23.11.05

அருளியின் 'நம் செம்மொழி'-அருஞ்சுவை மொழி வரலாற்று நூல்

தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகத் தூயதமிழ் அகராதிகள் துறைத் தலைவரும் மொழியியல் ஆய்வறிஞரும் என் மேனாள் மாணாக்கரும் உழுவலன்பரும் ஆகிய அருளி அவர்கள் எழுதி உருவாக்கிய 'நம் செம்மொழி ' என்னும் செறிவான நூல் புதுச்சேரிக் கதிர்காமம் முருகனடியார் திருமண மண்டபத்தே இவ்வாண்டு[2005] சூலைத் திங்கள் முப்பதாம் நாள் சிறப்பாக வெளியிடப்பெற்றது. என் நூலாய்வு உட்பட ஆய்வுரைகளும் வாழ்த்துரைகளும் திட்பநுட்பமாக இடம் பெற்றன. சென்ற ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்பொழுது, தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகளும் தத்தம் தேர்தல் அறிக்கைகளில் "தமிழைச் செம்மொழி ஆக்குவோம்!" என்பதை - மக்கள்/வாக்காளர்கள் முன்வைத்த தம் செயல்முடிபுத் தீர்மானங்களுக்குள் முதன்மையானதாய் அறிவித்தன. நாற்பது இடங்களிலும் 'ஒன்றுபட்ட முற்போக்குக் கூட்டணி' வெற்றி பெற்றது. எனவே இக் கூட்டணி, தாங்கள் எதை முன் வைத்து ஆட்சிக்கு வந்தார்களோ, அந்தச் செம்மொழிக் கோரிக்கையை 'குறைந்த பட்ச'ச் செயல்திட்டத்தில் ஒன்றாக இணைத்தது. இந்தியக் குடியரசுத் தலைவர், ''நடுவண் அரசு தமிழைச் செம்மொழியாக அறிவிக்கும்!" என்று தெரிவித்தார். 17. 09. 2004 -ஆம் நாள் ''தமிழ் செம்மொழி'' என்று அறிவிக்கப் பெற்றது. பரிதிமாற்கலைஞர்க்கும் மு.சி. பூரணலிங்கம் அவர்களுக்கும் பின்னர் - 1918 -ஆம் ஆண்டு சிவக் கொண்முடிபு(சைவ சித்தாந்த) மாநாட்டில் நிறைவேற்றப்பெற்ற தீர்மானத்திலேயே இதற்கான வித்து இருப்பதைச்சுட்டி [பக்கம் 15] அங்கிருந்தே அதுதொடங்கி நிகழ்ந்தவற்றை மொழி - இன - அரசியற் பார்வை கொண்ட கூர்மையான ஆய்வுக்கு உட்படுத்துகிறார் அருளி. இந்நூலில் இருபது பக்கம் முன்முகமொழிவும் இந்நூலொடு எட்டுப் பக்கம் அருஞ்சொற்பொருள் அகரவரிசையும் உள்ளன. சுவையான நடையில், ஐயிலக்கணப் பரிமாச் செலவில், செறிந்தும் விரைந்தும் வாசிக்கப்பெறக்கூடியதாய் நூல்முழுதும் இயல்கிறது. முன்முகமொழிவில் 'செம்' என்னும் செம்மைக் கருத்துவேர், ஒளிக்கருத்துவேர் அடிப்படையில் செம்மொழி என்ற சொல்லின் வயணமான விளக்கம், விரிவாகச் சொல்லப் பெறுகிறது. செய்>செய்ம்>செம் என்ற சிவப்புக் கருத்தடிப்படை[ஒ.நோ. வெய்> (வெம்மைக் கருத்து) வெய்>வெய்ம்>வெம் [வெம்+மை>வெம்மை]யில்தான் சிவனும் நிறம் பெற்றான்; முருகனும் அவ்வாறே எனில் சிவனும் முருகனும் ஒருவனே என்பதைச் சான்றொன்று காட்டுவதற்காக இலேசாகத் தொட்டுக்கொண்டு செல்லும் பொழுதும் அருளி அவர்களின் ஆய்வுத்திறன் பளிச்சென வெளிப்படுகின்றது. 'பானைச் சோற்றுக்குப் பதமாக ஓரவிழ் காட்டுதல்போல்' இங்கு அப்பகுதியைப் பதிவு செய்கிறேன். ''....[சிவப்பு!...கொள்ளையழகு கொழிக்கும் திருநிறம்! கனலின் நிறம்! கனிந்த கனியின் கவர்ச்சி நிறம்! கதிரவனின் நிறம்! ஒளிகாலும் கவின் நிறம்! ( தாங்களே படைத்து உருவாக்கிக்கொண்டு பராவிய இறைத்திருமேனியையும் இந்நிறத்தால் நிறைத்தே ''சிவன்'' என்றவாறு சுட்டித் தூக்கி நிறுத்தித் தொழுதனர், நம் தமிழவர்!... ) அவனை, இச் சிவப்புக் கருத்து அடிப்படையிலேயே, 'சேய்' என்றும், "சேயோன்" என்றும் குறிப்பிட்டனர்! "சேய்" என்பதற்குக் "குழந்தை" என்பதுவும் ஒரு பொருளாகலின், அதனைத் தவறுதலாகத் தூக்கியெடுத்து நிறுத்தி, " அச்சிவனுக்கு மகனாக, மற்றொரு (பயல்) பையல் இருக்கிறான்!" "அவனே இவன்!" (இம் முருகன்! ) - எனத் தம் மதமயக்கிற் கட்டி மருண்டு மருகி உருகி உவந்தேத்தித் தொடரலாயினர்! அவையெலாம் ஒருபுறங் கிடப்பனவாகுக! ...] முன்னரே 'தமிழ் செம்மொழி ' என்ற கோட்பாட்டை வலியுறுத்திய பரிதிமாற்கலைஞரும், மு,சி,பூரணலிங்கம் அவர்களும், பின்னர்த் தொடர்ந்து தமிழறிஞர்களும் பல்வேறு தமிழ் மொழியினக்காப்பு அமைப்புகளும் அதைச் செம்மொழியாக்க மேற்கொண்ட முயல்வுகள் கோவையாய்த் திண்ணிதின் விளக்கப் பெற்றுள்ளன. 17-09-2004 -ஆம் நாள்சார்ந்த அறிவிப்பிலுள்ள குழப்பங்களும் விரகு(வஞ்சகங்)களும் இலக்கு மாறாமல் சுட்டப்பெற்றுள்ளன. ஆங்கிலேயரே அடுத்தவர்களை ஏய்ப்பதில் வல்லுநர்கள்; அவர்களையும் ஏய்த்து ''சமற்கிருதம் தெய்வமொழி, மீயுயர் செம்மொழி!'' என்று நம்பச் செய்த/செய்யும் ஆரியர் பரப்புரை(பிரச்சார)த் திறனையும் தகுந்த தளங்களை வைத்துச் சுட்டுகிறார் அருளி. 'கல்' எனும் நம்மொழி வேர்ச்சொல் 'கிளாசிக்'[Classic] என்ற ஆங்கிலச் சொல்லுக்கும் அடிப்படையாகியுள்ள வயணம் செம்மையாகச் சித்திரிக்கப்பெற்றுள்ளது.. வேர்வளஞ்செறிந்த மீமொழியான தமிழ், அறிவாராய்ச்சியியலின்[Epistemology] ஆவணமூலமாகவும் திகழ்வதைச் சான்றுகாட்டி எண்பிக்கிறார் நம் அருளி. பாரசீகம், அரபிக்கு மேலடுத்தவாறு நிற்கும் செம்மொழிகள் ஆறு என்று உலகோர் கருதும் தமிழ் - கிரேக்கம் - இலத்தீனம் - சீனம் - ஈபுரு என்னும் எபிரேயம் - சமற்கிருதம் ஆகியவற்றினுள் "உயிர்ப்பொடும், ஊட்டத்தொடும், செம்மாப்பொடும், சீரொடும், சிறப்பொடும், தொல்பழந்திருவொடும், கலங்குறாக் கருவொடும், வலத்தொடும், நலத்தொடும், ஒட்பொடும், திட்பொடும், உலகந் தழீஇஅய நட்பொடும், எண்ணத்தினிக்கும் இனிய பொட்பொடும் உலவி உவப்புறுத்துவதாக, நம் தெள்ளிய தீந்தமிழே இன்று - நன்று நீடிநின்று நிமிர்ந்தெழுந்து நடைசிறந்து இயங்கி வருகின்றமையை, முதலில் நந்தமிழர் நெஞ்சம்நிறக்க உணர்தல் வேண்டும்!" என்று எண்பதாம் [நிறைவுப்] பக்கத்தில் மொழிந்துள்ளதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! நூலின் இறுவாய்த் தலைப்பு, "தமிழிருப்பின் நாம் இருப்போம்! தமிழிறப்பின் நாமும் இறப்போம்!" என்ற தமிழுணர்வும் தன்மானமும் நிரம்பிய தலைப்பு ஆகும். சொல்கிறார் அருளி - "பேணவும் - பற்றவும் - பெருமைப்பட்டுக்கொள்ளவும் - பெருமிதங்கொள்ளவும் பீடுநிரம்பவுமாக நம் ஒவ்வொருவருக்கும் முன்னீடாக இதுவே நிற்கின்றது! நமக்கு உலகநிலையில் முகவரியும் வழங்கித் தகவெழவுஞ் செய்கின்ற ஆற்றல் ஊற்று, இது! தமிழிருப்பின் - நாமிருப்போம்! தமிழிறப்பின் - நாமுமிறப்போம்! - என்பதை, நாம் உள்ளத்திற்கொண்டு ஒழுகுதல் வேண்டும்! "நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!" என்ற தன்மானத் தமிழாசிரியர் பாவேந்தரின் வரி எவ்வளவு உண்மையானது என்பதை இவ்விடத்தில் நாம் ஒருகணம் சிந்திப்போமாக!...."என்று முற்றுப்பெற்றாமல் தொடர்வதாக, நம் செம்மொழி பற்றிய செயல்பாட்டைப் போலவே, தொடர்வதாக - நிறைகிறது 'நம் செம்மொழி' நூல். நூல் வயணம், கிடைக்குமிடம்: [நூற்பதிப்புரிமைப் பக்கங்களில் உள்ளவாறு]ஆசிரியர்: அருளி நூற்பெயர்: நம் செம்மொழிபதிப்பு: தி.பி. 2036 ஆடவை 3 -ஆம் நாள் 17-06-2005 (முதற் பதிப்பு)பக்கங்கள்: 80வெளியீடு: "வேரியம்" - பதிப்பகம், 'அகராதியகம்,' 502 (466) - வழுதாவூர் சாலை, முத்தரையர்பாளையம், புதுச்சேரி - 605 009. இந்தியா.விலை: உருவா. 25/- (இருபத்தைந்து உருவா.)

22.11.05

'சும்மா இரு'க்க முடியாதா?

முதலில் நன்றி சொன்னேன், அருணகிரிநாதருக்கு - தன் கந்தரநுபூதிக் கவிதை ஒன்றில் இந்தத் தொடரை, அறிவுரையை வெளியிட்டமைக்கு. இலேசாகச் சொல்லிவிடமுடியும் - ஆனால் 'தாவு தீர்ந்துவிடும்' செயல்கள் இருக்கின்றன. ஒவ்வொருவர் வாழ்விலும் கொஞ்சம் வேறுபாடாய்.. சொல்லலாம், செய்துவிடமுடியாது. அப்படிப்பட்டவற்றுள் பிரதானமான ஒன்றுதான் இந்த 'சும்மா இரு!....' ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவன் வருகிறான். நம்மிடம் ஏதோ கேட்கிறான். சிறு விஷயம். கேட்டு முடிப்பதற்குள் நாற்காலியை அப்படி இப்படி ஆட்டுகிறான். அதை இதைப் பிடித்துத் திருகிறான். அங்கிருக்கும் ஒரு கண்ணாடிப் பொருளை எடுத்து அஜாக்கிரதையாய்க் கையாளுகிறான். நமக்கோ 'டென்ஷன்.' மனசு எரிச்சலுடன் தனக்குள் அவனைத் திட்டித் தீர்க்கிறது..''அட, அவசரத்துக்குப் பிறந்த பயலே!'' சரி. அவன் அவசரத்துக்குப் பிறந்தவன். நம்மில் பலர் டென்ஷனுக்குப் பிறந்தவர்களா? இல்லை, இல்லை என்கிறீர்களா? அப்படியானால் நாம் - 1. எதையும் ஒன்றன்பின் ஒன்றாகத்தான் செய்து முடிக்கிறோமா? 2. ஒன்றைச் செய்யும்பொழுது, இன்னொன்றைப்பற்றி நாம் நினைப்பதுகூடக் கிடையாதா? 3. ஒவ்வொரு நாளும் ஒருசில மணிப்பொழுதுகள் - இல்லாவிட்டாலும் - ஓரிரு மணி நேரம், நம்மால் எதையும் செய்யாமல், 'சும்மா' மரங்களைப் பார்த்துக் கொண்டும், எதிரே தெரியும் இயற்கையைப் பார்த்துக் கொண்டும் - அட, அதெல்லாம் என் ஒண்டுக்குடித்தனத்தில் கூடாதப்பா என்றால் - வெறுமனே, சுவரில் மாட்டி வைத்திருக்கும், மனத்துக்குப் பிடித்தமான படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டும் இருக்க முடிகிறதா? - மனத்துக்கு மாறுபடாமல் சொல்லுங்கள் பார்ப்போம். 4. குறைந்தபட்சம் வேறு ஒருவரையும் குறைசொல்லாமல் ''என்னால் இப்படி 'சும்மா' இருக்கமுடியவில்லை; கை பரபரக்கிறது; கண் துறுதுறுக்கிறது; மனம் அலைபாய்கின்றது!'' என்றாவது ஒத்துக்கொள்ள முடிகிறதா சொல்லுங்கள். 5. ''நான் பெரிய மனிதன்! என் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் இந்த உலகம் ஏங்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எனக்குக் கடமைகள் காத்துக் கிடக்கின்றன!'' என்று நம்மை ஒரு நாளுக்கு ஒரே மணி நேரமாவது ஏமாற்றிக்கொள்ளாதிருக்கிறோமா? சொல்லுங்கள். ''சரியப்பா..விடு, விடு! அருணகிரி எதற்காக இப்படியொரு வில்லங்கத்தைத் தன் அநுபூதியில் பொதிந்திருக்கிறார்?'' - என்கிறீர்களா! ஒருமுறை என் சிற்றூர் சார்ந்த 'பேயன்பழத் தாத்தா' என்ற சித்த[மருத்துவ]ரிடத்தில் இது பற்றி நான் கேட்டபொழுது அவர் சொன்ன விளக்கம் எனக்கு மயக்கத்தையே வரவழைத்தது... அப்படி அவர் என்ன சொன்னார்....? ''சும்மா இரு'ன்னா மனமடங்கி இரு'ன்னு அர்த்தம்.. மனமடங்கியிரு அப்படி'ன்னா மனம் ஒழிந்து இரு'ன்னு பொருள்..மனம் ஒழிந்து'ன்னா ''எண்ணம் எழாமல்'ன்னு அர்த்தம்.. ஒங்கப்பன் அடிக்கடி சொல்றாரே.. ஒங்கண்ணனுக்குக்கூட அவர் பெயரை வச்சாரே!.. அந்த ஜே. கிருஷ்ணமூர்த்தி அதச் சாதிச்சிருக்கிறாராமே.. தெரியுமா!...நாப்பத்தெட்டுமணிநேரம் அதுபோல இருந்திருக்கிறாராமே... எண்ணமே எழாமல்.. ஒனக்குத் தெரியுமா?'' எனக்கு ஒன்றும் தெரியவில்லை. உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ''சித்தத்தில் எண்ணம் எதுவும் எழாமல் சும்மா இருக்கும் திறம்'' - உங்களுக்குத் தெரிந்திருக்கும்தானே!

21.11.05

மரித்தவர்களோடு வாழ்கிறேன்!

(-மொழியாக்கம் : திருமதி ப.ரா.கலாவதி) மரித்தவர்கள் இடையில் வாழ்ந்ததான என் நாள்கள் கழிந்தன. என்னைச் சுற்றிலும் எங்கெல்லாம் இந்த - திட்டமேதும் செய்யாத விழிப்பார்வைகள் நோக்கிக் கொண்டிருக்கின்றனவோ - அங்கெல்லாம் என் ஆத்துமநன்றிக்கான ஆற்றல்மிக்க அந்த வயதான சிந்தைகள் சூழ்ந்து கொண்டுள்ளன. என்றும் என்னைக் கைவிடாத தோழமைகள் அவை. ஆற்றல் நிரம்பிய முதிர்ந்த சிந்தைகளான அவற்றோடுதான் நாள்தோறும் உரையாடியவண்ணம் இருக்கிறேன். இன்பத்திலும் செழுமையிலும் அவர்களோடு ஆனந்தமாகப் பங்கேற்கிறேன். துன்ப துயரங்களில் விடுவிப்பையும் தேடுகிறேன். எண்ணமாழ்ந்த நன்றியுணர்வுடன் கூடிய கண்ணீர்ப்பனித்துளிகள் அடிக்கடி என் கன்னங்களை நனைக்கின்றன - எவ்வளவு அவர்களுக்கு நன்றிக்கடன் நான் பட்டுள்ளேன் என்று புரிந்துகொண்டு உணரும்பொழுது...... கடந்தும் கழிந்தும் போன ஆண்டுகள் பலவற்றில் மரித்தவர்களோடு என் எண்ணங்கள் உலவுகின்றன. அவர்களின் அறவுணர்வுகள் அன்புசெய்கின்றன; குற்றங்கள் கண்டிக்கின்றன; அவர்களின் நம்பிக்கைகள் - அச்சங்களில் பங்கு கொள்கின்றன. அவர்கள் உற்ற படிப்பினைகள் / பாடங்களிடமிருந்து எளிமையான மனங்கள் மட்டுமே பிறப்பிக்கக்கூடிய ஆலோசனைகளைப் பெறுகின்றேன். ஆம், என் நம்பிக்கைகள் மரித்தவர்களோடுதான்; அவர்களுடனான என் இருப்பு அறியப்படாததாகவே நிகழும். எதிர்வின் எல்லாமுடனும் அவர்களோடுதான் நான் பயணம் செய்யப் போகிறேன்; இருந்தாலும் இங்கே ஒரு பெயரை விட்டுவிட்டுத்தான் - என்பதென் நம்பிக்கை. புழுதியில் அப்பெயர் அழிந்து போகாது.

20.11.05

வித்தியாசமாய்ச் சிந்தித்த அம்ப்ரோஸ் பியர்ஸ்

யதார்த்த உலகில் வித்தியாசமானவர்கள் பிறப்பதைப் போலவே, மொழி இலக்கிய உலகிலும் மற்றவர்களைவிடப் பலவகைகளிலும் வேறுபாடானவர்கள் பிறக்கிறார்கள். அப்படிப் பிறந்தவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் அம்ப்ரோஸ் பியர்ஸ் [Ambrose Bierce]. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர் அவர். மிகவும் வித்தியாசமாகச் சிந்தித்தவர். அதன் விளைவாக, அவர் குறிப்பிட்ட பல செய்திகள், அவரைப் போலவே வேறுபாடானவைகளாகவும் -பகடி/நக்கல்/கிண்டல்/குத்தல்/நையாண்டி ஆகியவை நிரம்பியவைகளாகவும் விளங்கின. நண்பர்கள் நச்சரித்ததால் அவற்றின் முதல் தொகுதியை 1906ஆம் ஆண்டு ''சினிக்'கின்சொல் நூல்[The Cynic's Word Book] என்ற தலைப்பில் வெளியிட இசைந்தார். பல ஆண்டுகள் கழித்து 'இடது கை அகராதி'[The Left Hand Dictionary] என்ற தலைப்பில் எஞ்சிய சொற்கள் தொகுக்கப் பட்டு வெளியிடப்பெற்றன. அவற்றுக்கிடையில் முதல் தொகுதி ஏனோ தலைப்பு மாற்றப்பட்டு 'சாத்தானின் அகராதி'[The Devil's Dictionary]என்று 1911ஆம் மறு பதிப்புச் செய்யப்பெற்றது. என்னதான் விளக்கினாலும் எளிதில் விளங்காதனவற்றை மிகச் சுருக்கமாக எதிராளி உள்ளத்தில் சென்று தைக்கும் வண்ணம் சொன்ன அம்ப்ரோஸ்பியர்ஸின் சொல்வண்ணங்கள் சிலவற்றை மட்டும் இங்கே தருகிறேன். அகாதமி[Academy] = கால்பந்து ஆடமட்டும் தெரிந்தவர்களின் கழகம். மரணம் = முடிவு அல்ல; சொத்துக்களின்மேல் வழக்குத்தொடரப்போகிற தொடக்கம். சீற்றங்கள்[calamities] = இரண்டு வகை: நமக்கு ஏற்படும் துரதிர்ஷ்டங்கள் - மற்றவர்களுக்கு ஏற்படும் நல்லதிர்ஷ்டங்கள். சந்தேகம் = அதே வேலையாய் இருந்தால் எதிர்மறையாகும் ஆபத்து; ஆனால், நேர்மையாகவோ ஆய்வு ரீதியிலோ அமைந்தால் உண்மையை நிறுவக் கூடிய ஆயுதம். டெமாக்கிரட்டுகள்[Democrats](அமெரிக்க அரசியல் கட்சியினர்) = டெமாக்கிரட்டுகள்தாம் முடிதிருத்தகங்களை நடத்துபவர்கள் என்று நான் எப்பொழுதுமே சொன்னதில்லை.முடிதிருத்தகங்களை நடத்துபவர்கள் எல்லோரும் டெமாக்கிரட்டுகள் என்றுதான் சொன்னேன். பைத்தியங்கள்/தத்துவஞானிகள் = எல்லாரும் பைத்தியக்காரர்களே. ஆனால் யாரால் தம்மைத்தாம் ஏமாற்றிகொள்ளும் முறைகளை வகைப்படுத்திப் பார்க்க முடிகிறதோ அவர்களைத்தாம் தத்துவஞானிகள் என்று அழைக்கிறோம். அகம்பாவி[egotist] = மிகவும் தரக்குறைவானவர்; எப்பொழுதும் தம்மைப்பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறார் -- என்மேல் அக்கறை கொள்ளாமல்.

கவிஞர் வேந்தர்வேந்தன் - ஆரவாரமற்ற புரட்சிப் பாவலர்

1967-1969 ஆண்டுகள் காலகட்டத்தில் நாங்கள் இருவரும் ஒன்றாய் முதுகலைத் தமிழ் பயின்றோம் - கோவை பூ.சா.கோ. கலைக் கல்லூரியில். டாக்டர் தா.ஏ.ஞானமூர்த்தி அவர்கள் எங்கள் துறைத்தலைவர். நண்பர் கா. கோ. வேங்கடராமன், இளம் அறிவியல் கணிதம் பயின்றுவந்தவர். நான் இளங்கலை அரசியல் பயின்றுவந்தவன். கா.கோ.வே., மரபுத் தமிழில் பயிற்சியும் ஆர்வமும் கொண்டவர். நானோ அதே ஊரில் என் மாமா வீட்டிற்கு எதிரே கூடிய 'வானம்பாடி' இயக்கத்தால் ஈர்க்கப்பெற்றவன். கோவை தேவாங்கர்ப்பேட்டை பூமார்க்கெட் பின்னாலிருந்த வி.சி.எஸ். காலனியில் கவிஞர் புவியரசு அவர்களிருந்த வாடகை வீட்டில் அவ்வியக்கத்தவர் அவ்வப்பொழுது கூடுவர். ஓரம் நின்று கவனிப்பேன் நான். முப்பத்தாறு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இப்பொழுது நண்பர் வேந்தர்வேந்தன், நாமக்கல் மாவட்டம் - பரமத்தி வேலூரில் உள்ள பொத்தனூரில். தேவமைந்தன் ஆன நான், புதுச்சேரியில். வெவ்வேறு பின்னணிகளில் இருவரும். 1998 ஆம் ஆண்டு முனைவர்ப் பட்டம் பெற்ற நண்பர், மெய்யான ஆய்வாளர். இவர்தம் 'தொல்காப்பியத் தமிழ்,' ஆய்வுக்கோர் எடுத்துக்காட்டு. 'தமிழ் இலக்கிய வரலாறு' என்ற அண்மைய நூலை மிகவும் புதுமையான முடிபுகள் கொண்டிருக்கும் தனித்தன்மையான தமிழ் இலக்கிய வரலாற்று நூல் என்று தமிழம். நெட் பாராட்டியிருந்தது. அதைப் பார்த்தபின்தான், நான் நண்பரோடு தொடர்பு கொண்டு, நெடுங்கால இடைவெளியை நிறைவு செய்து விட்டேன். ஓ! காலம் எவ்வளவு வினோதமானது? 'கந்தவனக் கலம்பகம்' இயற்றியமைக்காக, இவரை இலங்கை யாழ்ப்பாணத்தில், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்கள் தலைமையில் பாராட்டுவிழா நடத்திச் சிறப்பித்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். என்ன பாராட்டானாலும் எவ்வளவு புகழ்மாலை சூட்டினாலும் தலைக்கனம் கிஞ்சிற்றும் கொள்ளாமல் கள்ளமில்லாத புன்னகையை வெளிப்படுத்துவதில் நண்பர் உண்மையானவர். மரபிலக்கணப் புலமையும், சங்க இலக்கிய - காப்பிய இலக்கிய அறிவும் மிக்கவர். இக்காலத்தில் மலர்ந்துள்ள நடையியல், முருகியல் ஆகிய துறைகளிலும் மிகுந்த நாட்டம் கொண்டவர். இவர்தம் 'காப்பிய நடையியல்,' 'சிந்தாமணி யாப்பு,' 'சிந்தாமணியின் அகவடிவமும் அமைப்பு வடிவமும்,' இலக்கணக் குறிப்பும் பொதுக்கட்டுரையும்,' கந்தவனக் கலம்பகம்,' 'ஒளிக்கீற்று' [குறுங்காப்பியம்], 'தொல்காப்பியத் தமிழ்,' தமிழ் இலக்கிய வரலாறு,' முதலிய அருமையான நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. 'ஒளிக்கீற்று' [1999] என்ற இவர்தம் குறுங்காவியத்தில் சற்றொப்ப நாற்பது சந்தவகைகளில் விருத்தங்கள் இயன்றுள்ளன. எங்கள் மறைந்த நண்பர், தமிழ்நாட்டின் தமிழ் ஆட்சிமொழி - தமிழ்ப் பண்பாடு - இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சராக விளங்கிய முனைவர் மு. தமிழ்க்குடிமகன் இக்காப்பியம் பற்றி எழுதியுள்ளதைக் காண்போம். ''ஒருவர் மேல் ஒருவர் மேலாண்மை செலுத்துவதைத் தடுத்துக் குமுகாய ஏற்றத்தாழ்வுகளைப் போக்கி, எல்லா நிலைகளிலும் சமன்மை என்னும் ஒப்புரவை உருவாக்கிட அமைதிவழிப் புரட்சி ஒன்றே சிறந்த வழி என்பதைக் கவிஞர் இந்நூலின்மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். மொழி இன வேட்கை, பொதுமை நாட்டம், பெண்ணியப் பார்வை ஆகியவற்றை அமைதிப் புரட்சி என்ற புதிய கருத்தாக்கத்தோடு உறழ வைப்பதே எனது நோக்கம் என்று கூறும் வேந்தர்வேந்தன் தன் நோக்கத்தில் நிறைவான வெற்றியைப் பெற்றுள்ளார் என்பதை இந்நூலைப் படிப்பதின் வாயிலாக அறிய முடிகிறது. தனித்தமிழ் உணர்வின்வழி நின்று பணியாற்றும் வேந்தர்வேந்தனுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'' நம் வாழ்த்துகளும் அவ்வாறே!

19.11.05

மலைநாட்டுத் தமிழ்முரசு 1958ஆம் ஆண்டு மலர்

பிரெஞ்சுப் பேராசிரியர் - நண்பர் திரு. நாயகர், இம்முறை 'தமிழ் முரசு' வெளியிட்ட பழைய ஆண்டு மலரை வாசிக்கத் தந்தார். பழைமையிலும் புதுமை காணும் நண்பர்கள் நாங்கள். அம்மலர், 1958ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்றது. தமிழ் முரசின் ஐந்தாவது ஆண்டு மலர் அது.

இப்பொழுதெல்லாம், 'தீவளிக்குத் தீவளி' வெளியிடப்பெறும் - அதாவது, ஒரு மலரை மூன்றாகப் 'புய்த்'து வெளியிடும் வியாபாரம் தெரியாமல் - அல்லது, அப்படியெல்லாம் செய்வது மலை நாட்டுத் தமிழ்ப் பெருமக்களுக்குப் பழக்கமாய் இராது என்பதால் - தெம்மி 1/4 அளவில் முந்நூற்று முப்பது பக்க அளவில் வெளியிடப் பெற்றது. கண்ணையும் மனத்தையும் உறுத்தாத ஏராளமான சித்திரங்களும் ஒளிப்படங்களும் பின்னணி ஓவியங்களும் கூடியது. "தலைமுறை தலைமுறையாகப் போற்றிப் படிக்கும் பொருட் செறிவும், கண்டு மகிழும் கலையழகும் கொண்டதாக" மலர் உருவாகியிருக்கிறது. நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. டாக்டர் மு.வ., பாஸ்கரத் தொண்டமான், குன்றக்குடி அடிகளார், பேராசிரியர் மா. இராசமாணிக்கனார், டாக்டர் தனிநாயக அடிகளார், கவியோகி சுத்தானந்தர், தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், வெள்ளை வாரணனார், ம.பொ.சிவஞானம், டாக்டர் தா.ஏ.ஞானமூர்த்தி, பூ. ஆலாலசுந்தரனார், அ.கி.பரந்தாமனார், இராஜாமணி அம்மையார், வல்லிக்கண்ணன், அப்துல் வஹ்ஹாப், வி. மரிய அந்தோனி போன்ற மேலும் பல அறிஞர்களின் கட்டுரைகளும், டி.கே.ஷண்முகம், கே.ஏ.தங்கவேலு, சிவாஜி கணேசன், பிரேம் நசீர், ஜெமினி கணேசன், எம்.என். ராஜம், சாவித்திரி , ராகினி, பத்மினி போன்ற கலைஞர் சிலரின் கட்டுரைகளும் மலரில் வெளிவந்துள்ளன. அறிஞர்களுக்குத் தமிழ் முரசு தந்துள்ள அகத்தியம் பாராட்டத்தக்கது.

கச்சேரிகளில் தமிழ் உருப்படிகள் ஆகச் சில, கடைசியில் அப்பொழுதும் இப்பொழுதும் பாடப்படுவதுபோல சினிமாக் கலைஞர்களின் கருத்துரைகள் மலரில் கடைசியில் இடம்பெற்றுள்ளமை, மிகவும் பொருத்தமாகவும் நம் பழைய தமிழர்களின் நடுவுநிலைமையை எடுத்துக் காட்டுவதாகவும் உள்ளது.

இம்மலர் ஒரு கடல் என்றால், அதில் ஓர் அலை இதோ: பக்கம் 76இல் இடம்பெற்றுள்ள பாவேந்தர் பாட்டு -

பட்டுக் குஞ்சுகள் எட்டைக் கோழி

இட்டுக் கொண்டே போகும்

எட்டுக் குஞ்சும் தாய்சொல் லுக்குக்

கட்டுப் பட்டே மேயும்

தட்டுக் கெட்டுப் போனால் ஒன்று

தட்டிப் போகும் பருந்தே

விட்டுத் தப்பி னாலும் பூனை

விட்டுவி டாது விருந்தே.

( பாரதிதாசன், 'குயில்.' )

18.11.05

தகுதிக்குத் தமிழ்மாமணி மு.இறைவிழியனார்

சில சமயங்களில் தகுதியும் நீதியும் வென்றுவிடுகின்றன என்பதற்குப் புதுவை அரசு தன் உயரிய விருதான தமிழ்மாமணி(2005)விருதை 'நற்றமிழ்' இதழாசிரியர் புலவர் மு.இறைவிழியனார் அவர்களுக்கு வழங்கியுள்ளமை சான்று. 27/10/2005 அன்று மாலை, அண்ணாமலை பேருணவகத்தில், கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் செல்வி ந. சுமதி அவர்கள் வரவேற்க, சட்டப் பேரவை எதிர்க்கட்சித்தலைவர் மேனாள் புதுவை முதல்வர் திருமிகு இரா.வே. ஜானகிராமன் அவர்கள் வாழ்த்துரைக்க, புதுச்சேரி மாநில அன்பு முதல்வர் மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்கள் இந்த உயரிய விருதினை மு. இறைவிழியனார்க்கு வழங்கினார். சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை வைக்க, மாண்புமிகு முதல்வர் அதை ஏற்று, விருது பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்த அரசியல் இணக்கத்தைப் புதுவை மாநில அரசியலில் மட்டுமே பார்க்க இயலும். பல ஆண்டுகளாக 'நற்றமிழ்' என்ற இதழை நடத்திவரும் மு. இறைவிழியனாரின் திங்களிதழில் மட்டுமே சற்றொப்ப முந்நூறு படைப்பாளியர் ஒவ்வொரு இதழிலும் பங்கேற்பதைப் பார்க்க முடியும். காட்டாக, இப்பொழுது வெளிவந்துள்ள 'நற்றமிழ்' நளி(கார்த்திகை)இதழில்[15/11/2005]'கொடுத்தபடி தொடுத்த பாடல்கள்' பகுதியில் மட்டும், பிரான்சு முதல் ரிசிவந்தியம் வரை உள்ள இடங்களில் வாழும் இருநூற்று எண்பத்து இரண்டு பாவலர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். பொன்னி, தென்றல் போன்று வெண்பாப் போட்டிகள் மட்டுமே நிகழ்த்தாமல், யாப்பியலில் வரும் பாக்களின் வகைகள் பலவற்றுக்கும் புலவர் அரங்க. நடராசன் குறிப்புகள் கொடுக்க அத்தனைப்பேர் அழகாக, தளைதட்டாமல் எழுதுகின்றனர். ஒன்றுவிடாமல் அத்தனையையும் பதிப்பிக்கிறார் இறைவிழியனார். இந்த இதழின் முப்பத்தைந்து பக்கங்களில் மட்டும் முன்னூற்று ஆறு பேர்களின் எழுத்துப்பங்கு இருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளலாம். ஏன் இவர்பால் அன்பும் தோழமையும் எண்ணற்றோருக்குத் தோன்றாது? அவரே சொல்வதை இங்குத் தருகிறேன்: "இளமையில் அறிஞர் அண்ணாவின் 'திராவிட நாடு'- கிழமை இதழைத் தொடர்ந்து படித்ததால் தாய்மொழிப்பற்று வளர்ந்தது. தமிழ் வளர்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து தனியனாகவும் இயக்கங்கள் உருவாக்கியும் இதழ்கள் நடத்தியும் ஆற்றிவருகிறேன். விருதுகள், பட்டங்கள், பரிசுகளைக் குறியாகக் கொண்டு தொண்டாற்றி வந்திலேன்.இந்நிலையில் இவ்வாண்டு புதுவை மாநில உயர்விருதான 'தமிழ்மாமணி' விருது எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது நான் எதிர்பாராத ஒன்று. புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்கள் தூய தொண்டருக்கு அவ்விருதை அளிக்க விரும்பியுள்ளார். அந்த வாய்ப்பை நழுவ விடாமல் என் பெயரை முதல்வரிடம் மொழிந்துள்ளார் என்னை நன்குணர்ந்த அன்பர் ஒருவர். அவரின் கருத்தை மட்டுமே முதன்மையாகக் கொள்ளாமல் முதல்வரும் பலரிடம் உசாவி உள்ளார். பலர் என்னைப் பற்றிச் சிறப்பாகக் கூறியுள்ளனர். இவற்றையெல்லாம் நன்கு ஆய்ந்து பார்த்தும் உரிய விளக்கங்கள் பெற்றும் தெளிந்த முதல்வர் தடைகளைக் கடந்து என் பெயரை விருதுக்கு அறிவித்துள்ளார். எங்கள் மாநில முதல்வர் மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்களைக் காமராசரின் உருவமாகவே குறிப்பிடுவர். நானோ பல ஆண்டுகட்கு முன்பிருந்தே அவரை அண்ணாவும் காமராசரும் இணைந்த உருவமாகப் பார்த்து வருகிறேன். அவர் உருவால், உடையால் மட்டுமன்று உள்ளத்தாலும் எளியவரே......எல்லாவகையிலும் பாராட்டுக்குரிய எங்கள் மாநில முதல்வர் மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்களின் திருக்கைகளால் அவரால் மட்டுமே முடிவு செய்து தரப்பட்ட தமிழ்மாமணி விருதைப் பெற்றதை விருது பெறுவதைவிடப் பெரும்பேறாகக் கருதினேன். இந்த உயர் விருதுக்கு உரியவனாக மேலும் என் தமிழ்ப்பணி தொடரும்......எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள தமிழறிஞர்கட்கும் இனிய நண்பர்கட்கும் இளைஞர்கட்கும் இவ்விருதைப் படைக்கிறேன்." இவர் தொடர்ந்து நடத்திவரும் 'நற்றமிழ்' இதழின் இணையாசிரியர்களாக [மற்றவர்கள் 'துணையாசிரியர்கள்' 'உதவி ஆசிரியர்கள்' என்றே குறிப்பர்; இவர் இதிலும் எளிய உள்ளம் கொண்டிருக்கிறார்] சந்தப்பாமணி புலவர் அரங்க. நடராசனும் புதுவையின் முதல் இணைய இதழான 'புதுச்சேரி.காம்'-இன் ஆசிரியர் புலவர் செ. இராமலிங்கனும் இருந்து அன்னாருக்குப் பேருதவி புரிந்து வருகின்றனர். புலவர்கள் இவ்வாறு அரசியல் தலைவர்கள் போலவே ஒற்றுமையாக வாழ்ந்து ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு தமிழ்ப்பணியைத் தளராமல் ஆற்றுகின்ற எங்கள் புதுவை மாநிலம் எல்லாவகைகளிலும் பிற மாநிலங்களுக்கு, ஏன், பிற நாடுகளுக்கும் ஏற்ற வழிகாட்டி ஆகும்.

17.11.05

உலக நகரம் ஆரோவில்லின் தமிழ்க் கவிஞர்

புதுவை அருகே உள்ள உலக நகரம் ஆரோவில். அரவிந்த ஆசிரம அன்னை அவர்களின் கனவின் நனவு அது. அங்கே முப்பது ஆண்டுகளாகத் தங்கிப் பணிகள் பலவற்றை ஆற்றிவருவதுடன், சிறந்த தமிழ்க்கவிஞராகவும் திகழ்ந்து வருபவர் கவிஞர் இரா. மீனாட்சி. சூது, வாது, வஞ்சகம், உலோபம், மூடம், மதம், மாச்சரியங்கள் நிரம்பிய உலகில் - கள்ளம் கபடமற்று இந்த வயதிலும் ஒரு குழந்தைபோல், தன்னுடன் பழகுபவர்களிடம் உண்மையான அன்புடன் உரையாடி, அவர்களுக்கு ஆவன புரிவதை இவருடைய பழக்கமாக, கடந்த முப்பது ஆண்டுகளாக நான் அவதானித்து வருகிறேன். திருமதி இரா. மீனாட்சி அவர்கள், கவிஞர் என்ற தளத்தில் நிற்கும் பொழுதுகளில், இந்த நிகழ் உலகத்தின் இயங்கியலையும் அதில் குறிப்பாக சமகால மனிதர்களின் வலிவு மெலிவுகளையும் உள்ளாழ நோக்குவதில் வல்லவர் என்பதை நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறுபயணம்(இடுமொழி) ஆகிய அவர்தம் கவிதைத்தொகுப்புகள் எண்பிக்கின்றன. ஆரோவில்லின் ஸ்ரீ அரபிந்தோ பன்னாட்டுக் கல்வி ஆய்வு மையத்தில் பணி புரிந்து வரும் இவர், மனையியலில் பி.எஸ்சி பட்டமும் சமூகப்பணியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். ஆரோவில்லுக்கு உலகமெங்கிலுமிருந்து வருகை புரியும் உள்ளங்களைக் கவரும் மாத்ரி மந்திர் நர்சரித் தோட்டங்கள் பகுதியில் இயற்கையின் மடிதவழ் மழலையாக வாழ்ந்துவரும் பெரும் பேற்றைப் பெற்ற கவிஞர் இரா. மீனாட்சி, அண்மையில் அங்கே மலர்ந்து மலர்ந்து உதிரும் மழைக்கால மரமல்லி மலர்களைப் பற்றி அழகாகக் குறிப்பிட்டபொழுது - புதுவை மாநிலம் காரைக்காலில், திருநள்ளாற்றுக்குச் செல்லும் வழியில் உள்ள இயற்கை நலம் செறிந்த பச்சூர் இடுகாட்டில் 1988 சனவரி 17ஆம் நாள் ஒடுக்கம் கொண்ட எம் தந்தையார் இராஜயோகி பி.கே. அண்ணன் தமது உடல் செறிந்த மண்மேல் இன்று தன் மலர்களைப் பொழிந்திருக்கும் பதினேழு வயது நிரம்பிய மரமல்லி மரம், எங்கள் இனிய நன்றிக்கு வித்தானது. தந்தையார் ஒடுங்கிய ஞான்று, மறைந்த என்னரும் நண்பர் டாக்டர் நாகப்பா நாச்சியப்பன் அவர்கள் ஏற்பாட்டின்படி, திரு பொன்னம்பலம் என்பவர், அதை அங்கே நட்டார். அடடா! மனித வாழ்க்கையில் மரங்களும் அவை பொழியும் மலர்களும் கொண்டுள்ள ஆழமான உறவை எத்தனை அழகாக ஞாபகப் படுத்திவிட்டார் சகோதரி மீனாட்சி!

16.11.05

ஒரு கை ஓசைகள்

அண்மைய காலத்து வளர்ச்சிகளில் ஒன்று - இணையத் தமிழ் வளர்ந்துள்ள வேகம். வலையிதழ்கள், வலைப்பதிவுகள் என, ஈடுபாடும் அர்ப்பணிப்பு உணர்வும் உள்ளவர்கள் நம் தமிழையும் அதன் கவிதை - உரைநடை ஆகியவற்றையும் தமிழர் வரலாற்றையும் முன்னெடுத்துச் செல்கிறார்கள். அவற்றை அறவே புறக்கணிக்கும் போக்கும் கூடவே வளர்ந்துவருகிறது. இதைச் செய்பவர்களைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் ''இதனால் எனக்கு என்ன இலாபம்?'' என்று கேட்கும் - 'இதனால் பயன்களை மட்டும் அடைய விரும்புபவர்கள்' குறித்து வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. எதையும் உதாரணம் காட்டிச் சொல்வது உத்தமம் என்பார்கள். அதன்படி ஒன்றைச் சொல்லுகிறேன். நான், என் சிந்தனைகள், என் படைப்புகள் என்று மட்டும் வலைப்பதிவுகளைச் செய்துகொண்டிராமல் நமக்குத் தெரிந்து உள்ள நல்ல படைப்பாளர்களையும் அவர்கள் படைத்த நூல்களையும் இணைய உலகில் அறிமுகம் செய்து வைப்போம் என்று இறங்கினேன். மிகவும் வேடிக்கையான 'இம்சைகள்' தேடிவந்தன. ' பானைச் சோற்றுக்கு ஓர் அவிழ் ( வெந்த பருக்கை) பதம்' என்பார்கள். அதுபோல, இதனால் நிகழ்ந்த உரையாடல் ஒன்றை நண்பர்கள்முன் வைக்கிறேன். தொலைபேசி அழைக்கிறது. எதிர்முனையில், தெரிந்தவர் ஒருவர். பேசுகிறார்: ''ஐயா! நீங்கள் மேற்படியார் புத்தகம் பற்றி ஏதோ பதிவு கிதிவு'ங்கறாங்களே அப்படி ஏதாவது வெளியிட்டீங்களா?'' நான் சொல்கிறேன்: ''ஆமாங்க, அதன்பெயர் வலைப்பதிவு. வலைப்பூ'ன்னும் சொல்வாங்க. இன்னொன்று வலையிதழ். அவற்றில் நீங்கள் சொல்'றவருடைய புத்தகம், கிடைக்குமிடம் குறித்து பதிவு எழுதினேன்'ங்க!......ஏன், அதுக்கென்ன இப்போ?......'' ''எதினாச்சியும் குடுத்தாரா அவரு?..'' ''எதுக்குங்க குடுக்கணும்? '' ''பின்ன எதுக்கு செஞ்சீங்க?'' ''இது என்னங்க கேள்வி? நல்ல தமிழ் உணர்வுள்ளவர்.. அவருடைய ஆக்கபூர்வமான புத்தகத்தப் பற்றிப் பதிவு வெளியிடறதுல எந்த ஆதாயமும் எனக்குத் தேவையில்லங்க......'' '' என்ன, இப்படிப் பொறுப்பில்லாம பேசுறீங்க..நண்பரே..ஒங்க வீட்டுக் கரண்ட்டு.. உங்க வீட்'ல கட்டற டெலிபோன் பில்லு..இத்'த எல்லாம் யாருயாருக்கா'வோ தாரை வார்த்துட்டிருக்கீங்க..இருங்க, இருங்க அம்மா'ட்ட சொல்ற விதத்தில சொல்'றேன். சரியா'ப் பூடுவீங்க!......'' எரிச்சலுடன் நன்றி சொல்லிவிட்டுத் தொ.பே. இணைப்பை விலக்கிக் கொண்டேன். உள்ளம் சொல்லியது; ''இவராவது உன்னிடம் வெளிப்படையாகப் பேசினார். வெளிப்படையாகப் பேசாமல் ஒவ்வொரு காதாய்ப் போய் இதுபற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்பவர்களை என்ன செய்வாய்?'' இது கிடக்கட்டும். இது போன்ற பதிவுகளைத் தொடர்புடையவர்களே அக்கறை எடுத்துப் பார்ப்பதில்லை. ''இதனால் எனக்கு 'லைப்ரரி ஆர்டர்' வருமா?'' என்று கேட்டவரும் உண்டு. நாம் அடுத்த பதிவை, தாங்கள் பார்க்கும்வரை நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். எப்போது பார்ப்பார்கள், ஏன் இன்னும் பார்க்காமலிருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. 'பிரிண்ட்' எடுத்துத் தந்தால்தானே பார்க்க - என்றார் ஒருவர். வலையிதழ் மற்றும் வலைப்பதிவு என்றால் ஒன்று ஆகக்குறைவாக மதிப்பிடுகிறார்கள்; இல்லை மிக அதிகமான முக்கியத்துவம் தருகிறார்கள். இதில், சில வலைப்பதிவுகளில் - இன்னின்ன வலைப்பதிவுகளை 'நான்' பரிந்துரைக்கிறேன் என்றுவேறு ஒருபக்கம் வரிசைப் படுத்திக் காட்டுகிறார்கள். வலைஇதழ்கள் சில தங்கள் வட்டத்தை மட்டுமே சுட்டுகின்றன. விதிவிலக்காக, தனக்கு 'ஓரிழை மட்டுமே' தெரிந்த தமிழ் வலைஇதழாயினும் அதற்கு வழிகாட்டும் நண்பர்களும் இருக்கிறார்கள். வெறும் அரட்டைத்தளங்களாக, மற்றவர்களைக் கொச்சைப் படுத்துவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிற குழுவாகட்டும், வலைப்பதிவாகட்டும், வலையிதழே ஆகட்டும் - ஒருநாள் அதனதன் விளிம்பில் வந்து நிற்க நேரும்பொழுது வெறுமையே வந்து வாட்டும். ஒரு கை ஓசை எதுவானாலும் ஆகட்டும்; அதற்குக் காலம் தரும் பரிசு வெறுமை மட்டும்தான்.

13.11.05

ஆகாசம்பட்டு - கி.ராஜநாராயணன் நோக்கு

கி.ரா. என்று சுருக்கமாக அழைக்கப்பெறும் கி.ராஜநாராயணன் நல்ல முதிர்ந்த சிந்தனையாளர். நாட்டுப்புறத்தைப் பெருமைப்படுத்தியவர்களில் கி.ரா.வும் கோவை க.அய்யாமுத்து[கவிஞர்/உழவர்]வும் குறிப்பிடத்தக்கவர்கள். கி.ரா.வுக்குக் கதைசொல்வது என்பது கைவந்த கலை. அய்யாமுத்து போலவே ஆகாசம்பட்டு சேஷாசலமும் முழுநேர உழவுத் தொழிலாளர்தாம். ஒரே வேறுபாடு, பின்னவர் - கல்லூரிக்கல்வியாகிய இளம் விலங்கியல் படித்தவர். 1990 ஆம் ஆண்டு 'ஆகாசம்பட்டு'[மார்ச்சு,22]க்குக் கி.ரா. அணிந்துரை தந்திருக்கிறார். ஆறாண்டுக்குமேல் தான் எழுதிவந்த வெண்பாக்களை, பேராசிரியர் மீரா அவர்களின் 'அன்னம்' வெளியீடாகக் கொண்டுவந்த 'முழுநேர விவசாயி'யான சேஷாசலத்துக்கு, 'வாழ்க ஆகாசம்பட்டு' என்றே தலைப்பிட்டு வாழ்த்தி நான்கு பக்கங்கள், தன் வற்றாத மக்கள்மொழிநடையில் தந்துள்ள பெருந்தன்மையை, அவருடன் ஒப்பிடுகையில் 'பிரபலம்' குறைந்த எழுத்தாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்! கடிதம் எழுதும் பாணியில், ''அன்பார்ந்த ஆகாசம்பட்டு சேஷாசலம் அவர்களுக்கு'' என்று தொடங்கும் கி.ரா. அணிந்துரையின் பகுதிகள் சில: ''எந்த நேரமானாலும் வீடு போயி விழுந்தறணும் என்கிற சம்சாரிபாணி, என்னைப்போல -- எல்லா சம்சாரிகளை யும் போலவே -- உங்களையும் பிடித்து ஆட்டுவதைப் பார்க்கிறேன். வீட்டை விட்டு வெளியே போனால், இந்த மாதரியான வாகனப் பெருக்கமும் சிறுத்த சாலைகளும் வேக ஒழுங்கீனங்களும் நிறைந்த இந்தக் காலத்தில் வீடு வந்து சேருகிற வரை நிம்மதி இருக்காதுதான் பெண்டிருக்கு.'' ''கிராமத்தையும், கிராமத்தானையும் அவனது சிந்தனைகளையும் அப்படியே வெண்பாக்களில் வடித்துத் தள்ளியிருக்கிறீர்கள். வெண்பாவை வா என்றால் வருகிறது; போ என்றால் போகிறது; அப்படி வசக்கி வைத்திருக்கிறீர்கள் அந்தப் புலியை.'' ''நம் காலத்தில் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள் இதில்[ வெண்பா இயற்றுவதில்] வல்லாள கண்டனாகத் திகழ்ந்தார். எழுத்தாளர் புதுமைப்பித்தன் இதில் வித்தியாசமான சோதனைகளைச் செய்து பார்த்திருக்கிறார். பேச்சுத்தமிழை அப்படியே கவிதையில் மடக்கிக் கொண்டுவந்த மூலபுருசர் இவர்தான் தமிழில். ''பண்ணாத வம்பெல்லாம் பண்ணிவச்சி, இன்னைக்குக் கண்ணால மின்னா கசக்குதோ? - அண்ணாத்தே! ஆயாவந்தா லுன்னை அடுப்பில் முறிச்சி வப்பா(ள்) போயேன் தொலைந்து போ!'' என்று ஒரு தெக்கத்திப்பெண் தனது 'காதல'னைப் பார்த்துச் சொல்லுகிறமாதிரி எழுதிய இந்த வெண்பாவை நாங்கள் வாய்க்குவாய் சொல்லி மகிழ்வதுண்டு. ''என்னவெவ சாயம்! எழவுவெவ சாயம் பொன்னு வெளையற பூமியாம்ல! இண்ணைக்கும் போர்வையில பாதியே சோமனாச்சி! அண்ணாச்சி, வேர்வையில பாதி மழை!'' கரிசல் காட்டு சம்சாரியும் ஆகாசம்பட்டு விவசாயியும் மானாவாரி வர்க்கம் என்கிற முறையில் கூட்டாளிகள்தான். இவர்களை உவமித்துத்தான் சகோரப் பறவையை சொன்னார்களோ என்று நினைக்க வேண்டியதிருக்கிறது. மண்ணில் கால் பாவாமல் பேய்போல் அலைந்து திரிந்து கொண்டிருந்த ஏட்டுத் தமிழ்மொழியை மனித மொழியில் - பேச்சுத்தமிழில் - அதிலும் வெண்பாக்களில் பொதிந்து சாதனை புரிந்திருக்கிறீர்கள். மக்கள் நாவில்த்தான் சரஸ்வதிதேவி வாசம் பண்ணுகிறாள் என்பதை உங்கள் கவிதைகள் அழகாகச் சொல்லிக் காட்டுகின்றன. தமிழ்க்கவிதை வளர்ச்சியில் இது ஒரு திருப்புமுனை. வாழ்க ஆகாசம்பட்டு.''

8.11.05

"எனக்கு வாழ்க்கை போரடித்ததில்லை" - லமார்த்தீன்

பேரா. க. சச்சிதானந்தத்தின் 'சுவையான பிரஞ்சுப்பக்கங்கள் II' புத்தகத்தில் நான் கண்ட சுவாரசியமான,இந்தக் காலத்தில் நமக்குப் பயன்படக் கூடிய செய்தி. லமார்த்தீன் என்ற பிரஞ்சுப் படைப்பாளனின் கருத்தோவியம். பார்வைப்புலன் இழந்தவன் ஒருவன் இந்த வாழ்வை எவ்வளவு நேசிக்கிறான்! நாட்குறிப்பு, நாட்காட்டி, கடிகாரம் என்று எதுவும் பார்க்க இயலாதிருந்தும் அவை எல்லாவற்றையும் 'தான்' ஆகவே சுயப்படுத்தி இருக்கிறான்! அவன் சொல்கிறான்: "எப்போதுமே காலம் எனக்கு மிக நீண்டதாகத் தெரிவதில்லை. பருவநிலை நன்றாக இருக்கும்பொழுது, நான் வெயிலுள்ள நல்ல வாகான இடத்தில் அமர்ந்து சுவரின்மேலோ தேனீக்களின் பெட்டிமேலோ மரத்தின்மேலோ சாய்ந்து கொள்வேன். பள்ளத்தாக்கு, கோட்டை, மணிக்கூண்டு, புகைபோக்கிவழியாக புகையை வெளியிடும் வீடுகள், மேயும் காளைகள், பேசிக்கொண்டே வழிநடக்கும் பயணிகள் ஆகியவர்களை முற்காலத்தில் என் கண்களால் கண்டது போலவே இப்பொழுதும் என் மனக் கண்ணால் காண்கிறேன். கொள்ளுப்பயிர் பச்சை பிடித்தல், புல்வெளிகளில் புல்வெட்டுதல், கோதுமைக் கதிர்கள் முற்றுதல், இலைகள் பழுப்பேறுதல், பறவைகள் விரும்பும் முட்புதர்ப் பழங்கள் சிவத்தல் ஆகியவற்றை முற்காலத்தில் என் கண்களால் பார்த்தது போலவே இன்றும் எல்லாப் பருவ காலங்களிலும் நான் அறிவேன். என் கண்கள் இப்பொழுது என் காதுகளிலும் கைகளிலும் கால்களிலும் இருக்கின்றன. செயற்கைத்தேன் கூடுகளின் அருகில் மணிக்கணக்காக இருந்து, பெட்டியில் வைக்கோலின் அடியில் தேனீக்கள் செய்யும் ஒலியையும், அவை கதவின் வழியே ஒவ்வொன்றாக வெளிவந்து 'காற்று இனிமையாக வீசுகிறதா? மலர்கள் மலரத் தொடங்கிவிட்டனவா? என்று நோக்குவதையும் உணர்ந்து கேட்பேன். காய்ந்த கற்களில் உடும்புகள் ஓடுவதைக் கேட்பேன். எல்லாவகையான வண்டுகளும் வண்ணத்துப் பூச்சிகளும் என்னைச் சுற்றிப் பறப்பதை நான் அறிவேன். புற்களிலும் சருகுகளிலும் ஓடும் சிறு உயிரினங்களும் எனக்குத் தெரியும். அவைதாம் எனக்குக் கடிகாரம், நாட்காட்டி எல்லாம். அதோ குயில் கூவுகிறது. இது மார்ச்சு மாதம். வெயில் வந்துவிடும். அதோ கரிக்குருவியின் ஒலி. இது ஏப்ரல் மாதம். அதோ இசைக்குருவியின் பாட்டு, இது மே மாதம். அதோ வண்டின் ரீங்காரம். இது ஜூன் மாதம் 24ஆம் நாள். அதோ சிள்வண்டின் ஓசை. இது ஆகஸ்டு மாதம். அதோ பழுப்புக்குருவியின் ஒலி. இது கொடிமுந்திரியின் அறுவடைக்காலம். அது பழுத்துவிட்டது. அதோ வாலாட்டிக் குருவி, அதோ காக்கைகள், இதோ குளிர்காலம்!" என்று நான் சொல்லிக் கொள்ளுவேன். இதே போல ஒவ்வொரு நாளின் மணிப்பொழுதையும் நான் நன்கு அறிவேன். பறவைகளின் பாடல்கள், வண்டுகளின் ரீங்காரம், சிற்றூர்களில் இலைகளின் எழுச்சி-வீழ்ச்சி ஒலிகள், வானத்தில் சூரியனின் ஏற்றம் இறக்கம் இவற்றைக் கொண்டு மணி என்ன என்பதைத் துல்லியமாக அறிவேன். காலையில் எல்லாம் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்; நடுப்பகலில் எல்லாம் அடங்கும்; மாலையில் மீண்டும் தொடங்கும்; சிறிது நேரத்தில் எல்லாம் முடிந்துவிடும்...எனக்கு எப்போதுமே சலிப்புத் தோன்றுவதில்லை. அப்படித் தோன்றினால் "அது இருக்கிறதே!" என்று சொல்லிக் கொண்டே என் பையில் கையை விட்டுத் துழாவி மணிமாலையை எடுத்து என் கை சோரும்வரை உருட்டுவேன். உதடுகள் சோரும்வரை கடவுளை வேண்டுவேன். எப்பொழுதுமே காலம் எனக்கு மிக நீண்டதாகத் தெரிவதில்லை. அந்த நாட்களில், வழியில் நான் சந்தித்தவர்களின் - எனக்குத்தெரிந்தவர்களின் முகங்களை மீண்டும் காணுவதை மட்டும் நான் விரும்புகிறேன்." புத்தகம் கிடைக்குமிடம்: தமிழ்மணி பதிப்பகம், 127,ஈசுவரன் கோவில் தெரு, புதுச்சேரி - 605 001. பக்கங்கள்: 160 விலை: ரூ. 50 - 00

3.11.05

நான் - எனக்கு மட்டும்தான்!

குடும்பப் பாங்கானவள் நான். ராத்திரி,'குற்றம்' முடிய தொடர்கள் பார்ப்பேன். அவசியம் வந்தால் அதிகாலை, என் அதிகாலை - எட்டு மணிக்கு எழுவேன். விடுமுறை நாள்களில், கணவர் - பிள்ளைகளின் விடுமுறை நாள்களில் பத்துக்கு எழுவதே பழக்கம். வேறுவழி கிடைக்காவிட்டால் ஓரிரு நாள்கள் தேன்போல் உறவுகள் கவனிப்பேன். முகம் காட்டி மூன்றாம்நாள் கத்தரிப்பேன் - அவர் உறவினரை. என்கணவர் எனக்குமட்டும்தான் என்பது மட்டுமல்ல நான்,என்சொந்தங்களுக்கு மட்டும்தான். தாலி ஏறும் வரைதான் 'அட்ஜஸ்ட்மெண்ட்'டுகள். அப்புறம் அவைஎன் கெட்ட கனவுகள். யாருக்கு என்ன உதவிசெய்து என்னத்தைக் கண்டோம்? என்பது எனக்குள் ஞானம். என்னுள் திளைப்பேன். இன்பமாய் இருப்பேன். வெறுமை என்பது எனக்கில்லை. தொலைக்காட்சியே உற்ற துணை.

1.11.05

தித்திக்கிறதா தீபாவளி?

விடிவதற்கு மிக முன்பே தொலைபேசி கிணுகிணுக்கிறது. மணி 02:12. பிரான்சிலிருந்து சந்தோஷக்குரல், "ஹேப்பி தீபாவளி" சொல்கிறது. மைத்துனியின் குரல். "இப்பொழுது அங்கே மணி என்ன?" என்று, தூக்கக் கலக்கத்துடன் துணைவியார் கேட்கிறார். ஸ்பீக்கரில் "பத்து மணி! நீங்க'ள்லாம் இன்னும் தீபாவளி கொண்டாட ஆரம்பிக்கலையா?" என்று உற்சாகத்துடன் பதில் வருகிறது. அவர்களுக்கு இருக்கிற உற்சாகம் எங்களுக்கு அன்னியமாகவும், ஏன், திகைப்பாகவும்கூட இருக்கிறது. புதுவையிலிருந்து என் மைத்துனி பிரான்சுக்குச்சென்று 'செட்டில்' ஆகி இருபத்தெட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 'உற்சாக'த்தின் அக்கா, அதுதான் என் துணைவியார், இன்னும் தூக்கம் தோய்ந்திருக்கும் குரலில் கூறத் தொடங்கினார். "சின்ன வயசிலேதான் தீபாவளி எனக்குச் சந்தோஷமா இருந்துச்சு! அம்மாவும் பாட்டியும் இதே நேரம், இரண்டு மணிக்கு எழுந்திருச்சு, நல்ல சூடா விறகடுப்பில தண்ணி வச்சுக் குளிச்சிட்டு, எங்களையும் எழுப்பி, குளிக்க வச்சிருவாங்க. வடைக்கு மாவை பாட்டி ஆட்டுக்கல்'லுல அரைச்சிட்டுருப்பாங்க.. அம்மா 'சொய்யான்' உருண்டைக்கு 'ரெடி' பண்ணிட்டிருப்பாங்க... கடலைப்பருப்பும் வெல்லமும் தேங்காயும் கலந்த வாசனை 'கமகம'ன்னு வரும்.. பாட்டி மாவ' அரைச்சுட்டு வடை சுடறதுக்கு 'ரெடி' பண்ணுவாங்க..வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை எல்லாத்த'யும் அரிவாள்மனையில அரிஞ்சு வடைக்கு தயார் பண்ணுவாங்க..அம்மா பூஜை வேலை'லாம் பாத்துட்டிருப்பாங்க..சுவாமி முன்னாலே ஒரு மனை வச்சு, புதுத்துணிகள்'லாம் எடுத்து, மறக்காம நாலு மூலை'லயும் மஞ்சள் வச்சு, படைக்கறதுக்கு வைப்பாங்க.. கூடவே மாமா வீட்'ல இருந்து வந்த பட்டாசையும் படையலுக்கு வைப்பாங்க.. இதுக்கிடை'ல பாட்டி வடையையும் சொய்யான் உருண்டையையும் சுட்டு எடுத்திருப்பாங்க.. தலைவாழை எலை'ல சூடான வடை, இட்லி, சொய்யான் எல்லாம் வச்சு சுவாமிக்குப் படைப்பாங்க.. எங்களுக்கு புது 'டிரெஸ்ஸை' எப்படா கொடுப்பாங்க'ன்னு காத்துட்டிருப்போம்.. அதை உடுத்திட்டு.. காலை'ல அஞ்சு ஆறு மணிக்குள்ள அக்கம் பக்கத்துக்குப் போய் இனிப்பெல்லாம் கொடுத்துட்டு வருவோம்.. அவங்களும் கொடுக்க வீட்டுக்கு வருவாங்க.." இந்த நடுநிசி ஃபோன் வாழ்த்து, பிரான்சும் ஜெர்மனியும் சந்திக்கும் இடத்தருகே ஸ்திராஸ்பூரில் வாழ்ந்துகொண்டிருக்கும் என் மைத்துனியிடமிருந்து வந்து, மேலே கண்ட நினைவலைகளைத் துணைவியாரிடம் உசுப்பிவிட்டது.. அந்தக் காலத்தில் இது போல 'ஹேப்பி தீபாவளி' 'சுலோகன்'கள் கூவப்பட்டதில்லை. ஆனால் தீபாவளி மகிழ்ச்சியாக இருந்தது.. அன்னிய மண்ணில் அவர்கள் தீபாவளியை இயல்பாகக் கொண்டாடும்பொழுது சொந்த மண்ணில் வாழும் நாம் அப்படிக் கொண்டாட முடியவில்லை என்று துணைவியார் வருத்தப்பட்டார். இதில் தொலைக்காட்சியின் நாராசக் குரல் வேறு தொல்லைப்படுத்துவதில் முன்னணியில் நிற்கிறது. தொடர்பில்லாதவர்கள் எல்லாம் 'ஹாய்!' என்று ஆரம்பித்து இடுப்பை இலேசாக ஆட்டிக்கொண்டும் 'மூஞ்சி'யை அஷ்டகோணல் ஆக்கிக்கொண்டும் வாய் வெந்துபோன உச்சரிப்பில் "பட்டும படாமலே..தொட்டும் தொடாமலே.." 'ஸ்லாங்க்' கலந்த ஆங்கிலம் விரவிய சொற்களைப் போட்டு உளற, வெடித்து முடித்த பிள்ளைகளும் தாய்மார்களுமாக, கூடமெல்லாம் நிரம்ப, தொ.கா. பெட்டியின்முன் குழுமி 'அதுகளை'ப் பார்த்துக் கொண்டும், 'அதுக'ளின் விநோதமான குரல்நசிவையும் 'கூழ்கூழ்' உச்சரிப்பையும் இரசித்துக் கொண்டும், மற்றவர்கள்மேல் செலுத்தவேண்டிய கவனம் இழந்து பொய்யுலகம் ஒன்றில் மூழ்கிப் போவார்கள். இன்னொரு வீட்டில் இன்னொரு பக்கம். 'டீப்பா'யின்மேல் 'விடுதலை' நாளேடு விரிந்து கிடக்கும். முகப்பில் 'அசுரன் மலர்' - 'அசுரன் சிறப்பிதழ்' என்ற வாசகம் பெரிய எழுத்துகளில் தென்படும். "தீபாவளி என்னும் ஆரியப் பண்பட்டுப் படையெடுப்பைத் தோலுரிக்கும் வகையில்..." என்று தொடங்கி அந்த வீட்டுக்கு வெளியிலும் அக்கம் பக்கத்திலும் நிகழ்பவற்றுக்குச் சம்பந்தமே இல்லாமல் சொற்றொடர்கள் ஓடும்... புது தில்லி போன்ற இடங்களில் 'குண்டுகள்' வெடித்த பாதிப்பில் உயிர், உடைமைகள், வியாபாரம் இழந்தவர்களின் வீடுகளில் சோகம் ததும்பும். அது கொஞ்சமும் உறைக்காமல் 'மதம்' பிடித்தவர்கள் பலவித ஆட்டம் போடுவார்கள். ஆண்டுக்காண்டு தீபாவளி வரும்; தடிமனான, வண்ணங்கள் பல குழைந்த தீபாவளி மலர்கள் வரும்; 'அசுரன் சிறப்பிதழ்'களும் ஆங்காங்கு தென்படும். கொண்டாடாதவர்கள், சொந்தங்களிடமிருந்து வாழுமிடத்திலேயே அன்னியப்படுத்தப்பட்டு 'இருப்பார்'கள்...அவர்களுக்கும் இனிப்பும் பலகாரங்களும் கொடுக்கப்படும். அவர்களும் தின்று வைப்பார்கள். சிந்தனை மறந்து தூக்கம் வரும். ஆழ்ந்த உறக்கத்தில் தமிழர்கள் சிரிப்பார்கள்.