27.10.06

நட்புக்குரிய மலர்களுக்கு ஒரு மடல் - தேவமைந்தன்

நட்புக்குரியீர்! நீங்கள் - எதன் வெளிப்பாடுகள்? எதன் நோக்கங்கள்? ஏதோ தோன்றி ஏனோ மறையும் இருத்தல்களும் போதல்களுமா உங்கள் வாழ்க்கை? பொருளற்றது என்று புடவியிலெதுவும் எங்கும் இல்லவே இல்லை. பொருளற்றது! அது அப்படித்தான்!! என்று சொல்லி விடுதல் மிகவும் எளிது. ஆனால் உங்களின் இருத்தல் எவரையும் உறுத்தாதது. எங்களின் இருத்தலில் நீங்கள் உடன் உறைபவர்கள். ஆகவே நீங்கள் வாழ்க, ஒருபகல், ஓரிரவுப் பொழுதேனும்…… (1993.போன்சாய் மனிதர்கள். தேவமைந்தன்)

புன்னகை பூக்கும் புல்வெளி மலர்கள் - தேவமைந்தன்

தரையினில் பரந்த பசுமை வானம். பசுமை வானில் புதியவிண் மீன்கள், பலநிறம் பூக்கும் புல்வெளி மலர்கள். நீங்கள் நடக்கும் பொழுது மிதிக்கும் பூக்கள். நடக்கும் பொழுது மிதிக்காமல், சற்று ஒதுங்கி நின்றே உற்றுப் பாருங்கள். புன்னகை பூக்கும் புல்வெளி மலர்கள்…… (1980.புல்வெளி.தேவமைந்தன்)

காணவில்லை, "வள்ளல்கள்..." - தேவமைந்தன்

அன்றெல்லாம் வழங்கினராம் அளவில்லாத கொடைகள்பல. எதைக்கேட்ட போதினிலும் அதைஅதை அந்தஅந்த முறைப்படி வாரிவாரி வழங்கிடவே வள்ளல்கள் வாழ்ந்தனராம். வாய்திறந்து கேட்காத தேருக்கும் மயிலுக்கும் நுண்ணுணர்வால் ஆராய்ந்து கொடைகள்தாம் அளித்தனராம். இன்றைக்கு- நாணக்கொடை இறக்குமதி நடிகையர்க்கும் நேர்மைக்கொடை கட்சிகளின் தலைவர்கட்கும் அறிவுக்கொடை ‘டவுன்லோடு’ எழுத்தாளர்க்கும் நினைவுக்கொடை வாக்காளும் மக்களுக்கும் உண்மைக்கொடை தொலைக்காட்சி நடத்துநர்க்கும் ‘லாஜிக்-கொடை,’ தொடர்களை இயக்குநர்க்கும் - தன் மானக்கொடை மனிதர்கள் அனைவருக்கும் கைசிவக்க வழங்குதற்கு வள்ளல் இல்லையே. ஈகைகளைச் செய்வதற்கு மனமும் தொல்லையே…

அழைக்காவிட்டால்தான் என்ன? -தேவமைந்தன்

ஒரு பெரிய மனிதரிடமிருந்து அழைப்பு வந்தது; இருந்தேன். ** அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வரவில்லை; நினைவினில் என்னைக் கொண்டவர்கள். அழைப்பனுப்பத்தான் மறந்தார்கள்... அதனால் என்ன?.. போனேன். தமிழ்வினைக்கு அழைப்பு என்பது முக்கியம் அல்ல என்பதால்......

மறதிப் பெருவெளி - தேவமைந்தன்

நினைந்து நடந்து முடிந்த நினைவுகள் வனைந்து மிடைந்து விளைந்த முடிவுகள் முகவரி இல்லா மொட்டை மடல்கள் மயங்கிப் பிறரை மிதிக்கும் செயல்கள் அகந்தை மிகுந்தே பிடிக்கும் அடவுகள் பிறரைப் பொறாமல் கிளப்பும் பொய்கள் வஞ்சக வாழ்த்தொடு போலிமைப் புனைவுகள் அனைத்தும் சிதைந்தே அடையாளம் இன்றி மறைந்துட் கலந்தே காணாது போகும் காலம் கடந்த பெருவெளி ஞாலம் மறந்த மறதி வெளியே…

கண்ணே!... இதன் உள்ளுறை என்ன?

கண்ணே! என்னூர் மலையின் பக்கம் ஒருநாள் நான் கண்ட காட்சி இது. ஒதுக்குப் புறமானதோர் ஒற்றைப்பெரும் பாறை. போயும் போயும் அதன்மேல் சின்னஞ் சிறிய சிட்டுக் குருவியொன்று மோதி மோதிப் பார்த்துச் சலித்தது. எப்படிச் சொல்வது? எவ்வாறு தெரிவிப்பது? கற்பாறைமேல் மோதாதே என்று.. சலித்துப் போனேன்.. புரிந்துகொண்டு பறந்துபோய் விடுமென நம்பி இறங்கி வீடு திரும்பினேன். நெஞ்சுக்குள், மூளைக்குள் குடைச்சல். அறியும் ஆர்வம். ஓரிரு நாட்கள் கடந்தன வறிதே. மீண்டும் மலையேறினேன். ஒற்றைப்பெரும் பாறை ஓரம் திரும்பினேன். திடுக்கிட்டேன். நைந்துபோய் சின்னஞ்சிறிய அதனுடல் ஈரமூறிய இறகுப் பந்தாய் வன்பாறைதன் காலடியில்.

எலிப்பொறி - தேவமைந்தன்

வடைக்காசைப் பட்டு மாட்டிக் கொண்டாயிற்று. உள்ளே ஓடிஓடி கதவொடு மோதி கம்பியை ஆட்டி ஓய்ந்துபோய்ச் சுருண்டு போனதும் தப்பில்லை. எப்படியும் கோணி சுருக்கித்தான் கதவைத் திறக்கப் போகிறார்கள். அதில்தான் இன்னும் ஆபத்துள்ளது. அனுபவசாலிகள், ஓட்டைக் கோணியைத் தவிர்த்து விடுவார்கள். கட்டையோடு சுற்றிலும் நெஞ்சக் குறுகுறுப்போடு முரட்டுப் பயல்களும் நிற்கக்கூடும். ஆகவே, மிச்சமிருக்கும் சுவையுள்ள வடையையும் தின்று முடி. ஒருகை பார்ப்போம். அடுத்தவர் எல்லைக்குள் எதை நாடியும் மறந்தும் புகாதிருக்கத் திட்டமிடு மனமே, ஒருவேளை நாம் வெற்றிபெற்று விட்டால்.

16.10.06

முப்பட்டைச் சுரண்டலும் ஆணியமும்

முப்பட்டைச் சுரண்டலும் ஆணியமும் - தேவமைந்தன் வீட்டிலும் வைகறைக்கு முன்பே வேலை தொடக்கி, கணவனெனும் மேலதிகாரிக்கு வேண்டிய தட்டை வாகாக வைத்து, அதன்மேல் தேவையறிந்த சிற்றுண்டியை முகம்பார்த்து வைத்து, சூடாய்க் குடிநீரும் சுக்குநீரும் காபியும் கொண்டுவந்து வைத்து, ‘மூடு’அறிந்து “ஏங்க போய் வரவா?” - விலுக்விலுக்கென்று தோளில் புடைத்திருக்கும் பைதொங்க, அதிலொரு அழுக்கான ‘வாட்டர் பாட்டில்’ மூடி தலைநீட்ட, அவசரப் பவுடர் பூச்சு மயில் கழுத்து வரிகள்போட, தாறுமாறாய் ‘டூவீலர்’ கிளப்பி, ‘அவனை விடவும் அதிக சம்பளம்’ போவது, அலுவலக மேலதிகாரியிடமும் திட்டுவாங்கவா.. இரட்டைச் சுரண்டலும் போய், முப்பட்டைச் சுரண்டல் - இப்பொழுது எண்ணற்ற பெண்களுக்கு. காரணம், அவர்கள் வாங்கத் தயாராகவுள்ள போலிச் சம்பளத்தை ஆண்களுக்குத் தரமுடியுமா? சொல்லிவைத்தாற்போல் எப்படி சகோதரிகள் பலரும் ஆகவும் குறைந்த சம்பளத்துக்கு அதிகஅதிகமாய் வேலைவாங்கும் விளக்குகளுக்கு விட்டில்கள் ஆகிறார்கள்? இதில்வேறு “போன் எதுவும் பேசாதே! லஞ்ச் டயமானாலும்..” ‘வெரி ஸ்ட்ரிக்ட் இன்ஸ்டிடூஷன் சார்!” - இளித்துக் கொண்டு சொல்கிறார்கள், அதிக சம்பளம் குறைந்த வேலைக்கு வாங்கும் ‘புண்ணியங்’கள். பெண்ணியம், அரசாங்கம் போல். சாதனைப் பெண்கள் கலர்கலராய் வார இதழ்களில். ஆமாம்..திருவள்ளுவரே! “இருவேறு உலகத்து இயற்கை”.. மெத்தவும் சரிதான். கோலெடுக்காமல் மிரட்டினார் என் பெண்ணியத் தோழி... “பெண்களைச் சுரண்டுபவர்கள் ஆண்கள்தாம்; பெண்களைப் பெண்களே சுரண்டுவது போலத் தான்றவும் தோன்றும்தான்; அதற்குப் பின்னாலும் இருப்பது ஆணாதிக்கமே... “அம்மா சொன்னால் இவன் ஏன் வாங்குகிறான்? அம்மா ஊற்றினால் இவன் ஏன் கொளுத்துகிறான்?” -ஆமாம் என்று சொன்னால், அதுவும் ஆணாதிக்கத்தின் பாசாங்கேதான். -இல்லை என்று மறுத்தாலோ அது ஆணாதிக்க மூர்க்கம்.... “அது சரி கம்ராது!* இந்தக் குறைஞ்ச சம்பளத்துக்கு இத்தனைபேர் போறாங்களே!..” “ஏம் போறாளுவ.. ஆம்பள வெரட்டாம வெரட்டறான்..” *** கம்ராது = ‘தோழா’ என்பதற்கான பிரஞ்சுத் தமிழ்ச்சொல். தோழமை மிக்க ஆண்களும் பெண்களும் பிரான்சிலும் புதுச்சேரியிலும் இவ்வாறு பேசிக்கொள்வதுண்டு.

இணைய இதழா, அச்சிதழா? எது நீடிக்கும்?

இணைய இதழா, அச்சிதழா? எது நீடிக்கும்? - பேராசிரியர் அ.பசுபதி(தேவமைந்தன்) ஓர் இதழ் மிகுந்த விற்பனையுள்ளதா, குறைந்த விற்பனை உள்ளதா, அப்படியாயின் அது பேரிதழா சிற்றிதழா என்ற வினா மறைந்துபோய், இணைய இதழா அச்சிதழா இன்றைய வளர்ச்சியில் எது நீடிக்கும் என்ற வினா உலகம் முழுதும் எழுந்துள்ளது. இணைய இதழ், அச்சிதழ் - இவற்றுள் எது சிறந்தது? என்ற வினாவைத் திண்ணை இணைய இதழில் (ஆகஸ்ட் 10, 2006;வியாழன்) எழுப்பியுள்ளார் ஜெர்மனியில் வாழும் சந்திரவதனா செல்வகுமாரன். இணைய இதழ்களின் வரவால் இன்றைய ஜெர்மனிய இதழ்கள் ஆட்டம் கண்டுள்ளன என்கிறார் அவர். இந்த நிலையில் நமது இதழ்கள் நாளேடுகளின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்று ஆர்வமுறுகிறார். ஈழத் தமிழர்கள், பன்னாட்டுத் தொடர்பும் இடையூடாட்டங்களும்[interactions] கொண்டவர்கள் என்பதால் அவர் எழுப்பியுள்ள வினா, அவர்களைப் பொறுத்தவரை பொருள் மிகுந்ததுதான். கரணியம், அவர் விதந்தோதியுள்ள 'பூவரசு' என்ற இதழ், தன் பதினேழாவது ஆண்டில் தொடர்ந்து அச்சுப் பதிப்பாக வருவதா அல்லது இணைய இதழாகி விடுவதா என்ற இக்கட்டுக்கு உள்ளாகி இருக்கிறது. புலத்தில் படைப்பாளரும் இதழ் வெளியீட்டாளரும் மிகுந்த பணநெருக்கடிக்கு ஆளாகிறார்கள். உள்ளூரில் வெளியாகும் பேரிதழ்கள்தாம் படைப்புகளுக்குப் பணம் தர முடியும். வேறுவகையில் சொன்னால் புலத்தில் வெளியாகும் பரவலான வாசிப்புடைய இதழின் வெளியீட்டாளருக்கு உள்ள பொருளியல் நிலையும் உள்ளூரில் நடத்தப்பெறும் சிற்றிதழ் வெளியீட்டாளருக்குள்ள பொருளியல் நிலையும் ஒன்றேதான். இணைய இதழ் நடத்துவோர் ஆண்டுக்குச் செலவிடும் தொகை, பரவலான சிற்றிதழொன்றுக்கு மாதமொன்றுக்குத்தான் சரிவரும். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இப்பொழுது ஒரு காசும் செலவு செய்யாமல் இணைய இதழை நடத்தும் வாய்ப்பை இணைய நிறுவனங்கள் தர முன்வந்திருப்பதுதான். பணத் தட்டுப்பாட்டுடன் இணைய இதழை நடத்தி மாய்வதைவிட, வருமானத்துக்குரிய பணியொன்றைச் செய்துகொண்டே மனநிறைவுடன் தொடர்ந்து தன்னிதழை, மேலதிகமான வாசகர்ப் பரப்புடன் நடத்தக்கூடிய வாய்ப்பு வருகிறதெனில் விடுவாரா, அவ்வாறு இக்கட்டில் உள்ள ஓர் இதழாசிரியர்? 'பூவரசு' இதழாசிரியரைக் குறித்து நான் இவ்வாறு சொல்லவில்லை. ஏனெனில், அவர் அதை வாசகரிடம் விட்டிருக்கிறார். அவர்கள் எவ்வாறேனும் அவ்விதழைத் தொடர்ந்து நடத்தவே வேண்டும் என்று கருத்துரைத்திருக்கின்றனர். பழகிவிட்ட கண்களுக்கு, அச்சுப்பதிப்பாக வரும் இதழ் தரும் மனநிறைவு இணைய இதழால் வராது. இது உண்மையே என்றாலும், தொடர்புடையதே. பொதுவாக இன்றைய தலைமுறையில் உள்ள வளரிளம் பருவத்தினர் இணைய இதழை வாசிக்கவே விரும்புகின்றனர். நான் வழக்கமாக இணையமுலவும் நடுவத்தில், அதை நடத்துபவர் ஒழுங்குக்கு முதன்மை கொடுப்பவரென்பதால், ஆக்கவழியில் இணையமுலவும் வளரிளம்பருவத்தினர் பலர் வந்து செல்கின்றனர். அவர்களுள் பல்கலை மாணவர் ஒருவரிடம் இது குறித்துக் கேட்டபொழுது, தமிழ்நாட்டில் விற்பனையில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் வார இதழ் ஒன்றை, நாள்தோறும் பகுதி பகுதியாக அவர் படிக்கிறார் என்றும் ஏணைய இணையம் உலவும் பொழுதைத் தன் ஆய்வுப் பணித்திட்டம் உருவாக்கச் செலவிடுகிறார் என்றும் அறிந்து கொண்டேன். அந்த வார இதழ் விலை பத்துரூபாவுக்கும் குறைவுதானே, ஒரு முறை வாங்கிக் கொண்டால் போதுமே, கையிலோ பையிலோ வைத்துக் கொண்டு இதேபோல் வாரம் முழுதும் வாசிக்கலாமே என்று கேட்டேன். அவர் சொன்ன மறுமொழி என்னைப் பெரிதும் ஆச்சரியப்பட வைத்தது. "ஒரு மணிநேரத்துக்கு இங்கு இணையம் உலவப் பதினைந்து ரூபா. இதே சாலையில் மேல்நிலைப் பள்ளியருகில் பன்னிரண்டு ரூபாதான். சூழ்நிலை, அப்பா வழங்கும் கைப்பணம் ஆகியவற்றைப் பொறுத்து அங்கும் இங்கும் இணையமுலவுவேன். பணித்திட்டத்தைத் தரவுகளிலிருந்து தட்டெழுதும்பொழுது சலிப்பு வரும். அப்பொழுது, வந்தவுடன் முகவரியிட்டு வரவழைத்து சுருக்கி(minimise)வைக்கும் அவ்விதழை விரிவாக்கி வாசித்துவிட்டு மீண்டும் பணித்திட்டத்தில் இறங்குவேன். இதனால் எனக்கு வேலையும் நடக்கிறது. நான் விரும்பும் இதழை இலவசமாகவே வாசிக்கவும் முடிகிறது. அதை வாங்கி, அடுத்தவர் கேட்டு, அவருக்குக் கொடுத்து, திரும்பப் பெற துன்பப்படவும் வேண்டியதில்லை. தூசியுமில்லை. பழையதாள் கடைக்குச் சுமந்து சென்று தொல்லைப்பட வேண்டியதுமில்லை" என்றார் அவர். என் அடுத்த வினாவையும் கேட்டேன். "நீங்கள் வாசிக்கும் இதழ் முழுவதையும் இலவசமாகத் தருவதில்லையே! கதை, கட்டுரைகளின் முதற்பகுதியைத்தானே தருகிறார்கள்..'மேலும் வாசிக்க' என்று கேட்டால், நம் மின்னஞ்சல் முகவரி கேட்கிறார்கள். தொகை அனுப்பச் சொல்கிறார்களே..." என்றேன். அவர் மர்மமான புன்னகையொன்றை உதிர்த்தார். "குறிப்பிட்ட சாவி மட்டும்தான் பூட்டைத் திறக்குமா?" - என்று விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளத்தின் பாணியில் வினாவொன்றை உதிர்த்துவிட்டு, தன் ‘டூவீல’ரைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டார். "இணையங்களின் வரவுக்குப் பின், குறிப்பாக வலைப்பதிவுகளின் வரவுக்குப்பின் [அச்சுப்] பதிப்புகளோடான ஊடாடல் வாசகர்களிடையே குறைந்துவிட்டதுதான் அப்பட்டமான உண்மை" என்று சொல்லும் சந்திரவதனா, "எப்போதுமே [அச்சுப்] பதிப்பாக வரும் ஒன்றுக்கு இருக்கும் தனித்தன்மை இணைய இதழ்களுக்கு இல்லை.." என்ற தெளிவான கருத்துடையவர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அதனால்தான், நானும், எனக்கென்று மூன்று இணைய வலைப்பதிவுகள் உள்ளபொழுதும் அவற்றை விடாது இடுகைகளிட்டு நிகழ்த்துவதுடன், தொடர்ந்து அச்சிதழ்களுடன் ஊடாடியும் படைப்புகள் தந்தும் வருகிறேன். இளந்தலைமுறையினரில் விதிவிலக்கானவர்களைத் தவிர எல்லோரும் வகைவகையான ‘மொபைல்’களுக்குச் செலவிடுகிறார்கள்; ‘ஸ்ப்ரே’க்களுக்குச் செலவிடுகிறார்கள்; திரைப்படங்களுக்குச் செலவிடுகிறார்கள்.[திரைப்படம் ஒன்றுக்குச் சீட்டு, நொறுக்குத் தீனி, ‘சாஃப்ட் டிரிங்ஸ்’ ஆகியவற்றுக்கு ஆகக்குறைவாக ஐம்பது ரூபாவாவது தனக்குச் செலவாவதாக தொ.கா.'வில் ஓரிளைஞர் குறிப்பிட்டார். தான் நண்பர்களுக்குச் செலவிடுவதோ, கெட்ட பழக்கங்களுக்குச் செலவிடுவதோ இல்லை என்றார். தனக்குப் பிடித்த படத்தை இவ்வாறு குறைந்தது ஏழு,எட்டு முறையாவது பார்த்துவிடுவாராம். "ஒரு வாரத்துக்கு எத்தனைப் படம் பார்ப்பீர்கள்?" என்ற கேள்விக்கு, "எப்படியும் ஏழுக்குக் குறையாது!" என்றார். வாரத்துக்கு ஏழு நாட்கள்தாமே!...] ஆனால் புத்தகத்தையோ, இதழையோ காசு கொடுத்து வாங்க விரும்புவதில்லை. தரமான இதழ் என்றால் சொல்ல வேண்டுவதே இல்லை. பணிக்குச் செல்லும் பெண்டிரும், இல்லத்தரசியருள் பலரும் வாடகை நூலகங்களையே பெரிதும் பயன்படுத்துகின்றனர். எட்டு ரூபா இதழை இரண்டு ரூபா வாடகைக்குத் தரும் அத்தகைய நூலகங்களுக்குப் போட்டியாக, ஒரு ரூபாவுக்கே தரும் ‘மொபைல்’ வாடகை நூலகங்களும் உள்ளன. ‘டி.வி.எஸ். டூவீலர்’ அதற்கு வசதியாக உள்ளதாம். இணையம் உலவுவோரில் தொண்ணூறு சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள், இதழ்களை விலைகொடுத்து வாங்கி வாசிக்கும் மனம் இல்லாதவர்கள் என்பதே உண்மை. எதிர்வரும் 2010ஆம் ஆண்டளவில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள - ஐம்பது அகவைக்கு மேற்பட்டவர்களே இதழ்களை வாசிப்பார்கள் என்கிறது ஆராய்ச்சி. இதழ்கள் சிலவற்றுக்குப் படைப்புகளை அனுப்புவோர், தம் படைப்பு அதில் வெளிவந்துள்ளதா என்பதை அறிய, அவற்றை விலை கொடுத்து வாங்கிப் பார்த்தே அறிந்தாக வேண்டும் என்று கேள்விப்படுகிறேன். அதே பொழுது, மூன்று உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டால், சேர்த்து விடுபவருக்கு இலவசமாக இதழைத் தொடர்ந்து அனுப்பும் இதழ்களும் உள்ளன. படைப்பாளருக்கும் புரவலருக்கும் தனித்தனியே இதழ்களைப் பொறுப்பாக அனுப்பித் தரும் இதழ்கள் உள்ளன. இணைய இதழ் எனில் இந்தச் சிக்கல் எதுவுமில்லை. காலாண்டிதழ் ஒன்று. அதன் ஐந்தாவது இதழை வாசித்து முடித்துவிட்ட பின்பு, அதன் முன்னிதழ்கள் பாதுகாப்பாக வைக்கப்பெற்றுள்ள[ஓதமில்லாமல் வறண்ட]இடத்துக்குச் சென்று பார்த்தேன். முதலாம் இதழும் இரண்டாம் இதழும் பழுப்பாகி அச்செழுத்துகள் மங்கித் தெரிந்தன. இணைய இதழ் அவ்வாறில்லை. மின்னூலும் அப்படியே. இப்பொழுது கூகிள் தேடுதளத்தில் 'மரபுத் தொடர்கள்' என்று தட்டெழுதித் தேடினால் இலவசமாகக் கிடைக்கும் சோலைக்கிளி அவர்களின் 'காகம் கலைத்த கனவு' என்ற முழு மின்னூல், மதுரை மின் நகலகத் திட்டத்தாரால் உருவாக்கப் பெற்றுள்ளது. அதன் தலைவர், சுவிட்சர்லாந்தில் வாழும் டாக்டர் கல்யாணசுந்தரம் அவர்கள். ஜெர்மனியில் வாழும் திரு கண்ணன் அவர்கள், அத்திட்டத்தின் செயலாக்க ஆசிரியர். வடிவான நூல். என் மேசையின் சிறிய இழுவியுள் அது போன்ற இருநூறு நூல்களை வைத்துக் கொள்ள முடியும். இணைய இதழ்கள் பலவற்றை, "எதைக் கொண்டு போனோம்! அதைக் கொண்டு வருவதற்கு!" என்ற எதிர்மறை முறையில், உலவுபுலங்களில் வாசித்துவிட்டு வந்து விடுகிறேன். 'புதுச்சேரி' மின்னிதழை வாசிக்கும்பொழுதே கூடல், வார்ப்பு, திசைகள், தமிழோவியம், மரத்தடி, முத்தமிழ் மன்றம், திருக்குறள், எழில்நிலா, தமிழம், அன்புடன் புகாரி, அம்பலம், ஆறாம் திணை, கதம்பம், தமிழமுதம், தமிழ்மண், பதிவுகள், நிலாச்சாரல், நம் நாடி, சிஃபி, இ-சங்கமம், தமிழன் எக்ஸ்பிரஸ், கல்கி, மங்கையர் மலர், விகடன், குமுதம், திண்ணை, கீற்று ஆகிய இணைய இதழ்களையும் சுட்டிசொடுக்கி வாசித்துவிட முடிகிறது. இவற்றுள் கூடல், முத்தமிழ் மன்றம், திருக்குறள், தமிழம், தமிழமுதம், நிலாச்சாரல், சிஃபி தமிழ் ஆகியவை இணைய தளங்களும் கூட. குமுதம்(=குமுதம் குழும இதழ்களான தீராநதி முதலியவை), விகடன்(+ விகடன் குழும இதழ்களாகிய சுட்டி விகடன் முதலியவை), தமிழன் எக்ஸ்பிரஸ், மங்கையர் மலர், கல்கி ஆகியவை அச்சிதழ்களாகவும் இணைய இதழ்களாகவும் ஒரே நேரம் வெளிவருபவை. ஏன் இவை அச்சிதழ்களாக மட்டும் வெளிவரவில்லை? இவ்வாறு இணைய இதழ்களாகவும் வந்தால்தான் மேலும் பரவலான பன்னாட்டு வாசகர் வட்டத்தைப் பெறமுடியும் என்பதே விடை. இன்னும் மின்னிதழ்களாக வரும் நாளேடுகளும் உள்ளன அல்லவா? தினகரன், தினத்தந்தி, தினமலர் முதலானவையும் அவ்வகையில் குறிப்பிடத் தகுந்தவை. ஆகவே, மேற்குறிப்பிட்ட செய்திகளை வைத்துப் பார்க்கும்பொழுது, இன்றைய நிலையில் தரமானதோர் அச்சிதழாக வரும் ஒன்று, நீடித்து எதிர்காலத்திலும் தொடர்வதோடு நிலையாகவும் இருக்க வேண்டும் என்றால், மின்வெளியில்(Cyber Space)நுழைந்து இணைய இதழாகவும் திகழ வேண்டும் என்பது தெளிவாகிறது. **************************************

முதுமை வயது எல்லோருக்கும் வருமே!

முதுமை வயது எல்லோருக்கும் வருமே! - தேவமைந்தன் மனிதர்களின் இயற்கைக் குணங்களில் வேடிக்கையானது ஒன்று இருக்கிறது. அது என்ன என்றால், தனக்கு ஆகாதது - பிடிக்காதது - சரிவராதது போன்ற எதிர்மறைகள் எல்லாம் பிறர்க்கு மட்டுமே வரும் என்ற நம்பிக்கை. இதைப் போன்ற நம்பிக்கைகளைத்தான் மூடநம்பிக்கை என்று சொல்ல வேண்டும். ஏதோ தான் மட்டுமே இந்த உலகில் கோலோச்சிக்கொண்டிருப்பது போன்ற பிரமையில், அடுத்தவர்களைப் பற்றிய தீயசெய்திகளை நாள்தோறும் ஒலிபரப்பிக் கொண்டிருத்தல் என்பது இதைவிடவும் தேவையில்லாத நடவடிக்கை. இதைத்தான் அருணகிரிநாதர் தம் கந்தரநுபூதியில் 'ஜெகமாயை' என்ற சொல்லால் குறிப்பிட்டார். பொதுவாக நாள்தோறும் பேருந்துகளில் செல்லும்பொழுது, "என்ன, பெரிசு! அக்கடா'ன்னு வீட்டில இருக்கலாம்'ல? எதுக்கு இப்படி வெளிய'ல்லாம் போயி 'லோல்பட்டு லொங்கழியிறே!" என்ற இரக்கத் தொனியில் அமைந்த, ஆனால் இரக்கமே இல்லாத, ஏதோ தான்மட்டும் நிரந்தரமாக இளமை - இனிமை- வலிமை - புதுமைகளுடன் முரட்டுத்தனமான மாநகரப் பேருந்துகளை ஜல்லிக்கட்டில் அடக்கி ஓடவிட்டிருக்கிற 'வஸ்தாதுகள்' மாதிரிப் பேசுகிற இளசுகளின் குரலைக் கேட்டிருக்கலாம். அதைவிடவும் பரிதாபம், அப்படியொரு இளசின் பேச்சுகளைக் கேட்டுவிட்டுத் தன் தோழியிடம் பரிகாசம் பண்ணும் 'காலேஜ் கொண்டாட்ட'த்தின் 'காமெண்ட்' - " ஆமா! இவரே ஒரு 'குவெஸ்ச்சன் மார்க்' மாதிரி இருந்திட்டு, அந்தப் பெரியவரை 'ஒடுக்கு எடுக்கிறத'ப் பாத்தியாடா?[ 'டீ' என்று பேசியது, அந்தக் காலம்] - எதிர்வினை - வினை விதைத்த இளசின் காதுகளில் விழாமல் போவதுதான். முதுமை வயது என்று பத்திரிக்கைகள் சில நிர்ணயித்துள்ள வயது ஐம்பது. முதியோர் பென்ஷன் பெறும் வயது மாநில அரசுகளால் அறுபத்து ஐந்திலிருந்து ஐம்பத்து ஐந்து வரையிலும் குறைக்கப்பட்டு விட்டது. புதுவை மாநிலத்தில் ஏற்கெனவே முதியோர் பென்ஷன் பெறும் வயது அறுபதாகத்தான் இருந்தது. இப்பொழுது புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு அரங்கசாமி அதை மீண்டும் ஐந்து குறைத்து, ஐம்பத்து ஐந்து வயது ஆக்கியுள்ளார். புதுவை அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஓய்வு பெறும் வயது அறுபத்து இரண்டு என்பது தெரிந்ததுதானே.. ஆக. முதுமை முதிர்ந்தபின்னும் ஏழாண்டுகள் பணியில் இருக்கிறார்கள் அவர்கள். திரு.வி.க. அவர்கள் 'முதுமை உளறல்' என்ற நெடுங்கவிதை படைத்திருக்கிறார். அதில் அவர் தன் முதுமை குறித்தும் அந்த நூல் அந்த வயதில் வருவது குறித்தும் சொல்வது, கண்களைக் குளமாக்குகிறது. அறுபத் தாறினில் சிறுபரல் ஆணிப் படலம் கண்ணைப் படர்ந்து மறைத்தது; பழைய வண்ணம் விழிகள் நோக்க எழுதும் பேற்றை இழந்தனன் பாவி! உளத்தெழும் கருத்தை உளறு கின்றனன் உளறலும் நூலாய் வெளிவரு கின்றது; ஒற்றைக் கண்ணிடர் உற்ற வேளையில் 'பரம்பொருள்' நூலைப் பகர்ந்தனன் உரையால்; இரண்டு கண்ணொளி வறண்டஇந் நாளினில் 'இருளில் ஒளி'யைக் குறள்வெண்பாவால் 'இருமையும் ஒருமையும்', 'அருகன் அருகே' 'பொருளும் அருளும் - மார்க்கிஸ் காந்தி'' 'சித்தந் திருந்தல் - செத்துப் பிறத்தல்' என்னும் நூல்கலைப் பன்னினன் அகவலால்; ............. .................. ................. ................. பகலில் பல்பணி மிகமிகச் செய்து நிசியில் எழுத்துப் பசியைத் தீர்ப்பன்; தூக்கத் தேவி தாக்கினள் என்னைக் கடந்தன ஆண்டுகள்; படர்ந்தது படலம்; எனதே குற்றம் எனதே குறையும் இயற்கை ஒறுத்தலைச் செயற்கை என்செயும்? படுக்கையில் கிடந்து விடுக்கும் சொல்லால் ஆகும் நூலில் ஏகும் பிழைகள்; பொறுக்க புலவர் பொறுத்தே அருள்க." [தடிமனான எழுத்துகள், 'முதுமை உளறல்' முதற்பதிப்பில் உள்ளவாறே இங்கும் இடப்பெற்றுள்ளன.] நூல் வெளியான 1951ஆம் ஆண்டில் 'காடரேக்ட்' என்னும் கண்விழிப் புரைநோய், பிரம்மாண்டமானதாக பலரை அச்சுறுத்திக் கொண்டிருந்தது; தவிர, நெடுநேரம் கண்விழிப்பதால்தான் படலம் தோன்றி வளர்கிறது என்ற நம்பிக்கையும் இருந்து வந்திருக்கிறது. இன்றோ நீரிழிவுதான் அதற்கு முக்கிய காரணம் என்று அறிவுறுத்துவதுடன், மிகச் சிறந்த அறுவை மருத்துவமும் தரப்படுகிறது. அதிக நேரம் கண்விழிப்பது அல்லது போதுமான தூக்கம் தூங்காமல், தொடர்ந்து கெடுத்துக் கொள்வதால் மனத்தின் சமநிலை தாக்கப் படுகிறது என்று கண்டறிந்துள்ளார்கள். இன்னொரு வேடிக்கை தெரியுமா? இதை நானும் என் நண்பரும் கண்டறிந்தோம். முறையாக பிஹெச்.டி செய்து முடிப்பவர்களுக்கும் இந்த முதுமைநிலை[senility]யின் தாக்குதல்கள், அவர்கள் சிறிய வயதினராயிருந்தாலும், ஏற்படுகின்றனவாம். அவை: 1. மறதி அதிகமாதல். குறிப்பாக, எதையாவது எங்காவது எப்பொழுதும் தொலைத்துவிட்டு அது பற்றியே சிந்தித்தவாறு இருத்தல். அப்படிச் சிந்தித்துக் கொண்டே இருக்கும்பொழுது மேலும் புதிய பலவற்றை ஒவ்வொன்றாகத் தொலைத்தல். பிறகு, எங்கே எதைத் தொலைத்திருக்க வாய்ப்பில்லையோ அங்கே சென்று அதைத் தேடுவதோடு அங்குள்ளவர்களை விசாரித்து அவர்களையும் ஒருவழி பண்ணுதல். 2. அஞ்சல் பெட்டிக்குள் அஞ்சலைப் போட்டுவிட்டு, வெளியே தப்பி விழுந்திருக்கிறதா என்று, பிறருக்குத் தெரியாமல் நோட்டம் விடுதல். உண்மையிலேயே வயது அதிகமானவர்கள் இதற்கெல்லாம் கவலையே பட மாட்டார்கள். 3. தன்னிடம் பேசுபவர்கள் பேச்சைக் காதிலேயே போட்டுக்கொள்ளாமல், நிறைய அடிக்குறிப்புகள்(footnotes) மற்றும் அதிகமான - அல்லது, ஒவ்வொன்றுக்கும் "இதைப்போலத்தான்.." என்று தொடங்கி அதிகமான ஒப்புநோக்குதல்கள்(references) தருதல். மேலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருத்தல். "பெரிசா சொல்லவந்துடாருடா மாமே!..." என்று எவர் என்னை 'நொட்டை எடுத்தாலும்' பரவாயில்லை.. அவர்களுக்குப் பணிவன்புடன் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விழைகிறேன். எனக்கே மேற்படி வயணங்கள் பொருந்தும் என்பதால்தானே, இப்படி ஆகப் பட்டவற்றை செவ்வனே மொழியவும் வரிசைப்படுத்தவும் ஆச்சுது? **** நன்றி: திண்ணை.காம்

தமிழரின் விடுகதைகள் - நாநவில் இலக்கியம்

தமிழரின் விடுகதைகள் - நாநவில் இலக்கியம் -பேராசிரியர் அ.பசுபதி(தேவமைந்தன்) தமிழ் நாட்டுப்புற மக்களின் நாநவில் இலக்கியமான விடுகதை என்னும் காலங்காலமாய் ஒருவர் மொழிதலிலிருந்து மற்றவர் கேள்விக்கு இடைவிடாது பயணம் செய்து மேலும் மேலும் வளர்ந்து வருகிறது. தேய்வு மறைவு அறியா இந்த நாநவில் மொழிகளைப் பண்ணத்தி என்று அழைத்து மகிழ்ந்தனர் பழந்தமிழ் இலக்கணிகள். விடுகதைகளைப் ‘பிசி’ என்றும் பழமொழிகளை முதுமொழி என்றும் பகுத்து அழைத்தனர். ‘கேள்வியினால் வளரும் அறிவு’ என்பதுபோல், சொல்லியும் கேட்டும் வளரும் விடுகதை எனும் செவிச்செல்வத்தை முழுமையாகத் திரட்ட ஆசைப்பட்டனர் அறிஞர் பலர். அவர்களுள் பூர்ணிமா சகோதரிகள்[1963], ரோஜா முத்தையா[காரைக்குடி 1963,1965], பண்டிதர் ஜே.கே.வேதமுத்து[1971,1975], பி.ஜி.எஸ்.மணியன்[நான்காம் பதிப்பு 1974] ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்கின்ற பலர் தேடித்திரட்டி அனுப்பிய விடுகதைகளை முனைவர் க. காந்தி துணையுடன் சென்னை தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரும் முதன்மைப் பேராசிரியருமான முனைவர் ச.வே. சுப்பிரமணியன் பதிப்பாசிரியராக விளங்கி 1975ஆம் ஆண்டில் வெளியிட்டார். திரட்டிய 3500 விடுகதைகளை அலசி ஆய்ந்து பொருத்தப்பாடுடைய 2504 விடுகதைகளை மட்டும் தெரிவு செய்து பதிப்பித்தார். புதுச்சேரி நாட்டுப்புற விடுகதைகளை முனைவர் அ. கனகராசு ஆராய்ந்து நூலாக 1998ஆம் ஆண்டு வெளியிட்டார். முனைவர் தி. பெரியசாமி கொங்கு நாட்டுப்புற விடுகதைகளை, பாலியல் தன்மை வாய்ந்தவற்றையும் விட்டுவிடாமல், பல தலைப்புகளின்கீழ் பகுத்து நூலாக்கினார். சென்னை ‘தன்னனானே’ பதிப்பகம், 1006 விடுகதைகள் கொண்ட தொகுப்பாக அண்மையில் அதை வெளியிட்டுள்ளது. பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம் 1964 ஆம் ஆண்டில் ‘வாய்மொழி இலக்கியம்’ என்ற தலைப்பில் விடுகதைகளைக் குறித்த ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட்டார். முனைவர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் தம் ‘சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும்’ என்ற நூலிலும், கி.வா.ஜகந்நாதன் ‘கஞ்சியிலும் இன்பம்’ போன்ற நூல்களிலும், முனைவர்கள் வி.மி. ஞானப்பிரகாசம், க.ப.அறவாணன் ஆகியோர் தாம் பதிப்பித்த ‘நாட்டுப்புற இலக்கியப் பார்வைகள்’(சென்னை,1974) நூலிலும், முனைவர் ஆறு. அழகப்பன் தம் ‘நாட்டுப்புறப் பாடல்கள்-திறனாய்வு’(சென்னை,1974) நூலிலும் இவற்றைக் குறித்து ஆராய்ந்தனர். மேலே குறிப்பிட்டாற்போல் புதுச்சேரி விடுகதைகளை முனைவர் அ. கனகராசு அவர்களும், கொங்கு விடுகதைகளை முனைவர் தி. பெரியசாமி அவர்களும் மிகவும் சிறப்பாக ஆராய்ந்துள்ளனர். “விடுகதை என்பது விடுவிக்கவேண்டிய புதிர்” என்று அறிஞர் மு.சண்முகம் பிள்ளை அவர்கள் கூறிவிடுகிறார். எல்லோருக்கும் தெரிந்த ஓர் உண்மையைத் தளர்த்தி வெளிப்படுத்துவது 'நொடிவிடுத்தல்' என்று தென்னார்க்காட்டுச் சிற்றூர்களில் சொல்லப்படுகிறது. "எங்கே நொடி விடு பார்க்கலாம், விடுவித்துக் காட்டுகிறேன்!" என்பார்கள். ஏற்புடைய விடை கூறுவதற்கு 'நொடி விடுவித்தல்' என்று பெயர். குறிப்புகள் காட்டி விடை கேட்பதுவே புதிர் ஆகும். "கலை அழகோடும், மறைப்பு வித்தையோடும் தேடச் சொல்வது விடுகதை; யோசிக்க வைப்பது இதன் நோக்கம். நேசிக்க வைப்பது இதன் நேர்த்தி" என்று முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் இதற்கு விளக்கம் தருகிறார்.(கொங்கு விடுகதைகள், ப.iii) மிகச் சிறந்த விடுகதைகள் சில 1. குழந்தைச் சுமை: தமிழ் வழங்கும் எவ்விடமும் சென்று "வருத்தம் இலாத சுமை - அது என்ன?" என்று கேட்டோமானால் உடனே 'குழந்தைச்சுமை' என்ற விடை வரும்.[த.வி.,2327] கொங்கு நாட்டுப் பக்கம் சென்று, "காத வழி போனாலும், கைகடுக்காச் சுமை என்ன சுமை?" என்று கேட்டால் அந்த விடை கிடைக்கும்.[கொ.வி., 604] புதுச்சேரிச் சிற்றூர்களில் "சும்மா இருக்காது, சொல்லவும் தெரியாது - அது என்ன?" என்று கேட்டால் 'குழந்தை' என்ற விடை வரும்.[பு.மா.நா.வி.கா.ம.வா., 93] இதேபோல் எல்லா விடுகதைகளும் பொதுவான விடை பெறுவதில்லை. கொங்குப் புறத்துக்கே உரிய பேச்சுவழக்கில் அமைந்த நெருஞ்சி முள்ளைச் சுட்டும் ''சின்ன மச்சான் குமிய வச்சான்'' என்பது பிற பகுதிகளில் வழக்கில் இல்லை. 2. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு: புதுச்சேரிச் சிற்றூர்களில் வழங்கப்படும், "பச்சைப் பச்சை டாக்டர் எங்க டாக்டர் குண்டு குண்டு டாக்டர் எங்க டாக்டர் வெள்ள வெள்ள டாக்டர் எங்க டாக்டர் - அது என்ன?"[பு.மா.நா.வி.கா.ம.வா., 287] என்பது வெற்றிலை பாக்கு சுண்ணாம்பைக் குறிப்பதாகும். கொங்கு நாட்டுச் சிற்றூர்களில், "ஆசைக்கு அவளெக் கட்டி அழகுக்கு இவளெக் கட்டி கொஞ்சி விளையாடக் கொழுந்தியாளக் கட்டி"[கொ.வி., ப.96] என்று இது குறிப்பிடப் பெற்றாலும், புகையிலையோடு இம்மூன்றும் போடப்பட்டால் என்ன ஆகும் என்பதற்கு, "ஆசைக்கு அவளெக் கட்டி அழகுக்கு மகளெக் கட்டி கூடிவாழக் கொழுந்தியாளக் கட்டி சேர்ந்து வாழ நங்கையா*ளக் கட்டி நாலு பேருஞ் சேர்ந்து நாசமாப் போயிட்டாங்க - அது என்ன?"[கொ.வி., ப.96] [*நங்கையாள் = அண்ணனுக்கு மனைவி; கணவனின் அக்காள்; மனைவியின் அக்காள்] வேறு ஓர் இணைப்பு விடுகதை உள்ளது. புதுச்சேரிச் சிற்றூர்களுக்கே சொந்தமான விடுகதைகள் சிலவற்றைப் பார்ப்போம். "ஓகோ லேலோ உயர்ந்த லேலோ கண்டந் துண்ட சப்லட் லேலோ - அது என்ன?" என்று கடற்புரச் சிற்றூர்களில் முருங்கைக்காய் சுட்டப்பெறுவதுபோல நல்ல தமிழில் வயற்புறச் சிற்றூர்களில், "உச்சாணிக் கிளையிலே ஊசிகட்டித் தொங்குது - அது என்ன?" என்ற விடைக்குரியதாகிறது. தூக்கணங்குருவிக்கூடு குறித்த விடுகதையான, "சின்ன சிறுக்கியும் சின்ன பையனும் சிரித்துக் கட்டின தாலி சிக்கில்லாமல் அவிழ்த்தவர்க்குச் சென்னப் பட்டினம் பாதி - அது என்ன?" என்பதில் தாலிக்குக் கொடுக்கப்படும் முதன்மை தெரிகிறது. குருவிக்கூட்டைத் தாலியாகக் கருதுமளவு புதுவைச் சிற்றூர்களில் தாலிக்கு முகாமை இருந்திருக்கிறது.[பு.மா.நா.வி.கா.ம.வா., ப.94] புதுச்சேரி சார்ந்த சாதி-தொழில் அமைப்புகள், கல்வி, எண்ணும் எழுத்தும், புழங்கும் ஆங்கிலச் சொற்கள், வண்ணங்கள், வழிபாடுகள், மகளிர் பற்றிய வசைமொழிகள், மனைப்பொருட்கள்-பயன்பொருட்கள், ஆண்-பெண் ஆடை அணிகலன்கள், இசைக்கருவிகள், ஊர்திகள், திருமணம்- மகப்பேறு, முறையற்ற பாலியல் உறவுகள் குறித்த விடுகதைகள் மேலும் எத்தனையோ உள்ளன.

15.10.06

முப்பட்டைச் சுரண்டலும் ஆணியமும்

முப்பட்டைச் சுரண்டலும் ஆணியமும் - தேவமைந்தன் வீட்டிலும் வைகறைக்கு முன்பே வேலை தொடக்கி, கணவனெனும் மேலதிகாரிக்கு வேண்டிய தட்டை வாகாக வைத்து, அதன்மேல் தேவையறிந்த சிற்றுண்டியை முகம்பார்த்து வைத்து, சூடாய்க் குடிநீரும் சுக்குநீரும் காபியும் கொண்டுவந்து வைத்து, ‘மூடு’அறிந்து “ஏங்க போய் வரவா?” - விலுக்விலுக்கென்று தோளில் புடைத்திருக்கும் பைதொங்க, அதிலொரு அழுக்கான ‘வாட்டர் பாட்டில்’ மூடி தலைநீட்ட, அவசரப் பவுடர் பூச்சு மயில் கழுத்து வரிகள்போட, தாறுமாறாய் ‘டூவீலர்’ கிளப்பி, ‘அவனை விடவும் அதிக சம்பளம்’ போவது, அலுவலக மேலதிகாரியிடமும் திட்டுவாங்கவா.. இரட்டைச் சுரண்டலும் போய், முப்பட்டைச் சுரண்டல் - இப்பொழுது எண்ணற்ற பெண்களுக்கு. காரணம், அவர்கள் வாங்கத் தயாராகவுள்ள போலிச் சம்பளத்தை ஆண்களுக்குத் தரமுடியுமா? சொல்லிவைத்தாற்போல் எப்படி சகோதரிகள் பலரும் ஆகவும் குறைந்த சம்பளத்துக்கு அதிகஅதிகமாய் வேலைவாங்கும் விளக்குகளுக்கு விட்டில்கள் ஆகிறார்கள்? இதில்வேறு “போன் எதுவும் பேசாதே! லஞ்ச் டயமானாலும்..” ‘வெரி ஸ்ட்ரிக்ட் இன்ஸ்டிடூஷன் சார்!” - இளித்துக் கொண்டு சொல்கிறார்கள், அதிக சம்பளம் குறைந்த வேலைக்கு வாங்கும் ‘புண்ணியங்’கள். பெண்ணியம், அரசாங்கம் போல். சாதனைப் பெண்கள் கலர்கலராய் வார இதழ்களில். ஆமாம்..திருவள்ளுவரே! “இருவேறு உலகத்து இயற்கை”.. மெத்தவும் சரிதான். கோலெடுக்காமல் மிரட்டினார் என் பெண்ணியத் தோழி... “பெண்களைச் சுரண்டுபவர்கள் ஆண்கள்தாம்; பெண்களைப் பெண்களே சுரண்டுவது போலத் தான்றவும் தோன்றும்தான்; அதற்குப் பின்னாலும் இருப்பது ஆணாதிக்கமே... “அம்மா சொன்னால் இவன் ஏன் வாங்குகிறான்? அம்மா ஊற்றினால் இவன் ஏன் கொளுத்துகிறான்?” -ஆமாம் என்று சொன்னால், அதுவும் ஆணாதிக்கத்தின் பாசாங்கேதான். -இல்லை என்று மறுத்தாலோ அது ஆணாதிக்க மூர்க்கம்.... “அது சரி கம்ராது!* இந்தக் குறைஞ்ச சம்பளத்துக்கு இத்தனைபேர் போறாங்களே!..” “ஏம் போறாளுவ.. ஆம்பள வெரட்டாம வெரட்டறான்..” *** கம்ராது = ‘தோழா’ என்பதற்கான பிரஞ்சுத் தமிழ்ச்சொல். தோழமை மிக்க ஆண்களும் பெண்களும் பிரான்சிலும் புதுச்சேரியிலும் இவ்வாறு பேசிக்கொள்வதுண்டு.

19.9.06

ஒரு மனிதரின் வாழ்க்கை - தேவமைந்தன்

"குன்றின்மேல் இட்ட விளக்காக,பரவலாக, ஊடகங்களாலும் விளம்பரங்களாலும் புகழ்பெற்றவர்களின் வாழ்க்கையை அறிவதோடு மட்டும் திருப்தி அடைவதைவிடவும் மேலானது, ஆடம்பரம் இல்லாமல் அகல் விளக்காக வாழ்ந்து, சாதித்து மறைந்த சான்றோர்களின் வாழ்க்கை வரலாறுகளை அறிதல்..." - டேவிட் லிண்ட்சே(David Lindsey) இலண்டன் மிஷன் ஸ்கூலின் மெட்ரிகுலேஷன் தேர்வில், ஆங்கிலப் பாடத்தில் ஒரே ஒரு மதிப்பெண் குறைந்ததால் தோல்வியுற்ற ஆத்திரம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள சங்கராபுரத்தில் பிறந்து வளர்ந்து கோவையில் படித்த கறுப்பண்ணனை, யாரிடமும் சொல்லாமல் சென்னைக்கு இரயிலேறி ஓடி, அங்கே ஹார்பரில் நங்கூரம் விலக்கிக் கொண்டிருந்த கப்பலொன்றில், அது எங்கு சற்று நேரத்தில் பயணம் ஆகப்போகிறது என்றே தெரியாமல், ஒளிந்துகொள்ளச் செய்தது.இன்று அந்நிகழ்ச்சி நடந்திருந்தால் அது வேறு கதை. ஆனால் அது நடந்தது, சற்றேறக் குறைய, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்துப் பத்துகளில் என்பதால், மனிதாபிமானத்தோடு வாழ்ந்த ஆங்கிலேயக் கேப்டன் ஒருவரால் கறுப்பண்ணனின் வாழ்க்கை ஆரோக்கியமாகத் திசை திரும்பியது. அவன் ஒளிந்திருந்த இடம் அந்தக் கேப்டனின் அறைக்குப் பக்கத்தில்தான் இருந்தது. வளர்த்துவானேன்?'அந்தக் காலத்து மெட்ரிக் ஆங்கிலத்தில்' கறுப்பண்ணன் சொன்ன விவரமெல்லாம் கேட்டறிந்த கேப்டன், கறுப்பண்ணனைத் தன்னுடன் இருக்கச் செய்து ஆங்கிலத்திலும் அந்தக் கப்பல் ஏற்றிருந்த "மெர்குயி டின் ட்ரேடிங் கம்பெனி' வியாபாரத்திலும் பயிற்சி கொடுக்கத் தீர்மானித்த சில மணி நேரங்களில் 'பம்பஃஹ்' என்று சிலமுறை ஆரவாரித்தவாறு அந்தக் கப்பல் புறப்பட்டுவிட்டது.சில காலம் அந்தக் கேப்டனின் அன்பிலும் கண்டிப்பான பயிற்சியிலும் நனைந்து காய்ந்த கறுப்பண்ணனுக்கு, அந்த ஆங்கிலேயன் தொடர்பால் மூன்று கருத்துகள் உள்ளத்தின் ஆழத்தில் சென்று தைத்துக் கொண்டு விட்டன; கடைசிவரை அங்கேயே தங்கவும் தங்கி விட்டன.முதலாவது, சாதிப்பெயரைத் தன் பெயருடனோ அல்லது தன் பெயராகவோ வைத்துக்கொள்ளக் கூடாது. இரண்டாவது, குருதியைத் தெளிப்பதுபோல் எக்காலத்திலும் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு எச்சிலைத் தரையில் உமிழக் கூடாது. மூன்றாவது, தன்பெயரில் அறிந்தோ அறியாமலோ நிறவெறி சார்ந்த அம்சம் நிலைபெறக் கூடாது.'கறுப்பு' என்பது தமிழ்நாட்டில் உள்ள கிராம தேவதை என்று அறிந்து கொள்ளாததாலோ, நிறவெறி நிரம்பித் ததும்பிக் கொண்டிருந்த அந்தக் காலத்திலும், தான் ஓர் ஆங்கிலேயன் - வெள்ளையன் என்ற வெறியில்லாமல் 'கறுப்பு' என்றால் கறுப்பினத்தவரையோ ஒடுக்கப்பட்டவர்களையோ குறிக்கும் என்று நினைத்துக் கொண்டதாலோ, அல்லது அதற்கு எதிர்மாறாகக் கறுப்பு நிறத்தைக் கறுப்பர்களின் அடையாளமாகக் கருதி உள்ளுக்குள் வெறுத்திருந்ததாலோ - அந்த ஆங்கிலேயர் மேற்படி மூன்றாவது உணர்வை உள்ளத்துள் விதைத்த விளைவாக, கறுப்பண்ணன் என்ற தன் பெயரை K.அண்ணன் என்று சுருக்கிக் கொண்டும் பெரியதம்பி என்ற தன் தந்தையின் பெயரைப் P என்ற தலைப்பெழுத்தாக முன்னிட்டுக் கொண்டும் P.K.அண்ணன் என்று மட்டும் தன் பெயரைப் பதிவு செய்து கொண்டார். [வளர்ந்துவிட்டார் அல்லவா? அதனால்..'ஆர்' விகுதி.] கப்பல் இங்கிலாந்தில் நங்கூரமிட்டபொழுது கேப்டன் உதவியுடன் பெயர்ப் பதிவு நிகழ்ந்தது.முதல் உலகப் போரின் பாதிப்புகள் ஐரோப்பாவை விட்டு நீங்காத காலம்...ஆண்டுகள் சில உருண்டோடின. பர்மாவில் கப்பல் நங்கூரமிட்டபின் பி.கே.அண்ணன் வாழ்வு மீண்டும் திசை மாறியது. முன்பு, சென்னையிலிருந்து வங்கக் கடலில் செல்லும் பொழுது. இப்பொழுது, வங்கக் கடல் வழியே பர்மாவுக்குச் சென்ற பொழுது. கேப்டன் விடை பெற்றுக் கொண்டு கடல்மேல் செல்ல, பர்மாவில் தங்கி, அங்கிருந்த 'மெர்குயி டின் ட்ரேடிங் கம்பெனி'யைக் கவனித்துக் கொண்டார். சில ஆண்டுகளில், தான் நண்பர்கள் சிலர் மூலம் கற்ற பின்னலாடை எந்திரங்களைப் பற்றிய அறிவைக் கொண்டு பர்மாவின் தலைநகரான ரங்கூனில் ஸ்பார்க்ஸ் சாலை 51ஆம் இலக்கமிட்ட - மரக்கட்டுமானமே பெரும்பாலுமான கட்டடத்தில் 'ஓரியண்டல் நிட்டிங் ஃபாக்டரி'’ என்ற பின்னலாடைத் தொழிலகத்தைத் தொடங்கினார். கோவையிலிருந்த தன் பெற்றோரையும் சகோதரர்களையும் ரங்கூனுக்கே அழைத்துக் கொண்டார். சகோதரர்களுக்குத் தன் ஃபாக்டரியில் பயிற்சி தந்து பின்னர் உரிய பொறுப்புக்களையும் தந்தார். அப்பொழுது, பிரிட்டன் பர்மாவை இந்தியாவின் ஒரு பகுதியாகக் கொண்டு ஆண்டுவந்தது. இவ்வாறு நிகழ்ந்த 1937ஆம் ஆண்டுவரை [அதே 1937இல் சுயாட்சியும், 1948இல் முழுச் சுதந்திரமும் பர்மா பெற்றது], கோவையிலிருந்து என்பதைவிடப் பெரும்பான்மையாகச் செட்டிநாட்டுப் பகுதிகளிலிருந்தும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலிருந்தும் பர்மாவுக்குத் தமிழர்கள் பலர் சென்று அங்கேயே தொழில்கள், வணிகமுறைகள் பலவற்றைச் செய்து வளமாக வாழ்ந்தனர்.தான் நிறுவிய பின்னலாடைத் தொழிலகத்தில், தன் உடன் பிறந்தாருக்கு மட்டுமல்ல உள்ளூர்க்காரர்களான பர்மாக்காரர்களுக்கு முதன்மையான வேலைகள் தந்ததாலும், பர்மியர்களுடனும் அங்கு வாழ்ந்த சீனர்களுடனும் ஒன்றுபட்டுக் கலந்து வாழ்ந்ததாலும் பி.கே. அண்ணன் அவர்களை அவர்கள் மிகவும் நேசித்தார்கள். அதற்கு ஓர் அடையாளம், இத்தனை ஆண்டுகள் கழித்த பின்பும், உள்ளது. புதுச்சேரியில்... பி.கே.அண்ணன் அவர்களின் கடைசி மகனின் வழிப் பேரனார் இல்லத்தில். தேக்கில் செய்யப்பெற்ற திருக்கோயில். மேலே உள்ள மூன்று கும்பங்களையும், நடுவில் உள்ள நான்கு தூண்களையும், தளத்தையும், அடித்தளத்தையும் எளிதாகக் கழற்றி விடலாம்; மீண்டும் பூட்டிக் கொள்ளலாம். நல்ல கனம். ஐராவதி என்ற கப்பலில், இரண்டாம் உலகப் போரின் இறுதியில், ரங்கூன் பி.கே.அண்ணார் [அச்சமயத்தில் அப்படி அழைக்கப்பெற்றார்] அவர்களுடைய குடும்பத்தாருக்குத் துணையாக அந்தக் கோயிலும் சென்னைக்கும், பின் கோவைக்கும் வந்தது. பின்னர், இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் புதுவைக்கும், அடுத்து ஐந்தாண்டுகளுக்குப் பின் காரைக்காலுக்கும், அடுத்தடுத்து ராஜயோகி ரங்கூன் பி.கே. அண்ணாரும் அவர் துணைவியார் தெய்வானை அம்மாள் அவர்களும் 1988ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் சமாதி எய்திய பின்னர் புதுச்சேரிக்கும் துணையாகச் சென்றது. அது தேக்கினால் ஆனது மட்டுமன்று. நல்லதொரு சீன மனிதரின் கலைத் திறனால் ஆனது. புதுச்சேரியில் ஆனந்தாசிரமத்தின் நிறுவனரும் தலைமை யோகியுமான கீதானந்தா அவர்களால் 1970ஆம் ஆண்டில் ‘ராஜயோகி’ என்ற சிறப்புத் தலைப்பு வழங்கிக் கெளரவிக்கப் பெற்றார். இதற்கும் இவர் துணைவியார் சிவதீட்சை பெற்று நாற்பத்தாறு ஆண்டுகள் நியமமான வாழ்க்கை வாழ்ந்தமைக்கும் அருணாசல சுவாமிகள் என்ற துறவியாரே காரணம். வேடிக்கை என்னவென்றால், இவர் வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்புமுனையிலும் உன்னதமும் சத்தியமும் வாய்ந்த துறவியர் சிலர், இவரைத் தளராமல் பார்த்துக் கொண்டு வழிநடத்தியதும்தான். இதற்குச் சரியானதொரு சான்று:இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில், ஜப்பான் நாடு தன் இராணுவ பலத்தால் அமெரிக்காவையும் அஞ்ச வைத்துக் கொண்டிருந்த காலகட்டம். பர்மாவில் நுழைந்து அட்டகாசம் செய்த ஜப்பான் படைகள், ரங்கூனுக்குள்ளும் புகுந்து சூறையாடின. அங்கே வளமாக வாழ்ந்த தமிழர்களும் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆட்பட்டனர். பானைச்சோற்றுக்கொரு பதமாக, ரங்கூன் பி.கே.அண்ணார் தொடர்பாக நிகழ்ந்த சூறையாடலைப் பார்ப்போம்.மற்ற தமிழர்களைப் போல, தன் குடும்பத்தார் அனைவரையும் சீனக் கலைஞர் செய்து தந்த தேக்குக் கோயிலையும் கப்பலேற்றித் தாயகத்துக்கு அனுப்பியபின் ஒருநாள் காலை... ஜப்பான் இராணுவம், ரங்கூனுக்குள் புகுந்து சூறையாடத் தொடங்கிய நேரம். ஜப்பான் இராணுவத்தினர் சிலர், இவர் வீட்டுக் காம்பவுண்டுக் கதவுகளை அதிரடியாகப் பெயர்த்துக் கொண்டு வந்தனர். இவரை அழைத்து, இவர் பார்க்கப் பார்க்க, ஷெட்டில் நின்று கொண்டிருந்த - இவருடைய - தட்டெழுதும் வசதி சேர்ந்த [இன்று கார் ஸ்டீரியோ வசதி போல] ஆர்ம்ஸ்ட்ராங் சிட்னி என்ற அந்தக் காலச் சொகுசுக்காரையும் போர்ட் காரையும் வெடிகுண்டு வீசித் தகர்த்து விட்டு - "இனியும் நீங்கள் தாமதித்து இங்கிருந்தால், உங்களுக்கும் இதே கதி நிச்சயம். நாளைக்கு வருவோம்!" என்று எச்சரித்துப் போய்விட்டார்கள்.நல்ல வேளை. குடும்பத்தார் நிம்மதியாகக் கப்பலில் போய்க் கொண்டிருக்கிறார்கள்... இவருக்கு அந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் சிறந்த நண்பர்கள் இருந்தனர். அவர்களைத் தொடர்பு கொள்ள இவர் போன வழியில் அவர்களே நடைப் பயணமாக, எதுவும் கைகளில் எடுத்துக் கொள்ளாமல், சிரபுஞ்சி வழியாகவும் இந்தியாவின் வடகிழக்கு வாயில் வழியாகவும் தாயகத்துக்கே திரும்பும் நோக்கத்துடன் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுடன் ரங்கூன் பி.கே.அண்ணாரும் நடைப்பயணம் தொடங்கினார். வழியில் 'ஸ்டேட் எக்ஸ்பிரஸ்' சிகரெட் டின்கள் இரண்டில் ஒன்றில் அரிசியும் இன்னொன்றில் உப்பும் தாங்கி நடந்து தின்று உயிர்சுமந்து வந்த போராட்டத்தில், பிழைத்தவர்கள் சிலரே.இந்தியாவுக்குள் நுழைந்து விட்டபின், மற்றவர்களைப் போல உடனே தென்னகம் திரும்பாமல் ரிஷிகேசத்தில் உள்ள சுவாமி சிவானந்தர் குடீரம் என்னும் குடிலில் ஒரு மாதத்துக்குமேல் தங்கி உள்ளத்தைத் தெளிவாக்கிக் கொண்டார். மாலையிட்டு வழிபடப்பெற்றுக் கொண்டிருந்த தன் படம் இருந்ததும்; கோவை செல்வபுரத்தில் தன் குடும்பத்தார் வாழ்ந்திருந்ததும் ஆன வீட்டுக்கு அவர் போய்ச் சேர்ந்தபொழுது, அக்குடும்பத்தார் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை ஊகிக்கக் கூட முடியாது.அப்புறமும் தன் குடும்பத்தார் நலத்துக்காக, எழுபத்திரண்டு வயது வரை உழைத்தார். பழைய செல்வ வாழ்க்கை தன்னை விட்டுப் போனபின்பும் மனம் தளராமல் 27 இஞ்ச் பிலிப்ஸ் சைக்கிளில் வேலைக்குச் சென்றதோடு, தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கும் தொடர்ந்து சென்றுவந்தவரை மதித்துப் பாராட்டியவர்கள் - தமிழ்வாணன் முதல் ஆன்மீகப் பேச்சாளர் நா.கிரிதாரி பிரசாத் வரை பலர். இதைவிடவும் வியப்பானது, எந்த பர்மாவிலிருந்து தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடந்து வந்தாரோ, அதே நாட்டுக்குத் தன் இரண்டாம் மகனார் திரு ஏ.கே. மூர்த்தியும் அடுத்தவர் திரு சிவப்பிரகாசமும் (மீண்டும்) பர்மாவுக்குச் சென்றபொழுது ஊக்குவித்தார். அவர் எண்ணம் போலவே, அவ்விருவரும் மிகவும் சிறப்பாக பர்மாவில் வாழ்ந்தனர். தமிழ்வாணன் தன் 'கல்கண்டு' இதழில் பர்மா ஏ.கே. மூர்த்தி அவர்களின் முயற்சிமிக்க அரிய வாழ்வைப் பற்றி விரிவாக (Profile) எழுதிப் பாராட்டினார்.இன்னும் சொல்ல எத்தனையோ உண்டு, இராஜயோகியாகத் தன் தொண்ணூற்றாறு வயதில் காரைக்காலில் பச்சூரில் ஒடுக்கமான பி.கே.அண்ணார் வாழ்க்கையில்.குன்றின்மேல் இட்ட விளக்காக,பரவலாக, ஊடகங்களாலும் விளம்பரங்களாலும் புகழ்பெற்றவர்களின் வாழ்க்கையை அறிவதோடு மட்டும் திருப்தி அடைவதைவிடவும் மேலானது, ஆடம்பரம் இல்லாமல் அகல் விளக்காக வாழ்ந்து, சாதித்து மறைந்த சான்றோர்களின் வாழ்க்கை வரலாறுகளை அறிதல்.அறிவோம். வாழ்வோம்.

5.9.06

பேச்சு - மறுபேச்சு பின்நவீனத்துவம் நோக்கி

பேச்சு - மறுபேச்சு பின்நவீனத்துவம் நோக்கி --- பிரேம்-ரமேஷ்'ஷின் புதிய தொகுப்பு பற்றியதான என் பேச்சு... - தேவமைந்தன் பிரேம்-ரமேஷின் கவிதை - நாடகம் - புனைவு - அல்புனைவு - மொழிபெயர்ப்பு - இளையராஜா, கி.ரா. குறித்தவை ஆகிய புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு, தனித்தனிப் புத்தகங்களாக வந்திருக்கவேண்டிய அளவு விஷயகனம் கொண்ட நேர்காணல்களும் உரையாடல்களும் விவாதங்களும் இந்த ஒற்றைத் தொகுப்பாக உருவெடுத்துள்ளன. ஒவ்வொரு முறையும் ஒரு புதிய கருத்தாக்கத்தை முன்வைத்து ஒரு விவாதத்தைத் தொடங்க முனையும்போதும் தமிழ்அறிவுச் சூழலால் நெருக்கடிகள் பலவற்றுக்கு ஆளானவர்கள் பிரேம்-ரமேஷ். மரபாலும் நுண்ணரசியலாலும் பண்பாட்டு அரசியல் முதலியவற்றாலும் பாதிப்புக்குள்ளாகும் பருப்பொருள் சார்ந்த இந்தியச் சூழலில், சனாதன சாதியங்களைத் தாண்டியவாறே, பேச்சுக்குரிய பலவற்றைப் பற்றி 'மறுபடி மறுபடி பேசுவதன் மூலம் தமிழில் கோட்பாட்டு வகையான பேச்சுக்களை உருவாக்கிவிடமுடியும் என்ற எதிர்பார்ப்பு'டன், 'பேச்சை எழுதியதாலும் எழுத்தைப் பற்றிப் பேசியதாலும் நேர்ந்த பதிவு'களை இந்தத் தொகுப்பில் புலப்படுத்தி இருக்கிறார்கள். 273 பக்கங்கள் உள்ள பதிவுகளில் வரும் அவற்றுக்கான பகைப்புலத்(background)தரவுகளை இங்கு தவிர்த்து விடுகிறேன். சாராம்சத்தின் தாக்கத்தால் விளைந்த கருத்தோட்டத்தை மட்டும் முன்வைக்கிறேன். நாம் வாழும் ஊர்/நகரம் நம்மைத் தீர்மானிக்கிறது. "இதற்கு எமது புதுச்சேரி சூழல் முக்கியப் பின்புலம். இங்குள்ள கலாச்சாரக் கலப்பும், வேறுபட்ட கலை இலக்கிய ஊடாட்டங்களும் எம்மை வகை வகையாக மாற்றி அமைத்தவை. தனி மனிதர் என்ற வகையில் எமது போதாமை சமூகக் கலாச்சர மனிதர் என்ற வகையில் எமது அறமற்ற வரலாற்றுப் பின்னணி போன்றவை தொடர்ந்து எம்மை அலைக்கழித்துக் கொண்டிருந்ததற்கு பிரஞ்சு இலக்கிய, தத்துவ கலை சார்ந்த இடையீடுகள் காரணமாக அமைந்தவை" (ப.39) என்கிறார்கள் பிரேம் -ரமேஷ். தீவிரமான எழுத்துத் தேடல் பரிமாணத்திற்குப் பிறகு தங்களுடைய முதலும் கடைசியுமான கலை அடையாளம் கவிதையே என்று முடிவெடுக்கும் பிரேம்-ரமேஷ், "ஆனால்" என்று தொடங்கித் தரும் பின்தொடரும் விளக்கத்தை, அடுத்து வரும் மூன்று பக்கங்களில் வாசித்து அறிந்து கொள்ளலாம். தமது 'இடைக்காலத் திட்டமாக' நாடகங்களில் பல முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள் என்பதற்கு, 'ஆதியிலே மாம்சம் இருந்தது' என்ற நாடகத் தொகுப்பு, சான்று. அதில் வருபவை: உடல் அரசியலின்(Body Politics) நுட்பமானதும் தீவிரமானதுமான வகைமைகளை மிகவும் தொடக்கத்திலிருந்தே பிரேம்-ரமேஷ் ஆய்வுக்குட்படுத்தி வந்திருக்கிறார்கள். அதன் ஒரு முதிர்ச்சிதான் அந்தத் தலைப்பில் உள்ள நாடகம். அதன் உள்வெளிச்சங்கள்; 1. மனம், அறிவு, ஆன்மா என்ற இந்தியத் தத்துவக் கருத்துருவங்கள் சார்ந்து உடல் மறுக்கப் படுவது ஆதிக்கக் கோட்பாடாக அரசியல், சமூக, கலாச்சாரத் தளங்களில் நிகழ்ந்துகொண்டே வருவதை, மகாயந்திரம் - பிரக்ஞா என்ற பெளத்த - தாந்திரிக பெளத்த ஏற்போடு மறுதலிப்பதை இந்நாடகம் செய்துள்ளது. 2.அபூர்வமானதும் அதிசயமானதுமான உடலின் இருப்பையும் இயக்கத்தையும் கட்டுப்படுத்த - கண்காணிக்க - தண்டிக்க - மறுக்க - ஒடுக்க எந்த நிறுவனத்துக்கும் உரிமை கிடையாது என்ற மெய்ம்மையின் விகாசத்தினுள் எப்படி உடல்கள் நிகழ்வில் உலகில் தென்படும் எதையும்விடக் கீழானதாக, அழித்தொழிக்கத் தக்கதாக, ஒழித்துக்கட்டும்படி ஆதிக்கக் கருத்தேற்றமானது தூண்டிவிடுவதாக, எந்தக் கணத்திலும் எவராலும் எதனாலும் சித்திரவதை செய்யப்படவோ - எரிக்கப்படவோ - சிறைப்படவோ - சந்தேகத்தின் பேரில் அந்நிய நாட்டில் விசாரிக்கும்பொழுதே மரணநிழல் உணர்த்தப்படவோ[ஹாலந்தின் ஆம்ஸ்டர்டாமில் விமானப் பணிக்குழுவின் சந்தேகத்தால் கைது செய்து விசாரிக்கப்பட்ட அமெரிக்க-மும்பை விமானப் பயணிகள் பன்னிரண்டு இந்தியர்கள் மனநிலை] தோதாகக் கீழாக்கப்படும் இருத்தலுரிமைக்கு மறுப்பு, இந்நாடகத்தில் பிரக்ஞையுடனே உறுதியாக மறுக்கப்படுகிறது. இன்றைய அரசியலில் உடலின் இடம், அது குறித்த கருத்தாக்கம் எது என்பதற்கும் அதற்கு இலக்கியம், நாடகம் புரியும் எதிர்வினையின் தன்மை குறித்தும் மறுமொழி தரும் பிரேம் -ரமேஷ், "உடல் எதைச் சுட்டுகிறது, உடல் எதன் குறிப்பான் என்பது மிகவும் வன்முறை சார்ந்த ஒரு கேள்வி. ஆனால் உடல் எதையும் சுட்டத் தேவையில்லை, உடல் எதற்கும் குறிப்பான் இல்லை - இறுதிச் சாராம்சம் என்பது எதுவும் இல்லை என்பதை உய்த்துணர நாம் சூன்யத்தை மிகத்தெளிவாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்" என்றுகூறி, பெளத்த தம்மக் கலைச்சொற்களான 'நிப்பான்'/'நிர்வாண்' 'பூஜ்ஜிய சாதனா' ஆகியவற்றைக் கொண்டு விளக்குகிறார்கள். முடிவாக, "சூன்ய பிரக்ஞா' என்பதை தியானிக்க, மூல அர்த்தமின்மையைக் கவித்துவமாக ஏற்க கலை, இலக்கியம், நாடகம் அனைத்தும் இன்று தம்மை தயார் செய்து கொள்வதுடன், பொருள்கோளின் அதீத சூன்யத்தைத் தொடர்ந்து நிகழ்த்திக்காட்டவும் தம்மைப் பயிற்றுவிக்க வேண்டும்" என்று மொழிகிறார்கள். தவிர, எடுத்த எடுப்பிலேயே பாபாசாகேப் அவர்களையும் புத்தரையும் அடைந்துவிடவில்லையே என்று நாம் ஆர்வமுற வேண்டுவதில்லை என்றும் அணுக்கமாகவுள்ள பெரியாரியம் முதற்கொண்டு சேய்மையிலிருந்து நாம் ஆர்வத்தோடு நாடிக்கொள்ளும் மார்க்ஸியம் வரையிலான எல்லாவித வாசிப்பிற்கும் பிறகு பாபாசாகேப் அவர்களையும் பெளத்தத்தையும் மீண்டும் அணுகும்பொழுது அவற்றின் பிரம்மாண்டம் புரிந்துகொள்ளத் தக்கதாகவே இருக்கும் என்று உணர்த்துகிறார்கள்.[மேலும்: பிரஞ்சு, ஜெர்மானிய தத்துவவாதிகளும் பாபாசாகேப்பும், பக்.52-54:இந்தியச் சமூகத்தின் பிரச்சனைகள் மேல் அம்பேத்கர் நிகழ்த்திய எதிர்வினைகள், பக்.54-64.] மேலும், பெண்ணியம் சார்ந்த புரிதல்கள் தங்கள் படைப்பு மொழியின் மேல் கொள்ளும் தாக்கம் முதலாக, எழுத்துகளோடு வாழ்தலையும் தாண்டி, கடைசியில் எழுத்துக்களாக மட்டுமே தாங்கள் 'மீந்து' நிற்கவேண்டும் என்ற நிலையை எய்துவதே தங்களுடைய படைப்பு மனங்களின் தவம் என்றதொரு வெளிப்பாடு வரை காலச்சுவடு நேர்காணலின் முழுமையான வடிவம் நீள்கிறது. மேற்படி நேர்காணலுக்கு சாரு நிவேதிதா 'நிகழ்த்தி'ய எதிர்வினையையும் அதற்கான பிரேம் - ரமேஷ் ஆற்றிய பதிலும் குறித்த முழுமையான வடிவத்தையும் 'காலச்சுவடு நேர்காணல் 1' புத்தகத்தில் வாசிக்காமல் இந்தத் தொகுப்பில் உள்ள சில பக்கங்களை[குறிப்பாக ப.129] வாசித்தாலேயே போதும். பிரேம் - ரமேஷ் நடையிலேயே தருகிறேன்: "சாரு நிவேதிதாவின் எதிர்வினைகளில் தத்துவார்த்த, கலை இலக்கியம் சார்ந்த கேள்விகள் மட்டுமே எங்களால் எதிர்கொள்ளப்பட்டுள்ளன. அவருடைய அவதூறுகளுக்கும் தனிப்பட்ட வாழ்வியல்சார் நடைமுறை தாக்குதலுமான பதில்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. காலச்சுவடில் எங்களுடைய எதிர்வினை முழுமையாக இடம்பெறவில்லை. இந்த நூலிலும் தற்போது முழுமையாக இடம்பெறவில்லை. காரணம், சாரு நிவேதிதாவின் அறமற்ற, அறிவற்ற அவதூறுகளுக்கு மாய்ந்து மாய்ந்து பதிலெழுதி அதை நூலாக ஆக்கி காலத்தையும் பொருளையும் வாசகர் மனநிலையையும் வீணடிக்க வேண்டாம் என நினைப்பதே." (ப.143) பிரம்மராஜனுடனான பிரேமின் உரையாடல், அவருடைய எழுத்துக்களை பல்வேறு பின்புலங்களில் விளங்கிக் கொள்ளவும் பொதுவாக எழுத்துருவாக்கம் பற்றி உணர்ந்து கொள்ளவும் உதவுகிறது. இளையராஜாவுடனான பிரேம் - ரமேஷின் உரையாடலும் இந்தத் தொகுப்பில் குறிப்பிடத்தக்கது. 'கதைசொல்லி'(எண்:4, 1998)யில் இது வெளிவந்தது. தம் முன்பேச்சில் இது குறித்து அவர்கள் கூறுவது: "இளையராஜாவைப் பற்றி நாங்கள் சொல்ல விரும்பியதைச் சொன்னதால் பல கசப்பான அனுபவங்களைச் சந்தித்தோம். அதுவரை எங்களுடைய சக படைப்பாளிகளாகவும் அறிவுஜீவிகளாகவும் இருந்த நண்பர்களிடமிருந்து மனப்பொருமல்களும் விஷக்கக்கல்களும் வெளிப்பட்டன. இளையராஜாவை ஒரு 'நித்தியநிலை'க்கு நாங்கள் கொண்டு சென்று தேவையில்லாமல் ஒரு தலித்துக்கு 'வரலாற்று அங்கீகாரம்' வழங்கிவிட்டது போல ஒளிவு மறைவின்றிக் கசப்பைக் கக்கினார்கள். ஒரு இங்கிதம் கருதிக்கூட தமது சாதிய சநாதன முகத்தை அவர்களால் மறைத்துக்கொள்ள இயலவில்லை. இதன் நிமித்தம் பல நட்புக்களை இழந்தோம். தனிப்பட்ட முறையில் பொருளாதாரச் சரிவுகளையும் அடைந்தோம். இதை இன்று வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வது பலருக்கு ஆச்சரியம் தரக்கூடியதுதான். என்ன செய்வது? நாம் பின்நவீனத்துவர்களாக இருந்தாலும் சாதியைத் தாண்ட முடியாத மனம் பெற்றவர்களல்லவா?" (ப.10) பிரேம் - ரமேஷ் எழுதிய 'இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்' என்ற நூல், இளையராஜா பற்றிய ஓர் 'அபத்தக்' (ப.241) கட்டுரையை அ.மார்க்ஸ் உருவாக்க உதவிய காரணிகளில் ஒன்றாக இருந்தது. அதன் உள்ளீடான வாதம் - "இளையராஜா தனிச்சிறப்புடைய ஒரு இசைக் கலைஞரோ, விதந்தோதப்பட வேண்டிய, உன்னதப்படுத்தி மகிழவேண்டிய ஒரு படைப்பாளரோ அல்ல. அவரும் சாதாரண திரை இசை அமைப்பாளன்தான். இன்னும் சொல்லப் போனால் உலகத் தரத்திற்கு ஒப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் ரஹ்மான், ஹாரீஸ் ஜெயராஜ் முதலானோர் இசைக்கட்டுமானங்கள் அமைத்து வெகுசனப் படுத்தியது போல சாதிக்க முடியாமல் அடுத்த கட்ட இசைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய இயலாமல் போன, ஒரு தேக்கத்தை அடைந்த, நமது காலத்தின் இசை என்ன என்பது பற்றி சிந்திக்கத் தவறிய ஒரு தோல்வியாளர். எல்லா வகையிலும் தேங்கி உளுத்துப்போன கர்நாடக சாஸ்திரிய இசையைத்தான் நமது மரபிசையாகவும் தனது புதிய பரிணாமத்தின் தளமாகவும் ஏற்றுக்கொண்டவர். சனாதனத்திடம் சரணடைந்தவர். சமகாலப் பிரக்ஞையிலிருந்து தூர விலகியவர். மேலும் இந்த மண்ணுக்குரிய, இந்தக் காலத்துக்குரிய இசையை உருவாக்கத் தவறியவர்." இந்த மதிப்பீடுகளை இளையராஜா மீது வைக்க அ.மார்க்ஸ் அவர்களுக்கு இடம் தந்திருப்பது இளையராஜா ஒரு "எளிய தலித் குடும்பத்தில் பிறந்தவர்" என்ற விபரம் மட்டுமே.....தலித்தாகப் பிறந்தவர் ஒருவர் தான் என்னவாக மாறவேண்டும் என்பதை பல மன கருத்துப் போராட்டங்களுக்குப் பின் அவரே தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார். இதில் தலித்தல்லாத ஒருவர் இடையீடு செய்ய இன்றைய 'அம்பேத்கர் காலகட்டம்' இடந்தரவில்லை. இதைக் கவனத்தில் கொள்ளத் தவறியதன் விளைவே அ.மார்க்ஸின் தாக்குதல்கள். இந்தத் தாக்குதல்கள் பல்வேறு பிழைபட்ட வரலாற்று கருத்தியல் தரவுகளின் அடிப்படையில் கட்டப்பட்டிருக்கின்றன என்பதால் அ.மார்க்ஸின் மொத்த நிலைப்பாடுமே கேலிக்குரியதாகிறது."(பக்.241-242) இவ்வாறு மொழிவதோடு விட்டுவிடாமல் தொடர்ந்து அ.மார்க்ஸின் கருதுகோள் ஒவ்வொன்றையும் எடுத்து சரிபார்க்கவும் விளக்கவும் கூடுதல் தகவல்கள் தரவும் அடுத்துவரும் ஒன்பது பத்திகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் பிரேம் - ரமேஷ். 'நாவல் எழுதுவதென்பது எளிதான வேலை அல்ல. கடுமையான உழைப்பைக் கோருகிற விஷயம் அது. பன்முகப்பட்ட வாசிப்பும் பல்துறைப் பயிற்சியும் அதற்குத் தேவை." என்று அறிவிக்கும் அ.மார்க்ஸ், "பிரேம் -ரமேஷ் போன்றவர்களிடம் ஆழம் இருக்கிறது. ஆனால் எளிமை கிடையாது" என்றிருக்கிறார். அதற்கு இவர்கள் தரும் பதில் வெகு எளிமையானது. "எழுதுவதற்கு பன்முகப்பட்ட வாசிப்பும், பலதுறைப் பயிற்சியும் தேவை என்றால், வாசிப்பு மட்டும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதுபோல் எளிமையாக அமைந்துவிடுமா என்ன?..." இதனாலெல்லாம் அ.மார்க்ஸை விட்டுக்கொடுப்பவர்கள் அல்லர் இவர்கள் என்பதற்கு இந்நூலின் கடைசிப்பகுதியான 'சு.ராவிடம் கேளுங்கள்' என்பதில் க.நா.சு., சி.சு.செ.,வும் அவர்களுக்குப் பின்னால் சு.ரா., நகுலன்., வெ.சா. முதலியவர்கள் எல்லாருமே முன்னெடுத்து வளர்த்த கோட்பாடுகள் எல்லாமே 'வெற்று அபிப்ராயம் சார்ந்தவை' என்று அடையாளம் காணுகையில், தத்துவப் பள்ளிகள் சார்ந்தும் கலை இலக்கியக் கோட்பாடுகள் சார்ந்தும் உரையாடல்களைத் தமிழ்ச்சூழலில் வளர்த்தவர்கள் - பிராமண சிறு பத்திரிகை 'அபிப்ராய மர'பிற்கு மாறாக 'அறிவு விவாத மரபை' வளர்த்தவர்கள் யார்யார் என்று சொல்ல வரும்பொழுது எஸ்.வி.ராஜதுரை, ஞானி, தமிழவன், பிரம்மராஜன் போன்றவர்களிடையில் அ. மார்க்ஸையும் மொழிவது சான்று.(ப.285) 'காட்சி வெளியாகப் பெண்ணுடல்: தணிக்கையும் பெருக்கமும்' என்ற இயல், கீதையில் இடம்பெறும் அர்ஜுனன் - கிருஷ்ணனின்(இந்திய சமூக தர்மத்தில் பெண் - ஆண் பங்கு) சொல்லாடலில் தொடங்குகிறது. "இந்திய ஒழுக்கவியலின் ஆகக்கூடிய நிர்ணய சக்தியாக இருக்கும் வர்ணம் மற்றும் சாதி என்னும் பிரக்ஞை நிலை, இந்திய மன அமைப்பின் முழுமையை மற்றும் அதன் பகுதிகளை இயக்குவதாகவும் வடிவமைப்பதாகவும் உள்ளது. இதன் அடிப்படையில் எழும் பாலியல் பற்றிய வரையறை மற்றும் கருத்துருவங்கள், சாதிய நிலைப்பு மற்றும் சாதி அடிப்படையிலான உடல் ஒடுக்கம் என்பதற்கான உத்திகளாகவே செயல்பட்டு வந்திருக்கின்றன" என்ற கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. இந்தியச் சமூகங்களில் பால்விழைவு, பாலுணர்வு, பாலியல் செயலும் நிகழ்வும் என்ற அனைத்திலுமே அடிப்படையாகச் செயல்படுபவை 1. பாலியல் என்பது அதிகார ஆதிக்க உத்தி 2. உடல் பாலியல் களம்/அதிகார, சமூக, ஆதிக்க களமாக இயங்குவது. இவை அனைத்திலுமே ஆண் மையத் தன்மையும், பெண்மை, பெண் உடல்நிலை என்பவை 'பிற' அல்லது 'உபவெளி' என்ற நிலையும் மிகவும் வெளிப்படையாக உள்ளன.(ப.270) மேலும் -- புலனழிப்பைத் தனது உத்தியாக கொண்டுள்ள சாதிய ஒடுக்குமுறை, பேரழிவு பற்றிய அச்சத்திற்கும் பெண்மையின் வேட்கைக்கும் உள்ள தொடர்பை இந்திய புராணிக இதிகாச மரபு தொடர்ந்து விளக்கிக் கொண்டே இருத்தல், மனுஸ்மிருதி கூறும் பெண்பற்றியும் பெண்நிலை குறித்தும் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் இந்திய வரலாற்று - கலாச்சார - அழகியல் - அரசியல் விளைவுகளாகவே இருப்பதுடன் அவற்றை நினைவு - நினைவிலி - உபநினைவு எண்ர தளங்களாகவே கொண்டியங்கும் ஒவ்வொரு சமூக ஆணின் கருத்துமாகவே நீடித்தல் முதலானவை மிக ஆழமாக அவதானிக்கப்பட்டுள்ளன. இந்திய சமூகத்தின் ஒடுக்குமுறையையும் அடிப்படைத் தணிக்கையையும் உடைத்துக்கொண்டுதான் திரைப்படம் என்பதே நுழைந்தது என்பதும் அதுவரை இழிமக்களாக வெறும் அடிமைகளாக தாசிகளாக ஏவலர்களாக இருந்த நடிப்பு நிகழ்த்துபவர்கள் தேவதைகள் மற்றும் சிறுதெய்வ நிலையை நமது கலாச்சாரத்தில் அடைய முடிந்தது என்பதும் கவனமாகக் கருதப்பெற்றுள்ளன. அரசியல், சமூக, பொருளியல் துன்பங்களிலிருந்து நம்மை மீட்கும் வல்லமை மிக்கவர்களாக இவர்கள் நம் நினைவிலும் உள்மனதிலும் கதைகளிலும் உலவ முடிவதற்கான முரண் - நிறைய ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டிய ஒன்று என்று இங்கு பிரேம் - ரமேஷ் கூறுகிறார்கள்.(ப.274) ஒடுக்கப்பட்ட ஆண்மக்களையும் முற்றிலும் கீழ்மைப் படுத்தப்பட்ட பெண்மக்களையும் கவரும் அம்சம் என்ன என்ற ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டு அதற்கு மறுமொழியாகக் கொடுக்கும் பத்திகள் இரண்டு, தணிக்கைக்கும் தடைக்குமான வழிகளும் எவ்வாறு இதன் துணைவினைகளாக உருவாகி விடுகின்றன என்பதையும் சுட்டி விடுகின்றன. திரைப்படத்தில் பாலியல் தணிக்கை செய்யப்படுகிறதா என்று தொடர்ந்தெழும் கேள்விக்கு அது பெருக்கத்தான் படுகிறது என்று வரும் பதிலை, "..பார்வை இயந்திரங்களான மக்களின் உள்வாங்கும் பரப்பு அதிகமாக்கப்பட்டுத் தணியாத தணிக்கை மீறலின் துய்ப்பு பெருக்கப்படுகிறது. இங்கு பெண்ணுடல் மற்றும் பெண்மை பற்றிய கதையாடல் ஓயாமல் பிம்பம் பெருக்கும் இயந்திரத்தின் மூலம் அரைத்து வெளியே தள்ளப்படுகிறது" என்று கூறுவதும் அதன் தொடர்வும் பின்குறிப்பும் இது தொடர்பாக மேலும் அறியப்பெற வேண்டியவை. இயல்பாகவே கருத்து மந்தக்காரர்களுக்கும் அவ்வப்பொழுது பல 'வெற்றிகரமான' மனிதச்சாயல்களை வரித்துக்கொண்டு வக்கரித்துப் பேசுபவர்களுக்கும் கண்ணியத்துடன் பிரேம் -ரமேஷ் இந்தப் புத்தகம் வழியாகக் கொடுக்கும் பின்நவீனத்துவம் குறித்த சிறு விளக்கம்(ப.140-141), மிகவும் முக்கியமானது. பின்நவீனச் சூழலில் அறவியல், மனித நிலைப்பு, பாசிச மறுப்பு என்ற தத்துவ நிலையியக்கங்கள் பற்றிய பின்நவீனத்துவம் நோக்கியே இந்நூல் நடையிட்டுச் செல்வதை இப்பத்தி உறுதிப்படுத்துகிறது. கடைசியாக ஒன்று. அலுங்காமல் குலுங்காமல் ஆராய்ச்சி செய்பவர்கள், மேனாமினுக்கியாய் இருந்து ஆள்பிடித்து ஊடகவழி வலிமை பெற்றுவிட்டு - தலித் சிந்தனை மற்றும் செயல்பாட்டாளர்களைஎன்னவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இந்த அம்பேத்கர் ஊழியிலும் பேசலாம் என்று விஷமானதொரு பாசிசத்தை உள்ளத்தில் தேக்கிவைத்திருப்பவர்கள் - இத்தகைய சிந்தனைப்போக்குடைய புத்தகத்தை நிராகரிப்பதற்கு என்றே ஒரு வார்த்தை வைத்திருக்கிறார்கள். அது, 'புரியவில்லை என்பதே. "எங்களுடைய அறவியல் கேள்விகளை மறுத்து, முற்றொருமையை உறுதிப்படுத்த நினைப்பவர்களுக்கு, தத்துவார்த்தமாகவும், கோட்பாட்டு ரீதியாகவும் விவாதிக்க இயலாதபொழுது, ஒரே ஒரு தந்திரம் கையில் உள்ளது "புரியவில்லை." முயற்சி எடுக்காதவர்களுக்கு மெய்யாகவே புரியாதுதான். 'சிரங்கைச் சொறிந்து கொடுக்கச் சுகம்' என்றொரு சொலவடை உண்டு. இருக்கவே இருக்கிறது சின்னத்திரை. பெரிய திரையும் குறுவட்டின் மூலம் சின்னத் திரையைச் சரண்புகுந்தாயிற்று. சம்பந்தா சம்பந்தமே இல்லாமல், அதாவது சுதந்திர நாள் சிறப்பு நிகழ்ச்சிக்கும், "டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே 'ஸெய்'வேன்!" என்று 'திடம்பட' மொழியும் நடிகருக்கும் என்ன சம்பந்தமோ அப்படிப்பட்ட சம்பந்தத்தோடு விளம்பரங்களுக்கிடையில் நிகழ்ச்சிகளை நகர்த்தி, ஒவ்வொரு மைக்ரோ செகண்டையும் உச்சபட்ச ஏலத்துக்கு விட்டு காசு பார்க்கும் தொ.கா. இருக்கவே இருக்கிறது. அப்படியும் இல்லையா? குழு, குழுவாக நடத்திக்கொள்ளும் ஏதாவதொரு சிறுபத்திரிக்கையிலோ, பெருங்குழு நடத்தும் வாரமலரிலோ மூழ்கிவிட வேண்டியதுதான். அதைவிடவும் சுகம் அவர்களுக்கு வேறு இருக்கிறதா என்ன? ******************************************** வெளியிட்டோர்: மருதா 226 (188), பாரதி சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014. தமிழ்நாடு இந்தியா. பக்கங்கள்: 286 விலை: ரூ. 150 ********************* நன்றி: கீற்று.காம்
பெண்ணின் உள்மன வெளிப்பாடு 2006இலும் 1984இலும் -தேவமைந்தன் பெண்ணின் உள்மன உளைச்சல்கள் வெளிப்படுவதில் நிகழ்நிலையும் இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முந்திய இறப்புநிலையும் ஒன்றாகவே இருப்பதை, தற்செயலாக என் குறிப்பேடுகளைப் புரட்டும்பொழுது கண்டு வியந்தேன். இன்றைய நிலைக்கு, இந்தக் கட்டுரையில், மாலதி மைத்ரி முதலான வெளிப்படையாகப் பெண்ணியத்தை அதன் கோட்பாட்டு அடிப்படையில் பின்பற்றுவோர் அல்லாமல் இதழ்களிலும் நூல்களிலும் அமைதியாய்ப் பெண்மன உளைச்சல்களை வெளிப்படுத்தும் 22 ஆண்டு இடைவெளியிலான கவிஞர் இருவரை வகைமாதிரிகளாகக் கொண்டிருக்கிறேன். இன்னொரு காரணம், அவர்களை எனக்குத் தெரியாது. தெரிந்து மதிப்பிடுவதில் பொய்ம்மை புகுந்துவிடும். சரி, கோட்பாடு அடிப்படையில் பெண்ணியம் பற்றி இன்று நவிலப்பட்டு வரும் விளக்கத்துக்கும் கலைச்சொல் அடிப்படையில் அகராதியில் - ‘பெண்ணியக் கலைச்சொல் விளக்கக் கையேடு’ (அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம், நவம்பர் 1992) - உள்ள விளக்கத்துக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. “இலத்தீன் மொழியில் பெண் என்று பொருள் தரும் ‘பெமினா’ என்ற சொல்லிலிருந்து பெண்ணியம் என்ற சொல் வந்தது......1890 வரையில் பெண்ணியம் என்பதைக் குறிக்க மகளியம் என்ற (womanism) சொல்லே பயன்படுத்தப்பட்டு வந்தது. 1895ஆம் வருடம் ஏப்ரல் 27ஆம் நாளன்று வெளியிட்ட அத்தீனா என்ற கிரேக்கப் பெண் தெய்வக் கோயில் என்ற நூலில் ஆலிஸ் ரோசி என்பவர் மேலே குறிப்பிட்ட பெண்ணியம் என்ற சொல்லை மகளியம் என்ற சொல்லுக்கு மாற்றுச் சொல்லாகப் பயன்படுத்தினார். பெண் சமத்துவம் வேண்டிப் போராடும் பெண் இயக்கங்களையும் செயல்பாடுகளையும் இச்சொல் குறிக்கும்.” (மேலது, பக்.26-27) இன்று, பெண்ணின் அகமன உளைச்சல்களை மட்டும் புலப்படுத்துவது மிதவாதப் பெண்ணியம் என்றும்; பெண்ணின், இதுவரை மறைத்துவைக்குமாறு ஆணாதிக்கத்தால் மேலாண்மை(prompt) செய்தும் நிர்பந்தித்தும் மறைத்துவைக்கப்பட்ட உடல் உளைச்சல் உண்மைகளைத் தம் படைப்புகள் வழியாக அணிகள்(figurative)வேயாமல் புலப்படுத்துவதும்; ஆணுடல் போலவே பெண்ணுடலும் அத்தனை அமைதிக்கும் ஓய்வுக்கும் ஆரோக்கியத்துக்கும் பேணப்படுதலுக்கும் உடலியல் ரீதியில் ஒரேமாதிரியான தேவை உடையதுதான் என்பதை ஓயாமல் வெளிப்படுத்துவதுமே உண்மையான பெண்ணியம் என்று வரையறுக்கப்பெற்றுள்ளது. 1984ஆம் ஆண்டு நர்மதா பிரசுரம் வெளியிட்ட ‘உன் தோழமையின் இருப்பில்’ என்ற தலைப்பிலுள்ள தேவகி அவர்களின் கவிதை ஒன்றைப் பார்ப்போம். சாத்தியம் -தேவகி உனக்கு உன்னைப் பார்த்து உனக்குள் உன்னைத் தெரிந்தால் --- உனக்கு என்னைப் பார்க்கவும் எனக்குள் என்னையும் தெரியும். உனக்கு உன்மதிப்பு உள்ளபடி புரிந்தால் உனக்கு என் மதிப்பும் உள்ளபடி புரியும். உனக்கு என்னோடு உன் ‘நான்’ தள்ளி வாழ முடிந்தால் எனக்கும் உன்னோடு என் ‘நான்’ எடுத்து வாழ முடியும். ‘பெண்ணியம்’ ஆகஸ்ட் 2006 இதழில் (ப.25) தி. கமலி அவர்களின் ‘தேடல்,’ கற்பிதம்,’ ‘அடையாளம்,’ ‘புரிதல்’ ஆகிய நான்கு கவிதைகள் வெளிவந்துள்ளன. அவற்றுள் கடைசியான ‘புரிதல்’ என்பதில் தி.கமலி மொழிகிறார்: எனக்குப் புரியாத நீயும் உனக்குப் புரியாத நானும் எல்லாவிதப் புரிதல்களோடும் வாழ முயற்சித்தல் எங்ஙனம் சாத்தியப்படும்? பிரஞ்சுக் கவி லரி த்ராம்ப்ளே அவர்களின் ‘உறங்காத உள்மனது’ - என்ற நிறுத்தல் குறிகளே இல்லாத - நெடுங்கவிதைநூல் பற்றித் ‘திண்ணை’யில் ஏற்கெனவே தெரியப்படுத்தியுள்ளேன். அதன் உணர்த்தல் உத்தி [“மென்மையாக, ஆனால், ஆகவும் அழுத்தந்திருத்தமாகப் பெண்மனத்தின் உள்ளாழத்தை உணர்த்தல்”] இவ்விருவர் கவிதைகளிலும் இருபத்திரண்டு ஆண்டு இடைவெளியிலும் பதிந்திருப்பது கண்டு வியந்து போனேன். ‘காலம், நாடு என்னும் இடைவெளிகள் கவிஞர்களுக்கு இடையில் இல்லை’ என்பதற்கு இதுவும் ஒரு சான்று. நன்றி: திண்ணை.காம்

25.8.06

புதுச்சேரி மாநிலப் பழமொழிகள்

புதுச்சேரி மாநிலப் பழமொழிகள் - பேராசிரியர் அ. பசுபதி (தேவமைந்தன்) இன்றைய புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாஹி யேனாம் ஆகிய பகுதிகளைக் கொண்டது. பிரஞ்சுக் குடியேற்றமாக விளங்கியதன் ஆரோக்கியமான அடையாளங்களையும் பெற்றுள்ளது. புதுச்சேரியும் காரைக்காலும் தமிழ் பேசும் மக்களைக் கொண்டது. நாம் பார்க்கும் பழமொழிகள் புதுச்சேரியிலும் காரையிலும் புழங்கும் - வழங்கும் தமிழ்ப்பழமொழிகள். அவற்றில் ஏற்பட்டுள்ள பிறமொழித் தாக்கம், குறிப்பாக பிரஞ்சு தெலுங்கு ஆகிய மொழிகளின் தாக்கம் மிகுதியாகவும் மலையாள(மாஹி)மொழியின் தாக்கம் இல்லாது போகவும் மேற்குறிப்பிட்ட யூனியன் எல்லைப் பகுதி - குடியேற்றம் ஆகிய காரணங்களைச் சுட்ட முடியாது என்பது முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியதாகும். தமிழகத்துக்கும், தமிழ்பேசும் பகுதிகள் பலவற்றுக்கும், புதுச்சேரி-காரைக்காலுக்கும் பொதுவான தமிழ்ப்பழமொழிகள்; புதுச்சேரிக்கே உரிய பழமொழிகள் என்று புதுச்சேரிப் பழமொழிகளை இரண்டு பகுதிகளாகப் பகுக்கலாம். தமிழகத்துக்கும், தமிழ்பேசும் பகுதிகள் பலவற்றுக்கும், புதுச்சேரி-காரைக்காலுக்கும் பொதுவான தமிழ்ப்பழமொழிகள்: இத்தகைய பழமொழிகள் சிலவற்றை இங்கே தருகிறேன். “பறி நெறைஞ்சா கரையேறுவேன்.” புதுச்சேரியிலுள்ள ஏரி, குளப்பகுதிகளில் புழங்கும் இந்தப் பழமொழியின் பூர்விகத்தை 1886-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சிவப்பிரகாசபண்டிதர் இயற்றி யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் - யாழ்ப்பாணம் சைவப் பிரகாச சபையின் மூலம் 1893இல் பதிப்பித்த ‘பாலபாடம்’ நூலில் பார்க்கலாம். நடையழகு கருதி அதை அப்படியே தருகிறேன்: “எந்த உயிரையும் கொல்லாத ஒரு துறவி ஓர் ஏரிக்கரைமேற் சென்றார். அப்போது மீன் பிடிப்பவன் ஒருவன் அந்த ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தான். அத்துறவி அவனைப் பார்த்து இரக்கமுற்று, “ஐயோ! நீ எப்போது கரையேறுவாய்,” என்றார். அவன், “ ஐயா! என் பறி நிரம்பினாற் கரை ஏறுவேன்,” என்றான்.” ஆக, நூற்றிருபது ஆண்டுகளுக்கு முன்பே யாழ்ப்பாணத்தில் நன்கு புழக்கமாக இருந்த சிறார்க்கான கதையிலிருந்து இப்பழமொழி உருவானது என்று எடுத்துக்கொள்வதை விடவும், நன்கு புழக்கத்திலிருந்த அப்பழமொழியிலிருந்தே அக்கதை உருவாக்கப்பெற்றது என்று கொள்வது மிகவும் பொருத்தம். ‘பானைச்சோற்றுக்கு பதமொன்று’ என்ற நியாயப்படி சான்று ஒன்றை விளக்கமாகப் பார்த்தோம். மற்றவை: சாதியுணர்ச்சியால் மொழியப்பெறுபவை: பள்ளிக்குப்பத்துக்கு அம்ம(ப)ட்ட(ன்) வாத்தி (பாகூர்) பள்ளிக்குப் பல்லு பா(ர்)ப்பானுக்கு முழுக்கு (தொண்டமா[ன்]நத்தம்) பள்ளி கையில பணமிருந்தா பாதி ரத்திரி’ல பாடுவான் (புதுச்சேரி) ஏறும்போது ஒரு புத்தி இறங்கும்போது ஒரு புத்தி (மங்கலம்) சோழியன் கும்முடி சும்மா ஆடுமா? (மங்கலம்) [கும்முடி < குடுமி] கெட்டுப்போன பாப்பானுக்கு செத்த மாட்ட சீதனமா கொடுத்த மாதிரி (ஐயன்குட்டிப்பாளையம்) முதலியார் ஜெம்பம் வெளக்கெண்ணெய்க்கு கேடு} தமிழ்நாடு செட்டியார் ஜெம்பம் வெளக்கெண்ணெய்க்கு கேடு} காரைக்கால் உதைப்பானுக்கு வெளுப்பான் சாதி வண்ணான் (காரைக்கால்) செத்தாத்தான் தெரியும் செட்டியார் வாழ்வு (காரைக்கால்) உடையார் ஊட்டு மோருக்கு ஆப்பைக் கணக்கு இன்ன? (பாக்கமுடையான்பட்டு) ஊருக்கு ஒழைக்கிறவங் கிராமணி (மங்கலம்) முத்துமுத்துக் கிராமணி பேச்சு வூட்டுக்குப்போனா வண்டை வண்டைதா[ன்] (பெரிய சந்தை) கிள்ளி எடுக்க சதை இல்ல பேரோ தொந்தியா பிள்ளை (கோவிந்தசாலை) கூப்புடலேன்னு கோவிச்சுக்காதீங்க, மிஸ்சியே! கூப்புட்டேன்னு வந்துடாதீங்க (புதுச்சேரியில், படித்தவர்களின் வட்டாரத்தில் புழங்குவது. 'மிஸ்சியே' என்பது 'ஐயா'/ 'சார்' என்பதற்கான பிரஞ்சுத்தமிழ்ச்சொல்.) திசைகளில் வாழ்பவர்களின் செயல்களால் வெறுப்புற்றுச் சொல்லப்படுபவை: வடக்கத்தியானையும் வயித்து வலியையும் நம்பக்கூடாது. (மங்கலம்) தெக்கத்தியானுக்கு பெண் கொடாதே தெக்கத்தியானொட பெண் எடாதே (புதுச்சேரி) தெக்கத்தியான் சம்பந்தம் தெருவோரம் சம்சாரம் (புதுச்சேரி) என்னடி அம்மா தெக்கத்தியா எப்ப பாத்தாலும் தொள்ளக் காது? (புதுச்சேரி) தொழில் அடிப்படையிலானவை: கம்பத்துல ஏறி ஆடினாலும் கீழ எறங்கி வந்துதான் காசு வாங்கணும் (காரைக்கால்) ஊருக்கு ஒரு தேவடியா ஆருக்குண்ணு ஆடுவா (காரைக்கால்) எல்லாருக்கும் சொல்லுமாம் பல்லி கழனிப்பானயில வுழுமாம் துள்ளி (காரைக்கால்: சோதிடர் பற்றி) உதைப்பானுக்கு வெளுப்பான் சாதி வண்ணான் (காரைக்கால்) இடையனுக்குப் புத்தி பிடரியில (காரைக்கால்) கம்புக்கு கள எடுத்த மாதிரியும் ஆச்சு; தம்பிக்கு பொண்ணு பாத்த மாதிரியும் ஆச்சு (காரைக்கால்) கப்பக் காரன் வாழ்வு காத்தடிச்சா போச்சு (காரைக்கால்) புரோகிதம் பண்ணி [அய்யர்] கொண்டாற பொருளுக்கு அறுபத்தாறு பை (பஜனைமடம்) புதுச்சேரிப் பழமொழிகள் - பொதுவானவை குந்தன இடத்தை விட்டு எழுந்திருக்க மாட்டான் குயிலாப்பாளையத்தான் அவனுக்கு ஏழுகாணி விஸ்தாரமாம் சந்தனப்பொட்டு (செல்லிப்பட்டு) சலிப்போட சம்மந்தி இழுத்தாளாம் இலைபறிக்க (மங்கலம்) ஆந்தநேயம் கைகாட்டி(மங்கலம்) [‘ஆந்தனையும் கைகாட்டி’ - வைணவப் பயன்பாடு] தான் போறது உத்தமம், தம்பி போறது மத்திமம், ஆளு போறது அத்துவானம் [மங்கலம்] ஆரால கெட்டே? நோராலே கெட்டே. [ஆராலே கெட்டேன்? நோராலே கெட்டேன் - என்று சொல்வதும் உண்டு. ‘நோராலே’ ( = வாயாலே) என்ற தெலுங்குச் சொல் இலாசுப்பேட்டையில் மூன்று தலைமுறைகளுக்குமேல் வாழும், தெலுங்கு தெரியாதவர் வாயில் புழங்குகிறது.] ஊருக்கு ராஜாவானாலும் தல்லிக்கு பிட்ட’தா [தெலுங்குத் தமிழர் சொல்வது] ஈயத்தப் பாத்து இளிச்சதாம் பித்தள [புதுச்சேரி] வைத்தியருக்கு ஊரெல்லாம் சிநேகிதம் [புதுச்சேரி] ஆடு அரைநாழி மாடு மத்தியா(ன்)னம் [இலாசுப்பேட்டை; பொருள்= வாங்கிக் கொடுத்த பொருளை சீக்கிரமா வீணாக்கி விட்டால் பெரியவர்கள் சொல்வது] ஆளானாலும் ஆள் அரியாங்குப்பத்து ஆள் [திம்மப்பநாயக்கன்பேட்டை] பாத்தா ஒரு வேல பாக்காட்டா ஒரு வேல [இலாசுப்பேட்டை: பொருள்= பணியாளர்கள் செயல்] முன்னால ஒன்னு பின்னால ஒன்னு [தட்டாஞ்சாவடி: பொருள்= நமக்கு வேண்டியவர், நமக்கு முன்னால் ஒரு மாதிரியாகவும்; நமக்குத் தெரியாமல் மாறான மாதிரியாகவும் நடந்து கொள்வது] ஆளிக்காரன் ஆளியேத்தறான் போலிக்காரன் போலியேத்தறான் [இலாசுப்பேட்டை: பொருள்= அவனவன் வேலையை அவனவன் பார்க்கிறான் - மற்றவர்களைப் பற்றி எங்கே கவலைப்படுகிறார்கள்?] கெரடி கத்தவன் இரடி வுழுந்தா அதுவும் ஒரு வித்தை’ம்பான். [இலாசுப்பேட்டை: கெரடி=கரடிவித்தை/சிலம்ப வித்தை; இரடி=இடறி] வெக்கங்கெட்ட பொண்டும் வெக்கப்பட்ட வேசியும் வேலக்கு உதவ மாட்டாங்க (புதுச்சேரி) வெள்ளாட்டிக்குச் சன்னதம் வந்தா வுழுந்து வுழுந்து கும்பிடணும் (புதுச்சேரி) உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி போல முழிக்கிறயே (புதுச்சேரி) ஆட்டுக்கும் மாட்டுக்கும் ரெண்டு கொம்பு அய்யங்காருக்கு மூணுகொம்பு (புதுச்சேரி) என்னக் கெடுத்தது நரெ எம் மவளெக் கெடுத்தது மொலெ (செக்குமேடு) தேவடியா இருந்து ஆத்தா செத்தா கொட்டுமுழக்கு தேவடியா செத்தா ஒண்ணுமில்லே (செக்குமேடு) பழய மொறத்துக்கு சாணி கெழக்கொடலுக்கு சோறு (காரைக்கால்) ஊருக்குள்ளது உனக்கு (காரைக்கால்) சீலைப்பாய் ஈழம்போய் சீனி சர்க்கரை கட்டுமா? (காரைக்கால்) [உச்சரிப்பு: ஜீனி < சீனி] ஆண்டி குண்டியத் தட்டுனா பறக்குறது சாம்பல் மட்டுந்தான் (காரைக்கால்: கோவில்பத்து: சீமான் சுவாமிகள் ஒடுக்கம் அருகில் சாமியார் ஒருவர் சொன்னது) முதலியார் ஜெம்பம் வெளக்கெண்ணெய்க்கு கேடு} தமிழ்நாடு செட்டியார் ஜெம்பம் வெளக்கெண்ணெய்க்கு கேடு} காரைக்கால் கைக்குக் கை நெய் ஊத்தனாலும் ஊங்கணக்கு வேறதாண்டி’ன்னானாம் (ஐயன்குட்டிப்பாளையம்) வண்ணான்கிட்ட துணியப் போட்டுட்டு கொக்கு பின்னால நின்னாளாம் (ஐயன்குட்டிப்பாளையம்: 'வண்ணான்கிட்ட துணியப் போட்டுட்டு கொக்குக்குப் பின்னால அலைஞ்சமாதிரி' என்றும் சொல்வதுண்டு) ஆத்துல வருது மணல்ல சொருவுது (ஐயன்குட்டிப்பாளையம்) [இதை, 'ஆத்திலே ஊருது மணல்'லே சுவறுது' என்றும் 'ஆத்துல வெளையுது மணல்ல சிதறுது' என்றும் சொல்வதுண்டு] *ஆத்தாளுக்கு ஒரு சீத்தாளு அடுப்பாங்கரைக்கு ஒரு தொடப்பக்கட்ட (சோலைதாண்டவன்குப்பம்) *ஆட்டாளுக்கு ஒரு மோட்டாளு அடைப்பக்காரனுக்கு ஒரு தொடப்பக்கட்ட(தமிழ்நாடு) *ஆட்டாளுக்கு ஒரு சீட்டாளு அடுப்பாங்கரைக்கு ஒரு தொடப்பக்கட்டை (மங்கலம்) உள்ள புள்ளயே ஒரல நக்கியிருக்க, மற்றொரு புள்ளைக்குத் திருப்பதி நடந்தானாம் (சோலைதாண்டவன்குப்பம்) *கூரையேறி கோழிபிடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் பாக்க போறானாம்(சோலைதாண்டவன்குப்பம்) ஆளப்பாத்தா அழகு போல வேலையப் பாத்தா எழவு போல (மாத்தூர்) நெல்லு வேய்க்க நெனவில்ல அரிசி அளக்க அறிவு இருக்கு (ஐயன்குட்டிப்பாளையம்) *கெட்டுப்போன பாப்பானுக்கு செத்த மாட்ட சீதனமா கொடுத்த மாதிரி (ஐயன்குட்டிப்பாளையம்) வவ்வாமீனும் வஞ்சிரமும் வலையக் கொண்டு போகுதே’ன்னானாம் (சின்ன காலாப்பட்டு) எண்ணையாவறதுக்கு எள்ளுதான் காயுதுண்ணா எலிப்புழுக்கையுமா? (முருங்கப்பாக்கம்) நாத்தச் சாணிய மிதிப்பானே(ன்)? நல்ல தண்ணிய வீணத்துக் கழுவகொட்டுவானே(ன்)? (பாகூர்) செத்தவன் கையில வெத்தல பாக்கு கொடுத்துப் பண்ணின சம்பந்தம் (காரைக்கால்) செத்தவன் சூத்து தெக்கே இருந்தா என்ன வடக்கே இருந்தால் என்ன (காரைக்கால்) செத்தவன் சூத்து கெழக்கே இருந்தா என்ன மேக்கே இருந்தால் என்ன (தமிழ்நாடு) பாலியல் தொடர்பானவை - கொச்சை வழக்கில் அமைந்தவை ஆடு காப்பணம் புடுக்கு முக்காப்பணம் (காரைக்கால்) ஆடி மாசத்துல குத்துன குத்து [அடுத்த] ஆவணி மாசத்துலயே உளப்பு [உளச்சல்] எடுத்துச்சாம் (இதனால்தான், 'ஆடிக்கு அழக்காத மாமியாரைத் தேடிப் பிடிச்சு செருப்பாலடி' என்ற பழமொழியும் வந்தது) கருவாட்டுக்காரி சந்துவிட்டா நா' வ[வி]ந்துவிட்டேன் (பெரிய சந்தை) கரிசனப்பட்ட மாமியா மருமானப் பாத்து ஏங்கினாளாம் (புதுச்சேரி) அண்டங்காக்கா கர்ரு'ன்னா ஆமடையானைப்போய் அப்பாடின்னு கட்டிக்குவாளாம் (புதுச்சேரி) காசுகுடுத்தா வேசி வருவா கலநெல்லக் குடுத்தா அவ அக்காளுமாத்தாளுங்கூட வருவாங்க (கோர்க்காடு) காசுக்கொரு சேலை வித்தாலும் நாய்சூத்து அம்மணம். (புதுச்சேரி) காசுக்குக்குப் பத்து பொண்டாட்டி கொசுறுக்கு ஒரு குத்து (செக்குமேடு) காசுக்குப் பாத்தவன் கழுதகிட்டப் போனானாம் (செக்குமேடு) கெழவங்குடுத்த பணத்துக்கு நரை உண்டா? (செக்குமேடு) வலியவந்தா, கிரந்திக்காரி. (செக்குமேடு) கூட்டம் பெருத்தா குசுவும் பெருக்கும் (புதுச்சேரி) பீக்கு முந்துன குசுவே பூண்டு தின்ன வாயே (புதுச்சேரி) பீத்தின்கறவன் வூட்டுக்குப் போனே'னா பொழுது விடியற வர பேலச்சொல்லி அடிப்பான் (முதலியார்பேட்டை) முகதரிசனம் முக்கால் மைதுனம் (உயர்சாதி வழக்கு) அசைப்புக்கு ஆயிரம் பொன் வாங்குவாள் (புதுச்சேரி: பாலியல் கதை) அஞ்சுறவனக் குஞ்சும் விரட்டும் (புதுச்சேரி) அந்திப்பீ சந்திப்பீ பேலாதானை ஜாமப்பீ தட்டி எழுப்பும் (புதுச்சேரி) புள்ளக்காரி குசுவுட்டா புள்ளமேல சாக்கு (புதுச்சேரி) ஆம்பளையான் வைததப் பத்தி அயல்வீட்டுத் தச்சனைக் கோணல் நிமித்தச் சொன்னாளாம். (கி.ராஜநாராணனும் கழனியூரனும் தொகுத்த 'மறைவாய் சொன்ன கதைகள்' நூலில் இதன் கதை உள்ளது.) வயசுக்கு நரச்சுதோ மசிருக்கு நரச்சுதோ (புதுச்சேரி) வெடம் [இடம்] கெடைக்காத தோடம் மெச்சவுந்தான் பதிவிரதை (பாக்கமுடையான்பட்டு) ஒரல்ல துணி கட்டி இருந்தாலும் உரியத்தான் பாப்பான் வாழைகிட்ட சேல காஞ்சாலும் உத்து உத்தே பாப்பான் (பண்டசோழநல்லூர்) எலி அம்மணமாவா போவுதுங்கிறான் (மதகடிப்பட்டு) உள்ள இருக்கு கச்சக் கருவாடு நாத்தம் வெளிய பாத்தா வெள்ளையுஞ் சள்ளையும் (புதுச்சேரி) நெனச்ச நெனப்பென்னடி? அண்ணா'ன்னு அழச்ச மொறை என்னடி? (புதுச்சேரி) புதுச்சேரி தமிழ்நாடு இரண்டுக்கும் பொதுவானவை: ஒண்ணுந் தெரியாத பாப்பா இழுத்துப் போட்டாளாம் தாப்பா மயிருள்ள சீமாட்டி வாரி முடிச்சுக்கிறா வந்தா வரவுல வை வராட்டினா செலவுல வை டம்பாச்சாரி பொடிமட்டை தட்டிப்பாத்தா வெறும்பட்டை (புதுச்சேரியில் ‘பொடிப்பட்டை’ என்று பெரும்பாலோர் சொல்வார்கள்] கும்பி கூழுக்கு அலையுதா(ம்) கொண்டை பூவுக்கு அலையுதா(ம்) அறுப்புக் காலத்துல எலிக்கு அஞ்சு பெஞ்சாதி சின்னிக்குத் தேள் கொட்டனா தென்னமரத்தில நெறி கட்டிக்கிச்சா (புதுச்சேரித் தெலுங்குத் தமிழர் சொல்வது. தமிழ்நாட்டிலும் புதுவையிலும் இதைத் ‘தென்னமரத்திலே தேள்கொட்டப் பனமரத்துல நெறிகட்டிடுச்சாம்’ என்று சொல்வர்.) கூரையேறி கோழிபிடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் பாக்க போறானாம் ஆத்தாளுக்கு ஒரு சீத்தாளு அடுப்பாங்கரைக்கு ஒரு தொடப்பக்கட்ட (புதுச்சேரி) ஆட்டாளுக்கு ஒரு மோட்டாளு அடைப்பக்காரனுக்கு ஒரு தொடப்பக்கட்ட(தமிழ்நாடு) ஆட்டாளுக்கு ஒரு சீட்டாளு அடுப்பாங்கரைக்கு ஒரு தொடப்பக்கட்டை (புதுச்சேரி - மங்கலம்) [ஆட்டாள்=இடையன்; மோட்டாள்=அவனுக்கும் குற்றேவல் செய்யக் கிடைக்கிற எளியவன்] வெங்காயம் அரியும்போது வேண துக்கம் வந்துச்சாம் (காரைக்கால் - தமிழ்நாடு) ஆனா அச்சில வாரு ஆகாவிட்டா மொடாவுல வாரு (காரைக்கால் - தமிழ்நாடு) அகத்துல போட்டாலும் அளந்து போடு (காரைக்கால் - தமிழ்நாடு) ஆத்துல போட்டாலும் அளந்து போடு (தமிழ்நாடு) கோழிய கேட்டுக்கினா மெளகா அரைப்பது (காரைக்கால்) மீனு கழுவி பூனைய காவல் வெச்ச மாதிரி (காரைக்கால்) முதல் நாள் வாழ எல, இரண்டாம் நாள் தைய எல, மூணா(ம்) நாள் கையில (காரைக்கால்) செத்தவன் காதுல சுக்கு கரைச்சு ஊத்தன மாதிரி (காரைக்கால்) செத்தவன் கையில வெத்தல பாக்கு கொடுத்துப் பண்ணின சம்பந்தம் (காரைக்கால்) செத்தவன் சூத்து தெக்கே இருந்தா என்ன வடக்கே இருந்தால் என்ன (காரைக்கால்) செத்தவன் சூத்து கெழக்கே இருந்தா என்ன மேக்கே இருந்தால் என்ன (தமிழ்நாடு) வீடு எரிஞ்சு சுவரு நிண்ணுச்சு பெருமாள் புண்ணியம் (காரைக்கால்) அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறி (புதுச்சேரி தமிழ்நாடு - இரண்டுக்கும் பொது: கதை:- இரண்டு நண்பர்களும் கரடியும்) அவன் மூத்திரம் வெளக்கா எரியிறது (புதுச்சேரி தமிழ்நாடு - இரண்டுக்கும் பொது) அள்ளிக் கொடுத்தா சும்மா அளந்து கொடுத்தா கடன் (புதுச்சேரி தமிழ்நாடு - இரண்டுக்கும் பொது) பொண்டாட்டி சூத்துக்குப் பிரமணையாயிருக்கான் (புதுச்சேரி தமிழ்நாடு - இரண்டுக்கும் பொது: தி. தெ. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பழமொழி அகரவரிசை. திசம்பர் 1952. எண்: 8344) ----------------------------- இன்னும் இவைபோல எத்தனையோ பழமொழிகள் புதுச்சேரிக்கும், புதுவை தமிழ்நாட்டுக்குப் பொதுவாகவும் இருக்கின்றன. இந்தத் துறையில் பலருக்கு ஆர்வம் ஏற்படவே, வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் பேசியும் ஆய்வுக்கட்டுரை வழங்கியும் வருகிறேன். சமீபத்தில் ஆகஸ்ட் 23 முதல் 25 முடிய French Instititute Of Pondicherry - Department Of Indologyயும் Mysore - Centre Of Excellence For Classical Tamil, CIILஉம் இணைந்து நடத்திய 'International Conference - Streams of Language: Dialaects in Tamil From Early To Modern Times As Reflected in writing And Speech: Dialects in History And Literature'இலும் இது குறித்த "Identifying Puducheri Proverbs" என்ற ஆய்வுக்கட்டுரையை வாசித்துள்ளேன்.

13.8.06

தேரு பிறந்த கதை - வளவ. துரையனின் சிறுகதைத் தொகுதி அறிமுகம்

சாதாரணமான மனிதர்கள் மேல் ஆதிக்கசக்திகளின் நுண்ணரசியல் - தேரு பிறந்த கதை - வளவ. துரையனின் சிறுகதைத் தொகுதி அறிமுகம் - தேவமைந்தன் "வாயிலிருந்து வரும் சொற்கள் மோசமாகத்தான் இருக்கும்" என்று மொழி அடையாளப் படுத்தப்பெறும் முனுசாமிக்கிழவன் தன் ஊருக்கே கதைசொல்லி ஆனவன். "தேரு புடிக்கும்டா, தேருல சாமி பாக்கப் புடிக்காது, அது பெரிய கதை" என்று தொடங்கிச் சொல்லப்படும் சிறுகதைதான், இத்தொகுதிக்கான தலைப்பைத் தந்தது. பதினாறு கதைகள் இதில் உள்ளன. 'தேரு பிறந்த கதை,' கோயில் கட்டிய சாதாரண மக்களைக் காண அவர்களின் வீடுதேடிவரும் கடவுளின் கதை. அவராக வரவில்லை. எட்டாத உயரத்திலேயே எளிய மக்களுக்கு அவர் என்றும் இருக்கும்படியாக, சமூகத்தின் ஆதிக்கவாதிகள் திட்டமிட்டுத் தேர்த்திருவிழாக்காட்டும் நுண்ணரசியல் அது. தன் பிள்ளைகளிடம் விழிப்புடன் இருக்க முடியாமல் ஏமாந்துவிட்டு, கடன்கொடுத்தவர்களை ஏமாற்றப் பார்க்கிறவர்களை மிரட்டுவதற்காக அவர்களிடம் காசுபெற்று அடுத்த நாளைய பொழுது ஓடுமாறு பார்த்துக் கொள்ளும் சுல்தான் பாய். "தமிழ்ப் படிக்கிறவன் யாரும் உருப்பட்டான்?" என்பவரின் மகனாகப் பிறந்து சவுளிக் கடையில் உட்கார்ந்திருக்க வேண்டி வந்தபொழுதும் - ஊரில் தமிழ் வளர்க்கவும் திருக்குறள் பரப்பவும் சக இளைஞர்களின் 'ஊர் சுற்றும் வழக்கம்' மாற்றவுமாக ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடிப்பதில் வெற்றிபெற்றுவந்த கோவிந்தன் திடீரென "நெருநல் உளனொருவன் இன்றில்லை" என்ற திருக்குறளுக்குத் தானே இலக்காகி திடுமென மறைந்த அவலம். ஒரு சாதாரண மனிதக் கதைப்பாத்திரம் + நெஞ்சை நெருடும் சக மானுட இழப்பு. இரண்டும் குழைய உருவான கதையே 'கால மாற்றம்.' இந்த உலகில் சாதாரணமான மனிதனாக உலவுவது கூட "ஐயே! மெத்தக் கடினம்" என்பதை உணர்த்தும் தொன்மச் சார்புடைய கதை - 'சில சிதைவுகள்.' சாதி மாறித் திருமணம் பண்ணிக் கொண்ட ஒரே காரணத்துக்காக, "என் மவன் கூட எவன்டா போட்டிக்கு வர்றது. நீங்கள்லாம் கா காணி அண்டை வெட்டறத்துக்குள்ள எம்மவன் முக்காகாணி வெட்டுவான்டா!" என்று மார்தட்டிய தந்தையாலேயே விரட்டப்பட்டும்; தாய்மாமனால் உயிருக்குக் குறிவைக்கப்பட்டும் வாட்டமுற்று வேற்றூருக்குச் சென்று குடியேறுகிறான் முருகன். கரும்பு வெட்டுவதில் மிகுந்த தேர்ச்சிபெற்றவனாக இருந்தும் பயனில்லை. அவனைச் சாதிமாறிக் கல்யாணம் பண்ணிக்கொண்ட பவளக்கொடிக்கும் தன் சொந்த ஊரில் அவமானமே. கிராமங்களில் சாதிக்கட்டுமானத்தின் பிடி, ஆகவும் கோரமானது. வந்தேறிய ஊரிலும் குடிசை கட்டிக் கொண்ட இடம் - பாதிரியார் பள்ளிக்கூட இடமா? புவனகிரி கோயில் இடமா என்று பத்து வருஷங்களாக நீடித்த தாவாகூட - முருகனும் பவளமும் வந்து ஊரில் குடியேறிக்கொண்ட 'நேரம்' - உடனே தீர்ந்து போகிறது. பள்ளிக்கூடம் பக்கம் தீர்ப்பாகிறது. ஆட்சியர் ஆணை, முருகனை இடமற்றவன் ஆக்குகிறது. மைதானத்துக்கும் சாலைக்கும் இடையிலிருந்த எட்டடியில் ஒண்டுகிறான், தன் மூன்று மாதக் கருவைச் சுமக்கும் மனைவியுடன். வந்த ஊரில் ஒரு பத்தடி இடம் பெறுவதற்காக அந்த ஊரின் சிறிய-பெரிய நாட்டாண்மைகளைக் கெஞ்சுகிறான். இருவரும் சம வயது சம வலிமை சம தலைக்கட்டு உடையவர்கள் என்பது மட்டுமல்ல; சுயநலத்திலும் சமமாகச் சாமர்த்தியம் காட்டுபவர்கள்தாம். வெளியூர்க்காரனுக்கா இடம் கொடுப்பார்கள்? பத்தடி என்றாலும்கூடக் கொடுத்து விடுவார்களா? நிச்சயமற்ற நிலைமையை மட்டும் கொடுத்து அனுப்புகிறார்கள். 'இடம்' - இத்தொகுதியின் சிறந்த சிறுகதை. இது பொருளாதார உலகம். சந்தை உறவுகளே சமூகம் எங்கும், பணத்துக்குப் பின்னே நெஞ்சிளைக்க ஓடுகிற நிலை பலருக்கும் வாய்த்துவிட்டது. பணம் பண்ணாதவன் பாடு, பரிதாபம். திருமணம் என்ற சமூக நிறுவனத்தின் முறையியலில் பணமே பிரதானம். 'குறை' என்ற கதை இதைத்தான் படம் பிடிக்கிறது. 'கடன்' என்ற சிறுகதையும் - குடும்ப உறவுகளுக்குள்ளும் பணம் விளையாடும் குரூரத்தைத்தான் சித்திரிக்கிறது. 'சில சிதைவுகள்' போன்றே 'நயனபலி' என்ற சிறுகதையும் தொன்மச்சாயல் படிந்தது. வங்க தேசத்து 'நவீன பாரதம்' போன்று, இந்த நிகழ் உலகத்தின் நிலைப்பாட்டைப் பகைப்புலம் ஆக்கி, பழங்கால உலகின் கதை நிகழ்வை ஆய்வு முடிபுக்கு உட்படுத்தும் கதை. திருத்தொண்டர் மாக்கதையின் இலை மலிந்த சருக்கம் தரும் கண்ணப்பன் கதை இங்கு மறுவாசிப்புக்கு உள்ளாகிறது. முதியவர் வினாவுக்கு விடையாக, "இந்த உலகிற்கே வந்தாகி விட்டது; [இந்த] மலைக்கு வந்ததா தப்பு?" என்று அவன் "பேசிக் கொள்வது" குறிப்பிடத்தக்கவாறு ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்தது. மனிதரின் ஆழ்மனத்தில், காலங்காலமாய்த் தொன்மக் கதைகளின் கூறுபாடுகள் சில தேவையில்லாமல் தம் தடம் பதித்துள்ளன. அவற்றுள் கருடன் ஒரு குறியீடு. ஆந்தை[கோட்டான்] முதலானவை மற்ற நம்பிக்கைக் குறியீடுகள். 'கருடன்' கதையில், யதார்த்தப் பிரச்சினைக்கு வானத்தில் 'கருடப்பட்சி தேடிப்' பரிகாரம் அடைய முற்படும் முருகேசனுக்கு - அவருடைய எல்லா 'லாஜிக்'குகளயும் ஏமாற்றிவிட்டுக் கருடப்பறவை எதுவும் தென்படாமலேயே போய்விடுவதும் நிகழ்வில் இழப்பு நேர்ந்த செய்தி அவரை நாடி வருவதும் அதற்குப் பின்னே வானப் புலத்தில் கருடன் ஒன்று வட்டமிட்டுக்கொண்டே தொடர்வதும் ஆழ்மன அவசத்தோடு இயற்கையான செயல் இணவதை நேர்த்தியாகப் புனையும் கதாசிரியரின் உத்தியாகும். இவ்வாறான, வளவ. துரையனின் 'தேரு பிறந்த கதை' என்ற சிறுகதைத் தொகுதி கிடைக்கும் இடம் :- மருதா, 226 (188) பாரதி சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014. பக்கம் : 112 விலை : ரூ.60/- **** நன்றி: திண்ணை.காம்

செருப்பாலடித்த சமூகம்

செருப்பாலடித்த சமூகம் - தேவமைந்தன் பசித் தளர்ச்சியில் பாதி மயக்கத்தில் இணையம் உலாவிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன், வீட்டுக்கு. விமானதளச் சாலை இறக்கத்தில் தெரு முடுக்கொன்றில் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்புவரை குப்பைத்தொட்டி ஒன்றிருந்த இடத்தில், நடுத்தர வயதுக் குப்பை பொறுக்கும் பெண் சொந்தமாய் ரகசியங்கள் எதுவும் வைத்துக்கொள்ள வாய்ப்பில்லாமல் மல்லாந்து கிடந்தாள். மனிதம் உந்த அருகில் சென்றேன். “ஏன்’மா - சாராயமா? எ(ழு)ந்திரு எ(ழு)ந்திரு..” என்றேன். கொஞ்சம் தற்காலிகமாகவும் மிச்சம் போனால் போகிறதென்றும் பாதிக்கண்களின் மீதி திறந்தாள். உளறினாள். “மிஸ்’ஸே!* எம் புருஷனுந்தான் ஊத்திக்கிணு ஊத்திக்கிணு பூட்டான்.. அவனெ கேக்காம வுட்டுட்டு என்னெ வந்து கேக்(கி)றீயே! நீயும் ஆஞ்சாதி’ங்குற திமிருதானே?” பக்கத்தில் நடந்து வந்தவர் சொன்னார்: “நீங்க பாட்டுக்கு போக வேண்டியதுதானே? இதுங்களுக்கெல்லாம் நல்லது சொன்னால் மண்டை’ல ஏறுமா? சாதாரணமா’வே ஏறாது! இதுல சாராயம் வேற! போவீங்களா..ம்...ம்” கேட்டேன் அவரை, நறுக்கென்று: “நீங்கள்’லாம் பாத்துட்டுமட்டும் போறதுக்கா அவ’ அப்படி அங்க கிடக்கா? சொல்லட்டுமே.. தப்பாவா சொன்னா? ஞாயமான கேள்விதானே? புருஷன் குப்பை பொறுக்கினாரு. அவரு போனப்புறம் பொண்டாட்டியும்குப்பை பொறுக்கணுமா? விபத்துல போனா இத்தனை பணம்- மனுஷனுங்கனுங்க உண்டாக்குற அழிம்புல போனா இத்தன லட்சம்’னு அறிவிக்கிறாங்காளே! இந்த ஜீவன்களுக்கு எந்த ஞாயமும் இல்லியா?” கேட்டுவிட்டு விடுவிடுவென நடையைக் கட்டினேன். செருப்பால் அடித்த சமூகம். ****** *மிஸ்ஸே = ஐயா/'சார்' - புதுச்சேரி பிரஞ்சுத்தமிழ்ச் சொல். நன்றி: கீற்று.காம்

27.7.06

எண்ண முடியாத எண்ணப் பயிர்கள்!

பாவலர் இலக்கியனின் ‘பாவேந்தர் புரட்சி நூறு’ (பாக்கள்) -பேராசிரியர் அ.பசுபதி(தேவமைந்தன்) தமிழ்மாமணி மன்னர்மன்னன் அவர்களின் உணர்வுமிகுந்த அணிந்துரையும் தமிழுணர்வு மிகுந்த பதிப்பாளர் திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்களின் பதிப்புரையும் சூழ, முன்னுரையிலேயே ‘பாவேந்தர் புரட்சி நூறு’ என்னும் தன் பாத்தொகை நூலுலகில் நின்று நிலவும் என்பதற்கான கரணியங்களைக் கோட்பாட்டு அடிப்படையில் நம்முன் வைத்துவிடுகிறார் பாட்டறிஞர் இலக்கியன். உலகப் பாவலர்களின் வரிசையில் முகாமை தரப்பெற வேண்டியவர் பாவேந்தர்; அவரே புரட்சியின் வடிவம்; ஒரு வரலாறு; சுவைமிக்க பாவியம்; ஒரு வழிகாட்டி; ஒரு கலங்கரை விளக்கம். அவர்தம் படைப்புகள் திருத்தமான வாழ்க்கைக்குத் திருப்புமுனைகளாகும் - இருள்படிந்த வாழ்க்கைக்கு ஒளிவிளக்குகளாகும் - நம்மைக் கரைசேர்க்கும் பாட்டுப் படகுகளாகும். பாவேந்தர் புரட்சியே தமிழுக்கு உரிய இடம் அளிப்பதுதான். பாவேந்தர் புரட்சிநூறு என்னும் இந்நூலில் உள்ள கருத்துகள் என்றைக்கும் தேவைப்படுவன. மாந்தநேயம், பகுத்தறிவு, தமிழுணர்ச்சி என்ற மூன்றும் பாவேந்தரால் மிகுதியாக வலியுறுத்தப்பெற்றவை. இவை மூன்றையும் தமிழர்கள் கடைப்பிடிக்காவிட்டால் வாழ்க்கை ஏது? பாவேந்தருடைய அரிய வாழ்க்கை நிகழ்வுகளும் புரட்சிகளும் இந்நூலில் பாக்களாக்கப்பெற்றுத் தரப்பெற்றுள்ளன. அவர் சுட்டிய வாழ்க்கை நெறிகள் பொன்னகையில் மணிகள் பொதிந்துவைத்தாற்போல ஆங்காங்கு சுட்டப்பெறுகின்றன. அடிப்படையில் மாந்தரை ஆட்டிப்படைப்பது கடவுள் நம்பிக்கை ஆகும். அதிலிருந்து மதம் தோன்றி ஆத்மா மோட்சம் நரகம் முதலானவை கிளைக்கின்றன. ஒட்டுமொத்தமாக இவற்றை அடிப்படையிலேயே மறுத்தவர் பெரியார். ‘வெங்காயம்’ என்ற ஓர் ஒற்றை இயற்கைப் பொருட்சொல்லால் இவற்றைச் சுழற்றிச் சுருட்டிக் குளிகை உருவமாக எங்கும் பேசி வந்தார் பெரியார். அதுகுறித்த பெரியார் சொற்கள்: “எப்போதுமே நான் கடவுளையும் மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே ‘வெங்காயம்’ என்றுதான் சொல்லுவேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது; வெறும் சதை. அச்சொல்லின் பொருள் வெங்காயம் - வெறும் காயம்; உயிரற்ற உடல்; விதை இல்லாதது; உரிக்க உரிக்கத் தோலாகவே - சதையாகவே வந்து முடிவில் சூனியமாய் - விதை இல்லாத தன்மையதாய் முடிவது என்பது பொருள். ஆகவே விதை, வித்து இல்லாத காரணத்தால்தான் அதற்கு வெங்காயம் என்ற பெயர் உண்டாயிற்று. அது போன்றவைதான் கடவுளும் மதமும் ஆகும்.” (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்: மடலம்-2, வே. ஆனைமுத்து பதிப்பு, 1-7-1974; பக்கம் 1063.) முன்னாள் கடவுளை ஏற்று, பின்னாளில் உணர்ந்து கடவுளை மறுத்தவர் பாரதிதாசனார் என்ற பாவேந்தர் குறித்த தரவு பயின்று வரும் ‘புரட்சி மின்விசை’[ப.56] என்னும் 44-ஆம் பாட்டுக்குக் கரணியம், பெரியார்வழியைப் பின்னாளில் பாவேந்தர் போற்றியதேயாகும். இதே தரவானது சற்றும் மாறுபடாமல் ஏற்ற இடங்களில் இப்பாத்தொகையுள் பரந்து கிடக்கிறது. [தலைப்புகள் 5,19,21,44,50,63:பக்.17,19,33,62,75.] “தமிழர்கள் செய்த தவப் பயனாகக் கடந்த 2000 ஆண்டுகட்குப் பின்னர் நமக்குக் கிடைத்த ஒரே தலைவர் பெரியார். அவரால்தான், வீழ்ச்சியுற்ற நம் வாழ்வு வளம் பெற முடியும்” என்று அவர் தம் தலைமையுரை ஒன்றில் முழங்கியமை குயில் [2-1;நாள்:9-6-1959] இதழில் பதிவாகியுள்ளது.(பாவலர் இலக்கியன், பாவேந்தர் குயில் ஓர் ஆய்வு, பயோனியர் புக் சர்வீசஸ், சென்னை-5. திசம்பர்,1989. ப.143.) பாவலர் இலக்கியன் வரிகள்: “கடவுளை ஏற்றவர்! பின்னாள் உணர்ந்து கடவுளை மறுத்தவர் பாரதி தாசனார்.” அத்துடன் நிறுத்தினால் பாவேந்தரின் தனித்தன்மை புலப்படாது. மேற்படி கடவுட்கொள்கையில் ‘பிழைக்க’த் தெரிந்த பிறர் செய்தி என்னவாம்? “கடவுளை மறுத்துப் பின்னாள் பிழைக்கக் கடவுளை ஏற்று வாழ்ந்த வரும்,பலர்!” அதனால் எந்தப் பயனும் நாட்டுக்கு விளையவில்லை. அதனால் புரட்சி மின்விசையையே நாட்டுக்குத் தந்தார் பாவேந்தர் - என்பதை, “வண்ணம் மாறினால் வருமோ புரட்சி? எண்ண மாற்றமே எழுப்பும் புரட்சியை! மன்பதை மலர மாபெரும் புரட்சி மின்விசை தந்தவர் விளங்குபா வேந்தரே!” என்றவாறு தெரிவிக்கிறார் பாவலர் இலக்கியன். [மங்காத் தமிழின்] மாண்புறு பாவலன், எங்களின் ஏந்தல்[ப.57], தனிப்பெரும் பாவலன், தமிழ்த் தொண்டன், தமிழிசைக் காவலன், படத்துறைப் பாவலன், பாட்டுத் தலைவன், மக்கள் பாவலன், [உழைப்பவர் உறுதுயர் தீர்த்திட]அழைப்பு விடுத்தவன், சேவற்குரலோன், எரிகதிர்ப்பாவலன், [தன்னலம் துறந்த] தமிழின் வள்ளல் போலத் தன் இயல்பாலும் செயல்திறத்தாலும் தகுதியாலும் தனித்தன்மையாலும் பணிச்சிறப்பாலும் புரட்சி மனத்தாலும் போர்க்குணத்தாலும் பாவேந்தர் பெற்ற சிறப்புக்களைத் தன் இந்நூலின் தலைப்புகளாக்கியுள்ளார் பாவலர் இலக்கியன். மற்றவற்றைக் காட்டிலும் பாவேந்தரைப் புரட்சியின் எழுச்சியதன் இயல்பாகப் படிமநிலை(imagery)யில் காணும் பாவலர் உள்ளம் இதோ: “தீந்தமிழ்ப் புதுவைத் திருநகர் தன்னில் வேந்தென விளங்கிய வெற்றிப் பாவலன் ஏந்துகோட் டியானை எழுந்தாற் போல அழுந்திய பழமைக் களரினை யகற்றிப் பழுதிலாப் புலமைப் பாரதி தாசன் எழுந்தனன் ஈங்கே! எழுந்தது புரட்சி! விழுந்தது மடமை! விளங்கிய தறிவே! தொழத்தகு தமிழொளி தோன்றி எழுச்சி தந்தது எந்தமி ழோர்க்கே!” புரட்சியின் எழுச்சி தோன்றுமிடம் - ஊர், எத்தகையதாய் விளங்க வேண்டும்? ‘தீந்தமிழ்ப் புதுவைத் திருநக’ராய் விளங்க வேண்டும். அதன் இயல்புகள் நவிலப்பெறும் பாத்திறம் இதோ: “அலைகடல் விளங்கும் அழகிய மூதூர்! கலைபல வலர்க்கும் கவின்மிகு பேரூர்!” மறுக்க முடியுமா? மறுக்க மனம் வந்தால் அந்த மனம் யாருக்குச் சொந்தம் தெரியுமா? பாவேந்தர் கூற்றின்வழிப் பார்ப்போமா? “மன்னு தமிழ்க்குடியாம் வாழையடி வாழையென இந்நிலத்தில் எங்குறைவா ரும்தமிழர் - பன்னுமிந்த வாய்ப்பில்லார் தம்மை,அவர் வைப்பாட்டி மக்களை ஏற்கமாட் டோம்தமிழர் என்று” (பாரதிதாசன் பன்மணித் திரள், சென்னை, 1-8-1963) என்று பாவேந்தர் ‘தமிழர்’ என்று ஏற்க மறுத்தவர்க்குச் சொந்தம் அந்த மனம். இன்னும் புதுவையின் இயல்புகள், இயல்பாய் இலக்கியன் பாவரிகளாய் வருகின்றன: “தொலையா நல்லிசைத் தொல்லோர் மரபினர் விலையிலாப் பனுவல் விளைக்கும் சீரூர்!” -உண்மை. பரப்பளவு, மக்கள் தொகைக் கணக்கை வைத்துப்பாருங்கள். சுண்டைக்காய் மாநிலம் என்று பூசுணைக்காய்கள் சொல்லும் இந்தச் சிறிய, இந்திய ஒன்றிய எல்லையில் மட்டும் இந்நூல் உட்பட எத்தனை நூல்கள் தமிழ்க் கழனியில் விளைகின்றன என்ற கணக்கெடுத்துப் பார்த்தால் மலைத்துப் போய்விடுவார்கள் மற்றவர்கள். இயற்கை நலம், இனித் தொடர்கிறது: “நெய்தலும் மருதமும் நெடிது விளங்கும்! பெய்யும் மழையினாற் பெருவளஞ் சேரும்! நன்னீர் ஊற்றுகள் நலம்செயும்; எங்கும் பொன்னிறக் கொன்றை பூத்துக் குலுங்கிடும்! செம்புலம் ஒருபுறம் சிறந்து தோன்றும். வெம்மை தணிக்கும் வியன்பொழில் சூழ்ந்தே! நேருற விளங்கிடு நெடிய மறுகுடன் ஏர்பெற நிவந்த எழில்மா ளிகையொடு மரம்பல செறிந்து மாநிழல் தந்திடும்!” கழககால ஒளவைசொன்ன “அவ்வழி நல்லை வாழிய!” தொடர்கிறது: “கரவிலா நெஞ்சினர் கனிவுடன் வந்தவர்க் கீந்தும் இன்விருந் தோம்பியும் வாழ்ந்திடும் தீந்தமிழ்ப் புதுவைத் திருநகர்” -இத்தகைய திருநகரில்தானே ‘ஏந்துகோட் டியானை எழுந்தாற் போலே’ ‘வேந்தென விளங்கிய வெற்றிப் பாவலன்’ ‘பழுதிலாப் புலமைப் பாரதி தாசன்’ புரட்சியே எழுந்தாற்போல எழுந்திடல் இயலும்? ‘மக்கள் பாவலன்’[ப.33] என்ற - பாவேந்தர் புரட்சி நூறில் இருபத்தொன்றாம் பாட்டு, சமநிலையாகவும் செவ்வியல் முறையிலும் பாவலரின் பாவேந்தர் குறித்த வீறுகளைச் செப்பமாகப் பதிவுசெய்துள்ளது. வேறு சொற்களில் சொல்லப்போனால், ஏனைய பாடல்களில் புரட்சிப் பாவேந்தமாக நவிலப் பெற்றவற்றுக்கெல்லாம் சாரமான போக்கில் சரளமான நடையினில் அமைந்திருக்கிறது. மதுரை முல்லைப் பதிப்பகம் அறுபத்தெட்டாண்டுகளுக்கு முன்னர் மூன்றுருவா எட்டணாவுக்கு வெளியிட்ட ‘பாரதிதாசன் கவிதைகள்’ முதற் பகுதி நூலின் உள்ளுறைக்கு முந்திய பக்கத்தில் இடம் பெற்றுள்ள பாவலர் வால்ட் விட்மன் கருத்துக்குப் பொருந்தியிருக்கிறது. அது, “உள்ளத்தை வெளிப்படையாக, சீர்தளைகளுக்குக் கட்டுப்படாமல், தைரியமாகச் சொல்பவனே கவிஞன். அவன், எதுகை மோனையின் அடிமையல்லன். சொல்லிற்கும், யாப்பிற்கும், இலக்கணத்திற்குங்கூட அடிமையல்லன். அவன் அவற்றின் தலைவன்; கருத்தின் முதல்வன்; அவன் ஒரு படைப்புத் தலைவன். பாடலைப் பார்ப்போம். “தந்தை பெரியார் கொள்கையைத் தலைமேல் முந்தி ஏற்ற மூதறி வாளன். முன்னாள் கடவுள் வழியைக் காணினும் பின்னாள் அதனைப் பிழையென் றுணர்ந்தவன்! கண்டதைப் பாடும் கயமை விடுத்துளம் கொண்டதைப் பாடிய கொள்கை யாளன், மூட முட்புதர்க் காட்டினைத் தன்னுயர் பாடற் கருத்தால் பட்டிடச் செய்தவன்! எவ்வழி மக்களுக் கேற்புடைத் தென்றுணர்ந் தவ்வழிப் பாட்டை அளித்த தோன்றல்!” இதே எளிமை ‘பாட்டுத் தலைவன்’ பாட்டிலும் படிந்து கிடக்கிறது. “குவலயம் போற்றும் குடும்ப விளக்கும், எவர்க்கும் கல்வி வேண்டு மென்றே இடித்துரைக் கின்ற இருண்ட வீடும், வெடிக்கும் புரட்சி விளைக்கும் பாவியம் பாண்டியன் பரிசும், பழந்தமிழ் உணர்வைத் தூண்டும் குறிஞ்சித் திட்டும், எங்கள் பாட்டுத் தலைவன் பாரதி தாசன் நாட்டுக் களித்த நன்கொடை!” இதுதான் பாவலர் இலக்கியனின் பாட்டுத்திறம். ‘கடந்த மூன்று நூற்றாண்டுகளாக’ என்றே தமிழுக்கும் தமிழருக்கும் வேற்றுமொழிப்பகை வந்தமையைக் குறிப்பர் பல்லோர். மெய்யாக, நாவலந்தீவின்மேல் கி.பி.1008ஆமாண்டு இசுலாமியர் படைஎடுத்தபொழுதே நாவலந்தீவின் தென்பகுதியும் மொழி-இனம் என்ற இரு நிலைகளிலும் தாக்குதல்பெறத் தொடங்கிற்று. கி.பி.1674ஆமாண்டு பிரஞ்சியர் புதுச்சேரியைப் பிடித்துக் கொண்டனர். இதற்குப் பதினாறாண்டுகளுக்குப் பின்பே கல்கத்தாவில் ஆங்கிலர் வேரூன்றிக் கொண்டனர். கி.பி.1857ஆமாண்டில் படைவீரர் கலகம் (சிப்பாய்க் கலகம்) வெடித்தது. கி.பி.1858ஆமாண்டு தான் நம் நாடு நேரடியாக ஆங்கில முடியாட்சிக்குள் வந்தது. கி.பி.1875ஆமாண்டில் இந்திய தேசியப் பேராயம் தொடங்கியவுடன் இந்திமொழி ஆதிக்கம் தென்னாட்டில் தொடங்கியது. இவற்றுக்கெல்லாம் இணைகோடாகத் தமிழ்த் தேசியமும்; பெரியார், பேராயக் கட்சியினின்று பிரிந்து விடுதலையாகச் செயல்படத் தொடங்கியபின் நேர்கோடாக இடதுசாரித்தமிழ்த்தேசியமும் செயல்படத் தொடங்கின. இந்நோக்கின் விரிவாழங்களுக்குத் தோழர் சுப. வீரபாண்டியன் அவர்களின் ‘பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்’ (தமிழ் முழக்கம், 345, அண்ணா சாலை,சென்னை-600 006: 2005. பக்கம் 20 முதல்...)ஆய்வுநூலை வாசியுங்கள். இத்தகைய வாசிப்பும் புரிந்து கொள்ளுதலும் இல்லாவிடில் ஆங்கிலப்பகை குறித்தும் இந்திப்பகை குறித்தும் பாவேந்தரின் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் பாவலர் இலக்கியனின் உணர்த்தல்களைப் புரிந்துகொள்ள முடியாது. குறுகிய மனப்பான்மை என்றே சொல்லவரும். இதனால்தான் புதுவைத் தமிழ்மாமணி புலவரேறு அரிமதி தென்னகனாரும் “செத்த காக்கைச் சிறகைப் பறக்கவிடும் உத்தியைத் தம் ‘வெல்லும் தமிழியக்கம்’ என்னும் இனவெழுச்சிப் பாத்தொகையுள் பின்வருமாறு மொழிகிறார்: “முட்டாள் இனத்திற்கு மோதி உதைத்தால்தான் எட்டும் சிலஉண்மை! எத்தனைநாள் வாய்நோக நீட்டி முழக்கி நிலவுக் குளிர்ச்சியினைக் காட்டும்சொல் கூறிக் கரை(றை)வோம் தமிழினமே! செத்தஒரு காக்கைச் சிறகைப் பறக்கவிடில் கொத்தவரும் காக்கைக் குலமே பறந்துவிடும்! காயவைத்த நெற்களத்தைக் காக்கும் வழிஇதனை ஏயவகை ஆய்ந்துணர்ந்தே ஏற்பாய் தமிழினமே!” பாவலர் இலக்கியன் கூறுகிறார்: “பாரதி தாசன் பிறந்த மண்ணில் சீரக முனையும் செந்தமிழ் இல்லை: எங்கும் ஆங்கிலம்! எதிலும் ஆங்கிலம்1 பொங்கி வழிகிறது ஆங்கில மதுவே! தமிழால் உயர்ந்த தமிழ ராலும் தமிழ்க்கு நலமிலை; தமிழ்க்கு வாழ்விலை; மண்ணின் மைந்தர் மருண்டு கிடக்கிறார்.” “பழஞ்சுவடி விரித்தாற்போல் பரந்த நெற்றி, பார்வையிலே தமிழொளியே பாய்ந்து நிற்கும்” தகவுடைய பாவேந்தர், “தமிழர்க்குத் தமிழ்மொழியை வாழவைக்கும் தனிக்கடமை உண்டென்றே சொல்லிச் சென்றார். தமிழர்கள் ஆங்கிலத்தைப் பெரிதாய்க் கொண்டார். தமிழ்வாழப் பாவேந்தர் சொல்லைக் கேட்பீர்” இந்த முறையில்தான் ‘பாவேந்தர் புரட்சிநூறு’ என்னும் இப்பாத்தொகை பாவேந்தர் குறித்து இதுவரை வெளிவராத தரவு-ஆவண-வரலாற்றுக் களஞ்சியமாகவும் திகழ்கிறது. தலைப்புகள் 8,18,56,71,77,79,81,83[பக்கம் 20,30,68,83,89,91,93,95] இப்பொருண்மை உள்ள பாக்களைக் கொண்டுள்ளன. இவற்றுள்ளும் 56-ம் 83-ம் குறிப்பாக வேறுபடுகின்றன. முதலாவது, “ஆங்கிலப் பேரா சிரியர் ஒருவர் ஓங்கு புலமையும் உயர்வும் உள்ள திரு.வி.க.வின், மறைமலை யடிகளின் பெருமை மிக்க உரைநடை தன்னைத் திட்டிப் பேசிய தீங்குறு செயலைத் தட்டிக் கேட்க ஆளிலை யோவெனச் சீற்றம் மேலிடப் பாரதி தாசனாம் ஆற்றல் அரிமா முழங்கிய தாங்கே!” என்பது. அடுத்தது, பாரதிமேல் பாவேந்தர் கொண்டிருந்த பற்றையும் பாரதி ஆங்கிலத்தின் எதிப்பை மேற்கொண்டவர் என்பது குறித்தும் மொழிவது: “பாரதி வாழ்வினில் படிந்த பாவலன். பாரதி யாரொடு பழகிய பாவலன். பாரதி தாசனாய் மலர்ந்த பாவலன். பாரதி பெயரைப் பாரதி தாசன் தாங்கியதாலே தமிழ்ப்பகை என்று தாங்கா மனத்தினர் தாக்கிப் பேசினர். தூங்கிய தமிழினம் துடித்தெழப் பாரதி ஆங்கிலக் கல்வியை அறவே வெறுத்தனன். வேங்கை பாரதி வேற்று மொழியின் தீங்கினை உணர்த்திய திறல்மிகு பாவலன். அத்தகு பாரதியின் அரிய புகழினை இத்தரை வைத்தவன் எம்பா வேந்தனே!” பாவேந்தர் உணர்த்திய அன்பு வாழ்க்கை, காதல் உயர்வு, முதியோர் காதல் ஆகியவற்றை பாக்களால் எடுத்துச் சொல்லும் பாவலர் இலக்கியன், குழந்தை மணத்தின் கொடுமையைப் பாவேந்தர் தம் பாக்களால் களைய முற்பட்ட சிறப்பைக் “கன்றுகள் காத்தவன்” என்ற தலைப்பிட்டுச் சொல்லியிருப்பது புதுமை. “மணக்கொடை வாங்கும் வழக்கினைத் தணலில் இட்டான் தமிழ்ப்பா வேந்தனே!”(பா.29), “மெல்லிய ரெல்லாம் மேன்மை மிக்க கல்விக் கண்களைப் பெறுதல் வேண்டும் என்று பாடிய எழுச்சிக்குன்றமே! குன்றாப் புதுவைப் புரட்சிக் குன்றம்!(பா.31), “வேரிற் பழுத்த பலாக்க ளுக்குக் கோரினான் விடுதலை, கொள்கைத் தேரினில் வந்த பாட்டுப் பாரியே!(பா.33), “பதுமையாய் வாழும் பாவை மார்க்குப் புதுமை உலகைக் காட்டப் புதுவைப் பாவலன் புறப்பட் டானே!”(பா.37) முதலானவற்றுள் மகளிர்க்காகப் பாவேந்தர் ஆற்றிய புரட்சி வெளிப்படும். வாணிதாசனார்க்கும் பாவேந்தருக்கும் நிலவிய உறவின் சிறப்பை “எழுதத் தூண்டினார்!” என்ற பாடல் புலப்படுத்துகிறது. கோவை முத்தமிழ் மாநாட்டிற்கு இருவரும் சென்றுதிரும்பியபொழுது வாணிதாசனார்க்குப் பாவேந்தரால் ஏற்பட்ட அதிர்ச்சியும் அது நீங்கிய வயணமும் அருமையாகச் சொல்லப்பெற்றுள்ளன. அதேபோல் “பறந்தது பகைமை!” என்ற பாடல், துரைசாமிப் புலவர் - பாவேந்தர் - வாணிதாசனார் இடையில் நிகழ்ந்த ஓர் நிகழ்வுத்தொடரைச் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. 73ஆம் பாடலான “எரிகதிர்ப் பாவல”னுடன் இதை ஒப்பிட்டுப் படித்துப் பார்த்தால் மேலும் சிறப்பு வெளிப்படும். “அழைப்பு விடுத்தவன்,” “விண்கோள்,” என்பவை முறையே புரட்சிப் பாவேந்தரின் பொதுமை உணர்வையும் மொழிஉணர்வையும் ஒளி+ஒலிக் காட்சிகளாய் வெளிப்படுத்துவன. “இலக்கணத்திற் புலியாகத் திகழ்ந்து வந்த குமாரசாமிப் புலவருக்கு, அவர் துரைசாமிப் புலவரின் மாணாக்கராயிற்றே என்றும் பகை பாராமல், பாராட்டு விழா எடுத்து காமராசர் கைகளால் பொன்னாடை அணிவித்த பாவேந்தரின் சிறப்பை “ மலையருவி” எனும் பாடலில்(48)இனிதாய்க் காணலாம். இதையும் “எரிகதிர்ப்பாவல”னுடன்(73) ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். பாவேந்தர் பாசறைப் பாவலர்களையும் இவண் பாவலர் சுட்டியிருப்பது பெருந்தன்மையைக் காட்டும். மேலும், “தமிழிசைக் காவலன்” பாவேந்தர் - “வள்ளல் அண்ணா மலையரும் போற்றும் இசைத் தமிழ்க் கழகம் இனிது நிறுவி இசைத்தமிழ் வளர்த்ததை”யும்; “நல்ல கொள்கை,” பாவேந்தர் இலக்கியம் குறித்துக் கி.ஆ.பெ. புகழ்ந்து செப்பியதையும்; “படத்துறைப் பாவலன்,” வளையாபதி படத்தில் தானெழுதிய சில வரிகளை மாற்றி எழுதிய வன்செயலுக்காக நாற்பதாயிரம் உருவா ஒப்பந்தத் தொகையை வீசி எறிந்த பாவேந்தர் செய்கையையும்; “கைம்மாறு கருதாதவர்,” தனக்கு எல்லையில்லாத் தொல்லைகள் தந்த கல்வி அதிகாரியின் மகனுக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இடமும் விடுதியும் பெற்றுத் தந்த அன்னாரது சிறப்பையும்; “அடிமைக் கல்வி,”பிரஞ்சியர் ஆட்சியில் கெஞ்சிக் கிடந்த பல்லோர்க்கிடையிலும் துணிவோடு நின்ற பாவேந்தரின் பெருமையையும்; ‘வெங்கண் வேழம்,” பாரதி பற்றிய படமும் பாண்டியன் பரிசு படமும் எடுக்கும் முயற்சியில் ஏற்பட்ட நம்பிக்கைத் துரோகத்தால் பாவேந்தர் முடங்கிப்போக நேர்ந்ததையும்; “வென்றது தமிழே,” நாகர்கோவில் நிகழ்ச்சியில் பாவேந்தர்க்கு உருவான கலைவாணர் அரணையும் கவிமணி முரணையும் அருமையாகச் சித்திரிக்கின்றன. “சேவற் குரலோன்” என்னும் தலைப்பும் புதுமை. “கன்றுகள் காத்தவன்” தலைப்பைப் போலவே இதிலும், பழைமை - புதுமையில் பாய்ந்திருக்கிறது. “உழைப்பின் வறியவர் ஓடாய்த் திரிவதும் உழைக்காச் செல்வர் உயர்வை அடைவதும் உலகம் ஒப்பிய வொன்றாய் இருந்திடில் நலமார் புரட்சி நாட்டில் எழுந்திட சேவற் குரலால் செவிப்பறை கிழிந்திட பாவின் வேந்தன் பரப்பினன் ஈங்கே!” என்பதிலிருந்து இதனை உணரலாம். அருமைப் புதுவை அந்நாளில் எவ்வாறிருந்தது? இந்நாளில் எவ்வாறு இழிந்தது என்பதைப் பாவேந்தம் என்னும் பகைப்புலனில்(contrast) பாவலர் இலக்கியன் “நலமே நாடி!” என்ற பாடலில்(71)படம்பிடித்திருப்பது, உணரத் தக்கதாம். சுந்தர சண்முகனாரின் கரவற்ற உள்ளமும் பாவேந்தரின் பரந்த உள்ளமும் ஒன்றை ஒன்று மதித்த திறத்தை “எழுவோம் யாமே!” எடுத்துச் சொல்லுகிறது. இன்னும் “முத்திரை பெற்றவர்,” “புரட்சி வெடிக்கும்(இரவலாய்ப் புத்தகம் வாங்குதல் இழிவே என்னும் பாவேந்தர் முழக்கம்),” “தமிழ் வள்ளல்,” “ஆய்வுகள்(பித்தர்தம் ஆய்வுகள் குறித்த பாவேந்தர் சினம்),” “சிறுத்தை வந்தது,” “நடைமுறைப் படுத்துக,” “புகழே பெறு,” “வரிப்புலியாய்ச் செயல்படு,” “வெஞ்சின வேங்கை,” “புறாக்களாய் மகிழ்ந்தார்!(பிரஞ்சுக் குடியரசுத் தலைவராயிருந்த ழுயில்பெரி அவர்களைப் பாவேந்தர் பெருமைப்படுத்தியபொழுது நிகழ்ந்தது),” “தமிழர் நிமிர்ந்தார்!(குழித்தலை மாநாடு), “புரட்சிக் குடியரசு(பாவேந்தரின் -‘குடியரசு” இதழ்த் தோய்வு),” “தமிழ் வீரம்(பாவேந்தருக்கு முன்னால் பேரறிஞர் அண்ணா அமரவே மாட்டார் - போலும் தறுகண்மைச் செய்திகள்),” “புத்துரை வழங்கியவன்(திருக்குறளுக்குப் புத்துரை),” “குழந்தை உள்ளம்,” “மானக் களிறு(பள்ளியில் பேசிய நிகழ்ச்சி)” ஆகியவை பன்முறை வாசித்துச் சுவைக்கத் தக்கவை. அவற்றுள்ளும் “மானக் களிறு” பாடலில் வரும் நகைச்சுவை மிகவும் குறிப்பிடத்தக்கது. தன்னால் தலைமையாசிரியர் ஒருவருக்குப் பணியிடமாற்றத்தைப் போக்கிக்கொள்ள அவருக்குப் பாவேந்தர் கூறிய உத்தி, வியப்பானது. நூறாம் பாடலான “ஒண்டமிழ்ப் போர்வாள்!” என்பதில் பின்வருமாறு பாவேந்தர்தம் சிறந்த நூல்கள் நிரல்படுத்தப் பெறுகின்றன: “அவரது நூல்கள் அமர்க்கள வேல்கள்! எவரையும் எதிர்த்திட ஏந்தும் துமுக்கி! குடும்ப விளக்கோ வாழ்க்கை விளக்கு! இடும்பை தீர்க்கும் இருண்ட வீடு! தமிழை இயக்கும் தமிழ்இயக் கம்தான்! அமிழ்தைச் சுரக்கும் அழகின் சிரிப்பு! தேனின் அருவி தெளிவை ஊட்டும்! கூனல் நிமிர்த்தும் குறிஞ்சித் திட்டு! பழச்சுளைப் பாவியம் பாண்டியன் பரிசோ பழகுநல் லினிமையும் புதுமை அறிவும் இழைந்தே ஒளிர்ந்திடும் ஒண்டமிழ்ப் போர்வாள்! விழைவுச் செம்பயிர் விளைக்கும் நிலமே.” நூறு பாடல்கள்; நூற்றுப் பன்னிரண்டு பக்கங்கள். ஆனால், பாவலர் இலக்கியன் படைத்துள்ள இந்தப் “பாவேந்தர் புரட்சி நூறு” நூல் விளைவிப்பதுவோ எண்ண முடியாத எண்ணப் பயிர்கள்! ஆசிரியர் முகவரி:பாவலர் இலக்கியன், 16, பதினைந்தாவது குறுக்குத் தெரு, அண்ணா நகர், புதுச்சேரி - 605 005. பேசி: 0413 2201786 வெளியீட்டாளர் முகவரி: வெள்ளையாம்பட்டு சுந்தரம், சேகர் பதிப்பகம்,66/1, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை-600 078. பக்கம்: 12+100=112. விலை:உரூ.35-00.

24.7.06

அற்புதங்களுக்கான இன்றைய தேவை

வறட்டுத்தனமானவையும் காட்டுத்தனமானவையுமான சூழ்நிகழ்வுகளுக்கு நடுவில் நாம் வாழ்க்கைச் சதுரங்கத்தில் பெரும்பாலும் முட்டாள்தனமாக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். அற்புதங்களுக்கான தேவை நிகழுலகில் மிகுந்து வரும் அதே நேரம், விரக்தியும் வெறுப்பும் சகமனிதர்பால் மட்டுமல்ல, தனிமனிதனுக்குத் தன்பாலேயே அவநம்பிக்கையோடு கைகோத்துக்கொண்டு, எந்த நேரத்திலும் தாக்குவதற்கு, வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும் - மூலைமுடுக்கிலும் முகம் மறைத்துப் பதுங்கிக்கொண்டு காத்திருக்கின்றன. இன்றைய மனிதனுக்கு முன்னோர் வார்த்தைகளில் நம்பிக்கை மட்டுமல்ல, வார்த்தைகள் மேலேயே அக்கறை இல்லாமல் போய்விட்டது. பணக்கற்றைகளின் மேல்தான் நோக்கம் எல்லாம், பெண்களுக்கு அடுத்தவள்(ர்) அணிந்திருக்கும் நகைகளின்மேல் உள்ளது போல. ஒன்றே ஒன்று முக்கியம். நம்புவது. முதலில் தன்னை. இதையே பெரியவர்களும் முன்னோர்களும் சொல்லிச் சென்றார்கள். திரு. வி. க. அவர்கள் தம் ‘உள்ளொளி’ நூலில் சொல்லியுள்ளவையும் பொய்கள் என்று கூசாமல் சொல்லுகிறார்கள். பலருக்கு இப்பொழுதெல்லாம் ‘அரசியல் உளச்சிக்கல்’ [political complexக்குச் சரியான எடுத்துக்காட்டு-- “தனக்கென்று பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்! எனக்கொரு மகன் பிறப்பான்- அவன் என்னைப் போலவே இருப்பான்” என்ற திரைப்பாட்டு]என்பதையும் மீறி தங்கள் ‘குரு,’ தங்கள் ‘ஆன்மீக இயக்கத்தின் நடத்துநர்கள்’ தங்களின் ஆன்மிகத் தலைவர் மறைந்துவிட்டாலும் அவர் எழுதி ‘அருளிய’ புத்தகம்[இன்னும் பல..] சொல்வது மட்டுமே வேதவாக்கு, பிற கருத்துகள் கூற்றுகள் எல்லாம் பிண்ணாக்கு என்ற அளவு போவதை வேதனையோடு பார்க்க- கேட்க- பக்கமிருந்து உணர வேண்டியுள்ளது. என் கையில் இருந்த நூலை அருவருப்புடன் பார்த்த, அதே நூலின் இன்னொரு வடிவத்தை நம்புகிற, அதே மதத்தின் வேறோர் உட்பிரிவுக்குச் ‘சாட்சி’யாய் இருக்கிற நண்பரொருவரை இக்கணம் நான் நினைவுகூரவேண்டியுள்ளது. தாம் தமிழராயிருந்தாலும் அதைச் சொல்லவே வெட்கப்பட்டு ஆங்கிலத்தில் பேசும் அவர், ஆங்கிலத்தில் miracles என்னும் அற்புதங்கள் அல்லாவிட்டாலும் serendipity[விழைவுள்ள நலம்சேர்க்கும் பொருள்களை மிகவும் தற்செயலாகச் சந்திக்கநேர்வது], synchronicism[ஒத்தகால இயல்பான நிகழ்வு/coincidence in time] ஆகியவை இன்றும் எல்லோர்க்கும் நிகழும் நிகழ்வுகள் அல்லவா என்று நான் கேட்டதற்கு, “அதெப்படி முடியும்?[எங்கள்] ஆண்டவர் தவிர, அவருடைய மகன் செய்யக்கூடியவைகூட அற்புதங்கள் என்பதை நம்பக் கூடாதவர்களாகிய எங்களுக்கு நீங்கள் முட்டாள்தனமாக நம்புவதை அதெப்படி ஏற்றுக்கொள்ள இயலும்?” என்ற மட்டையடி மறுமொழிதான் கிடைத்தது. அற்புதம்/miracle என்ற சொல்லுக்கு “ இயற்கையின் விதிகளை வைத்து விளக்க முடியாத நிகழ்வு” என்று மாக்மில்லன்(ப.907)சொல்லுகிறது. ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களும் 31.3.1934 அன்று நியூசிலாந்தில் ஆற்றிய சொற்பொழிவு ஒன்றில், அற்புத நிகழ்ச்சிகளை ஒருவர் தேடிப்போவது என்பது - அவர் உள்ளத்தில் திருப்தியும் நலமும் அன்பும் குறைந்துபோய்விட்டதைத்தான் காட்டுகிறது என்றார். பாஸ்கல் கூறினார்: “கோட்பாடுகளை மதிப்பிட அற்புதங்கள் நமக்கு உதவுகின்றன; அதேபோல அற்புதங்களை மதிப்பிட நமக்குக் கோட்பாடுகள் உதவுகிறன.”[Pascal, PENSEES. Translated by: W.F. Trotter] எனக்கென்னவோ இது சமநிலையான கருத்து என்று தோன்றுகிறது. இன்றைய மிகப்பெரிய மருத்துவமனைகளில் சேர்க்கப்பெற்று, மீண்டும் நாம் இல்லத்துக்குத் திரும்புகிறோமே அது அற்புதம் இல்லையா? நம்முடைய[அல்லது என்னுடைய] விநோதமாகச் செயல்படுகிற, பதினான்காம் நூற்றாண்டின் உரையாசிரியர் நுட்பமாக மொழிந்த “சில்வாழ்நாள்- பல்பிணி- சிற்றறிவு”டைய உடம்பை வைத்துக் கொண்டு இன்னும் எழுதிக் கொண்டும் சிந்தித்துக்கொண்டும் வாழ்கிற என் ஒவ்வோர் அன்றாடத்தின் ஒவ்வொரு கணமும் எனக்கு அற்புதமாகத்தான் தோன்றுகிறது.

20.6.06

பணத்தின் பின்னால் ஓடுபவர்கள்!

"பணத்தைப் பொருள் என்று கொள்ளாதே!" என்று அறிவுறுத்தினார் அரவிந்தாசிரம அன்னை. "இந்த எல்லைக்குள் பணம் தன் மதிப்பை இழக்கிறது!" என்று அவர் அறிவித்த உலக நகரம் ஆரோவில்லின் பார்வையில் வாழும் நான், அன்னை அவர்கள் ஏன் அவ்வாறு அறிவித்தார் என்று விளங்கிக்கொள்ளாதிருந்தேன். விளங்கிக் கொள்ளும் வாய்ப்பு சில நாள்களுக்கு முன்னால் வாய்த்தது. 'பணப்பெட்டிக'ளின் முன் தலைகுனிய வேண்டிவந்தாலும் என் கால்களைப் பரப்பி நின்றேன். அழுத்தமாக நிலத்தில் என் பாதங்களை ஊன்றினேன்...பெற்ற என் தெய்வங்களின் இணையடிகளை என் நெஞ்சத்தில் வைத்தேன். 17/1/1988 அன்று தன் 96ஆவது வயதில், ஆழ்ந்த உறக்கத்தில் இறந்த என் தந்தையார், அந்த நாளுக்கு மூன்றுநாள் முன்னர் ஒரு வியாழக்கிழமையன்று பிற்பகல் சொன்ன சொற்கள் - “பிரச்சினையின் மையத்துக்கே செல். அஞ்சாதே. தன்னந்தனியனாய் நில். அந்தப் பிரச்சினையையே கேள்,உரத்த குரலில். "என்ன காரணம் இதற்கு?"... கட்டாயம் பதில்வரும். அந்தக் காரணத்தை அகற்று; காரியம் சரிப்படும்.” என் தாயார் எனக்கு அடிக்கடி அறிவுறுத்தியது - "பொன்னைவைத்தும் பெண்ணைவைத்தும் மண்ணைவைத்தும் எவரையும் எடைபோடாதே; மதிக்காதே; பகைக்காதே!" பதினாறே வயதுக்குள் பகவத் கீதைக்கு மராத்திமொழியில் இணையற்ற உவமைகளை ஏராளமாய்க்கோத்து 'பாவதீபார்த்த உரை' வகுத்தார் ஞானதேவர். (அதன் ஆங்கில மொழியாக்கம் கிடைக்கிறது.) “யானையை வைத்து யானையைப் பிடிப்பதுபோல, நிலவு முழுவதையும் ஓடைநீரில் கைப்பற்றுதல்போல, கூசுமொளிச் சூரியனை ஈரத் துண்டின்வழிப் பார்த்தல்போல ஓர்மையில் நிற்பாய்; உண்மையைக் காண்பாய்” என்பது அந்த உரைவிளக்கத்தில் ஒரு துணுக்கு. கடல்அலைபோல் பகைவந்தபோதும் ஒடிவந்து உதவக் கூடியவை பெரியோர் சொற்கள். அதனால்தானே நம் சொற்சிக்கனக்காரர் திருவள்ளுவரும் நமக்காக எழுபது சொற்களைச் செலவு செய்து, பெரியவர்களைத் துணைக் கொள்ளுமாறு வற்புறுத்துகிறார்!

7.6.06

புலவர் குழந்தையின் நூற்றாண்டு

புலவர் குழந்தையின் நூற்றாண்டு - 01/07/2006 - தேவமைந்தன் நான்கு திசைகளிலும் மலைகளால் சூழப்பெற்றது கொங்கு நாடு. அதனுள் ஈரோட்டுக்குத் தென்புறம் 25 கி.மீ. தொலைவில் உள்ள ஓலவலசு என்ற சிற்றூரில் புகழ்பெற்ற பண்ணயக்காரர் வீட்டில் 1906ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் முதல்நாளன்று முத்துசாமி கவுண்டர் அவர்களுக்கும் சின்னம்மா என்ற பெயருடைய அம்மையாருக்கும் பிறந்தவர், இன்று நூற்றாண்டு காணும் புலவர் குழந்தை. புலவர் குழந்தையைத் தவிர ஓலவலசில் எவரும் எழுதப் படிக்க அறியாதவர்கள். இவர் தலையெடுத்த பின்னர்தான் அவ்வூரில் எழுத்தறிந்தவர்கள் உருவாயினர். உருவாக்கியவர் புலவர் குழந்தை. ஆனால் பிறகு தாம் பணியாற்றிய பவானியையே வாழ்வதற்கு உரிய இடமாகத் தெரிவு செய்துகொண்டார். முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்தவர் புலவர் குழந்தை(1929-1962). பணிக்காலத்தின் பிந்திய இருபத்தோராண்டுகள், பவானி கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து பணிநிறைவு பெற்றார். தன் பத்தொன்பதாம் வயதில், அவ்வாண்டு தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பெற்ற தன்மானத் தமிழர் இயக்கத்தில் சேர்ந்து தொடக்கம் முதலாகவே மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றினார். அதனால்தான் தன்னை உருவாக்கிய தந்தை பெரியாரிடத்தும், ‘புலவர்’ என்று மட்டுமே சொல்லி எங்கும் தன்னைப் பெருமைப்படுத்திய பேரறிஞர் அண்ணாவுடனும், புலமையாலும் படைப்பாற்றலாலும் தன்னைப் பாராட்டிய பாவேந்தர் பாரதிதாசனாருடனும் மாறா அன்பு பூண்டார். தன்னை உருவாக்கிய தந்தை பெரியாரை மறவாமை மட்டுமன்று, எந்த நிலையிலும் அவரை விட்டுக் கொடுக்காமல் பெருமைப்படுத்தியவர் புலவர் குழந்தை என்று குறிப்பிட்டு வந்தார் கவியரசு கு. நடேச கவுண்டர் அவர்கள். அவரும் தன்னை உருவாக்கிய கொங்கு நாட்டுப் புலவர் நா. வையாபுரியாரை வாணாள் முழுதும் போற்றி மகிழ்ந்தவரல்லவா? கடவுள் மறுப்பாளராகவே தம்மை நிலைப்படுத்திக் கொண்டவர் புலவர் குழந்தை. தம் வாணாட்கோட்பாடாக அதை மதித்தார் அவர். கோயம்புத்தூரிலுள்ள வெள்ளக்கோயில் பகுதிசார்ந்த தீத்தாம்பாளையத்தில் நான்கு நாள்கள் இந்துமத பிரச்சாரகரும் ‘சமாதி யோகம்’ என்னும் யோகப்பயிற்சியைக் கற்றுத்தந்துவந்தவருமான சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்களுடன் “கடவுள் இல்லை” என்று சொற்போரிட்டார் புலவர் குழந்தை. தாம் உண்மையென்று தேர்ந்து தெளிந்த எதையும் ஒளிக்காமல் விண்டுரைக்கும் வழக்கம் அவருக்கு இருந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் 1938இலும் 1948இலும் மிகுந்த பங்கேற்றார் புலவர் குழந்தை. ‘இந்தி ஆட்சியானால்?’ என்ற அவரது கொள்கை பரப்பு நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவர்தம் புகழைப் பொறாத சிலர், கடவுள் மறுப்பாளரான புலவர் குழந்தையை ‘சாதிப் பற்றாளர்’ என்று பழியுரைத்து அதைப் பரப்பினர். அதற்கு அவர்கள் காட்டிய சான்று, அன்னார் நடத்திய ‘வேளாளன்’ இதழ். அன்று வேளாளர் பல குழுக்களாகப் பிரிந்து தம்முள் பூசலிட்டு வந்தனர். அவர்களை ஒன்றிணைக்க அரும்பாடுபட்டார் புலவர். தவிர, அவர்களிடம் நிலவி வந்த மூடநம்பிக்கைகளைப் போக்கவும் தம் ஆற்றல் மிக்க கட்டுரைகளை ‘வேளாள’னில் வெளியிட்டார். அதியமான் ஆண்ட தகடூரை அடுத்த அரூர் என்ற ஊரில் நிகழ்ந்த வேளாளர் மாநாட்டில் விதவையர் மணம் குறித்து ஒரு சமுதாயவியல் உரை ஆற்றியதோடு, விதவையர் மணத்தை வேளாளர் ஏற்கவேண்டித் தீர்மானமும் கொண்டுவந்து நிறைவேற்றினார். வாழ்நாளெல்லாம் தாம் கற்பித்த சீர்திருத்தக் கொள்கைகளைத் தாமும் கடைப்பிடித்து, மற்ற அனைவரையும் கடைப்பிடிக்கச் செய்தவர் அவர். திண்ணைப்பள்ளியில் மிகச் சிறிய காலமே பயின்ற பொழுதும், அப்பொழுதிருந்தே இனிய இசைப்பாடல்கள் இயற்றிப் பாடவும் வல்லவராயிருந்தார் புலவர் குழந்தை. அதனால்தான், தாமே முயன்று யாப்பிலக்கணத்தையும் கரைகண்டார். திருக்குறளுக்குப் புலவர் குழந்தை கண்ட புதிய உரை, பலரையும் திருக்குறளின்பால் ஈர்த்தது. பகுத்தறிவு நோக்கில் திருக்குறளுக்கு உரைகண்ட இருபதுக்கும் மேற்பட்டோருக்கும் முன்னோடி இவரே. கொள்கைக் குன்றான குழந்தை எவரிடமும் என்றும் தன் கொள்கையை விட்டுக் கொடுத்ததுமில்லை; தன்னைப் ‘புலவர்’ ‘புலவர்’ என்று எங்குபார்த்தாலும் எவரிடமும் போற்றிப்பாராட்டிய பேரறிஞர் அண்ணாவிடம்கூட எதையும் எதிர்பார்த்துப் போனதுமில்லை. கம்பனுக்குக் கைத்தாளம் போட்டால் நன்றாகப் பிழைக்கலாம் என்றிருந்த சூழலில், ‘இராவண காவியம்’ படைத்தவர் புலவர் குழந்தை. இராவண காவியத்தின் சிறப்புகள் நான்கு. 1.இராமனை விட ஏற்றம் மிகுந்தவன் இராவணன் என்பதை உறுதிப்படுத்தியது. 2.தமிழறிவும் பகுத்தறிவும் பின்னிப் பிணைந்த காவியம். 3. போலச்செய்த சார்புக் காவியமாக இல்லாமல், முழுமையான தமிழ்ப்பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்த பெரும் காவியமாகத் திகழ்ந்தது. 4.தன் புதுமை, பகுத்தறிவுக் கருத்துகளால் காங்கிரஸ் கட்சியரசை அச்சுறுத்தித் ‘தடை’போட வைத்தது. அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் இராவண காவியத்துக்கிருந்த தடையை நீக்கினார். ‘சாதிக் கொரு நீதி’படைத்தவர்களின் கைகளில் செய்திஊடகம் (பேரிதழ்களும் பெரும் நாளேடுகளும்) இருந்த காலத்திலும் பெரும் புகழ் பெற்றது. ‘காமஞ்சரி,’ சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்ட வகுப்புக்குப் பாடமாக விளங்கிய நாடக நூல்(1971ஆம் ஆண்டுப்பாடத்திட்டம்). மனோன்மணியம் எவ்வாறு லிட்டன் பிரபுவால் இயற்றப்பெற்ற ‘The Secret Way’ என்ற ஆங்கிலநூலைத் தழுவிப் படைக்கப்பெற்றதோ அவ்வாறே ஆங்கிலப் பெருங்கவிஞர் மத்தேயு ஆர்னால்ட் இயற்றிய ‘Shorab and Rustam’ என்ற நூலைத் தழுவிப் படைக்கப்பெற்றது. இதில் தமிழ் மரபுகள் பெரிதும் பேணப்பெற்றுள்ளன. ஆனால் ஆங்கிலக் கதையில் கையையே வைக்கவில்லை புலவர் குழந்தை. கதைமாந்தரின் பெயர்களும் இடப்பெயர்களும் தமிழுக்கேற்ப மாற்றப்பெற்றுள்ளன. சுந்தரனாரும் குழந்தையாரும் தம் தமிழ்ப் காவியங்களை நாடகங்களாக ஆக்க முயலாமற்போனதேன் என்பது குறித்த ஆய்வுக்கட்டுரை உள்ளதாக அறிந்தேன். இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை. புலவர் குழந்தையின் திருக்குறள் புத்துரையைப்போலவே, ‘நீதிக் களஞ்சியம் குழந்தையுரை’யும் முற்போக்கானது. 1962-இல் ஈரோடு இளங்கோ புத்தகசாலையால் வெளியிடப்பெற்றது. 784 பக்கங்களையுடையது. கல்வி முதல் நிலையாமை ஈறாக 71 தலைப்புக்களில் இருபத்திரண்டு அறநூல்களிலிருந்து பலரால் பிறழ உரைசெய்யப்பெற்ற அரிய பாடல்கள் புலவர் குழந்தையால் தெரிவு செய்யப்பெற்று, அவராலேயே புத்துரையும் வகுக்கப்பெற்றது. ‘திருக்குறளும் பரிமேலழகரும்,’ ‘தொல்காப்பியர் காலத் தமிழர்,’ ‘இன்னூல்,’ ‘யாப்பதிகாரம்,’ ‘தொடையதிகாரம்’, ‘நெருஞ்சிப்பழம்’[செய்யுள்], ‘திருநணாச் சிலேடை வெண்பா,’ ‘தமிழ் வாழ்க’[நாடகம்], ‘தமிழெழுத்துச் சீர்திருத்தம்,’ ‘கொங்கு நாடும் தமிழும்,’ ‘கொங்குக் குலமணிகள்,’ ‘தீரன் சின்னமலை,’ ‘அருந்தமிழ் விருந்து,’ ‘அருந்தமிழ் அமிழ்து,’ ‘பூவா முல்லை,’ ‘கொங்கு நாடு- தமிழக வரலாறு,’ ‘அண்ணல் காந்தி,’ ‘சங்கத் தமிழ்ச் செல்வம்’ ஆகியவை புலவர் குழந்தையின் பிற நூல்கள். இவற்றுள் சில இப்பொழுது கிடைப்பதில்லை. எனினும் யாப்பதிகாரம், தொடையதிகாரம் முதலியவற்றைப் புதிய பதிப்புகளாகக் கொண்டுவந்துள்ள சென்னை முல்லை நிலையமும் (9, பாரதி நகர் முதல் தெரு, தியாகராயர் நகர், சென்னை- 600 017) மற்றும் திருக்குறள் புலவர் குழந்தையுரையைப் புதிய பதிப்பாகக் கொண்டுவந்துள்ள சாரதா பதிப்பகமும் ( ஜி-4, சாந்தி அடுக்ககம், 3, ஸ்ரீகிருஷ்ணாபுரம் தெரு, இராயப்பேட்டை, சென்னை- 600 014) நம் பாராட்டுக்குரியவை. புலவர் குழந்தை பெற்ற சிறப்புகள் சில. விழுப்புரம் பகுத்தறிவுக் கழகம் புலவரைப் பாராட்டி விழாவெடுத்தபொழுது, தந்தை பெரியார் கைகளால் பொன்னாடை போர்த்தப் பெற்றார். பவானியில் குமாரபாளையம் பகுத்தறிவுக் கழகம் புலவர் குழந்தையைப் பாராட்டி விழா எடுத்தபொழுது புதுச்சேரி மாநில முதல்வராக விளங்கிய மாண்புமிகு பரூக் மரைக்காயர் அவரைப் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தார். புதுச்சேரியிலும், கொங்கு நாட்டின் பல இடங்களிலும் பகுத்தறிவுக் கழக அமைப்புக்களால் விழாக்கள் பல கொண்டாடப்பெற்று, பல்வேறு சிறப்புகள் வழங்கப்பெற்றார் புலவர் குழந்தை. “என்னை யலாதார் எழுதப் படிக்க(அ)றியார் தன்னை எழுத்தறியத் தான்செய்தேன் - என்னைகொல் சால வலசியன்னார் சங்கத் தமிழ்பாடும் ஓல வலசெங்கள் ஊர்” என்று ச.து.சு. யோகியார் அவர்களுக்கு 1927-இல் விடையாகக் கூறிய பாடல்மூலம், தன் இளம்பருவத்திலேயே ஊராருக்கெல்லாம் எழுத்தறிவித்த தன் சமூகப் பொறுப்பைப் பதிவு செய்து வைத்துள்ளார் புலவர் குழந்தை. “இராவண காவியம் படைத்த காப்பியப்பேராசான்” என்றும் “இலக்கியத்தில் முக்குளித்த கொங்கர் குலச் சோழன்” என்றும் “பெருவீரன் தீரன் சின்னமலையின் வரலாற்றை ஆராய்ந்து தமிழகத்தின்முன் வைத்த வரலாற்றியல் வரைவாளன்” என்றும் பாராட்டப்பெற்ற புலவர் குழந்தை, 1972ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் நாள் இயற்கையில் ஓய்வெடுத்துக்கொண்டார். நன்றி: 'வெல்லும் தூயதமிழ்' (இலக்கிய மாத இதழ்) இரட்டை(ஆனி)சூலை 2006 இதழ், புதுச்சேரி-605009

25.5.06

வகைப்படுத்தாதவை: மதுமிதா அவர்களுக்கு வணக்கம்.

மதுமிதா அவர்களின் ஆய்வுக்குப் பாராட்டுகளோடு... வணக்கம். தங்கள் ஆய்வுநூலில் என் வலைப்பதிவினைச் சேர்த்துக்கொள்ள இசைகிறேன். தேவமைந்தன்(அண்ணன்பசுபதி), புதுச்சேரி. விவரப் பட்டியல்: வலைப்பதிவர் பெயர்: அண்ணன் பசுபதி வலைப்பூ பெயர்: kalapathy சுட்டி(url): http://kalapathy.blogspot.com/ http://360.yahoo.com/pasu2tamil ஊர்: புதுச்சேரி நாடு: இந்தியா வலைப்பூ அறிமுகம் செய்தவர்: பேராசிரியர் பசுபதி, டொரொன்டோ. முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம்: 8/09/2005 இது எத்தனையாவது பதிவு: முதலாவது. இப்பதிவின் சுட்டி(url): http://kalapathy.blogspot.com வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: 1968-ஆம் ஆண்டு முதலான என் அச்சுநூல்/இதழ்ப்படைப்புகளை எளிதாக நண்பர்கள் எங்கிருந்தாலும் வாசிக்க. சந்தித்த அனுபவங்கள்: மகிழ்ச்சியானவை. கனடா, பிரான்சு முதலான நாடுகளிலிருந்து என்னை நேசித்து வரும் மின்னஞ்சல்கள் (ஏனெனில் என் வலைப்பூ மட்டுறுத்தப்பெற்றது) பெற்ற நண்பர்கள்: கனடா டொரொன்டோ வேதியல் பேராசிரியர் பசுபதி, சார்சேல்சு பேரா.பெஞ்சமின் இலெபோ(புதுவை எழில்), இந்தியா தியாகு(இராஜ. தியாகராஜன்,editor@pudhucherry.com)பி.ஆர்.திரிபுரசுந்தரி(கொடைக்கானல்) முதலிய பலர். இப்பொழுது மதுமிதா அவர்கள். கற்றவை: 1.முப்பதாண்டுகளுக்கும் மேலான கல்வியாளன் அனுபவத்தை சைபர்வெளி நண்பர்களோடு(மடற்குழுக்களிலும்)பகிர்ந்துகொள்ளும்பொழுது என் அனுபவம் ஆகவும் சிறியது என்பதைக் கற்றேன். 2.முப்பத்தெட்டாண்டுகள் அச்சிதழ்ப் படைப்புலகில் சாதித்ததும் மின்வெளியில் பதிவதும் ஒருங்கிணைந்து போகும் என்றும் கற்றேன். எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: என்னைப் பொறுத்த அளவில் எனக்கு அச்சிதழ்களைவிட மிகுந்த சுதந்திரம் வலைப்பதிவுகளில்தான் கிடைத்தது. இனி செய்ய நினைப்பவை: செய்பவை தொடரவேண்டும் என்று. ‘இன்று’ என்பதுதான் நம்பத்தகுந்தது என்பதை என் உடல் எனக்குப் போதித்துக் கொண்டே வருவது, என் மருத்துவருக்குத் தெரியும். உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: 1948-இல் கோவையில் பிறந்தேன். 1969 முதல் புதுச்சேரியில் பேராசிரியன். துணைவியார் புதுச்சேரி - பிரஞ்சுக் குடியுரிமை பெற்ற (பிரான்சு ஸ்திராஸ்பூரில் நெடுங்காலமாக வாழும்) குடும்பத்தினர். பார்க்கச் செழுமையாகவே இன்னும் இருந்துகொண்டிருக்கும் நான், 2000-ஆவது ஆண்டில் மருத்துவர் மற்றும் குடும்பத்தாரின் வலியுறுத்தலால் விருப்ப ஓய்வு பெற்றேன். உலகெங்கும், குறிப்பாக பிரான்சில் நெருக்கமுள்ள நட்பு வட்டத்தில் நானும் இருக்கிறேன். அவர்களின் நேசிப்பாலும், மேனாள் மாணவ மாணவியரின் தொடரும் அன்போடும், குடும்பத்தினர் பாசத்தாலும் உயிர்த்திருக்கிறேன். சொல்ல நினைக்கும் ஒன்று: தங்களின் இந்த முயற்சிக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.