை
எங்களுடைய நாடு இடை
உள்ள தேசமெல்லாம் எங்களுக்கு
வாசம். தமிழ் முனிவர் பொதிகை
மலை தன்னிலெங்கள் வீடு.
தரணி சுத்திடுஓம்.
தைரியம் தான் ஜோரு."
"என்ன படிக்கிறே'ம்மா? எந்தப் பள்ளியி'லேம்மா?"
"டென்த் சார்.." என்று சொல்லிவிட்டுப் பள்ளியின் பெயரை அப்பெண் சொன்னதுமே எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. நகரத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த பாரம்பரியம் மிக்க பள்ளி அது.
பத்தாவது படிக்கும் பெண்ணுக்கு 'சுற்றிடுவோம்' என்றில்லாவிட்டாலும் 'சுத்திடுவோம்' என்றுங்கூட எழுதத் தெரியவில்லை.
"அம்மா! இந்தப்பாட்டு குற்றாலக் குறவஞ்சி பாட்டுப் போல இருக்கு. ஆனா இதிலுள்ள சொற்கள் பல வேறுபாடா இருக்கே.."
இப்பொழுதுதான் அவள் தந்தை குறுக்கிட்டார். "இந்தப் பாட்ட ஸ்கெளட்'ல இருக்குற இவ ஃப்ரண்ட் கொஞ்சம் எழுதிக் குடுத்துட்டு மீதி தெரில'ண்ட்டா.."
எங்கெங்கோ இந்த இரண்டு பாட்டுகளுக்காகவும் அலைந்துவிட்டு, கிடைக்கவில்லை என்பதாலும் இடையில் எதிர்ப்பட்டு இவர்களுக்கு உதவ மனமில்லாத எவராலோ "ஆந்தனையும் கைகாட்ட"ப்பட்டு ("ஆந்தனையும் கைகாட்டி' என்ற வைணவத் தமிழ் வழக்கு அழகானது; ஆழமான பொருள் உள்ளது அல்லவா...) என்னிடம் வந்திருக்கிறார்கள்.
"இன்றிரவு மனப்பாடம் பண்ணி, நாளைக்காலை ராகம் 'ப்ராக்டீஸ்' பண்ணி, 'ஃபோர்நூனெல்லாம் மிஸ் முன்னால் பாடிக்காட்டிவிட வேண்டும்" என்று அது போட்ட போட்டில், என் வீட்டார் என்னைவிட அக்கறை கொண்டு இது குறித்துத் தீவிர முயற்சி எடுக்கலானார்கள்.
எழுத்தாளத் துணைவியார் ஒரு பக்கம். பேச்சாங்கில (Spoken English)ஆசிரிய மகளார் இன்னொரு பக்கம். தன் ஆசிரிய நண்பியருக்கெல்லாம்'மொபைல்' செலவு செய்து அந்தப் பெண்ணுக்காகத் தன்னுடைய ஓய்வு நேரத்தில் மகளார் விசாரித்துக் கொண்டிருக்கையில், பொறுமையில்லாமல் அந்தப் பெண்ணும் அவள் தந்தையும் புறப்பட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் போனதும், 'மொபைல்' கூப்பிட்டது. மகளாரின் தோழியார் மறுமுனையிலிருந்து சொன்னார்:
"அந்தப் பெண் கேட்ட முதல் பாட்டு அர்ஜூனும் மீனாவும் நடிச்ச படம் ஒண்ணுல வருது.
இரண்டாவது பாட்டு, ஏழாவது பாடப்புத்தகத்தில் வரும் குற்றாலக் குறவஞ்சிப்பாட்டை 'Scout and Guide' - 'சாரணரும் வழிகாட்டியும்' என்ற முறையில் பள்ளிகளில் 'உல்ட்டா' பண்ணிப் பாட
கத்துக் குடுக்கறாங்க.. 'பேஸ்'(base) தமிழ்'ல பழைய இலக்கியப்பாட்டா இருக்கும். ஆனா எவ்வளவு வேண்'ணாலும் மாத்தியும் வார்த்தைகளைச் சேர்த்தும் பாடலாம். உதாரணத்துக்கு, "பச்சைமலை பவளமலை எங்களது மலையே" என்பதை "திருமலையும்('திருமலா') பழனியும் எங்களது மலையே!" என்றுகூட பிள்ளைகள் மாற்றிப் பாடலாம். இப்படியெல்லாம் மாற்றியும் பழைய இலக்கியப் பாட்டின் நடுவில், "தரணியெல்லாம் சுத்திடுவோம்/தைரியம்தான் ஜோரு!" என்று சேர்த்தும் பாட அவங்களுக்குப் பரிசு பெறும் வாய்ப்பு அதிகமாகும்."
என்னால் நம்பவே முடியவில்லை.
ஓரிரு நாள்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணை வழியில் கண்டபொழுது மகிழ்ச்சியாகத் தான் பாடிய பாட்டுக்கே முதற் பரிசு கிடைத்ததாகச் சொல்லி மிகவும் மகிழ்ந்தாள். "உனக்குத்தான், அன்றைக்கு நீ எழுதிக்காட்டிய பாட்டின் மீதி கிடைக்கவில்லை என்று சொன்னாயே! பிறகு கிடைத்துவிட்டதா?" என்று கேட்டேன். "கெடைக்கலங்க சார்... கை'ல இருந்ததெ வச்சே சமாளிச்சுப் பாடிட்டேன்!" என்றாள். "உன்னோடு பாடியவர்கள் யாருமே பாரதியார் பாடல்களைப் பாடவில்லையா?" என்று கேட்டேன். "ஓ! ரெண்டு பேர் பாடினாங்களே சார்!.. 'பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு'ங்கற பாரதியார் பாட்'டப் பாடினாங்க.. 'ம்யூசிக்' நல்லா இல்லே'ன்னு பரிசு கெடைக்கிலே!" என்று அலட்டிக் கொள்ளாமல் சொன்னாள். அந்தப் பெண் வெற்றி பெற்றதில் எனக்கு மகிழ்ச்சியே என்றாலும் பிழையுடைய வடிவம் கொண்ட, திரைப்படக் கதை தொடர்பான, அடையாளம் தெரியாத பாட்டொன்று இசையால் பரிசு பெற்றுக் கொடுத்ததன் பின்னே பாடங்கள் இரண்டு இருக்கின்றன.
1. "இழுக்குடைய பாட்டுக்கு இசை நன்று" என்ற சான்றோர் வாக்கு மிகவும் மெய்யானது.
2. பாரதியார், நாமக்கல் கவிஞர் முதலானவர்களின் தேசபக்திப் பாடல்கள் விழுமிய வீழ்ச்சி அடையாமல் நம் ஆசிரியர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சரி. எதிர்மறையானவற்றையே பார்க்க நேரும் நிகழ்நிலையில், உடன்பாடான ஒன்றையும் பார்த்து வைப்போம்.
தில்லியைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன், சொந்தமாகச் சிந்தித்து, செயல்புரிந்துமிருக்கிறான். நாளேடுகளில் பார்த்திருப்பீர்கள். ரோனன் சட்டர்ஜி என்பது அவன் பெயர். அவனும் இந்தக் கட்டுரையில் வந்த பெண்ணைப்போலப் பத்தாவது வகுப்பில் படிப்பவனே.
பள்ளிப் பாடங்களைப் படிக்கவும், மாலைநேர - அதே வகுப்பாசிரியர்கள் நடத்தும் கட்டாயத் தனிப்பயிற்சிக்குப் போகவுமே நேரம் சரியாயிருக்கிற மாணவ மாணவியரிடையில், ரோனன் சட்டர்ஜி வித்தியாசமானவன். தனக்கு மிகவும் ஈடுபாடுள்ள டென்னிஸ் விளையாட்டையே மையமாக வைத்து - ரோகன், அவர் மகன் ரோகித், பேரன் ராஜ் ஆகிய மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த கற்பனைக் கதைமாந்தரின் டென்னிஸ் காதலையும் அர்ப்பணிப்பு உணர்வையும் சித்தரிப்பதாக "உள் கனலும் தீ"(Fire Within) என்ற தலைப்பில் நாவலாக எழுதியுள்ளான். தில்லியிலுள்ள ஹர் ஆனந்த் பப்ளிகேஷன்ஸ் அதை முன்னூற்றுத் தொண்ணூற்றைந்து ரூபாய் விலையிட்டு வெளியிட்டிருக்கிறது. மேலும், அதன் வெளியீட்டு விழா 7/8/2007 அன்று தில்லியில் நடந்த பொழுது, இவ்வாறு பேசியிருக்கிறான்:
"எல்லாருக்கும் தங்கள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். ஆனால், பள்ளிப் பாடப் புத்தகங்களின் சுமையால் நான் வேறு எந்தப் புத்தகமும் படித்ததில்லை. பள்ளிப் பாடச்சுமை இப்போதுள்ள மாணவர்களின் மகிழ்ச்சியை அபகரித்து விடுகிறது. இந்தப் புத்தகத்தை எழுதுவதற்காக எனக்கு என் பள்ளியிலிருந்து எந்த ஆதரவும் கிடக்கவில்லை. டென்னிஸ் வீரர் ரபேல் நாடலின் வாழ்க்கையை எழுத ஆசையாக உள்ளது. நிச்சயம் எழுதுவேன். படிப்புத்தான் வாழ்க்கையல்ல என்பதை வலியுறுத்தும் வகையில் ஒரு நாவல் எழுதப் போகிறேன். ஓர் ஆண்டுக்குள் அந்த நாவல் வெளிவரும்." (நன்றி : தினகரன், ஆகஸ்ட் 9, 2007.)
****
திண்ணை.காம் வலையேட்டில் வியாழன் ஆகஸ்ட் 16, 2007 அன்று வெளியிடப்பெற்ற கட்டுரையின் மறுஆக்கம்.
நன்றி. திண்ணை.காம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment