23.1.06

என்றென்றைக்கும் ஜீவனுள்ள திரைப்பாட்டு

பழைய சினிமாப் பாட்டுக்களைக் கேட்டு, அன்றாடத்தின் அத்தனை டென்ஷன்களையும் இம்சைகளையும் நச்சரிப்புகளையும் தற்காலிகமாக மறந்து போகிறோம். இந்த வழக்கம் சென்ற நூற்றாண்டின் நாற்பது-ஐம்பது-அறுபதுகளில் பிறந்தவர்களுக்கு மட்டும்தான் உள்ளது என்று ஓர் இளைஞர் என்னிடம் வாதிட்டார். எப்படி அவரைச் சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, பொதிகைத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி விளம்பரம் ஒன்று வந்தது. ஞாயிற்றுக் கிழமை இரவுதோறும் ஒன்பதரை மணிக்கு ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்ற நிகழ்ச்சியில் பழைய திரைப்படப்பாடல்களை இன்றைய இளைய தலைமுறையினர் உயிர்ப்போடு பாடுவதைக் காட்டினார்கள். ஓரிருவர் வயதானவர்களாக இருந்தனர். அவர்களுக்கு அந்தப் பாட்டுக்கள் நேரடி பரிச்சயம் கொண்டவையல்லவா? அதாவது, அவர்கள் தங்கள் இளம் வயதில், சினிமா வந்த உடனே திரையரங்கங்களுக்குச் சென்று பார்த்திருப்பார்கள். தாங்கள் இப்பொழுது அந்த நிகழ்ச்சியில் பாடுவதற்கு வாய்த்த அந்தப் பழைய பாட்டுக்களை ஒரு விதமான இலயிப்புடன் பாடுவதற்கு முடியும். இளைஞர்களும் இளைஞிகளும் அதே இலயிப்புடன் பாடுவதைக் கேட்டு-பார்த்து, நிகழ்ச்சி ஒளிபரப்பான நேரம் வரை, வேறு அலைவரிசைகளுக்கு வீட்டார் எவரும் மாறிவிடாமல் கொக்குப் போலக் காத்திருந்து இரசித்துப் பார்த்தேன். தொ.கா. நிகழ்ச்சிகளின்மேல் எனக்கிருந்த அவநம்பிக்கையே காணாமல் போனது. ******************** ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற படத்தில், கவிஞர் கண்ணதாசனின் பாட்டு ஒன்று. கேட்கும்பொழுதெல்லாம் கண்ணில் நீர் அரும்பும்; மனமோ நிரம்பித் ததும்பும். பாட்டின் சில பகுதிகள் இதோ: “ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே ஓடம்போல ஆடிடு வோமே வாழ் நாளிலே ......................... சூறைக் காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமே வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு! காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?" மேலே உள்ள வரிகளில் "சூறைக்காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமே!" என்ற பகுதி மிகவும் ஆழமான கருத்தைக் கொண்டது; ஒருமுறை கவிஞர் கண்ணதாசன் (1974, புதுச்சேரி)என்னிடம், அந்த வரி "சூறைக் காற்று மோதினால், தோணி ஓடம் மேவுமே!" என்று இருந்தால் இன்னும் பொருத்தம் என்று கூறிச் சிரித்தார். "வண்டி ஓடம் ஏறும்; ஓடமும் வண்டி ஏறும்!" என்று ஒரு தமிழ்ப் பழமொழி இருக்கிறதுதானே?!

19.1.06

உங்கள் பேச்சைப் பதப்படுத்திக்கொள்வது எப்படி?

இப்படி ஒரு கேள்வியுடன் தொடங்கும் டேவிட் கீலிங்'கின் கட்டுரையொன்றை டெக்கான் க்ரானிக்கிள் நாளேட்டில் வாசித்தேன். அதில் அவர் நம் பேச்சை எப்படிப் பதப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைப் பக்குவமாகக் குறிப்பிட்டிருக்கிறார். முட்டை வேக்காட்டை உதாரணமாகக் காட்டி அதை அவர் விளக்கியுள்ள விதம் அருமை. கஃன்ஸாமா[khansama] ஒருவர் முட்டையைத் தன் சிறப்பான சமையல் பக்குவத்துக்கு எப்படி அவிப்பார்? மலைப்பகுதிகளிலும் கூட, இலேசாக முட்டையை அவிக்க இரண்டரை நிமிடம்தான் பிடிக்கும். அந்த அளவுமட்டுமே அவித்தால்தான் 'டோஸ்ட்'ஐ சுவையாக வறுக்க முடியுமாம். மூன்று நிமிடம்வரை முட்டையை அவித்தால், அந்த முட்டை திடமாகி 'டோஸ்ட்'டோடு பிணயாமல் தனித்தன்மை காத்து, இரண்டையும் கெடுத்து விடுமாம். முட்டையை நான்கு நிமிடம் அவித்து வைத்தால் 'டோஸ்ட்' திட்டமே குட்டிச்சுவராகிவிடுமாம். அட, வெறும் முட்டையையாவது தின்று வைப்போமே என்று தின்றால் ஒரு பகுதி நன்றாக இருக்கும்; அடுத்த பகுதி வெறுப்பேற்றிவிடுமாம். இப்பொழுது ஒப்பிட்டுப் பாருங்கள்! சிறந்த சமையற்காரரின் முட்டைப் பக்குவம் போல், கச்சிதமாக, உரிய நேரத்திற்குள் பதமாக நம் பேச்சை முடித்துக்கொண்டு விட்டால் நல்ல பெயர் கிடைக்கும். சில பேருக்கு ஒலிவாங்கி கிடைத்துவிட்டால் தலைகால் புரியாது. அவையினர் தன்மையை அறியாமல், உணவு நேரம் வந்துவிட்டபின்பும் வறுத்து எடுப்பார்கள். இதில் வள்ளுவர் குறள் ஒன்றையும் எடுத்துவிடுவார்கள். "செவிக்கு உணவில்லையேல் சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்" என்று இளித்துக் கொண்டே கொடுமைப் படுத்துவார்கள். இவர்களை நினைத்து வள்ளுவர் இந்தக் குறளைச் சொல்லவில்லை; இவர்களுக்கென்றே 'அவையறிதல்' என்று பத்துக்குறள்களை ஒதுக்கியிருக்கிறாரென்பதை வசதியாக மறந்து விடுவார்கள்; அல்லது அதுவும் தெரியாதிருப்பார்கள். இப்படித்தான் ஒரு பள்ளியின் சிறப்பு விழாவொன்றில் கட்டாயமாகப் பேச வந்த ஊர்த் தலைவர் பிள்ளைகளைப் பார்த்துச் சொன்னாராம்: "பிள்ளைங்களா! நீங்க எல்லாரும் திருக்குறளை முழுசாத் தெரிஞ்சு வச்சிருக்கோணும்! ஒரு நாளைக்கு ஒரு திருக்குறள்'னு படிச்சீங்கண்ணாலாவது ரெண்டாயிரம் நாள்'ல திருக்குறள் முழுசும் படிச்சுடாம்'ல?" என்று சொன்னவுடனே பிள்ளைங்களும் ஆசிரியர்களும் 'கொல்'ல்லென்று சிரித்துவிட்டார்களாம். தன்னைப் பாராட்டித்தான் அவர்கள் சிரிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு அவர் உற்சாகமாக மேலும் மொழிந்தாராம். "அதான் - "வாய்விட்டுச் சிரிச்சா நோய்விட்டுப் போகும்"னு ஒளவைப்பாட்டி 'நாலடியார்'ல சொல்லியிருக்குதாம்'ல..என்ன?"

15.1.06

வீடு

வீடு -தேவமைந்தன் வாழ்வதற்காகத்தான் வீடு. திடப்பொருள்களுக்கு அல்ல. குறிப்பாக எஃகு நிலைப் பேழைகளுக்கு. அதிலும் குறிப்பாக ஓரம் மழுக்காத கொடூரம் ததும்பும் கட்டில்களுக்கு. மேலும் குறிப்பாக தூசி புழுதி காவாத உயரமான அடுக்குகளுக்கு. மரச்சாமான்கள் உயிருடன் இருந்து நமக்கு இதமான தோழமை தந்தாலும் அவற்றின் மிகையும் கூடத்தான் வீட்டுக்கு அன்னியம். முழங்கால் மூட்டைப் பெயர்க்கும் இழுவை மேசைகள் வீட்டின் நிம்மதிக்கு ‘வில்லன்’கள். மழுமழு என்று முகம்பார்க்கலாம் தரையோ, கனத்த வீட்டார்க்கு ‘சீரியலில்’ வரும் வகைமாதிரி வில்லி. சரி, விடுங்கள்! தனிமனிதத்துவம் தன்னலமும் கூடிய அவசங்களுக்கு எப்படிக் கவிதையானது இடம் தரலாகாதோ அப்படித்தான் மேற்படிப் பொருள்களுக்காக அல்ல வீடு - மனிதர் வாழத்தான்.

வார்த்தை

வார்த்தை -தேவமைந்தன் ஆதியில் வார்த்தை இருந்தது. நேற்றும் கேட்டது காதில் - எங்கள் வீட்டுக் குழாய் சொட்டிக் கொண்டு இருந்த பொழுது. கால்வாளி நீர்நிரம்பிய பிளாஸ்டிக் வாளியில் ‘பதம்’ ‘பதம்’ ‘பதம்’ என ‘ரிதம்’ உடன் விழுந்தன வார்த்தைகள். மற்ற வீட்டு ஒழுகும் குழாய்கள் - தரையில், குடம் வைக்க வட்டமாய்க் குழிந்த குழிகளில் வெவ்வேறு வார்த்தைகள் சொட்டவும் கூடும். நாளையும் வார்த்தை இருக்கும். மைக்ரோசாஃப்ட் ஆண்டுதோறும் புதுப்பிக்கிறது வார்த்தையை.

மண்புழு மனிதர்கள்

மண்புழு மனிதர்கள் -தேவமைந்தன் தனக்குள் தானே எல்லாமுமாய் தன்னான தானே சுவாரசியமாய் தன்னைத் தானே தாராளமாய் தானே தானே தம்பட்டம் தானே தானானானே.

6.1.06

பட்டினத்தார் பற்றிய புதிய நூல்!

"நான் குரங்குக் குட்டி அல்ல உணர்ந்து கொண்டேன். முயன்று முயன்று முடியாமல் சோர்ந்த பிறகே! பூனைக் குட்டியாய்க் குறுகிக் கிடக்கின்றேன். எடுத்துச் சென்றருள் இறைவா பரிந்து! -உரிமையுடன் க. நாராயணன்" என்ற 'விண்ணப்ப'த்துடன் இந்தியப் புதுச்சேரியின் ஓய்வு பெற்ற தத்துவப் பேராசிரியர் டாக்டர் க. நாராயணன் "பத்தராய், சித்தராய்... பட்டினத்தார்" என்ற அருமையான நூல் வடித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பரிசு பெற்றுள்ள நூல்களுக்குப் படைப்பாளரான இவர்தம் இந்நூல், தனது தன்மைகள் சிலவற்றால் முந்தியவற்றை விஞ்சிவிடுகிறது. பன்னிரண்டு இயல்களால் அமைந்துள்ள இந்நூல், சித்தராய் விளங்கிய பட்டினத்தார் குறித்தும் - பக்தி இலக்கியம் படைத்த பட்டினத்தார் பற்றியும் பலவற்றைப் பாங்குடனே சொல்லிச் செல்கிறது. இந்நூலுள் காணும் சில முகாமையான முடிபுகள்: 1. மரணத்தைக் கண்டு அஞ்சுவதும் அழுது புலம்புவதும் அறியாமையின் விளைவு. 2. அதைத் தவிர்ப்பதை விட்டுவிட்டு, மீண்டும் மீண்டும் உண்டாகும் பிறப்பைத் தவிர்ப்பதுவே சாலச் சிறந்தது. 3. உடலெடுத்துப் பிறந்த பிழைக்கு ஈடாக, அவ்வுடலைக் கொண்டே ஆக்க வழியில் மனமொன்றி இறைவனை வழிபட்டு பிறவாமைப் பேறு ஆகிய ஆன்ம விடுதலையை அடைய வேண்டும். 4. தேவைகளைக் குறைப்பதுவே இல்லறத்தார்க்கும் ஒப்ப - உரிய - உயரிய வாழ்க்கை நெறியாகும். 5. பிறருக்குப் பயன்பட்டு வாழும் மனநலம் உடையவனே உண்மை மாந்தன். 6. பசிக்காகவோ சுவைக்காகவோ உயிர்க்கொலை செய்வதோ, கொன்றதைத் தின்பதோ கூடவே கூடாது. 7. சமூகத்தில், கொடியவர்களைப் போலவே வீணர்களும் கொடியவர்களே. 8. இழுக்கமுடையது இவ்வுலக வாழ்வு; இது புரிந்து கொண்டு, ஒழுக்கமுடனே வாழ்ந்து ஒண்பொருளாம் ஈசன் திருவடி சேரல் வேண்டும். 9. "பயணிப்பது நம் கடமை; முடித்து வைப்பது அவன் பொறுப்பு. நல்லதே நடக்கும் என நம்புவோம். நடப்பதை எதிர்கொள்வோம். பட்டினத்தார் பாடலின் சுருக்கம் இது." பட்டினத்தார் வாழ்க்கைக் குறிப்புகளின் குழப்பம் நீக்கி, சித்தரான பட்டினத்தாரையும் பத்தரான பட்டினத்தாரையும் வேறுபடுத்தி, அவரவர்க்கு உரிய முழுமதிப்புடன் ஆராய்ந்து இந்நூலைப் படைத்திருப்பது நூலாசிரியரின் உண்மை உழைப்புத் திறம். கிடைக்குமிடம்: மாரி பதிப்பகம் 'சிவகலை' இல்லம் 29, நாகாத்தம்மன் கோயில் தெரு கொட்டுப்பாளையம் புதுச்சேரி - 605008 இந்தியா. பக்கங்கள்: 160 [டெம்மி 1/8] விலை: ரூ.75.00 பேசி: 0413 - 2251764.

பின்னமர்ந்து செல்வோர்

பின்னமர்ந்து செல்வோர்[Pillion Riders] உந்தின் ஓட்டிக்குப் பிடிமானம் இருக்கிறது. அதனால் அவனுக்கு அச்சமில்லை- வேகம்தான். நீங்களோவெனில் பிடிமானம் போதாமல் வஞ்சகமான சாலைகளின் வளைவு நெளிவுகளில் உந்தின் ஓட்டியை முழுமையாக நம்பித்தான் பின்னமர்ந்து செல்லுகிறீர்கள். ஒரு நிதானமான அளவுக்குமேல் ஐயம் அவர்மேல் தங்களுக்கு ஏற்படுமானால் உங்களுக்கு மட்டுமல்ல; உங்களை நம்பி 'லிஃப்ட்' கொடுக்கும் அவருக்கும்தான் ஆபத்து. ம்..ம்.. ஏறிவிட்டீர்கள்- "எப்படியும் இறங்கிவிடுவோம்!" என்று நம்பித்தானே? எப்படியோ, எங்காவது- சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அதுவரை - அதுவரை விட்டாற்றியாய் - சற்று வெடுக்கென்றுதான் நிம்மதியாய் உந்தின் ஓட்டியைக் கொஞ்சம் மேலதிகமான அழுத்தத்துடன் நம்பி - இந்த 'டூவீல'ரில் பயணம் செய்யலாம் அல்லவா ஐயா, தாங்கள்? (தேவமைந்தன், 'போன்சாய் மனிதர்கள்,' திசம்பர் 1993. கவிதை:22/7/1988. சிறு திருத்தங்களுடன்..)