21.7.17

வம்ப மழையில் நனைந்தவை கம்பிகள் மட்டுமே!

நாட்டு ஓட்டு வீட்டின் நடுவில்
தொட்டிக் கட்டு வீட்டின் உள்ளில்
அலம்பிச் சலம்பிப் பெய்யும் மழைநீர் பார்த்தவன்,
அடுக்ககம் ஒன்றின் கூட்டினுள் இருந்தே,
கடுப்புடன் முகிலினம் வேண்டா வெறுப்பாய்
வம்பாய்த் தெளிக்கும் நீரைக்
கம்பிகள் ஊடே காணுகின் றேனே.
- தேவமைந்தன்
ஆடி ௫ வெள்ளிமாலை
[2017\07\21]

20.7.17

சுயத்தைத் தேடும்
அயலான வாழ்க்கை.
கிடைக்காதென்று
தெரிந்துவிட்டதை
விடாது தேடும் விளையாட்டு.
வாழ்க்கை வினாக்களால் மட்டும்
நிரம்பவில்லை.
விடைகளின் மாறுவேடங்கள்
அல்லவா வினாக்கள்???!!!?!
அந்தத்தில் தொடங்குமாம்
ஆதி.

- தேவமைந்தன்

15.6.17

பாட்டிமார்களும் பேத்திமார்களும்

'பாட்டிமார்களும் பேத்திமார்களும்' என்ற நாவலை என் முனைவர்ப் பட்ட /Ph.D ஆராய்ச்சிக்காலத்தில் ஆழமாக வாசித்தேன். எழுத்தாளர் த. ஜெயகாந்தன் குறித்த ஆய்வு. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம். (தரமணி, அடையாறு, சென்னை). முதன்மை வழிகாட்டி: முனைவர் தா.வே. வீராசாமி. மேற்பார்வையாளர்கள்: முனைவர் இரா. இளவரசு. முனைவர் ஏ.என். பெருமாள். ஆய்வேடளித்த நாள்: 24.4.1986. ஏன் 'பாட்டிமார்களும் பேரன்மார்களும்' என்ற தலைப்பைத் தராமல், 'பாட்டிமார்களும் பேத்திமார்களும்' என்று தந்திருக்கிறார் ஜெ. என்று குழப்பம். அவரையே கேட்கலாம் என்றால் ஏற்கெனவே தன் ஆய்வாளர்களைக் கொச்சைப் படுத்தியிருந்தார் என்பதால் கேட்கவில்லை. பகுதிநேர ஆய்வாளர் என்பதாலும் கோவையிலிருந்தே நட்பு இருந்ததாலும் என்னை அன்புடன்தான் நடத்தி வந்தார். தன் காரில் அழைத்துச் செல்வார். தன் கையெழுத்துப்படிகளைக் காட்டுவார். இன்னபிற. ஆனாலும் கேட்கவில்லை. எங்கள் மகள்வழிப் பேத்தி பிறந்து வளர்ந்து தன் பாட்டிக்குத் தோழிபோல் நடந்துகொள்வதைப் பார்க்கும்பொழுதுதான் ஏன் 'பாட்டிமார்களும் பேத்திமார்களும்' என்ற தலைப்பை அவர் வைத்தார் என்பது துல்லியமாகப் புரிகிறது. எல்லார் வீடுகளிலும் பாட்டிமாரும் பேத்திமாரும்தான் 'அன்னியோன்யம்' போல!..

photo courtesy: www.udumalai.com

#Jeyakanthan
#த.ஜெயகாந்தன்
#ஜெயகாந்தன்

புதிதில்லை!

எதுவும் புதிது இல்லை.
துருவங்கள் இரண்டன்
இடைவெளி வாழ்க்கை.
ஆடியது அடங்கும்.
அடங்கியது ஆடும்.
நேசம் மட்டுமே
எஞ்சும் அருவமாய்.
-தேவமைந்தன்
2017/06/15

9.5.17

காலத்தால் அழியாத 'சுதந்திரம்' ஏடு குறித்த தோழர் எல்லை.சிவக்குமாரின் இதழியல் ஆய்வுப் புத்தகம்

காலத்தால் அழியாத சுதந்திரம்- ஒரு இதழியல் ஆய்வு -எல்லை. சிவக்குமாரின் புத்தகம் குறித்து எழுதும் வாய்ப்பு எனக்கு இப்பொழுதுதான் கிடைத்தது. தோழர் எல்லை. சிவக்குமாரை முதலியார்ப்பேட்டை ஜீவானந்தம் மேனிலைப்பள்ளிதான் எனக்குத் தோழர் என்ற அடையாளம் காட்டியது. என் பத்தாம் வகுப்புப் படிப்பிறுதியை ஒட்டி சென்னையில் வண்ணாரப்பேட்டை நிகழ்வுக்கு வந்த ஆசான் தோழர் ப.ஜீவா அவர்களைச் சந்தித்துப் பழகிய உணர்வை, எல்லை. சிவக்குமாருடனான தோழமை எனக்கு 1983 முதல் 2017 இன்று வரை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது.
தோழர் வ.சுப்பையா அவர்களுக்குப் புதுவை மக்கள் மேலிருந்த அக்கறையும் அன்பும் ஆர்வம் மற்றவர்களுக்கு வாய்ப்பது அரிது. சார்த்ர் சொன்னதுபோல், மக்கள் தாங்கள் பிறந்த பொழுதை அடுத்து வரும் சிறார்ப் பருவத்திலேயே சுதந்திர உணர்வை வெளிப்படுத்துவது குறித்து வ.சு. வுக்குக் கருத்து இருந்தது என்பது, வெள்ளாழ வீதி, 7ஆம் எண் இல்ல மொட்டைமாடிப் பகுதியில் அவர் என்னிடம் பேசியிருந்த பொழுதே எனக்குத் தெரியும். இளம் வயதிலேயே சுதந்திர உணர்வு வளரும் வேகத்திலேயே - பெற்றோர்களாலும் ஆதிக்கச் சமூகத்தாலும் ஒடுக்கப்படலாகிறது. வேகம் இயல்பானது. சுதந்திரத் தாகம் இயல்பானது. அது அடக்கப்படும் பொழுது தீவிரம் ஆகிறது. அதை நிதானப்படுத்தத்தான் படிப்பும் நூல் வாசிப்பும் என்று என்னிடம் சொன்னார் வ.சு. கண்டமங்கலம் வள்ளலார் மேனிலைப் பள்ளி (அப்பொழுது உயர்நிலை) 1970 தொடக்கத்தில் தோழர் வ.சு. தலைமையில் “தமிழில் முற்போக்கு இலக்கியம்” குறித்து நான் சிறப்புரையாற்றியது தொட்டு அவர் என் தந்தை பர்மா இரங்கூன் பி.கே.அண்ணாருக்கும் எனக்கும் நெருங்கிய பழக்கம். என் துணைவியார் கலாவதிக்கும் சொந்தம். தற்காலிகமாக வந்தவன், புதுவை மண்ணுடன் பிணைக்கப்பட்டதும் மண்ணின் மகளைத் திருமணம் செய்து கொண்ட வாழ்வை நிலைப்படுத்தியதும் தோழர்.வ.சுப்பையாதான். மனித வளர்ச்சிக்குரிய முதல் நிபந்தனையே சுதந்திரம் என்ற ‘விவேகம்,’ மக்கள் தலைவரும் தோழருமான வ.சுப்பையாவுக்கு மிகுந்திருந்தது. அதனால்தான் ‘சுதந்திரம்’ இதழைத் தொடங்கினார். பிரெஞ்சிந்தியப் போராட்டத்தின் வித்தும் அவர்தான். விருட்சமும் அவர்தான். புதுச்சேரியை அண்ணல் காந்திக்கும் அண்ணலுக்குப் புதுச்சேரியையும் நேரடியாக அறிமுகப்படுத்தியவர் தோழர் வ.சு.தான்.
புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தில் பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு ஆர்வம் தோய்ந்த ஈடுபாட்டை ஏற்படுத்தித் தந்தவரும் இவரே. குயிலாப்பாளையம் போன்ற தமிழக பிரெஞ்செல்லையில் வாழ்ந்தவர்களில் இன்னும் எஞ்சி வாழும் மக்கள் - வ.சு. அவர்களின் விடுதலைப் போர் உத்திகளையும் தலைமறைவு வாழ்க்கையின் அதிசயங்களையும் இன்றும் என்னிடம் சொல்லி வருகின்றனர். இடையார்பாளையம் ஆலைக்காரத் தோழர் இராமு அவர்களுள் ஒருவர்.
தன்னுடைய இருபத்து மூன்றாவது அகவையில் இந்தச் ‘சுதந்திரம்’ என்னும் ஆலமரத்துக்கு வித்திட்டவர் மக்கள் தலைவர் வ.சு. தன்னொத்த புதுவை மக்களின் அடிமை வாழ்க்கையை வெறுத்த சுதந்திரத்தாகமே அவரை 1929ம் ஆண்டு முதல் பற்பல சமூக இயக்கங்களை தோழமை இயக்கங்களை இயக்க உந்திற்று. அவற்றை நூலில் பரக்கக் காணலாம். வாய்ப்பேச்சால் மக்களை ஒருங்கிணைத்ததன் மாற்று வடிவப்பதிவாக இதழ் தேவைப்பட்ட பொழுதுதான் ‘சுதந்திரம்’ மாத இதழ் உருவானது. 1934ம் ஆண்டில் வெளிவந்த இத்தகைய ‘சுதந்திரம்’ மூன்று இதழ்களைத்தான் நம் தோழர் எல்லை சிவக்குமார் எடுத்துக் கொண்டு இந்த ஆய்வுக் கைநூலை உருவாக்கியுள்ளார். ‘சுதந்திரம்’ -- விரிவான ஆராய்ச்சி செய்ய இனிவரும் காலங்களில் முற்படும் தோழர்களுக்கு இந்நூலே கைநூலாகவும் ஆய்வுத் தடத்தின் ஆரம்பச் சுவடாகவும் புலப்படும்.
அரும் முயற்சியில் இந்த ஆய்வு உருவாக்கப்பட்டது என்ற ஒற்றை வரியில் தோழர் எல்லை.சிவக்குமாரைக் சுருக்கிவிட நான் விரும்பவில்லை.
தன்னையே இளைஞன் வ.சு.வாக வைத்து உணர்ந்து வ.சு.வாகி சுதந்திரம் (1934+) தொடங்கி அவ்வாண்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பறிமுதலுக்கு உட்படாத ஜூன் செப்டம்பர் நவம்பர் ஆகிய மூன்றிதழ்களைப் பற்றிக் கொண்டு அவற்றைக் கருவூலமாக்கி ஆய்வு தொடங்குகிறார் தோழர். (1934 ஜூலை, ஆகஸ்ட் சுதந்திரம் ஏடுகள் பிரிட்டிஷ் அரசினால் பறிமுதல் செய்யப்பட்டவை).
இந்த இதழ்களில் மகாகவி பாரதியின் படைப்புகள், யோகி சுத்தானந்த பாரதியின் படைப்புகள் - தொடர்ந்து வெளியாக்கப் பெற்றன. தவிர, பரலி சு.நெல்லையப்பர், சங்கு சுப்பிரமணியன், டி.எஸ். அவினாசிலிங்க செட்டியார் முதலானவர்களின் சீரிய கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.
1935லிருந்து வார இதழாக ‘சுதந்திரம்’ வரத் தலைப்பட்டது. பிரான்சு கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையேடான ‘ஹுமானித்தே’ இதழில் வெளிவந்த மார்க்சியக் கட்டுரைகளும் தொடக்கத்திலேயே ‘சுதந்திர’த்தில் வெளியாயின. தமிழில் முதல் பொதுவுடைமை இதழ் ‘சுதந்திரம்’ தான் என்கிற ஆய்வை முனைவர் ‘மலையருவி’ நா.இளங்கோ வெளிப்படுத்தியுள்ளார்.
தோழர் அமீர் ஹைதர்கான் என்ற உலகப் புரட்சியாளர்களுடன் நேரடிப் பழக்கம் கொண்ட, உலகக் கம்யூனிஸ்ட் கொள்கையாளர்களுடன் கருத்தாடல் ஏற்ற, விளைவாக ‘மூன்றாவது அகிலத்தின்’ செயற்பாட்டாளராக வி.இ.லெனின் அவர்களால் ஆக்கப்பட்ட அமீர் ஹைதர்கான், ‘சங்கர்’ என்ற புனைபெயருடன் செயல்படத் தீர்மானித்த சில நாள்களில் தோழர் வ.சுப்பையாவைச் சந்தித்து, புதுவையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை அவருடன், அதாவது தோழர் வ.சு.வின் ஒப்பரிய ஒத்துழைப்பால் தொடங்குகிறார். இன்னும் துல்லியமாகச் சொன்னால் சங்கர் (எ) அமீர் ஹைதர்கான் சென்னையிலிருந்து புதுவைக்கு வந்தபொழுது, 1911ஆம் ஆண்டு தோன்றி, கலவைக் கல்லூரியில் படிக்கும் பதின்பருவத்திலேயே 17ஆம் வயதிலேயே சுதந்திரத்துக்காக - மாணவர் உரிமைக்காகப் போராடத் தொடங்கிவிட்ட தோழர் வ.சுப்பையாவைச் சந்தித்து இலக்கில் தடம் பதிக்கத் துணைநிற்கிறார்.
‘தி ஸ்டார் இந்தியா இன்சூரன்சு நிறுவனத்தின்’ பணியினால் கிடைத்த தொகையின் பகுதியைக் கொண்டே ‘சுதந்திரத்தை’ தொடங்கினார் தோழர் வ.சு. 1934ஆமாண்டில் மாத இதழாக வெளிவரத் தொடங்கிய பொழுது ‘சுதந்திரம்’ ஏட்டின் பதிப்பாக, அச்சீட்டாளராக, ஆசிரியராக இருந்த தோழர்.வ.சு., புதுச்சேரி கலாநிதி அச்சகத்தில் இதழை அச்சியற்றியுள்ளார்.
சுதந்திரத் தாயின் உருவகப் படத்துடன் முதலிதழ் தொடங்கியிருந்துள்ளது. மாலை:1 மலர்:1 என்ற எண்ணீடு எத்துணை ஆழமானது.. மாலை என்பது அடிமைக்கானதல்லவே.. பொதுவாக ‘volume’ ‘issue’ என்ற எண்குறியீட்டை இலக்கு விளக்கமாக நிர்ணயிக்கும் முறையிலேயே இதழின் ஆசிரியர் என்ன உட்கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து விடலாம் என்பது இதழியல் நூற்பா எண்#1. முதலிதழின் இரண்டாம் பக்கம் சுதந்திரத் தாயின் விளக்கத்தில் “சுதந்திர லட்சியத்தை உலகுக்கே போதித்த பிரான்சின் குடியாட்சியில் இருக்கும் புதுவையிலிருந்து இன்று வெளியில் வருகிறாள்’ என்ற பகுதி குறிப்பிடத்தக்கது. 1985இல் வெளிவந்த ‘சுதந்திரம் பொன்விழா மலரில் பாரத அன்னையின் இலட்சியப் பயணம் என்ற பகுதியில் 1934 ஜூன் வெளியான சுதந்திரத்தின் முகப்பட்டைச் சித்திரம் உரிய முறையில் விளக்கப்பட்டுள்ளதைப் படித்துப் பாருங்கள். சுதந்திரத்தின் ஒவ்வோரிதழிலும் பாரதியின் “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம், எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு!” என்ற வரிகள் ‘சுதந்திரத்தின் பிரகடனமாக வெளிவந்துள்ளன. ‘அரசியல் விடுதலைக்கு முந்தியது சமூக விடுதலை’ என்ற கருத்தை முன்வைத்த வ.சு.வின் (சுதந்திரம் தொடக்கக் கட்டுரை) ஆவணக் கட்டுரையில், சமூகத்தின் அத்தனைச் சீர்கேடுகளும் விரிவாக அலசப் பெற்று, அவற்றிலிருந்து மீண்டுதான் அரசியல் விடுதலை பெறவேண்டும் என்ற முடிவும் முன்வைக்கப்பெற்றது. சரி. 1930களின் தொடக்கத்தில் புதுச்சேரியில் பரவலாக விளங்கிய மொழிமதிப்புள்ள பிரெஞ்சிலோ, பாரதியே மதித்தெழுதிய ஆங்கிலத்திலோ தானே ‘சுதந்திரத்தை’ வெளியிடவேண்டும். 1967க்குப் பிறகு தானே பொதுவாக, எல்லோருக்கும் புரியும் தமிழிலும், மறைமலையடிகளார் தொடங்கிவைத்த தனித்தமிழிலும் எழுதுவதும் நாகரிகமானது? மறுமொழியாக முன்னறிந்து தொலைநோக்குடன் தோழர்.வ.சு., 1934லேயே இதழின் மொழிநோக்கை எழுதுகிறார்.
“சுதந்திர உணர்ச்சியையூட்டுவதற்குத் தாய்மொழி வாயிலே தகுந்த முறையாம். ஆதலால் தமிழ் மொழியைப் பேண வேண்டும். அதனால் தமிழன் உள்ளம் பெருகும். தமிழன் அறிவு வளரும். அதற்காக புதைந்து கிடக்கும் நமது பழங்கலைகளைத் தோண்டியெடுத்து அவற்றை இக்காலத்திற்கேற்ற முறையில் திருத்தியமைத்துப் போற்றி வளர்த்தல் வேண்டும். எனவே நமது சுதந்திர லட்சியங்களை மக்களிடையே பரப்புவதற்கான சகல துறைகளிலும் அச்சமின்றி ஈடுபட்டு தொண்டாற்ற வேண்டுமென்ற வீர தாக்கத்துடன் பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.”
சுத்தானந்த பாரதி கவிதை, சங்கு சுப்ரமணியத்தின் ‘கழுகுக் கட்டுரை’, சமுத்ர நாராயணன் கவிதை, “தொழிலாளர்களின் திண்டாட்டமும், முதலாளிகளின் கொண்டாட்டமும்” என்ற தோழர் வ.சு வின் மிக முக்கியமான மார்க்சியக் கட்டுரை, சாரணர் இயக்கம் பற்றிய இ.கிருஷ்ணசாமி கட்டுரை, ‘மோலியார் வரலாறு’ (கவியோகி கட்டுரை), இன்னும் பல. நான்காம் ‘சுதந்திரம்’ பாரதி உருவத்துடன் வெளிவந்த சேதியும் விரிவான தரவுகளும்; நேருவின் உருவத்துடன் வெளிவந்த நவம்பர் மாத இதழின் தரவுகள்..- குறிப்பாக கட்டுரைப் போட்டியில் பரிசுபெற்ற ‘இந்தியப் பொருளாதார நெருக்கடியின் காரணமும், அதை நிவர்த்திக்கும் வழியும்’ என்ற தலைப்பில் ஆன சென்னைத் தோழர் நா.ராஜன் கட்டுரை குறித்த தரவும் இடம் பெற்றுள்ளது. ரூ.25/- (இருபத்தைந்துரூபா) என்ற அக்காலத்துப் பணமதிப்பிலுயர்ந்த சிறுகதைப் போட்டிப் பரிசும் இந்நூல் காட்டும் தரவுகளுள் முக்கியமானது.
தாகூர் கல்லூரியானது, முன்பு இயங்கிய நகரப் பள்ளியாகிய கலவைக் கல்லூரியில் வகுப்பு நடத்தும் மொழிமுறையில் மாற்றம் வந்தபொழுது தி.அ.ரா. என்பவர், ‘தமிழும் கல்வே காலேஷூம்’ என்ற கட்டுரைவழி பெற்றோருக்குத் தாய்மொழிக் கல்வியைப் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டிய கடமையினை அருமையாக வலியுறுத்தியுள்ளார். எண்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தான் எழுதப்பட்ட காலகட்டத்தை விட மிகவும் பொருந்தக்கூடிய கட்டுரை அது. தி.அ.ரா. என்ற இத்தகைய சிந்தனையாளர் – தொலைநோக்காளர், நமக்கு முன்னர் வாழ்ந்ததை, சிந்தித்ததை, எழுதியதை வெளிப்படுத்தியவர் தோழர்.வ.சு. இதழ் ‘சுதந்திரம்’ நவம்பர் 34 இதழில் 5 சிறந்த சிறுகதைகளும் 4அறிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளமையை மட்டும் குறிப்பிடாமல் அந்த ஒன்பதும், தேசிய உணர்வையும் விடுதலை உணர்வையும் ஊக்குவிக்கும் வகையில் விளங்குவதைத் தோழர் எல்லை. சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஆய்வானாலும் அதன் பிழிவான, அந்த ஆய்வின் முறையியலால் பெறப்பெற்ற ‘findings’ என்று சொல்லப்படும் முடிபுகள் முத்தாய்ப்பாய் நிறுவப் பெறல் முக்கியமாகும். அதை தோழர் எல்லை. சிவகுமார் சிறப்பாகச் செய்துள்ளார்.
அவையாவன:
1. உழைக்கும் வர்க்கத்துக்கு உற்ற கருத்துத் தோழனாய் புதுச்சேரி மண்ணில் பூத்தது ‘சுதந்திரம்’.
2. 1934இல் வெளியான ‘சுதந்திரம்’ மாத இதழின் நோக்கம் “சமூக சுதந்திரத்திற்கு உழைப்பதே”.
3. தோழர் வ.சுப்பையாவின் சிந்தனையின் செயல் வடிவமே ‘சுதந்திரம்’.
4. “சென்னை சர்க்கார் அச்சுச் சட்டம் என்ற பாணத்தை”, தோன்றி ஐந்து மாதமே ஆன ‘சுதந்திரத்தின்மேல்’ தொடுத்தார்கள். அடக்குமுறைச் சட்டங்களைத் தாண்டி “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே! என்று வீர நடை போட்டது ‘சுதந்திரம்’.
5. மார்க்ஸ் ஏங்கல்ஸால் உருவாக்கப்பெற்ற கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை (MANIFESTO OF THE COMMUNIST PARTY BY K.MARX AND F.ENGELS 1872) (ஜெர்மன் பதிப்பு 1872 தான் முதலாவது; ரஷ்யன் 1882; ஆங்கிலம் 1888) உலகில் நூறு மொழிகளுக்கு மேல் மொழியாக்கம் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் மொழியாக்கப்பட்ட வர்க்கப் போராட்டம் நடைபெறும் அரசியல், பொருளியல், சித்தாந்தம் ஆகிய முத்தளங்களையும் 1934 ஜுன் மாதம் வெளிவந்த மாத இதழும்; 1935 லிருந்து வந்த வார இதழுமான ‘சுதந்திரம்’ தன் தத்துவ மரபாக மார்க்சீயப் பார்வையில் வந்த தமிழ் முதலிதழ் ஆகும். (C.S.சுப்ரமணியம் / ப.126).
6. மேற்சொன்ன அரசியல், பொருளியல், தத்துவம் என்ற முத்தளங்களிலும் தன் உருவத்தாலும் உள்ளடக்கத்தாலும் வீறுநடை போட்டு, தனக்கு உண்டாக்கப்பட்ட தீய-மாபெரும் இடர்களைத் தாண்டி இன்றும் தன் 84ஆம் ஆண்டில் இடைவிடாது வெளிவந்து கொண்டிருக்கிறது. “நெருப்பில் துளிர்த்தெழும் ‘பீனிக்ஸ்’ பறவையை வென்றவரும் இல்லை; அதனை எதிர்த்து அதனருகே நின்றவரும் இல்லை” என்ற உண்மை ‘சுதந்திரத்துக்கு 100% பொருந்தும்.

-தோழர் தேவமைந்தன்
(அ.பசுபதி)
முகநூல்: புதுவை பசுபதி தேவமைந்தன்
ட்விட்டர்: @PasupathyAnnan

Google+ : kruppannan.pasupathy@gmail.com

22.2.17

"தமிழகத்துச் சமுதாயக் கூட்டமைப்புப் பெரும்பாலும் கணங்களே(குலக்குழுக்கள்) சாதிகளாக அமைந்துள்ளதால் நாங்கள் -- நாம் என்ற பன்மை வேறுபாடு அப்பேச்சு வழக்கிலே தொடர்ந்து நிலவுவது, சமூக மானுடவியலாளனுக்கு ஆச்சரியத்தைத் தராது. கணநிலையில் வாழ்வோரிடத்து இவ்வேறுபாடு வினைச்சொற்களிலும் காணப்படுகிறது என்பதற்குத் தொதுவர் மொழி உதாரணமாகும். யாழ்ப்பாணத்திலே இது காணப்படாததற்கு அங்கு சாதி அமைப்பு குலக்குழு, கண அமைப்பிலல்லாது தொழிலடிப்படையிலேயே அமைந்திருத்தல் காரணமாகலாம். இலங்கைத் தமிழ் வழக்கிலும் மட்டக்களப்பில் இது நிலவிற்று என்பதற்குச் சான்றாகலாம். இந்த நாம், நாங்கள் வேறுபாடு ஆப்பிரிக்க மொழிகள் பலவற்றிலும் காணப்படுகின்றதென யெஸ்பர்ஸன் கூறுவார். அங்குக் குலக்குழு நிலைமை பேணப்பட்டமையை அவதானிக்கும்பொழுது, இதுவரை கூறப்பட்டதன் உண்மை விளங்கும்."
-- கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி

19.1.17