15.2.07

உயர்வான நோக்கம் எது? - பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கோட்பாட்டுப் பாடல்

உயர்வான நோக்கம் எது? - பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கோட்பாட்டுப் பாடல் - தேவமைந்தன் “பணத்தால் ஒரு மனிதனை மதிப்பது என்றால் ‘ரிசர்வ் பேங்’கைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் - பெரிய ‘லைப்ரெரி’யைத்தான் மதிக்க வேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் ‘என்சைக்ளொபீடியா’..வை மதிக்க வேண்டும். இப்படியாக அனேகமானவற்றை ஜீவனில்லாதவைகளிலும் காணலாம். ஆதலால், நாம் மனிதனை மதிப்பது, பேசுவது, நினைவுறுவது என்பவையெல்லாம் இவைகளை உத்தேசித்தல்ல..தன்னைப் பற்றிய கவலையும், தனது மேல்வாழ்வின் தன்மை என்பதையும் அடியோடு மறந்து, மனித சமுதாய வாழ்வின் மேன்மைக்காகப் பணியாற்றவே மற்ற மனித சீவன்களுக்கு இருக்க முடியாத வசதி என்னும் தன்மை, தொண்டாற்றும் சக்தி ஆகியவை இருக்கின்றன என்று கருதி - தன்னலத்தையும் தன் மானாபிமானத்தையும் விட்டு எவன் ஒருவன் தொண்டாற்றும் பணியை வாழ்வாகக் கொண்டிருக்கிறானோ, அவன்தான் மற்ற சீவப் பிராணிகளிடமிருந்து வேறுபட்ட மனிதத் தன்மை கொண்ட மனிதனாவான்” என்று பெரியார் 1945ஆம் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவைக் ‘குடி அரசு’ 14/4/1945 இதழ் வெளியிட்டது. முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் பெருஞ்சித்திரனார் பாடினார்: “தனிமானம் கருதாமல் தனிநலத்தை விரும்பாமல் தமிழ்மானம் தமிழர்நலம் கருதுவோர்கள் இனியேனும் தமிழ்நிலத்தில் எழுந்திடுக! பொதுத்தொண்டில் இறங்கிடுக! எந்தமிழர்க் கேற்றம் காண்க!” (கனிச்சாறு 1:50 ‘தவிராமல் தமிழ்நலம் காக்க!’) சமூகத் தொண்டுக்குப் பெரியார் அறிவுறுத்திய கோட்பாடு, தலைமுறை ஒன்றின்பின் தமிழ்த் தொண்டுக்குப் பெருஞ்சித்திரனாரால் அறிவுறுத்தப்படுகிறது என்றால் அதன் பொருள் என்ன? சமூகம் திருந்திப் பகுத்தறிவு பெற்ற பின்னரே, மொழியினமும் மொழிநலமும் - பழைய தொண்டுக் கோட்பாட்டைப் பின்பற்றியே வென்றெடுக்கப்பெறக் கூடியவை என்பதுதான். பொதுநல உணர்வு ஒருவர்க்கு இல்லாது போனால் தொண்டு புரியும் எண்ணமே உள்ளத்தெழாது. ‘வாழ்வுக்கு நோக்கம் தேவை!’ என்ற தலைப்பில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ‘தென்மொழி’ இதழில் எழுதிய பாடல், வாழ்வின் அடிப்படையைக் கல்லி எடுத்து ஆகவும் எளிமையாய் எடுத்துக் கூறி வலியுறுத்துகிறது. நோக்கம் என்ற ஒன்றே இல்லாதவர்கள் இருக்கின்றார்கள். “கற்கின்ற காளையர்க்கும் கன்னியர்க்கும் இக்கால் கல்வியிலே பிடிப்பில்லை; அறிவிலில்லை ஆர்வம்! சொற்குன்றும் மொழிகளிலே சோர்வுபடப் பேசிச் சோற்றுக்கு வாழ்வமைப்பார்; உள்ளநலங் காணார்!” (கனிச்சாறு 1:29 ‘தமிழ் நெஞ்சம்!’) நோக்கம் இல்லாமல் போனால் என்ன ஆகும்? வாழ்க்கைக்கு என்று நோக்கம் ஒன்று வேண்டும். இல்லாவிட்டால் நொந்துபோய்ச் சாகவே நேரும். ‘நொந்தது சாகும்’ என்ற பாரதியின் புதிய ஆத்திசூடியின் கூற்று(புதிய ஆத்திசூடி:63) செயல்புரியத் தொடங்கும். நொந்துபோய் வாழ்பவருக்கு ஊக்கமும் இருக்காது. அதைப் பிறப்பிக்கும் உள்ளமும் நொடிந்து மடியும். எதிலும் சலிப்பு வருவதால் உழைப்பிலும் போதுமான பயன் விளையாது. உலகியலில் ஆர்வம் வராது. இனிப்பு கார்ப்பு கைப்பு உவர்ப்பு துவர்ப்பு புளிப்பு என்ற அறுசுவை வாழ்வில் புளிப்பு ஒன்றே ஓங்கி மேலும் சலிப்பை ஊட்டி வருத்தும். செல்வம் உற்ற பொழுது ஓடிவந்து சுற்றமாய்ச் சுற்றும் உறவுகள் எல்லாமும் அலுத்துச் சலித்து ஓய்ந்து போனவரைப் பொருட்படுத்தாது போனாலும் தாழ்வில்லை; கெக்கலி கொட்டிச் சிரிக்கும். “நோக்கம்’ எனஒன்(று) இல்லாது போனால், வாழ்க்கை நொய்ந்தே போகும்! - நம் உள்ளம் நொடிந்தே சாகும்! ஊக்கம் குறையும்: உழைப்பும் சலிக்கும்; உலகில் எதுவும் புளிக்கும்! - நம் உறவுகள் பார்த்தே இளிக்கும்! உருப்படியாய் எதுவும் செய்யத் தோன்றாது. ஏற்கனவே உள்ள அறிவும் குறைந்து போகும். அல்லல் படையெடுத்து வந்து தண்டு ஊன்றும். தம் மேல் பெற்றோரும் உற்றோரும் தோழரும் இயல்பாகக் காட்டுகின்ற அன்பு கூட மிகவும் கசப்பாகத் தோன்றும். மன அழுத்தம் ஏற்பட்டு உடலும் நலியும். நெஞ்சத்தில் வீண் அச்சங்கள் தோன்றுவதால் பொல்லாத் தவிப்பும் ஏற்படும். விளைவாகத் தற்கொலைக்கும் உள்ளம் திட்டமிடும். “ஆக்கம் குறையும்; அறிவும் மயங்கும்! அல்லல் படையொடு ஊன்றும்! - பிறர் அன்பும் கசப்பாய்த் தோன்றும்! தாக்கம் வந்தே உடலை வருத்தும்! தவிப்பும் நெஞ்சினை இறுக்கும் - நமைத் தற்கொலை செய்திடச் சறுக்கும்! “என் நோக்கம் பணத்தை ஈட்டுவதே!” என்பவர்களும் நோக்கம் அற்றவர்கள்தாம். ஏனென்றால் பணத்தை ஈட்டத் தொடங்குவார்கள். நாளடைவில் அதைப் பெருக்குவதிலேயே நாட்டம் கொள்வார்கள். ‘மக்கள் பணம்’ ஆகிய அரசு வரியைக் கட்ட வேண்டுமே என்று புழுங்கி, பதுக்குவார்கள். பல பயன்களை விளைவிக்காத பணம், தன்னை வைத்திருப்பவனைக் கொன்றே விடும். “சரி, என் நோக்கம் குணத்தால் சிறப்பது!” என்பவர்கள் மொழிவதைப் பார்த்தால் அது ஏற்புடையது போலவே தோன்றும். ஆனால் அதுவும் உண்மையில் நோக்கம் ஆகாது. ஏனெனில் குணக்குன்றுகளால் அவர்களுக்குத்தான் ஆக்கமே தவிர, ஏனைய குடிபடை(citizens)களுக்கு இல்லை. மேலும் அவர்களுக்கே கொள்ளை கொலை வழிப்பறி முதலான கொடுமைகள் பல எதிர்வருவதும் இயல்பு. “பணத்தை ஈட்டுதல் நோக்கம் ஆகாது; பதுக்கவும் பெருக்கவும் தூண்டும்! - பல பயன்களுக் கதில்வழி வேண்டும்! குணத்தால் சிறப்பதும் வாழ்வில் போதாது; குடிநலம் பெறல்அதில் இல்லை; - பல கொடுமைகள் எதிர்வரின் தொல்லை!” ஆகவே உயர்வான நோக்கம் என்பது, சலித்துச் சலித்துப் பார்த்த பின்பு சல்லடையில் கிடைக்கும் பொன்போல, பொதுநல உணர்வுதான். அதுவே புதுப்புது விளைவுகளுக்கு ஊக்கமும் நினைக்கவே கொடுமையான போர்கள் இல்லாத புதிய உலகுக்கு ஆக்கமும் ஆகும். எது உயர்வு எது இழிவு என்று எண்ணித் திட்டமிட்டுச் செய்தால் வருங்காலத் தலைமுறைகள் புதுமை என்று ஏற்று அதைச் செயல்படுத்துவர். மெய்யாகவே புதுமை என்று ஒன்றிருக்குமானால் இன்றைய நிலையில் “மக்கள் எல்லார்க்கும் எல்லாமும் பொதுவானவை” என்ற அடிப்படையில் அமையும் பொதுமை அரசமைப்புச் சட்டமே! “பொதுநல உணர்வே உயர்வான நோக்கம்; புதுப்புது விளைவுக்கும் ஊக்கம்! - கொடும் போரிலா உலகுக்கும் ஆக்கம்! எதுஉயர்(வு) எதுஇழி(வு) என்றெண்ணிச் செய்க! இனிவரும் மக்கட்குப் புதுமை! மக்கள் எல்லார்க்கும் எல்லாமே பொதுமை!” உயர்வான நோக்கம் பற்றிய கோட்பாட்டுப் பாடலை, பாவலரேறு பெருஞ்சித்திரனார் அளவுக்கு அவரது சமகாலப் பாவலர்கள் இயற்றியிருப்பார்களா? இயற்றியிருந்தாலும் இந்த அளவுக்கு நறுக்குத் தெறித்தாற்போல் அது குறித்துப் பாடலிலேயே கோட்பாட்டை உருவாக்கியிருப்பார்களா? நன்றி: கீற்று.காம்

1 comment:

Latha Narasimhan said...

Ningal Eppadi thamizhil ezhuthugirirgal?

Enakkum thamizhil blog arambhikka vendum.

Nanri

Latha Narasimhan