25.11.12

தெளிதமிழ் அன்பர்கட்கு மீண்டும் வேண்டுகோள்! - பேரா. ம.இலெ.தங்கப்பா


தெளிதமிழ் அன்பர்கட்கு மீண்டும் வேண்டுகோள்

தெளிதமிழ் உறுப்பினர் மிகக் குறைந்த எண்ணிக்கையினராகவே உள்ளனர். ஆண்டு உறுப்பினர் கட்டண மொத்தத் தொகையும் கூட இதழ் அச்சிடும் செலவில் நான்கில் ஒரு பங்கு கூட இல்லை. அவ்வப்பொழுது கிடைக்கும் நன்கொடையும் வாழ்நாள் உறுப்பினர் கட்டணமுமே இதழைத் தூக்கி நிறுத்துகின்றன. அவையும் அருகிவருவதால் இதழ்ச் செலவைச் சரிக்கட்டுவது மிகுந்த இடர்ப்பாடுடையதாக உள்ளது.

உறுப்பினர் சிலர் ஆண்டுக்கணக்காகக் கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். நினைவூட்டு மடல் எழுதியும் பலர் குறித்தகாலத்தில் கட்டணம் விடுப்பதில்லை. மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றோம். இனியேனும் செவிசாய்த்துக் குறித்த காலத்தில் கட்டணம் விடுக்கவும் நிலுவையைச் சரி செய்யவும் வேண்டுகின்றோம். மேலும் இக்காலப் பொருள் புழக்கம், வருவாய் நிலைகளில் உரூபா. 1500 என்பது பெருந்தொகை அன்று. ஆண்டுறுப்பினாராயிருக்கும் பலர் வாய்நாள் அல்லது புரப்புக் கட்டணம் உரூ.1500 செலுத்துமளவு பொருள் வளம் கொண்டிருப்பர் என்பதை அறிவோம். கல்லூரி விரிவுரையாளராகவும் உயர் பள்ளி ஆசிரியராகவும் இருக்கும் உறுப்பினர் நினைத்தால் மிக எளிதில் தங்களைத் தெளிதமிழின் புரப்போர் ஆக்கிக் கொள்ளலாம். அல்லது நன் கொடையாகவேனும் வழங்கலாம். ஏற்கெனவே வாழ்நாள் கட்டணம் செலுத்தி ஐந்தாண்டுகளேனும் கழிந்தவர்கள் இன்றைய விலைவாசி ஏற்றத்தை உளங்கொண்டு பணம் செலுத்திம் புரப்போராகிக் கொள்ளவும் வேண்டுகின்றோம். தெளிதமிழ் இதழின் பணியைப் பாராட்டி எழுதும் உறுப்பினர்கள் தங்களை வாழ்நாள் உறுப்பினர் அல்லது புரப்போர் ஆக்கிக் கொள்ளலாமே. தங்கள் நண்பர் சிலரையும் உறுப்பினராக்கலாம். இதழ் நடத்த வியலாத நிலை ஏற்படுமுன் அன்பர்கள் போர்க்கால அடிப்படையில் இயங்கி இதழ் தொடர்ந்து வெளிவர உதவுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
- (ஆ.ர்)

தெளிதமிழ் திங்கள் இதழ் TELI TAMIZH - TAMIL MONTHLY
ஆசிரியர்: பேரா.ம.இலெ. தங்கப்பா
தி.ஆ. 2043, நளி க 16/11/2012 ப-31.

படத்துக்கு நன்றி; nakkheeran.in

23.11.12

மறைந்த மெய்த்தமிழாசான் இலக்கணச் சுடர் முனைவர் இரா. திருமுருகன் அவர்களின் பாடல் பகுதி (நன்றி: திரு ம.இலெ. தங்கப்பா ஐயா)

சிறந்த பத்து

அழிவதும் ஆவதும் அவ்வூழ்ப் பயன்என்று
ஒழிதலின் சிறந்தது ஊக்கம் உடைமை.
இறைவனின் உண்மையை இன்மையை வாய்கிழிந்து
அறைதலின் சிறந்தது அறத்தின் வழிப்படல்.
நீற்றினை மண்ணினை நெற்றியிற் காட்டியே
மாற்றலின் சிறந்தது மனத்தின் தூய்மை
நாடிய நலம்பெற நாள்தொறும் கோயிலுக்கு
ஓடலின் சிறந்தது உழைப்பினைப் போற்றல்
பலபல துறைகளில் பலபல கற்றிட
அலைதலின் சிறந்தது ஆழ்ந்தொன்று கற்றல்
பொய்த்துறைச் சோதிடம் போற்றிச் செயல்ஒழிந்து
எய்த்தலின் சிறந்தது எண்ணித் துணிதல்
கொடை, மிகு செல்வம், கூர்மதி, கலைஇவை
உடைமையின் சிறந்தது ஒழுக்கம் உடைமை
நாத்தழும்பு ஏறிட நயங்கெழு சொல்தொடுத்து
ஆர்த்தலின் சிறந்தது அருங்கருத்து உரைத்தல்
அரும்பொருள் கருத்துஓர் ஆயிரம் பேச
விரும்பலின் சிறந்ததுஓர் வினைதனைச் செய்தல்
பயங்கெழு மதநெறி பாரினில் எமது என...
...................................................................

- முனைவர் இலக்கணச்சுடர் இரா- திருமுருகனார்.
தெளி தமிழ், புதுச்சேரி. தி.ஆ. 2043, நளி க 16-11-2012.
பக்கம் 6.

13.11.12

'வானவில்' நூல்வெளியீட்டு விழாவில் இவ்வலைப்பதிவாசான் பேரா. அ. பசுபதி (தேவமைந்தன்)


இடமிருந்து வலம்:

கலைமாமணி சு.வேல்முருகன், 'வானவில்' ஆசிரியர் ஆர். மணவாளன், கலைமாமணி முனைவர் எ.மு. ராஜன், புதுச்சேரி மாநிலச் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு வ. சபாபதி (எ) கோதண்டராமன், வலைப்பதிவர் பேராசிரியர் அ. பசுபதி (தேவமைந்தன்), முனைவர் க. பஞ்சு, வழக்கறிஞர் ப. தமிழரசன் ஆகியோர்

5.11.12

புதுச்சேரி சுதந்திரம் - நாகரத்தினம் கிருஷ்ணா

கடந்த ஆகஸ்டுமாதம் 16ந்தேதி -2012 அன்று, புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டு 50 ஆண்டுகளாகின்றன.
இந்தியாவின் பிறபகுதிகள் இந்தியக்குடியரசின் கீழ் வந்தபோதும். புதுச்சேரி காரைக்கால் போன்றவை இந்தியாவில் இணைய 15 ஆண்டுகள் காத்திருந்தன. புதுச்சேரியில் சுதந்திரப்போராட்டமென்பது நமத்துப்போனதொரு பட்டாசு.
1962ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ந்தேதி பிரெஞ்சு அரசாங்கமும் நேரு தலமையிலான காங்கிரஸ் அரசாங்கமும் ‘De Jure’ ஒப்பந்தத்தில் கைச்சாற்றிட அதுவரை பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் நான்கும் இந்திய ஆளுகைக்குட்பட்ட தனி மாநிலமாக (அல்லது யூனியன் பிரதேசமாக) உருப்பெற்றது. காங்கிரஸின் முக்கிய தலைவர்களும், அன்றைய ஊடகங்களும் இதனைக் கடுமையாக எதிர்த்தார்கள். அண்டை மாநிலமான தமிழகத்துடன் இணைப்பதுதான் முறையென்றார்கள். பிரெஞ்சு மொழியைக் கற்றிருந்த நேரு அம்மொழிமீதிருந்த காதலால் பிரத்தியேக சலுகைகள்கொண்ட இந்திய யூனியன் பிரதேசமாக புதுச்சேரியை அறிவித்தார். அவர் தயவில் புதுச்சேரி அத்தைக்கு மீசை முளைக்கிறது. கையளவு பிரதேசமான புதுச்சேரி தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருந்தால் அநேகமாக ஒரு பிர்க்காவாகவோ அல்லது அதிகபட்சமாக ஒரு தாலுக்காகவோ வந்திருக்கலாம். இன்றைக்கு ஒரு ஆட்சியர், நான்கு துணை ஆட்சியர், டசன் கணக்கில் தாசில்தார்கள்.. போதாதற்கு ஒரு மந்திரிசபை. கோலி விளையாடியக் கையைத் துடைக்காமற்கூட மந்திரி ஆவதற்கான வாய்ப்புகள் புதுச்சேரியில் அதிகம்.
இந்தியா சுதந்திரம் பெற்றது 1947ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ந்தேதி. ஆனாலும் புதுச்சேரியின் சுதந்திரம் பற்றிய கேள்விகள் அப்போதைக்கு எழவில்லை. பல காரணங்கள் இரண்டு தரப்பிலுமிருந்தன. இங்கே சுதந்திரம் வழங்கினால் பிரான்சு தமது பிறகாலனிகளையும் ஒப்படைத்துவிட்டு வெளியேறவேண்டும். அந்த ஒரு காரனத்திற்காகவே புதுச்சேரியைக் கட்டிக்கொண்டு அழுதது. இந்தியாவிற்கும் புதுச்சேரி அப்படியொன்றும் முக்கியமானதாகத் தோன்றவில்லை. ஒரே ஒரு நூற்பாலை. அதை நம்பியே பெரும்பாலான மக்களின் வாழ்க்கை. தண்ணீர் மின்சாரமென புதுச்சேரியின் அத்தியாவசிய வாழ்க்கை அண்டை மாநிலங்களைச் சார்ந்திருந்தது. ஆங்கிலேயர்களிடம் சுந்தந்திரம் பெற்றபின், நாட்டின் ஒரு பகுதியை அந்நியர்களிடம் விட்டுவைப்பதா என்றதொரு கௌரவப்பிரச்சினையாக காங்கிரஸ் அரசாங்கம் புதுச்சேரியைப் பார்த்ததேயன்றி, மற்றபடி கொடுக்கும்போது கொடுக்கட்டும் என்றே காத்திருந்தார்கள். 1948ல் பிரெஞ்சு அரசாங்கம் ஒரு யோசனையை முன்வைத்தது. பொது வாக்கெடுப்பொன்றிற்கு ஏற்பாடு செய்து பெரும்பாலான மக்கள் விரும்புவதுபோல செய்துவிடலாமென்றது. நேரு அபத்தமாக இந்த யோசனையை ஏற்றுக் கொள்கிறார். சந்திரநாகூரில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் இந்தியாவோடு இணைவதை விரும்புகிறார்கள். விழித்துக்கொண்ட பிரெஞ்சு அரசாங்கம் பிற இடங்களில் வாக்கெடுப்பைத் தள்ளிவைப்பதாக அறிவித்து கடைசிவரை அதனை நடத்தவே இல்லை. இந்திய அரசாங்கமும் ஏன் நிறுத்தினாயென்று கேட்கவில்லை. புதுச்சேரியில் அப்படியொரு வாக்கெடுப்பை நடத்தினால் இந்தியாவிலும் நாளை குறிப்பாக காஷ்மீரில் அதுபோன்றதொரு பிரச்சினையைச் சந்திக்கக்கூடுமென்ற நிலை. ஆக இரு தரப்பிலும் பொது வாக்கெடுப்பிற்கு ஆதரவில்லை. இந்தியா இதையொரு கௌரவப்பிரச்சினையாகக் கருதி பிரெஞ்சு அரசாங்கத்தின் கீழிருந்த புதுச்சேரிக்கு நிர்வாக சிக்கல்களைக் கொடுத்து வந்தது. ஒரு கட்டத்தில் புதுச்சேரி நிர்வாகமே ஸ்தம்பித்து போகும் நிலை. அந்நிலையை எட்டியபோது ஏழாண்டுகள் கடந்திருந்தன.
இந்நிலையில்தான் 1954ம் ஆண்டு மே 7ந்தேதி Dien Bien Phu யுத்தத்தில் வியட்நாமுடன் தோற்று ஜெனீவா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட கையோடு இந்தோசீனாவிலிருந்து பிரெஞ்சுக்காரர்கள் வெளியேறுகிறார்கள் அதே வேளை அல்ஜீரியாவில் காலனிவாசிகள் பிரான்சுடன் ஆயுதப்போரில் இறங்குகிறார்கள். அதன் விளைவாக புதுச்சேரியைக் கைகழுவும் முகாந்திரமாக 1954 ஆண்டு நவம்பர் 1ந்தேதி ‘De Facto’ வில் இரு நாடுகளும் கையொப்பமிடுகின்றன. பிரெஞ்சு அரசாங்கத்தின் பொருளாதாரம், பண்பாட்டு அரசியலுக்கு குந்தகமிருக்கக்கூடாதென்றவகையில் தயாரிக்கப்பட்ட இவ்வொப்பந்தம் காரணமாக அப்போதுமுதலே புதுச்சேரி தாதாக்களின் அரசாங்கமாகிவிட்டது. குபேர் புதுச்சேரி நிர்வாகத்தின் முதல் தாதா. இவர்களுக்கெல்லாம் புதுச்சேரி இந்தியாவில் இணைவதில் துளியும் விருப்பமில்லை. பிரெஞ்சு அரசாங்கத்திற்குத் தலையும் இந்திய அரசாங்கத்திற்கு வாலும் காட்டிவந்த மனிதர்.
‘De Facto’ விலிருந்து ‘De Jour’ ஒப்பந்தத்திற் கைச்சாற்றிட மீண்டும் ஏழாண்டுகளுக்குமேலாக காந்திருந்தார்கள். அதற்கும் புதுச்சேரி தியாகிகளோ, இந்திய அரசாங்கமோ காரணமல்ல. அல்ஜீரியாவில் காலனிமக்களுடன் நடத்திய யுத்தத்தில் மிகக்கடுமையாக தோற்றிருந்த பிரெஞ்சு அரசாங்கம் 1962ம் ஆண்டு ஜூலைமாதம் 16ந்தேதி அல்ஜீரியாவிற்கு சுந்திரத்தை வழங்கவேண்டியதாயிற்று. அதற்கும் ஒரு மாதத்திற்குப் பிறகு பிரெஞ்சு அரசாங்கம் புதுச்சேரியை ஒட்டுமொத்தமாக இந்தியாவசம் ஒப்படைப்பதென தீர்மானித்து 1962ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 16ந்தேதி, புதுச்சேரியை இந்தியாவிடம் தாரைவார்க்கிறார்கள். ஆக உண்மையில் புதுச்சேரி சுதந்திரம்பெற ஒரு வகையில் அல்ஜீரிய மக்களே மூல காரணம். அங்கே இடி இடிக்க இங்கே மழைபெய்தது. புதுச்சேரி சுதந்திரத்திற்கு புதுச்சேரி மக்களோ, நேருவின் காங்கிரஸ் அரசோ காரணமேயல்ல என்பதுதான் உண்மை. அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தமென்று கேட்பார்கள் புதுச்சேரி சுதந்திரத்தைப் பொறுத்தவரை சம்பந்தமிருக்கிறது.
தனிமனிதனாகட்டும் ஒரு நாடாகட்டும் அதன் சிறுமை பெருமைளை அறிய வரலாற்றை புரட்டிப் பார்ப்பது அவசியமாகிறது. கொடுக்கிற விலையைப் பொருத்ததே பண்டங்களின் பெறுமானம் அமைகிறது. புதுச்சேரியின் வரலாற்றின் அடிப்படையில் ஒரு நாவலை அதன் வரலாற்றை வியந்தோதும் வகைமையின்றி எழுதும் ஆவலிருக்கிறது.

http://nagarathinamkrishna.wordpress.com/