25.5.06

வகைப்படுத்தாதவை: மதுமிதா அவர்களுக்கு வணக்கம்.

மதுமிதா அவர்களின் ஆய்வுக்குப் பாராட்டுகளோடு... வணக்கம். தங்கள் ஆய்வுநூலில் என் வலைப்பதிவினைச் சேர்த்துக்கொள்ள இசைகிறேன். தேவமைந்தன்(அண்ணன்பசுபதி), புதுச்சேரி. விவரப் பட்டியல்: வலைப்பதிவர் பெயர்: அண்ணன் பசுபதி வலைப்பூ பெயர்: kalapathy சுட்டி(url): http://kalapathy.blogspot.com/ http://360.yahoo.com/pasu2tamil ஊர்: புதுச்சேரி நாடு: இந்தியா வலைப்பூ அறிமுகம் செய்தவர்: பேராசிரியர் பசுபதி, டொரொன்டோ. முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம்: 8/09/2005 இது எத்தனையாவது பதிவு: முதலாவது. இப்பதிவின் சுட்டி(url): http://kalapathy.blogspot.com வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: 1968-ஆம் ஆண்டு முதலான என் அச்சுநூல்/இதழ்ப்படைப்புகளை எளிதாக நண்பர்கள் எங்கிருந்தாலும் வாசிக்க. சந்தித்த அனுபவங்கள்: மகிழ்ச்சியானவை. கனடா, பிரான்சு முதலான நாடுகளிலிருந்து என்னை நேசித்து வரும் மின்னஞ்சல்கள் (ஏனெனில் என் வலைப்பூ மட்டுறுத்தப்பெற்றது) பெற்ற நண்பர்கள்: கனடா டொரொன்டோ வேதியல் பேராசிரியர் பசுபதி, சார்சேல்சு பேரா.பெஞ்சமின் இலெபோ(புதுவை எழில்), இந்தியா தியாகு(இராஜ. தியாகராஜன்,editor@pudhucherry.com)பி.ஆர்.திரிபுரசுந்தரி(கொடைக்கானல்) முதலிய பலர். இப்பொழுது மதுமிதா அவர்கள். கற்றவை: 1.முப்பதாண்டுகளுக்கும் மேலான கல்வியாளன் அனுபவத்தை சைபர்வெளி நண்பர்களோடு(மடற்குழுக்களிலும்)பகிர்ந்துகொள்ளும்பொழுது என் அனுபவம் ஆகவும் சிறியது என்பதைக் கற்றேன். 2.முப்பத்தெட்டாண்டுகள் அச்சிதழ்ப் படைப்புலகில் சாதித்ததும் மின்வெளியில் பதிவதும் ஒருங்கிணைந்து போகும் என்றும் கற்றேன். எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: என்னைப் பொறுத்த அளவில் எனக்கு அச்சிதழ்களைவிட மிகுந்த சுதந்திரம் வலைப்பதிவுகளில்தான் கிடைத்தது. இனி செய்ய நினைப்பவை: செய்பவை தொடரவேண்டும் என்று. ‘இன்று’ என்பதுதான் நம்பத்தகுந்தது என்பதை என் உடல் எனக்குப் போதித்துக் கொண்டே வருவது, என் மருத்துவருக்குத் தெரியும். உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: 1948-இல் கோவையில் பிறந்தேன். 1969 முதல் புதுச்சேரியில் பேராசிரியன். துணைவியார் புதுச்சேரி - பிரஞ்சுக் குடியுரிமை பெற்ற (பிரான்சு ஸ்திராஸ்பூரில் நெடுங்காலமாக வாழும்) குடும்பத்தினர். பார்க்கச் செழுமையாகவே இன்னும் இருந்துகொண்டிருக்கும் நான், 2000-ஆவது ஆண்டில் மருத்துவர் மற்றும் குடும்பத்தாரின் வலியுறுத்தலால் விருப்ப ஓய்வு பெற்றேன். உலகெங்கும், குறிப்பாக பிரான்சில் நெருக்கமுள்ள நட்பு வட்டத்தில் நானும் இருக்கிறேன். அவர்களின் நேசிப்பாலும், மேனாள் மாணவ மாணவியரின் தொடரும் அன்போடும், குடும்பத்தினர் பாசத்தாலும் உயிர்த்திருக்கிறேன். சொல்ல நினைக்கும் ஒன்று: தங்களின் இந்த முயற்சிக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.

24.5.06

ஆன்மீகம்: வள்ளலாரின் வருத்தம்

ஆன்மீகம்: வள்ளலாரின் வருத்தம் தாம் வகுத்த விதிமுறைகளுக்கு மாறாகச் சபையில் செயல்பாடுகள் நடைபெற்றுவருவதை அறிந்த வள்ளலார் சபையைப்பூட்டி திறவுகோலைத் தம்முடன் எடுத்துக்கொண்டு மேட்டுக்குப்பத்திற்குப் போய்விட்டார். வள்ளலார் சித்திபெற்ற நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர்தான், அதாவது 1878-ஆம் ஆண்டில், சன்மார்க்க அன்பர்களின் சார்பாக ஆறுபேர் கொண்ட குழுவால் சபை வழிபாடு மீண்டும் தொடங்கப்பட்டது. வள்ளலாரின் திருவுளப்படியே, எந்தவொரு விதியையும் மீறாமல், சபையின் நடவடிக்கைகள் இருக்கும்படி பார்த்துக்கொள்வதே நம்முன் உள்ள கடமையும், பொறுப்பும் ஆகும். இதுவே, அவருக்கு நாம் அளிக்கும் சிறப்பும், நன்றிக்கடனும் ஆகும். -சன்மார்க்கச் சாதனையாளர் கோவை அ. குருநாதன்

ஆன்மீகம்: சபை தொடர்பான சில குறிப்புகள்

ஆன்மீகம்: சபை தொடர்பான சில குறிப்புகள் சபை தருமச்சாலைக்கு அருகில் உள்ளது. இது இறைவனை ஒளிவடிவில் வழிபடுவதற்கென்றே அமைந்தது. இது சுத்தசன்மார்க்கக் கொள்கைப்படி அமைந்த சங்கஞ் சார்ந்த திருக்கோயில். இது வள்ளலார் கூற்றுப்படி, இயற்கை விளக்கம். சபையும், சபைசார்ந்த மற்றவையும் தத்துவ நுணுக்கங்கள் கொண்டவை. சபை சாதி, சமயம், மதம், இனம், நாடு என்ற வேறுபாடுகள் இல்லாமல் மக்கள் யாவருக்கும் பொதுவானது. ‘புலை, கொலை தவிர்த்தோர் மட்டுமே உள்ளே புகுதல் வேண்டும்’ என்னும் வள்ளலாரின் கட்டளை சபையின் எல்லா நுழைவாயில்களிலும் தீட்டப்பெற்றுள்ளது. சபையில் கூட்டாக முழு அகவலையும் ஓதுதல், ஜோதிவழிபாடு, தியானம் இயற்றுதல் ஆகியவை செய்தல் மிக நன்று. சபையில் அர்ச்சனை, தீப ஆராதனை, அபிஷேகம், சோறுபோன்ற பிரசாதங்கள் கிடையாது. தேங்காய் உடைத்தலும், மத்தளம் போன்ற இசைக்கருவிகளை இசைத்தலும் கூடாது. ஆரவாரம் இல்லாமல், மெல்லெனத் துதிசெய்தல் வேண்டும். சபையின் திருப்பணிகளை 1950-ஆம் ஆண்டில் கிருபானந்த வாரியார் அவர்களும், 25 ஆண்டுகள் கழித்து அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்களும் தலைமையேற்று நடத்தியுள்ளனர். 18.7.1872 அன்று வள்ளலார் இட்ட கட்டளைப்படி, சபைக்குள்ளே தகர கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும். பித்தளை முதலியவற்றால் செய்த குத்துவிளக்கு கூடாது. சபையில் 12 வயதிற்குட்பட்ட சிறுவரோ அல்லது 72 வயதிற்கு மேற்பட்ட பெரியவரோ நீராடிய சுத்த தேகத்தோடு விளக்கு ஏற்றிவைக்கவேண்டும். சபைக்குள்ளே, அவர்களைக்கொண்டே கால்களில் துணிசுற்றியும், முட்டிக்காலிட்டும் தூசு துடைக்கச் செய்விக்கவேண்டும். -சன்மார்க்கச் சாதனையாளர் கோவை அ. குருநாதன்

ஆன்மீகம்: அருட்பெருஞ்ஜோதி அகவல்

ஆன்மீகம்: அருட்பெருஞ்ஜோதி அகவல் 25.1.1872 அன்று சபையில் நடந்த முதல் தைப்பூச ஜோதி தரிசனத்தைத் தொடர்ந்து வள்ளலார் 18.4.1872 அன்று ஒரே இரவில், மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் 1596 வரிகளுடைய ‘அருட்பெருஞ்ஜோதி அகவலை’ இயற்றினார். கல்வெட்டுகள் சபையின் முன்மண்டபத்தில் நாற்புறமுள்ள 12 தூண்களிலும் ‘அருட்பெருஞ்ஜோதி அகவல்’ முழுமையும் பொறிக்கப்பெற்றுள்ளது. அதனால், முன்மண்டபம் ‘அகவல் மண்டபம்’ எனப் பெயர்பெற்றது. இதுபோல், உட்பிரகாரத்தில் ‘அட்டகம்’ பொறிக்கப்பெற்றுள்ளது. எண்கோண வெளித்திருச்சுற்றிலும், உட்திருச்சுற்றிலும், சிற்சபையிலும், பொற்சபையிலும், திருவாயில்களின்மேலும், சாளரங்களின்மேலும் திரு ஆ. பாலகிருஷ்ண பிள்ளை அவர்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற திருவருட்பாப் பாடல்களும், மகாமந்திரமும் பொறிக்கப்பெற்றுள்ளன. -சன்மார்க்கச் சாதனையாளர் கோவை அ. குருநாதன்

ஆன்மீகம்: தைப்பூசநாளின் சிறப்பு

ஆன்மீகம்: தைப்பூசநாளின் சிறப்பு சூரியன் வடதிசையில் சஞ்சரிக்கின்ற காலம் உத்தராயண காலம். உத்தராயணத்தில் முதல்மாதம் தைமாதம். தேவர்களுக்கு அது உதய காலம். அந்த மாதத்தில் சூரியன் மிகப்பிரகாசத்துடன் விளங்கும். சந்திரனும் கடகலக்கினத்தில் மிகப்பிரகாசிக்கும். தைமாதத்தில் வரும் பூசநாளன்று விடியற்காலையில் கிழக்கில் சூரியனும், மேற்கில் முழுநிலவும், ஞானசபை நடுவில் அருட்பெருஞ்ஜோதியும் ஒரே நேர்க்கோட்டில் தெரியும். இவ்வாறு காணும் இந்தக் காட்சிதான் மிகச் சிறப்புடைய காட்சியாகும். இதுவே, தைப்பூச முதற்கால ஜோதிதரிசனமாகும். -சன்மார்க்க சாதனையாளர் கோவை அ. குருநாதன்

ஆன்மீகம்: ஜோதி தரிசனம்

ஆன்மீகம்: ஜோதி தரிசனம் ஜோதியைத் தரிசிப்பதற்குத் தடையாக இருக்கும் அந்த ஏழுதிரைகளும் ஒவ்வொன்றாக நீக்கப்பெற்றால் கண்ணாடியில் முழுமையான ஜோதிதரிசனம் கிடைக்கும். இதுபோல், நாமும் நம்மிடமுள்ள ஆசை முதலிய அஞ்ஞானத் திரைகள் நீங்கப்பெற்றால், ஆன்மஒளியாக அருட்பெருஞ்ஜோதியை நம் சுத்தமனத்தில் தரிசிக்கலாம். கண்ணாடி சுத்தமனதைக் குறிக்கும். நாள்தோறும் சபையில் பகலில் 11.30 மணிமுதல் 12.00 மணிவரையும், இரவில் 7.30 மணிமுதல் 8.00 மணிவரையும் வழிபாடு உண்டு; ஆனால், ஜோதி தரிசனம் இல்லை. மாதப்பூச ஜோதி தரிசனம் இரவில் 8.00 மணிமுதல் 9.00 மணிக்குள் மூன்றுமுறை நிகழும். மாதப்பூசத்தன்று 6 திரைகள்மட்டும் நீக்கப்பெறும். ஆகவே, ஜோதிதரிசனம் கண்ணாடியில் பாதி அளவுக்கே தெரியும். தைப்பூசநாளன்று காலை 6.30, பகல் 10.00, பிற்பகல் 1.00, இரவு 7.00, இரவு 10.00, மறுநாள்காலை 5.30 மணி என்று காலம் ஒன்றுக்கு மூன்றுமுறையாக ஆறுகாலத்திற்கும் ஜோதிதரிசனம் நிகழும். அக்காலங்களில் ஏழுதிரைகளும் நீக்கப்பெறுவதால் கண்ணாடியில் ஜோதி தரிசனம் முழுமையாகத் தெரியும். 25.1.1872 (தை 13 - வியாழக்கிழமை) அன்று, தைப்பூச நன்னாளில், சபையில் முதன்முதலாக வழிபாடு தொடங்கப்பெற்றது. மக்கள் அனைவரும் ஜோதி தரிசனத்தைக் கண்டு களித்தனர். -சன்மார்க்க சாதனையாளர் கோவை அ. குருநாதன்

ஆன்மீகம்: ஞானசபையின் அமைப்பு

ஆன்மீகம்: ஞானசபையின் அமைப்பு சன்மார்க்கச் சாதனையாளர் கோவை அ. குருநாதன் எண்கோண வடிவில், ஐந்து திருச்சுற்றுகளைக்கொண்டு தாமரைமலர்போன்று தோற்றம் தரும் சபையை, புலை, கொலை தவிர்த்த அகவின அன்பர்களைக்கொண்டு, அவர் அதே ஆண்டு ஆனித்திங்களில் கட்டத்தொடங்கி, ஏழு திங்களில் முடித்தார். பின்னாளில், அதற்கு ‘சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை’ எனப் பெயரிட்டார். சபை தெற்குநோக்கி அமைந்தது. அதன் மேற்கூரை செப்புத்தகடுகளால் வேயப்பட்டிருந்தது. சபைக்கு வேலியென அமைந்த வெளிச்சுற்று சிறுசிறு தூண்களைக் கொண்டது. இத்தூண்களை நீளமான இரட்டை மடிப்பு இரும்புச் சங்கிலி இணைத்துள்ளது. சபையின் சங்கிலிவெளிச்சுற்றுக்குள், தெற்குமுக ஆசார வாயிலும், தென்கிழக்கில் கொடிமரமும், எழுவார் மேடையும் உள்ளன. சபை முதலில் இரும்புவேல்கம்பி மதிலுடன் தொடங்குகிறது. இதற்கு அடுத்து எண்கோணத் திருச்சுற்று. இதற்கு அப்பால், எண்கோணச் சுவர். இச்சுவரில் எட்டு வாயில்களும், பதினாறு சாளரங்களும் உள்ளன. சபையின் தெற்கு நுழைவு வாயிலை அடுத்துள்ள முன்மண்டபத்தில் கிழக்குப்பக்கம் பொற்சபையும், மேற்குப்பக்கம் சிற்சபையும் உள்ளன. முன்மண்டபம், பன்னிருகால் மண்டபம் ஆகும். அதன்நடுவே, நாற்கால்மண்டபம் எனும் சிறிய மண்டபம் உள்ளது. அதன்கீழே, ஒருவர் அமர்ந்து தியானம் செய்யக்கூடியவகையில் நிலவறை ஒன்று உள்ளது. நாற்கால்மண்டபத்தின் நடுவே, ஒரு சதுரப் பீடத்தின்மேல் வள்ளலார் ஏற்றிவைத்த அருட்பெருஞ்ஜோதி தீபம் அணையாதீபமாக எரிந்துகொண்டிருக்கிறது. அந்த தீபத்தின்முன்னர், ஆறடி ஒன்பதங்குல உயரமும், நாலடி இரண்டங்குல அகலமும் உள்ள ஒரு நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. தீபம், கண்ணாடி ஆகியவற்றுக்குமுன் ஏழு வெவ்வேறு நிறத்திரைகள் தொங்கவிடப்பெற்றுள்ளன. முதல் ஆறு திரைகள் கருமை, நீலம், பச்சை, சிவப்பு, பொன்மை, வெண்மை ஆகிய நிறங்களை முறையே பெற்றுள்ளன. ஏழாவது திரை மட்டும் கலப்பு நிறத்திரையாய் பாதி அளவில் இருக்கிறது. ஒவ்வொரு திரைக்கும் தனித்தனி விளக்கம் உண்டு.

ஆன்மீகம்: ஞானசபை

ஆன்மீகம்: ஞானசபை சன்மார்க்கச் சாதனையாளர் கோவை அ. குருநாதன் ஞானசபையின் தோற்றம் 1871-ஆம் ஆண்டில், வள்ளலார் மேட்டுக்குப்பம் சித்திவளாக மாளிகையில் இருந்தவந்தபொழுது, ஒருநாள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் “தான் அருள்நடம் புரிதற்கு அடையாளமாக ஓர் ஞானசபையை வடலூர் பார்வதிபுரத்திலுள்ள உத்தரஞான சிதம்பரத்தில் காணுதல் வேண்டும்” என்று தன் திருக்குறிப்பால் அவருக்கு அறிவித்தார். ‘தாம் அகத்தே கண்ட அருளனுபவத்தை, புறத்தே உலகமக்களுக்கும் பாவனையாகக் காட்டவேண்டும்’ என்ற குறிக்கோளில் இருந்துவந்த வள்ளலாரும் ஆண்டவர் கட்டளையை விருப்புடன் ஏற்றார். ஞானசபைக்கான வரைப்படத்தை தன் திருக்கரத்தாலேயே வரைந்து, அதன் அடிப்படையில் சபையைக் கட்டும் பணியை மேற்கொண்டார்.

15.5.06

ஆன்மீகம்: தருமச்சாலை

தருமச்சாலை -சன்மார்க்கச் சாதனையாளர் கோவை அ. குருநாதன் வள்ளற்பெருமான் சன்மார்க்க சபையை 1865-ஆம் ஆண்டில் நிறுவிய பின்னர், இறுக்கம் இரத்தினம் முதலியார் முதலிய மெய்யன்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க, சிதறிக்கிடந்த தம் பாடல்களைத் திரட்டித்தந்து, அவற்றை வெளியிட ஒப்புதல் தந்தார். அதைத் தொடர்ந்து 1867-ஆம் ஆண்டு பிப்ருவரி மாதத்தில் அப்பாடல்கள் “திருவருட்பா” எனும் பெயரில் நான்கு திருமுறைகளாக வகுக்கப்பெற்று வெளியிடப்பட்டன. அதே மாதத்தில்தான், அதாவது 2.2.1867 அன்று, வடலூர் - பார்வதிபுரத்தைச் சேர்ந்த 40 அன்பர்கள் தங்கள் 80 காணி நிலத்தை வள்ளலாருக்குத் தானமாக எழுதிக் கொடுத்தனர். அதனை ஏற்ற அவர் அந்த நிலப்பகுதிக்கு ‘உத்தர ஞான சிதம்பரம்’ எனப் பெயரிட்டார். அவர் வாழ்ந்த காலம் பஞ்சங்கள் நிலவியிருந்த காலம். எந்தவித ஆதாரமுமற்ற ஏழை எளியவர்களும், வழிப்போக்கர்களும் பசிக்கொடுமையால் படும் வேதனையைக்கண்டு மனம் பதைத்து, அவர்களின் பசிப்பிணியைப் போக்க திருவுளங் கொண்டார். தருமச்சாலை ஒன்றே இதற்கு வழி என்று எண்ணியிருந்த சமயத்தில், தானமாகக் கிடைத்த அந்த நிலம் அவருக்கு மிகவும் பயன்பட்டது. நிலம் கிடைத்த நாலாவது மாதத்திலேயே, அதாவது 23.5.1867 ( வைகாசி 11) அன்று, தருமச்சாலைக்கான கால்கோள் விழாவும், அன்னதானத் தொடக்க விழாவும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. அவ்விழாக்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். தருமச்சாலைக் கட்டடம் கட்டுவதன் காரணமாக கருங்குழியை விட்டு வந்த வள்லலார், 1867-இலிருந்து 1870-வரை மூன்றாண்டுகளுக்கு தருமச்சாலையைத் தன் இருப்பிடமாகக் கொண்டார். தருமச்சாலைக்கு முதன்முதலில் ‘சமரச வேத தருமச்சாலை’ என்று அவர் பெயரிட்டார். பிற்காலத்தில், 18.7.1872 அன்று ‘சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை’ என்று அவரே பெயர்மாற்றம் செய்தார். தருமச்சாலைக் கட்டடத்தில் வள்ளலார் ஏற்றிய ‘திருவடிப் புகழ்ச்சி’யும், தருமச்சாலையைப் பற்றி அவர் அருளிய பாடல்களும் கல்வெட்டுகளில் பதிக்கப் பெற்றுள்ளன. வழிபாட்டு மேடையில் ஆண்டவருக்கான ஞானசிம்மாசனமும், வள்ளலாரின் உருவச்சிலையும், அணையாவிளக்கும், ‘அருட்பெருஞ்ஜோதி அகவல்’ மூல ஏடும் அன்பர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. அன்பர்களும் கூட்டங் கூட்டமாக வந்து கண்டுகளித்து மனநிறைவுடன் திரும்பிச் செல்கின்றனர். கடும் பசியுள்ளவன் உண்ணும் உணவில்தான் இறைவனைக் காண்பான். அவன் பசியுடன் இருக்கும் பொழுது எந்த போதனையும் அவனுடைய செவியில் புகாது. அவன் கடைத்தேற, அவனுக்கு முதலில் வேண்டுவது உணவுதான். பசித்தோரின் பசிப்பிணியைப் போக்குவதன் மூலமாகவே ஒருவன் ஆண்டவரின் பேரருளைப் பெறக்கூடுமே அல்லாமல், பூஜை, ஜபம், யாகம் போன்றவற்றால் அன்று. இரக்கமே உயிர் எனக் கொண்ட வள்ளலார் பசிவேதனை கொண்ட ஏழை மக்களின் துயர்துடைக்க தருமச்சாலையைக் கண்டார். தனக்குப் பின்னரும், தொய்வில்லாமல் தொடர்ந்து நடைபெற அணையா அடுப்பை ஏற்றிவைத்தார். 138 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அந்த அடுப்பு எரிந்துகொண்டு, ஏழை மக்களின் பசித்தீயை அணைத்துக் கொண்டிருக்கிறது. தான் போதித்ததை, தானே செயலாற்றிக் காட்டிய, உலகங் கண்ட, முதல் துறவி அவர்!

9.5.06

ஆன்மீகம்: 'சன்மார்க்க சங்கம்'

ஆன்மீகம்: சன்மார்க்க சங்கம் -சன்மார்க்க சாதனையாளர் கோவை.அ.குருநாதன் திருவருட்பிரகாச வள்ளலார் தனது 35-ஆவது வயதில் சென்னையைவிட்டு நீங்கிய பின்னர், அவர் நெடுங்காலம் வாழ்ந்தது வடலூருக்கு அடுத்த கருங்குழி என்னும் சிற்றூரில்தான். அங்கு வேங்கடரெட்டியார் என்னும் அன்பர் ஒருவர்வேண்டியதற்கிணங்க 1858-இலிருந்து 1867 வரை ஒன்பது ஆண்டுகாலம் அவருடைய இல்லத்தில் தங்கியிருந்தார். அங்கிருந்த காலத்தில் எண்ணற்ற அருட்பாக்களை எழுதிவந்தார். அவ்வாறு தங்கியிருந்த காலத்தில், 1865-ஆம் ஆண்டில், தன் கொள்கைகளைப் பரப்பவும், மக்கள் அவற்றைக் கடைப்பிடித்து உய்யவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சம்மதத்துடன் சன்மார்க்க சங்கம் ஒன்றை நிறுவ உளங்கொண்டார். தாசமார்க்கம், சற்புத்திரமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என்று நான்குவகை மார்க்கங்கள் உண்டு. அவற்றில் சன்மார்க்கம் ஒன்றே ஞானத்தைப் பெற வழிகாட்டும். ஆயினும், அது சமயத்தொடர்பாக இருந்தபடியால், சாதி, சமயம், மதம், சாத்திரங்கள் சார்பில்லாமல் எல்லாவகை மக்களும் ஏற்றுக்கொள்ளத் தக்கவகையில் அதைத் திருத்தி, மேம்படுத்தி ‘சுத்த சன்மார்க்க’த்தை வகுத்தார். சுத்த சன்மார்க்கம் என்பது உண்மைநெறியைக் குறிக்கும். இதன் அடிப்படையில் வள்ளலார் சங்கம் அமைத்தார். இச்சங்கத்திற்கு ‘சமரச வேத சன்மார்க்க சங்கம்’ என்று முதலில் பெயரிட்டார். பின்னர், 1872-இல் சங்கத்தின் பெயரை ‘சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம்’ என்று பெயர் மாற்றம் செய்தார். சன்மார்க்க சங்கத்திற்கு நிரந்தரத் தலைவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே என்று அவர் அறிவித்தார். தயை உடையோர் எல்லோரும் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்தவர்களே. சன்மார்க்க சங்கத்தவர்கள் வள்ளலாரின் கொள்கைகளைப் பின்பற்றுவதுடன், அவரின் பாடல்களைத் திரட்டி நூல்களாக வெளியிட்டும், தருமச்சாலை, ஞானசபை ஆகியவற்றை நடத்தியும் தொண்டாற்றி வருகின்றனர். வள்ளலார் தான் அவதரித்த நோக்கத்தை நிறைவேற்றும் முகமாக சன்மார்க்க சங்கத்தையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தினார். தீயவனையும், தூயவனாக மாற்றி, இவ்வுலகத்திலேயே மேலுலகப் பேரின்பத்தை அவன் பெற்று மகிழச் செய்யும் ஆற்றல் உள்ளது சன்மார்க்க சங்கம் ஆகும். வள்ளலார் கூற்றுப்படி,பெற்றதாய்போல் உரைப்பவர் சன்மார்க்க சங்கத்தவர். மரணத்தையும் வெல்ல வல்லவர் சன்மார்க்க சங்கத்தவர்களே. சாகாதவனே சன்மார்க்கி! சன்மார்க்க சங்கத்தில் உருவ வழிபாடு இல்லை; சமயச் சடங்குகள் இல்லை; ஆரவாரம் இல்லை. ஆனால் ஜோதிவழிபாடு மட்டும் உண்டு. சன்மார்க்க சங்கத்தின் முக்கிய கொள்கைகள்:- 1. கடவுள் ஒருவரே; அவர் ஒளிவடிவினர். அவரை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்க. 2. சிறு தெய்வ வழிபாடு கூடாது; உயிர்ப்பலியிடுதலும் விலக்குக. 3. சாதி, சமய, மத, இன, மொழி, நாடு பாகுபாடுகள் அனுசரித்தல் வேண்டாம். 4. எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையைக் கைக்கொள்க. 5. துன்புறும் உயிர்களுக்கு உதவுவதே இறைவழிபாடு. உயிர் இரக்கம் ஒன்றே இறைவனின் பேரருளைப் பெற வழிகோலும். 6. பசித்தோரின் பசியாற்றுதல் என்னும் ஜீவகாருண்யமே பேரின்ப வீட்டின் திறவுகோல். 7. புலால் உண்ணுதல் வேண்டாம். ஏனெனில், எல்லா உயிர்களிலும் கடவுள் விளங்குகிறார். 8. வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் ஆகியவற்றில் இலட்சியம் வைக்க வேண்டாம். 9. கண்மூடிப் பழக்கவழக்கங்களைக் கைவிடவேண்டும். 10. காது, மூக்கு குத்துதல் வேண்டாம். 11. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் யோகம் முதலிய சாதனங்கள் கற்பிக்க வேண்டும். பேதமற்று, படிப்பு முதலியவையும் சொல்லிக்கொடுக்க வேண்டும். 12. கணவன் இறந்தால் மனைவியிடம் தாலி வாங்குதல் கூடாது. 13. மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்யற்க. 14. இறந்தவர்களைப் புதைக்கவேண்டும்; எரிக்கக்கூடாது. 15. கருமாதி, திதி முதலிய சடங்குகள் செய்யாதீர்; மாறாக, உயிர்நீத்தவர் நினைவில் அன்னதானம் செய்தல் வேண்டும். 16. மக்கள் எல்லோர்க்கும் பொதுவான வழிபாடு ஜோதிவழிபாடே! 17. உண்மை அன்பால் கடவுள் வழிபாடு செய்து கடவுள் ஒளியை நமக்குள் காண்க. 18. பசித்திரு, தனித்திரு, விழித்திரு. 19. இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம, நித்திய ஜீவகாருண்ய ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க. 20. ஜீவகாருண்ய ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க ஏமசித்தி, சாகாக்கல்வி, தத்துவ நிக்கிரகம் செய்தல், கடவுள்நிலை அறிந்து அம்மயம் ஆதல் ஆகிய நான்கு பேறுகள் கிடைத்து, மரணமிலாப் பெருவாழ்வு பெறுதல் கூடும். 21. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டுதல் வேண்டும். 22. எதிலும் பொதுநோக்கம் வேண்டும்.

இலக்கியம்: கவிதை:''காப்பியடித்தல் எது?''

இலக்கியம்: கவிதை காப்பியடித்தல் எது ? தமிழறிஞர் ஒருவர். நன்றாகப் பாடுவார். பாவேந்தர் பாரதிதாசனின் “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!” என்ற பாடலை, நிகழ்ச்சி ஒன்றில், அவையினர் முன் அவர் பாட வேண்டிவந்தபொழுது, கண்களை மூடியவாறே ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பாடலைத் தொடங்கினார். வந்து விழுந்த பாடலோ, “பூமியில் மானிட ஜென்மம் எடுத்து” என்று தொடங்கிடும் தியாகராஜ பாகவதர் பாட்டு... அவையினர் வியக்க, அவர்மேல் அன்பு கொண்டோர் திகைக்க, அதைப்போய்ச் செய்தியாக்கி தன் திறமையைக் காட்ட அந்த நிகழ்ச்சி இடம்பெற்ற கல்லூரியின் மாணவி (பகுதிநேர நிருபர்) ஒருவர் - பெரிய நாளேட்டுக்குத் தர, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அது பிரசுரிக்க, அந்தத் தமிழறிஞருக்கு ஆகாதவர்கள் குதூகலம் அடைய, ஆனவர்கள் வருத்தம் உற்று நாளேட்டாசிரியரிடம் தொலைபேசிவழி உறும.. இப்படியே பலருக்கு நேரம் வீணாய்ப் போனது. அவர் அவ்வாறு பாடத் தொடங்கியதற்குக் காரணம் என்ன? தியாகராஜ பாகவதரின் திரைப்பாட்டின் சாயலில் பாவேந்தரின் பாட்டான “வாழ்வினில் செம்மையை” அழகாக அமைந்ததுதான் காரணம். அதில் என்ன தவறு? இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தின் அரசு நிகழ்ச்சிகளிலும் பொதுநிகழ்ச்சிகளிலும் முறையாகத் தொடக்கமாகப் பாடவேண்டிய பாடலாக அரசு ஆணை பிறப்பித்த தமிழ்வாழ்த்துப் பாடலான அதை, தங்கள் மனம் போன போக்கில் விருப்பப்பட்ட ராகங்களில் பாடித் தங்களின் ஆற்றலைக் காட்டுபவர்கள் வேண்டுமானால் தவறு செய்பவர்கள் ஆகலாம். “பூமியில் மானிட ஜென்மம் எடுத்துமோர் புண்ணியமின்றி விலங்குகள்போல்..” என்று கம்பீரமாகவும் அதே நேரம் இரக்கம் தோன்றுமாறும் கணீரென்று பாடிய பாகவதர் சாயலில், ‘‘வாழ்வினில் செம்மையை’’ப் பாடுவதுதான் பாவேந்தரே விரும்பிய முறை என்று புதுச்சேரியில் வாழ்பவரும் பாவேந்தரோடு நன்கு பழகியவருமான கம்பன் விழாப் பெரும்புரவலர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதெல்லாம் அப்படியிருக்க, அரசுவிருது வழங்கும் நடுவர் குழு உறுப்பினர் என்ற முறையில், மதிப்பெண்ணும் தெரிவும் இட்டுத்தர, புத்தகம் ஒன்று என்னிடம் வந்தது. பெயர்: ‘இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் மரபுக்கவிதை யாப்பியல்; மரபும் நெகிழ்வும்.’ ஆசிரியர்: இரா.சம்பத், இலக்கியப்புலம், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிலையம்(PILC), புதுச்சேரி - 605008. [ISBN: 81-85452-08-3] வாசித்துக்கொண்டே வந்தபொழுது 104ஆம் பக்கத்தில் பாரதியாரின் எண்சீர் விருத்தம் ஒன்று கண்டேன். “களக்கமுறு மார்லிநடம் கண்டுகொண்ட தருணம் கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான் விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பியுதிர்ந் திடுமோ வெம்பாது விழினுமென்றன் கரத்திலகப் படுமோ? வளர்த்தபழங் கர்சனென்ற குரங்குகவர்ந்திடுமோ மற்றிங்ஙன் ஆட்சிசெயும் அணில்கடித்து விடுமோ? துளக்கமற யான்பெற்றிங் குண்ணுவனோ வல்லால் தொண்டைவிக்கு மோஏதும் சொல்லலரி தாமே?” என்பது பாரதியாரின் அந்தப் பாடல். (டி.வி.எஸ். மணி & சீனி.விசுவநாதன் முதலான பதிப்பாளர்களின் பதிப்புகளில்: “காய்த்ததொரு கனிதான்,” “வெம்பிவிழுந் திடுமோ?,” “வளர்த்தபழம் கர்சானென்ற,” “சொல்லரிய தாமே?” என்ற பாடங்கள் உள்ளன.)அந்தப் பாடலுக்கு ஒரு பின்புலம் உண்டு. வி. சக்கரை செட்டியாரின் முன்னுரையிலிருந்து மேற்கோள் காட்டுகிறேன். ‘‘ஹோம்ரூல் கிளர்ச்சியின் தலைவராயும், 1917ம் வருஷத்திய கல்கத்தா காங்கிரஸின் அக்கிராசனராகவும் ஸ்ரீமதி பெசண்ட் செலுத்தி வந்த செல்வாக்கு தேய்ந்துவரலாயிற்று. மிஸ்டர் மாண்டேகு விஜயஞ் செய்ததும், அவர் அடுத்தபடியாக மாண்ட்போர்டு ரிபோர்டில் கர்டிஸின் தந்திரத்தை நுழைத்ததும் காங்கிரஸ்காரர்களிடையே பிளவுண்டாக்க வுற்றனவாயின...[புதுச்சேரியிலிருந்து பாரதி சென்னைக்குச் சென்றபின்[1918] மூன்றாவது ஆண்டு சென்னையில் இயற்கை[11-9-1921] எய்தியதற்கு முன்னால்]..சென்னைக் கடற்கரையில் பல்லாயிரம் ஜனங்கள் சேர்ந்த பொதுக்கூட்டமொன்று நடந்தது. ஸ்ரீயுத ஸ்ரீ சுப்பிரமணிய ஐயர் தலைமை வகித்தார். மிஸ்டர் நெவின்ஸன் என்ற ஆங்கிலப் பத்திரிக்கையாளரும் வந்திருந்தார். [அந்நாட்களில் சென்னைக் கடற்கரையில் அநேக சந்தர்ப்பங்களில் ஜனக்கூட்டத்தின்முன் நின்று பாடிய] ஸ்ரீயுத பாரதியாரும் அச்சமயம் பாடினார். அவரைப் பற்றி அவ்வாங்கிலேயன் ‘’இந்தியாவின் நூதன உணர்ச்சி’’ என்ற தன் நூலில்.. பாரதியாரை [அந்த நிகழ்ச்சியில் பாரதியாரின் பங்குபற்றுதலை] வர்ணிக்கிறான்... “அந்த சென்னையின் தமிழ்க்கவி லஜபதிராய் தேசபிரஷ்டஞ் செய்யப்பட்டபோது தாம் எழுதிய புலம்பலைப் பாடினார். .. .. பின்னர் திடீரென்று மாறி அக்கவி ஏளனஞ் செய்யப் புகுந்து சுயராஜ்யம் (அல்லது ஹோம்ரூலைப்) பற்றி மிஸ்டர் மார்லிக்கும் இந்தியாவுக்கு[இந்தியத்தாய்]மிடை ஓர் சம்பாஷணையை விவரிக்கத் தொடங்கினார்..”(வி. சக்கரை செட்டியார், ராஜீய வாழ்வு, 1.3.1922ஆம் நாள் எழுதிய முன்னுரையின் தமிழாக்கம்.) அந்த உரையாடலில் இந்தியத்தாய் கம்பீரமாகவும் அழுத்தமாகவும் மார்லிக்கு, அவரிடத்திருந்தும் அவர்தம் தாய்த்தேசமான இங்கிலாந்திடமிருந்துமே தான் கற்றுக்கொண்டுவிட்ட தனிப்பட்ட சுதந்திரத்தையும்(Freedom of Person) வாக்குச் சுதந்திரத்தையும் உபதேசம் செய்கிறாள். பாரதியார் பதிப்புகளில் ‘கோக்கலே சாமியார் பாடல்’ என்ற தலைப்பில் வரும் இப்பாடலின் தலைப்புக்குக்கீழ், “[இராமலிங்க சுவாமிகள் ‘களக்கமறப் பொதுநடனங் கண்டுகொண்ட தருணம்’ என்று பாடிய பாட்டைத் திரித்துப் பாடியது]” என்ற குறிப்புள்ளது. இந்தக் குறிப்பை முதன்முதலில் அங்கு இட்டவர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை. கட்டாயம், பாரதியாராக இருக்க முடியாது. [‘திரித்து’ என்பதை இங்கே மேற்கோளில் தடித்த எழுத்துகளில், வாசிப்பவர்களுக்குக் கூர்ப்பாகத் தெரியும் பொருட்டாக இக்கட்டுரையாளனே இட்டுள்ளேன்.] ‘திரித்து’ என்ற சொல், மாறுபாடான பொருளைத் தந்துவிடக் கூடியது. ஆனால், இந்த ‘இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் மரபுக்கவிதை யாப்பியல்; மரபும் நெகிழ்வும்’ என்ற ஆய்வுப் புத்தகத்தில், இரா. சம்பத் கூறுவதாவது: “வடலூர் இராமலிங்க அடிகளின் திருவருட்பாவில் ‘களக்கமறப் பொதுநடம் நான் கண்டுகொண்ட தருணம்’ எனவரும் பாடலின் சாயலை இப்பாடலில் காணலாம்’ (பக்கம் 104) இந்த அளவுக்கு பாரதியாரின் சிந்தையைக் கவர்ந்து ஓர் அழுத்தமான சாயலை விதைத்த வடலூர் இராமலிங்க அடிகளின் பாடல் இதோ: “களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம் கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான் விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பியுதிர்ந் திடுமோ வெம்பாது பழுக்கினுமென் கரத்திலகப் படுமோ கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ குரங்குகவ ராதெனது குறிப்பிலகப் படினும் துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ ஜோதிதிரு உளமெதுவோ ஏதுமறிந் திலனே.

28.4.06

திபேத்தியப் பழமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்

திபேத்தியப் பழமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும் பேராசிரியர் அ.பசுபதி (தேவமைந்தன்) இமயமலை விசும்பைத் தொட்டுவிடுவதுபோல் காட்சியளிக்கும் நிலப்பகுதியின் உட்பக்கம் விரிந்து பரந்து கிடக்கும் பனிப்பாலைவனமான மலைப்பகுதி, ‘இலே’[Leh] எனப்பெறும் இலடாக்கின் தலைநகர் ஆகும். இந்த ‘இலே’ நகரில் எப்பொழுதும் மிகையான குளிரும் மிகையான வெப்பமும் மாறி மாறி நிலவும். மக்களின் பண்பாடு உருவான வகை இந்திய ஒன்றியத்தின் ஆகப்பெரிய மாநிலம் (முன்பு மாவட்டம் என்றே அழைக்கப்பெற்றது) இலடாக்கு; அதேபொழுது அதன் மக்கள் தொகையோ மிகவும் குறைவு. இப்பொழுது உள்ள மக்கள் தொகை மிகுதி . 1971-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பெற்ற கணக்கீட்டில், இலடாக்கின் 95,876 ச.அ.மா. பரப்பில், நூற்றைந்தாயிரம் மக்களே வாழ்ந்தனர் என்று உள்ளது. உணவையும், விலங்கினங்களுக்கான தீனியையும் வேண்டும் அளவுக்குமேல் உருவாக்கிய மக்கள் அவர்கள். கிழக்குத் துருக்கித்தானத்திலிருந்து பயணம் செய்து வரும் ஒட்டக வண்டியொழுகைக்கும், மாந்தருக்கும், அவர்கள் இவர்ந்துவரும் குதிரைகளுக்கும், கோவேறு கழுதைகளுக்கும் போதும் போதும் என்கிற அளவு உணவும் தீனியும் தந்த பின்பும் தங்களுக்கும் தங்கள் வீட்டு விலங்குகளுக்கும் உணவும் தீனியும் மிகுந்திருப்பதைக் கண்டு நிறைவுடன் வாழ்ந்த மக்கள். வடக்கே துருக்கித்தானமும்; கிழக்கே சீனமும்; தெற்கே குலு, அமிர்தரசு முதலான இந்திய நகரங்களும்; மேற்கே ஆப்கானித்தானமும், காசுமீரமும் என்ற நிலவியல் நிலையில், ‘இலே’ நகரம், நடுவண் ஆசிய வணிகத்திற்கு ஏற்ற நடுவமாகும். நெடும் பயணத்தால் களைத்துவரும் ஒட்டகங்களுக்கு நல்ல உணவும் நீரும் ஓய்வும் பண்டுவமும் அளிக்கும் புகலிடமுமாகும். இத்தகைய சூழலில், திபேத்திய மொழி மக்களின் பண்பாடு, முற்றிலும் உணவு- உடை- உறையுள் தொடர்பானதாகவும்; மாந்தரை விருந்தோம்புதல் என்பதற்கும் மேலாக விலங்குகளை விருந்தோம்புதல் என்பதைச் சார்ந்ததாகவும் அமைந்திருக்கிறது. திபேத்தியப் பழமொழிகளுக்கும் தமிழ்ப் பழமொழிகளுக்கும் உள்ள முகாமையான வேறுபாடு தமிழ்ப் பழமொழிகளில் பெரும்பான்மையும் தூயதமிழ்ச் சொற்களே காணப் பெறுகின்றன. ஒலிப்பும் அவ்வாறே. ஆனால் திபேத்தியப் பழமொழிகளிலோ மிகவும் இயல்பாக திபேத்தியம் அல்லாத மொழிகளின் சொற்கள் ஊடுருவியுள்ளன. எந்த அளவுக்கு மொழி ஊடுருவல் நிகழ்ந்துள்ளது என்றால் ஏற்கெனவே பழமொழிகளில் இருந்த தூய திபேத்தியச் சொற்கள் அகற்றப்பட்டு, அங்கே காசுமீரி, இந்துத்தானி அல்லது துருக்கி மொழிச்சொற்கள் இடம்பெற்று விட்டன. என்ன கரணியம்? நிலவியல் அடிப்படையிலும் மொழிநிலையிலும் வேறுபட்ட மக்களுக்கு இடமும் உணவும் தரும் பண்பாடு திபேத்தியருக்கு இருந்ததால், மெல்ல மெல்ல “ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியது போல” ஆனது. பழமொழிகளுக்கே இந்த நிலை என்றால், திபேத்திய மொழி என்ன ஆகியிருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ? இதனால்தான் அவர்களின் பழமொழி - “வருகைதரும் நல்ல வணிகப் பெருமக்களுக்குத் தோழமை காட்டு; களவாணியை விரட்டியடி!” (மறைத்திரு செர்கான் தொகுப்பு: எண்.644) என்று கூறுகிறது. வணிகத்தோடு வந்த மொழிதானே தமிழில் கலப்புக்குக் கரணியமானது? “வந்தவரெல்லாம் சந்தையில் குடியா?” என்ற தமிழ்ப் பழமொழி, சற்றொப்ப இதே கருத்தை உணர்த்துகிறது. திபேத்தில் நான்கு திசைகளிலிருந்தும் வேற்று நாட்டவரும் இனத்தவரும் எளிதில் புக நேர்வதால் அங்கு பழமொழி சற்று விரிவானதாக இருந்து, “களவாணியை விரட்டியடி!” என்பதும் இணைகிறது. இன்று மேற்கு வங்கத்தில் இந்நிலை இருப்பதைப் பார்க்கலாம். ஒத்த கருத்து; உணர்த்தல் வேறு! திபேத்தியப் பழமொழியொன்று, “தன் விரலை வெட்டிக் கொண்டாலும், குருதி வீணாகாமல் பார்த்துக் கொள்வான்!”(மேலது: எண்.656) என்று சொல்கிறது. கஞ்சன் எனப்படும் இவறன்மை உடையவனைக் குறித்துக் கூறப் பெறுவது இது. “அறுத்த விரலுக்குச் சுண்ணாம்பு தடவமாட்டான், ஆண்டி வந்தாலும் பிச்சை போடமாட்டான்!” என்ற தமிழ்ப் பழமொழி, ஒத்த கருத்தை உடையது; ஆனால் உணர்த்துவது வேறாயிருக்கிறது. இந்தப் பழமொழி, ‘கழகப் பழமொழி அகரவரிசை’ நூலுள்(ப.27:எண்.798) இவ்வாறு உள்ளது. மக்கள் வழக்குகள், “அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கிடையாது,” “அறுத்த விரலுக்குச் சுண்ணாம்பு தரமாட்டான்” என்பவையே. ஒத்த கருத்துடைய விரல் குறித்த பழமொழிகள் தமிழிலும் திபேத்தியத்திலும்தாம் உள்ளன. ஆப்பிரிக்கப் பழமொழி ஒன்று, “வெறும் கையை நக்குவாரில்லை” என்று கையளவு போகிறது. அவ்வளவுதான்.( சான்றுகள்: ப. இராமசாமி, உலகப் பழமொழிகள், வள்ளுவர் பண்ணை, சென்னை 1964: சு. இலட்சுமி நாராயணன், உலகப் பழமொழிகள், வானதி, சென்னை 1994). தன் விரலை வெட்டிக் கொண்டாலும், குருதி வீணாகாமல் பார்த்துக் கொள்வதென்பது ‘இலே’ நகரின் குளிர்மிகுந்த பொழுதில் கூடுமானதே. உயர்ந்தோர் குறித்த திபேத்திய - தமிழ்ப் பழமொழிகள் “இறப்பைச் சந்திக்கவே நேர்ந்தாலும் சொந்த நல்லியல்பிலிருந்து வழுவ மாட்டார்கள் நேர்மையாளர்கள்!”(மறைத்திரு செர்கான் தொகுப்பு: எண்.988) என்ற திபேத்தியப் பழமொழி, பழமொழி இயல்பில் குன்றி, பொன்மொழி போலத் தெரிகிறது. “மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் / உயிர்நீப்பர் மானம் வரின்” (திருக்குறள்: 969) என்ற திருக்குறள் கருத்தினைத் திபேத்தியர் அறிந்திருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. கவரிமா என்பதைக் கவரிமான் என்று சொல்லக்கூடாது என்றார் மொழிஞாயிறு பாவாணர். ஏனெனில் கவரிமா என்பது குளிர் மிகுந்த நிலப்பகுதியில் மட்டுமே வாழக்கூடியது; ஆப்போலும் தோற்றம் உடையது என்றார் அவர். ஆனால், தமிழ் மரபுரையில், அவர் நேரிலுரைத்த இக்கருத்து காணப்பெற்றிலது. விலங்குகள் உடம்பில் மயிர் முளைப்பது தொடர்பாக.. திபேத்தியருக்குச் சினம் வந்தால் மற்றவரை “உடம்பில் மயிர் முளைக்காத விலங்கே!” என்று திட்டுவார்களாம். சூழலுக்கும் விலங்கு வளர்ப்பு - விலங்கு விருந்தோம்பல் பண்பாட்டுக்கும் ஏற்பவே வசைமொழியும் பிறக்கும் என்பது மாந்தவியல் பேரறிஞரான மலினோவ்சுகியின் கருத்து. ஓரிடத்தில் விருந்துச்சாப்பாடு போடுகிறார்கள் என்றால் விழுந்தடித்துக் கொண்டு ஓடுபவர்களைக் குறித்து, “உடம்பில் மயிர்முளைக்காத பன்றியைப் போன்றவர், உணவுக்குப் பின்னால் ஓடத்தானே செய்வர்?” என்றொரு திபேத்தியப் பழமொழி சொல்கிறது.(மேலது, எண்:991) இழிந்தோரும் விலங்குகளும் “அடுத்தவர் நலம் எண்ணாதோர், விலங்குகள் போல்வர்” (அதே நூல்: எண்:989), “பருகவும் தின்னவும் மட்டுமே அறிவன விலங்குகள்” (அதே நூல், எண்:990), “சோம்பேறிக் கழுதைக்குப் புல்லைத் தின்னவும் தெரியாது” [எளிதில் களைத்துப் போகிறவனை இவ்வாறு சொல்வர் திபேத்தியர்] (அதே நூல், எண்:367] என்பவை போன்ற பழமொழிகள் எண்ணற்றவை. ‘இலே’ நகரிலும் இலடாக்கு, இலஃகௌல், இசுபிட்டி, நாரிசு சுகோர்-க்சும் ஆகிய ஊர்களிலும் விலங்குகளை வைத்து மாந்தரைச் சுட்டும் பழமொழிகள் எண்ணில என்கிறார் மறைத்திரு செர்கான் அவர்கள். தட்ப வெப்பம் விளைவாக... மிகுந்த குளிர்வீசும் நிலையைப் பெரும்பாலும் பட்டறிவதால்[மிகுந்த வெப்பமும் நிலவும் என்பதை ஏற்கெனவே பார்த்தோம்] திபேத்திய மக்கள், தாம் என்ன சொல்லியும் திருந்தாதவர்களிடம் பின்வரும் பழமொழியைச் சொல்வர்: “மூக்கின்மேல் குளிர்ந்த காற்று மோதும்பொழுதுதான், உனக்கு அறிவு வரும்!” .(மேலது, எண்: 392) கடினமான பட்டறிவு அவர்களுக்கு ஏற்படும்பொழுது, “மண்டைத்தோல் கழன்று மலைகளுக்குப் போகிறது!” என்ற பழமொழியைச் சொல்வர். மடங்களின் தலைவர்கள் பற்றி .. திபேத்தில் இலாமாசரி என்றழைக்கப்பெறும் மடங்களும் இலாமாக்களின் தலைவர்களும் எப்படிப்பட்டவர்களாம்? “மடத்தில் வளரும் நாயை அடிக்காதே, மதகுருவின் பகையைத் தேடாதே!” இதை அடியொற்றி இன்னொரு பழமொழியும் உண்டு. “ஒருபொருள் மிகவும் தேவையென்று வரும்பொழுது (மடத்தில் வளரும்) நாயின் மலமும் கிடைக்காது!”(அதே நூல், எண்:172) இலையுதிர்காலத்தில் பால்வளமும் வீட்டு நாய்களும் வீட்டில் வளர்க்கப்பெறும் நாய்களைப் பற்றிய பழமொழியொன்று: “இலையுதிர்காலத்தின்பொழுது, உன் நாய்க்கு மோரைத் தராதே!” இதன் கரணியம், ‘இலே’(Leh) நகரில் இலையுதிர்காலத்தின் பொழுது பால்வளம் மிகுந்திருக்கும் என்பது. காலமும் மண்ணும் மக்களும் விலங்குகளும் எந்த அளவு திபேத்தில் இணைந்து உள்ளன என்பதை இதன்வழி உணர முடிகிறது. “பதியெழு வறியாப் பழங்குடி” இலடாக்கில் வாழும் மக்கள், தம் நாட்டை விடுத்து அயல்நாட்டை விரும்புகிறவர்களை வெறுக்கிறார்கள்: “நீ சென்று இருந்து வாழ்ந்து பார்க்காத நாடு, உனக்கு மிகவும் இனிமையானதே!” என்பது அதற்கான திபேத்தியர் பழமொழி . இன்னும் எத்தனையோ பழமொழிகள் திபேத்தில் புழங்கினாலும், ஆயிரம் பழமொழிகளை மட்டுமே தொகுத்திருக்கிறார் மறைத்திரு செர்கான். அவற்றுள்ளும் சிலவற்றையே இக்கட்டுரையில் கண்டோம். துணைநூல்: Rev. J. Gergan, A Thousand Tibetan Proverbs and Wise Sayings, 1976. நன்றி: பிரஞ்சு நிறுவன ஆராய்ச்சி நூலகம் ( Research Library,Institut Francaise, Pondichery) நன்றி: 'வெல்லும் தூயதமிழ்' (இலக்கிய மாத இதழ்) புதுச்சேரி-605009.

சித்தரும் சூஃபியரும் - நிறைவுப் பகுதி

சித்தரும் சூஃபியரும் பேராசிரியர் அ. பசுபதி (தேவமைந்தன்) தொடர்ச்சி ... சித்தர் பாடல்களில் கலப்படம் சித்தர் பாடல்களின் பதிப்புகளிலும் அதற்கு முன்னர் அவற்றைச் செவிவரலாறாகக் கேட்டு எழுதிய பதிவுகளான ஓலைச்சுவடிகளிலும் காலந்தோறும் கலப்படம் நிகழ்ந்து வந்திருக்கிறது. அதனால்தான் கயிலாயக் கம்பளிச்சட்டைமுனி நாயனார் போன்ற சித்தர் பாடல்களில் முன்னுக்குப் பின் முரண்களும் கருத்தோர்மைச் சிதைவும் மிகவும் கொடுமையாக ஏற்பட்டுள்ளன. சான்று: “மயங்குவான் பொன்தேடப் புரட்டுப் பேசி மகத்தான ஞானமெல்லாம் வந்த தென்பான்; தயங்குவான் மண்ணாலே சார்வு காணான் சாதகமா யோகத்திற் சார்ந்தே னென்பான்” என்றும், “ஆரப்பா உலகத்தில் ஞானி யுண்டோ? ஆராய்ந்து நான்கண்டே னென்பார் கோடி; ஏரப்பா உழுத(ல்)லோவெள் ளாமை யாகும்? ஏரில்லான் அறுத்தடித்த கதையும் ஆச்சே!” என்றும் வருபவை அவருடையவை. ஏரண ஞாயம் சுட்டும் கலப்படம் மேலே உள்ள பாட்டின் மூன்றாவதும் நான்காவதும் ஆன அடிகளில் கயிலாயக் கம்பளிச்சட்டைமுனி நாயனார் உலகோர்முன் வைக்கும் ஏரண ஞாயம் மிகவும் துல்லியமானது. ‘அங்கை நெல்லி’யெனும் மற்றொரு ஞாயம் போல ‘நெற்றியடி’ அடிப்பது. கொங்குப்புலவர் ஆன நா. வையாபுரியாரின் தலைமாணாக்கர் அறிஞர் கு. நடேச(க் கவுண்ட)ர் இயற்றிய ‘நியாயக் களஞ்சியம்’ என்ற அரிய நூலை முழுவதுமாக வாசித்தால், இதில் பொதிந்துள்ள ஏரண ஞாயம் ‘பொறி தட்டியது போல’ப் புலனாகும். இவ்வாறு ஆழ்ந்தகன்ற நுட்பத்துடன் பாடிய கம்பளிச்சட்டைமுனிச் சித்தரின் மற்றொரு அல்லது கடைசிப் பாடலாகப் பதிப்புகள் பலவற்றுள் வந்துள்ள மற்றொரு பாடல் இதோ: “மெளனமென்றீர் எனையாண்ட தட்சிணாமூர்த்தி மலர்பணிந்தே ஞானமது நூறுஞ் சொன்னேன் மெளனமென்ற நாதாக்கள் பதத்தைப்போற்றி வகையோடே நிகண்டாக வாதஞ் சொன்னேன் மெளனமென்றீர் ஞானம்பொய் யென்று சொல்லி வாகான செயமண்டி போட்டே நூற்றில் மெளனமென்ற சமரசத்தான் மக்காள் மக்காள் வாகான ஞானமுறை முற்றுங் காணே” கயிலாயக் கம்பளிச் சட்டைமுனி நாயனாரின் முந்திய பாடல் பகுதிகளின் பொருள்கோளுக்கும் இதற்கும் எத்தனை வேறுபாடு? சித்தர், சித்த மருத்துவர், ‘ஆயுள்வேத’ மருத்துவர்.. அடையாளக் குழப்பம் தெரிந்தே செய்தார்களா அல்லது தெரியாமல் செய்துவிட்டார்களா என்று தெரிந்துகொள்ள முடியாத ஓர் அடையாளக் குழப்பம் சித்தர் என்பதற்கும் சித்தமருத்துவர் என்பதற்கும் இடையில் உள்ளது. சித்தர்கள் இயற்கை மருத்துவர்களாகவோ, தமிழ் மருத்துவர்களாகவோ திகழ்ந்திருக்கலாம்; தம்மைச் சார்ந்த குமுகத்திற்கு இவ்வகையில் அவர்கள் உதவியிருக்கலாம். சித்த மருத்துவர்களும் ‘ஆயுள்வேத’ மருத்துவர்களும் தொழில்முறை மருத்துவர்கள். அவர்களைச் சித்தர் என்று கொள்ளல் ஏற்புடையதா? “சித்தர் களஞ்சியம்” நம் புதுச்சேரியிலுள்ள பிரஞ்சு நிறுவன நூலகத்தில் ஒரு பழைய நூல் உள்ளது. அதன் பெயர் “சித்தர் களஞ்சியம்.” குடந்தை பரஞ்சோதி மருத்துவசாலை பொன்னம்பலனார் (K.S. பொன்னம்பலம் என்றுள்ளது) இயற்றியது. ‘பாரம்’ என்பது எட்டுப் பக்கங்களாக இருந்த பிரித்தானியர் காலத்தில் அச்சியற்றப்பெற்றது. அந்நூலுக்கு மதிப்புரை ‘பார்த்துரை’ என்ற பெயரில் உள்ளது. வழங்கியவர் ‘யதார்த்தவசனி’ இதழாசிரியர் தி(டி).வி. கோவிந்தசாமி(ப் பிள்ளை) அவர்கள். சித்தர் களஞ்சியத்தின் பார்த்துரை அந்தப் ‘பார்த்துரை’யின் பகுதி வருமாறு: “கும்பகோணம் வைத்திய இரத்தினம் எனும் நற்பெயர் படைத்த ஆயுள்வேத பண்டித சிகாமணியாகிய மகா-ள-ள-ஸ்ரீ பொன்னம்பல பண்டிதர் பிரசுரம் செய்துள்ள “சித்தர் களஞ்சியம்” என்னும் நன்னாமம்பூண்ட நூல்பிரதி ஒன்றை நாம் பார்வையிட்டோம். சகல சித்திகளையும் அடைபவர் சித்தர் எனினும் ஆயுள்வேதியர்க்கு சித்தர்நூல் இன்றியமையாத துணைக்கருவியாகும்...” குழப்பம் மேலே சாய்வெழுத்தில் வந்த பகுதி, சித்தர்நூலைத் துணைக்கருவி என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. “சித்தர் களஞ்சியம்” நூலிலோ ஓகமுறைகளும் இருக்கை[ஆசனம்] முறைகளும் மருத்துவ முறைகளுமே உள்ளன. ‘காப்பு நேரிசை வெண்பா,’ ‘விநாயகர் துதி,’ ‘பரமசிவ வணக்கம்,’ ‘அம்பிகை தோத்திரம்” என்று தொடங்கி, ‘சித்தர்கள் தோத்திரம்” கட்டளைக் கலித்துறையில் படைக்கப்பெற்று, ‘வழிபடு குருவணக்கம்,’ ‘குருவணக்கம்,’ ‘அவையடக்கம்,’ ‘சரிதை’[சரியை அன்று], ‘கிரியை,’ ‘யோகம்,’ என்ற தலைப்புகளில் பாயிரம் அமைந்து, ‘அதிகாரியின் இலக்கணம்’[ஓகம் செய்யும் அதிகாரம் பெற்றவர்] என்று நூலின் தொடக்கம் ஐந்தாம் பக்கத்தில்தான் அமைகிறது. இந்தப் பக்கங்களுக்கு முன் உரோமன் எழுத்துகளில் பதினாறு பக்கங்கள் நூலைப் பற்றியவை. அவற்றுள் கடைசி மூன்று, ‘விஷயசூசிகா’ என்னும் பொருளடக்கம். எழுபத்தாறு தலைப்புகளில் நூல் இயன்றுள்ளது. எங்கும் ஓகமும் மருத்துவமுமே. தெளிவான சூஃபியர் வயணங்கள் சித்தர் குறித்த சிதைவு நூல்கள் இங்கு விற்பனை செய்யப்பெறுவதுபோல் சூஃபியாக்கள் குறித்து எழுதவோ எழுதியதைப் பதிக்கவோ முடியாதபடி பாரசீக மொழிவாணர்களும் அமீரகவாணரும் வளைகுடா நாடுகளில் வாழ்வோரும் விழிப்புடன் இருக்கிறார்கள். குர் ஆன் அருளப்பெற்ற வகை குறித்து எவ்வகைக் குழப்பமும் சூஃபியருக்கு இல்லை. பதிப்புகள் எவற்றிலும், ஏன், இணைய/வலைத் தளங்களிலும் கூட முரண் சிறிதுகூடப் பார்க்க முடியாது. வலையிதழ்ப் பதிப்பும் அச்சிதழ்ப் பதிப்பும் - விழித்துக் கொள்க! இங்கு இதைக் குறிப்பிட வேண்டிய அகத்தியம் இருக்கிறது. ‘இருவேறு உலகத்தியற்கை’ என்று வள்ளுவர் மொழிந்தமை நிகழ் உலகில் வேறு ஒன்றனுக்கும் பொருந்தும். அதுவே எழுத்துலகம். ஒருபக்கம் அச்சிதழ். மறுபக்கம் இணைய இதழ். இரண்டின் அமைப்பு முறையும் வேறுவேறு. அண்மையில் என் படைப்பைத் ‘திண்ணை’ வலையிதழின் இல்லப் பக்கத்[Home]தில் தேடிய நண்பர் சுட்டியைக் கீழிறக்கி மற்றொரு தலைப்பைப் பார்க்காததால் தவறவிட்டார். அச்சிதழ் அவ்வாறன்று அல்லவா? ஆனால் அச்சிதழ் ஆசிரியர்கள், தொடர்ந்து பன்முகமாகப் பரவி வரும் வலை இதழ்களை நோக்கத் தவறினால், அவர்களின் படைப்புகளும் அவர்கள் இதழ்களில் வரும் வேறு படைப்புகளும் படைப்பாளர் பெயர் மாற்றப்பட்டோ, நடை மாற்றப்பட்டோ வேறு எழுத்தாளர் பெயரில் பதிவாகி விடுவதை அவர்களால் தவிக்க இயலாது. ‘சைபர்வெளி’யில் எதிர்காலம் இவர் படைப்பை ‘அவர்’ படைப்பாகவே ஐம்பதாண்டுக் காலத்திற்குப்பின் சுட்டும். இதே நிலை, வலை இதழ்களுக்கு இப்பொழுதே நேர்கிறது. இணையத்தில் வாய்த்துள்ள ஏந்துகளுள் ஒன்றான ‘தேடல்’[Search] என்பதை பயன்படுத்தி, புகழ்மிக்க தமிழ் எழுத்தாளர் ஒருவர், அறிவியல்சார் வலைத்தளங்களிலிருந்து வேண்டிய பகுதிகளைத் தெரிவு செய்து[Select] படி[Copy]பண்ணி, பின் அவற்றை ஒட்டி[Paste], பின்னர் தன் நடைக்கு மாற்றி கட்டுரைகளை அடுத்தடுத்து அறிவியல் தொடர்பாக வெளியிட்டு வருவதை ‘விடுதலை’ இதழின் விழிப்புணர்வுக் கட்டுரையொன்று அம்பலப்படுத்தியது. வலைத்தளங்களில் அவற்றை ஆய்ந்து பதிவிட்டோர், இரவும் பகலும் எத்துணைத் தொல்லைப் பட்டிருப்பர்? சூஃபியம் - முரண் இன்மை - வலைச் சான்று இணையஉலாவுபுலங்களுக்குச்[browsingcentres]செல்வோர்[இக்கட்டுரையாசிரியரும் உலாவுபுலங்களிலிருந்து இணையப்பணி புரிபவர்களுள் ஒருவர்தான்], உலாவியில் “கூகிள்.கோ.இன்”[google.co.in] என்று முகவரியைத் தட்டெழுதுக. வரும் ‘கூகி’ளின் தேடல் இல்லப் பக்கத்தில் ‘தமிழ்’ என்று ஆங்கிலத்தில் உள்ள சொல்லைச் சொடுக்குக. ‘கூகிள்’ உங்களுக்குத் தமிழில் நீங்கள் தட்டெழுதும் எதையும் தேடித்தர அணியமாகிவிடும். ‘சூஃபியம்’ என்று இடுங்கள்.இப்பொழுது,‘தமிழோவியம்’[http://www.tamiloviyam.com]வலையிதழ் வெளியிட்டுள்ள “தொடர்: அமானுடகேள்விகளும்,அரைகுறை ஞானிகளும்[குர்ஆன் அருளப்பட்ட விதம்]” என்ற விரிவான விளக்கம் தோன்றும். திருக்குர்ஆன் அருளப்பெற்ற முறை குறித்தும், சூஃபியாக்கள் இறைவேதத்தின் உண்மையான பின்னணியை அறிந்து வைத்தவர்களே என்பது குறித்தும் அத்தொடர் தெளிவாக மொழிகிறது. சித்தர்கள் கூறியவை குறித்து இத்தகைய திண்ணிய, கட்டுப்பாடான, ஒழுங்கான, ஓர்மையுடன் கூடிய பதிப்பு முயற்சியே இன்றைய தேவையாகும். *********************************** (நன்றி: வெல்லும் தூயதமிழ் - இலக்கிய மாத இதழ் மேழம் 2037 / மே 2006)

5.4.06

மாடல்ல! மனுஷிதான் நான்! - மங்கை பசுபதியின் கவிதை

மாடல்ல! மனுஷிதான் நான்! -மங்கை பசுபதி மாடல்ல, நீங்கள் பல்பிடித்து விலைபேச! ஆடல்ல நீங்கள் விரல்மறைத்து விலைபேச! உம்மைப்போல் நாங்கள் உயிருள்ள பிறவிகள்தாம்! ஐரோப்பா மண்டலத்தில் பிறந்திருந்தால் நாங்கள்; விலைபேச வருவீரா? வரும்நேரம், நாங்கள் வீட்டில்தான் இருப்போமா? இருந்தாலும் - உம்மைத்தான் மதிப்போமா? காலம்தான் மாறிடினும் இந்தியர்கள் மாறவில்லை! “கழிப்பிடம் சென்றுவந்தால் கைகழுவவேண்டும்” என்று விளம்பரங்கள் இந்தநாளும் ‘பிரச்சார பாரதி’யில்! கைகழுவி வாருங்கள் - பின்னர் பெண்ணின்விலை பேசுங்கள்! பீகார், ராஜஸ்தான், ம.பி., உ.பி. - இங்கெல்லாம் கற்றவர் விகிதம் குறைவு! தமிழகம் கேரளம் வங்கம்இம் மூன்றும் - கல்வி அறிவு பெற்றோர் அதிகம் கொண்டும் திருந்தவிலை இன்னும்தான் முழுதாய்! முப்பத்து மூன்று பெர்செண்ட் இன்னும் சித்திக்க வில்லையே பையா! நீ ஆணாக வில்லையே இன்னும்! - நல்ல ஆணாக இருப்பவர்கள் பெண்களுக்கு - முந்தி ஏற்ற இடம் தருவார்கள் அன்றோ? பெண்ணை மதிக்காத தேசம் பாழ்பட்டுப் போகும் என்று மண்ணில் உரக்கவே சொல்லுங்கள்! தனைப்பெற்ற தாயைப் போன்றவர்கள் பெண்கள் - என்று உணராத ஆணுமொரு ஆணா?- தன்னை மதிக்காமல் வாழ்பவளும் பெண்ணா? நன்றி: திண்ணை.காம்

3.4.06

சித்தரும் சூஃபியரும் - தொடர்ச்சி

சித்தரும் சூஃபியரும் -பேராசிரியர் அ. பசுபதி (தேவமைந்தன்) சென்ற இதழின் தொடர்ச்சி.. ஆனால் வள்ளலாரோ தன் உடல்முழுவதையும் வெண்மையும் தூய்மையும் நிரம்பிய ஆடையால் போர்த்துக் கொண்டே இயங்கியவர்; தலையையும் எப்பொழுதும் முக்காட்டிட்டுக் கொண்டவர். தன் அன்றாட வாழ்வில் உணவு முதலிய எல்லாச்செயல்களிலும் தூய்மையையும் ஒழுங்கையும் கடைப்பிடித்தவர். அவ்வாறு இல்லாதவர்கள் உயிரிரக்க ஒழுக்க[சீவகாருண்ணிய ஒழுக்க]த்தையோ அறச்செயல்களையோ உணவுவழங்குகை[அன்னதானம்]யையோ செய்யலாகாது என்ற கண்டிப்பை விதித்தவர். ஆகவே, பட்டினத்தார் புகன்ற சித்தர்களின் அகத்தோற்றம்தான் வள்ளலாருக்குப் பொருந்துமே தவிரப் புறத்தோற்றம் பொருந்தாது. பட்டினத்தார் கூற்றுப்படி வள்ளலார் சித்தர் ஆவதோடு மட்டுமல்லாமல், பட்டினத்தார்தம் சித்தர் விளக்கத்தில் உள்ள புறத்தோற்றத்துக்கும் சீர்திருத்தம் வகுத்தார் என்க. சூஃபியியம் எவ்வாறு தோன்றியது? சூஃபியியம் எவ்வாறு தோற்றம் கொண்டது என்பதற்கு முனைவர் க. நாராயணன் அரிய விளக்கம் தருகிறார்: “நம்பிக்கை அதிகாரம் ஆகிய இரு இரும்புக் கரைகளிடையே இசுலாமியச் சமய ஆறு ஓடியது. தடுக்கவோ திசை திருப்பவோ தடைகள் ஏதும் இல்லாத ஆறுபோல் இசுலாம் இயங்கியது. இசுலாமியச் சமயக் கருத்துக்களை முழுமையாக நம்பி நடைமுறைப்படுத்த வேண்டுமே தவிர ஏன் எதற்கு என்ற வினாக்கள் தொடுத்து ஆராயக்கூடாது. மரபாக வரும் இசுலாமியச் சமுதாயப் பழக்க வழக்கங்கள் ‘குர்-ஆன்’ எனும் சமயச் சட்ட நூலுக்கு விளக்கங்களாயின. ‘குர்-ஆன்’ நூலை மீறிய எண்ணங்களை இசுலாம் ஏற்காது. ‘குர்-ஆன்’ தீர்ப்பே இறுதித் தீர்ப்பு. “இசுலாத்தின் இறுக்கமான நம்பிக்கையும் அதிகாரமும் புதிய சிந்தனைகட்கு இடமளிக்கவில்லை. குர்-ஆன் கூறும் சட்டம், காலங்காலமாக வழங்கி வரும் மரபுகள், இசுலாமியச் சமுதாய ஒப்புதல் என்பனவற்றின் செல்வாக்கும் அதிகாரமும் புதிய எண்ணங்கள் எழத் தடைகளாயிருந்தன.”(Harold Titus, Living Issues in Philosophy, p.) ஆமைவேகத்திலும் திரைமறைவிலுமாக சில சிந்தனையாளர்கள் புதிய எண்ணங்களை எழுப்பிச் சமயப் புரட்சிக்கு வித்திட்டனர். இசுலாத்தின் பழைமைப் போக்கு மெல்ல மாறத் தொடங்கியது. நம்பிக்கையும் பகுத்தறிவும் முரண்படும் கட்டங்களில் இசுலாமிய ஞானிகள் சிலர் சமயக் கட்டுப்பாடுகளை மீறிச் சிந்தித்தனர். இறைவனிடம் சரண் புகுந்து அடிமைப் பணி புரிவதைக் காட்டிலும் அருளின் உருவமாக விளங்கும் இறைவனுடன் கலந்து ஐக்கியப்படுவதே சிறந்ததென்றும் அத்தகு ஐக்கியத்திற்குத் துணை செய்யுமாறு சமயங்கள் இயங்க வேண்டும் என்றும் புதிய சிந்தனையாளர் கூறினர். சூஃபியியம் தொடங்கிற்று.”(சித்தர் தத்துவம், மூன்றாம் பதிப்பு 2003, புதுச்சேரி.8., ப.202) சித்தாடல் முதலியவற்றை எதிர்த்த சூஃபியார் அபூ-யாசித் என்ற சூஃபியார் எட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் ஒன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியிலும் வாழ்ந்தவர். இறைவனோடு தம்மை இணைத்துக் கொள்வதைத் தவிர சித்தாடல், மந்திர தந்திரச் செயல்கள் புரிவதில் ஈடுபடல் முதலானவற்றில் சூஃபியர் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கிறார். (மேலது, ப.207) சித்தாடல் வல்லவர்கள் குறித்து... “சித்தாடல் வல்லவர்கள்தாம் சித்தர், ஆனால் சித்தாடல் புரிபவர் எல்லாம் சித்தர் அல்லர்” என்ற ஓர் ஏரணக் கூற்று, சித்தர் மெய்ப்பொருள் உண்ர்ந்தாரிடத்தே நின்று நிலவி வருகிறது. இதற்குமேல் சித்தாடல் குறித்தும் சித்தர் குறித்தும் நாம் மன்றாட வேண்டுவது இல்லை. சித்தர்-சூஃபியர் கருத்து ஒப்பீடு சித்தர் திருமூலரின் கருத்தும் சூஃபியார் குணங்குடி மசுத்தான் சாகிபு அவர்களின் கருத்தும் பல இடங்களில் ஒத்துப்போவதைக் காண வியப்பாக உள்ளது. காட்டாக, “ஊனாகி ஊனினுயி ராகியெவ் வுலகுமாய் ஒன்றா யிரண்டு மாகி உள்ளாகி வெளியாகி யொளியாகி யிருளாகி ஊருடன் பேரு மாகிக் கானாகி மலையாகி வளைகடலு மாகியலை கானக விலங்கு மாகிக் கங்குல்பக லாகிமதி யாகிரவி யாகிவெளி கண்டபொரு ளெவையு மாகி நானாகி நீயாகி அவனாகி அவளாகி நாதமொடு பூத மாகி நாடுமொளி புரியஅடி யேனுமுமை நம்பினேன் நன்மைசெய் தாளுதற்கே வானோரும் அடிபணி தலுள்ளநீர் பின்தொடர வள்ளல்இற சூல்வரு கவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண் மணியே முகியித் தீனே!” [குணங்குடி மசுத்தான் சாகிபு பாடல்கள்: பா.3] என்ற பாடலின் கருத்தோர்மையைப் பின்வரும் திருமூலர் பாடல்கள் காலத்தாலும் இடத்தாலும் முன்னரே கொண்டுள்ளன: “புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப் புகுந்துநின் றான்புகழ் வாய்இதழ் வாகிப் புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப் புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே. தானே திசையொடு தேவரு மாய்நிற்குந் தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந் தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந் தானே உலகில் தலைவனு மாமே. உடலாய் உயிராய் உலகம தாகிக் கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய் இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி அடையார் பெருவழி அண்ணல்நின் றானே.” [திருமந்திரம் -- இரண்டாம் தந்திரம்:10:காத்தல், பா.1-3] பீருமுகம்மது அப்பா அவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சூஃபியருள், அப்பா அவர்கள் பாடிய பாடல்கள் அடங்கிய தொகுப்புகளுள் ஒன்று ‘ஞானரத்தினக் குறவஞ்சி’ ஆகும். அதில் சிங்கன் சிங்கி உரையாடலாக அரும்பெருங்கருத்துக்களை எளிமையான தமிழில் எடுத்துக் கூறியிருக்கிறார். சான்று: “ என்ன விதமாகத் தன்னை மறப்பது சிங்கி? - அது ஒன்றைப் பொருந்தி ஒடுங்கி இருப்பது சிங்கா! என்ன விதமாக ஒன்றைப் பொருந்தலாம் சிங்கி? - அது எல்லாம் மறந்து இருளாய் இருப்பது சிங்கா! “ கண்புருவப் பூட்டும் புருவ நடு - வில் உவமையும் வள்ளலார், திருவருட்பா - ஆறாம் திருமுறையில் ‘கண்புருவப் பூட்டு’ என்ற தலலப்பில் பதினொரு தாழிசைகளில், சித்தர்கள் மிகவும் முகாமையாகக் குறிப்பிடும் நுண்ணுறுப்பு ஒன்றை விளக்குவார். திருக்குர்ஆனில் இதுவே உவமை அடிப்படையில் இடம்பெறுவதாக தேசமானிய, டாக்டர் ஏ. எம். முகம்மத் சகாப்தீன் தக்க சான்றோடு விளக்குவார். கண்புருவப்பூட்டு “ கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு” என்று வள்ளலார் இந்த நுண்ணுறுப்பைக் குறித்து விளக்குவார். ‘நுண்’ என்பது இங்கே ‘நுண்ணுட’லைக் குறிக்கும். செருமானியரான ஆனிமன் ஒப்பண்டு[ஓமியோபதி] மருத்துவத்தை இந்த நுண்ணுடல் அடிப்படையில்தான் உருவாக்கினார் என்பது கருதப்பெறத் தக்கது. கண்புருவப் பூட்டுக்கு வேறுபெயர்கள் ‘சிற்சபை,’ ‘சிற்றம்பலம்,’ ‘விந்து,’ ‘முச்சுடர்,’ ‘முச்சந்தி,’ ‘சபாத்துவாரம்,’ ‘மணிமேடை,’ ‘நெற்றிக்கண்,’ ‘கபாடம்,’ ‘சுழிமுனை,’ ‘சூன்யப்பகுதி,’ ‘பிரமரந்திரம்,’ ‘மகாமேரு,’ ‘மயானம்,’ ‘வரை,’ ‘அம்பலம்,’ முதல் இன்னும் பல பெயர்கள் புருவநடுவுக்கு உள்ளன.[முனைவர் இரா.மாணிக்கவாசகம், சித்தர்கள் பரிபாசை அகராதி, பக்.230-231.] சூஃபியாக்கள் சுட்டும் திருக்குர்ஆன் உவமை இத்தகைய இறைமருமத்தை இறைவன் நபிகள் நாயகம் அவர்களுக்கு வெளிப்படுத்தினான் என்று சூஃபியாக்கள் கூறுவர். அதற்கு அடிப்படையாகப் பின்வரும் திருக்குர்ஆன் பகுதியைக் குறிப்பிடுவார்கள்: “நெருங்கிப் பின்னர் அருகே வந்தார், வளைந்த வில்லின் இருமுனைகளைப் போல் அல்லது அதைவிடச் சமீபமாக அந்த நெருக்கம் இருந்தது. பிறகு அவன் தான் அறிவிக்க வேண்டியவற்றைத் தன் அடியாருக்கு அறிவித்தான்.(53:8-10).” நபிகள் நாயகம் இவ்வுரை வெளியாகும்பொழுது இறைவனுடன் நேர் தொடர்பு நிலையில் இருந்தார் எனவும் அந்நிலையில் இறைவன் ஒரு தெய்வீக மருமத்தை நபியவர்களுக்கு வெளிப்படுத்தினான் எனவும் சூஃபியாக்கள் கூறுவர். இந்திய நாட்டு சூஃபியாக்கள் சிலர் இவ்விதமான இறைஞானத்தை அடையும் ஓர் உறுப்பையும் குறிப்பிடுகின்றனர். இது இரண்டு புருவங்களுக்கு நடுவில் இருக்கும் பகுதியில்(இடையில்) இயங்கும் ஒரு ஞான அங்கமாகும் என்றும், திருக்குர்ஆன், இவ்விரு புருவங்களையும் உவமை அடிப்படையில் இவ்வில்லுக்கு ஒப்பிட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுவர். சூஃபித்துவ நெறியில், இறைவனை ஓர் ‘ஏகாந்த சிந்தனை’ என்றும் ஒளியென்றும் ‘ஆக்கும் சக்தி’யென்றும் வண்ணிக்கப்பெற்றிருக்கிறது.[இறைவனும் பிரபஞ்சமும், இலங்கை 1995, ப.108.] (நன்றி: வெல்லும் தூயதமிழ்[இலக்கிய மாத இதழ்] 2037, மீனம்[ஏப்பிரல் 2006] பக். 19 - 22.)

2.4.06

அவனைத் தெரியும்தானே?...-தேவமைந்தன்

மூலைக்கடையில் ஒற்றைச் சிகரெட்டுக்காய் மெலிந்த சட்டைப் பையைத் துழாவுகிறானே, பார்! அவன் எல்லாருக்காகவும் எழுதி எழுதி, சொல்லிச் சொல்லிச் சலித்துப் போய்விட்டான். அவனுக்கு என்ன தெரியும் என்று இறுமாப்புடன் கேட்கிறாய். பலபல விளக்கங்களை அந்த அப்பாவியிடம் தொடர்ந்து கோருகிறாய். உன்னைப்போல் அவன் அறிவுஜீவியா, என்ன? அவனுக்கு மார்க்ஸையும் லெனினையும் வள்ளுவனையும் மட்டுமே தெரியும். அதுவும் தெளிவாக மட்டுமே. க்யூபாவின் கஷ்டங்களின்பொழுது அரிசியைத் திரட்டி அனுப்பச் சேர்ந்த சாதாரணமானவர்கள் கூட்டத்தில் ஒருவன் அவன். சகமானுட ஜென்மங்களின் பாடுகள் சகமனிதர்களின் ‘லோல்படுதல்’கள், ‘லொங்கழிதல்கள்’ மட்டுமே அறிந்துணர்ந்த அவனையும் அவன் உறுதி என்று நம்பும் இடதுசாரிக் கொள்கையையும் நீயும் உன் விமர்சனப் பிதாமகரும் புரிந்து கொள்ளாமல் உங்களுக்கென்றே இருக்கும் பெரு,சிறு பத்திரிக்கைகளின் பரவல் பலங்கொண்டு சாடுவதில்தான் மெய்யாக சிறுபிள்ளைத்தனம் தெரிகிறது. கொழுத்த புத்தகங்களை உருவாக்க உதவும் அரசாங்க சம்பளமும்; ‘ரிச்’சாக வெளியிட்டு உலகெங்கும் ஆள்பிடித்துப் பரப்பும் பிரத்தியேக சாமர்த்தியமும்; ஆதிக்க வெறிப்போடு பழைய தோழர்களை அவமதிக்கும் ஏக்கழுத்தமும் அவனுக்கு இல்லைதான். அவனுக்குத் தெரிந்ததாக எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆம். அழுத்திவைக்கப்பட்டவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின், எந்த ஆட்சியிலும் சுரண்டப்படுபவர்களின் கண்ணீர் அவன் கன்னங்களில் மட்டுமல்ல, எழுத்துகளிலும் வழியும்.

30.3.06

நேரம் கேட்டால் கூடச் சொல்லாதே!

நேரம் கேட்டால்கூடச் சொல்லாதே! -தேவமைந்தன் பேருந்துக்கு நின்றிருந்தேன். காத்திருந்த கூட்டத்தில் ஒருவர் தன் கடிகாரம் சரிசெய்யும் நோக்கம் தெரியக் காட்டி, நேரம் கேட்டார். ஆகப் பொறுப்பாயும் துல்லியமாயும் சமயம் சொன்னேன். அடுத்து, புன்னகைத்துக் கொண்டே அருகில் வந்தவர் பேச்சுக் கொடுத்தார். பேருந்து வரும்வரை பேசுவோம்என்று பேசி நின்றேன். பையப்பைய நான் இருக்கும் தெரு, இல்லத்தின் எண் பேச்சின் ஊடே அவரிடம் சென்றன. நாள்கள் சில காணாமல் போயின. ஒரு நாள் மாலை ஆறு மணி இருக்கும். வந்தார். அகம்முகம் மலர்ந்து அவர் வரவை ஏற்றேன். என்னைப் பேச விடாமல் கோடை மழையாய்ப் பொழியத் தொடங்கினார்: “சார்! நான் அன்னைக்கே சொல்லணும்’னு நெனச்சேன். நீங்கள்’லாம் இப்படி டைம்வேஸ்ட் பண்ணி இண்டர்நெட்டு, ஈஸைன்’ட்டு எழுதறதும் ப்ரெளஸ் பண்ண்றதுமா’ நாள’யும் பொழுத’யும் கொல்’றது தேவ’யா? நா’ பாருங்க! சாதனையாளன்! நா’ இல்லாம எங்க இண்டஸ்ட்ற்றி நடக்காது.. நாங்கள்’லாம் டெக்னிகல்! நீங்க’ள்லாம் ஜென்ரல்! ஒங்க ஜென்ரல் விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது.. தெரிஞ்சுக்க எனக்கு டைமும் இல்லே. என் டெக்னிகல் ஸ்கில் பக்கம் நீங்கள்ளாம் மழைக்குக்கூட ஒதுங்க முடியாது...” மேலும் பொறுக்க முடியாமல் மறித்தேன். “இப்ப நீங்க என்ன விஷயமா வந்தீங்க?”- முகங் கறுத்தவர் சொன்னார்: “ஒண்ணுமில்ல சார்! எங்க’ ப்ரெஷ்ஷர் குக்கர் ப்ராடக்ட் பற்றி டிஸ்கஸ் பண்ண டெல்லிவரை போகணும்; கொஞ்சம் பைனான்ஸ் பண்ணுங்க; இம்போர்ட் ஆர்டர் கெடச்சதும் ரீபே பண்ணிடுவேன்..” மறுமொழி உரைத்தேன்: “நீங்கள்’லாம் டெக்னிகல்; நாங்கள்’லாம் ஜென்ரல்; ஒங்க லெவ’லுக்கு என்னா’ல ஒசர முடியற காலம் வந்தால், ஒதவி செய்யப் பாக்கிறேன் சார்! இப்ப நீங்க போங்க!...” ‘போயிட்டு வாங்க!’ என்று சொல்லப்படவும் கொடுப்பினை இல்லாதவர், முறைத்துக் கொண்டே போனார். இப்பொழுதெல்லாம் யாராவது எங்கேயாவது நேரம் கேட்கப் போவதாகத் தெரிந்தாலே போதும், நான் மாயமனிதன்தான். ********************************************************************************

19.3.06

ஒரு தத்துவத்தின் பரிணாமம் -- தேவமைந்தன்

“உலகத்தில் வாழ்வோர் இருவேறு வகையினர். பணமூட்டைகள் குவிப்பவர் ஆகஇருப்பவர் வேறு; தெளிவான அறிவுஉடையவர் ஆகவிளங்குபவர் வேறு;” என்றார் திருவள்ளுவர். பிற்காலத்து அறிவாளி வேய்ன் டபிள்யூ டையர் சொன்னார்: "செய்பவர் ஒருவகை; செய்யாதோர் மறுவகை. இந்த இரண்டே வகையினர்தாம் இருக்கிறார்கள் உலகில்!" பெரிய திரையும் சின்னத் திரையும் மாறி மாறிக் கொட்டிய நஞ்சு உச்சிக்கு ஏறிய நிகழ்யுக அறிவுக் கொழுந்து சொன்னது: "ஒலகத்தில இருக்கிறது'களெ ரெண்டே வகையா'ப் பிரிச்சுறலாம் - ஒண்ணு 'சொணை;' இன்னொண்ணு 'சொறி.'

14.3.06

ஆன்மாவை ஈடேற்ற போட்டாபோட்டி!

இப்பொழுதெல்லாம் நம் ஆன்மா ஈடேறுமா என்ற கவலை நமக்கு வேண்டுவதே இல்லை. போட்டி போட்டுக்கொண்டு நம் ஆன்மாக்களைக் கரையேற்ற, நிறையப்பேர் வலுக்கட்டாயமாக நம் உதவிக்கு வருகிறார்கள்.சென்னைக்கு நண்பர் காரில் சென்றுகொண்டிருந்த பொழுது அவரே இதுகுறித்துப் பேசி, "நீலாங்கரைக்குத் திருப்பவா[காரை]?" என்று முயன்றபொழுது, மிகுந்த பணிவுடன் அவர் முயற்சியைத் தடுத்து ஒரு பாபாவிடமிருந்து தப்பித்து உறவினர் இல்லம் போய்ச் சேர்ந்தேன். அடுத்தநாள் சென்னையில் எனக்குத் தெரிந்த பேராசிரிய அம்மையாருடன் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தபொழுது, அவர் இது குறித்துப் பேசி,"இங்கேதானே இருக்கிறீர்கள்? நாளை ஞாயிற்றுக்கிழமைதானே? எங்கள் வீட்டு ஹாலில் நாளை காலை ஒன்பதுக்கு ஒரு ஃபங்ஷன்! வந்துவிட்டுப் போங்கள்!" என்று தோழமையுடன் வேண்டுகோள் விடுக்க, தட்டமுடியாமல் போனேன். அங்கே 'பஜன்' நடந்துகொண்டிருந்தது. போச்சு! அங்கே புன்னகையுடன் இன்னொரு பாபா படம். பல மொழிகளில் பாடல்கள். போனால் போகிறது என்று தமிழில் ஒரு சிறு பாடல். அவசர அவசரமாகப் பாடி முடித்துப் பெருமூச்சுவிட்டார், பட்டுசேலை மற்றும் அணிகளின் கனமும் கூடிய பெரிய அம்மா ஒருவர். அங்கிருந்தும் தப்பினேன். இன்றுவரை இன்னும் பாபாக்கள் சிலரை வழிகாட்டிகளாகக் கொண்ட நண்பர்கள் பலரின் வற்புறுத்தலால் அவர்கள் அழைத்த இடங்களுக்கெல்லாம் போய், அவர்கள் சொல்லுவனவற்றையும் பொழிவனவற்றையும் மொழிபெயர்ப்பவற்றையும் கேட்டுக் கேட்டு என் ஆன்மா, "அப்பா, கொஞ்சம் ஆளைவிடு!" என்று கெஞ்சும்பொழுது, மூன்று அழைப்பிதழ்கள் அஞ்சலில் வந்துள்ளன. ஒன்று மலையடிவார யோகியின் சீடரான என்னூர் நண்பர் அனுப்பியது; அடுத்தது, கேரள அம்மாவின் அடியவரான என் குடும்பத் தோழியார் விடுத்தது; மற்றது, தமிழ்ச் சிவனிய மரபின் சித்தாந்தக் கொள்கைகளில் ஆழ்ந்த ஓர் அமைப்பில் 'ஆக்டிவ் மெம்பர்' ஆகவுள்ள என் சகோதரர் அழுத்தமான குறிப்புடன் 'வந்தாகவேண்டும்' என்ற உத்தியோக தோரணையில் அனுப்பியுள்ளது. எதற்குப் போனால் என் ஆன்மா கரையேறும்? பேசாமல் ரஜினிநடித்த 'பாபா' குறுந்தகடு வாங்கி அந்த நேரத்தில் வீட்டிலேயே இருந்து பார்த்துவிடவேண்டியதுதான்.

9.3.06

சித்தரும் சூஃபியரும்

சித்தர் என்ற தமிழ்ச்சொல்லுக்கு கைகூடுகை பெற்றோர் என்று பொருள். கைகூடுகை என்பது அறிவில் தெளிவு. தெளிவு என்பது விளக்கம், துலக்கம், மன அமைவு, நற்காட்சி, ஆராய்வு என்ற பொருள்களைக் கொண்டது. சித்தி என்ற சொல்லுக்கு கைகூடுகை, வீடுபேறு என்றெல்லாம் பொருள்கள் உள்ளன. சூஃபியர் என்ற சொல் சூஃபி என்ற அரபுமொழிச் சொல்லின் ஆக்கம். அரபுமொழியில் ‘சூஃப்’ என்ற சொல் கம்பளி(wool)யைக் குறிக்கும். பின்னர் அச்சொல்லே ‘கம்பளியை உடையவன்’ (a man of wool) என்ற பொருள் குறிக்கும் ‘சூஃபி’ என்னும் சொல்லை அரபுமொழி இலக்கியத்துக்குத் தந்தது. படிப்படியாக, பாரசீகத்தில் முசுலீம் மெய்ப்பொருளியலும் ஆதனிய மறையியலும் இணைந்தவொரு முறையைப் பின்பற்றுகின்ற ஒருவரை அச்சொல் குறிக்கலானது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சூஃபிய மெய்யுணர்வாளர்களோடு பாரசீக ‘சூஃபியாக்கள்’ என்ற மெய்யுணர்வாளர்களையும் இக்கட்டுரையில் இணைத்தே காணலாம். எண்மாப்பேறு (அட்டமாசித்தி) நுண்மை, பருமை, மென்மை, விண்டன்மை [பொன்போலக் கனமாதல்], விரும்பியதெய்தல், [மற்றவர்களையும் மற்றவற்றையும்] தன்வயமாக்கல், நிறைவுண்மை[கூடுவிட்டுக்கூடுபாய்தல்], ஆட்சியனாதல்[விரும்பியவற்றையெல்லாம் நிறைவுறுத்திப் பட்டறிதல்] என்பவை எண்மாப் பேறுகள். எண்மாப்பேறுகள் கொண்டோர்தாம் சித்தர் - சூஃபியரா? கைகூடுகை என்பதற்கு, பொதுவான மாந்தருக்குக் கிடைக்காத அரிய பேறு என்ற பொருளையே பொதுமக்கள் எப்பொழுதும் கற்பித்து வருகிறார்கள். மாந்தருக்கு இயல்பானவற்றில் உள்ள நாட்டத்தைவிடவும் இயல்புக்கு மீறியவற்றில் நாட்டம் மிகுதி. அதனால்தான் தமிழ்ச்சித்தர்களுக்கு எண்மாப்பேறுகள் போதா என்று அறுபத்து நான்கு வகைச்சித்துக்களை உடைமையாக்கி மனநிறைவடைந்தனர். ஞானவெட்டியான், இயாகோப்பு வைத்தியவாதசூத்திரம் ஆகிய நூல்களும் இதற்கான குறிப்பைத் தருகின்றன. [இதுகுறித்தும் சித்துக்கள் வகைகளின் வயணமும் அறிய: முனைவர் க.நாராயணன், சித்தர் தத்துவம், புதுச்சேரி, 1988, 2003- ப.49+] சூஃபியாக்கள் [பாரசீக சூஃபி மெய்யுணர்வாளர்] பரம்பொருளை ‘உண்மை” என்றே சுட்டுகின்றனர். ‘தன்னுணர்வு கொண்ட விழைவு,’ ‘அழகு,’ ‘ஒளி’ அல்லது ‘எண்ணம்” என்ற முந்நிலையில் அவர்கள் கடவுளை வைத்துச் சுட்டுவதாக அல்லாமா இக்பால் அவர்கள் கூறியுள்ளார். [Dr.Shaik Muhammad Iqbal, The Development of Metaphysics in Persia, London. மேற்கோள்: தேசமானிய, டாக்டர். ஏ.எம். முகம்மத் சகாப்தீன், இறைவனும் பிரபஞ்சமும், கொழும்பு-7. 1995.] ஆதனிய வழியில் மிகுந்த முன்னேற்றம் அடைந்த சூபிய மெய்யுணர்வாளர்களுக்குப் பொதுவான மாந்தருக்குக் கிடைக்காத பற்பல அரிய ஆற்றல்கள் அருளப்பெற்றிருப்பதாகப் பலர் நம்புகிறார்கள். குறைந்த அளவு, தொலைவிலுணர்தல்[Telepathy] திறவோர் காட்சி[Clairvoyance] தொலைவியக்கம்[Telekinesis] ஆகிய அரிய ஆற்றல்களேனும் அவர்களுக்கு இருந்தாக வேண்டும் என்று பெரும்பாலோர் எதிர்பார்க்கிறார்கள். “... அதாவது மனிதத் தன்மைக்கு மீறினவர்களாக...”( பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள், தொகுப்பாசிரியர்; வே. ஆனைமுத்து, 1974. ப.1348.) இடர்களையும் நோய்களையும் நீக்கிக்கொள்ள ‘தர்கா’க்களுக்கும் ‘சியார’ங்களுக்கும் மதவேறுபாடின்றிப் பொதுமக்கள் செல்வதும் வழக்கமாகவுள்ளது. குறிப்பாக மாணிக்கப்பூரில் தோன்றிய நாகூர் ஆண்டகையின் இடமான நாகூர் தர்காவுக்கும்; முத்துப்பேட்டை முதலான இடங்களுக்கும் பயணம் மேற்கொள்பவர்களைச் சொல்லலாம். இவற்றையெல்லாம் பெரியார் அவர்கள் விரிவாகக் கண்டித்திருக்கிறார்கள்.(மேலது: பக்.1372,1379.) பதினெண்மர்தாம் சித்தர்களா? மரபு வழியாக 1.அகத்தியர் 2.போகர் 3.கயிலாயநாதர் 4.கோரக்கர் 5.திருமூலர் 6. சட்டைமுனி 7.கொங்கணர் 8.கூன்கண்ணர் 9.இடைக்காடர் 10.நந்தீசுவரர் 11.புண்ணாக்கீசர் 12.உரோமர் 13.மச்சமுனி 14.கூர்மமுனி 15.கமலமுனி 16.வாசமுனி 17.பிரமமுனி 18.சுந்தரானந்தர் ஆகியோரும் இவர்கள் அல்லாமல் கருவூரார், புலத்தியர், புசுண்டர், இராமதேவர், தன்வந்திரி, கபிலர் முதலானோரையும் சித்தர் என்று நிரற்படுத்துவர். இந்நிரலைக் கூர்மையாக ஒரு முறை நோக்கினால் போதும். மனம் போன போக்கில் எவரோ வகைப்படுத்தியது இது என்று உணரலாம். வேதம், மதம் - இரண்டையும் மறுத்தவர்கள் வேதத்தையும் மதத்தையும் எதிர்த்த சித்தர்களுள் அகப்பேய்ச் சித்தர், சிவவாக்கியர், பாம்பாட்டிச் சித்தர், திருவருட்பிரகாச வள்ளலார் ஆகியோர் மிகவும் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் வாழ்ந்த காலம் நிகழ்குமுகாயம்போல் வேத-மத எதிர்ப்பாளர்களுக்குப் பாதுகாப்புத் தராதது. இவர்களின் கொள்கைத் துணிவு பெரிதும் போற்றத்தக்கது. சித்தருள் சீர்திருத்தச் சிற்பியார் மறுப்பாளராக மட்டும் இல்லாமல் உடன்பாட்டு முறையில் சீர்திருத்தங்கள் பலவற்றுக்கு வித்திட்ட துணிவு வள்ளாலாருக்குத்தான் இருந்தது. அவர் அவ்வாறு ஆற்றியவை:- 1. நாட்டிலும் குமுகாயத்திலும் வீட்டிலும் ஒருமைப்பாடு நிலவப் பாடுபட்டார். 2. சாதி, மத, குல வேறுபாடுகள் ஒழிய எழுத்தாலும் பேச்சாலும் பாடாற்றினார். 3. வகுப்பு வேற்றுமை என்பது புண்ணிய பாவங்களால் இயற்கையாக விளைவது என்ற கருத்துப் பரப்புரையை வன்மையாகச் சாடினார். 4. அறிவுக் கல்வியும் ஆதனியற் கல்வியும் பெற மகளிர்க்கு உரிமை உண்டு என்று வெளிப்படையாக அறிவித்தவர். 5. கோயிலுக்குள் புகலாகாது என்று தமிழருள் பலரை மதக்கோட்பாட்டினர் கருத்துப் பரப்பலாலும் வன்முறையாலும் தடுத்துக் கொண்டிருந்த காலத்தில், உலகில் வாழும் எல்லாரும், சமய-மத வேறுபாடு எதுவுமின்றி, சென்று கூடி வழிபடக்கூடிய நன்னெறி மெய்யியப் பேரறிவுக் கழகத்தை உருவாக்கியவர். 6. கிழக்கிந்தியக் குழுமத்தின் வழி இங்கிலாந்துப் பேரரசு நாவலந்தீவினுள் நுழைந்து அறிவடிப்படையாலும் அதிகார அடிப்படையாலும் மாந்தரை அடிமைப்படுத்திய காலத்தில் ‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக, அருள் நயந்த சன்மார்க்கர் ஆள்க!’ என்ற முழக்கத்தை முன்வைத்தவர். 7. உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கத்தை முதன்முதலாகக் கண்டித்தவர். 8. எல்லாவற்றுக்கும் மேலாக, தனிமாந்தன் தன் உடலோம்ப வேண்டிய முறைமைகளையும் ‘நித்திய கரும விதி’ என்ற தலைப்பின்கீழ் வகுத்ததுடன், திருமூலர் வழியில் உடம்பாரையும் உயிராரையும் காப்பதற்கென்றே ‘மூலிகை குண அட்டவணை,’ ‘சஞ்சீவி மூலிகைகள்,’ ‘மருத்துவக் குறிப்புகள்’ என்ற மூன்றையும் ஆராய்ந்து தொகுத்தவர். 9. வள்ளலார், ஆங்காங்கே தூக்கி எறிந்தவை போக, அன்பர்களால் தொகுக்கப் பெற்ற பாட்டுகள் மட்டும் எட்டாயிரத்துக்கும் மேற்பட்டவை. பெரும் பாவலராகவும் தமிழகத்தின் முதல் புரட்சிப் பாவலராகவும் திகழ்ந்திருக்கிறார். 10. பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு ஆவன படைத்தளித்தவர். 11. மேற்குறிப்பிட்டுள்ளனவற்றுக்கெல்லாம் கொடுமுடியாகத் தன் தாய்மொழியாம் தமிழே உலகிலுள்ள மொழிகளுக்கெல்லாம் முதன்மொழி என்பதைச் ‘சத்தியப் பெரு விண்ணப்ப’த்தில் அறிவித்திருக்கிறார். “எந்தையுனைப் பாடி மகிழ்ந்து இன்புறவே வைத்தருளிச் செந்தமிழை வளர்க்கின்றாய்!” என்றுபாடி, “அருச்சனை பாட்டேயாகும்” என்ற சேக்கிழார் முழக்கத்தை மேலும் கூர்மைப்படுத்தியவர். 12. ‘மனுமுறை கண்ட வாசகம்’ இயற்றி விதிக் கொள்கையை அறிவுக் கோட்பாட்டால் வென்று காட்டியவர். [இந்நூலில் மாந்தநேயம், அரசியல் தெளிவு முதலிய ஒட்ப திட்பங்கள் நிரம்பியுள்ளன.] பட்டினத்தார் கூற்றுப்படி, வள்ளலார் சித்தர் ஆவாரா? சித்தர்களின் புறத்தோற்றம் இயல்பானதாகத்தான் இருக்கும், குறிப்பாகவும் சிறப்பாகவும் எதுவும் தோன்றாது என்பதை, “வேர்த்தால் குளித்துப், பசித்தால் புசித்து, விழி துயின்று பார்த்தால் உலகத் தவர்போல் இருப்பர் பற்று அற்றவரே!” (பட்டினத்தார் பாடல்கள்: பொது. பா.19) என்ற பட்டினத்தார் பாடலும் [“மாத்தானவத்தையும்” என்று தொடங்கும் இப்பாடலைத்தான் குமரி முதல் வேங்கடம் வரையிலுள்ள இடு-சுடுகாடுகளில் பணிபுரிவோர் தவறாது பாடுவோர்; ‘பிதாமகன்’ என்ற தமிழ்த் திரைப்படத்திலும் இப்பாடல் இடம்பெறுகிறது] வேறுபாடான தோற்றம் இருக்கக் கூடும் என்பதை, “பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத் தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச் சேய்போல் இருப்பர்கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!” (மேலது, பா.35) என்ற அவர்தம் பாடலும் சித்திரிக்கின்றன. (வளரும்...) (நன்றி: ‘வெல்லும் தூயதமிழ்’ இலக்கிய மாத இதழ், 2037, கும்பம் [மார்ச்சு 2006])