20.11.05

கவிஞர் வேந்தர்வேந்தன் - ஆரவாரமற்ற புரட்சிப் பாவலர்

1967-1969 ஆண்டுகள் காலகட்டத்தில் நாங்கள் இருவரும் ஒன்றாய் முதுகலைத் தமிழ் பயின்றோம் - கோவை பூ.சா.கோ. கலைக் கல்லூரியில். டாக்டர் தா.ஏ.ஞானமூர்த்தி அவர்கள் எங்கள் துறைத்தலைவர். நண்பர் கா. கோ. வேங்கடராமன், இளம் அறிவியல் கணிதம் பயின்றுவந்தவர். நான் இளங்கலை அரசியல் பயின்றுவந்தவன். கா.கோ.வே., மரபுத் தமிழில் பயிற்சியும் ஆர்வமும் கொண்டவர். நானோ அதே ஊரில் என் மாமா வீட்டிற்கு எதிரே கூடிய 'வானம்பாடி' இயக்கத்தால் ஈர்க்கப்பெற்றவன். கோவை தேவாங்கர்ப்பேட்டை பூமார்க்கெட் பின்னாலிருந்த வி.சி.எஸ். காலனியில் கவிஞர் புவியரசு அவர்களிருந்த வாடகை வீட்டில் அவ்வியக்கத்தவர் அவ்வப்பொழுது கூடுவர். ஓரம் நின்று கவனிப்பேன் நான். முப்பத்தாறு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இப்பொழுது நண்பர் வேந்தர்வேந்தன், நாமக்கல் மாவட்டம் - பரமத்தி வேலூரில் உள்ள பொத்தனூரில். தேவமைந்தன் ஆன நான், புதுச்சேரியில். வெவ்வேறு பின்னணிகளில் இருவரும். 1998 ஆம் ஆண்டு முனைவர்ப் பட்டம் பெற்ற நண்பர், மெய்யான ஆய்வாளர். இவர்தம் 'தொல்காப்பியத் தமிழ்,' ஆய்வுக்கோர் எடுத்துக்காட்டு. 'தமிழ் இலக்கிய வரலாறு' என்ற அண்மைய நூலை மிகவும் புதுமையான முடிபுகள் கொண்டிருக்கும் தனித்தன்மையான தமிழ் இலக்கிய வரலாற்று நூல் என்று தமிழம். நெட் பாராட்டியிருந்தது. அதைப் பார்த்தபின்தான், நான் நண்பரோடு தொடர்பு கொண்டு, நெடுங்கால இடைவெளியை நிறைவு செய்து விட்டேன். ஓ! காலம் எவ்வளவு வினோதமானது? 'கந்தவனக் கலம்பகம்' இயற்றியமைக்காக, இவரை இலங்கை யாழ்ப்பாணத்தில், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்கள் தலைமையில் பாராட்டுவிழா நடத்திச் சிறப்பித்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். என்ன பாராட்டானாலும் எவ்வளவு புகழ்மாலை சூட்டினாலும் தலைக்கனம் கிஞ்சிற்றும் கொள்ளாமல் கள்ளமில்லாத புன்னகையை வெளிப்படுத்துவதில் நண்பர் உண்மையானவர். மரபிலக்கணப் புலமையும், சங்க இலக்கிய - காப்பிய இலக்கிய அறிவும் மிக்கவர். இக்காலத்தில் மலர்ந்துள்ள நடையியல், முருகியல் ஆகிய துறைகளிலும் மிகுந்த நாட்டம் கொண்டவர். இவர்தம் 'காப்பிய நடையியல்,' 'சிந்தாமணி யாப்பு,' 'சிந்தாமணியின் அகவடிவமும் அமைப்பு வடிவமும்,' இலக்கணக் குறிப்பும் பொதுக்கட்டுரையும்,' கந்தவனக் கலம்பகம்,' 'ஒளிக்கீற்று' [குறுங்காப்பியம்], 'தொல்காப்பியத் தமிழ்,' தமிழ் இலக்கிய வரலாறு,' முதலிய அருமையான நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. 'ஒளிக்கீற்று' [1999] என்ற இவர்தம் குறுங்காவியத்தில் சற்றொப்ப நாற்பது சந்தவகைகளில் விருத்தங்கள் இயன்றுள்ளன. எங்கள் மறைந்த நண்பர், தமிழ்நாட்டின் தமிழ் ஆட்சிமொழி - தமிழ்ப் பண்பாடு - இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சராக விளங்கிய முனைவர் மு. தமிழ்க்குடிமகன் இக்காப்பியம் பற்றி எழுதியுள்ளதைக் காண்போம். ''ஒருவர் மேல் ஒருவர் மேலாண்மை செலுத்துவதைத் தடுத்துக் குமுகாய ஏற்றத்தாழ்வுகளைப் போக்கி, எல்லா நிலைகளிலும் சமன்மை என்னும் ஒப்புரவை உருவாக்கிட அமைதிவழிப் புரட்சி ஒன்றே சிறந்த வழி என்பதைக் கவிஞர் இந்நூலின்மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். மொழி இன வேட்கை, பொதுமை நாட்டம், பெண்ணியப் பார்வை ஆகியவற்றை அமைதிப் புரட்சி என்ற புதிய கருத்தாக்கத்தோடு உறழ வைப்பதே எனது நோக்கம் என்று கூறும் வேந்தர்வேந்தன் தன் நோக்கத்தில் நிறைவான வெற்றியைப் பெற்றுள்ளார் என்பதை இந்நூலைப் படிப்பதின் வாயிலாக அறிய முடிகிறது. தனித்தமிழ் உணர்வின்வழி நின்று பணியாற்றும் வேந்தர்வேந்தனுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'' நம் வாழ்த்துகளும் அவ்வாறே!

No comments: